Skip to content
Post Views: 1,206
விழாக் காணுமே வானம் 14(02)
வெகு நேரமாகியும் பால்கனியின் கூடை ஊஞ்சலிலேயே அமர்ந்திருந்தாள் வைஷாலி.
எல்லாம் நான் அன்று சொல்லி வைத்த வார்த்தைகளால் தானே!
“எனக்கு விக்ரமை மட்டும் தான் பிடிக்கும்”
Advertisement
விக்ரம். முதன்முதாலாக அவனை சந்தித்த அந்த நாள். அவள் நினைவில் இன்றும் பசுமையாக பதிந்திருந்தது.
கல்லூரி காலம் பெரும்பாலானோர் வாழ்வில் ஓர் வசந்தகாலமாகவே இருக்கும். அவளுக்கும் அப்படித் தான் இருந்தது.
பரம்பரையாக பிஸ்னஸ் செய்யும் கூட்டுக் குடும்பத்தின் ஒரே இளவரசி அவள்.
Advertisement
“பெரிப்பா ப்ளீஸ், எனக்கு பிஸ்னஸ் மேனேஜ்மன்ட் எல்லாம் செட் ஆகாது” மகளின் கெஞ்சுதல் எல்லாம் அவரிடம் பலிக்கவில்லை.
Advertisement
“சித்தப்பா ப்ளீஸ் நீங்களாச்சும் சொல்லுங்க, நானே உங்க ஒரே ஒரு செல்ல பொண்ணு. அது தான் ஒன்னுக்கு மூணா என் அண்ணா எல்லாம் பிஸ்னஸ் மேனேஜ்மன்ட் படிச்சிட்டு நம்ம கம்பெனிய கவனிக்கிறாங்களே” தனது தந்தையிடம் எப்போதும் தனது சொல் எடுபடாது என்று அறிந்தவள் அவளின் செல்ல சித்தப்பாவிடம் கொஞ்சினாள்.
“வைஷூ, உனக்கு ஜர்னலிசமில் இண்டரஸ்ட்ன்னு எங்க எல்லோருக்கும் தெரியும். அது உன் ஹாபியா நீ செய். ஆர்டிகள் எழுது. போட்டோகிராபி கோர்ஸ் கூட பண்ணு. நாங்க வேண்டாம்னு சொல்லல” சித்தப்பாவும் மசியவில்லை.
“இங்க பாரு வைஷூ. நாம பரம்பரையா தொழில் செய்றவங்க. நம்ம குடும்பத் தொழிலை பற்றி நீ தெரிஞ்சுக்கணும். நீ பிறக்கும் முன்னால நம்ம பிஸ்னஸ் ரொம்ப டவுன் ஆன போது உன் அம்மா தான் திறமையா செயல்பட்டு புதுசா யுக்தி எல்லாம் சஜஸ்ட் செய்தா. ஒரு இக்கட்டான சமயத்தில் பெண்கள் ரொம்பவும் மதிநுட்பமா சிந்திப்பாங்கமா. நீ நாளைக்கு உன் அண்ணாக்களுக்கு சப்போர்ட்டா இருக்க வேண்டாமா” வைஷாலியின் தந்தை பொறுமையாக எடுத்துக் கூறினார்.
Advertisement
“அண்ணாக்கு ஸ்போர்ட்டா வரப் போற அண்ணிங்க இருக்கட்டும்பா” சிணுங்கினாள் பெண்.
“வைஷூ, எம்பிஏ படிக்க நீ போய் தான் ஆகணும். அதுக்கு பிறகும் நம்ம கம்பெனியில் நீ ஒரு வருஷம் வேலையும் பார்க்கணும். அதுக்கு பிறகு நீ என்ன செய்யணும்னு ஆசைப்படுகிறாயோ அதை செய். நீ இதுக்கு சம்மதிக்கலை என்றால் உன்னோட கிராண்ட் ஸ்லாம் பாரின் ட்ரிப் எல்லாமே கட்” வைஷாலியின் பெரியம்மா, அந்தக் குடும்பத்தின் தலைவி கண்டிப்பாக சொல்லிவிட வைஷாலிக்கு வேறு வழியில்லாமல் போனது.
“காமர்ஸ் படிச்சதைப் போல சென்னையிலேயே எம்பிஏ படிக்கிறேனே. இங்கே இல்லாத காலேஜா” பூனே பிஸ்னஸ் ஸ்கூலில் அவளுக்கு இடம் கிடைத்திருக்க அவள் மறுத்துக் கொண்டிருந்தாள்.
“வீட்டை விட்டு தூரமா பிரண்ட்ஸ் கூட ஹாஸ்டலில் இருப்பது தான் காலேஜ் லைப்போட த்ரில்லே. நீ யூஜி ல அதை வேஸ்ட் செய்துட்ட. இப்போவாச்சும் பூனே போய் என்ஜாய் பண்ணு” அவளது பெரியப்பாவின் மூத்த மகன் வைபவ் சொல்ல அதை அவன் தம்பி வைகுந்தும் வழி மொழிந்தான்.
“உங்களை எல்லாம் விட்டுட்டு எப்படி தனியா இருப்பேன்” செண்டிமெண்ட் எனும் அஸ்திரத்தை பிரயோகம் செய்தாள்.
“அப்போ ஒன்னு செய்வோம். வைத்திக் படிக்கும் காலேஜில் உன்னை சேர்த்திடுவோம்” என்று வைகுந்த் சொல்லவும் அலறினாள் வைஷாலி.
“அவன் கூட போய் இருப்பதுக்கு பூனேக்கே போறேன்” அவளை விட ஒரு வயது மூத்தவன் அவளுடைய சித்தப்பா மகன் வைத்திக். சம வயது என்பதால் இருவருக்கும் எப்போதுமே தகராறு தான்.
எம்பிஏ படிக்க பூனே வந்து ஆறு மாதங்கள் ஆன போதும் அவளுக்கு பாடத்தில் நாட்டம் இருக்கவில்லை.
“இங்கே என்ன எல்லோரும் கிரிக்கெட் தான் ஆடுறாங்க. டென்னிஸ் எல்லாம் ஆட மாட்டாங்களா” கல்லூரியில் இருந்த பெரிய விளையாட்டு மைதானத்தில் கேமராவும் கையுமாக அமர்ந்திருந்தவள் தனது நட்புகளிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
மிகவும் உற்சாகமும் கலகலப்பும் நிறைந்த அவளது சுபாவம் பலரையும் கவர அவளது நட்பு வட்டம் பெரிதானது.
“நம்ம நேஷனல் கேம் ஹாக்கின்னு படிச்சதோட சரி. ஆனா பிராக்டிகலா அது கிரிக்கெட் தான். மத்த ஸ்போர்ட்ஸ்ல எல்லாம் உன்னை போல ஒன்னு ரெண்டு பேருக்கு தான் கிரேஸ்” வைஷாலியின் டென்னிஸ் ஆர்வத்தை அறிந்த தோழி கூறினாள்.
“ஆமா, ஸ்வாதி அர்ஜூன் ரெண்டு பேருக்குமே ஆரம்பத்தில் யாருமே ஸ்பான்ஸர் செய்ய முன் வரலையாம். அவங்க சொந்த பணத்தை போட்டு தான் ஆரம்ப கால போட்டி எல்லாம் விளையாடினாங்களாம்” வைஷாலி சொல்லும் போதே அவள் குரலில் பெருமிதம் ஒலித்தது.
“வைஷூ உன் கூட சேர்ந்து நாங்களும் டென்னிஸ் ஃபேன்ஸ் ஆகிட்டோம்”
“டென்னிஸ் ஃபேன்ஸ்ன்னு பொய் சொல்லாதே. அர்ஜூன் ஃபேன்ன்னு சொல்லு”
“செம ஸ்மார்ட்டா இருக்கான் அவன்”
“ஹே ஸ்வாதிக்கும் கொஞ்சம் கிரெடிட் கொடுங்க” தோழிகள் அனைவரும் அர்ஜூனின் புகழ் பாடிக் கொண்டிருக்க வைஷாலி ஸ்வாதிக்கு கொடி பிடித்தாள்.
“ஆர் தே டேட்டிங்”
“சின்ன வயசில இருந்தே ஒன்னா ஆடுறாங்க”
“உங்களுக்கு வேறே நினைப்பே கிடையாதா. அவங்க விளையாட்டைப் பாருங்க” டேட்டிங் என்றெல்லாம் தோழிகள் சகஜமாக சொல்லும் போது வைஷாலிக்கு கொஞ்சம் சங்கோஜமாக இருக்கும்.
“ஹே வைஷூ, உனக்கு எப்படிப்பட்ட பையன் பிடிக்கும்” என்று தோழிகள் கேட்கவும் அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“டென்னிஸ் ஆடுறவனை தான் அவளுக்கு பிடிக்குமா இருக்கும்” என்று ஒருத்தி கூறவும் வைஷாலி மறுத்தாள்.
“ஹே. அவ பெரிய பிஸ்னஸ் பேமிலியின் ஒரே பிரின்சஸ். பிஸ்னஸ்மேனை தான் லைக் செய்வா. என்ன வைஷூ” தோழிகள் அவளை ஓட்டி எடுக்க வைஷாலிக்கு கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. அதே சமயம் தன்னுடையவன் குறித்த கனவும் கண்களில் விரிந்தது.
“நாளைக்கு கான்பரன்ஸ் ஹாலில் வொர்க் ஷாப் இருக்கு. மார்னிங் ஏழு மணிக்கெல்லாம் போகணும்”
“வொர்க் ஷாப் யார் கண்டக்ட் செய்ய போறா தெரியுமா. தி க்ரௌச்சிங் டைகர்” என்று ஒருத்தி கூற வைஷாலிக்கு யார் அந்த பாயும் புலி என்று தெரிந்திருக்கவில்லை.
“நான் போய் கொஞ்சம் ப்ரிபேர் செய்றேன். நாளைக்கு அந்த டெரர் கேள்வி கேட்டு ஆன்சர் செய்யலைனா அவ்வளவு தான்” தோழிகள் அனைவரும் விரைந்தனர்.
வைஷாலிக்குப் பாடத்தில் ஆர்வம் இல்லாததால் இது போல கான்பரன்ஸ் வொர்க் ஷாப் போன்றவற்றை கட் அடித்து விடுவாள்.
ஆனால் மறு நாள் நடக்கவிருந்த வொர்க் ஷாப் பைனல் எக்ஸாம் போது கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும் என்பதால் அதற்கு செல்ல முடிவு செய்திருந்தாள்.
அன்று இரவு யூஎஸ் ஓபன் மிக்ஸ்ட் டபிள்ஸ் பைனல்ஸ் நடைபெற்றது. ஸ்வாதியும் அர்ஜூனும் விளையாட அதையே டிவியில் பார்த்துக் கொண்டிருந்தவள் போட்டி முடிந்து அவர்கள் வெற்றிபெற்று கோப்பையை பெற்ற போதும் யூ டியூபில் மீண்டும் மீண்டும் ஆட்டத்தின் முக்கிய இடங்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.
அதிகாலை கண்கள் சொருகவும் அவள் விழித்துப் பார்க்க மணி ஆறே முக்கால் என்றது.
‘ஐயோ வொர்க் ஷாப் போகணுமே’ என அவசரமாக காக்கா குளியல் போட்டு பையை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அவள் காலேஜ் பில்டிங்கை நோக்கி விரைந்தாள்.
“யாரு எட்டாவது மாடியில் கான்பரன்ஸ் ஹாலை வைக்கச் சொன்னது” என்று அலுத்துக் கொண்டே உள்ளே நுழைய அப்போது தான் லிப்டின் கதவுகள் மூடிக்கொண்டிருந்தன.
“ஸ்டாப் ஸ்டாப்” என்று கத்திக் கொண்டே அவள் ஓடி வர லிப்ட்டின் கதவுகள் மூடிவிட்டிருந்தன.
“ச்சே, லேட் ஆச்சே” என்று அவள் வாட்ச் பார்த்துக் கொண்டிருந்த போது அவள் முன்னே லிப்டின் கதவுகள் திறக்க மிகுந்த ஆனந்தம் கொண்டாள்.
“தாங்க்ஸ் சோ மச். லேட் ஆகிருச்சு. நல்ல வேளையா நீங்க லிப்ட் ஸ்டாப் செய்தீங்க” நின்று கொண்டிருந்தவனை பார்த்து நன்றி கூறினாள்.
லிப்டில் நின்று கொண்டிருந்தவன் முகம் எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் ஒரு வித இறுக்கத்துடன் இருந்ததை வைஷாலி கவனித்தாள்.
“இவனை எங்கேயோ பார்த்திருக்கோமே” என்று அவள் யோசித்த போதும் அவனது இறுக்கம் கண்டு துணுக்குற்றாள்.
“நீங்க எந்த இயர். உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே. ஏன் டல்லா இருக்கீங்க. லேட் ஆகிருச்சே. க்ரௌச்சிங் டைகர் திட்டுவாரோன்னு பயமா இருக்கா” எட்டாவது தளத்தில் கான்பரன்ஸ் ஹால் மட்டுமே இருந்ததால் உள்ளே இருந்தவனும் எட்டாவது மாடியின் எண்ணை எழுதியிருந்ததால் வைஷாலி வெகு இயல்பாக அவனோடு உரையாடினாள்.
ஓர் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான் அவன். .
அவளின் பார்வை அவன் முகத்தை மட்டுமே ஆராய்ந்ததை அவன் கவனித்தான்.
அவனை முதல் முறை பார்ப்போர் அவனது குறையை தான் முதலில் கண்டு பரிதாப பார்வையை அவன் மீது செலுத்துவார்கள். அதைக் காணும் போதெல்லாம் அவனுக்குள் எரிதணல் கொதித்தெழும்.
ஆனால் லிப்டிற்குள் நுழைந்த நொடியிலிருந்து அவனது முகத்தை மட்டுமே பார்த்த வைஷாலி அவன் முகம் பொலிவிழந்து இருப்பதைக் கண்டு கவலை கொண்டது அவனுக்கு இதமாக இருந்தது.
ஒரு மெல்லிய புன்னகை அவன் இதழ்களில் மலர அதைக் கண்டவள் மிகவும் உற்சாகம் கொண்டாள்.
“ஹே நீங்க விக்ரம்…. விக்ரம் தானே. விக்ரம் சார்” என்று விழி விரித்தவள், “போங்க விக்ரம் சார் நீங்க சுத்த மோசம். உங்களால் எங்க வீட்ல நான் எவ்வளவு திட்டு வாங்கினேன் தெரியுமா” அவனை அடையாளம் கண்டு கொண்ட போது நிலவைப் போல ஒளிர்ந்த அவள் முகத்தை ஆவலாக பார்த்திருந்த விக்ரம் அவள் சிணுங்கலாக அவனைக் கோபித்ததில் ஆச்சரியத்தில் உறைந்தே போனான்.
லிப்ட் எட்டாவது மாடியை அடைந்திருக்க அவள் பரபரப்பானாள். லிப்டின் கதவுகள் திறந்த பின் விக்ரம் வெளியே வருவதற்காக இயல்பாக அவள் காத்திருந்தது விக்ரமின் மனதில் மெல்லிய சாரலை வீசியது.
விவரம் தெரிந்த நாளிலிருந்து இன்று வரை இப்படி ஒரு பெண்ணை அவன் சந்தித்தும் இல்லை. இப்படி ஒரு சிலிர்ப்பை அவன் அனுபவித்ததும் இல்லை.
வைஷாலி விக்ரமின் வேகத்திற்கு இணையாக நடந்து கொண்டே வளவளத்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கே அட்டன்டன்ஸ் கம்மியா இருக்கு விக்ரம் சார். லேட் ஆகிருச்சே. உள்ளே விட மாட்டேன்னு தட் க்ரௌச்சிங் டைகர் சொல்லிட்டா என்ன பண்றது” உற்சாகம் கொப்புளித்த அவள் வதனத்தில் கவலையின் கோடுகள் விக்ரமை ஏதோ செய்தது.
“எனக்கு ஹெல்ப் செய்தாய்ன்னு நான் சொல்கிறேன். அப்போ உள்ளே விடுவாங்க” விக்ரம் சொல்லவும் அவள் முகத்தில் மீண்டும் குதூகலம்.
“ஹையோ, நீங்க பேசிட்டீங்க விக்ரம் சார். நீங்க வாயில் கொழுக்கட்டை வச்சிருக்கீங்களோன்னு நினச்சேன் தெரியுமா” வைஷாலி கூறவும் விக்ரம் வாழ்நாளிலேயே முதல் முறையாக மனம் விட்டு சிரித்தான்.
அவன் குறையினால் அவளுக்கும் சலுகை கிடைக்கும் என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கிறான். அதை துளியும் சட்டை செய்யாமல் அவன் வாய் திறந்து பேசியதை அவள் சந்தோஷத்துடன் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
‘யாரிவள், இவள் பெயர் என்ன’ அவனுக்குள் ஆர்வம் பிறந்தது.
“எங்க அம்மா ஏதாச்சும் கேள்வி கேட்டு நான் பதில் சொல்லலைன்னா வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கன்னு கேட்பாங்க” அந்த நீண்ட காரிடாரில் ஏதோ பல நாள் பழகிய நண்பன் போல அவள் அவனிடம் பேசிக் கொண்டே நடந்தாள்.
“என்னை எப்படித் தெரியும்” பல முறை மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தவன் கேட்டே விட்டான்.
இது நாள் வரை யாருமே அவனிடம் பேசத் தான் அஞ்சுவார்கள். அவன் பெற்றோரே பல முறை யோசித்து தான் பேசுவார்கள். அவன் தம்பியோ ஓரிரு வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்வான்.
அது மற்றவரின் குற்றம் இல்லை. விக்ரம் தானாக போட்டுக் கொண்ட வட்டம். நெருப்பு வட்டம்.
அதில் யோசியாமல் யாரேனும் நுழைந்தால் பொசுங்கித் தான் போவார்கள்.
அப்படி ஒரு வட்டத்தை அவன் தன்னைச் சுற்றி போட்டுக் கொண்டதன் காரணமே அவனது குறையினால் ஏற்பட்ட குன்றல் தான்.
இன்றும் நம் சமூகத்தில் உடலில் உள்ள குறையை பரிதாபமாகவோ, ஏளனமாகவோ பார்க்கும் போக்கு இருக்கத் தான் செய்கிறது.
அவனை பார்ப்பவர்கள் பரிதாபம் கொள்ளாமல் பயம் கொள்ள வேண்டும். கேலியாக எண்ண முடியாமல் அவன் கோபத்தைக் கண்டு நடுக்கம் கொள்ள வேண்டும் என்று விக்ரம் தன்னைச் சுற்றி அக்னி வேலியை அமைத்துக் கொண்டான்.
அப்படியும் அவனுக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மை அடிஆழத்தில் வேரூன்றி இருந்ததால் அவன் அனைத்தையும் வெற்றி கொள்ளும் வெறிக்கு பலியானான்.
பனிச்சாரலாக பொழிந்து அவனுக்குள் கனன்று கொண்டிருக்கும் அக்னியை குளிர்வித்தவளிடம் இதமாக எப்படி பேசுவது என்று முதல் முறையாக ஒத்திகை பார்த்தான் விக்ரம்.
“என்னை எப்படித் தெரியும்” என்று அவன் கேட்கவும் கான்பரன்ஸ் ஹாலின் கதவை அவர்கள் அடையவும் சரியாக இருந்தது.
அந்த வாயில் கதவை திறந்தவள் அவனை முதலில் நுழையவிட்டு கதவை அடைத்து திரும்ப ஹாலில் குழுமியிருந்த மாணவர்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிக்கவும் ஆச்சரியத்தில் விழி விரித்து நின்றாள்.
“தாங்க்ஸ், யூ மே கோ டு யுவர் சீட் நவ்” என்று விக்ரம் கூற அவனை ஆச்சரியமாக பிரமிப்பாக பார்த்தவள் புன்னகையுடன் தலையாட்டியபடியே துள்ளிச் சென்றதை அவன் ரசனையாக பார்த்தான்.
“ஹே வைஷூ, க்ரௌச்சிங் டைகர் கூட நீ எப்படி வந்த” அவளின் தோழிகள் இருபுறத்தில் இருந்தும் அவளிடம் கிசுகிசுக்க அவளோ அப்புறம் சொல்கிறேன் என்று அவர்களை கிளாசில் கவனம் செலுத்தச் சொன்னாள்.
ஆறு மாத கால படிப்பில் முதல் முறையாக விக்ரம் சொல்லிக் கொடுத்ததை ஊன்றி கவனித்தாள்.
“அவரைப் போய் க்ரௌச்சிங் டைகர், டெரர்ன்னு யாரு சொன்னீங்க. ப்பா சான்சே இல்லாம எவ்வளவு ஹான்ட்சமா இருக்கார்” தோழிகளை கடிந்து கொண்டவளை அனைவரும் கேலியாக கலாய்த்து தள்ளிவிட்டனர்.
“அது நம்ம சீனியர்ஸ் தான் அப்படி சொன்னாங்க. அவர் ஐஐஎம் அகமதாபாத்ல கோல்ட் மெடலிஸ்ட்டாம். இங்கே பிஹெச்டி செய்ய வந்திருக்காராம். போன வொர்க் ஷாப்பில் சீனியர் பேட்சை குதறி எடுத்துட்டாராம்” தோழி ஒருத்தி கூறவும்
“ஆனா அப்படி ஒன்னும் தெரியல. வைஷூ சொன்னது போல ஹி இஸ் ஹாண்ட்சம் மேன் அண்ட் எவ்ளோ நாலேட்ஜ், நம்ம டவுட் அகிலேஷ் கேட்ட எல்லா மொக்க சந்தேகங்களுக்கும் எவ்வளவு அழகா பொறுமையா எக்ஸ்ப்ளெயின் செய்தார்” என்று இன்னொரு மாணவி விக்ரமின் புகழ் பாடினாள்.
அதில் வைஷாலிக்கு ஆனந்தமாக இருந்தது.
அடுத்து வந்த சில மாதங்கள் வைஷாலி விக்ரமை சந்திக்கவில்லை என்ற போதிலும் பாடங்களில் கவனம் செலுத்தலானாள்.
விக்ரம் பற்றி அங்கும் இங்குமாக அவள் சேகரித்த தகவல்கள் எல்லாம் அவனை ஒரு டெரர் பீஸாக தான் காட்டியது.
ஆனால் அவளுக்கோ அவனை நினைக்கும் போதெல்லாம் சில்லென தென்றல் வருடிக் கொடுப்பதைப் போல இருந்தது.
இரண்டாவது வருடத்தில் அவள் காலடி எடுத்து வைத்த போது தான் விக்ரமை அவள் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
லைப்ரரியில் சில ரிபரன்ஸ் புக்ஸ் எடுத்துக் கொண்டு ஹாஸ்டல் திரும்பிக் கொண்டிருந்த வைஷாலி சட்டென மழை பொழியவும் கல்லூரி வளாகத்திலேயே இருந்த காபி ஷாப்பில் அடைக்கலம் புகுந்தாள்.
தற்செயலாக அவள் பார்வை பக்கவாட்டில் திரும்ப அங்கே விக்ரம் ஏதோ ஒரு புத்தகத்தை படித்தவாறே காபி அருந்திக் கொண்டிருந்தான்.
அவளுக்குள் குப்பென்று ஒரு மகிழ்ச்சியும் உற்சாகமும் ஊற்றெடுத்தது.
“விக்ரம் சார்” அந்தக் குரல் செவிகளில் பாய, கண்ணாடி ஜன்னலுக்கு அப்பால் பெய்த அடைமழை அவனை மொத்தமாக நனைத்து விட்ட ஓர் சிலிர்ப்புடன் நிமிர்ந்தான்.
மழைக்கால மாலையில் அந்த காபி ஷாப்பில் அவனோடு அவள் நிறைய பேசினாள்.
‘தி பியூச்சர் ஆப் இந்தியன் எகானமி’ என்று அவன் பிஸ்னஸ் டுடேவில் எழுதிய கட்டுரையை வைஷாலியின் வீட்டில் அனைவரும் படித்து விக்ரமை புகழ்ந்ததும் அல்லாமல் வைஷாலிக்கு கொட்டு வைத்ததை அவள் அவனிடம் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“எனக்கு பிஸ்னஸ் மேனேஜ்மன்ட்ல சுத்தமா இன்ட்ரஸ்ட்டே இல்லாம இருந்தது விக்ரம் சார். உங்களால் தான் இன்ட்ரஸ்ட் வந்திருக்கு. இப்போ கிளாஸ் ரொம்ப எல்லாம் கட் அடிப்பதில்லை” அவள் பேசிக் கொண்டே போக அவன் கேட்டுக் கொண்டே இருந்தான்.
எப்போதும் அவன் பேச அடுத்தவர் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இன்றோ அவளை அவன் பேச விட்டு அதை ஆனந்தத்துடன் ரசித்தான்.
“விக்ரம் சார் கேன் யூ ஹெல்ப் மீ” அவளது அசைன்மன்ட்க்கு அவனிடம் உதவி கேட்டாள்.
“விக்ரம் சார், யூ ஆர் தி பெஸ்ட்” அவன் கஷ்டப்பட்டு நிரூபிக்க தேவையில்லாமலே அவனுக்கு மகுடம் சூட்டினாள்.
“இந்த சாரை கட் பண்ணிடலாமே. நான் என்ன உன் லெக்சரரா. சீனியர் தானே. கால் மீ ஜஸ்ட் விக்ரம்” அவன் சொல்லவும் இன்னும் அதிகமாக மகிழ்ந்து போனாள் வைஷாலி.
“அப்போ நீங்களும் என்னை வைஷூன்னு கூப்பிடணும். மை பிரண்ட்ஸ் ஆல் கால் மீ வைஷூ” என்று அவனிடம் டீல் பேசினாள்.
அவர்கள் தினந்தோறும் சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.
தனது பிஹெச்டியை செய்து கொண்டிருந்த போதே விக்ரம் பிஸ்னஸ் உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டிருந்தான்.
எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி அவனை மேலும் மேலும் உயரத்திற்கு கொண்டு சென்றது.
அது எளிதான பயணமாக இருக்கவில்லை. பாலைவனத்தின் சுடுமணலில் வெறும் காலோடு நடப்பதைப் போல, கடினமான பாறைகளில் ஏறுவதைப் போல அவனது பயணம். அந்தப் பயணத்தில் குளிர் தென்றலாய், மென் சாரலாய் வைஷாலியின் நினைவுகள் எப்போதாவது அவனை தாலாட்டி செல்லும். குறிப்பாக லிப்டிற்குள் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் நேர்ந்தால் அவளின் நினைவில் ஒரு புன்னகை பூத்து மறையும்.
எம்பிஏ முடித்த கையோடு தங்கள் நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை பார்த்த போது தான் விக்ரம் பற்றிய விவரங்களை வைஷாலி முழுவதுமாக தெரிந்து கொண்டாள்.
அவன் அர்ஜூனின் தமையன் என்ற செய்தியில் வைஷாலி அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
அதே சமயம் தனது வீட்டில் விக்ரமின் பேச்சு அடிபடும் போதெல்லாம் அது உவப்பானதாக இல்லாமல் இருந்தது அவளுக்கு சோர்வை தந்தது.
அவனது ஆர்டிகலை முன்பு புகழ்ந்த வீட்டினர் இன்று தொழில் முறை போட்டியில் எதிரியாக பார்த்தது விக்ரமைக் குறித்த அவளது கண்ணோட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்க வில்லை.
ஆனால் விக்ரமை பாதித்தது.
விம்பிள்டனைக் காண லண்டன் வந்திருந்த வைஷாலி தற்செயலாக விக்ரமை சந்திக்க நேர்ந்தது. அதுவும் அர்ஜூனுடன்.
அவள் டென்னிஸ்ஸின் தீவிர ரசிகை. அதிலும் அர்ஜூன் ஸ்வாதி மேட்ச் ஒன்றையும் விடாமல் பார்ப்பவள். அவர்களுக்காகவே கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை நேரில் காண வருவதுண்டு.
இப்போது ஸ்போர்ட்ஸ் வீக்லியில் ஆர்டிகள்களும் எழுதுவதால் இன்னும் அதிகமாக அவர்களின் விசிறி ஆகிப் போனாள்.
வைஷாலி உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேச அறியாதவள். தனது மனதின் உணர்வுகளை மறைக்காது வெளிப்படுத்திவிடுபவள்.
அர்ஜூனையும் விக்ரமையும் ஒரு சேர பார்த்தவள் அர்ஜூனை முதன் முதலில் நேரில் சந்தித்த சந்தோஷத்தை வெளிப்படுத்தவும் விக்ரமிற்கு இயல்பாகவே இளையவன் மீது இருக்கும் பொறாமை தலை தூக்கியது.
“நீங்க அர்ஜூனோட அண்ணான்னு என்கிட்டே சொல்லவே இல்ல விக்ரம். போங்க” அவள் விக்ரமிடம் மிக உரிமையாக சிணுங்கியது அர்ஜூனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
“விக்ரம் இல்லைனா எம்பிஏ பாஸ் செய்திருக்கவே மாட்டேன். ஆனாலும் பாஸ் செய்து ஒரு யூஸும் இல்ல. முழு நேர ஜர்னலிஸம் பக்கம் வந்துட்டேன். ஒன்லி ஸ்போர்ட்ஸ். அதுவும் டென்னிஸ் மட்டும்” அவள் தன்னைப் பற்றி இயல்பாக சொன்னது விக்ரமிற்கு கசப்பாக இருந்தது.
அவன் கற்றுக் கொடுத்த பிஸ்னஸ் மேனேஜ்மென்ட்டை அவள் யூஸ்லெஸ் என்று தூக்கி எறிந்தது என்னவோ அவனையே அவள் தூக்கி எறிந்து விட்டதைப் போல அவன் உணர்ந்தான்.
அவனது வாழ்வில் இனிய தருணங்களின் சொந்தக்காரி அவள். அதனாலேயே பிறரிடம் காட்டுவதைப் போல அவளிடம் அவனால் கடுமையைக் காட்ட முடியவில்லை. அவள் மீது வெறுப்பை உமிழ முடியவில்லை.
அவனது மனம் அவளுக்குள் முழுவதுமாக கலந்து விட்டதை அப்போதுதான் உணர்ந்தான் விக்ரம்
சில நாட்கள் விக்ரமும் வைஷாலியும் சந்தித்துக் கொள்ளும் சூழல் ஏற்படவே இல்லை. அவளது வீட்டில் அவளுக்கு திருமண பேச்சுக்கள் நடக்கின்றன எனும் செய்தி மட்டும் அவனை எட்டியிருந்தது.
உடனேயே அவனது பெற்றோகள் மூலமாக அவள் வீட்டை அணுகினான் விக்ரம். வைஷாலியின் வீட்டில் அவளைத் தவிர அங்கிருக்கும் இருக்கும் ஈ எறும்புக்கு கூட இந்த சம்மந்தத்தில் உடன்பாடு இல்லை அப்போது. வியாபார வகையில் இருவரும் அப்படிப் பட்ட எதிரிகள்.
அவளுக்குள் மட்டும் அவனோட திருமணம் எனும் எண்ணம் நினைத்துப் பார்க்கும் போதே பனிச்சாரல் தூவியது. ஆனால் இந்த எண்ணங்கள் நடைமுறைக்கு கண்டிப்பாக ஒத்து வாராது என்பது அவளுக்கு புரிய நெடு நாட்கள் தேவைப் படவில்லை.
வீட்டில் யாரும் இந்த விஷயமாக விக்ரம் குடும்பத்துடன் பேச்சு வார்ததை நடத்தக் கூட விரும்பவில்லை.
வீட்டில் விக்ரமை மறுத்து விட்ட பிறகு அவர்களை எதிர்த்துக் கொள்ளவெல்லாம் இயலவில்லை. வைஷாலிக்கு. அவளுக்கு குடும்பம்தான் எப்போதும் எல்லாம். அந்த நேரத்தில் அழகாய் உள்ளே வந்து அவனைவரையும் வென்றிருந்தான் அரவிந்தன்.
அவளது மனமெனும் செடியில் முதன் முதலாய் மொட்டு விட்டு சின்னதாய் பூத்திருந்த விக்கிரமெனும் மலர் கீழே உதிர்ந்து விழுந்ததை அவளால் ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை. புதிதாய் பூத்திருந்த அரவிந்தனை சூடிக் கொள்ளவும் இயலவில்லை.
காதல் என்பது ஒரு முறை நின்று போனால் திரும்ப வராத சுவாசம் என்று கொள்வதா ஒரு முறை நீரற்று வறண்டு போய் நின்றாலும் மறுமுறை பொழியும் மழையை அப்படியே ஏற்றுக்கொண்டு பூத்து நிற்கும் பூமி எனக் கொள்வதா? புரியாத குழப்பத்தில்தான் அவனை மணந்துக் கொண்டாள் வைஷாலி.
செய்தி கேட்டு அங்கே விக்ரம் துவண்டிருந்தான் என்றால் இங்கே எதிலுமே மனம் ஓட்ட முடியாமல் தனித்து கிடந்தாள் இவள்.
அவர்களது திருமண வரவேற்பில் அவள் அருகில் வந்த கல்லூரி தோழி
“ஆனாலும் அந்த க்ரௌசிங் டைகர் ரொம்ப பாவம். இப்படி டீல்ல விட்டுட்டியே அவரை” என விளையாட்டாக அவளை கிண்டலடிக்க ஏதோ லேசாக குத்தியதைப் போல் உணர்ந்தான் அரவிந்தன்.
ஆனாலும் அதை அப்போது அத்தனை பெரிது படுத்திக் கொள்ளவில்லை அவன்.
இந்த வரவேற்ப்பு முடிந்து இரண்டு நாட்கள் கடந்திருந்த நிலையில் கோபத்தில் இருந்தவளை ஒரு வழியாக சமாதானப் படுத்தி ஹோடேலுக்கு கிளம்பினான் அரவிந்தன்.
கார் அந்த சிக்னலில் நின்றிருக்க அரவிந்தன் ஏதோ ஒரு உந்துதலில் காரின் ஜன்னல் கண்ணாடியை கீழிறக்க பக்கத்து காரின் ஜன்னலும் கீழிறங்க அதில் அமர்ந்திருந்த விக்ரமின் பார்வை நேராக இவன் மீது மோதியது. அருகில் அமர்ந்திருந்த வைஷாலியையும் அவனது பார்வை தொட்டு திரும்பியது.
வியாபார வகையில் விக்ரமை ஒரு தொழில் போட்டியாக அறிந்திருந்தான் அரவிந்தன்.
அன்று வரவேற்பில் கேலிப் பேசிய அவள் தோழியின் வார்த்தைகள் இப்போது அரவிந்தனுக்குள் எதிரொலிக்க அவளது ஒதுக்கத்துக்கு எல்லாம் இவன்தான் காரணமா எனும் எண்ணம் லேசாக வேரூன்றியது அவனுக்குள்ளே.
காரை செலுத்திக் கொண்டிருந்த அர்ஜுன் இதை எல்லாம் கவனிக்கக் வில்லை அப்போது.
சிக்னல் நிறம் மாற ஜன்னலை ஏற்றி விட்டுவிட்டு எதுவுமே பேசாமல் காரை நகர்த்தினான் அரவிந்தன். யாருடைய அதிர்ஷடமோ யாருடைய துரதிர்ஷடமோ இரண்டு கார்களும் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலையே அடைந்தன
தொடரும்
error: Content is protected !!