Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

73. வேணு கானமிதுContest Stories 2026

வேணு கானமிது 6

அத்தியாயம்: 6

அறையில் இருந்த மங்கிய வெளிச்சமும், சூழ்ந்திருக்கும் குளிரும், இன்னும் பொழுது விடியவில்லை என்றது. நேரம் அதிகாலை இரண்டு மணி தான். பேய்களும் பிசாசுகளும் உலாவரும் அந்தச் சமயத்தில் எழுப்பி விட்டது அவன் செட் செய்து வைத்திருந்த ஆலாரம்.



Advertisement

அலைபேசித் திரையில் இருந்த பஞ்சு மூட்டை மேகமும், நீல நிற வானமும், மெல்லிய இசையுடன் மின்னி மின்னி மறைய, போர்வைக்குள் இருந்த வலிய கரம் ஒன்று செல் ஃபோனை விழுங்கியது. கண்களைக் கசக்கி நேரத்தைப் பார்த்தவன், அதை அணைத்து விட்டு, தன் முன்னுச்சியில் பிரண்டு விழுந்த கேசத்தை விலக்கி, தலையை அழுந்திப் பிடித்தான். சில கணங்கள் கண்களை மூடி சயனத்தில் கிடந்தவன் எழுந்து குளியலறைக்குள் சென்றான்.

குளிருக்கு இதமாக தலையில் கொட்டியது சுடு நீர். தன் முறுக்கேறிய தேகத்தைச் சுத்தம் செய்து கொண்டு, இடையில் துண்டுடன் வந்தவனுக்கான உடைகள் கட்டிலில் காத்திருந்தன.

Advertisement

Advertisement

வெள்ளை நிறப் பூந்துவாலையால் கேசத்திலும் தேகத்திலும் படிந்திருந்த நீரை உறிஞ்சச் செய்தவன், உடலுக்கு மணம் தரும் நறுமண திரவியங்களைப் பூசிக் கொண்டான். தலை முடியைக் காய வைத்து, ஜெல் கொண்டு அடக்கி வைத்தவன்,

இடது மணிக்கட்டில் வாட்ச்சைக் கட்டினான். வலது கையில் இருந்த வெள்ளிக் காப்பை ஏற்றி விட்டான். வெள்ளை நிற முழுக்கைச் சட்டையும் கருப்பு நிற பேண்டும் அணிந்து கொண்டவன், கருப்பு நிறத்தில் இருந்த டையை எடுத்து கழுத்தைச் சுற்றிக் கட்டிக் கொண்டு, அங்கிருந்த ஆள் உயரக் கண்ணாடியின் முன் வந்து நின்றான்.

Advertisement

இடப்பக்க மார்பில் இருந்த பேட்ஜ் அவன் பணிபுரியும் விமான நிறுவனத்தில் பெயரைச் சொல்லியது. தோள்பட்டையில் இருந்த epaulettes-ல் நான்கு கோடுகள் இருந்தன. அது அவன் கேப்டன் என்ற பதவியில் உள்ளான் என்றது. வலப் பக்கம் இருந்த நேம் பேஜ்ஜில் பத்ரி நாராயணன் என்ற எழுத்தை விரல்களால் தடவிப் பார்த்தவன், சிறு கர்வப் புன்னகையுடன் இல்லாத மீசையை முறுக்கி விட்டபடி பணிக்குத் தயாரானான்.

அந்தப் பணி அவனின் கனவு. வானில் பறக்க வேண்டும் என்ற தன் ஆசையை விமானியாகி நிறைவேற்றிக் கொண்டான்.

அவன் இப்பொழுது இருப்பது ஆஸ்திரேலியா நகரின் மெல்போன் சிட்டி. டெல்லியில் இருந்து மெல்போனுக்கும், மெல்போனில் இருந்து டெல்லிக்கும் பயணப்பட உள்ள விமானத்தின் பைலட்டாக வந்துள்ளான். கிட்டத்த 12-13 மணி நேர பயண தூரம் அது. மாலை வேளையில் மெல்போனை அடைந்த விமானக் குழுவினருக்காக அருகில் இருந்த நட்சத்திர விடுதியில் அறை ஏற்பாடு செய்திருந்தது நிறுவனம்.

கடிகாரத்தைப் பார்த்தவன், தன் கருப்பு நிற ஷூவை மாட்டிக் கொண்டு, Pilot cap-ஐ கையில் எடுத்துக் கொண்டு அறையைக் காலி செய்தான். சரியாகப் பூட்டிவிட்டு வராண்டாவில் நடக்கும் சமயம், சிவப்பு வண்ண விமானப் பணிப் பெண் புடவையில் அழகாய் நாணப் புன்னகையை வீசியபடி, பத்ரியை நோக்கினாள் ப்ரமீளா.

“குட் மார்னிங் பத்ரி.” என்றாள் ரகசிய சிரிப்புடன்.

“ம்….” என்று தலையசைத்தவன், அவளின் முகத்தைக் கூட ஏறிடாது கடந்து சென்றான்.

சிறு ஏமாற்றம் வந்த போதும், வலுக்காட்டாயமாக இதழ்களை இழுத்துக் கொண்டு, அவனைப் பின்தொடர்ந்தாள் பெண். காரணம் தன் கோபத்தைக் காட்டி அவனின் நட்பை இழந்து விடக் கூடாது என்பதால். சில நாள்களாகவே அவனைத் தன் காதலன் என்று சொல்லிக் கொண்டு திரிவதால் அந்தப் பின்பத்தை உடைக்கக் கூடாது என்று நினைத்தாள்.

இருக்கும் பைலட்களிலேயே பத்ரி தான் இளையவன். அந்தச் சிறிய வயதில் கேப்டன் என்ற பதவியும், பல சர்வதேச நாடுகளுக்கு விமானங்களைச் செலுத்தி, பயிற்சி கொடுக்கும் பெருமையும் கொண்டவன். நிறுவனத்தில் செல்வாக்கும் மதிப்பும் அதிகம் அவனுக்கு. கம்பீரம் குறையாத‌ அழகன். முக்கியமாக வசதி வாய்ப்பிற்கு குறைவில்லாதவன்.

எஃகென உடலின் இறுகிய தோற்றமும், திடமான மார்பும், சிக்ஸ் பேக் வயிறும், யானையின் துந்திக்கையென வலுவான இரு கைகளும், தீட்சமான பார்வையும், மீசை இல்லாததால் பிறருக்கு வசீகரமாக சிரிப்பைக் காட்டும் அழுத்தமான உதடுகளும், வலித்து சவரம் செய்யப்பட்ட தாடையும், கடல் அலை போல் காற்றில் அசைந்தாடும் அவனின் கேசமும், கம்பீரமான பேச்சும் எல்லாப் பெண்களையும் வசியம் செய்து விடும். அவனின் மீது மையல் கொள்ள வைத்து விடும். அவனும் பெண்களுடன் தோழமையுடன் பழகுபவன் தான். சொல்லம்போனால் அவனுக்கு ஏகப்பட்ட பெண் தோழிகள் உண்டு. அவனுக்காக எதையும் செய்வர்.

ஆனால், அவனைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறி விடலாம் என்று கணக்குப் போடும் பெண்களை, பட்டுக் கத்தரித்தார் போல் தயக்கமே காட்டாது வெட்டி விட்டுச் சென்று விடுவான். அது அங்கிருக்கும் பலருக்கும் தெரியும்.

ஆனால், பணிக்குச் சேர்ந்து ஓரிரு மாதங்களே ஆன ப்ரமீளாவிற்கு இது தெரியாது. நிரந்தரமில்லாத தன் வேலையை நிலைக்கச் செய்ய அவனிடமிருந்து சிபாரிசு கிடைக்கும் என்று நெருங்கியவள் அவள்.

உடன் பணிபுரிந்தவர்கள் செய்த எச்சரிக்கையைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தூர இருந்தே பல நாள்கள் நோட்டமிட்டவளுக்கு, அவன் நட்பு கிடைக்கப் பெற்று, தோழமையுடன் பழகவும், தேவையையும் மீறி ஆசை அவனின் மீதும் வந்தது.

அனைவரிடமும் கேலிச் சிரிப்புடன், பாகுபாடு காட்டாது பழகுபவன். ஓர் இளவரசன் போன்ற களையுடன் கம்பீரமாக நடமாடும் இவனை நிரந்தரமாக தன்னுடன் தக்கவைத்துக் கொண்டால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்ற முடிவுடன் சில காலமாக அவனை அணுகுகிறாள். ஆரம்பத்தில் அவளுடன் நன்கு பேசியவனிடம் அவளின் காதலைச் சொல்ல, அவன் அவளைத் தவிர்க்கத் தொடங்கியிருந்தான்.

அவனைப் பொறுத்தவரையில் காதலும் கல்யாணமும் முட்டாள்கள் செய்யும் மடத்தனம்.

விமானநிலையத்தில், விடியா நேரமானாலும், பனி பொழியும் சீதோஷ்ண நிலையானாலும் பரவாயில்லை என்பதுபோல் மக்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். உடமைகளை இழுத்துக் கொண்டு எங்கே போர்டிங் என விசாரித்துச் செல்லும் கூட்டத்தைப் பார்த்து மெல்லிய முறுவல் வந்தது பத்ரிக்கு.

குடும்பமாகச் செல்கின்றனர் என்ற நினைப்பே அவனின் ரசனைமிகு முறுவலுக்குக் காரணம். உடனே தன் அலைபேசியை எடுத்து அதில் இருந்த தன் குடும்பப் புகைப்படத்தைப் பார்த்தான். தாயையும் தந்தையையும் நாற்காலியில் அமர வைத்து, அவனும் அவனின் தமக்கையும் பெற்றவர்களின் தோளில் கரம் பதித்துச் சாய்ந்து கொண்டு எடுக்கப்பட்ட படம் அது. ஆழ மூச்சை இழுத்து விட்டவனுக்குள், சிறு சுணக்கம் இளையாட, இமை மூடி அதை விலக்கி வைத்து விட்டுச் சென்றான்‌.

குடும்பத்தை விரும்புபவன் தனக்கென குடும்பத்தை அமைத்துக் கொள்ள உதவும் காதலையும் கல்யாணத்தையும் வேஸ்ட் என்று, அறவே வெறுப்பது தான் முரண்பாடான விடயம்.

தன் ஐடியைக் காவலாளிகளிடம் காட்ட, பத்ரி, உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டான். விமான ஓட்டுநருக்கு, விமானம் ஏறும் ஒவ்வொரு முறையும் இது நடத்தப்படும். மருத்துவ அறிக்கையில் ஃபிட் என்று வந்த பிறகு தான் அனுமதிக்கவே செய்வர். அதை முடித்து விட்டு Cockpit crew meet-காக தன்னுடன் பயணிக்க இருக்கும் சக ஊழியர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.

அங்கு அவனின் co-pilot இஷானுடன் சேர்ந்து Pre-flight check செய்தான். weather report, fuel check, route check என அனைத்தையும் கேப்டன் என்ற முறையில் சரி பார்த்து விட்டு கார்பிட்டுக்குச் சென்றான். கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டவன் take-off க்கான உத்தரவுகளை பெற, விமானம் ரன் வே-யில் சீராக ஓடி, லாவகமாய் உயரே எழுந்து பறக்கத் தொடங்கியது.

காலை எட்டு மணிக்கு வானில் வட்டமிடத் தொடங்கிய விமானம் மலேசியாவின் கோலாலம்பூரில் இறங்கி, ‌சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு தலைநகரை வந்து சேர்ந்த போது பதினோரு மணியைக் கடந்திருந்தது.

கேப்டனாக, தன் பார்மாலெட்டீஸ்களை முடித்து விட்டு, ஏர்போட்டை விட்டு வெளியேறுகையில் உடன் வந்து ஒட்டிக் கொண்டாள் ப்ரமீளா.

“ஹாய் கேப்டன், Can you drop me?” என்றவளை அவன் ஏற இறங்க பார்க்க,

“லேட் நைட்… டாக்சி கிடைக்கிறதும் அதுல சேஃப்பா போய்ச் சேருறதும் கஷ்டம்.” என்று இறைஞ்சும் குரலில் சொல்ல,

“Oh… Sure.” என்றவன் தன் காரை நோக்கிச் சென்றான்.

காரில் ஏறியதில் இருந்து தன்னைப் பற்றி பேசிக் கொண்டே அவள் இருக்க, கவனத்தைச் சாலையில் வைத்தவனின் கைக் கடிகாரம் சத்தமிட்டது.

நேரம் பன்னிரெண்டு என்றதும், தன் ஃபோனிலிருந்து யாருக்கோ அழைப்பு விடுத்தான்.‌ கார் ஓட்டிச் செல்லும் சமயமெல்லாம் அலைபேசியை அண்புலனியுடன் இணைத்திருப்பான். ஆதலால் இருவரின் சம்பானைகளைப் ப்ரமீளாவும் கேட்க நேர்ந்தது.

“ஹே பட்டர் பன்… ஹேப்பி பர்த்டே…” என்று உற்சாகத்துடன் சொல்ல, அந்தப் பக்கமிருந்து நீண்ட கொட்டாவியே பதிலாக வந்தது. அதுவும்,

“ஹல்லோஓஓஓ…” என்ற இழுவையுடன்.

“எவ்ளோ பெருசு… போதும் பட்டன் பன். வாய முடிக்க.” என்று தெலுங்கில் சொல்ல, அந்தப் பக்கத்தில் இருந்தவளுக்கு உறக்கம் முழுமையாகக் கலைந்திருக்க வேண்டும்.

“மாவய்யா!!” என்க,

“ம்… மாவய்யா தான்.” என்றவர்கள் சம்பாசனை தெலுங்கில் இருந்தது.

“எதுக்கு கால் பண்ணிங்க?”

“எம்மருமகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல கூப்பிட்டேன்.”

“அதைச் பன்னெண்டு மணிக்காச் சொல்வாங்க. விடியவும் சொல்லிருக்கலாம்ல. நல்லா தூங்கிட்டு இருந்தேன். ஏன் என்னோட தூக்கத்த டிஸ்டர்ப் பண்றீங்க மாமா.” என்று சிணுங்களாகக் குரல் வர, ப்ரமீளாவிற்குள் காந்தியது.

‘பக்கத்துல இருக்குறவளுக்கு பாச புரியுமா புரியாதான்னு தெரியாம குடத்துக்குள்ள விழுந்த நண்டாட்டம் பேசிட்டே இருக்குதுங்க. இவனுக்கு இவ்ளோ கனிவாப் பேசத் தெரியுமா?’ என்று.

“தூக்கத்த டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? அதுக்கு நீ தூங்கிருக்கணும் முதல்ல. இவ்ளோ நேரம் உன்னோட வாஸ்ட் அப் ஆன் லயன்னு காட்டுச்சே! ஏன்? நாளைக்கி உனக்கு ஸ்கூல் இருக்கு தான. எக்ஸாம்னு ஸ்கூல்ல இருந்து மெசேஜ் வந்திருந்தது. எதுக்கு இவ்ளே நேரம் முழிச்சிருக்க?” என்று விசாரணையை ஆரம்பிக்க,‌

“அது… அது…” எனத் தந்தி அடித்தது அவளுக்கு.

“என்ன பண்ணிட்டு இருந்த? ஃபோன் நோண்டிட்டு இருந்தியா?” என்றவன் அவள் பதிலிளிக்க இடம் தராது,

“லேட் நைட்ல ஃபோன் நோண்டக்கூடாதுன்னு சொல்லிருக்கேனா இல்லையா!” எனக் காட்டமாக கேட்டான்.

அந்தப் பக்கம் சத்தமில்லாது போகவே, “எதாவது கேட்டா உடனே உறைஞ்சி போய்டுவ! போ… போய் ஃபோன ஆஃப் பண்ணி வச்சிட்டு தூங்கு. உன்னைச் சொல்லக் கூடாது. நான் காலைல அம்மாட்ட பேசிக்கிறேன்.” என்று விட்டு வைக்க, அவளுக்குள் கிலி பிறந்தது‌.

“வேணாம் மாவய்யா… அம்மாம்மா கிட்ட எதுவும் கேக்காதிங்க. ப்ளீஸ்… அப்றம் தொணதொணக்க ஆரம்பிச்சிடுவாங்க.” என்றாள் சின்னக் குரலில்.

“என்ன பண்ணிட்டு இருந்த? உண்மைய மட்டும் தான் சொல்லணும். எனக்கு பொய் பேசுறது பிடிக்காது.”

“ஃப்ரெண்ட்ஸ் கூட சும்மா சேட் பண்ணிட்டு இருந்தேன். வேற எதுவும் பண்ணல மாவய்யா. நம்புங்க.” என்று கெஞ்ச,

“நான் உங்கிட்ட காலைல பேசுறேன். இப்ப போய் தூங்கு.” எனக் கருணை காட்டாது கட் செய்து விட்டான்.

கார் சில மீட்டர் நகர்ந்திருக்கும். அதற்குள், “யாரு அது?” என்று பொறுக்கமாட்டாது கேட்டு விட்டாள் ப்ரமீளா.

அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், புருவங்களைக் கேள்விக் குறியாக்கி எதற்கு என்று வினவ,

“நீங்க பேசுனது புரியல. பட் பெர்த் டே விஷ்ன்னு மட்டும் தெரிஞ்சது. மிட் நைட்ல பிறந்த நாள் வாழ்த்து சொல்ற அளவுக்கு, உங்களுக்கு முக்கியம்னா! எனக்கும் முக்கியமானவ தான் அந்தப் பொண்ணு. எங்கிட்ட குடுத்திருந்தா நானும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லிருப்பேன்ல.” என்று குறைபட்டுக் கொண்டவள்,

“காலை நீங்க பேசும் போது எங்கிட்ட குடுங்க. நானும் அவளுக்கு விஷ் பண்றேன்.” என்று சொல்ல,

“நீ எதுக்கு விஷ் பண்ணணும்?” என்று அவன் கேட்டதும் திருதிருவென விழித்தாள்.

“என்னைச் சேந்த யாரும் உனக்கு முக்கியமில்ல. உன்னோட லிமிட் அது இல்லை. என்னோட ஃபேமிலி உனக்குத் தேவையில்லாதது.”

“பத்ரி, அப்படி சொல்லாதீங்க. நான் உங்களை சீரியஸ்ஸா லவ் பண்றேன். கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை….” என்றவள் மேற்கொண்டு உலரும் முன், கார் க்ரீச் என்ற சத்தத்துடன் நின்று போனது.

ஏன் என்று தெரியாது, யாருமற்றச் சாலையை வெறித்துப் பார்த்தபடி இருந்தவளை,

“இறங்கு…” என்று திடுக்கிடச் செய்தான்.

“பத்ரி…” என்றவளின் குரலில் பரிதாபம் இருந்தது.

அவள் இறங்காது இருக்க, ஸ்டேரிங்கில் விரல்களால் தாளமிட்டவன், காரை விட்டு இறங்கவும் பயந்து போனவள் வேகமாக இறங்கினாள். பத்ரி, சாலையில் வந்துகொண்டிருந்த ஆட்டோவிற்கு கைக் காட்டி, அவளை ஏறிக் கொள்ளும் படி கண்ணசைத்தான்.

அவனின் முகத்தில் இருந்த தீவிரம், பயத்தைத் தர, வேகவேகமாக ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டாள். ஆட்டோ குடியிருப்பை அடைந்து, அவள் இறங்கி வீட்டிற்குள் செல்வது வரை அவளின் பாதுகாப்பை உறுதி செய்தான் பத்ரி.

அக்கறை உள்ளவன் தான். ஆனால் கல்யாணம், காதல் என்ற வார்த்தையைக் கூறிக் கொண்டு உரிமையோட அவனின் குடும்பத்திற்குள் யாராவது பழகுவது தெரிந்தால் மட்டும் ஏதோ பூதம் புகுந்து கொண்டதைப் போல் நடந்து கொள்வான். அவன் அனுமதி இல்லாது அவனின் குடும்பத்தை யாராலும் நெருங்க கூடாது என்பான்.

காலையில் நல்ல உறக்கத்தில் இருந்தவனை எழுப்பி விட்டது, அன்னையிடம் இருந்து வந்து அழைப்பு.

ஃபோனை எடுத்து காதில் வைத்தவனிடம், “நீ அம்மாயிய என்ன சொன்ன? ஸ்கூலுக்குக் கூட போக மாட்டேன்னு ஒரே அடம். அழுதிட்டே போறா. தோழிங்க எல்லாரும் வாழ்த்து சொல்லிருந்தாங்களாம். அவங்களுக்கு நன்றி சொல்லிட்டு இருக்கும் போதே பிள்ளைய பிடிச்சித் திட்டி விட்டிருக்க. பிறந்தநாள் அதுவுமா இப்படியாத் திட்டுவ!” என்று காட்டமானக் குரல் கேட்க, அவன் சிரித்து விட்டான்.

எப்படியும் மாமன் வீட்டில் போட்டுக் கொடுத்துவிடுவான் என்று தெரியும். ஆதலால் நல்லதொரு கதையை உருவாக்கி, அதைப் பாட்டியிடம் கண்ணீருடன் ஒப்பித்து, மாமன் ஏவ இருக்கும் அம்பை அவனுக்கே திசை திரும்பி விட்டுச் சென்றிருந்தாள் அவனின் மருமகள் அதிதி. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் டினேஜ் பெண்.

“ம்மா… அவ உங்கள ஏமாத்துறா. உங்க கிட்ட கதை விட்டுட்டு ஃபோன்லயே எனி டயம் இருக்கா. நம்பாதிங்க அவள. கொஞ்சம் கவனிங்க.” என்க,

“நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன். நான் ரெண்டு பிள்ள பெத்து வளத்தவ. இவள வளக்கத் தெரியாதாக்கும். பெருசா அட்வைஸ் பண்றான்.” என்று சடைத்துக் கொள்ள,

“ரெண்டு என்ன! பத்து கூட வளக்கலாம். அதெல்லாம் அந்தக் காலம். இந்தக் காலத்துல ஒத்தப் பிள்ளைய நல்லபடியா வளக்குறதே பெரும் பாடு.” என்றவன்,

“இன்னைக்கி ஈவ்னிங் அவளோட ஃப்ரெண்ட்ஸ்க்கு ஹோட்டல்ல பார்டி ஏற்பாடு பண்ணிருக்கேன். எல்லாம் பக்காவா இருக்கும். உங்க உடம்புக்கு நல்லா இருந்தா கூட போய்ட்டு வாங்க. இல்லன்னா வீட்டுல இருங்க. அதிதிய சுமனும் அவனோட வைஃப்பும் பாத்துப்பாங்க.” என்று தன் மருமகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு, தான் செய்து வைத்திருக்கும் ஏற்பாடுகளைப் பற்றிக் கூறினான்.

“சரி! காலங்காத்தால என்னையத் திட்டத்தான் கால் பண்ணீங்களா?”

“இல்ல தம்புடு… வீட்ட வாடகைக்கு விடுறதுக்காக டூலெட் ஃபோர்டு போட்டோம்ல. அதுக்குக் கேட்டு ஆள் வந்திருக்கு.”

“ப்ரோக்காரா ஆள் கூட்டி வந்தது?”

“இல்லப்பா… ப்ரோக்கர்னா நேரா உனக்குல கால் பண்ணிப்பான். இது வாசல்ல தொங்குன ஃபோர்ட் பாத்திட்டு வந்து கேட்டுச்சி. ரெண்டு மூணு நாள் வந்து பேசுச்சி. நல்ல விதமாத்தான் எனக்குத் தெரியுது. நாம சொன்ன கண்டிசன், வாடகை, அட்வான்ஸ் எல்லாத்துக்கும் சரின்னு சொல்லுச்சி. பாக்க நல்ல படியாவும் இருக்கு. அதான் உங்கிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன். அந்தப் பொண்ணுக்கிட்ட குடுக்கவா?”

“பொண்ணா?”

“ம்… பொண்ணு தான். பாக்க லட்சணமா இருக்கா!” என்றார் ஹாலில் உட்கார்ந்திருந்த சுருதிகாவைச் சிலகித்தபடி,

“உங்களுக்குப் பாக்குற பொண்ணெல்லாம் அப்படித்தான் தெரியும்.”

“கல்யாண வயசுல பிள்ளைங்கள வீட்டுல வச்சிருக்குற பெத்தவங்களுக்கு அப்படித்தான்டா இருக்கும். வெரசா நீ ஒரு கல்யாணத்த பண்ணிந்தேன்னா நான் ஏன் போற வர்ற பொண்ணு எல்லாத்தையும் வர்ணிக்கப் போறேன்.” என்றவர், மகனுக்குக் கொட்டு வைக்கத் தவறவில்லை.

“போதும். நான் விசாரிக்கணும். வீடியோ கால் பண்றேன்.” என்றவன் சாதாரண அழைப்பைத் துண்டித்து விட்டு, காணொலி அழைப்பு விடுத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!