Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

3 பேர் 2 காதல் 1 கனவு

3…2…1…(3 பேர்…2 காதல்…1 கனவு…) Episode 1 : விடியமுடியா இரவு

இருண்ட வானத்தைக் கம்பளி போல இறுக்கமாய்ப் போர்த்திக்கொண்டிருந்த கார்மேகங்கள், கண்ணீரால் முட்டிக்கொண்டு அழுவதற்குத் தயாராக இருந்தன.     விசையற்ற இசையைப் போல, நட்சத்திரங்களற்ற அந்த அமாவாசை இரவானது திசையற்று, நிலவில்லாத வெறுமையால் வெதும்பிக்கொண்டிருந்தது. அந்த இறுக்கமான இருளில், அன்று போட்டியில் வென்ற கோப்பையைக் கொண்ட தனது தோள்பையோடு பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தாள் கார்த்திகேயினி. சென்னையைத் தாண்டி ஊருக்கு வெளியேயிருந்த சிறிய பேருந்து நிறுத்தம் என்பதால், வெகு சில நபர்களே அங்கிருந்தார்கள். வரவேண்டிய நேரம் கடந்து அரைமணி நேரமாகியும் பேருந்து வராததால், அந்த ஆள்நடமாட்டமில்லாத நெடுஞ்சாலையைப் பார்த்தபடியே நேரப்போகும் காயங்கள் பற்றி அறியாது நின்றுகொண்டிருந்தாள் கார்த்திகேயினி.

அவள் நின்றிருந்த சாலையில் பேருந்து நிறுத்தம் தவிர, அடுத்து ஒரு பெட்ரொல் பங்க்கும் அதன் அருகில் இரண்டு லாரிகளும் நின்றிருந்தன. அவற்றின் டிரைவர்களும் க்ளீனர்களும், லாரி ஒன்றின் அருகில் நின்று புகையிலை பிடித்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள். நேரமாகிக்கொண்டேபோக, பேருந்து வரும் அறிகுறி எதுவும் தெரியாததால், பெட்ரொல் பங்க்கில் இருந்த கழிப்பறைக்குச் சென்று வந்துவிடலாமா என்று யோசித்தாள். அருகில் நின்றிருந்த பெண்ணிடம், “அக்கா பஸ் வந்தால், கொஞ்சம் நிக்கச் சொல்லுங்க. ரெண்டு நிமிஷத்தில வந்துடுறேன்”, என்று வேண்டியபடிக் கேட்டுக்கொண்டவாறே, அடுத்திருந்த பெட்ரொல் பங்க்கை நோக்கி நடந்தாள்.

வழியில் லாரி டிரைவர் ஒருவன் தன்னைக் குறுகுறுவென பார்ப்பது அவளுக்கு அருவெருப்பை ஏற்படுத்தியது. அந்தக் கீழ்த்தரமான பார்வையைக் கவனிக்காதது போல வேறு பக்கமாக பலவந்தமாக அவள் முகத்தைத் திருப்பியபடி நடந்தாள்.  ஒருவாறாக அவர்களைக் கடந்து  பெட்ரொல் பங்க்கில் உள்ள கழிப்பறைக்குள் சென்றாள். சிறுநீர் கழித்துவிட்டு கார்த்திகேயினி, வெளியே செல்ல கதவைத் திறக்க முயல, அது திறக்க மறுத்தது.

கதவை அழுத்தி தள்ளினாள். அது திறக்கவே இல்லை. ஓங்கித் தட்டினாள். அது திறக்காமல் திடமாய் நின்றது. கதவை யாரோ வெளியே தாழிட்டுவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டாள். கையிலிருந்த போனில் தந்தையை அழைக்க முயன்றாள். நெட்வொர்க் சுத்தமாக இல்லை. மூளையும் சிந்திக்க மறுத்தது. ”யாராவது இருக்கீங்களா? கதவைத் திறங்க. பஸ் வந்துடும். ப்ளீஸ் திறந்துவிடுங்க!”, கதறினாள் கார்த்தி. எந்த பதிலும் வரவில்லை.



Advertisement

வாசலில் ஒரு வயதான தாத்தா, வீற்றிருந்தது நினைவுக்கு வர, அவரைக் கூவி அழைத்தாள். “தாத்தா! காப்பாத்துங்க, கதவைத் திறந்துவிடுங்க! ப்ளீஸ்!” அழுத படியே அந்த கறைபடிந்த கழிப்பறை சுவரில் சாய்ந்தாள். பஸ் வந்த சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் அது அவ்விடத்தை விட்டு நகரும் சத்தமும் கேட்க, மரணபீதி அவளை ஆட்கொண்டது. முழு உடம்பும் நடுங்கத் தொடங்கியது. இதயத் துடிப்பு வானை எட்டியது. அந்த இருண்ட வானம் அவளுடன் சேர்ந்து ‘ஓ’வென அழத்தொடங்கியது. மின்னலுடன் கூடிய இடிச்சத்தமும், மழையின் இரைச்சல்சத்தமும், அவள் கைகள் சிவக்கத் தட்டிய கதவின் சத்தமும் ஒன்றோடொன்று போட்டி போட்டபடி புவியை அதிரவைத்தன.

நேரம் செல்ல செல்ல, வாழ்வின் அனைத்து நம்பிக்கைகளையும் இழந்துகொண்டிருந்தாள் கார்த்திகேயினி. யாரும் எதிர்பாராத அந்த நொடியில் அந்த கதவு திறந்தது. அது அவளுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது. திறந்திருப்பது நரகத்தின் கதவு என்பதை அவள் அறியவில்லை.

”என்னம்மா நீ! இப்படி கடைசி பஸ்ஸையும் தவறவிட்டுட்டு நிக்குற. இப்ப என்ன செய்யப் போற”, எமனாய் நின்ற தாத்தா கேட்க, சொல்வதறியாது திணறி நின்றாள் அவள்.

Advertisement

“சரி முதல்ல வெளிய வா.”, அவர் கூற, அவளும் பயந்துகொண்டே வெளியே வந்தாள். அதே சமயத்தில், லாரி டிரைவர்களுக்கு அந்த தாத்தா சைகை செய்ய, அவர்களும் அங்கே வந்தார்கள். அவளைக் குறுகுறுவென பார்த்த டிரைவரும், இன்னொரு டிரைவரும், ஆஜானுபாகுவான உடலைக் கொண்டு இரக்கமற்ற அரக்கர்களாய்த் தென்பட்டார்கள்.

Advertisement

சற்று மெலிந்த சரீரம் கொண்ட க்ளீனர்கள், சூனியம் நிறைந்த சைத்தான்கள் போல இருந்தார்கள்.

நால்வரும் அவளைச் சூழ்ந்தபடியே நிற்க அந்த குறுகுறு நபர் பேசத் தொடங்கினான். “ஏ பொண்ணு! அடுத்த பஸ் காலையில ஆறு மணிக்குத் தான் வரும். இந்த மழையில நீ எங்கேயும் போகவும் முடியாது. வந்து எங்கக்கூட லாரியில தங்கிடு. விடிஞ்சதும் முதல் பஸ்ஸில வீட்டுக்குப் போயிடலாம்”, அவன் கூறிக் கொண்டிருந்த போதே, கண்ணிமைக்கும் நொடியில் அவள் மழையின் வெளியில் நனைந்தபடியே ஓடத்தொடங்கினாள்.

நால்வருக்கும் கோபம் தலைக்கேற, பேய்மழையையும் பொருட்படுத்தாது அவர்களும் அவளைத் தேடத் தொடங்கினார்கள்.

Advertisement

இருள்படிந்த ஒரு புதரின் நடுவே சப்த நாளங்களையும் அடக்கியபடி அவள் அமர்ந்திருந்தாள். என்ன செய்வது என்று மூளைக்கு தெரியாதபோதும், எதையாவது செய்ய வேண்டுமே என்று மனது பதை பதைத்ததால், கையிலிருந்த மொபைலில் தந்தைக்கு மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றாள்.

இம்முறை நெட்வொர்க் கிடைத்ததால், ரிங் சத்தம் கேட்டது. முழு ரிங் போய், தந்தை எடுக்காததால் அழைப்பு துண்டிக்கப்பட்டது. போலீஸுக்கு கால் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுக்கு எழுந்தது. மழையும் அடித்து ஓய்ந்து மயான அமைதி நிலவியது. அவசர அவசரமாக அவசர எண் ‘100’க்கு அழைத்த அதே நேரம், நடமாடும் கால்களின் சத்தம் அவளுக்கு வெகு அருகில் கேட்டது. அழைப்பை துண்டித்தபடியே அழுகையுடன் கூடிய விசும்பலையும் அடக்கியவாறு மூச்சு பேச்சின்றி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

சுற்றும் முற்றும் எந்த சலனமும் இல்லாததால், கால்சத்தம் மறையத் தொடங்கியது. அவள் பெருமூச்சு விட்ட அதே நொடி, “வாழா என் வாழ்வை வாழவே… தாழாமல் மேலே போகிறேன்..”, அலறியபடி அவள் மொபைல் கதற, அவளது தந்தையின் அழைப்பு ஸ்க்ரீனில் தெரிந்தது. பதறியபடி உடனே அதைத் துண்டித்தபோதும், சத்தம் அனைவரையும் சென்றடைந்திருந்தது.

“இங்கதான் ஒளிஞ்சிருக்காடா!, எல்லாரும் இந்தப் பக்கம் வாங்க!” கணீரென்று ஒருவன் மற்ற மூவரையும் அழைக்க, நால்வரும் அவள் இருக்கும் இடத்தை நெருங்கி வர, புதரை விட்டு எழுந்து ஓடத்தொடங்கினாள்.

இருட்டில் மறைந்திருந்த ஒரு கல் இடறி, தொம்மென அந்த மழைநீர் வரைந்த குளத்தில் விழுந்து சரிந்தாள், கார்த்திகேயினி.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!