Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

29. ஷேஹா ஸகி - விழி கொல்லும் விஷமா நீ

விழி கொல்லும் விஷமா நீ Epi 23

விழி கொல்லும் விஷமா நீ..

Episode 23

 



Advertisement

யாதவ் அதிர்ந்துப் போய் பார்த்து நின்றான். அவனின் அதிர்ச்சிக்கான காரணம் அவளெதிரே நின்றிருந்தவளின் முகத்தில் தெரிந்த புன்னகையே..

 

“நான் நினைச்சது சரியாதான் இருக்கு அர்ஜூ, நீ என்னை பார்க்கும் போது உன் கண்ணுல ஏதோ ஒரு வித்தியாசம் தெரிஞ்சது. நீ என்னை நெருங்கும் போது கூட அது எனக்கு… எப்படி சொல்றது, மொதல் தடவை நீ என்னை நெருங்கும் போது இருந்த ஏதோ ஒன்னு இப்போ இருக்கல. ஆனாலும் இந்த முட்டாளுக்கு எதுவுமே புரியல பாரேன்..”

Advertisement

 

Advertisement

அவளுடைய வார்த்தைகள் வலியோடு வெளிவர, நிஹாரிகாவை இறுகிய முகமாக வெறித்துப் பார்த்தான் யாதவ்.

 

“இதுவரைக்கும் நான் சொல்ல வரத நீ காது கொடுத்து கேட்டது கூட இல்ல. நீ என்னை பிரிஞ்சு போனாலும் உன்ன மட்டும்தான் இப்போ வரைக்கும் நினைச்சுட்டு இருக்கேன், நீ என்னோட அர்ஜூ அப்படிங்குற உரிமை மட்டும்தான் இப்போ நீ என்னை தொடுறதுக்கு கூட அல்லோவ் பண்ணுச்சு. இதுவே வேறொருத்தனா இருந்திருந்தா அவன் மூச்சுக்காத்து கூட என்மேல படுறதுக்கு விட்டிருக்க மாட்டேன்”

Advertisement

 

அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டான் அவன்.

 

“நடிக்காதடீ, உன்ன பத்தி தெரியாதுன்னு நினைச்சியா? அன்னைக்கு…” என்று அவன் கடந்த காலத்தை பேச வர, இப்போது குறுக்கிடுவது நிஹாரிகாவின் முறையாயிற்று.

 

“ஆமா… தப்பு பண்ணேன்தான். நான் இல்லேன்னு சொன்னேனா! அதுக்காக நான் இன்னும் எவ்வளவு தண்டனைய அனுபவிக்கிறது! அன்னைக்கு அந்த ஆரவ் சொன்னத கேட்டு என்னை அவ்வளவு கீழ்த்தரமா பேசிட்டு விட்டுட்டு போன, தப்பு என்மேல இருந்ததால அதை தண்டனையாவே ஏத்துக்கிட்டேன், என்னை காயப்படுத்துறதுக்காகவே மேக்னாவ காதலிக்கிற மாதிரி நடிச்ச, ஒவ்வொரு நிமிஷமும் என்னை நோகடிச்ச, ஆனா… இத்தனை வருஷம் கழிச்சும் உன் கோபம் அடங்கல, இப்போ… இப்போ என்கூட படுத்துட்டு…”

 

அதற்குமேல் வார்த்தை வரவில்லை அவளுக்கு. அழுகை தொண்டையை அடைத்தது.

 

இப்போது யாதவ்விற்கே மனம் ஒருமாதிரியாகிப் போக, உள்ளுக்குள் சுள்ளென்ற வலியை உணர்ந்தான் அவன்.

 

ஒரு மூச்சு அழுதுத் தீர்த்தவள் கண்ணீரை அழுந்தத் துடைத்துவிட்டு, “இதுக்குமேல நான் தண்டனைய அனுபவிக்கணும்னா செத்தா மட்டும்தான் உண்டு. உன் ஆத்திரம் அடங்க அதைதான் நான் பண்ணணும்னா அதுக்கும் தயாராதான் இருக்கேன். என்னால இதுக்குமேல தாங்க முடியலடா, செத்துரலாம் போல இருக்கு” என்று கையெடுத்துக் கும்பிட்டு அழுத வண்ணமாய் கெஞ்சினாள்.

 

உடலில் திராணியின்றி தரையில் அமர்ந்துக்கொண்ட அவளின் அழுகையின் ஓலம் அந்த அறையையே நிரப்ப, ஒரு அடி முன்னே வைத்தவன் ஏனெற்று தெரியாத தயக்கத்தோடு பின்னே நகர்ந்துக்கொண்டான்.

 

யாதவ்வின் விழிகள் அவளுடைய அழுகையைக் காண்கையில் கலங்கின. ஆனால் இமை சிமிட்டி அதை மறைத்துக்கொண்டவனோ கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு நின்றிருக்க, தன்னவனை அண்ணாந்துப் பார்த்தாள் நிஹாரிகா.

 

“போதும் எல்லாமே போதும்.. இனி நீயே நினைச்சாலும் உன்னோட வாழ்க்கைக்குள்ள நான் வர மாட்டேன். என் வாழ்க்கையில இனி இந்த யாதவ் அர்ஜூனா இல்ல”

 

இத்தனை வருடங்களில் இப்படியொரு உறுதியையும் அழுத்தத்தையும் அவளிடத்தில் அவன் பார்த்ததே இல்லை.

 

அவனையும் அறியாமல் அவன் மனம் பதறியது. அவளின் வார்த்தைகள் அவனுக்குள் பல உணர்ச்சிப் போராட்டத்தை கிளப்பியது.

 

நிஹாரிகா திரும்பியும் பார்க்காமல் அந்த இடத்திலிருந்து சென்றுவிட, அவளை காயப்படுத்த எண்ணியவனே இப்போது காயப்பட்டு நின்றான் என்றுதான் சொல்ல வேண்டும்

 

அவனுடைய விழிகளிலிருந்து விழிநீர் ஓட, இங்கு நிஹாரிகா ஆஃபீஸிலிருந்து வெளியேறவும் ஆதிரா தன் ஸ்கூட்டியில் பதற்றத்தோடு வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

 

“நீஹா.. நீஹா நீ சேஃபாதானே இருக்க? ஐ அம் ரியலி சாரிடீ, உடம்புக்கு முடியல தூக்கம் போயிருச்சு. இப்போ எழுந்ததும் உன்னை காணோம்னு பதறிக்கிட்டு வந்தேன். என்னடீ ஆச்சு.. உன் முகமே சரியில்ல. நீஹா…” என்று ஆதிரா மூச்சு கூட விடாமல் பேசிக்கொண்டே போக,  பெருங்கேவலோடு அழுதுக்கொண்டே தோழியை தாவி அணைத்துக்கொண்டாள் நிஹாரிகா.

 

ஆதிராவுக்கு ஒருகணம் எதுவுமே புரியவில்லை.

 

“ஏன் அழுற நீஹா, ஏதாச்சும் பிரச்சனையா? சொல்லுடீ… அந்த யாதவ் ஏதாச்சும் சொன்னானா, இல்லன்னா என்னதான் ஆச்சு?” என்று அடுக்கடுக்காய் அவள் கேள்விகளைக் கேட்க, தோழியிடமிருந்து விலகியவள், “பண்ண தப்புக்கு எந்த பொண்ணும் கேக்க கூடாத ஒரு பேர வாங்கிட்டேன் ஆதி… நான் உருகி உருகி காதலிச்சவனுக்கே விலை போயிட்டேன், என்னால தாங்க முடியலடீ!” என்றாள் அழுகையும் ஆத்திரமும் போட்டிப்போட..

 

அவளின் வார்த்தைகளுக்கான அர்த்தம் முழுதாக புரியாவிடினும் ஏதோ ஒன்று அவள் மூளைக்கு புலப்படுவது போலிருக்க, “ஹவ் டேர் இஸ் ஹீ.. இன்னைக்கு அவன…” என்று ஆஃபீஸிற்குள் நுழையப் போனாள்  ஆதிரா.

 

தோழியின் கரத்தைப் பற்றிக்கொண்டு இல்லையெனும் விதமாக அவள் தலையாட்ட, அதற்குமேல் அவளால் என்னதான் செய்ய முடியும்!

 

கனத்த மனதோடு இருவரும் வீடு வந்து சேர, அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள் நிஹாரிகா.

 

ஆதிராவோ பூட்டிய கதவை பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருக்க, கால்களைக் கட்டிக்கொண்டு கதவோடு சாய்ந்தமர்ந்திருந்த நிஹாரிகாவின் நினைவுகளோ இருவரும் பிரிந்த அந்த கசப்பான சம்பவங்களைதான் நினைத்துப் பார்த்தன.

 

நிஹாரிகா தன் காதலை யாதவ்விடம் சொல்லிவிட்டாள். ஆரவ்விடம் உணராத காதலின் ஆழத்தை ஒவ்வொரு கணமும் அவளுக்கு உணர்த்தினான் யாதவ்.

 

ஒருசில சந்திப்புக்களும் பல அழைப்புக்களும் எக்கச்செக்கமான குறுஞ்செய்திகளோடும் இருவரின் காதல் நகர, நிஹாரிகாவின் மனமோ ஒருபக்கம் குற்றவுணர்ச்சியில் தத்தளித்துக்கொண்டிருந்தது.

 

ஆரவ்விடம் உண்மையை சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாக அவள் தடுமாற, இப்படியே சில நாட்கள் நகர அன்று..

 

காலையில் எழுந்து குளித்து முடித்து கோயிலில் யாதவ்வை சந்திப்பதற்காகவே தயாராகிக்கொண்டிருந்தாள் நிஹாரிகா.

 

அவனுக்குப் பிடித்த மெஜண்டா நிற டாப் மற்றும் சிறு மல்லிகை சரம் சூடி தயாராகியவள் அறையிலிருந்து வெளியில் வர, மறுகணம் அவளுடைய விழிகள் அதிர்ச்சியில் விரிந்துக்கொண்டனா.

 

ஆம் சாட்சாத் அங்கு அமர்ந்திருந்தது ஆரவ்வேதான்.

 

“ஆ.. ஆரவ்” அவளுக்கு நா எழவில்லை.

 

“சர்ப்ரைஸ்! நீ எதிர்ப்பார்க்கலல்ல, ஆன்ட்டீக்கு கூட சொல்லாம இங்க வந்தேன், அவங்களே ஷாக் ஆகிட்டாங்க.  ரியலி ஐ மிஸ் யூ நீஹா..” வேகமாக அவளை நெருங்கி இறுக அணைத்துக்கொண்டான் ஆரவ்.

 

நிஹாரிகாவுக்கு எதுவுமே புரியவில்லை. அவனைப் பார்த்த அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தாள் அவள்.

 

“ஏய் ஸ்டாப்! எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துட்டு இருக்க போற? ஆமா… எங்க கெளம்புற, நாம இப்போ ஒரு இடத்துக்கு அவுட்டிங் போக போறோம். ஆன்ட்டீக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, அவங்களே ஓகே சொல்லிட்டாங்க. சீக்கிரம் வா.. டைம் ஆகுது”

 

அவளின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் ஆரவ் அவளை இழுத்துக்கொண்டு செல்ல, நிஹாரிகாவுக்கு எதையும் தடுக்க முடியவில்லை.

 

ஆரவ்வோ ஓரக்கண்ணால் அடிக்கடி அவளை பார்த்த வண்ணம் காரை செலுத்த, கைகளைப் பிசைந்தவாறு அமர்ந்திருந்தவளுக்கு பதற்றத்தில் உடல் நடுங்கியது.

 

ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவளுக்கு இது கூட உண்மையை சொல்வதற்கான சந்தர்ப்பமாகத் தோன்ற, ஒரு முடிவோடு அவனை நோக்கித் திரும்பினாள்.

 

“ஆ.. ஆரவ், நா.. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” அவள் தயங்கித் தயங்கிப் பேச, சட்டென காரை நிறுத்தினான் அவன்.

 

நிஹாரிகா புரியாமல் பார்க்க, “ரிசோர்ட்டுக்கு வந்தாச்சு நீஹா, லெட்ஸ் என்ஜாய்…” என்ற ஆரவ் வேகமாக காரிலிருந்து இறங்கி அவளையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

 

அவன் உரிமையோடு தோளில் கையை போட, ஒருவித சங்கடத்தில் நெளிந்தவாறு அவனைவிட்டு விலக முயற்சித்தாள் அவள். அதை ஆரவ்வும் உணராமலில்லை.

 

ஆனால், ஒரு பார்வைப் பார்த்ததோடு சரி, ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை அவன்.

 

நிஹாரிகாவுக்கு மனம் எச்சரிப்பது போல இருந்தது. யோசனையோடு நின்றிருந்தவளின் அலைப்பேசி ஒலிக்க, திரையைப் பார்த்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

 

யாதவ்தான் அழைத்திருந்தான்.

 

ரிசெப்ஷனில் பேசிக்கொண்டிருந்த ஆரவ்வை பதற்றமாகப் பார்த்துவிட்டு அவள் தொடர்ந்து வந்த அழைப்புக்களை துண்டித்ததோடு அலைப்பேசியையும் அணைத்து வைத்தாள்.

 

‘இப்படியே ஒவ்வொரு நிமிஷமும் பயந்து சாக முடியாது, ஆரவ் என்னை அடிச்சாலும் பரவாயில்ல இன்னக்கு என் மனசுல இருக்குறத சொல்லியே ஆகணும்’

 

அவள் ஒரு முடிவோடு காத்திருக்க, ரிசார்ட்டில் தான் புக் செய்த அறைக்கு அவளை இழுத்துக்கொண்டு சென்றான் ஆரவ்.

 

“நாம இங்க எதுக்கு வந்திருக்கோம்? எனக்கு இது பிடிக்கல. வேற எங்கேயாச்சும் போலாமா, நான் உன்கிட்ட பேசணும்…” அவள் தயக்கமாக சொல்ல, “இங்கேயும் பேசலாம் நீஹா, யாரும் டிஸ்டர்ப் பண்ண போறதில்ல” என்றவன் தங்களுக்கான அறைக்கு முன் நின்றான்.

 

பெண்ணவளுக்கோ இதயம் படுவேகமாகத் துடித்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தவள் பேசவென்று திரும்ப, கதவைத் தாழிட்டவனோ நிஹாரிகாவை நோக்கி மெல்ல வந்தான்.

 

“எவ்வளவு நாளைக்கு என்னால பொறுமையா இருக்க முடியும் நீஹா? நாம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம் அதுக்கு முன்னாடி கொஞ்சமா என் ஆசைய தீர்த்துக்குறேன். ப்ளீஸ்! வேற எந்த பொண்ணு மேலேயும் எனக்கு இந்த ஃபீலிங்க்ஸ் வர மாட்டேங்குது, உன்கிட்ட மட்டும்தான் எல்லாமே.. யூ நோ வெல் சோ…”

 

அவன் கிறக்கமான குரலில் பேசிக்கொண்டே அவளருகே வர, தன் மனம் எச்சரித்தது சரியென்பது போல பயத்தில் பின்னே நகர்ந்தாள் அவள்.

 

“நோ.. நோ ஆரவ், வேணாம் எனக்.. எனக்கு இது பிடிக்கல. ஏதோ தப்பா இருக்கு. ப்ளீஸ் நான் போகணும் என்னை விடு..” அவள் கதவை நோக்கி ஓடப் போக, அவள் கரத்தைப் பற்றி அணைத்துக்கொண்டவன் அவளிதழை நோக்கி குனிந்தான்.

 

“என்னைதானே கல்யாணம் பண்ண போற, அப்பறமென்ன நீஹா? ப்ளீஸ் கொஞ்சநேரம்தான்.. வேணாம்னு சொல்லாத” அவனின் பிடிவாதம் பெண்ணவளுக்கு அதிர்ச்சியைதான் கொடுத்தது.

 

ஒருகட்டத்திற்குமேல் முடியாமல் மொத்த பலத்தையும் திரட்டி அவன் மார்பில் கை வைத்து தள்ளிவிட்டவள், “இல்லை நா.. நான் உன்ன கல்யாணம் பண்ண போறதில்ல. எனக்கு இந்த வாழ்க்கை வேணாம், நான் வேறொருத்தன காதலிக்கிறேன் ஆரவ். என்.. என்னை மன்னிச்சிரு!” என்று உண்மையை உரக்கக் கத்தி சொன்னாள்.

 

கால்களை ஊன்றி தன்னை சமன்படுத்தி நின்றுக்கொண்ட ஆரவ், அவளுடைய வார்த்தைகளில் அதிரவில்லை. மாறாக அமைதியாக உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு அவளை பார்த்திருந்தான்.

 

அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதையே அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

 

“ஆரவ், என்னை மன்னிச்சிரு நான் இதை பத்தி முன்னாடியே சொல்லியிருக்கணும். பட்… அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கல. நமக்குள்ள செட் ஆகாது, ரொம்பநாளா இதை சொல்ல ட்ரை பண்றேன். ஏதோ நான் கூண்டுக்குள்ள இருக்குற மாதிரி ஃபீல் பண்றேன் ஆரவ்.. ஐ அம் ரியலி சாரி! நான் உன்ன காயப்படுத்திட்டேன்னு புரியுது, ஆனா… ஆனா என்னால இதுக்குமேல முடியல”

 

அவளுடைய விழிகளிலிருந்து அவனை காயப்படுத்தி விட்டோமோ என்ற வலியில் விழிநீர் ஓடியது. மனம் ஒருபக்கம் குற்றவுணர்ச்சியில் தத்தளிக்க, வேதனையில் துடித்தாள்.

 

கையெடுத்துக் கும்பிட்டு அவள் அழுதுக்கொண்டே மன்னிப்பு வேண்ட, சில கணங்கள் அவளை வெறித்துப் பார்த்தவன், “இதை சொல்ல ஏன் இவ்வளவு தயக்கம்? உன் வாழ்க்கை உன்னோட விருப்பம் நீஹா, என் வாழ்க்கைக்குள்ள இருன்னு நான் உன்ன ஃபார்ஸ் பண்ண முடியாதுல்ல” என்றான் கனிவாக.

 

இவளுக்கோ ஆச்சரியமாக இருந்தது. ஆரவ்விடம் இத்தகைய பொறுமையை அவள் பார்த்தது கூட இல்லை.

 

“நிஜமாவே என்னை மன்னிச்சிட்டியா?” என்று குறையாத அதிர்ச்சியோடு அவள் கேட்க, “ம்ம்.. நீ வீட்டுக்கு போ நீஹா” என்று அவன் சொன்னதும், விழிநீரைத் துடைத்துவிட்டு அங்கிருந்து வெளியேற எத்தனித்தாள் அவள்.

 

சட்டென “நீஹா…” என்று அழைத்தவன் அலைப்பேசியை எடுத்து, “லாஸ்ட் செல்ஃபி, மெம்மரீஸ்க்காக..” என்றுவிட்டு அவளுடைய முகபாவனையை கூட பொருட்படுத்தாமல் கேமராவை க்ளிக் செய்தான்.

 

“இப்போ போ…” அவன் சொன்னதும் யோசித்தவாறு அந்த ரிசார்ட் அறையிலிருந்து வெளியேறியவளுக்கு குழப்பம் மட்டுமே உள்ளுக்குள் சூழ்ந்துக்கொண்டது.

 

அவளுக்கு நடப்பது கனவோ என்று தோன்றியது. அவன் சாதாரணமாக விட்டதை அவள் மனம் முழுமையாக ஏற்கவில்லை.

 

அன்றிரவு முழுக்க எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஆரவ்வை பற்றிய யோசனையோடே அவளுடைய நாள் கழிய, அடுத்தநாள்..

 

எதிலும் ஈடுபாடு இல்லாதது போல அமர்ந்திருந்தவளின் எண்ணிற்கு யாதவ் அழைக்க, அவனின் எண்ணைப் பார்த்ததும்தான் அவள் மனமே இதமானது.

 

ஏதோ தாயை தேடும் சேயைப் போல உணர்ந்தாள் அவள்.

 

அழைப்பையேற்று, “ஹெலோ அர்ஜூ…” என்று அவள் சொன்னதும்தான் தாமதம், “நான் சொல்ற இடத்துக்கு சீக்கிரம் வா நிஹாரிகா…” என்றவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

 

‘நீஹா..’ என்று அழைப்பவன் இன்று அவள் பெயரை அழுத்தமாக முழுதாக கூறியிருக்க, ஏதோ ஒன்றை வித்தியாசமாக உணர்ந்தாள் நிஹாரிகா.

 

நெற்றியை நீவி விட்டுக்கொண்டவள் அதற்குமேல் தாமதிக்காமல் உடனே அவன் சொன்ன பீச்சுக்கு சென்று யாதவ்வை தேடியபடி சென்றாள்.

 

ஒருசில நிமிடங்களில் அவளை விட சற்று தொலைவில் அவனின் விம்பம் தெரிய, “ஊஃப்ப்… இங்கதான் இருக்கானா?” என்று வாய்விட்டு சொல்லிக்கொண்டே மூச்சு வாங்கியபடி அவனை நெருங்க, கொஞ்சம் கொஞ்சமாய் அவளுடைய மு கம் அதிர்ச்சிக்கு மாறியது.

 

அங்கு யாதவ்வோடு ஆரவ்வும் நின்றிருக்க, உலகமே சூனியமானதாய் உணர்ந்தாள் பெண்ணவள்.

 

 

*************

 

 

-Sheha zaki

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!