Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

23.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம்: 23.1

.

பணம் ஒரு பொருட்டே இல்லை என்ற ஒரு கூட்டம் எங்கும் உள்ளது. வாலிப வயது, கை நிறையக் கடன் அட்டைகள், நினைத்த வேளை பயணிக்கவென டுகாட்டி, மெர்சடீஸ் என்று வலிக்காமல் அனைத்தும் கிடைத்துவிட்டால், அவர்களுக்குத் தடை ஏது? இதுவும் அப்படியான ஒரு கூட்டம். தங்களை மறந்து பல வண்ண மின்விளக்குகளுக்கு இடையே மது, நடனம் என டிஜே-வோடு அந்த நட்சத்திர விடுதியின் பார்ட்டி அறை களைக்கட்டிகொண்டிருந்தது.



Advertisement

       திருமணத்திற்கு முன்பான பேச்சுலர்ஸ் பார்ட்டியை கொண்டாடிக் கொண்டிருந்தது அந்த இளவட்டம். “டு அவர் தாஸ்” எனக் கையிலிருந்த மதுக் கோப்பையைத் தூக்கிப் பிடித்து ஒருவன் கூற, மற்றவர்களும் கோப்பையை உயர்த்தி “டு தாஸ்” எனச் சத்தம் எழுப்பினர்.

Advertisement

       அனைவருமே பெரிய இடத்துப் பிள்ளைகள். இதெல்லாம் ஒருவருக்கும் புதிதல்ல என்றாலும், ஒருசிலர் தங்களின் நிலை மறந்து, அளவை தாண்டி மதுவைப் பருகிக் கொண்டிருந்தனர்.

Advertisement

       மணி ஒன்பதைத் தொடும் நேரம் கௌதமனின் கைப்பேசி அலறியது. கையிலிருந்த கோப்பையோடே “ஹலோ… ம்மா?” எனப் பேசிக்கொண்டே அந்த அறையை ஒட்டின திறந்த வெளி பூங்காவை நோக்கிச் சென்றவன் மீது ஒருவன் இடிக்க, இடித்தவன் கரத்திலிருந்த மது இவன் மீது சிந்தியது.

Advertisement

       தள்ளாடியவனின், சாரி பிரோவிற்கு , “நோ இஷ்யூஸ்” என்றவாறு வெளி நடந்தான் கௌதமன்.  இப்படியான இடங்கள் அவனுக்குப் புதிதல்ல என்றாலும், விபத்திற்குப் பின் இன்று தான் முதல் முறை இங்குக் காலை பதிக்கிறான். அவன் மீது சிந்தியிருந்த மோகிட்டோவிலிருந்த ரம்மின் வாசம் நேராக மூளைக்குள் ஏறியது. கூடவே, ‘ப்பா’ என அவன் பூக்குவியல் அவனைப் பார்த்து முறைத்தாள். மகளை நினைத்தவனுக்கு இரத்தத்தில் மதுவை ஏற்றி, நிதானம் இழக்க மனம் இல்லை என்பதால் அதைப் பருகும் ஆவல் எழவில்லை.

       “இன்னுமா பேபி தூங்கல?” எனப் பேசிக் கொண்டிருந்தவன் பார்வையில் அவள் விழுந்தாள். பத்து நாள்கள் முன் ராஜீவனின் நின்று போன திருமணத்தன்று பார்த்த அதே பெண். ‘அட… நம்ம பெரிய பேபி வந்திருக்கா பாரேன்’ என்றுதான் நினைத்தான்.  சுற்றிப் பார்த்தான். புல்வெளி, அலங்காரங்களுடன் விழாக் கோலம் பூண்டிருந்தது.

       “ஹேப்பி பர்த்டே டு டியர் சித்து…” என்ற பாட்டோடு எழும்பிய கரகோஷமும், ஊதி அணைக்கப்பட்ட 24 வடிவிலிருந்த மெழுகும், சித்தார்த்தின் இருபத்தி நாலாம் பிறந்த நாள் என்றன.

       “கிளம்பிட்டேன் மா” எனக் கைப்பேசியை அணைத்தவன் கண்கள் மீண்டும் அவளைத் தேட, கண்டு கொண்டான். ‘இதுக்கு முன்ன எங்க இவள பாத்திருக்கோம்?’ என மனம் அன்று கேட்ட அதே கேள்வியை மீண்டும் கேட்டது. சற்று தள்ளி ஒரு கோப்பை பனிக்கூழை நக்கிக்கொண்டே பல்லைக் காட்டிக் கொண்டிருந்தவளை எப்படி உன்னிப்பாகப் பார்த்தாலும் விடை கிடைக்கவில்லை.

       பாட்டுச் சத்தத்தில் ஒருவர் பேசுவது மற்றவருக்குக் கேட்க வழியில்லை. ஏதோ செய்கையில் தோழனோடு பேசிக் கொண்டிருந்தாள். சுருள் சுருளாகத் தொங்கிக் கொண்டிருந்த முடி கற்றைகளும் கணுக்கால் வரை இருந்த சிகப்பு நிற கௌனுமாக அழகாகவே இருந்தாள். இன்று, தன் மகளை அவள் நினைவு படுத்தவில்லை என்றாலும் ஏனோ அவனால் அவன் பார்வையைத் திருப்ப முடியவில்லை.

       “என்ன டா வந்துட்ட?” என அவனைத் தேடி வந்த விக்ரமிடம், “ஃபோன் டா. அம்மா கூப்பிட்டாங்க. பேபி தூங்காம என்னை கேட்டுட்டு உக்காந்திருக்கா” என்றான்.

“அப்போ கிளம்பறோமா?” என ஏக்க மூச்சு விட்டவனிடம், “10 நிமிஷத்துல நான் கிளம்பறேன். நீயும் நேரத்துக்கு கிளம்பு.” என்றவனிடம் கையோடு கொண்டு வந்திருந்த பியர் பாட்டிலை நீட்டினான் விக்கி.

       ‘என்ன?’ என்பது போல் இவன் பார்க்க, “கண்டிப்பா உனக்கில்ல. நீ கையில வச்சிருக்கதயே குடி! இப்போ… பிடி இத. ஷூ லேஸ் கட்டணும்.” என அவன் கையில் பியர் பாட்டிலைத் திணித்தான். கையில் இருந்த பியரை பார்த்தான் கௌதமன். மனம் போல் குடித்த காலம் ஒன்றிருந்தது. அன்று ‘ஒரு நாள் நீ குடிப்பதை நிறுத்துவாய்’ எனக் கடவுளே கூறியிருந்தால் கூட சிரித்திருப்பான்.

       பரலோகம் சென்று கொண்டிருந்த உயிரைக் கட்டி இழுத்து வந்த அறுவை சிகிச்சைக்குப் பின் இதெல்லாம் அவனுக்குக் கூடவே கூடாது என்றுவிட்டார் மருத்துவர். ‘அதனால் தன்னை மாற்றிக் கொண்டானா?’ எனக் கேட்டால், கண்டிப்பாகக் கௌதமன் அதற்கும் சிரிப்பான். இந்த மாற்றம் அவன் மகளுக்காக மட்டுமே. குடித்துவிட்டுச் சென்றால், அவன் குட்டி பூ குவியலைக் கொஞ்ச முடியாது. விளையாட முடியாது. கட்டிக் கொண்டு நிம்மதியாகத் தூங்க முடியாது. மகளா? இல்லை போதையா? என வந்ததால், மகளைத் தேர்ந்தெடுத்தான் கௌதமன்.

       விக்கியோடு பேசிக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை அவ்வப்போது அவளையே சுற்றியது. அவள் கைகளை ஆட்டி, கண்ணை உருட்டி, உதட்டை அளவிற்கு அதிகமாக அசைத்தது, ‘அப்பா அப்பா’ என அவன் மகளும் இப்படித் தானே அபிநயம் படிப்பாள் என எண்ண வைத்தது. ஆர்வப் பார்வையோடு சற்று ரசனையையும் கூட்டியது அவன் பார்வையில்.  வெறும் ஆர்வமும் ரசனையும் மட்டுமே. நாளையே அவளை மறந்து போகும் ரசனை மட்டுமே அவனிடம்.

       “ஏய் அந்த ரோமியோவ பாரேன். நானும் அப்போல இருந்து பார்க்கிறேன் கண்ணால உன்ன முழுங்கிட்டு இருக்கான்.” என அவன் பார்வையை அவள் கவனத்திற்குக் கொண்டு வந்தாள் ஸ்வர்ணா.

      

       கோப்பை ஒரு கையிலும் பியர் பாட்டில் ஒரு கையிலுமாக ஒரு நல்ல குடிமகனாக நின்றிருந்த அவனைப் பார்த்த யசோவிற்கு ரவிக்கைக்குள் விழுந்த கற்கண்டு தான் முதலில் நினைவு வந்தது. அவன் ரசனையான பார்வையைப் பார்த்தவளுக்கு ‘சரியான குடிகார பொறுக்கியா இருப்பான் போல’ என எண்ணாமல் இருக்க முடியவில்லை. எப்படியோ அவனையறியாமலே நல்ல பெயரைச் சம்பாதித்து விட்டிருந்தான் அவளிடம். வருடம் முன்பு தாடியும்… மீசையும்… கொண்டையுமாகக் குட்டி மேகக் குவியலை கையில் ஏந்தி நின்றிருந்தவன் இவன் தான் எனத் தெரிந்திருந்தால் இப்படி நினைத்திருக்க மாட்டாளோ என்னவோ. ஆனால் இன்றைய அவனின் பார்வையால், அவள் பார்வையும் மாறிப் போனது.

       நேரம் கடந்தது. கூட்டம் கலைந்து செல்வதாகவும் தெரியவில்லை எனவும், தான் கிளம்புவதா கூறிவிட்டு கட்டிடத்திற்குள் இருந்த கழிவறையை நோக்கிச் சென்றாள். இயற்கையின் அழைப்பை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக வெளிவரவும் ஒருவன் இடித்தான். சுதாரிக்கும் முன் யாரோ அவளின் பின்புறத்தை அழுத்திப் பிடித்துவிட ஒரு நொடி ஒன்றுமே ஓடவில்லை பெண்ணிற்கு.  இதுபோல் அவளுக்கு நிகழ்ந்ததே இல்லை. போதாத குறைக்கு இப்பொழுது அவள் மீதும் மதுவின் வாடை வீசியது.

       படபடப்பை அடக்கிக் கொண்டு திரும்பவும் தன்னை பார்த்து நமுட்டுச் சிரிப்பைச் சிரித்துச் செல்லும் ‘அந்த வழிசல் பேர்வழியை’ பார்த்தாள். அவளின் வழிசல் பேர்வழி, அதாவது கௌதமனோ மகளோடு கதைத்துக் கொண்டிருந்தான்.

       “நீ இன்னும் தூங்கலையா பேபி? அப்பா கிளம்பிட்டேன் டா பேபி. நீ பெட்ல படுத்துட்டு கண்ண மூடி வெயிட் பண்ணுவியாம்… அப்பா வந்துடுவேனாம். உம்மா உம்மா” எனக் கைப்பேசி வழியே வாங்கிய முத்தத்தை மகளுக்குத் திருப்பிக் கொடுத்து கைப்பேசியை அணைத்தவன் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.

       “மச்சான்” என்ற பரிச்சயமான குரலுக்குக் கௌதமன் திரும்பிப் பார்க்க, ‘அவள்’ இவனை முறைத்துக் கொண்டிருந்தாள். ‘இவளா?’ என நினைத்தவன் அதே சிரித்த முகம் மாறாது திரும்பி நடக்க ஆரம்பித்தான். “என்ன கோபம் வருது என் பொண்ணுக்கு? இப்போவே இப்படி மிரட்டுறா… இவ வளர வளர எப்படிச் சமாளிப்பேனோ?” எனத் தனக்குள் முனகிக் கொண்டே கழிவறையை நோக்கி தன் நடையைத் தொடர்ந்தான்.

       அன்றும் இப்படித் தான் தன் ரவிக்கைக்குள் கற்கண்டைப் போட்டான், அவளைப் பார்த்துக் கொண்டே யாருடனோ பேசுவது போல் ‘பேபி’ எனக் குழைந்தான். இன்று… ச்சீ என்ன மனிதன் இவன்? மதுவின் வாடையோடு நின்றிருந்த அவன் முன் மூச்சு வாங்க அவள் நிற்கவும் ‘என்ன?’ என்பது போல் அவன் புருவம் உயர்ந்தது.  “குடிகாரப் பொறுக்கி” என்பது அவளின் வாயசைவு காட்டிக் கொடுக்க, நெற்றி சுருங்க அவளைப் பார்த்தான்.

       ஐந்தடி ஆறங்குலம் இருந்தவளுக்குப் போட்டிருந்த இரண்டரை அங்குலக் குதிகால் செருப்பும் வசதியை அதிகரிக்க, விட்டாள் ஓர் அறையை அவளின் முழுப் பலன் கொண்டும். வாங்கியதை அதே வேகத்தில் கொடுக்க வந்தவன் கரம் அவள் கன்னம் தொடும் முன் நின்றது.

       கைமுஷ்டி இறுக, பிடரியை அழுந்த தேய்த்தவன் பற்களைக் கடித்து கோபத்தை அடக்கினான்.  “ஏய்… லூசா நீ?” எனப் பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்ப, அவளோ அவனைக் கடித்துக் குதறும் வெறியோடே நின்றிருந்தாள்.  அங்கிருந்த ஐந்தாறு பேரின் முழுக் கவனமும் இவர்கள் பக்கம் திரும்ப… அங்கு நிற்க அவனுக்குச் சங்கடமாகப் போனது. “திரும்பி ஒண்ணு வச்சேன்… இங்கயே செத்துடுவ. போடி” என்றவன், “கிறுக்கா இருக்கும் போல” எனத் திட்டிக்கொண்டே மீண்டும் விட்ட நடையைத் தொடர்ந்தான்.

       “என்ன யசோ என்ன ஆச்சு?” என ஓடி வந்தான் விஹான். ஒன்றும் இல்லை என்பது போல் தலையசைத்தவளின் கோபமும் அடங்கவில்லை. படபடப்பும் நிற்கவில்லை.

       இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுவது இது முதல் முறை அல்ல… நான்காவது முறை. ஆனால் கவனித்து, நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்குக் கவனித்ததில்லை. இன்றும் அப்படியாகக் கடந்திருக்க வேண்டியது… ஆனால் நாளையே மறக்க வேண்டிய முகங்கள் மறக்க முடியா முகங்கள் ஆகிப்போனது.

       வீட்டிற்கு வந்த கௌதமன் நேரே அறைக்குச் சென்றான். மகள் அவன் தலையணையின் மீது குப்புறப் படுத்திருந்தாள். மகளின் உறக்கத்தைக் கலைக்க விரும்பாது குளித்து வந்தான். தூக்கம் பிடிக்கவில்லை. பால்கனிக்கு சென்றான். செனட்டாப் ரோட்டில் இருக்கும் வீட்டிலிருந்து என்ன பார்த்திட முடியும்? அவன் வீட்டுத் தோட்டத்தையும் மதில் சுவரையும் தவிர?

       கட்டிடங்களைப் பார்க்க விருப்பம் அற்றவனாக வானைப் பார்த்தான். மூன்றாம் பிறை அவனை வசியம் செய்யவில்லை. நெஞ்சு முட்டக் கோபமும் எரிச்சலும் மண்டி கிடக்க, புகை கொண்டு அதை அடக்கினால் என்ன என்று தோன்றியது. புகைவண்டி போல் புகைத்துத் தள்ளிய காலங்கள் நினைவு வந்தது. மனம் சிகரெட்டிற்காகப் பரபரத்தது. என்னைப் பார்த்து குடிக்கார பொறிக்கின்னு சொல்றா… ஒரு பெக் அடிச்சிருக்கணும், என தான் மது அருந்தாதற்கு மனம் வருந்தினான். அதற்கு மேல் முடியாதவனாகச் சிகரெட் வாங்க முடிவெடுத்தவனாகத் திரும்பவும், “ப்பா.. வந்தியா?” என கையில் நாய் பொம்மையோடு தூக்கக் கலக்கத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டு மகள் நின்றிருந்தாள்.

       மகளை அப்படியே அள்ளி வாரிக் கொண்டான் கௌதமன். ஆசை தீர இரு கன்னங்களிலும் முத்தம் வைத்தான். அந்தத் தூக்கக் கலக்கத்திலும்,  “சாப்பியா அப்பா?” எனத் தகப்பனின் வயிற்றைப் பற்றி விசாரித்தாள் கௌதமனின் செல்ல மகள்.

       “சாப்பிட்டேன் டா பேபி” என மகளை அணைத்துக் கொண்டவனின் தோளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே, “சூங்கு அப்பா” எனக் கண்களை மூடினாள் குழந்தை. “தூங்கறேன் மா” என்றவன் மகளை நெஞ்சில் போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டான்.

       தவம் செய்யாது வரம் கிடைக்குமா? கௌதமனுக்கு கிடைத்த வரத்தை அன்போடு அணைத்துக் கொண்டான். பரபரப்பு அடங்கி மனம் நிர்மலமாக இருந்தது. “தேங்க்ஸ் பேபி” என மகளின் உச்சந்தலையில் முத்தம் வைத்தவன் நிம்மதியாக உறங்கிப் போனான்.

       தனக்கான நிம்மதியைக் கௌதமன் கண்டு பிடித்திருக்க, அதைத் தொலைத்தவளுக்குத் தூக்கம் வருவேனா என்றிருந்தது. உணர்வுகளை எல்லாம் துறந்திருந்த தனக்குள் எப்படி இவ்வளவு கோபம்? கடந்து சென்ற மூன்று வருடங்கள் இழப்பின் வலியைக் குறைத்துவிட்டதா? வலியைத் தாண்டி மற்ற உணர்வுகளை மனதால் உணர முடிகிறா? அவன் நினைவுகள் என்னை விட்டுச் சென்றுவிடுமோ? நிம்மதியைக் குலைக்கவென பல கேள்விகள் எழுந்தன. அவளின் அபத்தமான கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் கொடுப்பவன் அருகில் இல்லை.

       ஜன்னல் வழியே பிறை நிலா தெரிந்தாள். ‘நீ சூரியன் நான் வெண்ணிலா, உன் ஒளியில் தானே வாழ்கிறேன்’ என்ற குரல் தனக்குள் ஒலிக்க, மனம் தன் நிம்மதியைத் தேடி பயணம் மேற்கொண்டது. தேடிய நிம்மதி கிடைத்ததா என யசோவின் ஏறி இறங்கும் மார்பு கூண்டிற்குள் அடங்கி இருக்கும் இதயம் தான் கூறவேண்டும்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!