Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெந்து தணிந்தது காதல்!

வெந்து தணிந்தது காதல் – 10

சூர்யவர்மன் அங்கிருந்து கிளம்பிய பிறகும் கூட நவிராவினால் உறங்க முடியவில்லை.

காரணம் அவனது கேள்வி!

“இத்தனைக்குப் பிறகும் நீங்க உயிரோட இருக்கறதுக்கு வெறுமனே பழி வாங்குதல் மட்டும் தானா காரணம்?” என்று அவன் சாதாரணமாய் கேட்ட பொழுது இவளுக்கு கோபம் வந்தது.

தீயாய் அவனை நவிரா முறைக்க, சூர்யாவே தொடர்ந்தான்.



Advertisement

“நாம ஒவ்வொருத்தர் உயிர் வாழறதுக்கும் ஒரு முக்கியமான காரணம் இருக்குன்னு நம்பறவன் நான்.

அதே மாதிரி இப்போ உங்களுக்கு கிடைச்சிருக்கறது மறுபிறப்பு.

அதுக்கான காரணத்தை நீங்க கண்டுபிடிச்சுட்டா, நீங்க சந்தோஷமா இருப்பீங்கன்னு தோணுது!” என்றான் தெளிவாக.

Advertisement

ஆனால் அவனது இந்த விளக்கத்தில் நவிராவின் கண்களில் கோபம் தெரிந்தது.

Advertisement

“என்னோட வாழ்க்கை, இந்த பழிவாங்குதல்ல மட்டும் தான் இருக்கு சூர்யவர்மன்.

இதையும் விட்டுட்டா.. எனக்கு வாழறதுக்கான நோக்கமே கிடையாது..” என்ற பொழுது அவளது கண்களில் கண்ணீர்!

முயன்று அந்தக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள்..

Advertisement

“என் வலியை நீங்க உணரணும்னா.. நீங்க ஒரு அம்மாவா இருந்துருக்கணும்.. இல்ல ஒரு பொண்ணாவாவது இருந்துருக்கணும்.. அட்லீஸ்ட்.. நீங்க யாரையாவது காதலிச்சாவது இருக்கணும்..” என்று கூறி முடிக்கையில் முற்றிலுமாய் உடைந்திருந்தாள்.

குனிந்திருந்த அவளது தலையை நெஞ்சோடு இறுக்கிக் கொள்ள உள்ளம் துடித்தது சூர்யவர்மனுக்கு.

ஆனால் அது முடியவில்லை. அதில் சட்டென மேலே எழுந்தவன், தன்னையும் அறியாது தன் கண்களிலும் துளிர்த்துவிட்ட கண்ணீரை, நவீராவுக்குத் தெரியாமல் சுண்டித் துடைத்துக் கொண்டு..

“இப்போ உங்களை முழுசா நிறைச்சிருக்கறது கோபம்.. அது குறையும் ஒரு நாள். அன்னைக்கு நான் சொன்னதை நினைச்சுப் பார்ப்பீங்க..” என்றுவிட்டு அவன் கிளம்ப,

நவிராவின் கண்ணீர் இன்னமும் நிற்கவில்லை.

அவன் கூறியதைவிட, அவன் முன்பாக.. ஓர் ஆண்மகனின் முன்பாக மீண்டும் தன்னிலை இழந்து அழுதது அவமானமாக இருந்தது நவிராவுக்கு.

‘அழுதுட்டேன்.. மறுபடியும் பலவீனமாகிட்டேன்.. ச்சே..’ என்று மேலும் அழுதாள் அவள்.

சூர்யவர்மன் வெளியேறியதும் அறைக்குள் வந்தார்கள் ஜான்சியும், டாக்டரும்.

அவர்கள் உள்ளே வரும் அரவம் கேட்டதுமே, முகத்தைத் துடைத்துக் கொண்டு சாதாரணமாக இருப்பதை போலக் காட்டிக் கொண்டாள் நவிரா.

ஆனால் அவளது அழுத முகம் ஜான்சிக்குத் தெரிந்தது.

“இப்போ எதுக்கு எதுக்கெடுத்தாலும் அழுகை?” என்று சற்று காட்டமாகவே கேட்டார் அவர்.

அவருக்குத் தெரியும், நவிராவிடம் எப்படிப்பட்ட பேச்சுக்கள் எடுபடும் என்று. ஆனால் அருகிலிருந்த மருத்துவர் கொஞ்சம் பதறினார்.

அவருக்கு, நவிராவின் உடல்நிலை தெரிந்திருந்ததே!

“ஜான்சி.. விட்டுடுங்க.. எதுவும் பேச வேண்டாம். இப்போ நவிரா கொஞ்சம் தூங்கணும். ஏற்கனவே மணி நைட் ரெண்டாகுது.” என்று அந்தப் பேச்சைக் கத்தரிக்க முனைய, ஜான்சியோ, டாக்டரிடம் திரும்பி வெறித்துப் பார்த்தார்.

டாக்டரின் கண்ணசைவில் என்ன கண்டாரோ..

“சரி டாக்டர்.. இன்னைக்கு நைட் நீங்க இங்க தங்கணுமா? இல்ல வீட்டுக்கு கிளம்பணுமா?” என்று கேட்க, அவரோ..

“எனக்குத் தேவை, நவிரா நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும். அதுக்கு நீங்க உறுதி கொடுத்தா நான் வீட்டுக்கு கிளம்பறேன். இல்லைனா, நானும் இங்கயே தங்கறேன்..” என்றிட, ஜான்சியின் பார்வையில் சற்று கோபம் தெரிந்தது.

“அப்போ என்னால நவிராவைப் பார்த்துக்க முடியாதுனு சொல்லறீங்களா?” என்று அவர் காட்டமாகவே கேட்க, டாக்டரோ..

“சில நேரங்கள்ல முரட்டு வைத்தியம் தேவை தான்.

ஆனா ஒரு முறை காயத்தைக் கீறிவிட்டு சுத்தம் செய்து மருந்து போட்டுட்டா, அதுக்கப்பறம் காயம் ஆறறதுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கணும்.

சும்மா சும்மா கீறிவிட்டுட்டே இருந்தா காயம் கொஞ்சமும் ஆறாது.

அதுல இருந்து நீர் வடிஞ்சாலும், கொடுத்த மருத்துவத்தின் மேல நம்பிக்கை வச்சு அந்த நீரை மட்டும் சுத்தம் செஞ்சு விடணுமே தவிர, மறுபடியும் கட்டைப் பிரிச்சு ஆறிட்டு வர காயத்தை கீறி கீறி ரணத்தை அதிகப்படுத்தக் கூடாது.” என்றார் டாக்டரும் காட்டமாகவே!

அதில் ஜான்சிக்கும் தன் வார்த்தைகளின் வீரியம் புரிந்தது. ஒரு பெருமூச்சை எடுத்துவிட்டுக் கொண்டு..

“சரி.. நான் பார்த்துக்கறேன்.. கவலைப்படாதீங்க..” என்று அவர் அமைதியாகக் கூற, அதைக் கேட்ட நவிராவோ வெடித்தாள்.

“நான் என்ன பச்சைக் குழந்தையா? என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியாதா? என்னவோ பால் குடிக்கற பச்சைப்பிள்ளை மாதிரி இத்தனை வாக்குவாதம்?

இன்னைக்கு டாக்டர் அண்ட் ஜான்சி நீங்க ரெண்டு பேருமே இங்க தங்க வேண்டாம். நான் பார்த்துப்பேன் என்னை.” என்று கோபமாகப் பேசினாள்.

டாக்டர் செய்வதறியாமல் பார்க்க, ஜான்சியோ நிலைமையை சமாளிக்க எண்ணி..

“டாக்டருக்குத் தான் புருஷன், குழந்தைன்னு இருக்காங்க. எனக்கு அப்படி யாரும் இல்லையே.. அதனால நான் இங்கயே தங்கிக்கறேன்..” என்று சாதாரணமாக பேசுவது போல் கூற, அவரை இன்னமும் தீவிரமாகப் பார்த்தாள் நவிரா.

“உங்களுக்கு புருஷன், குழந்தை எல்லா இல்லைனா என்ன ஜான்சி? உங்களுக்கு உங்க பேரன்ட்ஸ் இருக்காங்க இல்ல? இங்க வந்து ஒரு மாசம் ஆகுது. இன்னும் நீங்க அவங்களை பார்க்கல இல்ல?

இப்போ உங்களுக்கு ஒரு வாரத்துக்கு லீவ், என் டார்ச்சர்ல இருந்து!

சோ கிளம்புங்க ரெண்டு பேரும்.” என்று சற்று சீரியஸாகவே கூற, அவளை ஆழ்ந்து பார்த்தார் ஜான்சி.

அந்தப் பார்வையை தைரியமாகவே எதிர்கொண்டவள்..

“என்னை இன்னொருத்தங்க பார்த்துக்கற நிலைமைல தான் நான் இருக்கின்றது என்னை இன்னமும் பலவீனப்படுத்துது.” என்றாள் குரல் தழுதழுக்க.

அதற்கு மேல் ஜான்சியும், டாக்டரும் நிற்கவில்லை.

டாக்டர் அவளிடம் கண்டிப்புடன்..

“உன்னை நீ பார்த்துக்கணும்னு முடிவெடுத்துட்டா.. உண்மையாவே உன்னை நீ நல்லா பார்த்துக்கணும் நவிரா. எங்களை அந்தப் பக்கம் அனுப்பிட்டு இங்க நீ உட்கார்ந்து அழுதுட்டோ, இல்ல பழசை நினைச்சு மருகிட்டோ இருக்கக் கூடாது.” என்று கூற, ஜான்சியோ..

“இது உன்னை நீ பரிசோதிக்கற நேரம் நவிரா. நீ இன்னொருத்தங்க டிபெண்டன்சில இல்லைன்னு எனக்கு ப்ரூவ் பண்ணு..” என்று அப்பொழுதும் கல் போன்ற முகத்துடன் தான் கூறிச் செல்ல, ரோஷமாக அவரைப் பார்த்தவள்..

“என்னை நான் பார்த்துப்பேன்..” என்று கூறிட, இருவரும் கிளம்பினார்கள்.

அவர்கள் சென்றதும் வந்து படுக்கையில் அமர்ந்தவளுக்கு உறங்க முடியவில்லை.

சிறு வயதில்.. அவளது ஒன்பதாவது வயதில் அவள் எடுத்த முடிவு, ஒரு சிறந்த பாடகியாக வேண்டும் என்பது.

அதற்காக அந்த வீட்டில் அவள் பட்ட கஷ்டங்கள் ஏராளம்.

ஒரு வீட்டின் கடைநிலை ஊழியராக இருப்பவள் கனவு காணத் தகுதியற்றவன் என்பது அவர்களது பிம்பம்.

ஆனால் இவளது பிடிவாதம் அவர்களது அந்தப் பிம்பத்தை உடைத்தது!

அது பதினாறாவது வயதில் அவர்களது வீட்டை விட்டு அவளை வெளியேற வைத்தது.

ஆனால்.. அப்படி அவளாக அந்த வயதில் வெளியேறியிருக்கா விட்டாலும், அந்த நாட்டின் வழமை படி அந்த வீட்டை விட்டு அந்த வயதில் அவள் வெளியேற்றப்பட்டுத் தான் இருப்பாள்.

அதன் பிறகு அவள் தனது ஜீவனத்துக்காக.. கல்லூரிப் படிப்பிற்காக.. இசை வகுப்பிற்காகவென்று செய்த வேலைகள் ஏராளம்!

ஒன்றே ஒன்று தான் அவளை விண்முட்டும் உயரத்துக்கு கொண்டு சென்றது.

அது தன் முனைப்பு!

ஆனால் இப்பொழுது.. அந்த அத்தனைப் புகழையும், ஒன்பது வயதிலிருந்து தான் கண்ட கனவு சிறகு முளைத்து விரிந்து படைத்த வெற்றிகளையும் விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறாள்!

அதற்கு காரணம்.. ஒரே ஒருவன்!

அந்த ஒருவனை பழிதீர்ப்பது தான் இனி இவளது வாழ்நாள் லட்சியம்!

அந்தச் சின்னஞ்சிறு வயதில் தன்னந்தனியே வாழ்ந்தது நினைவுக்கு வந்தது நவிராவுக்கு!

வாழ்வின் அந்த அத்தியாயம் முடிந்து, பாடகியானது தான் தனது இறுதி அத்தியாயம் என்று அப்பொழுதெல்லாம் இறுமாந்து எண்ணியிருந்திருக்கிறாள் அவள்.

ஆனால்.. இப்பொழுது இன்னமும் கீழேயே வீழ்ந்து கிடப்பது போல ஒரு மாயை!

‘ஒரு மனிதனின் கடைசி வெற்றியோ அல்லது தோல்வியோ தான் அவனை, அவனது வாழ்வில் அவன் வெற்றி பெற்றவனா அல்லது தோல்வியுற்றவனா என்பதை தீர்மானிக்கும். அது வரையிலும் அவன் நூறு வெற்றியையோ அல்லது ஆயிரம் தோல்விகளையோ கண்டிருந்தாலும், அவனது இறுதி வெற்றியோ, தோல்வியோ தான் அவன் யாரென்றே தீர்மானிக்கும்!’ என்ற வாசகம் நவிராவின் நினைவுக்கு வந்தது.

ஆனால் அந்த வாசகமும்.. ஷிவ் கூறியது.

இதை நினைவு கூர்ந்ததும், ஷிவ்வின் நினைவு பேராழியாய் சுருட்டிக் கொண்டது அவளை.

காய்ந்திருந்த கண்ணீர்த் தடத்திலே மீண்டும் உருண்டு விழுந்தன நீர்மணிகள்.

அறைக்குள் மூச்சு முட்டியது அவளுக்கு.

அறையை விட்டு வெளியே வந்து மாடிக்குக் சென்றாள்.

மறுபுறத்தில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது, “எட்டர்னல் ஃபிளேம்ஸ்”

ஷிவ், நவீராவை முத்தமிட்டுத் திரும்பி வந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது.

ஆனால் இன்னமும் அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது அவனது அறையில்.

சத்தம் கூட்டி வைக்கப்பட்டதால், அந்தப் பாடல் அவனது அறை மட்டுமல்லாது, பக்கத்து அறையையும் தொட்டு.. மாடி இறங்கிக் கீழேயும் வழிந்து கொண்டிருந்தது!

அதில் பக்கத்து அறைக்குள் ஏக கலவரம்!

அடித் தொண்டையிலிருந்து யாரோ கத்தும் சத்தம் கேட்டு அங்கே சென்று பார்த்தார் வெற்றிச்செல்வன். பிறகு ஷிவ்வின் அறைக்கு வந்தார்.

விட்டத்தை வெறித்திருந்த கண்கள் ஒருமுறை கூட சிமிட்டவில்லை போலும்.

அப்படியே படுத்திருந்தவனைப் பார்த்தவர்..

“இந்தப் பாட்டை இன்னும் எத்தனை முறை தான் கேட்ப ஷிவ்?

அதுவும் இந்த பாட்டை எதுக்கு கேட்கற?” என்று அவர் கேட்க, மெதுவே அவரை நோக்கித் திரும்பியது அவனது தலை.

பதிலேதும் பேசவில்லை அவன்.

“ஏன் ஷிவ்.. நடந்ததெல்லாம் மறந்துட்டியா?” என்று அவர் கேட்க.. இன்னமும் வெறித்த பார்வையே அவனிடத்தில்.

“உனக்கு இந்தப் பாட்டு என்ன விதமான பாதிப்பைக் கொடுக்குதுனு தெரியல. ஆனா.. இங்க எல்லாருக்கும் அடிவயிறெல்லாம் எரியுது.” என்றார் முகத்தைத் திருப்பிக் கொண்டு.

அதில் சட்டென எழுந்தவன், பாட்டை அணைத்துவிட்டு, கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

“ஷிவ்.. எங்க போற? எங்க போறன்னு சொல்லிட்டு போ..” என்று வெற்றிசெல்வன் கத்தியதை, காற்று தான் காதில் வாங்கியதோ என்னவோ!

இரண்டு மணி நேரங்கள்! முழுதாக இரண்டு மணி நேரங்கள் கடந்த பிறகும் உடலின் தகிப்பு அணையவில்லை!

அது தாபத்தின் தகிப்பு அல்ல! அவள் உண்டாக்கிய ரணத்தின் வெப்பத் தகிப்பு!

மீண்டு விட்டோம், மனதை நிலைப்படுத்தி உறுதியாகிவிட்டோம் என்று எண்ணியிருந்தவன் தான் அவன்.

ஆனால்.. இன்று ஒற்றைப் பார்வையில்.. அவளுடன் தனித்திருந்த அந்தச் சில நிமிடங்களில்.. தன்னிலை இழந்து.. மோகத்தில் சரிந்து.. மூச்சுக்காற்றாய் அவள் சுவாசம் குடித்து.. ச்சே..!

வெறுப்பாய் வந்தது அவனுக்கு. இத்தனை நேரம் கடந்த பிறகும்.. அவள் செய்ததெல்லாம் நினைத்து நினைத்து பார்த்து, ரணத்தை கிளறிப் புண்ணாக்கிக் கொண்ட இப்பொழுதும்.. அந்த வலியையும் மீறி மனம் தேடுகிறது அவளை.

“ச்சை..” என்று ஸ்டேரிங் வீலை ஒற்றைக் கையால் அடித்தான் அவன்.

சாலையைப் பார்க்கையில் அது ஜீவானந்த தயாளனின் வீடு செல்லும் வழி என்று தெரிந்தது.

அதாவது அவளிருக்கும் பகுதி!

மூச்செல்லாம் அனலாய் தகித்தது அவனுக்கு!

மூச்சை மட்டுமின்றி, முழு உடலையும் தகிக்க வைக்கும்படிக்கு எதிரில் வந்து கொண்டிருந்தது சூர்யவர்மனின் கார்.

சூர்யவர்மனும், நவிராவும் கிளம்பி அதே இரண்டு மணி நேரங்கள் தான் ஆகின்றன. இத்தனை நேரமும் அவளுடன் இவன் இருந்தானா? என்ற எண்ணத்திலேயே ஷிவ்வின் உடல் தகித்து சிவந்தது.

உடலோடு கண்களும் கோபத்தில் கனல, அவனை காருக்குள்ளிருந்தே முறைத்தான் ஷிவ்.

சூர்யவர்மனும் அதைக் கண்டுகொண்டான் தான்.

கண்டு கொண்டதாலேயே அவன் முகத்தில் எகத்தாளச் சிரிப்பு.

அதைக் கண்ட ஷிவ்வுக்கு வெறியேறியது!

அதுவரை கொஞ்சமே கொஞ்சம் தயக்கத்தில் இருந்தவன், அதன் பிறகு எந்தத் தயக்கமுமின்றி நவிராவின் வீடு நோக்கி காரை விட்டான்.

அதை சூர்யவர்மன் பார்த்தான் தான்! ஆனால்.. அவன் அங்கே செல்லுவான் என்றெல்லாம் துளியும் எண்ணவில்லை.

அவனால் எப்படி எதிர்க்கட்சி தலைவரின் வீட்டுக்குள் நுழைய முடியும்?

ஆனால்.. “ஷிவ்” பிறர் செய்ய முடியாது என்பதை செய்து காட்டுகிறவன்!

மற்றவர் எதிர்பாராததை நடத்திக் காட்டுகிறவன்!

நேராக தயாளனின் வீட்டுக்கருகே காரை நிறுத்தி வெளியே வந்து பார்த்தான்.

அங்கே ஈ, காக்கா கூட இரவுப் பணி முடித்து உறங்கச் சென்றிருந்தது. அந்த வீட்டு வாசலில் இருந்த வாட்சமேனும் கூட!

உள்ளுக்குள் என்னமோ உந்த சட்டென்று அவன் மேலே பார்க்க, மாடியில் நின்றிருந்தாள் நவிரா.

அந்தக் கணத்தில் மீண்டும் அவன், அவன் வசமில்லை.. வசப்படுத்தியது.. நவிரா!
அடுத்த ஐந்து நிமிடங்களில் காரை வேறு புறம் நிறுத்திவிட்டு வந்தவன், நவிராவின் வீட்டுச்சுவர் ஏறிக் குதித்திருந்தான்.

பின்பக்க பைப் வழியாக ஏறி, மாடிக்குச் சென்றான்.

அங்கே நவிரா இருளை வெறித்து நின்றிருந்தாள்.

இவன் வந்து நின்றது அவளுக்குத் தெரியவில்லை.

அவளது இதழ்கள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

ஊன்றிக் கவனித்தான் ஷிவ்.

அவளது குரலில் அழுகையும் மிதந்ததோ என்ற ஐயம் பிறந்தது அவனுக்கு.

“கடவுளே.. ப்ளீஸ்.. எப்படியாவது அவனை மறக்கணும் நான். வேணாம் எனக்கு.. அவனோட நினைவுகள் வேண்டாம்.. அந்த நினைவுகள் தரும் வலி வேண்டாம்.. என்னால இந்த வலியைத் தாங்க முடியல.. எப்படியாவது என் நினைவகள்ல இருந்து அவனை அழிச்சுடேன் ப்ளீஸ்..” என்று தன்னிலை மறந்து புலம்பிக் கொண்டிருந்தாள் பெண்ணவள்!

கேட்டுக் கொண்டிருந்தவனின் உயிர் வெடித்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!