Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

3 பேர் 2 காதல் 1 கனவு

3..2..1 Episode 6. தாரா நாதிரா

”தட்டுல அந்த தோசையை எவ்வளவு நேரம்தான் இப்படி வேடிக்கைப் பார்த்துக்கிட்டிருப்ப. தோசை பாவம்டி, வகுப்புக்கு லேட்டாகப் போனால் இன்னிக்கும் கடைசி வரிசைதான். சீக்கிரமாக சாப்பிடு கார்த்தி”, வசந்தி கடிந்துகொள்ள தட்டிலிருந்த தோசையை பார்த்தபடி, சட்டினியாலும், சாம்பாராலும் தோசையின் மேல் ஓவியம் வரைந்துகொண்டிருந்த கார்த்தி, அதை நிறுத்திவிட்டு, முதல் துண்டை வாயில் போட்டு, அந்த தோசைக்கு மோட்சம் கொடுத்தாள்.

“வசந்தி, நீ போய் முதல் வரிசையிலே சீட் பிடி. நான் பில்லைக் கட்டிட்டு, மதியத்துக்கும் சேர்த்து பார்செல் வாங்கிடுறேன். மதியம் வகுப்பிலேயே சாப்பிட்டுக்கலாம்..”, கார்த்தி தோசையை மென்றுகொண்டே கூற, தலையசைத்தபடி வசந்தி வகுப்பறைக்கு விரைந்தாள்.

சாப்பிட்டு முடித்து பில்கட்டி, மதியம் பார்சலுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோதுதான், டிஃபன் சென்டரில் நின்றுகொண்டிருந்த அந்த நபரைக் கார்த்தி கவனித்தாள்.

சட்டை பல இடங்களில் கிழிந்து, முடி களைந்து சுருண்டு, கூனிக் குறுகி, கண்கள் ஒளியிழந்து, இளமையிலும் முதுமையாய், தனக்குள்ளேயே எதோ முணுமுணுத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களிடம் கையேந்தி பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான் அந்த பைத்தியம் போலத்தெரிந்த பிச்சைக்காரன்.



Advertisement

“சீ தூரப்போ! காலையிலேயே சாவுகிராக்கி வந்துடுச்சு!” அந்த பிச்சைக்காரனை விரட்டியபடியே கார்த்தியிடம் பார்சலைக் கொடுத்தான் கடைகாரன்.

பார்சலை வாங்கியும் அந்த பிச்சைகாரனை விட்டு அவளது கண்கள் நகர மறுத்தன. அவனைக் காண காண, ஏதோ ஒரு மரண வலி மனதைப் பிசைந்தது. தனக்குள்ளே தேக்கி வைத்த அனைத்துச் சோகங்களின் மொத்த உருவமாய் அவனை அவள் கண்டாள்.

அவன் மிது பரிதாபமோ, பாவமோ அவளுக்கு எழவில்லை. அதற்குப் பதிலாக பாசம் பொத்துக் கொண்டு எழுந்தது. தன்னைக் கண்ணாடியில் காணும் பிரதியாக அவனைக் கண்டாள்.

Advertisement

ஓடிச்சென்று, தன் கையிலிருந்த சாப்பாட்டுப் பார்சல்களை அவனிடம் கொடுத்தாள். வேகவேகமாக அவற்றைப் பிரித்தபடி பலநாள் பசியை அவன் அவசர அவசரமாகப் போக்கிக் கொண்டிருந்தான்.

Advertisement

வாயில் திணித்த துண்டுகள், தொண்டையில் சிக்கி விக்கல் வர, தன் பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து அவனிடம் நீட்டினாள். அவன் வாங்க மறுத்ததால், கடையில் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி, அவனிடம் தர, அவன் ஆனந்தமாய் அதை வாங்கிக்கொண்டு தண்ணீர் குடித்தான்.

அவன் உண்பதையே ஆர்வமாக அவள் பார்த்துக் கொண்டிருக்க, “கார்த்திகேயினி.. வகுப்புக்கு நேரம் ஆகலை?”, என்ற கணீர் குரல் அவளை நிஜ உலகத்துக்கு மீட்டு வந்தது. கூறிய நபரை கார்த்தியால் சுத்தமாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

ஒளி பொருந்திய கண்கள், மிலிட்டரி கட் செய்து நேர்த்தியாக நின்ற முகம், முறைப்படி பயிற்சிசெய்து மெருகேறிய உடல் எனப் பார்ப்பதற்குத் தனிப் பொலிவுடன் இருந்தான். ஒருமுறை பார்த்தால் கூட மறக்கக்கூடிய முகமில்லை அவனது முகம். அப்படியிருக்க, தனது பெயரை அவன் தெரிந்திருக்க, அவனைப் பற்றி தனக்கு எதுவும் தெரியவில்லையே எனக் குழம்பினாள்.

Advertisement

அவனிடமே கேட்டுவிடலாமா என்று ஒரு நொடி அவள் சிந்திக்க, தெரியாதவர்களிடம் அமைதி காப்பதே நல்லது என உடனே அச்சிந்தனையை நீக்கி, அவனைக் கண்டுகொள்ளாமல் வகுப்பறைக்கு நடக்கத் தொடங்கினாள்.

முதல் வரிசையில் ஆவலோடு சேதுவும், வசந்தியும் அமர்ந்திருக்க, கையசைத்தபடியே கார்த்தியை அருகில் இருந்த இருக்கைக்கு அழைத்தாள் வசந்தி.

“எவ்வளவு நேரம் கார்த்தி… இந்த சீட்ட காப்பாத்துறதுக்குள்ள எத்தனை பேர்கிட்ட சண்டை போட வேண்டியிருக்குது. முடியலடி.. அதுசரி மதியத்துக்குப் பார்சல் எங்கேடி?”, வசந்தி கேட்க, மீண்டும் மீண்டும் மனதில் பளிச்சிட்டுக் கொண்டிருந்த அந்த முகத்தை நீக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த கார்த்தி, வசந்தியின் காதுகளில் மெதுவாகக் கூறத் தொடங்கினாள்.

“டிஃபன் சென்டர்ல நான் நிக்கும்போது, யாருன்னே தெரியாத ஒருத்தன் என் பேரைச் சொல்லி வகுப்புக்கு நேரம் ஆகலையான்னு கேட்டான்டி. பார்க்க ஆள் ஹீரோ மாதிரி இருந்தான். நிச்சயமா நம்ம க்ளாஸ் பையன் இல்லை. யாராயிருக்கும்?”, கார்த்தி யோசித்தபடியே கூற, வசந்திக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ”நான் என்ன கேட்டேன்! நீ என்ன பதில் சொல்ற?”, வசந்தி வெடிக்க, சேது இடையில் புகுந்தான்.

“கார்த்தி, வந்ததுலயிருந்து கேட்டுட்டே இருந்தியே! எப்போ வரலாறு வகுப்பு வரும்னு! இன்னிக்கு முதல் வகுப்பே வரலாறுதான். அதைவிட ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்றேன். இரண்டு பேரும் கேளுங்க. நேற்று வரைக்கும், உதயன் சார்தான் நமக்கு வரலாறு எடுப்பதாக இருந்துச்சு. என்ன நடந்ததோ தெரியல. அவர் பக்கத்து வகுப்புக்குப் போயிட்டார். நமக்கு வரலாறு சொல்லிக்கொடுக்கப் போறது, கதிரவன் சார்..! எல்லாரும் கூப்பிடறது, கதிர் சார், தி க்ரேட்!”, சேது குதூகலமாய்க் கூற, “எந்த சாராக இருந்தால் நமக்கென்ன? நீ ஏன் இவ்வளவு குதிக்குற”, என்று சலித்துக் கொண்டாள் வசந்தி.

“கதிர்சார் பத்தி தெரியாத பொண்ணுங்கள இப்போதான் பார்க்கிறேன். புவி ஐ.ஏ.எஸ். அகாடெமிக்கு முக்கால்வாசி பேர் படிக்க வர்றதே கதிர் சாருக்காகத்தான். அவ்வளவு சூப்பராக சொல்லித்தருவாரு நம்ம சார். வரலாறு மட்டுமில்ல, எந்த பாடத்தில என்ன கேள்வியைக் கேட்டாலும் புரியும்படி அழகா சொல்லித்தருவாரு. ஆளு பார்க்கவும் டாப் டக்கரா இருப்பாரு”, சேது கூறிக்கொண்டே போக, “நிறுத்து, நிறுத்து, நீ சொல்றதெல்லாம் பார்த்தால், சார் இந்நேரத்துக்கு கலெக்டராகியிருக்கணுமே. இங்க என்ன பண்றாரு”, வசந்தி கிண்டலடிக்க, கார்த்தியும் குபுக்கென்று சிரித்தாள்.

“அவரோட போதாக்காலம். இப்போ அஞ்சாவது முறையா மெய்ன்ஸ் முடிச்சுட்டு, இண்டெர்வியூக்காக வெயிட் பண்றார்!”, சேது சோகமாகக் கூற, “ஆமாமா இண்டெர்வியூல நிச்சயம் ஜெயிச்சிடுவார். வகுப்புக்குக் கூட சரியான நேரத்துக்கு வர முடியல…மணியப் பாரு. ஏற்கனவே பதினைஞ்சு நிமிஷம் லேட்!”, கார்த்தி கூறிக்கொண்டிருந்த அதேநொடி கதிர் உள்ளே நுழைந்தான்.

அனைவரும் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அவனைக் கண்டு வாயடைத்து நின்ற வசந்தி, சேதுவிடம் “கதிர்சார் வருவார்னு சொன்ன. இங்க ஒரு ஐ.பி.எஸ் ஆஃபீஸர் வந்து நிக்குறார்!”, மெதுவாகக் கூறினாள்.

“இவர்தான் கதிர்சார். ஐ.பி.எஸ். ஆஃபீஸராகுறதுதான் அவரோட கனவு. மனுசன் நடை, பாவனை, எல்லாமே போலீஸ் ஆஃபீஸர் மாதிரிதான் இருக்கும்!”, சேது கூறிமுடிப்பதற்குள்ளேயே வசந்தி குறுக்கிட்டாள்.

“நம்ம அகாடெமிய பாருடி, மாநிலத்துலயே  சிறந்த ஆசிரியர்கள்தான் பாடமெடுப்பாங்கன்னு சொல்லி, ஃபெயிலானவங்களைக் கூட்டிட்டு வர்றாங்க!”, வசந்தி கூற, சேதுவுக்கு ஆத்திரமாக வந்தது.

“ஃபெயிலானவங்களுக்குத்தான் தவறுகள் தெரியும். நாம அதே தவறுகளைச் செய்ய முடியாதபடி சொல்லித் தரமுடியும். கதிர்சார் இந்தமுறை நிச்சயம் இண்டெர்வியூல ஜெயிச்சிடுவார்!”, ஆணித்தரமாக சேது கூற, அவன் கூறியது எதையும் காதில் வாங்காத கார்த்தி பேயறைந்தது போலிருந்தாள்.

காலை டிஃபன் சென்டரில் அவள் கண்ட அந்த பொலிவான முகம், கதிரின் முகம்தான். ஒருவேளை, காலையில் தான் கண்டது கனவா எனக் குழம்பித் தவித்தாள். அதெப்படி, பார்க்காத ஒருவரை தெள்ளத் தெளிவாகக் கனவில் காண முடியும்? நிச்சயமாக அது கனவாய் இருக்க முடியாது. பின் அவனுக்கு எப்படித் தன்னைப் பற்றித் தெரிந்திருக்க முடியும்? குழம்பியவாறே கார்த்தி முதல் வரிசையில் யோசித்துக் கொண்டிருக்க, கதிர் பேசத் தொடங்கினான்.

“ஹை ஆல். நான் கதிர். அஞ்சாவது அட்டெம்ப்ட்ல இண்டெர்வியூக்கு  வெயிட் பண்றேன். உங்களுக்கு வரலாறு வகுப்பு எடுக்கப் போறேன். ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, உங்க பேரு, நீங்க எங்கேயிருந்து வர்றீங்கன்னு சுருக்கமாக சொல்லுங்க”, கதிர் நிறுத்தி முதல் வரிசையைப் பார்க்க, முதலில் வீற்றிருந்த சேது எழுந்து தன் பெயரையும், ஊரையும் கூறினான். அடுத்து வசந்தி கூற, அவளைத் தொடர்ந்து கார்த்தி எழுந்தாள். கார்த்தியைத் தெரிந்தது போல எந்த முகபாவமும் அவனிடம் இல்லை. ”கார்த்திகேயினி, களக்காடு”, அவள் கூறி முடித்ததும் அடுத்த நபரிடம் சென்றான்.

காலையில் ஏற்பட்டது வெறும் மனப்பிரம்மைதான் என்று தீர்மானமாகத் தெரிய, டிஃபன் சென்டர் முகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள் கார்த்தி.

அனைவரும் பெயர்களைக் கூறி முடித்ததும், மீண்டும் தொடர்ந்தான் கதிர். “பல ஊர்கள்லேயிருந்து இங்கப் படிக்க வந்துக்கீங்க. உங்க எல்லார்கிட்டயும் நான் சொல்றது ஒரே ஒரு விஷயம்தான். நேரம்… யாருக்காகவும் அது நிக்காது. அதை யாருக்காகவும் நீங்க வீணடிக்காதீங்க. அந்தந்த நேரத்தில, நாம பண்ற சரிகளும், தவறுகளும்தான் நம்ம வாழ்க்கையையே எழுதுறது. நம்ம வாழ்க்கை மாதிரியே, பல நேரங்கள்ல பல மனிதர்களோட முடிவுகள் எப்படிக் காலத்தையே புரட்டிப் போட்டதுங்கிறதுதான் நாம வரலாறுல படிக்கப்போறது. இப்ப உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன். நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க! இந்த நிகழ்வுகள் நடந்திருந்தாலோ, அல்லது நடக்காமலிருந்தாலோ, இந்திய வரலாறே மொத்தமாக மாறியிருக்கும்னு நீங்க நினைக்குற நினைவுகள சொல்லுங்க. நல்லா யோசிச்சு சொல்லுங்க. இந்திய வரலாற்றோட பாதையையே மாற்றிய நிகழ்வுகள்”, கதிர் நிறுத்த, அனைவரும் யோசிக்க, மிருணாளினி உடனே எழுந்தாள்.

“சார் … க்விட் இந்தியா மூவ்மெண்ட்… ஒருவேளை அது நடக்கலின்னா, இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்காமலிருந்திருக்கும். வரலாறே மாறியிருக்கும்.”, மிருணாளினி கூற, சிரித்தபடியே கதிர் கூறத் தொடங்கினான்.

“உங்க பதிலை என்னால ஏத்துக்க முடியாது. க்விட் இந்தியா மூவ்மெண்ட்னு சொல்லப்படுற வெள்ளையேனே வெளியேறு போராட்டம் ரொம்ப ரொம்ப முக்கியமானதுதான். ஆனால், அந்த ஒரு நிகழ்வுனால மட்டும் நமக்குச் சுதந்திரம் கிடைச்சிடல. அது நடந்து அஞ்சு வருஷம் கழிச்சுதான் நமக்கு விடுதலை கிடைச்சது. க்விட் இந்தியா மூவ்மெண்ட் மாதிரி பல பல போராட்டங்களோட பலன்தான் நாம வாங்கிய சுதந்திரம். அந்த ஒரு நிகழ்வால மட்டும்தான் நாம சுதந்திரம் வாங்கினோம்னு சொல்றது தவறு!”, கதிர் கூற, மிருணாளினிக்கு வியர்த்து ஊற்றியது.

“வேற யாராவது பதில் சொல்றீங்களா?”, கதிர் கேட்க, கடைசி வரிசையில் ஒரு மாணவன் எழுந்து, “சிப்பாய்க் கலகம் சார்.., இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்னு சொல்லப்படுற, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக 1857ல் நடந்த மாபெரும் கிளர்ச்சி சார். சிப்பாய்கள், ராணி லஷ்மிபாய், நானா சாஹெப் போன்ற சிற்றரசர்கள் பலரும் ஒன்றுகூடி முகாலய அரசரான பகதூர் ஷாவ இந்தியாவோட அரசர்னு அறிவிச்சு, சுய ஆட்சிக்காக முதல்முறையாகப் போராடுனாங்க. அந்த போராட்டமும், உயிர்த்தியாகங்களும் நடந்துருக்கலேன்னா, சுதந்திரத்தோட விதை மக்கள் மனசுல விதைக்கப்பட்டிருக்காது. சுதந்திர இந்தியா உருவாகியிருக்காது. யாருக்குத் தெரியும் இப்போதுகூட நாம பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ அடிமைகளாக இருந்திருப்போம்!”, அவன் கூறி முடித்தான்.

கதிர் மிகுந்த ஆனந்தத்துடன், “நீங்க சொன்னது, மிகச்சரி. 1857 போராட்டம் இந்திய வரலாற்றையே மாற்றுன மிகப்பெரிய போராட்டம். எல்லாரும் கைதட்டுங்க!”, கதிர் கூற, அனைவரும் கரகோஷம் எழுப்பினார்கள்.

தான் பேசலாமா, வேண்டாமா என்று கார்த்தி யோசித்தவாறே இருமனதாக கையைத் தூக்கிக் கீழே இறக்கிக் கொண்டிருக்க, சட்டென அவளிடம் திரும்பினான் கதிர்.

“ஏதோ சொல்லணும்னு நினைக்குறீங்க. ஆனால் ஏன் இவ்வளவு தயக்கம்? தைரியமாக எழுந்து சொல்லுங்க. தவறாகச் சொன்னால், நான் ஒன்னும் உங்களைக் கடிச்சுத் தின்னுட மாட்டேன்!“, கதிர் கூற, மாணவர்கள் சிலர் குபுக்கெனச் சிரித்தார்கள்.

“சார், தாரா ஷிகோவ், ஔரங்கஜீப்க்குப் பதிலாக அரசராகியிருந்தால், இந்தியாவோட வரலாறு முழுவதுமாக மாறியிருக்கும்!“, தயங்கியபடியே கார்த்தி கூற, “கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்க!”, சிந்தித்தவாறே கதிர் கேட்டான். கார்த்தி தொடர்ந்து பேசத் தொடங்கினாள்.

“சார், ஔரங்கஜீப் பற்றி எல்லாருக்கும் நல்லாவே தெரியும். முகலாய சாம்ராஜ்யம் வீழ்வதற்கு, அவர்தான் முக்கிய காரணம். தந்தையான ஷாஜஹானைக் கொடுமைப்படுத்தி, அரசராக வேண்டிய தன்னோட சொந்த அண்ணனான தாரா ஷிகோவ கொடூரமாகக் கொலை செய்து, கலைகளை அழித்து, கலைஞர்களை நாட்டை விட்டு அனுப்பி, கோவில்களைத் தரமட்டமாக்கி, முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அக்பர் விலக்கிய வரியை மீண்டும் கொண்டுவந்து, சிற்றரசர்களைச் சூறையாடி, விரிந்து கிடந்த முகலாய சாம்ராஜ்யத்தோட முழு அதிகாரத்தையும் மொத்தமாகக் கையிலெடுத்தார். தன்னோட அண்ணன் தாரா மேல மக்கள் அன்பு வச்சிருந்ததால மக்களையும் வெறுத்தார்.

எந்த ஒரு அரசன். முழு அதிகாரத்தையும் தன் கையில் மட்டுமே குவிக்கிறானோ, அவனுக்கு அடுத்து அந்த சாம்ராஜ்யம் நிச்சயமாக அழிஞ்சிடும். வரலாறு மீண்டும் மீண்டும் இதை நிரூபிச்சிட்டேதான் இருக்குது.

ஆனால் தாரா ஷிகோவ், மக்கள் விரும்பிய இளவரசனாக இருந்தார். ஷாஜஹானோட செல்லப்பிள்ளையாக அடுத்த அரசராக அறிவிக்கப்பட்டிருந்தார். அடுத்த “அக்பர்”னு முகால்ய சம்ராஜ்யம் முழுவதும் கொண்டாடியது. அது ஓரளவுக்கு உண்மையும் கூட. கலைகள்ல அவருக்கு ஆர்வம் அதிகம். கலைஞர்களை மிகவும் மதிச்சார். எல்லா மதக்கருத்துகளையும் மனதார ஏற்றார். இந்து வேதத்தையும், சூஃபி கருத்துகளையும் இணைத்து புதிதாக ஒரு சித்தாந்தம் உருவாக்க முயற்சி செய்தார். அக்பரை விடவும் ஒரு மிகச்சிறந்த பண்பு அவரிடம் இருந்தது. தனது மனைவியான நாதிராவை முழுசாக காதலிச்சார். நாதிரா அவரோட இதயத்தில இருந்ததால, ராஜ்யத்திற்காக, அவர் வேறு எந்தவொரு திருமணமும் செய்துக்கல. தனது ஓவியங்களைத் தனது நெருங்கிய தோழிக்குன்னு சொல்லி நாதிராவுக்குப் பரிசளித்தார்.

கைபிடித்த மனைவிய அவ்வளவு நேசிச்சவர், அரசராகியிருந்தால் மக்களை எவ்வளவு நேசிச்சிருப்பார்? தங்களை நேசிக்கிற அரசனுக்காக மக்களும், படைகளும் எந்த எல்லைக்கும் போவாங்க. அதிகாரம் பிரிந்திருந்தாலும் முகலாய சாம்ராஜ்யத்தை மேலும் பெருக்கியிருப்பார். நாட்டுக்குள் நுழைந்த ஆங்கிலேயர்களை வேரோட அழிச்சிருப்பார்.

ஒருவேளை தாரா அரசராகியிருந்தால், பிரிட்டிஷ் ராஜ்யத்தின் கீழே நாம போயிருக்கவே மாட்டோம். சுதந்திரப் போராட்டமும், உயிர்த்தியாகங்களும் தேவைப்பட்டிருக்காது. மக்களாட்சி வந்திருக்குமான்னு எனக்குத் தெரியாது. ஆனால், பிரிட்டிஷ் நம்ம பணத்தைச் சூறையாடியிருக்க முடியாது. 1947ல இருந்த ஏழ்மையான இந்தியாவ யாரும் கற்பனைகூட செஞ்சிருக்க முடியாது. பாகிஸ்தான் உருவாகியிருக்காது. ஜோதா அக்பர் காதல் கதைக்குப் பதிலாக, தாரா நாதிரா காதல் கதையை நாம பேசியிருப்போம்..”, இடைவிடாமல் கார்த்தி பேசிமுடிக்க முழு வகுப்புமே ஸ்தம்பித்து நின்றது.

நேரத்தைப் பார்த்த கதிர், “க்ளாஸ் முடிஞ்சுது. ப்ரேக் எடுத்துக்கோங்க” என்று கூறி விறு விறுவென வெளியேறினான். வசந்தியும் சேதுவும் முதல் முறையாகக் கார்த்தியை வேறு மாதிரியாக பெருமையாகப் பார்த்தார்கள்.

கார்த்தியை நோக்கி மிருணாளினி வேகமாக வந்தாள். “சூப்பர் கார்த்தி. வரலாற்றுல உன்னோட கருத்து ரொம்ப தெளிவாக இருக்குது. சட்டத்துல என்னோட அறிவு மாதிரி. ஆனால் தேர்வுல வரலாறு மட்டுமே கேட்கமாட்டங்கதானே!”, மிருணாளினி கூறி முடிப்பதற்குள் சேது குறுக்கிட்டான், “உன்னோட பிரச்சனை என்ன? உன்னைத் தவிர இங்க யாரும் எதுவும் பெருசா செஞ்சுடக் கூடாது. உடனே அவங்கள கீழே இறக்கிப் பேசனும். அப்படித்தானே!”

“சேது! நீ பேசுறது ரொம்ப தவறு. நான் எப்போ அப்படி நடந்துகிட்டேன். நான் கார்த்திகிட்டதானே பேசுறேன். நீ ஏன் குறுக்க வர்ற. இங்க பாரு கார்த்தி, நீ ஒரு அறிவாளியான பொண்ணு. ஆனால் உனக்குச் சேர்க்கை சரியில்லை. உன்னோட அறிவைப் புரிஞ்சுக்குற, திறமைய வளர்க்கிற நண்பர்கள்கூட நீ இல்லை, நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்!”, மிருணாளினி முறைத்துக்கொண்டே கூறிவிட்டு வெளியேறினாள்.

“ஆமா கார்த்தி. நீ எங்கக்கூட சேராத. மிருணாளினி கூட சேர்ந்துக்கோ!”, வசந்தி வெறுப்போடு கூற, “என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா? அவ சொல்றதப் போய் பெரிசா எடுக்குற, விடு வசந்தி!”, சிரித்தபடியே கார்த்தி கூறினாள்.

வெற்றி பெற்றவர்கள் வரைவதுதான் வரலாறாக மாறுகிறது. உண்மையான வரலாறு என்னவென்பது, அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்!

தாரா-நாதிரா கதை இந்திய வரலாற்றை மாற்றியிருக்குமோ தெரியாது, ஆனால் கார்த்தியின் மதிப்பை அனைவரிடத்திலும் பெருக்கியிருந்தது.

பிறர் மதிப்பை விட சுயமதிப்பு முக்கியமல்லவா?

 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!