Skip to content
Post Views: 1,177
ஆராதனா வாசுதேவன் 02
அது என்ன மாயாமோ மந்திரமோ தெரியவில்லை.
Advertisement
மற்ற நாட்களில் அலாரம் வைத்து அதை பத்து முறை ஸ்னூஸ் செய்து சோனா வந்து அதட்டி எழுப்பி விட்டும் தூக்கம் கொஞ்சம் கூட கலையாமல் இன்னும் கொஞ்ச நேரம் என்று புரண்டு படுக்கத் தோன்றும்.
Advertisement
ஆனால் லீவ் நாளில் மட்டும் டான்னு ஆறு மணிக்கெல்லாம் முழிப்பு வந்து புத்துணர்வாக வேறு இருக்கும்.
Advertisement
பத்து மணி போல அலிபாக் செல்ல கிளம்பினால் போதும் என்று நேற்றே சோனா சொல்லியிருந்தாள். போய்ச் சேரவே இரண்டு மூன்று மணி நேரம் ஆகும். உச்சி வேளையிலா ஷூட் செய்யப் போகிறாள்?
Advertisement
இன்னும் சூரியன் கூட எழுந்திருக்கவில்லை. மேகமூட்டமாகவும் இருக்கிறது.
இவ்வளவு சீக்கிரம் அதுவும் விடுமுறை நாளில் எழுந்து என்ன தான் செய்வது. காபி கலந்து எடுத்துக் கொண்டு மொபைலுடன் பால்கனியின் கூடை ஊஞ்சலில் வந்து அமர்ந்தேன்.
மொபைலில் என் அப்பாவை வீடியோ காலில் அழைக்க ரிங் போய்க் கொண்டிருந்தது.
“பட்டு, என்னாச்சு. உடம்புக்கு ஒன்னும் இல்லையே” ஆஹா அம்மா.
“நான் நல்லா தான் இருக்கிறேன். ஏன்மா திடீரென்று கேட்கறீங்க” அம்மா ஏன் அப்படிக் கேட்டார் என்று புரியாமல் அவரிடமே கேட்டு வைத்தேன்.
“மணி ஆறாகி பத்து நிமிஷம் தான் ஆச்சு. நீ இந்நேரத்தில் எழும் ஆளா. அது தான் உடம்புக்கு ஏதோன்னு நினச்சுட்டேன்” கிண்டல் தொனித்தது என் அம்மாவின் குரலில்.
அம்மா காலையிலேயே ஃபுல் ஃபார்மில் இருக்காங்களே!
“சீக்கிரம் எழுந்ததற்குப் பாராட்டாம கிண்டல் பண்றீங்க…ம்ம்ம்”
“ஆமா இந்த தூங்குமூஞ்சியைப் பாராட்ட வேறு செய்வாங்க. சோனா எழுப்பி விட்டிருப்பா. அலிபாக் போறீங்கன்னு சொன்ன தானே” என்றார் என் அம்மா.
என் அம்மா எல்லாவற்றுக்கும் சரியான ஒரு பதிலை வைத்திருப்பார்.
“என்னை ஊர் உலகமே பாராட்டுது தெரியுமா” நேற்று பார்ட்டியில் நர்சிங் ஹோமின் டாக்டர் வந்தது, பேசியது என அனைத்தையும் சொல்ல என் அம்மா முகத்தில் அவ்வளவு பெருமிதம்.
“இது என்ன புதுசா. சின்ன வயசிலேயே உன் டீச்சர்ஸ் எல்லாம் ஆராதனா சமத்து பொண்ணுன்னு உன்னைப் பாராட்டுவாங்க” சாதாரண விஷயம் போல சொன்னார் அம்மா..
“பட்டு, சின்ன வயசுன்னு சொன்னதும் நியாபகம் வருது, நீ சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிச்ச போது உன்கூட நித்யான்னு ஒரு பொண்ணு படிச்சாளே”
“நித்யாவா தெரியலையே மா. அவளுக்கு என்ன?”
“அந்த நித்யாவுக்கு ஒன்னும் இல்லை. அவங்க பக்கத்து வீட்ல அர்ஜூன்னு ஒரு பையன் இருந்தான். உங்களோட ரெண்டு மூணு வயசு சின்னப் பையன்னு நினைக்கிறேன். அவன் கூட டென்னிஸ் மேட்ச் எல்லாம் ஆடுவானே” இவ்வளவு நுணுக்கமான விவரங்கள் எல்லாம் என் அம்மாவுக்குத் தான் நியாபகம் இருக்கும். .
“சரி அவனுக்கு என்ன இப்போ”
“இப்போ டென்னிஸ்ல பெரிய சாம்பியனா இருக்கானே அர்ஜூன் அவன் அந்த அர்ஜூன் தானாம். அந்தப் பையனோட அப்பாவும் ரிடயர்ட் பாங்க் மேனேஜராம். இப்போ அப்பாவோட வாக்கிங் க்ரூப்ல இருக்கார் போல”
.“எனக்கு யாருன்னு தெரியல மா” உண்மையில் எனக்கு டென்னிஸ் கிரிக்கெட் இதிலெல்லாம் ஆர்வம் இருந்தது இல்லை.
“உனக்கு தான் செஸ் தவிர வேற ஸ்போர்ட்ஸ்ல இன்டரஸ்ட் இருந்ததில்லையே. நான் யூடியூபில் அந்தப் பையன் மேட்ச் எல்லாம் பார்த்தேன். நல்லா ஆடுறான். கூடவே சுவாதின்னு ஒரு பொண்ணு ஆடுது. அந்த பொண்ணோட அப்பா தான் கோச் போல. இந்த அர்ஜூன் அவங்க வீட்டிலேயே குருகுல வாசம் போல வளர்ந்தானாம்.” கதை சொல்லிக் கொண்டிருந்தார்.
“சுமி யார் பட்டுவா பேசிட்டு இருக்கா” என் அப்பாவின் குரல் கேட்டது.
“அப்பா வந்துட்டார். அவர்கிட்டே கொடுக்கிறேன்” என்று என் அப்பாவிடம் ஃபோனைக் கொடுத்தார்..
என் அம்மா, அப்பா இருவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்று சென்னையில் குடியேறி ஆறு ஏழு மாதங்கள் தான் ஆகியிருந்தன.
இருவருக்கும் வங்கியில் வேலை என்பதால் பல ஊர்களில் வசித்தோம்.
அப்பா ஒரு வருடம் முன்பே ரிடயர்ட் ஆகிவிட அம்மா ஓய்வு பெற்றதும் சென்னையில் வீடு வாங்கி குடியேறி விட்டிருந்தனர். அங்கே இருப்பது அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஆறு மாதமாக இந்த டீலில் பிஸியாக இருந்ததால் நானும் சென்னைக்குப் போகவில்லை. அவர்களும் என்னைப் பார்க்க மும்பைக்கு வரவில்லை.
ஒரு வாரம் லீவ் எடுத்துக் கொண்டு சென்னைக்குப் போய் வர வேண்டும் என்று யோசித்திருந்தேன். அதை என் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
“சரிப்பா வச்சிடவா. அம்மாகிட்ட சொல்லிடுங்க” என்று நான் சொல்லவும்
“சுமி. பட்டுகிட்ட பேசறியா இல்ல வச்சிடவா” என்று குரல் கொடுத்தார் அப்பா.
“அலிபாக் பீச் போறாளாம். கடல்ல ரொம்ப நேரம் விளையாடிக் கொண்டு இருக்க வேண்டாம்னு அவகிட்ட சொல்லுங்க. கடலைப் பார்த்தா அவளுக்குத் தரையில் கால் நிற்காது” என் அம்மா சத்தமாக சொன்னது என் காதில் விழுந்தது.
“பட்டு கடலில் ரொம்ப நேரம் விளையாடிக் கொண்டு இருக்காதே. அப்புறம் நான் தான் சொல்லாம விட்டேன்னு உன் அம்மா என்னைத் தான் சத்தம் போடுவா” என் அப்பா என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொல்லவும் நானும் சிரித்தபடியே போனை அணைத்து விட்டு அலிபாக் செல்லத் தயாரானேன்.
சோனாவின் ஸ்டைலிஸ்ட் மாலினியும் எங்களுடன் சேர்ந்து கொள்ள மூவருமாக அலிபாக் பீச்சிற்குப் புறப்பட்டோம்.
காரை நான் டிரைவ் செய்ய சோனாவும் மாலினியும் ஃபேஷன், மாடலிங், பாலிவுட் என அரட்டை அடித்துக் கொண்டே வந்தனர்.
பிரபலமான ஜோடியின் விவாகரத்து வழக்கைப் பற்றி மாலினி பேச்செடுத்தாள். சோஷியல் மீடியாவில் டிரென்டிங்காம். பப்ளிசிட்டி ஸ்டன்ட்டாக இருக்கும் என்று கருத்து வேறு சொன்னாள்.
பிரபல பிஸ்னஸ்மேனுக்கும் முன்னாள் நடிகைக்கும் இடையே நடைபெற்று கொண்டிருக்கும் வழக்கில் அந்த பிசினஸ்மேன் சார்பாக எங்கள் நிறுவனம் தான் முன்பு களம் இறங்கியது.
செலிப்ரிட்டி கேஸ் என்பதால் ஆஃபீசில் அதைப் பற்றிய அலசல் இருந்து கொண்டிருந்தது.
சட்டக் கல்லூரியில் படித்த போதிலே எனக்கு விவாகரத்து வழக்குகளில் விருப்பம் இருந்ததில்லை.
இப்படியிருக்க ஒரு நாள் பிகே லால் என்னையும் ஷர்மாவையும் அழைத்து கேஸைப் பற்றிய அடிப்படை விவரங்களைச் சொன்னார்,
சைல்டு கஸ்டடி தான் இழுபறியாக இருக்கிறது என்றும் அதை நெகோஷியேட் செய்ய எவ்வளவோ முயன்றும் முடியவில்லை என்றார்.
“ஆராதனா இந்த வழக்கில் நெகோஷியேட் பண்ண உதவி செய்ய முடியுமா” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.
“இது அவளது ஸ்பெஷாலிட்டி இல்லை லால்” என்று ஷர்மா சொல்லவும்
“எனக்குத் தெரியும். ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று தான் உங்களிடம் கேட்கிறேன்” என்றார் லால்.
ஷர்மா என்னைப் பார்க்க அந்தப் பார்வையில் உனக்கு விருப்பம் இருந்தால் செய் என்ற செய்தி இருந்தது.
“இந்த வழக்கில் என்னால் உங்களுக்கு உதவ முடியாது. ஐ ஆம் சாரி சர்” என்று நான் உறுதியாக சொல்லவும் “யோசிக்க வேணும்னா டைம் எடுத்துக் கொள்” என்றார் லால்.
“இதில் யோசிக்க எதுவும் இல்லை சர். வேறு எந்த வழக்காக இருந்தாலும் நான் யோசித்து முடிவை சொல்லியிருப்பேன். இதுவே சிம்பிள் டிவோர்ஸ் கேஸ் என்றாலும் கூட கொஞ்சம் யோசித்திருப்பேன். ஆனால் ஒரு குழந்தையை நெகோஷியேட் செய்வது இஸ் நாட் ரைட்” மிகத் தெளிவாக எனது கருத்தை முன்வைக்கவும் லால் ஒப்புக்கொண்டு விட்டார்.
அதன் பின் எங்கள் நிறுவனத்திடம் இருந்து வேறு ஒரு பிரபல வழக்கறிஞரிடம் கைமாறி வழக்கு இன்னும் இழுபறியாகவே போய்க் கொண்டிருந்தது.
ஒரு வழியாக அலிபாக் வந்து சேர்ந்தோம்.
பெரும் செல்வந்தர்களின் பீச் ஹவுஸ். ஃபாரம் ஹவுஸ், விலையுயர்ந்த ரிசார்ட்கள் கொண்டது தான் இந்தக் கடற்கரை.
சோனாவின் தந்தை ரியல் எஸ்டேட் ஜாம்பவான். அவர்களுக்கு சொந்தமான பீச் ஹவுஸிற்கு தான் இப்போது வந்திருக்கிறோம்.
போட்டோ மற்றும் விடியோ ஷூட் செய்யும் டீம் ஏற்கனவே வந்திருந்தனர்.
சோனா வீட்டிற்குள் நுழைந்தவுடன் மாலினியுடன் தயாராகச் சென்றாள்.
அந்த வீட்டில் வேலையாட்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள் என்பதால் குளிர்பானம் தந்து என்னை உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.
“சோனா. ஹரி அப். அப்புறம் ஆங்கிள் சரியில்லை என்று என்னைக் குறை கூறாதே” என்று அவளது ஃபோட்டோகிராஃபர் ரே அவசரப்படுத்தினான்.
உச்சிப் பொழுதில் என்ன ஆங்கிளோ இருப்பினும் எப்படி தான் ஷூட் செய்கிறார்கள் என்று பார்க்க ஆர்வம் கொண்டேன்.
புதிதாக டிசைன் செய்த உடையில் அழகு தேவதையாக இறங்கி வந்தாள் சோனா.
“யூ லுக் கார்ஜியஸ்” என்று நான் பாராட்டவும் லேசாகப் புன்னகைத்தாள்.
“இந்த உடையில் நீ இன்னும் கார்ஜியஸாக இருப்பாய் தெரியுமா. என் ஷூட் முடிந்ததும் உனக்கும் ஒரு போட்டோ ஷூட் செய்வோமா” என்றாள் ஆர்வமாய்.
“யூ நோ மை ஆன்சர். அப்புறம் எதற்கு கேட்டுக் கொண்டு இருக்க. ரே கத்தப் போறான்” என்று நான் சொல்ல என்னையும் இழுத்துக் கொண்டு தென்னை மரங்கள் நிறைந்த தோட்டத்தின் பகுதிக்குச் சென்றாள்.
தலைக்கு மேல் ஒளிர்ந்து கொண்டிருந்த சூரியக் கதிர்கள் தென்னை மரத்தின் கீற்றுகள் வழியே கசிய அதை சோனாவின் மேல் விழும் படி அவளை நிற்க வைத்து விதவிதமாக படங்கள் பிடித்தார்கள்.
உண்மையில் படங்களைப் பார்த்து அசந்து போனேன்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஷூட் செய்தார்கள்.
பின் மாலை சூரியன் கடலில் மறையும் பேக்ரவுண்டில் மீதியை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி ப்ரேக் செய்ய நானும் சோனாவும் போர்டிகோவில் இருந்த சேரில் வந்தமர்ந்தோம்.
வெளி கேட்டரர் மூலம் மதிய உணவை வரவழைத்திருந்தாள் சோனா.
“நான் காஸ்டியூம் அண்ட் மேக் அப் சேஞ் செய்யப் போகிறேன். நீ வேண்டுமென்றால் ரெஸ்ட் எடு” என்றாள்.
“ஐ வில் கோ ஃபார் எ வாக்” என்று கூறிவிட்டு கடலை நோக்கி நடந்தேன்.
மாலை நேரக் கடற்காற்று இதமாக வீச அலைகள் பாதங்களை நனைக்க அப்படியே கடற்கரை ஓரமாக நடந்தேன்.
அது பிரைவேட் பீச் என்பதால் ஆள் அரவமற்று இருந்தது. கால் போன போக்கில் நடந்து கொண்டே பக்கத்து பங்களாவின் எல்லை வரை வந்துவிட்டிருந்தேன்.
அந்த வீட்டை சோனா ‘கோஸ்ட் ஹவுஸ்’ என்று சொல்வாள்.
பல வருடங்களாக பூட்டியே இருக்கிறது என்றும் அந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருக்கிறது என்றும் வேலையாட்கள், வாட்ச்மேன்கள் சொல்வார்கள் என்று சோனா சொல்லியிருந்தாள்.
எனக்கு சிறுவயதில் இருந்தே கடல் மேல் தனிப் பிரியம் உண்டு. கூடவே நிறைய ஆர்வமும் ஆச்சரியமும்.
“அம்மா ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாம்” சென்னையில் இருந்த வரை பீச்சிற்கு அம்மாவும் அப்பாவும் அடிக்கடி அழைத்துக் கொண்டு போவார்கள். அப்போதெல்லாம் கடலை விட்டு வீட்டிற்கு வரவே மனசிருக்காது.
“இருட்டிருச்சு பட்டு. பாரு ஆள் அரவமே இல்ல. வா போகலாம்” என்று அம்மா அதட்டவும் முகத்தை தொங்க வைத்துக் கொண்டு வீடு திரும்புவேன்.
மற்றக் குழந்தைகள் பீச்சில் ஓடிப் பிடித்து விளையாடுவார்கள். மணல் வீடு கட்டி அழகு பார்ப்பார்கள். கடலுக்குள் சென்று அலைகளோடு ஆட்டம் போடுவார்கள்.
ஆனால் நானோ அலைகளில் கால் நனைத்த படி மணலில் அமர்ந்து மணிக் கணக்கில் கடலை வெறுமனே பார்த்துக் கொண்டு இருப்பேன்.
தட்ஸ் மை வே ஆஃப் மெடிடேஷன் என்று பின்னால் புரிந்தது.
கடல் இல்லாத ஊர்களில் வசித்த போதும் விடுமுறைக்கு ஏதாவது பீச் ரிசார்ட் போய்விடுவோம்.
“இந்த கடலுக்காகவே மும்பையில் வேலைக்குச் சேர்ந்திருக்கா” அம்மா இங்கே வரும் போதெல்லாம் என்னை சீண்டுவார்கள்.
சோனா முதன்முதலில் என்னை இங்கே கூட்டி வந்த போது எனக்கு அவ்வளவு ஆனந்தம்.
ஆனால் வந்தவுடனே அவள் சொன்னது கோஸ்ட் வீடு பக்கம் மறந்தும் போய்விடக் கூடாது என்பது தான்.
பிரைவேட் பீச் என்ற போதும் இரவில் கடல் பக்கம் செல்ல விட மாட்டாள்.
எனக்கு அவள் தடை சொல்லவே அப்படி என்ன அங்கே இருக்கிறது என்ற ஆர்வம்.
ஒரு முறை பகல் பொழுதில் இப்போது போலவே நடந்து பக்கத்துக்கு வீட்டின் எல்லை வரை வந்துவிட்டிருந்தேன்.
ஏனோ தெரியவில்லை. அந்த வீட்டின் மேல் எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு.
மரங்கள், செடி, கொடிகள் அதன் போக்கிற்கு வளர்ந்து கிடக்க அதன் நடுவில் வெள்ளைத் தூண்கள் கொண்ட பால்கனி மட்டும் தான் இங்கிருந்து தெரியும்.
கூட்டமாக பல வகை பறவைகள் அங்கிருந்த மரங்களில் வசிக்கும் போலும். அப்பறவைகளின் ஆனந்த கூச்சல் மெலிதாக காற்றில் கசிந்து வரும்.
உண்மையில் இங்கே வசிக்கும் கோஸ்ட் கொடுத்து வைத்த கோஸ்ட்.
இதை மட்டும் சோனா கேட்டால் அவ்வளவு தான்.
சோனாவின் வீட்டிலிருந்து அரை கிமீ தூரமாவது இருக்கும் இந்த வீடு. அதனால் பயமின்றி இருக்கலாம் என்பாள்.
இங்கே வரும் போதெல்லாம் அவளுக்குத் தெரியமால் இந்த எல்லை வரை வந்து இப்படி தூரத்தில் இருந்து கோஸ்ட் வீட்டைப் பார்ப்பது எனக்கு வழக்கமாகிப் போனது
சோனா தேடும் முன் திரும்ப வேண்டும்.
வேகமாக சோனாவின் வீட்டை நோக்கி நடந்தேன்.
ஷூட்டிங் சிறப்பாக முடிய சோனா மிகுந்த சந்தோஷமாக இருந்தாள்.
போர்டிகோவில் அமர்ந்து இருவரும் ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டிருந்தோம்.
நிலவற்ற வானம் முழுக்க நட்சத்திரங்கள் ராஜ்ஜியம் செய்து கொண்டிருந்தன. இரவின் நிசப்தத்தை அலைகளின் ஓசை விடாது கலைத்துக் கொண்டிருந்தது.
அலைகளில் கால் நனைத்தபடி கரையில் அமர்ந்து இந்த ஏகாந்ததை ரசிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை.
அதை சோனாவிடம் சொல்ல “உனக்குக் கொஞ்சம் கூட பயமே இல்லை” என்றாள்.
“வீத ராக பய க்ரோதா மன்மயாமாமுபாஸ்ரிதஹ
பஹவோ ஞான தபஸா பூதா மத்பாவமாகாதஹ” (பகவத் கீதை 4:10 )
{பற்றுதல், பயம் மற்றும் கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, என்னில் முழுமையாக மூழ்கி, என்னிடத்தில் அடைக்கலமாகி, கடந்த காலத்தில் பலர் என்னைப் பற்றிய அறிவால் தூய்மையடைந்து, என் தெய்வீக அன்பை அடைந்தனர்}
ஸ்லோகத்தைச் சொல்லி அதன் அர்த்தத்தையும் சொன்னேன்.
“கிருஷ்ணா இஸ் மை ப்ரோ. பயம் என்றால் என்ன என்று எனக்கு எப்படித் தெரியும்” சிரித்துக் கொண்டே நான் சொல்ல என்னைப் பார்த்து முறைத்தாள்.
error: Content is protected !!