விழி கொல்லும் விஷமா நீ EPI 11
விழி கொல்லும் விஷமா நீ..
EPISODE 11

Advertisement
“என்னம்மா நீ, பொய் சொல்லிட்டு உள்ள போகலாம்னு பார்க்குறியா? ஒருவேள நீ திருடியா இருக்குமோ.. உன்னை பார்த்தாலே எனக்கு சந்தேகமா தான் இருக்கு” என்று செக்யூரிட்டி சொல்ல, நிஹாரிகாவின் கோபம் பன்மடங்காகப் பெருகியது.
“அண்ணே நீங்க மொதல்ல சார்கிட்ட பேசினீங்களா, யாதவ் அர்ஜுனா சார் வீட்டுக்குதான் போகணும், நீங்க வேற யாருக்கோ கால் பண்ணியிருக்கீங்க” என்று அவள் புரியும்படி சொல்ல, “அந்த சார்தான் நீ யாருன்னே தெரியாது, கண்ட நாய்ங்கள உள்ள விட கூடாதுன்னு சொன்னாரு” என்றார் அவர்.
Advertisement
Advertisement
இவளுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஒருசில கணங்கள் யோசித்தபடி அப்படியே நின்றிருந்தவள், “இல்ல அண்ணே, நா.. நான் அவர்கிட்ட தான் வேலை பார்க்குறேன். அவருக்கு என்னை நல்லாவே தெரியும். நீங்க மறுபடியும் பேசுங்க, அவர்தான் என்னை வர சொன்னாரு” என்று சொன்னாள் பதற்றமாக.
அவளின் விரல்கள் ஆஃபீஸ் தேவைகளுக்காக அவளுக்கு கொடுத்திருந்த அலைப்பேசி வழியே தானாக அவனின் எண்ணிற்கு அழைக்க, அவன் ஏற்றால்தானே!
Advertisement
“ஏம்மா, சும்மா இங்க நின்னு நச்சரிச்சுட்டு இருக்காத. அதான் அவர் தெரியாதுன்னு சொல்றாருல்ல, கெளம்பும்மா. இருக்குற வேலையில இவ வேற…” என்று அவர் கடுப்பில் கத்த, இவளுக்கு தலை சுற்றாத குறை.
கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலம் பயணம் செய்து இங்கு வந்திருக்கிறாள். அவளுக்கு கொஞ்சமும் பழக்கமில்லாத இடமும் முகங்களும்.
அதுமட்டுமல்லாமல் இன்னும் கொஞ்சநேரம் சென்றால் சூரியனும் அஸ்தமித்துவிடும்.
கண்ணிற்கு எட்டிய தூரம் வரை வாகனங்களும் இல்லை. பணக்காரர்களும் பிரபலங்களும் வசிக்கும் இடமென்பதாலோ என்னவோ ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை.
கைகளைப் பிசைந்தவாறு வீதியோரமாக கால் நடையாக கால் போன திசைக்கு சென்றவளின் விழிகள் விழிநீரால் நிரம்பியிருக்க, உதடுகள் அழுகையில் துடித்தன.
‘ஏன் இப்படி பண்ணணும், என்னை இவ்வளவு தூரம் வர வச்சு இப்படி அவமானப்படுத்துறானே! இப்போ.. இப்போ எப்படி வீட்டுக்கு போறது. இருட்ட வேற ஆரம்பிச்சிருச்சு. ஆதிரா வேற கால் அட்டென்ட் பண்ண மாட்டேங்குறா, ச்சே! எனக்.. எனக்கு பயமா இருக்கு கடவுளே!’
தனக்குள் புலம்பியபடி சுற்றிமுற்றி பார்த்த வண்ணம் அவள் நடந்துச் செல்ல, திடீரென சில நாய்க் கூட்டம் தூரமாக குறைத்துக்கொண்டிருப்பதை கவனித்தாள் நிஹாரிகா.
நாய்கள் என்றாலே அவளுக்கு தனிபயம். எந்த பக்கம் செல்வது என்ன செய்வதென்று தெரியாது நின்றுக்கொண்டிருந்தவளை நோக்கி அந்த நாய்கள் ஓடி வர, இவளுக்கு சர்வமும் அடங்கிவிட்டது.
பயத்தில் உறைந்துப்போய் அவள் அப்படியே சிலையாகி நிற்க, சரியாக பெரிய வெளிச்சத்தோடு அவள் பக்கத்தில் வந்து நின்றது ஒரு கருப்புநிற கார்.
அந்த வெளிச்சம் பட்டதும் நாய்கள் சட்டென்று நின்றுவிட, ஜன்னல் கண்ணாடியைத் திறந்த யாதவ், “கெட் இன்” என்றான் வேகமாக.
அந்த கணம் அவனைப் பார்த்ததும் தான் அவளுக்கு போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.
வேகமாக காரிலேறி அமர்ந்து ஜன்னல் கண்ணாடியை மூடிக்கொண்டவள், விழிகளை அழுந்த மூடித் திறந்து ‘ஊஃப்…’ என்று பெருமூச்சை இழுத்துவிட்டாள்.
இன்னும் உடல் நடுக்கம் குறையவில்லை.
முயன்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட நிஹாரிகா இப்போது பக்கவாட்டாகத் திரும்பி தன் பக்கத்திலிருந்தவனை முறைத்துப் பார்க்க, அவனோ தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல காரை செலுத்திக்கொண்டிருந்தான்.
அவனுடைய கார் அந்த வளாகத்திற்குள் நுழைய, பார்கிங் ஏரியாவில் காரை நிறுத்திய யாதவ் அவன் பாட்டிற்கு காரிலிருந்து இறங்கிச் செல்ல, வேகமாக அவன் பின்னாலேயே சென்றாள்.
அந்த ஆடம்பரமான வீட்டிற்குள் இருவரும் நுழைய, அப்போதிருந்த மனநிலைக்கு அந்த ஆடம்பரத்தின் அழகை ரசிக்கும் நிலையில் இருக்கவில்லை நிஹாரிகா.
“ஏன் இப்படி பண்ண அர்ஜூ? நீதானே என்னை இங்க வர சொன்ன, இப்போ யாருன்னு தெரியாது கண்ட நாய்ங்கன்னு சொல்லியிருக்க. ஏன்னு சொல்லு.. எனக்கு எவ்வளவு பயமா இருந்துச்சு தெரியுமா? விட்டா மயக்கம் போட்டு விழுந்திருப்பேன். எல்லாமே உன்னாலதான். உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன்”
தன்னை மீறி உரிமையோடு அவள் கத்திக்கொண்டு போக, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டி ஒரு பார்வைப் பார்த்தான் யாதவ்.
அப்போதே தான் பேசியதை உணர்ந்தவள் தலையிலடித்துக் கொள்ளாத குறையாக அவனை பாவமாகப் பார்த்தாள்.
“யாருடீ நீ எனக்கு, எந்த உரிமையில என்கிட்ட இப்படி பேசுற. யூ டோன்ட் ஹேவ் எனி டிசெர்வ்.. கொட் இட்! உன் சேலரில ஃபைவ் தௌஸன்ட் கட் பண்றேன் ஆஸ் அ பனிஷ்மென்ட்” என்று அவன் சொல்லிவிட்டு மேசையிலிருந்த ஃபைல்களை புரட்ட ஆரம்பிக்க, இவளுக்கு அய்யோ என்றிருந்தது.
‘இப்படியே போனா மாசம் கடைசில எதுவும் மிஞ்சாது போல இருக்கே!’ வாய்விட்டு மெல்ல முணுமுணுத்தவள், அவனின் எதிரே சென்று பரிதாபமாக நின்றுக்கொள்ள, அவளிடம் அந்த ஃபைல்களை நீட்டினான் யாதவ்.
“தீஸ் ஆர் கான்ஃபிடன்ஷியல், என் ரூம் கப்போர்ட்ல வை, க்யேர்ஃபுல்! ஏதாச்சும் லீக் ஆச்சுன்னா உன்மேல தான் கேஸ் கொடுப்பேன். இப்போ கெளம்பு!” என்று அவன் சிறு மிரட்டலோடு அதை அவளுடைய கைகளில் திணிக்க, புருவ முடிச்சுகளோடு தன்னவனைப் பார்த்தாள் நிஹாரிகா.
“அவ்வளவுதானா?” அவள் புரியாமல் கேட்க, “வேற என்ன?” என சோஃபாவில் சாய்ந்து அமர்ந்த வண்ணம் கேட்டான் யாதவ்.
“இதை எடுக்குறதுக்காகதான் டூ ஹவர்ஸ் ட்ரேவல் பண்ணி என்னை வர சொன்னீங்களா, இதை கொரியேர்லயே அனுப்பி இருக்கலாமே!” என்று நிஹாரிகா மனதில் எழுந்த ஆதங்கத்தை அடக்கிக்கொண்டு கேட்க, “அதான் கான்ஃபிடென்ஷியல்னு சொன்னேன்ல, சீக்கிரம் கெளம்பு! மீடியாகாரங்க யாராச்சும் பார்த்தாங்கன்னா தப்பா பேசுவாங்க” என்று அலட்சியமாக வந்தது அவனுடைய பதில்.
பெண்ணவளுக்கு தன்னிலையை எப்படி புரிய வைப்பதென்றே தெரியவில்லை.
அதுவும் வெளியில் இருள் சூழ்ந்திருக்க, தனியே செல்வதை நினைக்கும் போதே அடி வயிறு கலங்கியது அவளுக்கு.
யோசனையோடு ஜன்னல் வழியே வெளியில் எட்டிப் பார்த்தவள், இவனிடம் பேசி பயனில்லை என்பது போல தளர்ந்த நடையாக வாசலை நோக்கிச் சென்றாள்.
யாதவ்வும் மாடிப்படிகளில் ஏறியவன் திடீரென என்ன நினைத்தானோ!
“ஏய் உன்னைதான், இன்.. இன்னைக்கு நைட் இங்க ஸ்டே பண்ணு” அவன் மீசையில் மண் ஒட்டாத குறையாக சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியிருந்தான்.
‘ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்..’ என்ற பாடல் அவளின் மைன்ட் வாய்ஸில் ஓட, அந்த சொகுசு சோஃபாவில் அமர்ந்துக்கொண்டதும் தான் ‘அப்பாடா’ என்றிருந்தது அவளுக்கு.
அதேநேரம் மாடலிங் கம்பனியில்,
புதிதாக சந்தைக்கு வந்திருக்கும் மேக்கப் ப்ராண்ட் ஒன்றிற்கான விளம்பரத்தின் பாதி வேலை அன்று முடிந்திருக்க, களைத்துப் போய் அமர்ந்திருந்தாள் ஆதிரா.
ஷூட் நடந்த ஹாலிலிருந்த அத்தனை பேரும் அங்கிருந்து வெளியேறியிருக்க, இருக்கையில் சாய்ந்திருந்தவளின் அலைப்பேசி ஒலிக்கவும் அவளைத் தேடி சித்தார்த் அந்த இடத்திற்குள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது.
“ஆதிரா நான் உன்கிட்ட…” அவன் ஆரம்பிக்கவில்லை அதற்குள் உதட்டில் விரலை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தவள் வேகமாக அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“ஹெலோ அப்பா…” என்று இவள் சொன்னதும்தான் தாமதம், “என்னலே நீ, பட்டணத்துக்கு போனதுதான் போன இப்போலாம் எங்கள கண்டுக்குறதே இல்ல. நீ படிச்சு கிழிச்சு வேலை பார்த்ததெல்லாம் போதும். ஊருக்கு வந்து சேருலே, அப்பா உனக்கு ஒரு நல்ல வரன் பார்த்திருக்கேன்” என்று மறுமுனையில் கத்தினார் மார்த்தாண்டம். ஆதிராவின் தந்தை.
அவரின் குரல் அலைப்பேசியையும் தாண்டி சித்தார்த்தின் காதில் விழ, அவனுக்கே சிறு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
“அய்யோ அப்பா, எனக்கு கல்யாணம்லாம் வேணாம். நான் இப்போதான் வேலையில கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு இருக்கேன். அதுக்குள்ள நீங்க வேற..” என்று அவள் தந்தையிடம் குழந்தையாய் மாறி சிணுங்க, “அப்படி என்னலே வேலை, நிலாவுக்கு ராக்கெட் அனுப்புற வேலையோ?” என்றவரின் பேச்சு கிண்டலாக வந்தது.
ஆதிராவோ சலிப்பாக விழிகளை உருட்டினாள்.
“அது அப்பா… ஐ.டீ அதாவது கம்ப்யூட்டல்ல டொக்கு டொக்குன்னு தட்டிட்டே இருக்குற வேலை, உங்களுக்கு சொன்னா புரியாது”
அவள் சொல்ல, அந்த கிராமத்தாளின் ஈகோ தூண்டப்பட்டதோ என்னவோ!
“ஏலே உன்ன வளர்த்து ஆளாக்கியிருக்கேன். எனக்கு புரியாதுன்னு சொல்ற கழுதை!” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, “என்னங்க நீங்க, அந்த டப்பாவ கொடுங்க நான் பேசணும்” என்று கணவரின் கையிலிருந்து அலைப்பேசியை பிடுங்கி மகளோடு பேசினார் மங்கை. ஆதிராவின் தாய்.
இப்படியே பெருசிலிருந்து சிறுசுகள் வரை ஆளாளுக்கு மாறி மாறி பேச, களைத்துப் போய்விட்டாள் அவள்.
ஏனோ சித்தார்த்திற்கு இவர்களின் சம்பாஷனையைப் பார்க்கப் பார்க்க ஆர்வமாக இருந்தது. கூடவே, ஏனென்று தெரியாத ஒரு ஏக்கம்.
தந்தை வழி தாய் வழி சொந்தங்கள் என்று யாருமே இல்லை அவனுக்கு. தாய் தந்தை இருவருமே வியாபாரத்தில் மூழ்கியிருக்க, பணத்தில் புரண்டு வளர்ந்தாலும் பாசத்திற்கு குறையாகிவிட்டது அவனுக்கு.
ஆதிரா எப்படியோ போராடி அழைப்பைத் துண்டித்து விட்டு ‘அப்பாடா!’ என்று பெருமூச்சு விட்டவாறு எதேர்ச்சையாக தன்னெதிரரே நின்றிருந்தவனின் முகத்தைப் பார்த்தாள்.
மறுகணம் அவன் விழிகளில் தெரிந்த என்னவென்று புரியாத உணர்வில் அவளுக்கு ஒருமாதிரியாகி விட, அவளின் பார்வை உணர்ந்து உடனே முகபாவனையை மாற்றினான் சித்தாரத்.
அவளும் சிந்தனையை கலைத்துவிட்டு, “இப்போ எதுக்கு என்னை இப்படி பார்த்துட்டு இருக்கீங்க? கிராமத்தாளுங்க. மாடலிங் விளம்பரம்னு சொன்னா அடுத்த செகன்ட் அருவாளோட கம்பனி வாசல்ல நிப்பாங்க. வாட் டு டூ? அதான் பொய் சொல்ல வேண்டியதா போச்சு” என்று அலட்சியமாக தோளைக் குலுக்கியவாறு நகர எத்தனித்தாள்.
ஆனால் அடுத்து அவன் கேட்ட கேள்வியில் அவளுடைய கால்கள் சட்டென்று நின்றன.
“நிஹாரிகாவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?” என்று அவன் கேட்டதும் சித்தார்த்தை அதிர்ந்து பார்த்தவளின் விழிகள் கேள்வியாக சுருக்கின.
“நீஹாவ உங்களுக்கு எப்படி தெரியும்?” அவள் பதிலுக்கு கேள்வி கேட்க, இத்தனை நேரமிருந்த சாதாரண முகம் இப்போது கோபத்தில் சிவக்க, பற்களைக் கடித்தான் சித்தார்த்.
“ச்சே! அவள எப்படி தெரியாம இருக்கும்? என் ஃப்ரென்டு வாழ்க்கைய தலைகீழா மாத்தினவ அவ, ப்ளடி ச்சீட்டர்! அவ எல்லா பொண்ணான்னு எனக்கு தோனும். இப்போ எவன வளைச்சு போட்டு இருக்கா…” சித்தார்த் பேசி முடிக்கவில்லை, “வாய மூடுடா, இப்போ மட்டும் நீ வாய மூடல, உன்ன கொல்ல கூட தயங்க மாட்டேன்” என்று அடித்தொண்டையிலிருந்து கத்தினாள் ஆதிரா.
அவளுடைய கத்தலில் அந்த இடமே அதிர, இதை சற்றும் எதிர்பார்க்காதவனாய் விதிர்த்துப் போய்விட்டான் அவன்.
ஆனால் சில கணங்கள்தான். அடுத்தகணம் அவளுக்கும் மேலாக உச்சஸ்தானியில் கத்தினான் சித்தார்த்.
“ஹேய் என்னடீ, என்கிட்ட ரொம்பதான் குரல ஒசத்தி பேசுற. நீ யார்கிட்ட பேசுறேன்னு தெரியுமா! நான் நினைச்சா இந்த கம்பனில அடுத்த நிமிஷம் நீ இருக்கவே முடியாது யூ ப்ளடி ஹெல்.
நான் என்னடீ தப்பா சொன்னேன், உன் ஃப்ரென்டு யாதவ்க்கு என்ன பண்ணான்னு உனக்கு தெரியாதா, இல்ல அவ தப்ப உன்கிட்ட மறைச்சுட்டாளா? அவளே முன்னாடி இருந்தாலும் நான் இப்படிதான் பேசுவேன்” அழுத்தமாக வந்தன அவனுடைய வார்த்தைகள்.
ஆதிராவுக்கு இதை கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
“அவள பத்தி உனக்கென்னடா தெரியும்? பெரிய வேலை பொல்லாத வேலை! போடா நீயும் உன் மாடலிங்கும்.. அவ தப்பு பண்ணாதான், இல்லன்னு சொல்லல. ஆனா பண்ண தப்புக்கு மேல நிறையவே அனுபவிச்சிட்டா. இந்த நாலு வருஷம் உன் வீணா போன ஃப்ரெண்ட மட்டும்தான் நினைச்சுட்டு இருக்கா. அவள தப்பா பேச உனக்கெல்லா தகுதியே இல்ல”
பேசி முடித்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் நிற்க, ஆடவனோ அவளை அனல் தெறிக்கப் பார்த்தான்.
“பண்ணது பச்ச துரோகம் இதுல நியாய தர்மம் வேற… தூ… அவளுக்கு வக்காலத்து வாங்குறல்ல நீயும் அவள மாதிரிதான் இருப்ப, *****..” என்று வாய்க்கு வந்ததை பேசி கடைசியாக அவளை கொச்சைப்படுத்துவது போல கெட்ட வார்த்தையையும் கொட்டிவிட்டு அவன் திரும்பிக்கொள்ள, அந்த விஷம வார்த்தைகள் ஆதிராவை மொத்தமாக உடைத்தன.
அப்படியே பின்னாலிருந்த இருக்கையில் நிலைத்தடுமாறி அமர்ந்துக்கொண்டவள் இரு கரங்களால் முகத்தை மூடி குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
அவளின் அழுகை இவனின் காதில் விழுந்ததுமே தான் பேசிய வார்த்தைகளின் வீரியத்தை உணர்ந்த சித்தார்த், நெற்றியை நீவி விட்டவாறு தன்னைத்தானே நொந்துக்கொண்டான்.
‘ஷீட்!’ கோபத்தில் காலை தரையில் உதைத்தவன் மெல்ல அவளை நோக்கித் திரும்பிப் பார்த்தான். ஏனோ அவனுக்கே அவளின் அழுகையைப் பார்க்க பாவமாக இருந்தது.
“ஆதிரா…” அவன் மெல்ல அவளை நெருங்கி அவளின் தோளை ஆறுதலாகத் தொட, அடுத்தகணம் அவன் கரத்தை தட்டிவிட்டு எழுந்து நின்றவள் அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்திருந்தாள்.
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காதவனாய் ஸ்தம்பித்துப் போய்விட்டான் சித்தார்த்.
***********
கதை எப்படி இருக்குன்னு கமென்ட்ஸ்ல சொல்லுங்க டியர்ஸ்.. 😍😍
