Skip to content
Post Views: 1,064
விழாக் காணுமே வானம் 13 (03)
“விக்ரம் நீ எப்போ வந்தே” சற்று தொலைவில் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து அர்ஜூன் கேட்க ஸ்வாதி இயல்பாய் அர்ஜூனின் முதுகோடு ஒட்டிக் கொண்டாள்.
அவன் அப்படி திடீரென அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்தது ஸ்வாதிக்குப் பிடிக்கவில்லை.
“நான் போறேன்” ஸ்வாதி எழுந்து கொள்ள போக, “இரு சேர்ந்தே போகலாம்” என்றவன் ஸ்வாதியுடன் கிளம்ப
Advertisement
“இரு அர்ஜுன்” என்ற விக்ரமின் குரலில் நின்றான். “அவ போகட்டும் நாம கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்போம். நாம ஒண்ணா உட்கார்ந்து பேசி ரெண்டு மூணு மாசம் ஆச்சு”
அர்ஜுன் பதில் சொல்வதற்குள் ஸ்வாதி அங்கிருந்து விலகி நகர்ந்திருந்தாள்.
அவள் சென்றதும் தம்பியை ஆரத் தழுவிக் கொண்டான் அண்ணன். “மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப், தி டே அர்ஜுன்” என்றவன் அவனது கையில் அந்த கடிகாரத்தை அணிவித்தான்.
Advertisement
“ஃபுல்லா வைரக்கல் பதிச்சு இருக்கு. இது எப்பவும் இருக்கணும் உன்கிட்டே”
Advertisement
“எதுக்கு விக்ரம் இதெல்லாம்?”
“எதுக்கா .என் தம்பிக்கு இதெல்லாம் கம்மி. நான் இதுக்கு மேலே இன்னும் எவ்வளவோ செய்யணும்” என்றவனின் குரலில் அத்தனை மகிழ்ச்சி.
“ஸ்வாதிக்கு விக்ரம்? அவளுக்கு எதுவும் வாங்கலையா?” அர்ஜுன் கேட்க
Advertisement
“இல்லைடா. அவளுக்கு என்ன பிடிக்கும்ன்னு தெரியலை. என் தம்பிக்குன்னா நான் தைரியமா வாங்குவேன். அவளுக்கு பிடிச்சதை நீ வாங்கிக் கொடு. நான் பணம் கொடுத்திடறேன்’ என்றான் தம்பியை அன்பாக அணைத்துக் கொண்டே.
பெரிதாக வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் தம்பிக்கு இந்த பரிசு நிறையவே மகிழ்ச்சியை கொடுத்தது. அண்ணன் அவனுக்கென கொடுத்த முதல் பரிசு அல்லவா அது.
“இன்னுமா ரெடியாகிட்டு இருக்க. எல்லோரும் கிளம்பிட்டாங்களாம். சீக்கிரம் வா” ஐந்தாவது முறையாக கதவை தட்டினான் அர்ஜூன்.
“உனக்கென்ன ஜம்ம்ன்னு ஷெர்வானி போட்டுட்டு வந்துட்ட. இதுக்குள்ள நுழையவே எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா” கதவைத் திறந்தவள் அவனை திட்டிக் கொண்டிருக்க அவனோ அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னடா அப்படி பார்க்கிற. ஏதாச்சும் மிஸ்டேக்கா இருக்கா” ஓடிச் சென்று கண்ணாடி முன் நின்று இப்படியும் அப்படியுமாக திரும்பிப் பார்த்தாள்.
பால் வெண்ணிறத்தில் அடுக்கடுக்காய் குடை போன்ற ப்ரில்களில் முத்துக்களும் வெண்ணிற கற்களும் பதித்த BALL GOWN உடையை அவளுக்காக அர்ஜூன் தான் தேர்வு செய்திருந்தான்.
முத்துக்கள் பதித்த மெல்லிய வெள்ளி TIARA எனப்படும் கிரீடம் அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது.
மேக் அப் எல்லாம் செய்து ஸ்வாதிக்கு பழக்கம் இல்லாததால் எந்த ஒப்பனையும் இன்றி தேவதை போல இருந்தாள்.
வெண் நட்சத்திரக் கற்களும் வெள்ளி இழைகளுமான வெண்ணிற ஷெர்வானியில் அர்ஜூனும் ராஜகுமாரனைப் போல காட்சி அளித்தான்.
“பார்பி டால், அழகு பார்த்தது போதும். ஓடி வா” அவள் கைகளுக்குள் தனது கை கொடுத்து அவளை இழுத்துக் கொண்டு வாசலுக்கு செல்ல
“இது என்ன அர்ஜுன் புது வாட்சா?”. பார்த்து விட்டாள் அதை.
“எஸ் விக்ரம் வாங்கிக் கொடுத்தான்”
“எனக்கு என்ன வாங்கினான் உங்க அண்ணன்?”
“அது உனக்கு என்ன வாங்குறதுன்னு தெரியலையாம். அப்புறம் உனக்கு பிடிச்சதை வாங்கிக் கொடுக்க்றேன்ன்னு சொன்னான். வா வா நாம போகலாம்” சற்றே வாட ஆரம்பித்த அவள் முகத்தை மலரச்செய்ய அவள் கைப் பிடித்து இழுத்துக் கொண்டு விரைந்தான் அர்ஜுன்,
மார்கழி மாதம் என்பதால் சூரியன் சீக்கிரமே மேற்கில் சென்று மறைந்து விட இதற்காக தானே காத்திருக்கிறேன் என்ற வெண்ணிலவு கடலுக்குள் இருந்து மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது.
ஸ்வாதி அர்ஜூன் இருவரையும் கண்ட சரளா உப்பு மிளகாய் எடுத்து வந்து சுற்றிப் போட்டார்.
“ஹாப்பி பர்த்டே பாப்பா, ஹாப்பி பர்த்டே தம்பி” என்று அவர் வாழ்த்துச் சொல்ல வேந்தன் ஒரு சிரிப்போடு நின்றிருந்தார்.
“தாங்க்ஸ் அக்கா. நீங்களும் அண்ணாவும் சூப்பரா இருக்கீங்க” ஸ்வாதி சொல்ல வேந்தன் தான் வெட்கப் பட்டார்.
அன்று ஸ்வாதி அனைவருக்கும் கருநீல வண்ணத்தை ட்ரஸ்கோடாக வைத்திருந்தாள்.
பல்வேறு டிசைன்களில் கருநீல வண்ணத்தில் தனது அன்னை, பாட்டி, சரளா மற்றும் அர்ஜூனின் அன்னைக்கு அவளே புடவைகளை செலெக்ட் செய்திருந்தாள்.
வேந்தனுக்கும் தங்களது தந்தையரைப் போல கருநீல வண்ண கோட் சூட் தைத்துக் கொடுத்திருந்தான் அர்ஜூன்.
வாசலில் பெற்றோரின் வரவை எதிர்பார்த்து நின்றிருந்தவர்களுக்கு விக்ரம் பிறந்த நாள் வாழ்த்துக் கூற அவன் புறம் திரும்பினாள் ஸ்வாதி.
“தாங்க்ஸ் விக்ரம்” என்று அவனிடம் அர்ஜூன் சொல்லிக் கொண்டிருக்க ஸ்வாதி அர்ஜூனின் காதைக் கடித்தாள்.
“உன் அண்ணா ஏன் ட்ரஸ் கோட் ஃபாலோ செய்யல. நீ சொன்னியா இல்லையா” கடுப்பாக ஸ்வாதி கேட்க “நான் சொன்னேன் தான், மறந்திருப்பான் போல. விடு குஷ்பூ” என அர்ஜூன் சொல்லவும் அவள் முகம் இன்னுமாக சிறுத்தது
விக்ரம் சந்தன நிற பேன்ட்ஸ், மரூன் நிறத்தில் ஷர்ட் அணிந்திருந்தான்.
“நீங்க ஏன் ட்ரஸ் கோட் ஃபாலோ செய்யல” ஸ்வாதி விக்ரமிடம் நேரடியாக கேட்டு விட நினைத்துக் கொண்டிருந்த போது போர்டிகோவில் கார் நுழைந்தது.
பாட்டியும் பெற்றோரும் இறங்கி வர வாசலில் நின்றிருந்த ஸ்வாதியும் அர்ஜூனும் இடை வரை குனிந்து வெல்கம் டூ அவர் பர்த்டே பார்ட்டி என்று சொல்லவும் பெரியவர்கள் ஆச்சரியத்தில் விழி விரித்தனர்.
“என் பொண்ணா இது. எங்க கொஞ்சம் நல்லா பார்க்கிறேன்” ஸ்ரீதேவி சொல்லவும் “அம்மா” என்று சிணுங்கினாள் மகள்.
“ராஜகுமாரன் போல இருக்கான் அர்ஜூன்” என பாட்டி சொல்லவும் ருக்மணி சட்டென விக்ரமின் பக்கம் பார்வை பதித்தார்.
விக்ரம் இயல்பாக இருக்கவும் அவர் நிம்மதி அடைந்தார்.
சில மாதங்களாகவே விக்ரமிடம் கொஞ்சம் நிதானபோக்கு இருந்ததை பெற்றவர் கவனித்தே தான் இருந்தார்.
“ஏஞ்சல் போல இருக்கே ஸ்வாதி” ருக்மணி சொல்லவும் “அர்ஜூன் தான் செலெக்ட் பண்ணான்” என்று சந்தோஷமாக கூறினாள்.
வரவேற்பு அறையில் அவர்கள் வென்ற கோப்பைகள் போட்டோஸ் கூடவே எந்த போட்டி எந்த ஆண்டு என்ற குறிப்போடு இருக்க இவர்கள் இருவரும் இதையெல்லாம் செய்திருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
சரளா அனைவருக்கும் காபி எடுத்து வர அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவாறே அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அர்ஜூனும் ஸ்வாதியும் டின்னர் டேபிள் செட் செய்ய போகிறோம் என்று அங்கிருந்து சென்றிருந்தனர்.
“கேவி க்ரூப்ஸ் தான் அர்ஜூனுக்கும் ஸ்வாதிக்கும் ஸ்பான்சர் செய்றதா கேள்விபட்டேன்” அது வரை மௌனமாக இருந்த விக்ரமின் கேள்விக்கு “ஆம்” என்று பதில் கூறினார் ரங்கநாதன்.
“என்ன டெர்ம்ஸ்” என்று விக்ரம் துருவினான்.
கேவி க்ரூப்ஸ் எம்டி ரங்கநாதனின் கல்லூரி நண்பர். டென்னிஸ் பிரியர். டென்னிஸ் மேல் இருந்த பற்றும் நட்பும் தான் அவர் ஸ்பான்சர் செய்யக் காரணம். அதை அர்ஜூனின் தந்தை பார்த்தசாரதியும் அறிந்தே தான் இருந்தார்.
மகனின் கேள்விக்கு அவரே விளக்கமும் சொல்ல விக்ரம் யோசனையாக அவரைப் பார்த்தான்.
“வெளிலே எதுக்கு ஸ்பான்சர் கேட்கணும். ருபா க்ரூப் ஸ்பான்சர் செய்யட்டுமே” தந்தையையும் ரங்கநாதனையும் பார்த்துக் கூறினான் விக்ரம்.
ருக்மணி பார்த்தசாரதி இருவரின் பெயரில் தான் ருபா க்ரூப் ஆப் கம்பனியை விக்ரம் வெற்றிகரமாக நடத்தி வந்தான்.
அது குறித்து ஆலோசிப்பதாக ரங்கநாதன் சொல்ல பார்த்தசாரதியும் அதை ஆமோதிக்க விக்ரம் தலையசைத்தான்.
மகனின் அக்கறையில் பூரித்த ருக்மணி ஸ்ரீதேவியைப் பார்த்து சந்தோஷமாக புன்னகைத்தார்.
ஆனால் நடந்த உரையாடல்களை கவனித்த ஸ்ரீதேவிக்கு நெருடலாகவே இருந்தது.
““ஸ்வாதியை என் மருமகளா ஆக்கிக் கொள்ள எனக்கு ஆசை தேவி” என்று காலையில் ருக்மணி சொன்னதற்கும் விக்ரமின் இந்த பேச்சிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என்று அவர் சிந்தனையில் ஆழ்ந்த போது வேந்தன் அனைவரையும் கடற்கரைக்கு வருமாறு அழைத்தார்.
இரவு வானில் நட்சத்திரப் பூக்கள் பூத்திருக்க பால்நிலா ஆனந்தமாக அந்தக் கடற்கரையை ஒளியூட்டிக் கொண்டிருந்தது.
வான் நட்சத்திரங்கள் எல்லாம் மண்ணுக்கு இறங்கி வந்து வரிசையில் நின்று வரவேற்பதை போல மின்னிய அலங்காரங்கள் அனைவரின் கண்களையும் கவர்ந்த்து.
ஒரு முறை வானத்தை பார்த்து புன்னகைத்துக் கொண்டான் அந்த நட்சத்திரப் பிரியன்.
மிகப் பெரிய வட்ட டேபிளை சுற்றி சேர்கள் போடப்பட்டிருக்க அனைவரும் அமர்ந்தனர். பக்கத்திலே நீளமான ஒரு டேபிள் போடப்பட்டு அதில் உணவு வகைகள் அடுக்கப்பட்டிருந்தன.
அனைவரும் அமர்ந்து கொள்ள அர்ஜூன் ஸ்வாதி இருவரும் அந்த நீள் டேபிளில் இருந்து கேக்கை ஏந்திக் கொண்டு வந்தனர்.
இரு டென்னிஸ் ராக்கெட் வடிவிலான வெண்ணிற கேக் மீது 25 என்ற எண் சில்வர் நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது.
“கேக் ரொம்ப அழகா இருக்கு. இது வரை இவங்க பர்த்டேவை நாம கேக் வெட்டி கொண்டாடியதே இல்லை” ருக்மணி வெகுவாய் பாராட்டிக் கொண்டிருந்தார்.
ஸ்பார்க்கில் கேண்டிலை பொருத்தியதும் அது பூச்சட்டியை போல ஒளிர்ந்தது.
அலை கடலும் சேர்ந்து கொள்ள அனைவரும் ஹாப்பி பர்த்டே பாடவும் ஸ்வாதிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
கேக்கை வெட்டி அர்ஜூனுக்கு ஊட்டி விட அங்கிருந்த கேமராவில் விக்ரம் தான் க்ளிக் செய்து கொண்டிருந்தான். அவன் விழிகள் தம்பியை ரசித்து வாழ்த்திக் கொண்டே இருந்தன.
அர்ஜூன் அவளுக்கு கேக்கை ஊட்டி விட வரவும் அவனது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டவள் தலையை முன்னே நீட்டி வாங்கிக் கொண்டாள்.
“ட்ரஸ்ல ஈஷி விட்டிருவான்” என்று அதற்கு விளக்கம் வேறு சொன்னாள்.
இருவருக்கும் பெற்றோரும் பாட்டியும் ஊட்டி விட விக்ரம் அமைதியாகவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
“விக்ரம் நீயும் வந்து கேக் ஊட்டி விடுப்பா” பாட்டி சொல்லவும் அனைவரது பார்வையும் அவன் மீதே படிந்தது.
அவனுக்கு இதெல்லாம் பழக்கமில்லை. மற்ற நேரமாக இருந்தால் நேரடியாக மறுத்திருப்பான். ஆனால் இன்று பிறந்தநாள் கொண்டாடுவது அவனது தம்பியாயிற்றே. அவனுக்குள் நிஜமாகவே அப்படி ஒரு மகிழ்ச்சி நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
அந்த இனிமையான சூழல் அவனுக்குள் ஓர் இதமான உணர்வை நிரப்ப வலது கையால் தனது ஊன்றுகோலை பற்றி எழுந்து வந்து இடக்கரம் கொண்டு அங்கிருந்த ஸ்பூனால் அர்ஜுனுக்கு முதலில் கேக்கை ஊட்டினான்.
அர்ஜூனுக்கு அவன் ஊட்டி விட்டதும் அவனை ஒட்டிக் கொண்டு நின்றிருந்த ஸ்வாதி அடுத்து தனக்கு ஊட்டுவான் என்று தன்னியல்பாக லேசாக தலையை நீட்ட விக்ரமின் இதழில் சிறு புன்னகை துளிர் விட்டது.
ஸ்பூன் கொண்டு கேக் துண்டை எடுத்து அவன் ஸ்வாதிக்கு ஊட்டி விட பாதி கேக் உடைந்து அவளின் வெண்ணிற ட்ரஸில் அப்பிக் கொண்டது.
அவள் ட்ரஸில் கேக் பட்டதும் “ட்ரஸ்ல கேக் அப்பிக்கிச்சு” என்று அழுகுரலில் புலம்பினாள்.
விக்ரம் அப்போது ஒரு சாரி சொல்லியிருந்தால் அவள் கொஞ்சம் தணிந்து போயிருப்பாள். ஆனால் அவள் ட்ரஸில் கேக் துண்டு விழுந்ததும் அவள் அழும் குரலில் புலம்ப அவனுக்கு ஆயாசமாக இருந்தது.
“இப்படி எல்லாம் புலம்பும் பெண்களை அவன் பார்த்தது இல்லை.”.
விக்ரம் சற்றே தடுமாறி நடக்க “விக்ரம் பார்த்து” என்று அவனது தோளைப் பற்றிய அர்ஜூன் அவனை அமரச் செய்ய ஸ்வாதியின் கோபம் அதிகமானது.
ஸ்ரீதேவி டிஸ்யூ பேப்பர் கொண்டு மெல்ல கேக்கை எடுத்து விட்டார்.
“வைட் ட்ரஸ் ல வைட் கேக் கரையா தெரியாது குட்டிமா” ஸ்ரீதேவி சொல்லவும் அவள் அர்ஜூனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தமயனை சேரில் அமர வைத்து அவளருகில் வந்தவன் சிறிது கேக்கை எடுத்து அவனது ஷெர்வானியில் போட்டுக் கொண்டான்.
“டேய் என்னடா இது” ஸ்ரீதேவி சொல்லிக் கொண்டிருந்த போதே க்ரீமை கையால் அள்ளி அவனது முகத்தில் அப்பினாள் ஸ்வாதி.
பதிலுக்கு அவனும் அவள் முகத்தில் கேக் அபிஷேகம் செய்ய போகும் முன் அவள் அவனிடம் இருந்து விலகி டேபிளை சுற்றி ஓடினாள்.
நிமிட நேரத்தில் அங்கே முன்பை விட அதிக உற்சாகம் பொங்கி விட டின்னர் தயாராக இருப்பதாக சரளா சொன்னார்.
ஸ்வாதி, சரளா வேந்தன் இருவரையும் அழைத்து அவர்களுக்கு கேக் ஊட்டி விட அர்ஜூனும் அதை பின்பற்றினான்.
கேக் விழுந்ததும் ஸ்வாதி சிணுங்கியதும் அர்ஜூன் பதிலுக்கு அவன் மீது கேக்கை போட்டுக் கொண்டதும் ஸ்வாதி உடனேயே அவன் மேல் கேக்கை அப்பி விளையாடியதையும் பார்த்த விக்ரம் மெலிதாக புன்னகைத்துக் கொண்டான்.
சரளா மிகவும் சுவையாக எல்லா பதார்த்தங்களையும் செய்திருக்க அனைவரும் ரசித்து உண்டனர்.
எல்லோரும் பேச்சும் சிரிப்புமாக இருக்க விக்ரம் அமைதியாக அந்த கடற்கரையையே பார்த்த வண்ணம் இருந்தான்.
“விக்ரம் என்னாச்சு” என்று அவன் தந்தை கேட்க
“இட்ஸ் வெரி பியூடிஃபுல்” என்றான் பீச்சில் பார்வையை பதித்தபடி.
அவன் அலங்காரங்களை சொல்கிறான் என்று நினைத்த அர்ஜூன்,
“டெகரேஷன், கேக் தீம், இந்த பார்ட்டி ஐடியா எல்லாமே என் குஷ்பூவோடது” என்று பெருமையாக கூற ஸ்வாதிக்கு மிகுந்த ஆனந்தமாக இருந்தது.
மூன்லைட் டின்னர் முடித்து அனைவரும் கடற்கரையில் அமர்ந்து சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க ஸ்வாதி கேமராவில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள்.
விக்ரமின் தோள் மீது கை போட்டு அர்ஜூன் சிரித்துக் கொண்டே போஸ் கொடுக்க ‘அவன் எவ்ளோ அழகா சிரிக்கிறான். இவர் கொஞ்சம் சிரிச்சா தான் என்ன’ என மனதில் விக்ரமை அர்ச்சனை செய்தபடியே க்ளிக் செய்தாள்.
“பர்த்டே பேபி போட்டோ எடுத்துக்கலையா” என்று விக்ரம் சொல்ல “நான் ஒன்னும் பேபி இல்ல” என்று ஸ்வாதி முறைத்தாள்.
“நீ பேபி இல்ல, பார்பி…பார்பி டால், நாம ரெண்டு பேரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கலாம்” என்று அர்ஜூன் அவள் கரம் பற்றி இழுத்தான்.
அலைகடல் பொங்கி எழ வெண்ணிலவின் ஒளியில் ஜொலித்த நட்சத்திர தோரணங்களின் பின்னணியில் அர்ஜூனோடு கரம் கோர்த்து ஸ்வாதி நின்றிருக்க ரங்கநாதன் அவர்களை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
அவர்கள் இருவரும் ஒட்டிக் கொண்டு சிரித்தபடி நின்ற காட்சியைக் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் விக்ரம் அவனுடைய பழைய காதல் அவன் மனதிற்குள் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
புகைப்படங்கள் எடுத்து முடிந்திருக்க “ஒரு வழியா போட்டோ எல்லாம் எடுத்து முடிச்சாச்சா? என்றபடியே அர்ஜுனின் தோளில் கைப் போட்டுக் கொண்டவன்
“வாடா நாம கொஞ்ச நேரம் அந்த அலைகள் பக்கமா உட்கார்ந்திட்டு வருவோம்” என்று அவனை அழைத்துக் கொண்டு நகர்ந்தான். ஸ்வாதியினுள்ளே ஒரு பூகம்பம் உருவாகிக் கொண்டிருந்தது.
ஸ்வாதியின் எண்ண ஓட்டங்களும் அங்கே பீச் ஹவுசில் இருந்த விக்ரமின் எண்ண ஓட்டங்களும் பிறந்தநாள் விழாவின் நினைவுகளிலேயே சுழன்றுக் கொண்டிருந்தன.
அதே நேரத்தில் இங்கே ஸ்வாதியின் வீட்டு மொட்டை மாடியில் மார்கழி மாத குளிரின் தாக்கத்தை கூட உணராமல் அமர்ந்திருந்தாள் ஸ்வாதி
“என்ன போட்டோ ஆங்கரி பேர்ட்அது?” கேட்ட அரவிந்தின் தொனியில் தரை இறங்கினாள் பெண்.
“ஆங்…அது ஒண்ணுமில்லை“ அவள் கைப்பேசியில் அந்த புகைப்படத்தை மாற்ற முயல அதற்குள் அதை வாங்கியிருந்தான் அரவிந்த்.
“ஹேய்.. வித்தியாசமா இருக்கு. எப்படி எடுத்த இதை?” அந்த புகைப்படத்தை ரசித்து சிரித்தான் அரவிந்த்.
“அர்ஜுன் பிராக்டீஸ் பண்ணும்போது எடுத்தது” என்றாள் நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டே.
சில நொடிகள் எதுவுமே பேசவே இல்லை அரவிந்த்
“சரி அதை குடு” என ஸ்வாதி கைப்பேசியை வாங்க அரவிந்தின் விரலில் இருந்த அந்த மோதிரம் அவளை ஈர்த்தது. அது வைஷாலியின் மோதிரம்தானே.
அதைப் பார்த்தவுடன் சற்றே பேச்சிழந்து போனாள் அவள்.
“ஸ்வாதி..” அவளை கலைத்தான் அரவிந்த்
“எனக்கு உன்கிட்டே ஒண்ணு சொல்லணும்னு தோணுது சொல்லவா?”
“ம்” என்றாள் கைப்பேசியின் உறையுடன் விளையாடிக் கொண்டே.
“இன்னைக்கு நீ கோபத்திலே அவனை எனக்கு பிடிக்கலைன்னு படார்ன்னு சொல்லிட்டே. அது அவனுக்கு ரொம்ப வலிச்சிருக்கும்”
விருட்டென நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் ஸ்வாதி.
“எனக்கு அர்ஜுன் பிடிக்காதுதான். அவன் கூட சண்டை நிறைய போட்டிருக்கேன்தான். ஆனாலும் நீ இன்னைக்கு அப்படி சொன்னது என்னமோ எனக்கே கஷ்டமா இருந்தது. உன்னை பிடிக்காது மத்தவங்களை பிடிக்கும்ன்னு பேசினா நம்மை நேசிக்கறவங்களுக்கு ரொம்ப வலிக்கும். நான் அதை அனுபவிச்சிருக்கேன்” எதையோ பேசப் போய் எதையோ பேசி வைத்தான் அரவிந்தன்
அடுத்த நொடி தான் என்ன பேசிவிட்டோம் என்று உணர்ந்து சுதாரித்து அவன் சட்டென அங்கிருந்து விலக முயல ஸ்வாதிக்கு ஏதேதோ புரிந்தது போலே தோன்றியது.
“நான் உன்னை ஒண்ணு கேட்கலாமா அரவிந்த்”
“இல்ல.. நாம அப்புறம் பேசலாம். எனக்கு பசிக்குது” அவன் தப்பிக்கத்தான் முயன்றான்.
“உனக்கு வைஷாலியை ரொம்ப பிடிக்கும்தானே? அப்புறம் ஏன் அவங்களை எதுக்கு விவாகரத்து பண்றே?” கேட்டே விட்டாள் ஸ்வாதி
திரும்பாமல் அப்படியே நின்றான் அரவிந்தன்.
“உன்னைத்தான் கேக்கறேன்? என்ன செய்யற அரவிந்த் நீ? எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” கொஞ்சம் உரக்கவே சொன்னாள் ஸ்வாதி.
திரும்பினான் அரவிந்த். அவன் முகத்தில் அப்படி ஒரு அமைதி பரவி இருந்தது.
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மை டியர் ஆங்கிரி பேர்ட் பிடிக்காததை ஏத்துக்கறது ரொம்ப கஷ்டம். ஆனா பிடிச்சதை விட்டுக் கொடுக்கறது ரொம்ப சுலபம். பிடிச்சதை நமக்கு பிடிச்சவங்களுக்காக விட்டுக் கொடுக்குறதை விட வேறே சந்தோஷம் எதுவும் இந்த உலகத்திலே இருக்கா என்ன.? எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் அதனாலே விட்டுக் கொடுக்குறேன்” என்றான் நிறுத்தி நிதானமாக.
பாதி புரிந்தும் புரியாமலும் அவனையே பார்த்திருந்தாள் ஸ்வாதி. ஏனோ அவன் மீதிருந்த மரியாதை மட்டும் நிறையவே உயர்வதாக தோன்றியது அவளுக்கு.
“பிடிச்சதை நமக்கு பிடிச்சவங்களுக்காக விட்டுக் கொடுக்குறதை விட வேறே சந்தோஷம் எதுவும் இந்த உலகத்திலே இருக்கா என்ன? இந்த வார்த்தைகள் அவளுக்குள் மறுபடி மறுபடி ரீங்காரமிட்டுக் கொண்டேயிருந்தன..
அதற்கு மேல் அந்தப் பேச்சை வளர்க்க விரும்பாமல் சரசரவென கீழே இறங்கி வந்திருந்தான் அரவிந்தன்.
பிடிச்சதை நமக்கு பிடிச்சவங்களுக்காக விட்டுக் கொடுக்குறதை விட வேறே சந்தோஷம் எதுவும் இந்த உலகத்திலே இருக்கா என்ன?
சொல்லிவிட்டான்தான் அவளிடம். ஆனால் அதை செய்து விடுவது அத்தனை எளிதா என்ன?
நூலறுந்த பட்டம் காற்றில் திசை தெரியாமல் பறப்பது எளிதென்றால் இதுவும் சுலபம்தான்.
இறைவன் நாம் இந்த உலகத்தை கண்டு ரசிக்கவென கொடுத்த விழிகளை இன்னொருவருக்கு தானம் கொடுத்துவிட்டு இருளில் தடுமாறுவது சுலபம் என்றால் இதுவும் சுலபம்தான் சாப்பிடக் கூடத் தோன்றாமல் படுத்துவிட்டிருந்தான் அவன்.
தொடரும்
error: Content is protected !!