Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

47. Ashoka - உன்னாலே உனதாகிறேன்

11 அசோகாவின் உன்னாலே உனதாகிறேன் !

உன்னாலே உனதாகிறேன்! 11

பூவினி கையில் சிறு கிண்ணத்தோடு புது வீட்டிலிருந்து ஏதோ பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தாள். வெளி வாசலில் அமர்ந்திருந்த வள்ளியம்மாளை பார்த்ததும் அவள் அமைதியாகிப் போனாள்.



Advertisement

“என்னத்தா என்னமோ சொல்லிக்கினே வந்த? யாருகிட்ட பேசுன?”

“இல்ல யாருட்டையும் பேசல ஆயா.” என்றவள் உள்ளே நுழைய, “என்னத்தா மகிழே வரல. அவனுக்கு சோறு ஊட்டுனியா?” என்றார் வள்ளியம்மாள்.

Advertisement

Advertisement

“அத்த பருப்பு சோறு குடுத்துட்டாக. நான் கொண்டுபோன ரசம் சோறு வேண்டானுட்டாக.”

“சரி விடு. அவதே தெனமும் அவளே குடுக்குறாளே நீ என்னத்துக்கு கையளவ தூக்கிட்டு ஓடுற?”

Advertisement

                                               

“ம்ம்”

“போட்டிக்கு செய்யிறான்னாலும் அவளுக்கும் பேரன்தானே. நீ கண்டதையும் நினைக்காம போயி சாப்புடு.”

“ம்ம்” என்றவள் அவர் சாப்பிட்டாரா என்று கூடக் கேட்கத் தோன்றாமல் அவளின் அறைக்கு வந்துவிட்டாள்.

ஏதோ ஒரு தீராத கோவம் வெறுப்பு. யார் மேல் என்றெல்லாம் பிரித்தறிய முடியாத கோவம். வாழ்வின் எல்லாத் திசையிலும் வெறுப்பே விரவிக் கிடந்தது.

கட்டிலில் அமர்ந்து சிறிது நேரம் நீண்ட மூச்சுக்களை விட்டுத் தன்னை நிதானம் செய்ய நினைத்தாலும் அவளால் முடியவில்லை.

இந்த வீட்டுக்கு வந்து மாதம் ஒன்றைக் கடந்த பின்னும் தன்னைச் சுற்றி எரியும் நெருப்பு போல இந்த வாழ்வே அவளுக்குத் தகித்தது.

“ஏத்தா, சாப்புடல. என்ன செய்யிற?” கேட்டபடி வள்ளியம்மாள் வரவும் தன் சிந்தனைகளை ஒதுக்கி, “இந்தா வந்துட்டேன் ஆயா.” எனச் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தாள்.

“சாப்புட வா, நா எடுத்து வைக்கிறேன். நீ உங்க அய்யன ஒரு எட்டு வர சொல்லிட்டு வா.”

“சரி ஆயா.”

பூவினி சென்று முருகய்யாவையும் அழைத்து வர அனைவரும் சேர்ந்து அமர்ந்து மதிய உணவு உண்டனர்.

ஏனோ பூவினிக்கு உணவு தொண்டையை அடைக்கும் உணர்வு. என்ன செய்தும் தட்டில் இருக்கும் உணவை முடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அப்படியே எழுந்து செல்லவும் முடியாது.

தட்டை விரலால் அளந்தபடியே இருந்தவள் அவர்கள் உண்டு முடிக்கவும் இவளும் எழுந்து கொண்டாள்.

முருகய்யா ‘என்னதிது’ என வள்ளியம்மாளைப் பார்க்க அவரோ ‘விடுங்க விடுங்க.” எனக் கண்ணால் சைகை செய்ய அவரும் எழுந்து சென்றுவிட்டார்.

“என்னத்தா, போதுமா? சரி போ. கொண்டேயி தட்ட வச்சுட்டு போயி செத்த படுத்து எந்திரி. மொகமே நல்லா இல்ல.”

“ம்ம்”, என்றவள் எல்லாம் எடுத்து ஒதுங்க வைத்து அறைக்கு வந்த பின்னும் ஏதோ உடலே எடை கூடி கனத்தது போல் இருந்தது. உடலும் மனமும் கனத்து தலை வேறு வெடித்துவிடும் போல வலித்தது.

எப்படியும் மகிழனும் அங்கு தூங்கி இருப்பான். தானும் சற்று படுத்து எழலாம் என நினைத்துப் படுத்தாள்.

ஆனாலும் தூக்கம் எட்டியே இருக்கக் கிட்டத்தில் இருந்த கைபேசியை எடுத்து சற்று நேரம் அதையும் இதையும் பார்க்க, அதுவே பூவினிக்கு சலிப்பாக இருந்தது.

கைபேசியை அணைத்தது வைக்கயில் ரஞ்சித்தின் கைகளில் இருந்த மகிழனின் படம் தெரிய சற்று நேரம் அதையே பார்த்திருந்தாள்.

தன் வாழ்வு மட்டுமல்ல தம்பியின் வாழ்வும் அன்றைய விபத்தோடு சிதைந்திருக்கக் கண்கள் குளமாகிப் பெருகி கன்னம் தொட்டு முத்தமிட்டது கண்ணீர்.

கண்களைத் துடைத்தவள் மனம் உந்த ரஞ்சித்துக்கு அழைத்தாள். அழைப்பு சென்ற நொடியே அது எடுக்கப் பட்டும் விட்டது. பூவினிக்கு பேச ஏனோ தயக்கம், அழைத்தது தவறோ என அவள் மனம் அவளை அலைக்கழித்தது.

“ஹல்லோ, பூவுக்குப் பேச தெரியாதா? இல்ல எங்கக்கா செவிடாயிட்டாளா?” கேட்ட ரஞ்சித்தின் குரலில் சுயம் வர “ஹ்ம்ம், என்ன டா?” என்றாள்.

“என்ன பூவினியாத்தா, போன் அடிச்சுட்டு என்ன யோசனை?”

“இல்லல்ல, சும்மா தா கூப்பிட்டேன். எப்படி இருக்கன்னு கேக்க.” தயக்கமும் மென்மையாய் ஒலித்த அவள் குரலில் ரஞ்சித்துக்குக் குழப்பம் வந்தது.

“அடியே, ரெண்டு நாளைக்கு முன்ன நீ எப்படிப் பாத்தியோ அப்படியே தான் இப்பவும் இருக்கேன். ஆமா என்ன வேலையாகணும் என்னய தேடி போன் பண்ற?”

“இல்லல்ல, நிஜமா சும்மாதான் அடிச்சேன்.”

“அப்டியா க்கா. கல்யாணமான இந்த ஒரு மாசமா எனக்கு மாமா மட்டுந்தான் பேசுறாங்க. அதான் சந்தேகமா கேட்டேன்.”

“தோணுச்சுன்னு கால் பண்ணேன். சாரி.” என்றவள் குரலின் ஈரம் கண்களிலும் கசிய தலையும் மனமும் வெகுவாய் வலித்தது பூவினிக்கு.

“என்னத்தா, எண்ணமும் பிரச்சனையா? ஏன் என்னமோ போலப் பேசுற. எனக்கெல்லாம் சாரி கேக்குற. நான் சும்மாதான் உன்ன வம்பிழுத்தேன். நீ அங்க நல்ல இருந்தா சரிதே. ரெம்ப என்னமும் யோசிச்சு குழப்பிக்காத..”

“ம்ம்ம்.”

“அட என்ன? ம்ம்-ன்னு சொல்ற பதிலெல்லாம் உன் அகராதியில் இருக்காது. இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு.”

“ஒண்ணுமில்லடா.”

“பூவினி என்னமோ உன் பேச்சே சரியில்ல. இன்னைக்கு மாமா வரவும் பேசமா வீட்டுக்கு வர்றியா?”

“இல்லலைடா அதெல்லாம் ஒண்ணுமில்லடா. நானும் ஓகேதான். நீ நல்லா இருக்கியான்னு கேட்கத்தே அடிச்சேன்.”

“ஹ்ம்ம், சரித்தே.”

“சரி பாத்துக்கோ.” எனப் பேச்சை முடித்துக் கொண்டவளுக்குத் தன்னை நினைத்தும் தன் நிலையை நினைத்தும் கழிவிரக்கமே பிறந்தது.

‘என்ன மாதிரியான வாழ்வு எனது?’ எனும் கேள்வி சுழலாய் அவளைச் சுழற்ற, இனி தூக்கம் எங்கு வரப்போகுறது. கட்டிலில் அமர்ந்தபடி அவளோடு அவளே போராடத் தொடங்கினாள்.

பூவினியின் மூளைக்கும் இதயத்துக்குமான நீண்ட உரையாடலில் அவள் பார்வையாளராக மட்டுமே இருந்த போதும் அவள் உடல் முழுவதும் சோர்வே மிஞ்சியது.

“அத்தா பூவினி” எனும் வள்ளியம்மாள் அழைப்பில் எழுந்தவள் அறையைவிட்டு வெளியில் வர மகிழன் குமரனின் கைகளில் இருந்து இவளை பார்த்ததும் சிரித்துத் தாவிக் கொண்டு வர அவனைக் கைகளில் வாங்கி இறுக அணைத்துக் கொண்டாள்.

குமரன் பூவினியைப் பார்க்க என்னவோ அவள் முகத்தில் தெளிவில்லை என்று தெரிந்தது.

பேச்சுக்கள் இப்போதெல்லாம் குறைவுதான் என்றாலும் சிறு புன்னகை இழையோடும் முகம் இன்று முற்றிலும் இருளடைந்து போல இருந்தது.

“பூவினி உடம்புக்கு முடியலையா?” எனக் கேட்டவனின் முகத்தை அதிர்ந்து பார்த்தவள் , இல்லை எனத் தலையை இட வலமாய் ஆட்டி மீண்டும் மகனின் மேல் கவனத்தைத் திருப்பினாள்.

அதற்குள் மகிழனோ கொத்தாய் அவளின் முடியைப் பற்றி இழுக்க, “ஷ்ஷா… மகிழா முடிய விடுடா.” என்று அவன் பிஞ்சுக் கைகளை இறுகப் பற்றினாள்.

அவனோ இன்னும் கொண்டாட்டமாக அவளின் முடியைப் பற்றி இழுக்க, “விடுடான்னு சொல்றேன் இல்ல, கேக்க மாட்ட நீ.” எனக் கொஞ்சம் சத்தமாகவே கத்திவிடப் பாவம் அவன் உதடு பிதுக்கி அழுகைக்குத் தயாரானான்.

வாசலில் நின்றிருந்த குமரனும் சரி, வெளியே அமர்ந்திருந்த வள்ளியம்மாளும் சரி ‘என்ன ஆயிற்று இவளுக்கு?’ என்றே பார்த்தனர்.

“ஏத்தா, என்னத்துக்குச் சத்தம் போடுற. எல்லாப் பிள்ளையலும் செய்யிறதுதே. நா பூராவும் உன்ன காணாமக் கெடக்கவும் கோவப் போடுறான் போல.” என முருகய்யா சொல்லவும் பூவினிக்குமே அதிர்வாகத்தான் இருந்தது.

அத்தோடு அவனையும் தூக்கிக் கொண்டு அவளின் அறைக்குள் நுழைந்து கொண்டாள். பார்த்த மூவருக்கும் சற்றே வித்தியாசமாகத் தெரிந்தாலும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

அறைக்குள் வந்தவளுக்குத் தான் நடந்து கொள்வதும் பேசுவதும் சற்றே அதிகம் என்று தெரிந்தாலும், அதெல்லாம் ஏன் என ஆராய்ச்சி செய்யவில்லை.

மகிழன், காலையிலிருந்து வசந்தியோடு புது வீட்டில் இருந்து விட்டு அங்கே பகல் தூக்கமும் தூங்கிவிட்டு இப்போதுதான் வந்திருந்தான். அறைக்குள் வந்தவள் உடனே மகனுக்குப் பாலூட்டி அவனின் உடையை மாற்றிவிட்டாள்.

மகிழனுக்கு எல்லாம் செய்துவிட்டு நிமிர்ந்த போதும் இவள் நிலைமை என்னவோ குழப்பம்தான். மகிழனைக் கட்டிலில் கிடத்தியவள் அவன் அருகே அமர்ந்து அவனின் முகம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் சிரிப்பு வழக்கம் போல அவளுக்கு வேறொரு முகத்தின் சாயலாகவே தெரிந்தது.

அந்நேரம் கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள். குமரன் தன் சந்தன நிற முழுக்கை சட்டையின் கை பொத்தான்களைக் கழட்டியபடி உள்ளே வந்தான்.

அவனை ஒரு முறை பார்த்தவள் அவன் உடை மாற்றுவான் எனத் தெரிந்து எழுந்து கொண்டாள்.

“பூவினி, ஒரு நிமிஷம்.” எனக் குமரன் அழைக்கவுமே பதில் எதுவும் சொல்லாமல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“இன்னைக்கு ரஞ்சித் பேசுனான், வீட்டுக்கு வாரியளா மாமான்னு கேட்டான். அதான் நானும் லாஸ்ட் கிளாஸ் பிரீ தான்னு சீக்கிரம் கிளம்பி வந்துட்டேன்.”

“ம்ம்.”

“அத்தை வீட்டுக்கு போகலாம்ன்னா நீயும் கிளம்பு. அங்க தங்குறதுன்னா அதுக்குத் தேவையானதையும் எடு. நான் மகிழன பாத்துக்குறேன்.” என மகிழனைத் தூக்கிக் கொண்டு அறையைவிட்டு வெளியேறினான்.

“ம்ம், போலாம்.” என முடித்துக் கொண்டாள் பூவினி.

மகிழனைத் தூக்கி கொண்டு குமரன் அறையைவிட்டு வெளியேறிவிட, பூவினி இருவருக்கும் தேவையானதை எடுத்து வைக்கத் தொடங்கினாள். எப்படியும் இன்று மாலை சென்றால் வார விடுமுறை வரையிலும் அங்கேயே கழித்ததுவிட்டு வரலாம்.

அதைத் தாண்டியும் அவளுக்கு மகன் தன்னுடனே நாள் முழுவதும் இருப்பான் என்ற உற்சாகம் வர வேகமாக இருவருக்கும் உடைகளை எடுத்து வைத்தாள்.

அனைத்தையும் எடுத்து வைக்கும் போதே பூவினியின் எண்ணங்கள் நீண்டு எங்கெங்கோ முட்டி மீண்டும் முடிவில்லா ஒரு சுழலுக்குள் இழுத்தது.

இனி தங்களின் வருங்காலம் எப்படி இருக்குமோ, இந்த வாழ்க்கை, அதில் மீண்டும் ஒரு குழந்தை என வாழ்க்கை விரியும் போது விரியும் துன்பங்கள் பூவினியின் நினைவுக்குள் நிழலாய் உலவ மறுபடியும் பாரம் ஏரிய உணர்வு அவளுக்குள்.

இவை எல்லாம் அச்சத்தின் அம்புகளாக பூவினியைத் தைக்க, கைகள் வேலை செய்வதை நிறுத்திவிட்டது. என்ன செய்வது எனத் தெரியாமல் கட்டிலில் அமர்ந்தவள் சாளரத்தின் வழி வெளியே பார்க்க மகிழ மரம் நிழல் விரித்து நின்றது.

“இது நாங்க வச்ச மரம். வச்ச அன்னைக்கு அப்பத்தா சொன்னாக, இந்தப் பூ வாசம் மகிழ்ச்சியத் தருமுன்னுதே இதுக்கு மகிழ மரமுன்னு பேருன்னு. அதுக்குத்தே எப்பவும் நானுங் குமரனு அங்கேயே விளையாடுவோம். அப்பறம் வளரவும் காலையில காப்பிக்கு கண்டிப்பா மகிழ மரத்தடித்தே.”

கண்களை இறுக மூடி அந்த நினைவுகளைக் கடக்க நினைத்தாள். ம்ஹும், சில நினைவுகள் நாம் எவ்வளவு மறுத்தாலும் மரிக்காமல் நம்முள் உறைந்து போய்விடும்.

அப்படியான ஒரு நினைவு அவளின் முன் மகிழ மரத்தின் நிழலாய் விழுந்து மரமாய் வளர்ந்து விரிந்து நின்றது.

“எம் புள்ளக்கி அது இதுன்னு யாரு சொன்னாலும் கேக்க மாட்டேன். மகிழ்ன்னுதே பேரு வப்பேன். ஒன்னு மகிழன் இல்ல மகிழா.”

தலையை வேகமாக ஆட்டி நினைவுகளை அறுக்க நினைத்தாள். தலையாட்டி அறுக்க அதென்ன பருத்தி நூலா? அத்தனையும் அவளின் மகிழ் நினைவுகள்.

அவைகளை அறுத்தெறிவது அத்துனைச் சுலபமில்லையே. நினைவுகள் நீளுமே தவிர நீங்குவதில்லையே.

நீங்காத நினைவுகளோடு போரடிக்கக் கொண்டிருந்தவளை அறை வாசலில் கேட்ட அரவம் கலைத்தது. திரும்பிப் பார்க்க குமரன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அவன் ஒரு கையில் தேநீரும் இன்னொரு கையில் பூவும் இருந்தது.

“டீ சூடா இருக்கு, குடிச்சுட்டு கிளம்பலாம்.”

“இல்ல, வேணாம்.”

“இஞ்சி ஏலக்காயெல்லாம் தட்டிப்போட்டுப் போட்டேன். குடிங்க, தலவலிக்கு நல்லா இருக்கும்.”

“ம்ம்.” என முடித்துக் கொண்டவளுக்கு அவன் இடக்கையில் இருக்கும் பூக்கள் இன்னுமே இம்சையாய்த் தெரிந்தது.

பூக்கள் இல்லாமல் போனது ஏதோ சில மாதங்கள் தான் என்றாலும் மீண்டும் அவைகளைக் கொண்டாட விருப்பம் வரவில்லை.

“இந்த டேபிள் மேல டீயை வைக்கிறேன்.” என்றவன், “பூவினி இந்தாங்க.” என அந்தப் பன்னீர் ரோஜாவையும் குண்டு மல்லி சரத்தையும் அவளின் கைகளில் கொடுத்தான். “அப்பத்தா குடுத்தாக. பூவை வச்சுக்கிட்டு வாங்க. இல்லைன்னா அப்பத்தா சங்கடப் படுவாக.” என்றவனுக்கு அவளின் நடுக்கமும் தயக்கமும் உவப்பாக இல்லை.

‘என்ன ஆச்சு இவளுக்கு. ரெண்டு நாளா ஆளே சரியில்ல. என்ன யோசிப்பாங்களோ தெரியல. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே போகுமோ?’ என்று நினைத்தவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பினான்.

ஆனால் அவள் பூக்களை நொடியும் தாமதிக்காமல் நாற்காலியின் மேல் வைப்பது அங்கிருந்த கண்ணாடியின் புண்ணியத்தில் குமரனின் கண்களில் பட்டது.

பார்த்தவனுக்குத் திருமணமாகி மாதம் கடந்த பின்னும் இருக்கும் அவளின் இந்தத் தயக்கம் சிறு கோவத்தைக் கொடுக்க ‘என்னதான் செய்கிறாள்?’ எனப் பார்க்க நினைத்து அங்கிருந்த கண்ணாடி முன் ஒப்பனை செய்வது போலச் சென்று நின்று கொண்டான்.

பூவை நாற்காலியின் மேல் வைத்துவிட்டு தேநீர் கோப்பையைக் கையில் எடுத்தவளுக்குள் பூக்களால் ஒரு பூகம்பம். இவையெல்லாம் தாண்டியாக வேண்டிய வாழ்வின் அடுத்தடுத்த நிகழ்வுகள் என மனத்துக்குத் தெரிந்தாலும் மூளைக்குள் தொடங்கி உடல் முழுவதும் அழுத்தும் இந்த ஒரு ஒவ்வாத உணர்வு இன்று அதிகமாகப் படுத்தியது.

குமரனின் அன்பும், அவன் என் கணவன் எனும் உறவின் நினைவும் நிச்சயம் இருக்கிறது. ஆனால் ஏற்பதில் எங்கோ சிக்கல் வந்துவிடுகிறது.

தன்னுள் உறைந்த யோசனைகளோடு பூவின் மேல் பார்வையைப் பதித்தபடி தேநீரை அருந்தும் பூவினியின் முகத்தைப் பார்க்க குமரனுக்குப் பாவமாகவும் இருந்தது.

அதே நேரம் அவனுள் இருக்கும் புதுக் கணவன் குமரன் மனம் வேறொன்றை நினைத்தது.

‘அடேய் குமரா, அவ மொகத்தைப் பாத்தியே. ஒன்னோட மொகரக்கட்டைய பாத்தியா? பொண்டாட்டிக்கு ரோஸ் குடுத்துட்டு வர்ற ஒரு புது மாப்பிள்ளை மூஞ்சியாடா இது? இந்நேரம் மல்லிகைப்பூ குடுத்ததுக்கு மைனர் வேஷம் போட்டுருக்கணும். அட அதுக்குத்தான் துப்பில்ல உனக்கு, ‘உன் கூந்தல் எழில் மாளிகை என் ரோஜா குடி ஏறுமா பூவுக்கே பூவைப்பதால் என்னோடு பரிகாசமா?’ அப்படின்னு பாடியாவது இருக்க வேண்டாம்?’ என நினைத்தவனுக்குச் சிரிப்பு வந்தது.

பூவினியைப் பார்க்க அவளோ தேநீரைக் குடிப்பதும் பூவைப் பார்ப்பதுமாக நின்றிருந்தாள். குமரனுக்குள் சின்னக் குறுகுறுப்பு தோன்ற “A rose is a rose is a rose rose” எனப் பாட அவனைப் பட்டென நிமிர்ந்து பார்த்தாள் பூவினி.

குமரன் பாட்டை நிறுத்தாமல் நினைவில் வந்த மொத்த வரிகளையும் பாட பூவினிக்குள் புயலின் தாக்கமும் சுனாமியின் வேகமும்.

அவளைப் பார்த்தும் பார்க்காதவன் போலத் தலை சீவிக் கொண்டே பாடியவனுக்குத் தெரியும் ‘அடங்குடா, இதெல்லாம் நடக்க இன்னும் எத்தன வருஷம் ஆகுமோ?’ என்று. ஆனாலும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல ‘வருஷம் இல்ல சில பல நாளுதான் ஆகும்.’ என மனத்தைத் தேற்றிக் கொண்டான்.

அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் தயாராகி மகிழனுடன் அழகாப்புரி நோக்கி பயணித்தனர். பத்து பதினைந்து நிமிட பயணம் தான். ஆனாலும் இருவருக்குள்ளும் யோசனைதான், ‘அடுத்தக் கட்டம் என்பது இனி என்ன?’ எனும் எண்ணம் மட்டுமே.

எண்ணங்கள் சில நேரம் விடியல் போல இதமான ஒளி பெறலாம். சிலநேரம் அந்திவானம் போல இருளவும் தொடங்கலாம். இருளோ ஒளியோ இங்கு இருவருக்கும் வாழ்வு ஒன்றுதானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!