Skip to content
Post Views: 1,290
விழாக் காணுமே வானம் 05
வத்சலா ராகவன் – மது ஹனி
“தோல்வியில் மலர்ந்த வெற்றிப் புன்னகை”
மறுமுனையில் ஏற்கப் பட்டது அழைப்பு. மறுமுனையில் ஒரு ஆண் குரல். அந்த வீட்டுக்கு அவன் அழைத்து பல நாட்கள் ஆகிறதுதான். பாட்டியிடம் ஒரு வார்த்தை அவளைப் பற்றி விசாரித்து விடலாம் எனும் எண்ணத்தில்தான் அங்கே அழைத்தது.
Advertisement
“ஹலோ” என்றது அது. குரல் யாருடையது என்று ஒரு சிறு குழப்பம் அர்ஜுனுக்கு.
“நான் அர்ஜுன் பேசறேன்” இவன் சற்றே தயக்கத்துடன் கூற
“ஆ…ஹா…..” என்றது மறுமுனை. “அர்ஜுன் தி கிரேட்! நான் யார் தெரியுதா அ..ர..வி…ந்…த…ன்!” சொன்னான் அவன் நிறுத்தி நிதானமாக..
Advertisement
அதில் அலட்சியமும் கோபமும், எள்ளலும் எரிச்சலும் சரி விகிதத்தில் கலந்து இருந்தது மட்டும் உண்மை.
Advertisement
புருவங்கள் உயர அரவிந்தனையே பார்த்திருந்தாள் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்து இருந்த ஸ்வாதி.
அரவிந்தன் தனது பெயரை உச்சரித்த விதத்தில் அர்ஜுனின் இதழோரம் ரசிப்பாக ஒரு புன்னகை வந்து அமர்வதை அவனாலேயே தவிர்க்க முடியவில்லை. பெரிதாக காரணம் என்ற ஒன்று இல்லாமலே அரவிந்தனை அர்ஜுனுக்கு பிடிக்கும்தான்.
“வாவ் கிரேட் சர்ப்ரைஸ் அரவிந்த். எப்போ வந்தீங்க?”
Advertisement
“எப்போ வந்தேன்னு கேக்கறீங்களா? ஏன் வந்தேன்னு கேக்கறீங்களா?” ஸ்வாதியின் முகம் பார்த்துக்கொண்டே கொக்கி போட்டான் அரவிந்த். எழுந்து விட்டாள் ஸ்வாதி. போனை துண்டித்து விடு என்ற சைகை அவளிடத்தில்.
அதை கண்டு கொள்ளாமல் திரும்பிக்கொண்டவன்
.”இன்னமும் இந்த வீட்டிலே இருக்குற எல்லாரோடையும் பேசிட்டா இருக்கீங்க. ஆச்சரியமா இருக்கே. லேண்ட் லைனுக்கு தைரியமா கால் பண்றீங்க?
பதில் இல்லை மறுமுனையிலிருந்து.
“என்ன அர்ஜுன் சைலென்ட் ஆகிட்டீங்க” துருவினான் அவனை “என்கிட்டே பேச பயமா என்ன?
அர்ஜுனுக்கு அரவிந்தன் மேல் கோபம் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்
“அதெல்லாம் ஒண்ணுமில்லை அரவிந்த். ஹவ் ஆர் யூ?” என்றான் இயல்பாக.
“எனக்கென்ன ராஜா மாதிரி இருக்கேன். மீட் பண்ணி ரொம்ப நாளாச்சு ஈவினிங் மீட் பண்ணுவோமா?” ஆத்திரம் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தது அரவிந்தனுக்கு.
அது ஏனோ ஒரே ஒரு முறை அர்ஜுனை நன்றாக தோற்கடித்து பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் அரவிந்தனுக்கு உண்டு. இப்போது கடந்த ஒன்று ஒன்றரை வருடங்களாக இன்னமும் அதிகமாய்.
அவனது விழிகள் கண்ணீரை சிந்தினால் இன்னமும் மகிழ்ச்சி.
“கண்டிப்பா. எங்கே மீட் பண்ணலாம் சொல்லுங்க” நிதானமாக சொன்னான் அர்ஜுன்.
“நம்ம அகாடமிலே. ஈவினிங் நாலு மணிக்கு. ஸ்வாதியோட வருவேன். ஒரு மேட்ச் ஆடுவோம். பார்த்திடுவோம். நீங்களா நாங்களான்னு” முடித்துவிட்டான் அவன்.
எப்படியும் விளையாட்டில் கூட தன்னை அவன் சீண்டுவான் என நன்றாக தெரியும் அர்ஜுனுக்கு.
சென்னை வந்தால் எப்போதும் அர்ஜுனுடன் உரசிக் கொண்டிருப்பது மட்டுமே அரவிந்தனின் வேலை.. அதற்கு காரணம் அவனுக்கும் ஸ்வாதிக்கும் இடையிலான நட்பா எனும் கேள்வி அர்ஜுனுக்கு அடிக்கடி வந்ததுண்டு.
இப்போது ஒரு வருடமாக அவனது கோபத்துக்கு எண்ணை ஊற்ற இன்னும் சில பெரிய காரணங்களும் இணைந்து கொண்டிருக்கின்றன.
அரவிந்தன்! பெங்களூர்வாசி. அவனது தந்தையின் தொழில்களை கவனித்துக் கொண்டிருக்கும் இளம் தொழிலதிபன். ரங்கநாதனின் அக்காவின் மகன். டென்னிஸ் வீரன் இல்லை என்றாலும் நன்றாகவே விளையாடுவான் அவன்.
அவன் பேசப் பேச ஸ்வாதியின் முகத்தில் கோபக் கோடுகள் கோலம் போட்டுக்கொண்டிருந்தன. அவன் அழைப்பை துண்டித்த மாத்திரத்தில் மறுபடியும் தனது அறைக்குள் புகுந்து கொண்டாள் அவள்.
அவன் வந்ததில் பாட்டிக்குதான் நிறையவே சந்தோஷம். மகள் வயிற்று பேரன் மீது அவருக்கு பாசம் அதிகம்தான்.
சில நிமிடங்கள் கடக்க இரண்டு தட்டுகளில் காலை உணவுடன் அவளது அறைக்குள் நுழைந்தான் அரவிந்தன்.
“ஹாய் ஆங்கரி பேர்ட். டிபன் சாப்பிடறியா”
அதே நேரத்தில்
“அத்தை பசிக்குது அத்தை” டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான் அர்ஜுன். அவன் காலையில் இருந்ததற்கு இப்போது அவன் முகத்தில் கொஞ்சம் தெளிவு வந்திருப்பது போலே தோன்றியது மகாலக்ஷ்மிக்கு.
“யாரு அர்ஜுன் போன்லே? அவன் சாப்பிட ஆரம்பித்ததும் யோசனையுடன் கேட்டார் மகாலக்ஷ்மி.
“ம்? அ..ர..வி…ந்…த…ன்!” அவன் சொன்ன பாணியிலேயே சொன்னான் அர்ஜுன். மெலிதான கண்சிமிட்டல் அவனிடத்தில்.
“டேய்.. என்னடா சிரிக்கிற? அவன் எப்படி திடீர்னு வந்தான்?
“எனக்கு தெரியலையே அத்தை” தட்டில் இருந்த இட்லி அவன் வாய்க்குள் போனது. எதற்காக வந்திருந்தாலும் சரி அவன் எப்படியும் ஸ்வாதியின் மகிழ்ச்சிக்கு வழி வகுப்பான் என்று தோன்றியது அர்ஜுனுக்கு.
‘அவன் வந்தாலே எப்பவும் பஞ்சாயத்து கூடவே வருமே. அவனுக்கு உன்னை கண்டாலே ஆகாதே”
“அதனாலே என்ன அத்தை? அவன் எப்போவும் ஸ்வாதிக்கு நல்ல சப்போர்ட்.. ரெண்டு மூணு மணி நேரத்திலே அவ ஹேப்பி ஆகிடுவா பாருங்க”
“அதெல்லாம் ஆக மாட்டா. அவன் உன்னோட சண்டை போட்ட நேரத்தில் எல்லாம் அவ உனக்குத்தான் சப்போர்ட் பண்ணி இருக்கா” கொஞ்சம் படபடப்பு அத்தையின் தொனியில்.
“அது முன்னாடி அத்தை” குரல் தழைய சொன்னான் அர்ஜுன். “இப்போ அவளுக்கு அவங்க அம்மாதான் வேணும்” தட்டை விட்டு நிமிரவில்லை அவன் பார்வை.
அவள் எதற்காக ஏங்குகிறாள் என்பதை அவளது ஒற்றை பார்வையை வைத்தே சொல்லிவிடும் நண்பனல்லவா அவன்.
“அம்மா வேணும்னா அவ உன்கூட எப்பவும் போல பேசணும்” அத்தை அவசரமாக சொல்ல மெல்ல நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்து மெலிதாக புன்னகைதான் அர்ஜுன்.
“அதை விட அவ சந்தோஷமா இருக்கிறது எனக்கு முக்கியம் அத்தை. போதும் அத்தை. ஒரு வருஷமா நிறைய கஷ்டப்படுத்திட்டேன் அவளை. இனிமே எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.” அவனது குரலில் உறுதி நிறைந்து கிடந்தது.
“அவளுக்கு இருக்கிற உறுதி, ஈகோலே எல்லாம் பாதியாவது அவங்க அம்மாவுக்கு இருக்காதா அர்ஜுன்?” கொக்கி போட்டார் அவர்.
“இருக்கும். அவங்களும் மாறுவாங்க” இப்போது அவன் பார்வை தட்டின் மீது. அதற்கு மேல் எதுவுமே பேசத் தோன்றவில்லை அத்தைக்கு.
“நீங்க என்ன அத்தை சொல்றீங்க? அவங்க மாறுவாங்களா மாட்டாங்களா? மெதுவாக நிமிர்ந்து அவரது கண்களை ஊடுருவினான் அர்ஜுன்.
எந்த பதிலும் இல்லை அங்கே. பின்னர் சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்துவிட்டான் அர்ஜுன்
“இன்னைக்கு ஈவினிங் நாங்க அகாடமிலே மேட்ச் ஆடப் போறோம். ஸ்வாதியையும் கூட்டிட்டு வரேன்ன்னு சொல்லி இருக்கான்.”
‘அவ வர மாட்டா அவனோட” அப்படி ஒரு தவிப்பு அத்தையின் குரலில்.
“வருவா. பார்க்கறீங்களா?” அவர் முகத்தை பார்த்து சொன்னவன் கை கழுவிக் கொண்டு வந்தான். “நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. நான் ஈவினிங் விளையாடிட்டு வந்து சொல்றேன்”
மகாலக்ஷ்மியின் முகத்தில் நிறையவே குழப்ப அலைகள். அவனுடன் ஸ்வாதி வரக்கூடாது என்று ஒரு சிறு வேண்டுதல் மகாலக்ஷ்மியினுள்ளே.
அதே நேரத்தில் அங்கே ஸ்வாதியின் வீட்டில்
“சும்மா இருக்க முடியாதா உன்னாலே? எதுக்கு தேவை இல்லாம அர்ஜுனை வம்புக்கு இழுக்கறே” ஸ்வாதி வெடித்துக் கொண்டிருந்தாள் அரவிந்திடம். அவளால் அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“பர்த்டே பேபி. சாப்பிடு முதலிலே” அவன் சொல்ல வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் ஸ்வாதி.
“உனக்கு இப்போ உங்க அம்மா வேணும் கரெக்டா?” அவன் கேட்க விலுக்கென நிமிர்ந்தாள் அவள். அந்த வார்த்தையில் அவள் கோபம் கொஞ்சம் தணிந்தது போலே தோன்றியது அரவிந்தனுக்கு.
“சே எஸ் ஆர் நோ மை டியர் ஆங்கரி பேர்ட”
அவனுக்கு அவளை ஆங்கரி பேர்ட என்று அழைத்தே வழக்கம். அவள் கோபம் பார்த்து வந்த பழக்கம் அது.
“எஸ்” என்றாள் மெதுவாக
“இப்போ நீ சாப்பிடு. உங்க அம்மா இங்கே வர்றதுக்கு நாம வழி பண்ணுவோம்” அவன் சொல்ல அவனை சந்தேகமாக பார்த்தாள் பெண்.
“அப்படி எல்லாம் வந்திட மாட்டாங்க அவங்க. என்னை அர்ஜுனோட பேச வைக்காம வர மாட்டாங்க”
“நான் வர வைக்கிறேன். ப்ராமிஸ். இப்போ நீ சாப்பிடு”
“நீ இப்போ சாப்பிடலைன்னா நான் இந்த தட்டில் இருக்குறது எல்லாம் டஸ்ட் பின்லே போட்டுடுவேன் அவ்வளவுதான்” அரவிந்த எழுந்து விட
“படுத்தாதே அரவிந்த். எனக்கு சாப்பாடு வேஸ்ட் பண்ணா பிடிக்காது.” கத்தினாள் ஸ்வாதி.
“அப்போ சாப்பிடு..”
“அம்மா எப்போ வருவாங்க அரவிந்த்? நிஜமா வருவாங்களா”” நிறைய சந்தேகமும் நிறைய ஆசையுமாக வந்தது அவளது கேள்வி.
“நான் பதினெஞ்சு நாள் இங்கேதான் இருக்கப் போறேன். அதுக்குள்ளே வர வெச்சிடுவேன்” அவன் சொல்ல யோசனையுடனே தட்டை வாங்கிக் கொண்டாள் ஸ்வாதி.
“உனக்கு நான் ஒரு கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன் ஆங்கரி பேர்ட” இரு வரேன்”
என சென்று கையில் இரண்டு டி ஷர்ட் டிராக் பேண்டுகளுடன் வந்தான். இரண்டும் ஒரே நிறம் ஒரே டிசைனில் இருந்தன.
“இன்னைக்கு அகாடமி போகும் போது நாம ரெண்டு பேரும் இந்த ட்ரெஸ்லேதான் போறோம். என்ன சொல்றே?”
மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அதில் என்ன புரிந்து கொண்டாள் என்று அவனுக்கு தெரியவில்லை.
“சாரி அரவிந்த் எனக்கு வேண்டாம்.” என்றாள் பளிச்சென.
“எல்லாருக்கும் எல்லாத்துக்கும் விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது அரவிந்த். எனக்கு இது வேண்டாம்” அழுத்தம் திருத்தமாக வந்தது பதில் அதற்கு மேல் எதையும் வாதிட முடியவில்லை அரவிந்தால்..
“விளையாட வருவியா மாட்டியா?”
“அப்புறம் யோசிச்சு சொல்றேன்” முடித்து விட்டாள் ஸ்வாதி.
மாலை மூன்றரை மணி. டி ஷர்ட் ஷார்ட்ஸ் சகிதம் அகாடமியில் இருந்தான் அர்ஜுன். அதே வளாகத்தில் இருந்த அந்த பேஸ்கட் பால் கோர்ட்டுக்குள் சென்று பந்தை தட்டிக்கொண்டே சுழல ஆரம்பித்தான்
எதுவோ எப்படியோ போட்டி விளையாட்டாக கூட இருக்கட்டும். இன்று அவளுடன் விளையாடியே ஆக வேண்டும் என்ற ஒரு தவிப்பு அவனுக்குள் இருந்தது அப்பட்டமான உண்மை.
பந்து கூடைக்குள் சென்று கீழிறங்கியது. இந்த கூடைப்பந்து அரங்கத்தில் கூட இருவரும் சுழன்ற நாட்கள் பல உண்டு.
ஏழு வயதில் இருந்தே இந்த அகேடமியும் ஸ்வாதியையும் சுற்றியே அவனது வாழ்க்கை மிக அழகாக பின்னப்பட்டு கிடந்திருக்கிறது. வெளியுலகம் பற்றி அவன் அறிந்தது மிகக் குறைவே. ஏதேதோ எண்ண ஓட்டங்கள் அவனுக்குள்ளே.
அவளுடன் விளையாடி எத்தனை நாட்கள் ஆகின்றன. அவளது வீட்டுக்கு பின்னாலேயேதான் அகாடமி என்ற போதிலும் அவனை பார்க்கக் கூடாது என்பதற்காகவே இந்த அகேடமிக்கு வருவதை கூட அவள் தவிர்த்துதான் வருகிறாள் அவள். தேவை என்றால் இரவிலோ அதிகாலையிலோ வந்து விளையாடுவாளாக இருக்கும் என்று தோன்றியது.
“இன்று என்ன செய்வாள்?” கேட்டுக்கொண்டான் தனக்குள்ளே.
சில நிமிடங்கள் அவன் மட்டும் விளையாடி முடித்துவிட்டு தனது ஷூ லேசை சரியாக கட்டிக்கொண்டிருந்த நேரத்தில் பின்னாலிருந்து கேட்டது அரவிந்தின் குரல்
“ஏன் ரி அர்ஜுன் அவரே சென்னாகிதிரா? (நலமா அர்ஜுன் அவர்களே) என்றான் கன்னடத்தில்.
விருட்டென நிமிர்ந்தான் அர்ஜுன். அவனது கன்னடத்தை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் சத்தியாமாக இல்லை நமது கதாநாயகன். அவளை அவசரமாக தேடின அவன் கண்கள்.
“ஒரு வேளை வரவில்லையா அவள்?”
வந்திருந்தாள் அவள். சற்றே தூரத்தில் இருந்த டென்னிஸ் கோர்ட்டில் நின்றிருந்தாள் ஸ்வாதி. அவளது பார்வை தூரத்திலிருந்து அவனைத்தான் படித்துக்கொண்டிருந்தது. இன்றுதான் என்றில்லை எப்போதும் அவள் வருகைக்காக அவன் இப்படிதானே காத்திருப்பான். அவளும் அறியாமல் மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள் தனக்குள்ளே.
அடுத்த சில நொடிகளிலேயே அவள் அவன் கண்ணில் பட்டுவிட திருப்தியின் பாவம் அவன் முகத்தில்.
“அருமையா இருக்கேன் மிஸ்டர் அரவிந்தன்” அவன் முகம் பார்த்து புன்னகைத்துவிட்டு டென்னிஸ் கோர்ட் நோக்கி நடந்தான் அவன்.
இருவரும் அருகருகே நிற்க சற்றே ஆடிப்போனான் அரவிந்த். அவர்கள் இருவரின் உடையும் ஒரே நிறம் ஒரே டிசைனில் இருந்தன. அவர்கள் இருவரை பொறுத்தவரை இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்ளாமலேயே பல நேரங்களில் ஒரே நிற உடையில் வந்து நிற்பார்கள் இருவரும்.
ஆனால் அரவிந்துக்கு மட்டும் இது பெரிய ஆச்சரியம்தான்.
விளையாட ஆயத்தமாக இருந்தவள் அவன் அருகே வந்ததும் தனது கையில் இருந்த பந்தோடு விளையாடியபடியே சற்றே விலகி நகர்ந்திருந்தாள். அந்த நேரத்தில் அரவிந்தின் முகம் எந்த உணர்வை பிரதிபலித்தது என்று உணர முடியவில்லை அர்ஜூனால்.
“ரெடியா மை டியர் ஆங்கரி பேர்ட்?”
“ஆங் எஸ் எஸ்” என்றாள் பந்துடன் விளையாடிக்கொண்டே.
:மூணு பேர் இருக்கோம் எப்படி டீம் பண்ணலாம்?” கேட்டான் அர்ஜுன்.
“நான் எப்பவும் அர்ஜுன் கூடத்தான்” எப்போதும் துள்ளிக்கொண்டு ஓடி வரும் தன் குஷ்புவை ஒரே ஒரு முறை பார்த்துவிட தவித்தது அர்ஜுனின் உள்ளம் அவனது குரலில் அந்த ஏக்கம்.
“நானும் ஸ்வாதியும் ஒரு சைட்லே இருக்கோம். உங்களாலே மேனேஜ் பண்ண முடியுமா. அர்ஜுன்? அவன் கண்களை பார்த்து கொக்கி போட்டான் “நீங்க தனியா நிக்கணும் ஸ்வாதி இல்லாம”
“ஒய் நாட்?” ஒரு கை பார்த்திடுவோம்” கண் சிமிட்டினான் அர்ஜுன் “ஆனா நான் தனியா நிக்கறது மேடமுக்கு சம்மதமா கேளுங்க” என்றான் அவள் முகம் பார்த்துக்கொண்டே. அவன் கேள்விக்குள் ஆயிரம் அர்த்தங்கள்.
சத்தியமாய் அவன் முகம் பார்க்கும் தைரியம் இல்லை அவளுக்கு. எந்த பதிலும் சொல்லாமல் கோர்ட்டின் ஒரு பக்கத்தில் சென்று நின்றுக்கொண்டாள் அவள்.
“யார் அவளுடன் இணைந்துக் கொண்டாலும் சரி” என்கிறாளாமா?”
“ஏன்? ஏன்? நீங்க தனியா நிற்க மாட்டீங்களோ? என் ஆங்கரி பேர்ட் என்னோடத்தான் பார்ட்னர் ஆ இருக்கும். என்ன ஸ்வாதி?” என்றபடியே அவளருகில் சென்று நின்றுகொண்டான் அரவிந்த்.
அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.
அவனது வார்த்தைகள் அர்ஜுனை .உடைந்த கண்ணாடி துண்டுகளாய் கீறின. பதில் பேசவில்லை அர்ஜுன். அவனது முதல் சேர்வ் நேராக நெட்டின் மீது சென்று விழுந்தது.
“சாரி” என்றபடி மறுபடி விளையாடத் தயாரானான் அர்ஜுன்.
ஆனால் அந்த இரண்டு நிமிடத்துக்குள் அவளது கட்டை விரல் தம்ப்ஸ் அப் என அவனை நோக்கி உயருமோ என நூறே நூறு முறை மட்டும் எதிர்ப்பார்த்து ஏமாந்து போனது அந்த நண்பனின் உள்ளம்.
“பெரிய கிராண்ட் ஸ்லாம் ப்ளேயர். முதல் செர்வே நெட் லே அடிக்கிறார்” கிண்டல் தொனித்தது அரவிந்தின் குரலில். “பேரு மட்டும்தான் அர்ஜுன். வேறே எதுவும் கிடையாது” அவன் கலகலவென சிரிக்க ஸ்வாதி அவனை சடக்கென திரும்பி பார்க்க இங்கே அடுத்த செர்வில் நேரடியாக ஒரு புள்ளி கிடைத்திருந்தது அர்ஜுனுக்கு.
“15 – லவ்” கண் சிமிட்டினான் அர்ஜுன் “இட்ஸ் அன் ஏஸ் மை பாய்”
அவர்கள் இருவரும் சுதாரிப்பதற்குள்
“30 – லவ்”
“40 – லவ்”
கேம்” நான்கே செர்வுகளில் ஜெயித்திருந்தான் ஒரு ஆட்டத்தை.
“அர்ஜுனுக்கும் கோபம் வரும் மிஸ்டர் அரவிந்த்” என்றான் அவன் முன்னே விரல் நீட்டி. சுள்ளென்ற கோபம் அரவிந்தனுக்கு. அதற்கு மேல் இந்த பெண்ணிற்கும். அவளுடைய கோபம் ஆட்டத்தில் தோற்று போனதில். அவள் ஓங்கி தரையை ஒரு முறை மிதிக்க மெலிதான மாற்றம் அர்ஜுனின் முகத்தில் .
அடுத்த சில நிமிடங்களில் மெல்ல வேகம் குறைந்தது அர்ஜுனின் ஆட்டம் ஒரு கட்டத்தில் .சம நிலையில் இருந்தனர். டென்னிஸ் அவளது உற்சாக பானம். துள்ளி குதித்து சிரித்து விளையாடும் பழைய ஸ்வாதியை கண் குளிர பார்த்துக்கொண்டிருந்தான் அர்ஜுன்.
இன்று ஏனோ விளையாட்டில் கொஞ்சம் வேகம் கொண்டானே தவிர பொதுவாக அரவிந்தின் மீது அதிகம் கோபப்படுவதில்லை அர்ஜுன். அதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கிறது. அதற்காகவாவது அவனை அவன் பேசும் பேச்சுக்களை மன்னித்து விடுவது இவன் பழக்கம்.
“ஸாரி அரவிந்த்” ஒரு வகையில் அதைக் கேட்கும் பொறுப்பு கூட அவனுக்கு இருக்கிறதுதான். ஆனால் இதுவரை அப்படிச் சொல்லி அவனை அவனது மனதின் காயங்களை கிளறிப் பார்க்க விரும்பியதில்லை அர்ஜுன்.
அரவிந்தின் கையை கோர்த்துக்கொள்வதும், அவன் தோளில் தட்டி பாராட்டுவதும் அவனுக்கு ஹை ஃபை கொடுப்பதுவுமாக ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள் அவனது குஷ்பூ.
“இப்படியே எப்பவும் சந்தோஷமா இரு குஷ்பூ” சொல்லிக்கொண்டான் அர்ஜுன்
.“அட் லாஸ்ட் நான் உன்னை வின் செய்துட்டேன்” ஆட்டத்தில் அவர்கள் இருவரும் வென்றிருக்க அர்ஜுனின் முன் விரல் நீட்டி சொன்னான் அரவிந்தன்.
“வின் பண்ணது நீயில்லை அரவிந்த். வின் பண்ணது என் குஷ்பூ” அர்ஜுன் சொல்லியும் விட அவள் முகத்தில் கோபத்தின் அடையாளங்கள் பூத்து நின்றன.
“குஷ்பூ! கோவக்கார குஷ்பூ!” அவளைப் பார்த்தபடியே சொல்லிவிட்டு இருவருக்குமாக தலையசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான் அர்ஜுன்.
இரவு அவன் வீடு வந்து சேரும் போது நேரம் எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
அவன் வந்து இறங்கியதும் “ஸ்வாதி வந்தாளா? என்றார் வாசலிலேயே நின்றிருந்த மகாலக்ஷ்மி.
“வராம என்ன அத்தை. நான்தான் சொன்னேனே வருவான்னு” என்றான் நிதானமாக. அவர் முகத்தில் ஏமாற்றத்தின் சுவடுகள் படிந்து நின்றன.
“சரி விளையாடி முடிச்சாச்சா?”. “நீங்க ரெண்டு பேரும் டபிள்ஸா விளையாடினீங்க?” நிறைய தவிப்பு அவர் குரலில்.
அழகாய் புன்னகைத்தான் அர்ஜுன் “அவங்க ரெண்டு பேரும்தான் ஜோடி அத்தை நான் அவங்ககிட்டே தோத்துட்டேன்”
“உளறாதே அர்ஜுன்” பாய்ந்தார் மகாலக்ஷ்மி அந்த வார்த்தையை தாங்கிக்கொள்ளவே முடியாதவர் போல் கேட்டார் அவர்
“நீ எதுக்குடா தோத்து போறே?”
“இருங்க இருங்க எதுக்கு டென்ஷன். என் குஷ்பூ எத்தனை சந்தோஷமா விளையாடினா தெரியுமா? ஐ ஆம் வெரி ஹேப்பி அத்தை” என்றான் ஷூக்களை கழற்றி அதன் இடத்தில் வைத்துக்கொண்டே. “ஏன் எனக்கு மட்டும்தான் அத்தை அப்பா அம்மா குடும்பம் எல்லாம் இருக்கணுமா என்ன? அவளுக்கு இருக்கக்கூடாதா?”
“பெரிய தியாகி மாதிரி பேசாதே.” என்றார் சமாதானம் ஆகாத குரலில்.
“தியாகி இல்லை அத்தை. நான் அவளோட தி பெஸ்ட் ஃப்ரெண்ட். எப்பவும் அவ நல்லதை மட்டும் யோசிக்கும் பெஸ்ட் ஃப்ரெண்ட் அத்தை. அவங்க அம்மாவும் அவளுக்கு சப்போர்ட் இல்லை. அவ பாட்டியும் அவளுக்கு சப்போர்ட் இல்லை. இப்போ அரவிந்த் அவளுக்கு நல்ல சப்போர்ட். அவ சந்தோஷமா இருப்பா அத்தை”
“ஆனா அவன் நல்லவன் இல்லைடா. அரவிந்த் பத்தி உனக்குத் தெரியாது எனக்குத் தெரியும்.” வீட்டுக்குள் நுழையப் போனவன் புருவங்கள் உயரத் திரும்பினான்.
“ஏன் அத்தை அப்படி சொல்றீங்க?”
“கல்யாணம் ஆகி ஒரே வாரத்திலே அவன் மனைவியோட வாழ முடியாதுன்னு சொன்னவன்டா அவன். ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க.. அது நடந்து ஒண்ணு ஒன்றரை வருஷம் ஆச்சு. இத்தனை நாள் அவன் வெளியிலேயே வரலை. இப்போ எப்படி வந்தான்ன்னு தெரியலை” படபடத்தார் அவர்.
மெல்ல நடந்து அவர் அருகில் வந்தான் அர்ஜுன் “மெய்ப்பொருள் காண்பதறிவு” அப்படின்னு சொன்னார் வள்ளுவர். “அரவிந்த் பக்கம் அவர் நியாயம் இருக்கலாம் இல்லையா அத்தை?”” என்றான் நிதானமாக.
நியாயங்கள்! அவரவருக்கு அவரவர் நியாயங்கள்! அர்ஜுனுக்கு நியாயம் என்று தோன்றுவது எல்லாம் மற்றவர்களுக்கு நியாயம் ஆகி விடுகிறதா என்ன?
உள்ளே வந்து குளித்து உடை மாற்றிக் கொண்டு கைப்பேசியை எடுத்தான் அவன். அதில் இருந்தது அந்த குறுஞ்செய்தி.
“ஹேப்பி பர்த்டே அர்ஜுன் “
ஒரு வருடம் கழித்து அந்த எண்ணிலிருந்து வந்திருக்கிறது அந்த வாட்ஸ் ஆப் செய்தி. கொஞ்சமாக மகிழ்ச்சி தூறல்கள் அவனுக்குள் விழுந்தது உண்மை.
“நாம ரெண்டு பேரும் தனியா போய் ஏதாவது சாப்பிடுவோமா?” கெஞ்சிய அந்தக் குரலும் அதில் பொதிந்திருத்த இவனது அரவணைப்புக்கான ஏக்கமும் இன்னமும் மறக்கவில்லை அர்ஜுனுக்கு.
இந்த ஒரு வருடத்தில் அப்படி அங்கே எதுவும் ஏக்கம் இருந்திருக்குமா என்பதும் புரியவில்லை. அர்ஜுனுக்கு..
ஆனாலும் குறுஞ்செய்திக்கு பதிலளிக்க மனமில்லை அர்ஜுனுக்கு. கைப்பேசியை தூர வைத்துவிட்டு அவன் நகரபோக அவனது கரம் அந்த மேஜையின் மீதிருந்த அந்த வைரங்கள் பதித்த கை கடிகாரத்தை தட்டி விட்டிருந்தது.
அவனே அறியாத ஒரு வித சின்ன பதற்றத்துடன் அவன் அதை தரையிலிருந்து எடுத்தது உண்மை. அதற்கு எந்த சேதமும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு அதை மறுபடியும் மேஜை மீதே வைத்து விட்டு அகன்றான் அர்ஜுன்.
எத்தனை முயன்றாலும் சிலரை விட்டு அத்தனை எளிதில் விலகிவிட முடிவதில்லைதான். அவர்களை மனதை விட்டு அத்தனை எளிதில் விலக்கி வைக்க முடிவதில்லைதான்.
வாட்ஸ் ஆப்பில் நீல நிற குறியீடு எழ அர்ஜுன் செய்தியை பார்த்துவிட்டான் எனும்செய்தி மறுமுனையை அடைய மெலிதான புன்னகையுடன் கைப்பேசியை பார்த்திருந்தன அந்த விழிகள். பதில் வராது என்பதும் தெளிவாக புரிந்தது.
வானில் இருந்த நட்சத்திரங்கள் நடந்த எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்க ஊன்றுகோலை இறுக பற்றிக்கொண்டு எழுந்து சென்று ஜன்னலின் வழியே நட்சத்திரங்களை பார்த்திருந்தன அந்த விழிகள்.
தொடரும்
error: Content is protected !!