Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

16 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 16.



Advertisement

 

எதிர்பாரா தருணம் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களைக் கண்டால் மனம் எப்படி உணரும்?  

Advertisement

யசோதராவின் கன்னம் வருடி, “யஷோ?” என்றவளுக்குத் தொண்டை அடைத்தது. நடை பழகிய அன்று ஆரம்பித்த பந்தம்… ஒருவராலும் பிரிக்கவே முடியாது என மார்தட்டிக் கொண்ட சினேகிதம்… லாவண்யாவின் பெற்றோரால் அரைப்புள்ளிக்கு தள்ளபட்டு, பின் திருமணம் எனும் கயிற்றால் அதன் சுவாசத்தை இழந்து முற்றுப் புள்ளியை கண்டது, இன்று உயிரோடு அவள் முன் நிற்கிறது.  கடைசியாக இரண்டு வருடங்கள் முன் யசோதரா மயங்கிச் சரிந்த அன்று பார்த்தது.

Advertisement

“நல்லா இருக்கியா யஷோ?” எனக் கேட்டு அணைத்தவளிடம் மௌன மொழி பேசினாள் யசோதரா. ஆணோ பெண்ணோ… எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பைத் தோழர்களை விட யாரால் காட்டிட முடியும்?

Advertisement

கண்களில் நீர் வழிய, “தேங்க்ஸ் டி” என்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டே, “வா வா… உள்ள போகலாம்” என கரம் பற்றி உள்ளே அழைத்தாள்.

இருவரையும் பனித்த விழிகளோடு பார்த்து நின்றிருந்த பார்வதி, “பாரேன்… எப்பவும் போல அவள பார்த்ததும் என்னை மறந்துட்ட” எனப் பொய்யாகச் சிணுங்க, “அச்சோ… அப்படி எல்லாம் இல்ல பாரு… நீயும் தான் வா வா” எனத் தோழிகளை பார்ட்டி அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

இடம் முழுவதும் நூற்றுக் கணக்கான தங்க நிற பலூன்கள் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஒரு மூலையில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் நிறைந்திருந்தது. மின்விளக்குகள், மினுங்கும் வண்ணக் காகிதங்கள், தங்க ஹீலியம் பலூன்கள் எனப் பார்க்கவே அந்த பெரிய அறை அத்தனை அழகாக இருந்தது. பார்வதி கூறியது போல் செல்வச் செழிப்பு அமோகமாகவே கடை பரப்பப் பட்டிருந்தது.

“குழந்த எங்க டி?” பார்வதியின் கண்கள் குழந்தையைத் தேடியது.

“இவ்வளவு நேரமா பையனுக்கு ஊட்டிட்டு இருந்தேன். நீங்க வந்ததும் வாய துடைக்காம நாத்தனார்ட்ட பாத்துக்க சொல்லிட்டு வந்தேன். வாய கழுவிட்டு தூக்கிட்டு வரேன்” என விரைந்த லாவண்யாவை யசோ பார்த்து அமர்ந்திருந்தாள்.

“ஏன் குழந்த வாய கூட தொடைச்சு விட மாட்டாங்களா?” என்ற பார்வதியின் எரிச்சல் குரல் காதில் விழுந்தது. பார்வதி கூறியது போல் லாவண்யாவின் இடையில் இருந்த குழந்தையின் முகத்தில் உணவு பருக்கைள் இருக்கதான் செய்தது.

லாவண்யாவின் திருமண வாழ்வு நன்றாக இருந்து இருந்தால் வந்திருப்பாளா தெரியாது. ஆனால் பார்வதி கூறியதைக் கேட்டபின் லாவண்யாவைப் பார்க்காது எப்படி தூக்கம் வரும்? வந்துவிட்டாள். லாவண்யாவின் சிரித்த முகத்தைப் பார்த்துவிட்டால் போதும் என்றிருந்தது யசோவிற்கு.

விழா மாலை ஆறு மணிக்கு மேல் என்பதால் விருந்தினர் வந்திருக்கவில்லை. வீட்டார் சிலர் இருந்தனர். பிறந்த நாள் விழா தானே? என உள்ளுக்குள் கேட்டுக் கொண்டாள். நல்ல வேளையாக பார்வதி கூறிய துணிக் கடையில் மாற்றுடை எடுத்தது நல்லதாகப் போனது என நிம்மதி பெருமூச்சொன்று வந்து போனது.

“சொக்கத் தங்கம் சொக்கத் தங்கம் ஜொல்லரி… சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜொல்லரி” எனச் சிரிக்காது அங்கிருந்த கூட்டதை பார்த்துக் கொண்டே பார்வதி நக்கல் பேச, ‘சுப்’ என்பது போல் தொடையில் மெல்லத் தட்டினாள் யசோ.  

இந்த கூட்டத்தில் எப்படி லாவண்யா மாட்டினாள்? திருச்சியில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழ் ஆசிரியருக்கும், ஒற்றை படுக்கை அறை வீடு மட்டுமே உலகம் என இருந்த தாய்க்கும் பிறந்த லாவண்யா எப்படி இங்கு மாட்டினாள்? சில நேரங்களில் அழகாக இருப்பது கூட ஆபத்து தான் போலும்.

“இவன் தான் என் மகன் அஷ்வின்” என அறிமுக படுத்திய லாவண்யாவின் குட்டி மகனை யசோ கையில் ஏந்த, அவனோ அடங்க மாட்டேன் என கீழே நழுவினான். குழந்தைக்கு அணிவித்திருந்த கோட் சூட் அவனை இம்சிக்க… அனத்திக்கொண்டே இருந்தான்.

“இப்படி அனத்திட்டே இருக்க மாட்டான் பா. காலைல இருந்து பாக்கிறவங்க எல்லாம் தூக்கி… முத்தம் கொடுக்கிறேன்னு கன்னத்த கடிச்சு… கிள்ளின்னு குழந்தைய படுத்தி எடுத்துட்டாங்க. அலைச்சல்… தூக்கம் இல்லன்னு ஒரு வழியாகிட்டான்” என்றாள் வருத்தம் மேலோங்க.

குழந்தை, தூக்கவும் விடாது, விளையாடவும் செய்யாது படுத்தி எடுத்துக் கொண்டிருந்தான். குழந்தையின் பின்னோடு மூவரும் நடந்து கொண்டே தங்களின் பேச்சைத் தொடர்ந்தனர். குழந்தையை நாத்தனார் தூக்கிக் கொள்ளவும் மூவரும் ஓர் இடத்தில் நின்றனர்.

அன்றைய நாளும் பேச்சின் இடையே வந்தது. “அம்மா வீட்டுக்கு வந்திருந்த போது எனக்கு ஒரே தல சுத்தல். பிரஷர் இறங்கி, நிக்கவே முடில. அப்போத் தான் நாள் தள்ளிப் போனதும்… நான் மாசமா இருக்கதும் தெரிஞ்சுது. அன்னைக்குத் தான் ஆன்ட்டி… ப்ச்!” அன்றைய நினைவில் இன்று லாவண்யாவின் கண்கள் நீரை ஊற்றியது.

“மாசமா இருக்க… போக கூடாதுன்னு, இவள போய் பாக்க கூட விடல டி. எத்தன நாள் ஆன்டி கையால சாப்பிட்டிருப்போம்? என்ன மனுஷங்க இவங்கன்னு இருந்துது. அடுத்து, நாலே நாள்… திரும்பவுமான்னு இருந்துது! இவ கத்தின கத்துல நான் வீட்ட விட்டு ஓடியே வந்துட்டேன். அப்பறம் இவர் என்னை அம்மா வீட்டுல விட்டு வைக்கல. அன்னைக்கே என்னை இழுத்துட்டு சென்னைக்கு கிளம்பிட்டார். அதுக்கு அப்பறம் இன்னைக்கு தான் பாக்கிறேன்.”

“அஷ்வின் பர்த்டே அதுவுமா போதும் அழுதது. முகத்த துடை.” என பார்வதி கூறவும், புடவை முந்தியில் கண்களை அழுந்த தேய்துக் கொண்டாள்.

“திரும்பவும் ஸ்கூல் டேஸ்சுக்கு போயிட்டா நல்லா இருக்கும் இல்ல?” என்றவளுக்கு பாஸ்கர் விஷயம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்ற நிலை.

“நிக்க வச்சே பேசிட்டு இருக்கேன் பாரேன். ரெண்டு பேரும் உக்காருங்க” என்றவளின் படபடப்பு அடங்குவேனா என்றிருந்தது. “என்ன குடிக்கிறீங்க? கிரேப் ஜூஸ் எடுத்துட்டு வரவா?” எனக் கேட்டரிங் ஆட்களை நோக்கிச் சென்றாள் லாவண்யா.

“லாவண்னோட ஹேப்பினஸ்ச குடிச்ச மிஸ்டர் ஹேப்பி” என யசோவின் தோளை இடித்தாள் பார்வதி. “நாடக வில்லி மாதிரி ஒண்ணு உக்காந்து இருக்கே, அவன் அம்மா” எனக் காதுக்குள் கிசுகிசுத்தாள். அவர் இடுப்பில் இரு நிமிடங்கள் முன்பு ஏற்றியிருந்த குழந்தையைக் காட்டி எதையோ ஆனந்தனிடம் கூறிக் கொண்டிருந்தாள் அவனின் அன்னை.

மூவருமாக ஒரு வாய் பழச்சாற்றை அருந்தவும் குழந்தையின் சிணுங்கல் அருகில் கேட்டது. குழந்தையோடு வந்து கொண்டிருந்தவன் முகத்தில் எள்ளை போடுவதா… இல்லை கொள்ளை போடுவதா? இருக்கும் சூட்டிற்குக் கடுகு, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய், பெருங்காயம் போட்டு மணக்க மணக்கத் தாளிக்கலாம்.

தோழிகளின் பார்வை சென்ற பக்கம் பார்த்த லாவண்யா, “என்னங்க இங்க வாங்களேன்” எனத் தங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்த ஆனந்தனை அழைத்து தோழிகளுக்கு அறிமுகப் படுத்தினாள்.

“ஹலோ… வாங்க” எனப் புன்னகை முகமாக வரவேற்ற ஆனந்தன், “ஒரு நிமிஷம்” என மனைவியை அழைத்துச் சென்றான்.

“குழந்தைய பாத்துகிற ஒத்த வேலைய கூட உன்னால…” அறையில் மிதமாக ஒலித்துக் கொண்டிருந்த இசையின் பின் ஆனந்தனின் சத்தம் ஒளிந்து கொண்டது.

நடப்பதை எல்லாம் தோழிகள் பார்த்தாலும் எதையும் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. மகனோடு வந்தவள் அகம் வாடிப் போயிருந்தாலும் முகத்தில் அதைக் காட்டவில்லை.

இழுத்துப் பிடித்துச் சிரித்தவள், “அது ரொம்ப அனத்துரானா… அது தான் பாத்துக்கச் சொல்லி கொடுத்துட்டு போனார்.” என சமாளித்தாள்.

“எதுக்கு இப்போ சமாளிக்கிற?” எனப் பார்வதி முறைக்க, மகனின் கேசம் வருடியவள், “ஒரு வயசு. நடக்கக் கூட ஆரம்பிக்காத பையனுக்கு சாக்ஸ், ஷூஸ், சட்டை, வெஸ்ட், கோட், டை, டையப்பர் மேல பேன்ட்! வேண்டாம்ன்னு சொன்னா பிச்சக்காரிய பாக்கிற பார்வை பாக்குது என் மாமியா. சரி… கேக் வெட்டும் போது கோட் போடுவோம்ன்னு சொன்னா, அதுக்கும் சத்தம் போடுது!” என கணவன் வீட்டாரைப் பார்த்தவள் நீள பெருமூச்சொன்றை விட்டாள்.

‘நீ தான அம்மா? அப்போ அவனுக்கு எது வசதியான துணியோ அதப் போடு’ என வேகமாக எழுதி காட்டிய யசோவின் முகத்தில் கோபச் சாயல்.

“அப்படி எல்லாம் சட்டுன்னு செய்ய முடியாது யஷோ.” என்றவளை ஆழப் பார்த்தாள் யசோதரா. எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து இவள் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறாள்? ஆணோ… பெண்ணோ முதுகெலும்பு இல்லை என்றால் பெற்ற பிள்ளை கூட மதிக்காதே. சுயமரியாதை முக்கியம் என இவளுக்கு எப்படிப் புரியவைப்பது என்ற யோசனை யசோவிடம்.

“என்ன யஷோ… யோசன பலமா இருக்கு?” என உலுக்கிய லாவண்யாவை பார்த்து, ‘ஒண்ணும் இல்ல… நேரம் ஆச்சு… கெஸ்ட் வரதுக்குள்ள உன் முகத்த கழுவி ரெடி ஆகு. நான் கிளம்பறேன்’ என எழுந்தாள்.

‘கிளம்பறேன்’ என எழுந்தவளை அனுப்ப மனமே இல்லாது, “எட்டுக்கு தான் டி கேக் கட்டிங். அதுக்கு முன்ன டின்னர். இருக்கவே முடியாதா? சாப்பிட்டாவது போ” என லாவண்யா கெஞ்சலாக பார்க்க, “பாவம் விடுடி அவள. அவ வந்த வேலைய பாக்க வேண்டாமா” என யசோவை, “நீ கிளம்பு. இவளும் சென்னை தான… அங்க பார்த்துக்கோங்க” எனக் கிளப்பி விட்டாள் பார்வதி.

லாவண்யாவாலும் இவர்களோடே அமர்ந்து இருக்க முடியாதே, மனமே இல்லாது தோழியை அனுப்பி வைத்தாள்.

“இன்னைக்கு இவனுக்கு நட்சத்திர பர்த்டே யசோ. பத்து நாள் கழிச்சு இவனோட அக்சுவல் பர்த்டே வருது. காலையில வடபழனி கோவிலுக்கு போயிட்டு, ஹோட்டல்ல ஈவ்னிங் பார்ட்டி வச்சிருக்கோம். உன் வீட்டுல இருந்து ரொம்ப தூரம்ன்னு தெரியும்… இருந்தாலும், இன்னைக்கு இருக்க முடியாததுக்கும் சேர்த்து அன்னைக்கு பூரா என் கூடவே இருக்கணும். சரியா?” என யசோ கிளம்பும் முன் அடுத்த சந்திப்பிற்கான அடிதளத்தை போட்டு வைத்தாள் லாவண்யா.

கோவிலுக்குச் செல்ல மனமில்லாது ஓடியதால் தான் உன்னைப் பார்த்தேன் என எப்படி இவளிடம் கூறுவது? ‘அது வொர்கிங் டே லாவண். நான் ஃபிரியான்னு பார்த்துட்டு மெசேஜ் பண்றேன்’ என அவசர அவசரமாகக் கிளம்பியவளை வாடகை மகிழுந்தில் ஏற்றி அனுப்பி வைத்தாள் பார்வதி.

“நீ பாட்டுக்கு சொல்லாம கிளம்பிடுவியா? உனக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் அங்கிள்ட்ட சொல்றது? அவர் என்ன ஆவார்ன்னு யோசிக்க மாட்டியா நீ?” என சித்தார்த்திடம் இருந்து சில பல அர்ச்சனைகளோடு அன்றைய ரிகர்சல் திருப்திகரமாகவே முடிந்தது. மறுநாள் விழாவில் இவர்களின் இசை பேசப்படும் படியாகவே இருந்தது. பிரபலச் சின்ன திரை தயாரிப்பாளர் ஒருவர் தன்னை அலுவலகத்தில் சந்திக்கும் படி பிரபுவிடம் அவரின் அழைப்பு அட்டையைக் கொடுத்து சென்றார்.

அடுத்து வந்த பத்து நாள்களும் வேக வேகமாகக் கடந்து செல்ல, “நாளைக்கு காலையில் ஏழு மணிக்கு வடபழனி கோவில் வந்துடு யசோ. அங்க இருந்து என் கூட அப்பிடியே வீட்டுக்கு வந்துடு. ஈவ்னிங், ரெஸ்டரென்ட்ல ஃபங்ஷன் முடியவும் போவியாம்” என லாவண்யா அவர்கள் திட்டமிட்டதை நினைவூட்டினாள்.

‘நாளைக்கு ஒரு பிரசன்டேஷன் இருக்கு லாவ். லீவ் போட முடியாது. காலையில கோவில் வந்துட்டு, காலேஜ் போறது கஷ்டம். நீ பார்ட்டி லொக்கேஷன் கொடு. ஈவ்னிங் நேரா பார்ட்டிக்கு வந்துடுறேன்’ எனப் பதில் அனுப்பி வைத்துப் படுத்தாள்.

எப்பொழுதும் போல் தூக்கம் கண்களைத் தழுவ மறுத்தது. பத்து நாள்கள் முன் லாவண்யா கிளறிவிட்ட நினைவுகள் இன்னும் அடங்காது அவளைப் புரட்டிப் போடுகிறதே. தன்னை சமாதானப்படுத்தும் ஜீவனும் வீட்டில் இல்லை. தன் அருகே காலியாக இருந்த இடத்தை மெல்ல வருடினாள். “ம்மா” என ஆத்விக்கின் அந்த அழைப்பு இல்லாது மனம் ஆர்ப்பரித்தது. தலை வெடித்துவிடும் போல் இருக்க, மாத்திரையை விழுங்கினாள்.

“அம்மா” என்ற ஆத்விக்கின் சத்தம் உள்ளுக்குள் ரீங்காரமிட்டது. அம்மா! ஒற்றை வார்த்தை எப்படியான உணர்வை தருகிறது? தனக்கும் அம்மா இருந்தாரே. தன்னை போல் அல்ல தன் தாய். மிக மிக அன்பானவர். பொறுப்பானவர். இனிமையானவர். ‘அம்மா…’ மனம் ஓலமிட்டது. சென்னைக்கு அவசர அவசரமாகச் சென்று வந்தவர் ஏதேனும் கூறுவார் என இவள் அம்மாவின் முகம் பார்க்க, அவர் எதுவுமே கூறவில்லை. அப்பா, அம்மா இருவர் முகமும் ஒளியிழந்து போயிருந்தன.

அன்று… அன்னை தன்னைவிட்டுப் போன அன்று, இவளும் அம்மாவின் கரம் பற்றித் தானே சாலையில் சென்றாள். அதுவரை தன்னோடு இருந்தவர், ஏன் தன்னை தனித்து விட்டுச் சென்றார்? சில கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை.

தயங்கினாலும், மனதைத் திடப்படுத்தி, “அம்மா… போன மாசம் சுபிக்ஷா கல்யாணத்துக்குப் போனேனே, அப்போ அங்க அவனும்… நாங்க ஒண்ணா இருந்தோம் மா. அவன்…வேண்டாம்ன்னு சொல்லியும், நான் தான்…” எச்சில் விழுங்கி, “நான் பிரெக்னென்ட் மா” என்றபோது குரலும் நடுங்கி, கை கால்கள் நடுங்கியது இன்றும் நினைவில் உள்ளதே.

பயந்தாலும், எவ்வளவு பெரிய விடயத்தைப் போட்டு உடைத்தாள். திட்டுவார்… குறைந்த பட்சம் அங்கு வைத்தே அறைவார் என நினைத்தாள். ஆனால் அன்னை தன் முகத்தையும் வயிற்றையும் ஏன் அப்படிப் பாவமாக பார்த்தார் என அன்று புரியவில்லை.

கண்ணீரோடு ‘ஐயோ என் மகளே’ என்ற பார்வை தானே கடைசியாக அன்னை சிந்தியது? அம்மா… அம்மா… மனம் அன்று போல் இன்றும் கதறியது.  

‘ஐயோ என மகளே’ என்ற அதே பார்வை கண்முன் வரவும் சட்டென எழுந்து அமர்ந்தாள் யசோதரா. மூச்சு வாங்கியது. சுற்றி ஒருவரும் இல்லை. உடல் முழுவதையும் வியர்வை நனைத்திருந்தது. வியர்வை காய்ந்து போகும் மட்டும் அசையாது அமர்ந்தே இருந்தாள். விளக்கை அணைக்காது உறங்கி இருக்க, எழுந்து சென்று முகம் கழுவி, உடை மாற்றி, நீர் அருந்தி, விளக்கணைத்துப் படுக்கையில் விழுந்தாள்.

மார்பு கனத்தது. வயிற்றை வருடிக் கொடுத்தாள். நிலைத்திருக்கலாம்… மூவரில் ஒருவருக்குமா தன்னோடு இருக்கத் தோன்றவில்லை?

‘மகள்’ என்றிருந்தார் அப்பா. ‘அதற்குமேல் கூறுவதற்கு ஒன்றும் இல்லை… கேட்காதே, ஆத்விக் மட்டுமே’ என்றுவிட்டார். இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பாள்? என்றும் போல் இன்றும் கற்பனையில் விழுந்தாள்.

மகள், வேறு எப்படி இருப்பாள்… அப்பாவை போல் தானே மகள் இருப்பாள். அதைத் தானே இவளும் விரும்பினாள். ‘பொண்ணுன்னா என்னை மாதிரி மாநிறம் வேண்டாம். உன்ன மாதிரி கலர்ல. ஆமா நீ என்ன கலர்? சிகப்பும் இல்லாம கோதும கலர்லயும் இல்லாம? அழகு டா நீ. நீ மட்டும் பொண்ணா பிறந்திருந்தா…’ அவளது பேச்சுகள்… அதற்கு அவன் கேள்வியும் அவனின் நமட்டுச் சிரிப்பும்! உண்மையிலுமே அழகன் தான் அவன்.

‘சொல்லு டி… பொண்ணா பிறந்து இருந்தா?’ அவன் என்ன நினைத்துக் கேட்டானோ, ‘ம்ம்ம்… அப்பவும் நீ தான் என் ஆளு. என்ன… பாய் ஃபிரெண்டுக்கு பதிலா கேள் ஃபிரெண்ட்’ என இவளின் பதிலில் அவன் விழிகள் விரிந்து… பின் சிரித்து… ‘பேச்ச பாரு பேச்ச!’ என அவன் கொடுத்த கொட்டுகள்…

கனவில் அவனோடு வாழுவதிலிருந்து விழிக்க விரும்பாத பிடிவாதத்தோடு, வலிக்காத தலையை மீண்டும் மீண்டும் தேய்த்துவிட்டுக் கொண்டாள் யசோ.

அன்பாக, சமத்தாக, அமைதியாக… இன்னும் எப்படி எல்லாம் மகள் இருப்பாள்? பிடிவாதமும், அழுத்தமுமாக கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டி நிற்கும் அவன் கண்முன் வந்தான். அவனைச் சிறிதாக்கி பெண் குழந்தையின் உருவம் கொடுத்தாள்.

நெளிந்த புருவங்களும், உருண்டை கண்களும், குவிந்து மினுங்கும் சிகப்பு உதடுகளும், கொழுத்த கன்னங்களும், பட்டு கேசமுமாகத் தந்தையின் குணங்களோடு அவனின் ஒட்டுமொத்த அழகையும் கொண்டு அவளைப் பார்த்து முறைத்தாள் அவளின் கற்பனை மகள்.

…..

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!