Skip to content
Post Views: 1,175
விழாக் காணுமே வானம் 12
வத்சலா ராகவன் – மது ஹனி
பாயும் புலி பதுக்கிய நேசம்.
Advertisement
மிகப் பெரிய சூறாவளியை வீசி விட்டு வந்தவன் சற்றும் ஆறுதல் கொள்ளாமல் இங்கும் அங்குமாக தனது ஊன்றுகோலைப் பற்றியபடியே நடந்து கொண்டிருந்தான்..
ஒரு அணைப்பு ஒற்றை அணைப்பு ஒரு மனிதனுக்கு இத்தனை சந்தோஷத்தை தருமா? இத்தனை நிறைவை தருமா? அந்த ஒற்றை புன்னகையை பார்த்தவுடன் மனது இத்தனை லேசாகி விடுமா?
இப்போது தனது கைப்பேசியை எடுத்து தொடுத்தான் அந்த குறுஞ்செய்தியை.
Advertisement
“தேங்க் யூ மை டியர் பிரதர்”
Advertisement
எதற்கு திடீரென இந்த குறுஞ்செய்தி என அர்ஜுனுக்கு புரியாமல் கூட இருக்கலாம். அதற்கு அவன் பதிலளிக்க மாட்டான் என்று கூட தெரியும் விக்ரமுக்கு. இருந்தாலும் உடன் பிறந்தவனுக்கு அதை அனுப்பி விட்டு இதழ்களில் ஒரு புன்னகையை இருத்திக் கொண்டு அமர்ந்தான் விக்ரம்.
விக்ரமுக்கே தன்னைப் பற்றி நினைக்கும் போது வியப்பாகத்தான் இருந்தது. பெற்றவர்களிடமும் பெரிதாக தனது மனதை பகிர்ந்து கொண்டதில்லையே.
பல வெற்றிகளை சிம்மாசனமாக்கி அதன் மீது ஏறி அமர்ந்திருக்கும் ஒரு சக்கரவர்த்தி அவன். தோல்விகளின் சாயல் கொண்ட காற்றை கூட சுவாசிக்க விரும்பாதவன் தான் அவன்.
Advertisement
ஆனாலும் வாழ்க்கையில் அவன் தோல்விகளை சந்தித்ததே இல்லையா? சந்தித்திருக்கிறான். அவனது கையை மீறிய இரண்டு தோல்விகள்.
முதல் தோல்வி அவனது காலில் இருக்கும் ஊனம்.
தன்னால் சரியாக நடக்க இயலாது என்பதை அவன் உணர்ந்த போது எழுந்த ஒரு தாழ்வு மனப்பான்மை. அவனை சுற்றி இருந்த சில சிறுவர்கள் செய்த பரிகாசம் தந்த வலி. இதனாலேயே அவன் வீட்டை விட்டு வெளியே வராமலே இருந்த நாட்கள். இவையே அவனது வெற்றிக்கான தவிப்பை வெற்றிக்கான தேடலை வெற்றிக்கான தவத்தை மெருகேற்றிய நாட்கள்.
நட்சத்திரங்களை தவிர நெருக்கமான நண்பர்கள் என யாரையும் கொண்டதில்லை அவன். ஆனாலும் இன்று தோள் அணைத்துக் கொண்டானே அவனோடு மட்டும் அடி மனதில் ஒரு ஆழமான பந்தம் உண்டு.
அர்ஜுன் அடிக்கடி அவனுடன் அமர்ந்து விளையாடி பேசிக்கொண்டிருப்பானா என்றால் அதுவும் இல்லை. ஆனால் சிறு வயதிலிருந்து அவனுக்கு ஒரு பழக்கம் உண்டு. விக்ரம் மனதளவில் உடைந்து போய் தனிமையில் விழும் நாட்களில் இதோ இன்று அணைத்துக் கொண்டானே அது போலவே அணைத்துக் கொள்வான் அண்ணனை. இன்று புன்னகைத்தானே அது போலவே புன்னகைப்பான். அதுவே விக்ரமுக்கு அடுத்த நூறு நாட்களுக்கு தேவையான வலிமையை கொடுத்துவிடும்
சென்ற வருடம் வரை எப்போதாவது, நூறு நாட்களில் ஒரு நிமிடம் இவன் மனதால் அல்லது உடலால் தளர்ந்து போய் நிற்கும் தருணங்களில் எப்படியோ உணர்ந்து கொள்வான் அதை. எங்கிருந்தாவது வந்துவிடுவான் அருகில்.
.வீட்டில் இருக்கும் எதுவாக இருந்தாலும் அவர்கள் பெற்றவர்கள் முதற்கொண்டு எல்லாவற்றின் மீதும் விக்ரமுக்கே அதிக உரிமை.
“டேய்.. நீ டென்னிஸ் அது இதுன்னு விளையாடி எவ்வளவு ஜெயிக்கிற அவன் பாவம்டா. அவனுக்குன்னு என்ன இருக்கு சொல்லு அவன் வருத்தப்படுவான். உன் கப்பை ஒளிச்சு வை”
“உன் வீடியோ கேம் அவன்கிட்டே கொடுத்திடு அவன் வெச்சுக்கட்டும்”
“நீ வெளியில் போய் எவ்வளவு சாப்பிட்டு வர. உன்னோட ஐஸ்கிரீம் அவன்கிட்டே கொடு அவன் சாப்பிடட்டும்”
இவை எல்லாம் வீட்டில் சிறு வயதிலிருந்து அர்ஜுனிடம் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தைகள். இதற்கெல்லாம் அர்ஜுன் என்றுமே மறுப்பு தெரிவித்தது இல்லை. அவற்றையெல்லாம் விக்ரமிடம் கொடுக்கும் போது அவனது புன்னகை முகம் கூட மாறிப் போனது இல்லை.
ஒன்றரை வருடத்துக்கு முன்னால் அந்த தினம். அவனால் மறக்க முடியாத தினம். தனது வாழ்க்கையின் இரண்டாவது பெரிய தோல்வியை விக்ரம் சந்தித்ததினம்.
பருவ காலத்தில் ஒரு பெண்ணை பார்க்கும் போது அவளுடன் பழகும் போது, அவள் தன்னை சுற்றி வரும் போது, நீங்கள்தான் எனக்கு எல்லாம் என்று அவள் சொல்லும் போது சட்டென மனதிற்குள் பூத்து நிற்கும் பூவுக்கு என்னவென்று பெயர் வைப்பது. சாதாரண ஈர்ப்பு என்றா? காதல் என்றா? ஆழ்ந்த நேசம் என்றா?
அப்படி எல்லாம் பிரித்தறிந்து பார்க்க சற்று முதிர்ச்சி தேவைப் படுகிறது. அந்த முதிர்ச்சி ஏற்படும் முன்னால் ஏற்படும் ஒரு தோல்வி மிகப்பெரிய வலியை பரிசளிக்கிறது. மனதிற்குள் அந்த மலர் இருந்த இடம் ஒரு வெற்றிடமாக ஒரு வடுவாக மாறி நிற்கிறது.
அவனது இரண்டாவது தோல்வியை அவன் சந்தித்த தினத்தில் விக்ரம் இருந்தது நியூயார்க்கில். அந்த நேரத்தில் பத்து நாட்களாகவே அவன் நியூயார்க்கில் சுற்றிக் கொண்டிருந்தான்.
வைஷாலி ஒரு பெரிய தொழிலதிபர் குடும்பத்தின் மகள் என்பதால் அவளது திருமணம் சென்னையில் அமர்க்கள பட்டுக் கொண்டிருக்க அன்று தனது அலுவலக அறையில் அமர்ந்து வெகு இயல்பாக கைப்பேசியை புரட்டிக் கொண்டிருந்தவனுக்கு கண்ணில் விழுந்தது மணமக்களின் திருமண வீடியோ
பொதுவாக தனக்குளே எந்த ஆசையையும் வளர்த்துக் கொள்ள விரும்பியதில்லை விக்ரம். அவனே அறியாமல் அவனுக்குள்ளே நிலைக் கொண்ட இந்த ஆசை தன்னாலே வேரறுந்து போவதை அவன் கண்கள் விரிந்து விழுங்கிக் கொண்டிருந்தன.
அறைக்குள் நின்றுக் கொண்டிருந்தவனின் ஊன்று கோல் அவன் அறியாமல் கீழே விழுந்து விட தன்னை சமாளித்துக் கொள்ள இயலாமல் கொஞ்சம் தடுமாறிப் போனான்.
வியாபார உலகில் கிரௌசிங் டைகர் என அழைக்கப் படுபவன் அவன். இன்றைய தடுமாற்றத்தில் அப்படியே தரையில் அமரத் தான் வேண்டியிருந்தது. அமர்ந்த வாக்கிலேயே நகர்ந்து செல்லத்தான் வேண்டியிருந்தது. அமர்ந்து சற்றே நகர்ந்து அந்த ஊன்றுகோலை எடுத்து சமாளித்துக் கொண்டு எழுந்து நின்றான் அவன்.
அவனது தடுமாற்றத்துக்கு காரணம் கீழே விழுந்த ஊன்றுகோல் மட்டுமல்ல. அவனை புறக்கணித்து கடந்த சென்ற அவனது காதல் கூடத்தான். இதை எல்லாம் யாரிடமும் வெளிக் காட்டிகொண்டால் அவன் விக்ரம் இல்லையே. ஒரு பாட்டில் தண்ணீரை அருந்தி தன்னை அடக்கிகொண்டான் அவன்.
என்னதான் சில நொடிகளில் நிமிர்ந்து நின்றிருந்தாலும் எண்ணங்களின் பளு அவனை அழுத்திக் கொண்டிருந்தது. தனது மானசீக சுமைதாங்கியான அர்ஜுனை தேடியது அவனுள்ளம்,
அதே நேரத்தில் அங்கே
“கேட்டா பிசினஸ் அது இதுன்னு கதை சொல்வான். அவன் எல்லாம் வர மாட்டான் அங்கிள். எதுக்கு அவனை கூப்பிடணும்” மேட்ச் பார்க்க விக்ரமை அழைக்கச் சொன்ன ரங்கநாதனிடம் அர்ஜூன் சலிப்போடு கூறினான்.
“கூப்பிட்டு பாரு, வந்தா வரட்டும்” ரங்கநாதன் சொல்ல ஸ்வாதி அர்ஜூனின் முகத்தையே பார்த்திருந்தாள்.
“விக்ரம் வந்தா உனக்கு ஹாப்பியா இருக்குமா சேடா இருக்குமா” அர்ஜூனிடம் கேட்டாள்.
“சேடா எப்படி இருக்கும். ஹாப்பியா தான் இருக்கும் குஷ்பூ” அர்ஜூன் சொல்லவும் அர்ஜூனிடம் கைப்பேசியை வாங்கி விக்ரமின் எண்ணை அவளே அழைத்தாள்.
“அர்ஜுன்.. சொல்லுடா” நினைத்தவன் உடனே அழைத்துவிட அவசரமாக சொன்னான் விக்ரம்.
“நான் ஸ்வாதி” மறுமுனை அறிமுகப் படுத்திக் கொண்டது. “அவனும் நானும் ஒண்ணுதான் . அவன்கிட்டே சொல்றது எதுனாலும் என்கிட்டே சொல்லலாம்”
“அப்படியா?” மெல்ல சிரித்துக் கொண்டான் விக்ரம் “சரி பின்னாடி பார்ப்போம். இப்போ என்ன விஷயம் சொல்லு.”
“இல்ல அர்ஜுன் உங்களை மேட்ச்க்கு கூப்பிட சொன்னான் அதான்” சொன்னாள் ஸ்வாதி.
“ஷூர் கண்டிப்பா வரேன்” சொன்னான் தாய் மடி தேடும் சேயாக. ஆனாலும் உடனடியாக கிளம்ப முடியவில்லை அவனால். அலுவலக வேலைகள் அவனை அழுத்தின..
“ஹையோ, நீங்க பேசிட்டீங்க விக்ரம் சார். நீங்க வாயில் கொழுக்கட்டை வச்சிருக்கீங்களோன்னு நினச்சேன் தெரியுமா” கண் முன்னே வந்து வந்து சிரித்துக் கொண்டிருந்தாள் இத்தனை நாட்கள் அவனது மன சிம்மாசனத்தில் ஆட்சி செய்த வைஷாலி எனும் ராணி.
மனதை திசைத் திருப்ப அங்கிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க அதில் அர்ஜுன் ஸ்வாதி இருவரும் முன்பு ஆடிய கலப்பு இரட்டையர் ஆட்டம்.
டாஸ் வென்றவர்கள் முதலில் செர்வ் செய்ய தேர்வு செய்தார்கள்.
முதல் செர்வையே நெட்டில் அடித்து விட்ட ஸ்வாதி ஒற்றைக் காலை ஓங்கி தரையில் மிதித்து டென்ஷனாக அர்ஜூன் அவள் தோளை தட்டிக் கொடுத்து அவளிடம் ஏதோ சொன்னதும் அவள் மலர்ந்ததும் அந்த கேமை அவர்கள் 40 – லவ்வில் வெற்றி பெற்றதும் விக்ரமின் விழிகளில் இருந்து தப்பவில்லை.
இரண்டே நேர் செட்டுகளில் சுலபமாக வென்றிருந்தார்கள்.
ஆனால் மேட்ச் பூராவும் ஸ்வாதியை அர்ஜூன் அவ்வப்போது தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்ததே விக்ரமின் கண்களுக்குத் தெரிந்தது.
அப்படி என்னதான் பிரிக்க முடியாத பந்தம் இருவருக்கும். மெலிதான வியப்பு கலந்த யோசனை அவனிடத்தில்.
அடுத்து அங்கே
விமன் சிங்கில்ஸ் பைனல் மேட்ச். ஸ்வாதியும் யுகோஸ்லேவியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனையும் மோதவிருந்தனர். ஸ்வாதியும் அவள் போட்டியாளரும் கிட்டத்தட்ட ஒரே வயதும் மேட்ச் அனுபவமும் கொண்டவராக இருந்தனர்.
மேட்ச் ஆரம்பமாக ஸ்வாதியின் போட்டியாளர் டாஸ் வென்று செர்வ் செய்ய தீர்மானித்திருந்தார்.
அர்ஜூனையும் தந்தையையும் ஸ்வாதி பார்க்க இருவரும் அவளுக்கு தம்ஸ் அப் காட்டியபோது தான் அவனைப் பார்த்தாள்.
அர்ஜூனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவன் விக்ரம் தானே? அவன் வந்திருக்கிறான் என்று அவளுக்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது
முதல் செட்டை 4 -6 என நேரடியாக ஸ்வாதி வென்றிருந்தாள். அடுத்த செட்டையும் அவள் வென்று விட்டால் அவள் தான் விம்பிள்டன் சாம்பியன்.
டென்னிஸ் மேட்ச்களில் பெண்கள் ஆடும் போட்டிகளில் மொத்தம் இரண்டு அல்லது மூன்று செட் விளையாடுவார்கள்.
முதல் இரண்டு செட்களையும் ஒருவரே வெற்றி பெற்றால் அவரே வெற்றியாளர். இரண்டையும் தலா ஒருவர் வென்றிருந்தால் மூன்றாவது செட் வெற்றியாளரை தீர்மானிக்கும்.
செர்வ் செய்பவருக்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு. முதல் பந்தை எதிராளி சரியாக எதிர்கொண்டு விட்டால் ஆட்டம் தொடரும். 0 என்பதை லவ் என்பார்கள். அதில் ஆரம்பம் ஆகும். செர்வ் செய்பவரின் புள்ளிகளை முதலில் குறிப்பிடுவார்கள்.
ஆட்டத்தைப் பற்றி விக்ரமிற்கு அர்ஜூன் மிகவும் உற்சாகமாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அதில் ஆழ்ந்து போகும் மனநிலைதான் இல்லை விக்ரமுக்கு.
“விக்ரம் சார் கேன் யூ ஹெல்ப் மீ”
“விக்ரம் சார், யூ ஆர் தி பெஸ்ட்’ அவனது மனதிற்குள் புயல் காற்றாய் சுழன்று கொண்டிருந்தாள் அவள். சுவாசிக்கக் கூட பிடிக்கவில்லை விக்ரமுக்கு
“எனக்குள்ளே நிகழும் பூகம்பங்களுக்கு ஆறுதலாய் உனது தோள்களை எனக்கு கொடுத்துவிடேன். ஒரே ஒரு முறை உனது கரம் எனது தோள்களை அணைத்து கொள்ளாதா?” அர்ஜுனிடம் மானசீகமாய் கெஞ்சிக் கொண்டிருந்தான் விக்ரம்.
பார்வை நிமிடத்துக்கு மூன்று முறை அர்ஜுனை தொட்டுத் தொட்டு திரும்பிக் கொண்டிருந்தது. இதை எல்லாம் கவனிப்பதாக இல்லை அர்ஜுன்.
“நெட்டில் ஸ்வாதி அடிச்சுட்டா, சோ அவங்களுக்கு பாயிண்ட்ஸ் போகும். 0 -15” அர்ஜூன் ரன்னிங் கமன்ட்ரி போல விக்ரமிடம் சொல்லிக் கொண்டே வந்தான். இவனுக்கு பல நூறு மனப் போராட்டங்களில் உயிர் கனத்து கிடந்தது.
“இப்போ ரெண்டு பேரும் 40 -40 ல் இருக்காங்க. இது டியூஸ் (Deuce). இதற்கு பிறகு ஸ்வாதி ரெண்டு பாயிண்ட்ஸ் எடுத்தா கேம். ஒன்னு எடுத்தா அட்வான்டேஜ்ல இருப்பா. அடுத்த பாயிண்டை இவ மிஸ் செய்தா மறுபடி டியூஸ் போயிரும். ரெண்டு பேர்ல யார் ரெண்டு பாயிண்ட்ஸ் சேர்ந்தா போல எடுக்கிறாங்களோ அவங்களுக்கு கேம். ஆறு கேம் ஒரு செட்”
“எனக்கு பிஸ்னஸ் மேனேஜ்மன்ட்ல சுத்தமா இன்ட்ரஸ்ட்டே இல்லாம இருந்தது விக்ரம் சார். உங்களால் தான் இன்ட்ரஸ்ட் வந்திருக்கு. இப்போ கிளாஸ் ரொம்ப எல்லாம் கட் அடிப்பதில்லை” பழைய குரலின் எதிரொலி. மூச்சை இறுக்கிகொண்டான் விக்ரம்.
இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா. உதவி செய்ய மாட்டாயா அர்ஜுன்.?
இரண்டாவது செட்டை ஸ்வாதி தோற்று விட அர்ஜூன் கலக்கம் கொள்ளவில்லை. ஆனால் விக்ரமின் கலங்கிய முகத்தைக் கண்டவன் ஸ்வாதி தோற்றதால்தான் சோர்வடைந்து விட்டான் என்றே நினைத்தான்.
“அடுத்தது முதல் கேமே லவ் கேமா இருக்கும் பாரேன்” என்றான்.
அவன் சொன்னது போலவே எதிராளியை ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல் 0 – 40 என பர்ஸ்ட் கேமை வென்றாள்.
“அவ பர்ஸ்ட் செர்வ் மிஸ் பண்ணிட்டா அப்செட் ஆகிடுவா. ஆனா வந்த செர்வை விடாம அடிச்சிருவா” ஏழு வயதில் இருந்து உடன் ஆடுபவன். அவளது உற்றத் தோழன். அவளது ஆட்டத்தின் அசைவுகளை மட்டுமில்லாமல் அவளது மனநிலை மாற்றங்களையும் அறிந்து வைத்திருப்பவன்.
அவன் அவ்வாறு நுணுக்கமாக சொன்னது ஆச்சரியம் இல்லை தான். ஆனாலும் இவனது ஏக்கம் வேறுவிதமாக இருப்பதை அறியவில்லை விக்ரமின் உடன் பிறந்தவன்.
“நான் என்ன பிஸ்னஸ் செய்கிறேன். எதற்காக லண்டனில் இருக்கிறேன். எங்கே தங்கியிருக்கிறேன் என்று ஏதாவது இவனுக்குத் தெரியுமா. அவ ஒரு மடுக்கு தண்ணீரை கூட குடித்ததற்கு இவன் குதிக்கிறான்”
விக்ரமிற்கு அது தண்ணீர் இல்லை ஸ்பெஷலான எனர்ஜி பானம் என்றும் அதை அளவோடு தான் பருக வேண்டும் என்பதும் தெரியவில்லை.
“நான் கொதிகலனில் உழன்று கொண்டிருக்கிறேன். நீ அவள் ஆட்டத்தில் மூழ்கி திளைக்கிறாய்” விக்ரமின் மனம் தவிப்பில் உழன்றுக் கொண்டிருந்தது. ‘என்னை ஒரு முறை பாரடா என் உடன் பிறந்தவனே” மானசீக இறைஞ்சல் அவனிடத்தில்.
மூன்றாவது செட்டை அர்ஜூன் கூறியது போல ஸ்வாதி வெற்றி பெற்று விட அரங்கமே எழுந்து நின்று ஆரவாரம் செய்தது. ஸ்வாதி தன்னுடன் மோதிய வீராங்கனையோடு கைகுலுக்கி தோளோடு அணைத்துக் கொண்டாள்.
பிரசென்டேஷன் செரிமனிக்கு முன் விவிஐபி பாக்ஸில் அமர்ந்திருந்த தந்தையிடமும் அர்ஜூனிடமும் ஓடி வந்தவளை அர்ஜூன் அணைத்துக் கொண்டான்.
ரங்கநாதனும் அவளை பாராட்ட, விக்ரமிடமிருந்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவன் பக்கம் திரும்பப் போனவளை பிரசன்டேஷன் செரிமனிக்கு அழைத்தனர். கோப்பையை உயர்த்தி பிடித்து அதை முத்தமிட்டாள்.
அவளிடம் மைக்கை கொடுத்து கேள்விகள் கேட்ட தொகுப்பாளருக்கு அவள் அழகாக பதில் கூறிக் கொண்டிருந்தாள்.
சென்ற மாதம் நடந்த விம்பிள்டனில் கலப்பு இரட்டையர் ஆட்டம் மற்றும் ஆண் பெண் ஒற்றையர் ஆட்ட சாம்பியன்ஷிப்பை அர்ஜூனும் ஸ்வாதியும் வென்றிருந்தார்கள்.
நடைபெறும் யூஎஸ் ஒபன் கலப்பு இரட்டையர் போட்டியில் நேற்று இருவரும் வெற்றி பெற்றிருக்க இன்று ஸ்வாதி மகளிர் ஒற்றையர் போட்டியையும் வென்று விட்டாள். அதனால் நாளை அர்ஜூன் ஆடும் ஆடவர் இறுதிப் போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்
“நாளைய மேட்ச்சை எப்படி எதிர்நோக்கி இருக்கீங்க. உங்க நண்பர் அர்ஜூனும் உங்களோட ஆதர்ஷ டென்னிஸ் லெஜண்டும் மோதுகிறார்களே” என தொகுப்பாளார் கேட்க ஸ்வாதி ஒரே வரியில் அழகாய் பதில் கூறினாள்.
“அர்ஜூன் இஸ் வெரி லக்கி டு ப்ளே வித் ஹிம் அண்ட் ஐ ஆம் ப்ரௌட் அபோட் தட்”
அவளை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன் இயல்பாக விக்ரமின் பக்கம் திரும்ப இப்போதுதான் விக்ரமின் முகத்தை சரியாக கவனித்தான்.
“இது எப்போதும் இருக்கும் விக்ரம் இல்லையே” அவனுக்குள்ளே மணியடிக்க
“என்ன விக்ரம்? உடம்புக்கு எதுவும் சரியில்லையா என்ன?” இதம் தடவிய குரலில் கேட்டான் அர்ஜுன்.
“இ..இல்ல.. அதெல்லாம்…ஒ.. ஒண்ணுமில்லை” வியப்பிலும் பெரும் வியப்பாக விக்ரமின் குரலில் தடுமாற்றம்.
“இல்லையே நீ எப்பவும் இருக்கும் விக்ரம் இல்லையே” அர்ஜுன் கேட்க
“நாம ரெண்டு பேரும் தனியா போய் ஏதாவது சாப்பிடுவோமா?” என்று கேட்ட விக்ரமின் குரலில் கொஞ்சம் கெஞ்சல் ஒளிந்திருப்பதை போலே உணர்ந்தான் அர்ஜுன்.
அடுத்த சில நிமிடங்களில் ஒரு உணவகத்தில் சற்றே ஒதுக்கு புறமான இருக்கைகளில் அமர்ந்திருந்தனர் அண்ணனும் தம்பியும்.
உலகாளும் சக்கரவர்த்திகளை முடக்கும் சூழ்நிலைகள் கூட இந்த பூமியில் முளைக்கும் என்பதை உணர்த்தும் விதமாக சற்றே ஒடுங்கித்தான் அமர்ந்திருந்தான் விக்ரம். இப்போது அணைத்தது அர்ஜுனின் கரம்.
விலுக்கென அவன் பக்கம் திரும்பினான் விக்ரம். பசுவிடம் ஓடிச்சென்று அடைக்கலமாகும் கன்றின் பாவம் அவனிடம். எங்கிருந்தோ ஓடி வந்து அமர்ந்தது ஒரு நிம்மதி.
“என்னடா?”
அர்ஜுன் அவனை வாடா போடாவென அழைக்கும் நேரங்கள் மிக மிக குறைவு. ஆனால் அந்த அழைப்பு இன்று விக்ரமின் உயிர் தொட்டது. கண்களில் எழத் துடிக்கும் கண்ணீரை எப்படியோ தடுத்தி நிறுத்தி இருந்தான் விக்ரம். அழுதுவிட்டால் அவன் விக்ரம் இல்லையே.
“உடம்பு சரியில்லையா மனசு சரியில்லையா?” கேட்டும் விட்டான் அர்ஜுன்.
வெந்து வெந்து ஓய்ந்து அவன் வார்த்தையில் சற்று தணிந்து நின்றது உள்ளம். எதிரில் இருந்த கோப்பையிலிருந்து காபி சற்று உள்ளிறங்கியது. இன்னமும் விலகியிருக்கவில்லை அர்ஜுனின் கரம்.
சற்றே நிமிர்ந்து சரியாக அமர்ந்துக் கொண்டான் விக்ரம்
“அர்ஜுன்…” அழைத்தான் அவன்
“ம்?”
“நீ ஸ்வாதியை அல்லது வேறே யாரையும் லவ் பண்றியா என்ன?”
திடுக்கென திரும்பினான் தம்பி. முகமெங்கும் கேள்விக் கோடுகள்
“ஏன்டா திடீர்னு கேட்கிறே?”
“சும்மா தெரிஞ்சுக்கதான்” அவன் பக்கம் திரும்பவில்லை விக்ரம்.
“இதுவரைக்கும் அப்படி எல்லாம் எதுவும் தோணலை விக்ரம்” அர்ஜுன் சொல்ல
“லவ் மட்டும் பண்ணிடாதே. கஷ்டம்” மெல்லச் சொன்னான் அண்ணன்.
அவன் சொன்னதற்கும் சொல்லாமல் விட்ட வார்த்தைகளுக்கும் இடையில் இருந்த இடைவெளியை அவசரமாக நிரப்பியது அர்ஜுனின் மூளை.
‘காதலில் எதுவும் தோற்று விட்டானா என்ன?” அவசரப்பட்டு அவனிடம் கேட்டு விடவும் தைரியம் இல்லை அர்ஜுனுக்கு.
அவனது அணைப்பு மட்டும் தொடர்ந்தது. விழி அகற்றாமல் அர்ஜுன் அவனையே பார்த்திருக்க காபியை முடித்துவிட்டு தெளிந்து நிமிர்ந்து அமர்ந்தான் விக்ரம்.
அர்ஜுனின் பார்வையில் ஆயிரம் வினாக்கள்.
“நீ அப்படி பயந்து போய் பார்க்குற அளவுக்கு ஒண்ணுமில்லை உன் அண்ணனுக்கு” அவன் முதுகில் தட்டிவிட்டு எழுந்து விட்டிருந்தான் விக்ரம். அதுதான் விக்ரம்.
“நாளைக்கு நீ ஜெயிக்குற வழியை பாரு சரியா. வேறே எதையும் யோசிக்காதே. நான் வரேன்” அகன்றான் அண்ணன்.
அவனுக்காக ஏனோ இன்று மனது அதிகமாக பதைபதைத்து போனது. இத்தனை நாட்கள் அவனிடமிருந்து வெளிப்படாத விக்ரம் இதுவரை இவனிடமிருந்து பெற்றுக் கொள்ளாத ஒரு வித பாசம் இருவரையும் சில நிமிடங்கள் கட்டிப் போட்டதை போலவே தோன்றியது அர்ஜுனுக்கு.
தொடரும்
error: Content is protected !!