Skip to content
Post Views: 2,511
வேளை 19
உதயா லாலாவை விரும்பி திருமணம் செய்துகொண்டவள்தான். ஆனாலும், இன்று அவள் கணவனாக நிற்பவனைத்தான் அவள் காதலித்தாளா என்று கேட்டால் தெரியவில்லை. அவள் காதலித்தவன் கணவனாகிவிட்ட பின் இப்படி நடக்கிறானோ என்ற கவலை மனத்தை அரித்தது.
அவளறிந்த லாலா சில நேரம் சுடுசொல் பேசிவிடுவான். பெரிதாக மனத்தில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டான். ஊரில் கூட அம்மாவிடம் அவளை விட்டுத்தரவில்லை, அதற்காக தனிமையில் இருக்கையில் மனைவியை மதிக்காமல் இருந்தால் தகுமா? பொதுவில் போற்றி மறைவில் தூற்றினால் மனம் வருந்தாதா? பொதுவில் தூற்றி மறைவில் போற்றுதலைப் போல இதுவும் தவறுதானே?
Advertisement
ஏனோ அடக்கமுடியாத அழுகை உதயாவிற்கு. காலை முதலே தனியாக இருந்தவளுக்கு அவன் வருகை அத்தனை குளிர்வையும் இனிமையையும் கொடுத்திருந்தது. அவன் வீட்டில் இருக்கும் நிமிடங்கள் எல்லாம் அவளுக்கு அத்தனை நிம்மதியும் நிறைவும்.
Advertisement
வீட்டில் இருந்தாலும் லாலா அவளோடு எந்த நேரமும் பேசிக்கொண்டெல்லாம் இருக்கமாட்டான். அவனுக்குப் படிப்பதற்கு நித்தமும் பாடங்கள் மலையை விட பெரிதாக குவிந்து கொண்டே இருக்கும் என்பதால் கிடைக்கும் நேரமெல்லாம் புத்தகத்திற்குள் தன்னை தொலைத்திடுவான்.
Advertisement
ஒன்று அவன் வகுப்பெடுப்பான், இல்லை வகுப்புகளை கவனிப்பான். இப்படியாக அவனின் நடமாட்டமும் அண்மையும் மட்டுமே வீட்டிலிருந்தாலும் அதிலே நிறைந்துவிடுவாள் உதயா.
Advertisement
அவன் மனம் நோகக் கூடாதென்று ஒவ்வொன்றுக்கும் பார்த்து பார்த்து செய்தவள் மனம் மீண்டும் பதிலுக்கு அப்படியொரு அன்பினை எதிர்ப்பார்க்கத் தொடங்கியது.
எதிர்ப்பார்ப்போடு ஏமாற்றமும் அங்கே தொடங்கியது. அவனை சிறு விஷயத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது, கஷ்டப்படுத்திவிடக்கூடாது என்று கவனித்து நடப்பவளின் மனம், அவன் சிறிதாக பேசிவிட்டாலும் ஊமையாக அழத்தொடங்கியது.
என் வெற்றிகள் எதுவும் இவனுக்கு உவப்பாக இல்லையா? இல்லை நானே உவப்பின்றி போனேனா? என்ற குழப்பம் அவளை ஆட்டுவித்தது.
லாலாவின் எண்ணமோ விசித்திர வித்தியாசமாக இருந்தது.
‘அவ செஞ்சதை சொன்னதும் கோவம் வந்துடுச்சு. எனக்கு மனசு கஷ்டமா இருக்காதா? எனக்கும் அவளுக்கு செய்யணும்னு ஆசை இருக்காதா?’ என்று யோசித்தவன் அதை அவளிடம் பொறுமையாக சொல்லியிருக்கலாம்.
எங்கே பரீட்சையைக் கண்டால் காய்ச்சல் விழும் மாணவர்கள் போல அவனுக்குக் குழந்தை, குடும்பம் என்றால் பகீரென்றானது. அதனால் முன்கூட்டியே ரெட் அலெர்ட் போட்டு பேசிவிட, அது வலுகூட்டிய புயலாக மாறி அவனை வலுவிழக்க செய்துவிட்டது.
‘என்னைப் புரிஞ்சிக்கல, பெருசா லவ்வுனு வந்துடுவா’ என்று புகைந்துகொண்டிருந்தான்.
பின்னே அவனுக்கு முன் கோபப்பட்டு அவள் வேறு அறைக்குச் சென்றுவிட்டாளே.
‘நியாயமா நாந்தான் கோச்சுகிட்டுப் போகணும். போனா போடி’ என்று வெம்பி வெம்பி ஒருகட்டத்தில் உறங்கியும் போனான்.
அடுத்த நாள் காலையில் உதயா எழும்போதே தலை பாரமாக இருந்தது. நேற்று வெகு நேரம் அழுது எப்போது உறங்கினாள் என்றே தெரியவில்லை. ஆறு மணிக்கு அலாரம் சத்தம் போட்டாலும் சோர்வாக இருக்கவும் சிறிது நேரம் உறங்கி எழுவோம் என்று நினைத்து தூங்கினாள்.
மீண்டும் உதயா எழும்போது மணி பத்து. லாலாவுக்குஅடுத்தடுத்து வரப்போகும் பரீட்சைகள் அவனுக்கு முக்கியமாகப்பட்டன.
வேலை வரும் வேளை எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தான். வீட்டிலிருந்து அவளை கோபப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவனுக்கு, அவளை சமாதானம் செய்யும் எண்ணமுமில்லை. இப்படி கோபம் காட்டினால்தான் அவனின் எண்ணவோட்டம் புரியும் என்று கணக்குப் போட்டான்.
ஆகையால் எழுந்தவன் குளித்து தயாராகி அவர்கள் அகாடமியில் இருக்கும் ஸ்டடி ஹால் சென்றுவிட்டான். அகாடமி மூடியிருந்தாலும் அந்த கூடம் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக எப்போதும் திறந்திருக்கும். மாங்கு மாங்கென்று இரண்டு மாக் டெஸ்டுகளை முடித்துவிட்டு நிமிர்ந்தபோது மணி இரண்டு. காலையில் கடையில் டீயும் பன்னும் சாப்பிட்டது. வீட்டிற்குச் சென்றால் உணவிருக்குமா என்ற கவலை.
உதயா செய்திருந்தால் வீணாகப்போகுமே என்றும் தோன்ற, அவளுக்கு அழைத்தான்.
கண்களில் கண்ணீர் வற்றிப்போக அலைப்பேசியை வெறித்துக்கொண்டிருந்தாள் உதயா. உதயா தைரியமான பெண், தனக்கானதை தானே பார்த்துக்கொள்ளும் திறமையானவள், அனாவசியப் பேச்சுகள், வம்புகள் எதுவும் அவளுக்குப் பிடித்தமில்லை. அவளின் ஒரே ஒரு ஆவல் அன்பின் சுவடுகளில் தன்னோடு காற்பதித்து நடக்க ஒரு துணை.
தன்னை அத்தனைப் பேசியவன் இன்று விடுமுறை என்றவன் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ கிளம்பி சென்றிருக்கிறான். அதுவும் அவளைப் பற்றிய அக்கறையின்றி.
உதயா பத்தரைக்கு கூடத்திற்கு வந்தவள் பசியெடுத்தது. ஏனோ சிறு வயது நினைவுகள் அவளை குத்திக் கிழித்தன. பள்ளியிலிருந்து வந்த பின் வீட்டில் உண்ண ஒன்றுமே இருக்காது, அம்மா வந்து சமைத்துத் தரும்வரை பட்டினியிருப்பாள். பிஸ்கட்டும் தண்ணியும் மட்டுமே ஆகாரம்.
கொஞ்சம் வளர்ந்தபின்னே அவள் சமைக்கத் தொடங்கி தன் பசியைத் தீர்த்துக் கொண்டாள். அதில் கூட அம்மாவிற்குக் கஷ்டம் தரக்கூடாதென்று அவருக்கும் சேர்த்து செய்வாள்.
அம்மாவின் கஷ்டம் உணர்ந்து அது வேண்டும் இது வேண்டும் என்று எதற்கும் ஆசைப்பட்டதில்லை. ஆசைகள்!
அவள் அப்பாவின் மறைவோடு கலைந்து போயின. அதன்பின் வேலைக்குச் சென்று தனக்கென ஒரு சம்பாத்யம் வந்தபின் தீடீர் தூவல் போல ஒரு காதல். அவள் வேலையிடம், வெளியிடம் என்று ஆண்களைப் பார்த்தவளுக்கு லாலா வித்தியாசமாக தெரிந்தான்.
முரடன் இல்லை, அடக்கி ஆளும் ஆண்மகன் இல்லை. இயல்பாக இனியவனாக இருந்தான்.
அதனாலயே உமாவும் மகள் விரும்புகிறாள் என்று தெரிந்து மறுப்பு சொல்லாமல் திருமணம் பேச நினைத்தார். இப்போது லாலாவைப் பற்றி அம்மாவிடம் கூட அவளால் குறையாக சொல்ல முடியாது. யாரிடமும் சொல்ல மாட்டாள். அந்த துக்கமும் சேர்ந்து ஒரு இறுக்கத்தைக் கொடுக்க, தண்ணீர் மட்டுமே காலை வேளை பருகியவளுக்கு வாந்தி வந்தது.
இரவெல்லாம் சரியான உறக்கமில்லை, அழுகை, உண்ணாதது என்று எல்லாம் சேர அவளுக்கு முடியவில்லை.
மீண்டும் சோர்வாக உணர்ந்தவள் ஃப்ரிட்ஜில் இருந்த சாக்லெட் இரண்டை சாப்பிட்டுவிட்டு மீண்டும் படுக்கையில் சரிந்தாள். ஒன்றரை மணிக்கு எழும்போது கொஞ்சம் தெம்பாக உணர்ந்தாள்.
உடனே சோறு வைத்தவள் கொஞ்சமாக ரசம் வைத்தாள். ஊறுகாய் இருக்க அது போதும் அவளுக்கு.
லாலா விடாமல் ஐந்து முறை அழைக்கவும், கட் செய்தவள்,
“என்ன?” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“இல்லை, நீ சாப்பிட்டியா? சாப்பிட வாங்கிட்டு வரவா?” என்று லாலாவும் குறுஞ்செய்தியில் கேட்க,
“சமைச்சுட்டேன். எனக்கு வேண்டாம்” என்றாள்.
‘என்ன இவ எனக்கு இருக்கான்னு சொல்லல, வெட்கத்தை விட்டு கேட்டுடுறடா லாலா’ என்றவன்,
“நானும் சாப்பிடல, எனக்கு இருக்கா?” என்று கேட்டு வைக்க,
“இருக்கு” என்றதோடு பேச்சை நிறுத்தினாள்.
‘பரவாயில்லை. சோறு இருக்கு’ என்று சந்தோஷத்தோடு வீடு வந்தவனுக்கு உதயாவின் முகம் பார்த்தே அவளுக்கு முடியவில்லை என்று தெரிந்தது.
“என்னாச்சு உதயா?” என்று அவன் பதற, உதயாவோ,
“ரசம், ஊறுகாய் இருக்கு” என்றவள் அவளுக்கு வேண்டியதைப் போட்டுக்கொண்டு அமைதியாக உண்ண உட்கார்ந்தாள்.
‘ரசமா?’ என்று ஒரு மனம் அதிர்ந்தாலும்,
“அவளே முடியாம செஞ்சிருக்கா, மூடிட்டு தின்னுடனும்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன் அமைதியாக உணவை எடுத்துவந்து அவள் அருகே உட்கார்ந்து உண்டான்.
உதயா ஒருவார்த்தை பேசவில்லை. லாலாவுக்கு அந்த அமைதி அச்சுறுத்தலாக இருந்தது. ஏற்கெனவே சென்னையின் வெயில் அவனை வாட்டியிருக்க, உதயாவின் பேசா நிலை இன்னும் புரட்டியது.
‘சாப்பிடும்போது நோ சமாதானம், சாப்பிடுறதுதான் முதல்ல சமாதானம்’ என்று முடிவெடுத்தவன் உண்டு முடித்து பொறுப்பாக எல்லா பாத்திரங்களையும் கழுவிப்போட்டான்.
உதயா அறையில் இருந்தாள். லாலா வேலையை முடித்துவிட்டு அவளிடம் போய் நின்றான்.
“உதயா….” என்று மெல்ல அழைக்க, அவள் பதில் பேசவில்லை.
“உதிம்மா, என்ன செய்யுது உனக்கு? டாக்டர்ட்ட போவோமா?” என்று கேட்க, அதற்கும் பதில் இல்லை.
“சுதந்திரவிலாசத்துக்காரன்ட்டயே போராட்டமா?” என்று முணுமுணுத்தவன்,
“இங்க பாரு நீயும் பேசின, நானும் பேசினேன். காலையில படிக்கலாம்னு ஸ்டடி ஹால் போனேன். டெஸ்ட் போட்டதுல டைம் போனதே தெரியல. இல்லைன்னா முன்னாடியே வந்திருப்பேன்” என்று லாலா சொல்ல, உதயா அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை.
“உதயா” என்று அவன் மீண்டும் அழைக்க, மெல்லிய குரலில்,
“எனக்கு உங்ககிட்ட இப்போ பேச பிடிக்கல, முடியல. ஸோ என்னை தொந்தரவு பண்ணாதீங்க. ஓகே?” என்று அழுத்தமாகக் கேட்க,
சரி அவள் சொல்வதை செய்வோம் என்று பெரிய மனிதனாக, “ஓகே, நீ நல்லாகிட்டு பேசு. நான் தொந்தரவு பண்ணல” என்று சொல்லி வெளியே வந்தவனுக்கு என்னமோ தான் ஒரு ஜென்டில்மேன் என்ற எண்ணம்.
அதெல்லாம் மூன்றே நாட்களில் புஸ்ஸென்றானது. உதயா அடுத்து வந்த நாட்கள் எல்லாம் முடிந்தபோது சமைத்தாள். அலுவலகம் செல்ல வேண்டிய நாட்களில் சென்றாள். கணவன் மனைவி என்ற நிலை மாறி ஒரே வீட்டில் இருக்கும் ‘ஹவுஸ்மேட்ஸ்’ போல லாலாவே உணர்ந்துதான் அதிசயம்.
உதயாவின் ஒரு பார்வைக்கு ஏங்கிப்போனான். உணவில் குறைவில்லை, முடியும்போது செய்வாள். இல்லை நோட்ஸ் எழுதியோ குறுஞ்செய்தியிலோ சொல்லிவிடுவாள். அவள் குரலும் ஒற்றைப் பார்வையும் அவனுக்குக் கிடைக்கவில்லை. உதயாவின் ஒத்துழையாமைப் போராட்டாம் லாலாவுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
‘இந்த காந்தி கத்தியிருந்தா கூட வெள்ளக்காரன் வாய்ல சுட்டுருப்பான். அமைதியா போனதால காண்டாகி சுதந்திரம் கொடுத்திருக்கான். லாலா உனக்குள்ள ஊருறது சுதந்திர விலாசம் ப்ளட். இதுக்கெல்லாம் அசரக் கூடாது’ என்று நான்கு நாள் பொறுத்தவன் ஐந்தாம் நாள் உதயாவிடம் சென்று பேச, அவள் அப்போதும் மதிக்கவில்லை.
“இருந்தாலும் உனக்கு இவ்வளவு கோவம் ஆகாதுடி”
“இப்போ நான் என்ன செஞ்சா நீ என்னோட பேசுவ?”
“ப்ச், உதயா. நீ இப்படி செஞ்சா என்னால கான்சன்ட்ரேட் பண்ணி படிக்க முடியல” என்று சொல்ல, அதுவரை வெறுமையான பார்வை கொடுத்தவள் அவனை விடாது பார்த்தாள்.
“அப்படி உங்களுக்குத் தொந்தரவா இருந்தா நான் ஹாஸ்டல் போயிடவா?” என்று அவள் குறுஞ்செய்தி அனுப்ப லாலா வெகுண்டான்.
“நீ ஏன் ஹாஸ்டல் போற, நான் எங்காச்சும் போறேன். போடி” என்று கத்தியவன் சுவரில் குத்தப்போன கையை சுதாரிப்பாக டக்கென்று எடுத்துவிட்டான்.
‘கை உடைஞ்சா அதுக்கு வேற வைத்தியம் பார்க்கணும்’ என்று நொந்தவனுக்கு நண்பனைத் தவிர வேறார் ஆறுதல்.
எல்லாவற்றையும் சக்தியிடம் பகிர, அவனுக்கு அவ்வளவு கோபம்.
“நான் கூட இங்க இருந்தப்போ உங்கம்மாதான் பிரச்சனைனு நினைச்சேன் டா லாலா. இப்போதான் தெரியுது உண்மையான பிரச்சனையே நீதான்” என்று சக்தி பட்டென்று சொல்லிவிட,
“என்ன? என்னையா பிரச்சனை சொல்ற? நான் பிரச்சனையா?” என்று லாலா மீண்டும் மீண்டும் கேட்க,
“டேய் வெண்ண, எப்படி மாத்திக் கேட்டாலும் என் பதில் ஒன்னுதான்” என்றான் அழுத்தமாக.
“நீ கூட எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டேங்கிற இல்ல” என்று சிறுபிள்ளை போல அவன் குறை சொல்ல,
“அறிவிக்கெட்ட பரதேசி பயலே! உனக்கு நான் இப்போ சப்போர்ட் பண்ணினா நான் நல்ல ப்ரண்டா இருப்பேன் பண்ணலன்னா நீ நல்லா இருப்ப. எனக்கு நீ நல்லா இருக்கணும்” என்று சக்தி பொறுமையாக சொல்ல,
“அப்ப எனக்கு உதயாவை சமாதானம் செய்ய ஐடியா சொல்லு. இல்லை நீ உன் தங்கச்சிகிட்ட சொல்லு” என்று அவனை சிபாரிசுக்கு அழைக்க,
“நான் வெளியே வந்திருக்கேன். கத்தி கூட உன்னைத் திட்ட முடியாம இருக்கேன் டா லாலா. உதயா என் கூடப்பொறந்த தங்கச்சியாவே இருந்தாலும் உங்களுக்குள்ள நடந்த சண்டைக்கு நான் நாட்டாமை பண்ண கூடாது! முதல்ல இப்படி புலம்புறதை நிறுத்து. உங்க விஷயத்தை ப்ரண்டா இருந்தாலும் எங்கிட்ட சொல்லக் கூடாது”
“ஓஹ்.. அப்போ கல்யாணம் ஆச்சுன்னா ப்ரண்ட்ஷிப்லாம் மூழ்கிடணுமா?” என்று அதற்கும் லாலா சீற,
“ப்ரண்ட்கிட்ட எல்லாம் சொல்லணும்னு அவசியமில்லை. ப்ரைவசினு ஒன்னு இருக்கு, கட்டின பொண்டாட்டிப் பத்தி யார்கிட்டயும் குறை சொல்லாம இருக்கவன் தான் நல்ல புருஷன். இப்போ தாங்கவே முடியாத கொடுமை செஞ்சா வெளியே சொல்லி ஆறுதலோ உதவியோ கேட்கலாம். இதெல்லாம் சின்ன சின்ன சண்டை. நீங்களே தீர்த்துக்கணும்”
“முடியலன்னுதானே உங்கிட்ட வந்தேன்” லாலாவுக்குச் சக்தி பேசியது சுருக்கென்று இருக்கவும் சுருதி குறைந்தது.
“என்ன செஞ்சு கிழிச்சீங்கனு முடியல சொல்ற? நாலஞ்சு நாள் அந்த புள்ள பேசலன்னு கம்முனு இருந்துட்டு ஒரே நாள் போய் கெஞ்சிட்டு பேசலன்னு சொல்ற? முதல் நாளே இதை செய்ய வேண்டிதானே டா?”
“அப்போ அவ கோவமா இருந்தா, சரி டைம் கேக்கிறான்னு கொடுத்தேன்”
லாலா சொல்வது நியாயமாக இருந்தாலும்,
“டைம் கொடுக்கணும், ஒரு மணி நேரம் இல்லை ரெண்டு மணி நேரம். ஒரு நாள் தாண்டுற அளவு கொடுத்தா அவ பேசலன்னா கூட உனக்கு ஒன்னுமில்லனு உதயாவுக்குத் தோணியிருக்கும். அப்படிப்பட்ட உங்கிட்ட ஏன் பேசணும்னு பேசாம இருக்கும்” என்றான் சக்திவேல்.
“மச்சான்! அப்படியா சொல்ற?” என்று லாலா ஆச்சரியப்பட்டவன்,
“இதெல்லாம் எங்க இருந்து மச்சான் கத்துக்கிட்ட?” என்று வேறு கேட்டான்.
“எங்கேயும் கத்துக்கல. உங்க குடும்பத்துலதான் இந்த அறிவுன்னு ஒன்னே இல்லையே, அதான் உனக்குத் தெரியல”
“மிஸ்டர். சக்தி! என் தங்கச்சி சரோஜினியைத்தான் நீங்க கட்டியிருக்கீங்க” லாலா நினைவூட்ட,
“அவங்க என் பொண்டாட்டி மிஸ்டர். லாலா” என்று சிரித்த சக்தி,
“முதல்ல உதயாவா வந்து பேசணும்னு நினைக்கிறதை விடுடா. கொஞ்சம் அன்பா, பொறுமையா பேசு. எல்லாம் சரியாகிடும்”
“தேங்க்ஸ்டா மச்சான். உங்கிட்ட பேசின அப்புறம்தான் எனக்கு ஓகே. சரியானதும் சொல்றேன்” என்றதும் சக்தி தலையில் அடித்துகொண்டான்.
“சரியான உடனே போஸ்டர் அடிச்சிடுடா. எரும மாடே! அதெல்லாம் சொல்ல வேண்டாம். எங்கிட்ட பேசினனு கூட உதயாகிட்ட சொல்லாத, அப்புறம் ஃபீல் பண்ணும். புரிஞ்சதா?” என்று அழுத்தமாக சக்தி கேட்க, லாலாவும் சரியென்றான்.
அவனுக்குப் புரிந்ததா இல்லையா என்ற கவலை சக்திக்கு.
error: Content is protected !!