Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

3 பேர் 2 காதல் 1 கனவு

3..2..1 Episode 8. முடியாத போர்!

சத்தமில்லாமல் சனிக்கிழமை வர, அனைவரும் அந்த ஆபீஸரின் புத்தகத்தைப் பெறுவதற்கான சவாலோடு, அன்றைய தேர்வினை எழுதுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

அகாடமியின் முன்னிருந்த டிபன் சென்டரானது இளைஞர் கூட்டத்தால் காலையிலேயே நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. கூட்டத்தின் நடுவே கார்த்தியும் வசந்தியும், கைகளிலிருந்த புத்தகத்தை மூளைக்குள் செலுத்தியபடியே, தட்டிலிருந்த இட்லிகளை வாயில் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

அதேசமயம், பிச்சைக்காரன் ஒருவன் டிபன் சென்டரில் நுழைய, நிரம்பி வழிந்த கூட்டத்தைச் சமாளிக்க முடியாத கடைக்காரனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. கடுமையான வார்த்தைகளில் வசை பாடியபடி, அவனை விரட்டினான் கடைக்காரன். ஆனால், சற்றும் நகராது, பிச்சைக்காரன் அங்கேயே கையேந்தி நிற்க, கடைக்காரனுக்கு ஆத்திரம் மேலெழும்பியது. அவன் முன்னால் இருந்த கூஜாவின் நீரை, பிச்சைக்காரனின் முகத்தில் வீச, அது பிச்சைக்காரனின் மீதும் சுற்றியிருந்த சிலரின் மீதும் சிதறி விழுந்தது.

புத்தகத்தில் மூழ்கி இருந்த இளைஞர்கள் பலர் நடப்பவற்றைக் கவனிக்காது சாப்பிட்டுக் கொண்டிருக்க, இதனைக் கண்ட வசந்திக்குக் கோபம் தலைக்கேறியது. பொங்கியெழுந்த சீற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், கடைக்காரனிடம் நேரே சென்றாள். அவள் கண்களின் உஷ்ணத்தைக் கண்டு, கடைக்காரன் தயங்கியபடியே அவளிடம் தொடங்கினான்.



Advertisement

“மன்னிச்சிடும்மா… அந்த பிச்சைக்காரனை விரட்டத்தான் தண்ணிய ஊத்தினேன். தெரியாமல் உன் மேலேயும் விழுந்துடுச்சு!”, தாழ்ந்த குரலில் அவன் கூறினான்.

“அப்போ, தண்ணிய அவர் மேல ஊத்துனது உங்களைப் பொறுத்த வரைக்கும் சரிதான். எம்மேல் விழுந்தது மட்டும்தான் தப்பு..அப்படித்தானே?”, சற்றே கனத்த குரலில் வசந்தி அவனைக் கேட்டாள்.

அவள் கேட்பது புரியாமல், அவன் குழம்பிப் போனான்.

Advertisement

“கூட்டத்தைச் சமாளிக்க நீங்க திணறுவது எனக்குப் புரியுது. அதனால, நீங்க அவரைக் கடிஞ்சு பேசுறதும், அவர் மேல தண்ணிய ஊத்துறதும் கொஞ்சம் கூட சரியில்லை. அவர் கிட்ட முதல்ல மன்னிப்பு கேளுங்க!”, வசந்தி கடுமையாகக் கூற, கடைக்காரனுக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியது.”

Advertisement

“பைத்தியமாம்மா நீ? ஓசியில சாப்பிட வந்திருக்கிற இந்த சாவுகிராக்கிக்கிட்ட உழைச்சி சம்பாதிக்கிற நான் மன்னிப்பு கேக்கணுமா? இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு… இவனுக்காக வரிஞ்சு கட்டிட்டு பேசுற…”, அவன் கூறி முடிப்பதற்குள், வசந்தி ஆத்திரத்துடன் குறுக்கிட்டாள்.

“போதும்! நிறுத்துங்க! வார்த்தையை எப்பவுமே அளந்துதான் பேசணும். இதுக்கு மேல பேசினால், நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது!”, வசந்தி கொந்தளித்தாள்.

“கலெக்டரம்மா, நீங்க! என் கடையை அடிச்சு நொறுக்கிடுவீங்களாம்மா?”, சிரித்தபடி அவன் நக்கலோடு கேட்டான்.

Advertisement

“நான் கலெக்டராகித்தான் இந்த கடையை இழுத்து மூடணும்னு இல்லை. இங்க சாப்பிட வர முக்கால்வாசி பேர் எங்க அகாடமிலிருந்துதான் வர்றாங்க. நான் நினைச்சால், அங்கிருந்து ஒருத்தர்கூட உங்க டிபன் சென்டர்ல சாப்பிட விடாமல் தடுக்க முடியும். அதுபோக, இருக்கவே இருக்குது சோசியல் மீடியா. நீங்க இன்னைக்கு அவர் மேல தண்ணி ஊத்தினதப்பத்தி, அவர்கிட்டயும், இங்க இருக்குறவங்ககிட்டயும் கேட்டு, ஒரு வீடியோ ஒன்னு வெளியிட்டால், அதைப் பார்க்கிற யாரும் உங்க டிபன் சென்டர் பக்கமே வர மாட்டாங்க. ஈ, காக்கா இல்லாம, நீங்களே உங்க கடையைச் சாத்த வேண்டியதுதான்! இதெல்லாம் உங்களுக்கு வேணுமா?”, வசந்தி மிரட்டலோடு கூற, கடைக்காரனுக்கு வியர்த்து வழியத் தொடங்கியது.

நடப்பவற்றை சிலர் வீடியோ எடுக்கத் தொடங்க, செய்வதறியாத அந்த கடைக்காரன், “இப்போ எதுக்குத் தேவையில்லாம என்கிட்ட பிரச்சினை பண்றீங்க? நான் ரெண்டு பார்சல் வேணா அந்த பிச்சைக்காரனுக்குக் காசே வாங்காமல் கொடுத்துடறேன். போதுமா?” தயங்கியபடியே கேட்டான்.

“நீங்க சாப்பாட்டு பொட்டலத்தைக் கொடுங்க, கொடுக்காமல் போங்க. ஆனால், சகமனுஷனுக்குக் கொஞ்சம் மரியாதையைக் கொடுங்க! அவ்வளவுதான் நான் கேட்கிறது! இப்போ அவர்கிட்ட மன்னிப்பு கேட்க முடியுமா, முடியாதா?”, வசந்தி விடாப்பிடியாகக் கேட்க, சாப்பாட்டு பொட்டலத்தை நீட்டியபடியே, அந்த பிச்சைக்காரனிடம், “மன்னிச்சிடுங்க, சார்!”, வேண்டா வெறுப்புடன் கடைக்காரன் தலைகுனிந்தபடி மன்னிப்பு கேட்டான்.

பிச்சைக்காரன் நெகிழ்ந்து போனான். இரு கைகளையும் கூப்பி, வசந்திக்கு நெகிழ்ச்சியோடு நன்றி கூறியவாறு, கடைக்காரன் நீட்டிய சாப்பாட்டு பொட்டலத்தை வாங்காமல், வெளியேறி நடக்கத் தொடங்கினான்.

நடந்தவற்றை கண்ட கார்த்திக்குப் புல்லரித்தது.

“உன்ன மாதிரி ஒரு சிங்கப்பெண் கூட இருக்கிறது, ரொம்ப பெருமையாக இருக்குது வசந்தி”, கார்த்தி பரவசத்துடன் கூறினாள்.

“இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல? இப்போ என்ன சாதிச்சிட்டேன்னு, நான் சிங்கப்பெண் ஆகிட்டேன்?”, வசந்தி பெருமூச்சுடன் கேட்டாள்.

“இவ்வளவு பேர் இருக்கிறோம். யாருக்காவது நீ கேட்ட மாதிரி கேட்கணும்னு தோணுச்சா? நமக்கு ஏன் வீண் வம்புன்னு தானே இருக்கிறோம். அடுத்தவங்களுக்காக வர்ற கோபம் எவ்வளவு உன்னதமானது தெரியுமா? அடுத்தவங்களுக்காக படுற அவமானம் கூட அழகுதான்! இன்னிக்கு உன்னைப் பார்க்கும்போது என்னோட காலேஜ் சீனியரான வேணு அக்காவைப் பார்க்குற மாதிரியே இருக்குது, சும்மா சொல்லக்கூடாது… நிஜமாகவே நீ சிங்கப்பெண்தான் வசந்தி!”, கார்த்தி அழுத்தமாகக் கூறினாள்.

சில நொடிகள் யோசித்துவிட்டு, வசந்தி தொடர்ந்தாள். “நமக்கு எதுக்கு வம்புன்னுதான் நானும் முன்னாடி இருந்தேன், கார்த்தி. ஆனால், ஒருநாள் எனக்கே என் மேல வெறுப்பு வந்துடுச்சு. கையாலாகாம எல்லாத்தையும் வேடிக்கை பார்க்குறது, பெரும் குற்ற உணர்ச்சியை உண்டாக்கிடுச்சு. உள்ளுக்குள்ள எழுந்த குற்ற உணர்ச்சி, வெளியிலிருந்து வந்த அவமானத்தைவிட ரொம்ப வலியை ஏற்படுத்துச்சு. ஏதோ ஆயிரம் கத்திகள் உடம்பெல்லாம் குத்துற மாதிரி இருந்துச்சு. அதுக்கப்புறம், என்ன அவமானப்பட்டாலும், மனசுக்கு சரின்னு தோன்றத மட்டும்தான் செய்யுறேன்!”, வசந்தி கூறிய போது, கார்த்தி வாயடைத்து நின்றாள்.

வசந்தி மேலும் தொடர்ந்தாள். “கார்த்தி, நாம வாழுற வாழ்க்கை ரொம்ப அற்பமானது. நடுக்கடல்ல நிராயுதபாணியாக, இலட்சக்கணக்குல நாம நீந்திக்கிட்டு, தத்தளிச்சிக்கிட்டு இருக்கிறோம்.  நம்மல காப்பாத்த வர்ற கப்பல், சில நூறு பேரை மட்டும்தான் காப்பாத்திட்டுப் போகும். நாம கப்பல்ல ஏறுவோமா? கரையைப் போய்ச் சேருவோமான்னு, நீந்திக்கிட்டிருக்கிற யாருக்குமே தெரியாது!… நாம தத்தளிச்சிட்டிருக்கும்போது, நம்மக்கூட நீந்துற மத்தவங்களோட வலி நமக்குத் தெரியலன்னா, நாம கப்பல்ல ஏறுன பிறகு, கடலே தெரியாமப் போயிடும். யாரையும் நம்மால தூக்கிவிட முடியாது…”, வசந்தியின் வார்த்தைகள், கார்த்தியை மெய்சிலிர்க்கச் செய்தது.

“வசந்தி, நீ நிச்சயம் தேர்வில் வெற்றி அடையணும்! அப்போதான் நிறைய பேர் மேல வர முடியும்,” கார்த்தி நெகிழ்ச்சியோடு கூறினாள்.

“நாளையப் பத்தி அப்புறம் யோசிக்கலாம். இன்னைக்கு நடக்கப் போற தேர்வ முதல்ல நல்லா எழுதணும்! ஏற்கனவே நேரம் ஆயிடுச்சு! வா போகலாம்!”, மொபைல் போனில் நேரத்தைப் பார்த்தபடி வசந்தி கூற, இருவரும் வேகவேகமாக அகாடமியை நோக்கி நடந்தார்கள். ஏற்கனவே தேர்வுக்குத் தயாராகி அமர்ந்திருந்த கூட்டத்தில் சென்று இணைந்தார்கள்.

விறுவிறுப்புடனும் பரபரப்புடனும், முதல் மாதிரி தேர்வின் திக்…திக்.. நிமிடங்கள் ஒருவழியாக நிறைவடைந்தது.

மதியம் வழக்கம்போல வகுப்புகள் ஒவ்வொன்றாக நடக்க, இறுதியாக வரலாறு எடுக்க கதிர் வந்தான்.

“இன்னிக்கு ஒரே ஒரு தலைப்பு நடத்திட்டு, மெயின்ஸ்க்கு ஒரு பத்து மதிப்பெண் கேள்வி கொடுக்கிறேன். நீங்க எப்படி பதில் எழுதுறீங்கன்னு பார்க்கணும்!”, கூறிவிட்டு கதிர் பாடம் எடுக்கத் தொடங்க, அனைவரும் அவன் புனைந்துகொண்டிருந்த வரலாற்றில் மெய்மறந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

அவன் நடத்தி முடிக்கவும், கால இயந்திரம் கொண்டு, ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் சென்றுபார்த்துவிட்டு, திரும்பி வந்ததுபோல உணர்ந்தார்கள்.

“இப்ப எல்லாரும் ஒரு பேப்பர எடுங்க. முதல் உலகப் போர் பற்றி பத்து நிமிஷத்துல இரண்டு பக்கங்கள் எழுதுங்க!”, கதிர் கூறிய அடுத்த நொடி, அனைவரும் வேகவேகமாக எழுதத் தொடங்கினார்கள்.

முடித்த தாள்களை ஒவ்வொன்றாய்த் திருத்தத் தொடங்கினான் கதிர். “மிருணாளினி! ரொம்ப நல்லா எழுதியிருக்கீக்க, எதிர்பார்க்கவேயில்லை, வேர்துன் போரை மட்டும் விட்டுட்டீங்க. அது பரவாயில்லை. நல்ல முயற்சி!”, கதிர் புகழ, மிருணாளினி முகம் மலர்ந்து நன்றி கூறிவிட்டு அமர்ந்துகொண்டாள்.

“என்னோட பேப்பர் மட்டும் இவர் கையில் கிடைச்சுடக் கூடாதுடி. அதுக்குள்ள வகுப்பு நேரம் முடிஞ்சிடணும். என் பேப்பர் மட்டும் கிடைச்சுது, திரும்பவும் அவமானப்படுத்துவார்!”, கார்த்தி வசந்தியிடம் புலம்பினாள்.

”முதல் உலகப்போர் உனக்கு லட்டு மாதிரியான கேள்வி. மனுசன் உன்னோட பதிலைப் பார்த்து அசந்துபோகப்போறார், பாரு!”, வசந்தி புன்னகைத்தபடியே கூறினாள்.

“இவர் என் பதிலைப் பார்த்து அசந்துபோயிட்டா, அந்த வானமே கீழே இறங்கி வந்த மாதிரிதான். நீ வேற காமெடி பண்ணிக்கிட்டு!”, கார்த்தி வசந்தியிடம் கூறிய அதேநேரம் “கார்த்திகேயினி…”, என அவன் அழைக்க, சலிப்புடனே எழுந்தாள்.

“நீங்க ஒரு அறிவாளிதான். ஒத்துக்குறேன். ஆனால் அதை இப்படி உங்க பதில்ல காண்பிச்சால், முட்டை மார்க் தான் கிடைக்கும். ஏன் இவ்வளவு புள்ளிவிவரங்களை அள்ளி வீசியிருக்கீங்க? உங்க பதிலைப் பார்த்ததும், அதைப் படிக்கணும்னு ஆர்வமே வரமாட்டேங்குது. அடுத்த முறை ஒழுங்காக எழுதுங்க!”, கூறியபடியே அவன் அவளது பேப்பரை நீட்ட, அதைப் பெற்றுக்கொண்டு அமைதியாக வந்து அமர்ந்தாள்.

“முதல் உலகப்போர் எப்பவோ முடிஞ்சிருந்தால் கூட, கதிர் சாருக்கும் உனக்கும் நடக்கிற போர் இருக்குதே, அது முடியவே முடியாது போல!”, வசந்தி கார்த்தியிடம் கூறிச் சிரித்தாள்.

“இந்த மனுசன் என்னை அவமானப்படுத்தி, அவமானப்படுத்தி, இப்போ யார் அவமானப்படுத்தினாலும் மனசு வலிக்க மாட்டேங்குதுடி. எவ்வளவு அடிச்சாலும் தாங்க தயாராக இருக்குது”, கூறியபடியே கார்த்தியும் சிரித்தாள்.

“அடுத்த வாரம் இண்டெர்வியூக்காக சார் டெல்லி போய்டுவார். ஒருவாரம் யாரும் உன்னை அவமானப் படுத்தமாட்டாங்க!”, வசந்தி கண்ணடித்தபடி கூறினாள்.

“சாரோட இண்டெர்வியூக்காக கடவுள்கிட்ட தினமும் நான் வேண்டுறேன்டி. இந்தமுறை சார் நிச்சயம் ஜெயிச்சே தீரணும்!”, கார்த்தி கூற, அதைக் கேட்டு வசந்தி நம்பமுடியாதபடி பார்த்தாள். “அப்போ தான இந்த அகாடெமிய விட்டு அவர் போவார்!”, கார்த்தி முடிக்க, இருவரும் சிரித்தார்கள்.

அவர்கள் சத்தம் கேட்டு திருத்திக்கொண்டிருந்த பேப்பரை விட்டு கதிர் நிமிர, இருவரும் அமைதியானார்கள்.

கதிர் நிதானமாகப் பேசத் தொடங்கினான்.

“நாளைக்கு மகளிர் தினம்ங்கிறதால, கலை நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களோட திறமைகளை வெளிப்படுத்தலாம். அப்புறம், இன்னிக்குக் காலையிலே நடந்த, மாதிரி தேர்வோட முடிவுகள் நாளைக்கு வெளிவந்துடும். முதல் மார்க் வாங்கியவருக்கு கலைநிகழ்ச்சிகள் முடிஞ்சதும், புத்தகமும், வேறு சில பரிசுகளும் தருவாங்க. முக்கியமான விஷயம். நாளைக்கு ஞாயிற்றுகிழமை, மகளிர் தினம்னு வகுப்புகள் நடக்காமலிருக்காது. காலையில் நிகழ்ச்சி முடிஞ்சதும், மதியம் வகுப்புகள் வழக்கம்போல நடைபெறும்!”, கதிர் கூற, அனைவரும் உச் கொட்டி சலித்துக்கொண்டார்கள்.

வகுப்புகளைத் தாண்டிய வாழ்க்கைக்குப் பலரும் ஏங்கத் தொடங்கினார்கள்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!