Skip to content
Post Views: 1,470
மறுநாள் சம்பந்தம் கலக்கும் விருந்து.
மாப்பிள்ளை வீட்டார் ஒரு பஸ் நிறைய வந்திறங்கினர். அன்று மதியம் இருவீட்டார் சேர்ந்து செய்யும் கறிவிருந்து. கல்யாணம் நடந்த அதே மண்டபத்தில் ஏற்பாடாகி இருந்தது. ஆட்டுக் கறியும் கோழி வறுவலுமாக அமர்க்களப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள வரை பந்தியில் இடம்பிடிக்க, அடித்துப் பிடித்துக் கொண்டு சாப்பிட்டது வசுமதிக்கு புதிதாக இருந்தது. தனது புது சொந்தங்களுடன் நன்றாக ஐக்கியமாகிவிட்ட மாலாவைப் பார்க்க சந்தோசமாக இருந்தது. வந்தவர்கள் எல்லாம் நன்றாக சாப்பிட்டு விட்டு, பீடாவும் ஐஸ் கிரீமுமாய் குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.
“அண்ணாச்சி.. உங்க மக கல்யாணத்தை ரொம்ப சிறப்பா நடத்திட்டீங்க. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். இந்தக் கல்யாணத்தை என்னால மறக்கவே முடியாது. ஏன்னு கேளுங்களேன்.,. எங்க மாமா, மாமா பிள்ளைங்க எல்லாரும வந்தது எனக்கு.. நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க, எனக்கு அவ்ளோ நிறைவா இருக்கு.” சுரேஷிடம் அனந்து கொண்டு இருந்தான் துரைப்பாண்டி .
“சரி, சரிப்பா சரிப்பா.. எல்லாருக்கும் சந்தோசம்தான் நீ சாப்பிட்டியா?”
“நல்லா சாப்பிட்டேன், வயிறு நிறைய சாப்பிட்டேன். வயிறும் மனசும் நிறைஞ்சு இருக்கேன்.”
தூரத்திலிருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த சரவணன், மலரிடம் சொன்னார்.
“துரைப்பாண்டி சரக்கைப் போட்டுட்டான் போல. சுரேஷ் நல்லா மாட்டிக்கிட்டான்.”
“போயி, உங்க ஃப்ரெண்டைக் காப்பாத்துங்க. அவனை வீட்டுக்குப் போயித் தூங்கச் சொல்லுங்க. எல்லாரும் வேடிக்கை பார்க்கிறமாதிரி இருக்கு.”
“நீ வேற, கம்முனு இரு. இப்ப நான் போனா.. என்னைப் பிடிச்சுக்குவான்.”
அப்போது பிரபு அங்கே போனான்.
“அத்தான், மில்லுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்களே.. எப்பப் போறது?”
“ஆஹா.. மறந்துட்டேனடா செல்லம்..”
தன் தலையில் கை வைத்தவாறு போனை எடுத்துப் பார்த்தான் துரைப்பாண்டி.
இந்த இடைவெளியில் விட்டால் போதும் என்று அங்கிருந்து கிளம்பினார் சுரேஷ்.
“இப்ப மணி என்ன.. ஒண்ணு முப்பது.. வெயில் நேரம். நாலு மணிக்கு நாம மில்லுல இருப்போம். சரியா?
நீயும் அக்கா அம்மா எல்லாம் கெளம்பி ரெடியா இருங்க. மைக்கலு காரை எடுத்துட்டு வருவான்.” என்று பிரபுவை அனுப்பிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். தூரத்திலிருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சரவணனையும் மலரையும் பார்த்ததும் தலையைக் குனிந்தபடி அமைதியாக அங்கே போனான்.
அவர்களை நெருங்காமல், பத்தடி தூரத்தில் இருந்தே பேசினான்.
“மாமா.. நாலு மணிக்கு வாரேன். கெளம்பி இருங்க.. என்ன அத்தை சரியா? பாப்பா நீயுந்தான்.”
வசுமதியை நிமிர்ந்து பார்க்காமலேயே சொன்னான்.
“நீ கிளம்பி வந்துருவியா? என்று சிரித்தபடி கேட்ட மலரைப் பார்த்துக் கூச்சத்துடன் சிரித்தான்.
“நீங்க கவலையே பட வேண்டாம். எப்படி வாரேன்னு பாருங்க..” என்ற துரைப்பாண்டி, தான் ரொம்பவும் இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
மாலையில் அவன் சொன்னவாறே இவர்களை மில்லுக்கு அழைத்துப் போக, மைக்கேல் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். வசுமதியும் பிரபுவுயும் அவனோடு காரில் போக, சரவணனும் மலரும் பின்னால் சுரேஷின் பைக்கில் வருவதாகச் சொல்லிவிட்டார்கள்.
ஊருக்கு வடக்கே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையைத் தாண்டி அமைந்திருந்தது அந்த ரைஸ் மில்.
பிரம்மாண்டமான அந்தக் கேட்டைத் தாண்டி உள்ளே சென்றதும், நெல் காயப்போடுவதற்காக அமைக்கப் பட்டிருந்த பெரிய களம்தான் வரவேற்றது, களத்தைத் தாண்டியதும் ரைஸ் மில். அதையடுத்து இரண்டு குடோன்கள். குடோன்கள் முடியும் இடத்தில் அலுவலகக் கட்டிடம் இருந்தது. அதன் மேல் மாடியில் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு தங்கும் அறை இருந்தது. இவர்களைப் பார்த்ததும் மேலிருந்து இறங்கி வந்தான் துரைப்பாண்டி. போதையின் சிறு தடயம் கூடத் தெரியாதவாறு குளித்து சுத்தமான வெள்ளை வேட்டி, சட்டையில் கம்பீரமாக இருந்தான். காரை நிறுத்திவிட்டு வந்த மைக்கேல், ஒரு குடோனுக்குள் போய்விட்டான். மாமா பிள்ளைகளுக்குத் தன் அலுவலகத்தை சுற்றிக்காட்டினான் துரைப்பாண்டி. அலுவலகத்தின் பின்னால் பலவித மரங்களும் கீரைப்பாத்திகளுடன்கூடிய ஒரு பெரிய பசுமையான தோட்டம் இருந்தது. மாலை வெயிலை விரட்டியடிக்கும் மர நிழலும், அதைத் தொடர்ந்து சிலுசிலுவென இதமாக வீசும் காற்றும் வசுமதியை மயக்கியது. ஒரு தாழ்வான மரக்கிளையில் பலகை போட்டுக் கட்டப்பட்டிருந்த சிறு ஊஞ்சல், அந்தப் பகுதியை ஒரு பெயிண்டிங்க் போலக் காட்டியது. ஊஞ்சலில் ஏறி விளையாடினான் பிரபு. தோட்டத்தின் வலது ஓரத்தில் சில லைன் வீடுகள் இருந்தன. அது அங்கு வேலை பார்க்கும் குடும்பங்களுக்கானது போல. அந்தச் சதுரமான தோட்டத்தின் காம்பௌவுண்ட் சுவர்களுக்குப் பின்னால் பரந்து விரிந்திருந்த வயல்வெளிகள் தெரிந்தன. அதுவும் துரைப்பாண்டி குடும்பத்துக்குச் சொந்தமானதுதானாம்.
“என்ன பாப்பா எங்க ஊர் ஒனக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டான் துரைப்பாண்டி.
“அதென்ன ஒங்க ஊர்? எங்களுக்கும் இந்த ஊருதானே? எங்கப்பா என்ன வேற ஊர்க்காரங்களா?”
வசுமதியின் இந்த எதிர்க் கேள்விக்கு பின்புறம் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டது.
திரும்பிப் பார்த்தாள் வசுமதி. அவளை விடவும் நான்கைந்து வயது மூத்தவள் போல் தோன்றிய ஒரு பெண் கையில் காபிக் கோப்பைகள் அடங்கிய தட்டுடன் வந்து கொண்டிருந்தாள். சற்று கருப்பாக இருந்தாலும் அழகாக இருந்தாள். அவளது சிரிப்பில் ஒரு வசீகரம் இருந்தது.
“இப்ப என்னத்துக்கு இப்பிடி பல்லக் காட்டுறே? கூமுட்டை!” என்று அவளைப் பார்த்து முறைத்தான் துரைப்பாண்டி. அவனின் அதட்டலில் தலையைக் குனிந்து கொண்டவள், தான் கொண்டு வந்த தட்டை அங்கே இருந்த மர பெஞ்சில் வைத்துவிட்டு அமைதியாகத் திரும்பிப் போனாள். துரைப்பாண்டியின் குரலில் இருந்த உஷ்ணமும் அந்தப் பெண்ணின் அமைதியும் வசுமதியை என்னவோ செய்தது.
“இது யாரு தெரியுமா.. மரியா. எஸ்தரோட மக. இவ தம்பிதான் மைக்கலு. படிச்ச புள்ளைதான். நம்மூர்லதான் படிச்சா, பதினொண்ணு படிக்கும்போது அவ அப்பா இறந்துட்டாபல. அதுக்கப்புறம் இங்கயே அவுங்க அம்மாகூட வேலைக்கு ஒத்தாசையா இருக்கா. தலைமுறை தலைமுறையா நம்மளை அண்டி இருக்குறவங்கதான்.”
மரியா போனபிறகு அவளை அறிமுகப்படுத்திய விதம் வசுமதிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. நியாயப்படி பார்த்தால் ‘இவன்தான் கூமுட்டை’ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள்.
“சீக்கிரமா கல்யாணம் முடிங்க அத்தான். எனக்கு ரமணியம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.” என்றாள். அவள் கல்யாணம் என்றதும் அவன் அனிச்சையாக மரியா சென்ற திசையை பார்த்ததும், வசுமதிக்கு எதுவோ புரிவது போலிருந்தது. பிரபுவுக்கு கொஞ்ச நேரத்திலேயே போரடிக்கத் தொடங்கிவிட்டது. தனது போனை எடுத்தபடி,
“அக்கா போட்டோ ஷூட் எடுக்கலாம்.” என்றான் பிரபு என்றான். “ம்ம் சூப்பர்!” என்ற வசுமதி போஸ் கொடுக்கத் தயாரானாள். அக்காவும் தம்பியும் அங்கிருந்த மரங்களிடையே அமர்ந்தும், பெஞ்சிலும் ஊஞ்சலிலும் அமர்ந்து மாறி மாறி போட்டோக்களும் எடுத்துக் செல்பியும் எடுத்துக் கொண்டார்கள் அதைப் பார்த்து துரைப்பாண்டியும் தனது செல்போனை எடுத்து தானும் அவர்களுடன் வித விதமாக செல்பி எடுத்துக் கொண்டான்.
****
இரண்டு நாட்களாக கண்ணில் படாத மாரிமுத்து, அந்த இரவில் சரவணனைத் தேடி சுரேஷின் வீட்டுக்கே வந்துவிட்டார்.
“சுத்தி முத்தி நாலு கல்யாண வீடு பார்த்துக்க.. என் வீட்டுக்காரி அசைய மாட்டேன்னுட்டா. ஒரே அலைச்சல்..ஃப்ரீயா உக்கார்ந்து பேசக்கூட முடுயலை.” என்றபடி பேச்சை ஆரம்பித்தார்.
“சுரேஷ்.. உன் மக கல்யாணத்தை அமர்க்களமா நடத்தி முடிச்சிட்டய்யா. இனிமே என்ன, பையன்தான்… பெருஷா டென்சனாகத் தேவையில்லை.” என்றபடி சரவணனைப் பார்த்தார்.
“நீ சொல்லு சரவணா. உன் அக்கா மவனைப் பத்தி நீ என்ன நெனைக்கிற?”
மாரிமுத்துவின் இந்தக் கேள்வி சரவணனுக்கு வித்தியாசமாக இருந்தது. தனக்கு வலப்புறத்தில் உட்கார்ந்திருந்த சுரேஷை ஒருமுறை பார்த்துக்கொண்டார். பிரபாவும் மலரும் உள்ளே சமையலறையில் இருந்தாலும், ஹாலில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதில்தான் கவனத்தை வைத்திருந்தனர்,
“யாரு துரைப்பாண்டியா.. அவனுக்கென்ன.. பார்க்க முரடனா இருந்தாலும் நல்ல பயதான்.”
“எனக்கு ஒரு யோசனை.. எனக்கு மட்டுமில்ல, உம் மச்சானுக்கும்தான்..” என்றபடி இழுத்தார் மாரிமுத்து.
“என்னண்ணாச்சி.. சொல்லுங்க.”
“அது என்னன்னா.. உன் அக்கா வீட்ல உன் மவதான் விளக்கேத்தி வைக்கணும்னு வாத்தியார் பிரியப்படுதாரு.” பட்டென்று சொல்லிவிட்டு சரவணனின் முகத்தைப் பார்த்தார்.
மாரிமுத்து சொன்ன வாக்கியத்தின் தீவிரத்தை உணர சரவணனுக்கு சில வினாடிகள் பிடித்தது.
“என்ன அண்ணாச்சி பேசுறீங்க,, தெரிஞ்சுதான் பேசுறீங்களா? இவன் வயசு என்ன, அவ வயசு என்ன?”
நல்லவேளை வசுமதி அந்த நேரத்தில் அங்கு இல்லாதது அவருக்கு ஆறுதலாக இருந்தது. அவள் மாடியில் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தாள்.
“அவனுக்கு முப்பத்தியஞ்சு வயசாம். அதெல்லாம் பெரிய வயசாப்பா? உன் மகளுக்கு எப்பட்யும் இருபத்தஞ்சுக்கு மேல இருக்கும்ல?”
“இருபத்திரெண்டுதான் ஆகுது. அவர் சின்னப்புள்ள அண்ணாச்சி.”
“சரி அவளுக்கும் இப்ப மாப்பிள்ளை பார்த்துட்டுத்தானே இருக்கீங்க, அவரும் அவனுக்கு பொண்ணு பாத்துட்டுத் தான் இருக்காரு. ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல வச்சுக்கிட்டு எதுக்கு எங்கேயோ போய் தேடணும்? என்ன சுரேஷ், நான் சொல்றது சரிதானே?”
“இதுல சரி தப்புன்னு நாம சொல்றதுல என்ன இருக்குண்ணே? பொண்ணு குடுக்குறவங்க எதையும் யோசிக்காமல் சட்டுன்னு செய்துர முடியுமா?”
“அதுவும் சரிதான் இப்ப என்ன.. ஊருக்குப் போய் நல்லா யோசிச்சு, குடும்பத்துல கலந்துக்கிட்டு நல்ல முடிவா சொல்லுங்க அவ்ளோதானே.”
“இதுல யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு அண்ணாச்சி அதெல்லாம் சரிப்படாது, நீங்க பாட்டுக்கு அவர்கிட்ட எதையாச்சும் சொல்லி வைக்காதீங்க.”
“என்னப்பா இப்படி சடக்குனு சொல்ற? அவங்களுக்கு என்ன சொத்து சுகம் இல்லையா, காடு வரை இல்லையா எதுல குறைச்சல்? கடல் மாதிரி வீடு இருக்கு. இல்ல.. டவுன்லதான் உன் பொண்ணு இருக்கனும்னாலும் வாத்தியாரு அங்கேயும் வீடு வாங்கிக் கொடுக்கத் தயாராக இருக்காரு. ஒரே பொண்ணு வசதியான இடத்துல கட்டிக் கொடுக்குறதுதானே உனக்கும் கௌரவம்…என்ன தாயி நான் சொல்றது?”
என்றபடி மலர் இருக்கும் திசையை பார்த்தார் மாரிமுத்து. மய்யமாக சிரித்தபடி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள் மலர். பிரபா எல்லோருக்கும் தேநீர் போட்டு கொண்டு வந்தாள். சரியாக அதே நேரம் வசுமதியும் மாடியில் இருந்து இறங்கி வர, அந்த பேச்சை அத்தோடு நிறுத்தினார்கள்.
“சரி சரவணா அவசரப்படாம நல்லா யோசிச்சு, நல்ல முடிவா சொல்லுங்க. ஆமா.. என்னைக்கு கிளம்புறீங்க?”
“நாளைக்கு நைட்டு கிளம்புறோம் அண்ணாச்சி. பொதிகையில டிக்கெட் போட்ருக்கு.”
“நல்லது, நல்லபடியா கிளம்புங்க. அப்புறம் போனல பேசிக்கிடலாம்.” என்ற மாரிமுத்து, டீயைக் குடித்துவிட்டு சொல்லிக் கொண்டு கிளம்பினார்.
மலருக்கு இந்தப் பேச்சு வார்த்தை அதிர்ச்சியையோ, கோபத்தையோ தரவில்லை. அவள் பார்த்தவரைக்கும் துரைப்பாண்டி நல்லவனாகத்தான் தெரிந்தான். ஆனால் சரவணனுக்கு இதில் துளியும் விருப்பமில்லை என்று தெரிந்துவிட்டது. அது தொடர்பாக மேற்கொண்டு எதுவும் சரவணன் பேசவில்லை.
“என்ன அண்ணி, கிளியை வளர்த்து பூனை கையில கொடுக்குறமாதிரி போயும் போயும் அவனுக்கா பொண்ணு கொடுக்கணும்?” என்ற ஒரே கேள்வியில் தன் அதிருப்தியை சொல்லிவிட்டாள் பிரபா.
சென்னைக்குப் போனதும் பேசிக்கொள்ளலாம் என்று மலரும் அமைதியாக இருந்துவிட்டாள்.
*****
error: Content is protected !!