Skip to content
Post Views: 2,846
பூவிடைப் பனித்துளிகள்
அத்தியாயம் 17
அடுத்த தினம் காலையில் திங்கட்கிழமைக்கே உண்டான சோம்பலுடன் தான் மற்றவர்கள் எழுந்தனர். திவ்யாவிற்கு முதல் நாள் அலுவலகம் என்பதால், உற்சாக மிகுதியில் அவளுக்கு உறக்கமே வரவில்லை. அதனால் சீக்கிரம் எழுந்தவள், எல்லாருக்குமாக ஆம்லெட்டும் ரொட்டியும் சுட்டு வைத்திருந்தாள்.
Advertisement
சூடாக பால் கலக்காத காபியும் காபிமேக்கரில் கொதித்துக் கொண்டிருந்தது. அனைவரும் கீழே வரவும், “ப்ரேக்ஃபஸ்ட் ரெடி” என முறுவலுடன் கூறியவளை, சற்றே பயத்துடன் தான் ஏறிட்டனர். முன் தின சம்பாஷணைகள் அவளுக்கும் நினைவில் எழ, தலையை சாய்த்து அழகாய் சிரித்தவள், “சாரி, கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். அதுக்காக தான் காம்பன்ஷேஷன் ப்ரேக்ஃபஸ்ட்” என்று சொல்ல, ஆசுவாசத்துடன் அனைவரும் கிச்சன் ஐலாண்ட் மேடையை சுற்றிலும் அமர்ந்தனர்.
“நாபி வரலையா?” என்று மாடியை பார்த்துக் கொண்டே வினவினாள் திவ்யா.
“அவ, நைட்டே வரலையே! அவங்க கொரியன் ஃப்ரெண்ட்ஸ் வீட்டிலயே தங்கிக்கறேன்னு வருண்க்கு மெசேஜ் பண்ணியிருக்கா.” என்று யஷ்வந்த் பதிலளித்தான்.
Advertisement
“ஓ, அப்போ காலையில ஆபீஸ்க்கு?”
Advertisement
“நேரா அங்கிருந்தே வந்துடுவா! அவ அடிக்கடி அப்படி தான். அவ கொரியன் ஃப்ரெண்ட்ஸ் கூட தங்கிக்குவா!”
“அச்சோ! நான் அவளுக்கும் சேர்த்தி ஆம்லெட் போட்டிருக்கேனே” என்று திவ்யா உச்சுக்கொட்ட,
“டென்ஷன் மத் லோ! மைன் கா லூங்கா” என்று அவள் ஆம்லெட்டையும் தன் தட்டில் வாங்கிக் கொண்டான் யஷ்வந்த். சரியாக யஷ்வந்த் முதல் வாய் ஆம்லெட்டைக் கொய்து வாயில் திணிக்க எத்தனிக்கும் சமயம், “நேத்தைக்கு சாரி சொல்ல தான் இன்னைக்கு மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சேன். டெய்லி எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க! சம்ஜே கைஸ்” என்று எச்சரிக்கை வேறு விடுத்தாள்.
Advertisement
வாய்திறவாமல், தலையை மட்டும் பூம்பூம் மாட்டின் சகோதரன் போல ஆட்டிவிட்டு, தன் காலை உணவை உள்ளே தள்ளினான் யஷ்வந்த். வருண், விட்டால் திவ்யா ஆம்லெட் தட்டை பிடுங்கிக் கொள்வாளோ என்பது போல அவசர அவசரமாக உண்டான்.
திவ்யாவும் சிரிப்புடன் தன் காலை உணவை உண்டவள், எதிரில் இருந்து இவளை துளைப்பது போல் பார்த்துக் கொண்டிருந்த பரணியை ஏறிட, புருவங்களை நெரித்து, “என்ன?” என்பது போல அவன் கேட்க, இம்முறை திவ்யா ஒன்றுமில்லை என்று தலையை குலுக்கினாள்.
நால்வரும் உண்டு முடிக்கவும், கேப் வாசலில் ஹார்ன் எழுப்பவும் சரியாக இருந்தது. காரின் முன் இருக்கையில் திவ்யா அமர்ந்துகொள்ள, ஆண்கள் மூவரும் பின்னால் அமர்ந்தனர்.
அலுவலகம் செல்ல சரியாக அரை மணி நேரம் ஆகும் என்று சொல்லியிருந்த படியால், தத்தம் கைப்பேசியில் அனைவரும் கவனமாக, திவ்யா வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.
இவர்கள் வீடு தான் க்ரேஸ்டோன் லேனில் கடைசியாக இருந்தது. ‘ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் எவ்வளோ தூரம்! அம்மாடி!’ என்று வியப்புடன் பயணித்தாள். வழியெங்கும் பனி சூழ்ந்திருக்க, முதலில் அழகாகவும் அமைதியாவும் காட்சியளித்த பனிப்பொழிவை ஏனோ இம்முறை திவ்யா சற்றே அச்சத்துடன் ஏறிட்டாள்.
எதுவும் அளவாக கிடைக்கும் வரையில் தான் ரசிக்கத் தக்கதாக இருக்கும். இந்த அளவிற்கு அதிகமான மைனஸ் டிகிரி குளிரும், சதா சர்வ காலமும் பனிப்பொழிந்து கொண்டே இருந்த வானமும் பார்க்கையில், ‘நார்னியால குடியிருக்க மாதிரி இருக்கு’ என்ற எண்ணம் தான் தோன்றியது. முதல் தினம் தோன்றியிருந்த வியப்பும், ஆச்சர்யமும் அசூசையாக மாறியிருந்தன.
சிறிது சிறிதாக கிராமங்கள் மறைந்து நிறைய கட்டிடங்கள் தென்பட, பரபரப்பான வெர்மாண்ட் நகரின் மையத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அலுவலகத்தில் முதல் தினம் இவளை பார்மலாக அறிமுகம் செய்வித்து, கணினி, இருக்கை எனக் கொடுத்து அத்தோடு வேலையும் கொடுத்திருந்தனர்.
அவரவர் தத்தமது இருக்கையில் அமர்ந்து பணிகளை செய்யத் துவங்கினர். நாபி-ஜூன் தன் கொரிய நண்பர்களின் வீட்டில் இருந்து நேராக அலுவலகம் வந்திருந்தாள். இவளைக் கண்டதும் கொரிய பாணியில் இடுப்பு வரை வளைந்து வணக்கம் வைக்கவும், ‘ஐயோ, இதைவேற நாமளும் பழகிக்கணும் போலையே! ஒரு நாளைக்கு எத்தனை தட குனியறது? நீ சாதாரணமா ஹாய் சொல்ல மாட்டியாடியம்மா?’ என திவ்யாவும் பதில் வணக்கம் வைக்க வேண்டியிருந்தது.
மதியம் 12 மணிக்கே உணவு இடைவேளை விடப்பட, “இப்போவே சாப்பிடணுமா? டேய் மணி பன்னெண்டு கூட ஆகலைடா” என்று புலம்பிய திவ்யாவை இழுத்துக் கொண்டு அனைவரும் அலுவலகத்தின் வெளியே வந்தனர். ஆளுக்கு ஒரு சிக்கன் பனினி ஆடர் செய்து உண்டுவிட்டு, அதே வேகத்தில் மீண்டும் அலுவலகம் திரும்பினர்.
மாலை ஐந்து மணி ஆனதும், அலுவலகம் சட்டென காலியாயிற்று. “ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருங்க. போலாம்” என்று மொழிந்த திவ்யாவை யாருமே கண்டு கொள்ளவில்லை.
“வா, வா” என இழுத்துக் கொண்டு, “இங்க பாரு திவ்யா, இது நம்ம ஊர் மாதிரி கிடையாது. இங்க அதிக நேரம் வேலை செய்ய எந்த அவசியமும் இல்லை. மேனேஜரும் அப்படியெல்லாம் எதிர்பார்க்க மாட்டாங்க. சோ, டைமுக்கு எல்லாரும் கிளம்பிடுவாங்க” என்று வருண் சொல்ல,
“ஏ, ஃபைவ் மினிட்ஸ்பா! இன்னும் கொஞ்ச நேரத்தில அந்த இஷ்ஷூவை பிக்ஸ் பண்ணிடுவேன். அப்பறம் போலாமே! வீட்டுக்கு போய் என்ன வேலை?” என்றாள் திவ்யா அங்கலாய்ப்புடன்.
“இங்க வேலை நேரத்துக்கு அதிகமா நீ வொர்க் பண்ணிட்டு இருந்தா, நீ அன்ப்ரொடக்டிவ்னு சொல்லிடுவாங்க. அதாவது, உனக்கு கொடுக்கப்பட்ட வேலைய சொன்ன நேரத்தில முடிக்க முடியாதுனால தான் நீ அதிக நேரம் வேலை பார்க்கறன்னு நினைப்பாங்க.” என்று பொறுமையாக விளக்கினான் வருண்.
“இதென்னடா நமக்கு வந்த சோதனை? வேலை பார்க்கறது ஒரு குத்தமாடா?” என்று நொந்து கொண்டே அவர்களுடன் கிளம்பினாள்.
மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பி, வீடு வந்து சேர ஆறு மணியாவிட்டது. அதற்குள்ளாகவே இவர்கள் வீதி, இருட்டிக் கொண்டு கருகும்மென காட்சியளிக்கவும் செய்ய, ‘சே, ஒரு மனுஷ பயலைக் கூட வெளிய காணோம்! எல்லா வீடும் பூட்டியிருக்க மாதிரியே இருக்கு! இதுல ஆளுங்க இருக்காங்களா இல்லையா?’ என்று மனதில் தோன்றியது.
வீடு வந்ததும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, இரவு சமையல் வேலையில் இறங்கினர் யஷ்வந்தும், வருணும். ‘பரணிக்கு பனி அள்ளறது தான் பார்ட் டைம் வேலை போல இருக்கே!’ என்று நினைத்தாள் திவ்யா, ஏனென்றால் அவனும் வந்ததும் உடை மாற்றிக் கொண்டு, அந்த நீண்ட கம்புடன் வெளியேறினான்.
திவ்யா கவனித்த வரையில், ஒவ்வொருவரும், வேலைகளை பகிர்ந்து கொண்டு மற்றவரை எதிர்பார்க்காமல் தத்தமது பணிகளைச் செய்தனர். நாபி-ஜூன் தன் உடைகளைத் துவைக்க பேஸ்மெண்டில் இருக்கும் லாண்டிரி மெசிக்கு சென்றுவிட்டாள்.
திவ்யாவிற்கு என்ன செய்வது என்று தெரியாத காரணத்தினால், லிவிங் ரூமில் சிறிது நேரம் நின்றிருந்தாள்.
“எனி ஹெல்ப் கைஸ்?” என யஷ்வந்திடம் கேட்க, “நோ! வீ காட் திஸ்!” என்று ஒரு மடக்கு ஹாட் ட்ரிங்கை உள்ளே விழுங்கி விட்டு பதிலளித்த யஷ்வந்த் சப்பாத்திக்கு மாவு பிசைய ஆரம்பித்திருக்க, வருண் யூடியூப் பார்த்து ஏதோ ஒரு தொக்கு செய்ய காய்கறி நறுக்கலானான்.
‘சரி, அந்த கோட்டான் என்ன பண்ணுதுன்னு பார்ப்போம்’ என்று பரணி என்ன செய்கிறான் என்று நோட்டம் விட வீட்டின் முன்புறம் சென்றாள் திவ்யா. வீட்டின் வாயிலில் இருந்து சாலை வரைக்கும் கொட்டிக் கிடந்த பனியை அகற்றிக் கொண்டிருந்தவன், காலடி சப்தம் கேட்டு திரும்பினான்.
“ஏ, ஏ வராத! நார்மல் ஷூ போட்டுட்டு பனியில நடந்தா வழுக்கிடும்” என்று அவன் எச்சரிக்க, “இதொன்னும் நார்மல் ஷூ இல்லை. ப்யூமா…ஆஆ!” என்று சொல்லிக் கொண்டே கால்கள் சருக்க தொப்பென கீழே விழுந்திருந்திருந்தாள் திவ்யா.
அவள் சொன்னதையும், கத்திக் கொண்டே விழுந்த வேகத்தையும் கண்டு சிரிப்பு எழுந்தாலும், கட்டுப்படுத்திக் கொண்டு அவளைத் தூக்கிவிட அருகே வந்தான். “உன் ப்யூமாஆஆவை நார்மல் ஷூன்னு சொல்லலை. ஸ்னோ ஷூஸ் இருக்கு. அதைப் போடாம நடக்க முடியாதுன்னு சொல்ல வந்தேன்” என்று அவளை கைத்தாங்கலாய் எழுப்பி, வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று சோஃபாவில் கிடத்தினான்.
“வாட் ஹேப்பண்ட்?” என்று கேட்டுக் கொண்டே அருகே வந்த நண்பர்களிடம், “ஷூ டெஸ்ட்டிங் பண்ணிட்டு இருக்காங்க” என்று பரணி சொல்லவும், அதுநேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பு திவ்யாவிற்கும் தொத்திக் கொண்டது. “பனியில சறுக்கி கீழ தொப்னு விழுந்துட்டேன்” என்று அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டு அவள் சொல்ல, சுற்றியிருந்தவர்களும் நகைத்துக் கொண்டே தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர்.
“சூடா ஏதாவது குடிக்கிறியா?” என அக்கறையாக பரணி வினவ, சம்மதமாக தலையசைத்தாள் திவ்யா. அவளுக்காக காபி கலக்கிக் கொண்டிருந்த பரணி, கிச்சனில் லாவகமாக நகர்வதை சன்னமான சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இங்கே வரும் வரையிலும் பரணியிடம் அலுவல் ரீதியாக மட்டுமே பேசி வந்தாள். அவனும் அதையே கடைபிடித்தான். இங்கேயும் கூட, அவளிடம் சிரித்து உரிமை எடுத்துக் கொண்டெல்லாம் அவன் பேசிவிடவில்லை. ‘உன் இடத்தில் யார் இருந்தாலும் இப்படித்தான் நடந்து கொள்வேன்’ என்பது போல, பேசிக் கர்டஸியுடன் நடந்து கொண்டான்.
பரணி கிச்சனில் வேலை செய்வதைப் பார்க்க ஒரு நடனம் போல இருந்தது, ஒரு கையால் அடுப்பை பற்ற வைத்து, ஒரு கையால் காபி பாத்திரத்தை ஒரு சுழற்று சுழற்றி, அதை அடுப்பில் ஏற்றி, பிரிட்ஜில் இருந்து பால் எடுத்து ஊற்றி என மெளனமான ஒரு நாட்டியத்திற்கு அபிநயம் பிடிப்பதைப் போல இருந்தது.
“ஹலோ! என்ன கண்ணை திறந்துகிட்டே தூக்கமா? காபி” என்று அவள் முன்னால் சொடக்கிட்டு அவள் கவனத்தை ஈர்த்தவன் மறவாமல், “கண்ணாடி கப்! பார்த்து” என்று சன்னமான சிரிப்புடன் கூறவும், திவ்யாவிற்கு அவன் சொல்வதன் அர்த்தம் தெளிவாகவே புரிபட்டது.
“அது…சரி” என்று ராகமாக அவள் தலையாட்டிக் கொண்டே பதில் கூறவும், அவள் தலையாட்டுவது போலவே அவனும் தலையை அசைத்துச் சிரித்தான்.
‘ஆமா ஆமா, இவன் ஒரு காபி போட்டு குடுத்ததுக்காக அப்படியே இம்பிரஸ் ஆகி, என் கண்ணாடி இதயத்தில காதல் வந்து தட்டி உடைச்சிடுமாக்கும்’ என்று சீண்டலுடன் நினைத்த போதும், அவள் மனதில் அவனைப் பற்றிய அபிப்பிராயம் நாளுக்கு நாள் வளர்வதாகவே தோன்றியது.
திரும்ப வீட்டின் வெளியே செல்ல எத்தனித்தவன், சற்று தூரம் சென்று, சற்றே பக்கவாட்டில் வளைந்து, “இப்போ நீ நினைக்கறது எல்லாமே சரி!” என்று சிரிப்பு மாறாமல் சொல்ல, எங்கே மனதில் எண்ணியதை வாய்விட்டு உளறி விட்டோமோ என்ற ஐயம்.
“என்ன?” என்று அவள் மீண்டுமாக தெளிவுபடுத்திக் கொள்ள கேட்க, “நீ இப்போ என்னைப் பத்தி மனசில நினைச்சது எல்லாமே உண்மைன்னு சொன்னேன்” என்று இயம்பியவன், முகம் கொள்ளா புன்னகையுடன் வெளியே நடந்தான். திவ்யாவின் உதட்டிலும் அவன் புன்னகையின் மிச்சம் மறவாமல் ஒட்டிக் கொண்டது.
அடுத்து வந்த வாரம் சடுதியில் இதே போன்று கழிந்திருக்க, அந்த வாரம் பொங்கல் வரவிருந்தது. “இதே இந்தியாவா இருந்தா, பொங்கல் ரிலீஸ் படம், சக்கரை பொங்கல், வடை, முக்கியமா மூணு நாள் லீவுன்னு கோலாகலமா இருக்கும்” என்று பேசிக் கொண்டனர்.
பஞ்சாபிகள் பொங்கல் தினத்தை, ‘லோகிரி’ என்றும், ஆந்திர மக்கள், “சங்கராந்தி” என்று கொண்டாடுவதால், இது அவ்வீட்டினருக்கு பொதுவான பண்டிகையாக இருந்தது. அதிலும் தலைவர் ரஜினியின், ‘பேட்ட’ ரிலீஸ் என்பதால், அனைவருக்கும் என்.ஆர். மெஜஸ்டிக் (NR.Majestic) தியேட்டரில் அந்த வார இறுதிக்கு படம் புக் செய்யலாமா என பேச்சு எழுந்தது.
“சூப்பர் சூப்பர் போலாம்” என ஆர்வமாக முதலில் துவங்கியது திவ்யா தான். நாபி-ஜூன் வழக்கம் போல, “யு கேரி ஆன். ஐம் கோயிங் ஹைகிங் வித் மை ஃப்ரெண்ட்ஸ்” என்று தன் கொரிய படையுடன் ஹைகிங் கிளம்பிவிட்டிருந்தாள்.
யஷ்வந்த், “ஐ காண்ட் அண்டர்ஸ்டேண்ட் தமிழ் மூவீஸ்” என்றுவிட, பாவமாக வருணை நோக்கினாள் திவ்யா. அவனோ, “என்.டி.ஆர். கதானாயகடு போனால் தான் சினிமாவுக்கு வருவேன்” என்று அடம்பிடித்தான்.
திவ்யா மூச்சு முட்ட முட்ட, “எங்க தலைவர் படம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தா எப்படி இருக்கும் தெரியுமா? அதெல்லாம் வேற மாதிரி ஒரு வைப்” என்று பெரும் சொற்பொழிவு நிகழ்த்திய போதும், தன் மொழிப்பற்றை காப்பாற்ற ஏதுவான தருணம் என்று கருதிய வருண் கொஞ்சமும் மசியவில்லை. ‘கதாநாயகடு பார்த்தால் தான் ஆயிற்று’ என்று அவன் தெலுங்கு தேச நண்பர்கள் சிலருடன் செல்வதாக முடிவெடுத்துவிட்டான்.
பரணியுடன் தனியே படத்திற்கு செல்லும் சூழல் உண்டாகும் என்று உணர்ந்திருந்தால் திவ்யா வாய்விட்டிருக்கவே மாட்டாள். இப்போது என்ன சொல்லி மழுப்புவது? ‘பேசாம, போங்கடான்னு கோபமா எந்திரிச்சு போகற மாதிரி போய்டலாம்.’ என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே,
“இவனுகளோட இதே ரோதனை! போன வருஷம் உன்கூட வந்து கீதா கோவிந்தம் பார்த்தேன்லடா. இங்கேம் இங்கேம்னு நீ பாட்டு பாடுனப்போ கூட சேர்ந்து கோரஸ் வாய்ஸ் குடுத்தேன்ல. சோ, நீயும் என் கூட வந்து பேட்ட கண்டிப்பா பார்க்கணும்! பேட்ட பராக்ன்னு கோஷம் போடணும்” என்று வம்படியாக சொன்னான் பரணி.
பரணியை சற்றே முறைத்தாலும், “பேட்ட பராக்” என்று வாயினுள் வருண் முணுமுணுப்பாக சொல்லிப் பார்த்துக் கொள்வது தெரிந்தது.
சனிக்கிழமை சாவகாசமாக எழுந்து குளித்து முடித்து, கீழே வரவும், அங்கே சோஃபாவில் வருண் கண்களை மூடி அமர்ந்திருக்க, அவன் முதுகை தடவிக் கொண்டு அருகே தயாராக அமர்ந்திருந்தான் பரணி. திவ்யா கீழே இறங்கி வரவும், கண்விழித்த வருண், திவ்யாவைப் பார்த்து கண்களை ஒருவாறு குறுக்கி, வயிற்றைப் பிடித்துக் கொண்டு பாத்ரூம் சிங் நோக்கி ஓட, “என்னை பார்த்து வாந்தி எடுக்கறானா?” என்று வருணை முறைத்துக் கொண்டே அவன் பின்னால் சென்றாள்.
“ஏ, அவன் உன்னைப் பார்த்து வாந்தி எடுக்கலை! நேத்து நைட் இருந்தே அவனுக்கு வாந்தி தான். மதியம் ஒரு பீஃப் சாண்விச் சாப்பிட்டான்ல அது சேரலை போல” என்று விளக்கமளித்துக் கொண்டே அவள் பின்னால் வந்து நின்றான் பரணி.
“அவன் வேணும்னே படத்துக்கு வராம இருக்க ட்ராமா பண்ணறான்.” என்று திவ்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “வ்வே” என்று மூடியிருந்த பாத்ரூமினுள் இருந்து சப்தமிட்டான் வருண்.
கண் சுற்றி கருவளையம் படந்திருக்க, முகமெல்லாம் சோர்ந்து வெளிப்பட்டவன் நடிக்கிறானோ என்ற ஐயம் ஏற்படவில்லை. ஆனாலும், ‘ஒரு வேளை, பரணியோட வேலையா இருக்குமோ? என்கூட தனியா படம் பார்க்கறதுக்காக வருணை நடிக்க சொல்லியிருப்பானோ? ஆனாலும் இவன் இவ்வளோ தத்ரூபமா நடிக்கறானே! நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலையே!’ என்று திவ்யா நினைத்துக் கொண்டே பரணியை ஏறிட,
“நோ, இப்போ நீ நினைக்கறது எல்லாம் தப்பு! ரொம்ப ரொம்ப தப்பு!” என்று அன்றைக்கு போலவே அவளின் மனம் எழுப்பிய கேள்விக்கு தானாக பதிலளித்தான். ‘இவன் என்ன குடுகுடுப்பை காரன் மாதிரி நாம மனசில நினைக்கறதை கண்டுபிடிச்சு, அதுக்கு பதில் வேற சொல்லறான்’ என்று நினைத்தவள், கண்களை குறுக்கிக் கொண்டு பரணியை ஏறிட்டாள்.
அவன் ஸ்டைலாக தோளை குலுக்கிவிட்டு, சிரிப்பு மாறாமல் வருணின் பின்னே மீண்டும் சோஃபாவை நோக்கி நடக்க, ‘பேசாம, வருணுக்கு உடம்பு முடியலைங்கறதை காரணமா வச்சு சினிமாக்கு போக வேணாம்னு சீன் போடுவோம்’ என்று திவ்யா நினைத்து முடிக்கும் முன்னர்,
“வருணை இப்படி விட்டுட்டு சினிமாக்கு போக கஷ்டமா இருக்கு. திவ்யா நீ வேணும்னா சினிமாக்கு போயிட்டு வா, நான் வருண் கூட வீட்டில இருக்கேன்” என்று கிருஷ்ணபரமாத்மாவின் ஒன்றுவிட்ட பேரன் போல அசீரியாக பேசினான் பரணி.
‘டேய் இந்த டயலாக்க நான் சொல்லணும்னு நினைக்கறதுகுள்ள நீ ஏன்டா பேசற! அப்பறம் நான் என்னத்தடா பேசித் தொலையறது? என்னையும் கொஞ்சம் பர்ஃபார்மன்ஸ் பண்ண விடேன்டா மலைமாடே’ என்று உள்ளுக்குள் சீறினாள்.
இதற்குள் வருண் சற்றே ஆசுவாசம் அடைந்திருக்க, “யூ கேரி ஆன் கைஸ்! ஐ வில் மேனேஜ். மீரு வெல்லண்டி” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டான்.
error: Content is protected !!