Skip to content
Post Views: 1,316
“அப்பா இவங்க சொல்ற மாதிரி கோர்ட்ல சொல்லாதீங்க. ஏதோ ப்ளான் பண்றாங்க. எதுவா இருந்தாலும் கோர்ட்ல நிறுத்தட்டும். நம்மளால முடிஞ்ச அளவுக்கு போராடி தப்பிக்கலாம். இவங்க பேச்சைக் கேட்டு எதையும் சொல்லாதீங்க.” சந்திரன் பேச்சை உணர்ந்த மைக்கேல், “ஆமா ஏதோ ப்ளான் பண்றாங்க. இவங்க என்ன சொன்னாலும் கேட்க கூடாது.”
ஆரதி சொன்னதை கேட்டு இருவரும் முடியாது என கத்த,
“உங்களால முடியுமா முடியாதான்னு நான் கேட்கவே இல்லையே. கண்டிப்பா பண்ணியே ஆகணும். இல்லன்னா உங்க ரெண்டு பேரோட உயிரும் உங்களுக்கு சொந்தமானதா இருக்காது. உன் அப்பா மாதிரி உன்ன போலீஸ் கிட்ட கொடுக்காம தனியா எதுக்காக கூட்டிட்டு வந்தோம் னு யோசிச்சியா சந்திரன். உனக்கு நியாயப்படி தண்டனை வாங்கித்தர எங்க யாருக்கும் விருப்பமில்லை. நாங்க சொல்றத கேட்குறத தவிர உனக்கு வேறு வழியும் இல்லை. அப்பனும் மகனும் கொலை பண்ண எவ்வளவு பேசி இருப்பீங்க. இப்பவும் அதே மாதிரி பேசி ஒரு முடிவுக்கு வாங்க. “
ஆரதி என்ன சொன்னாலும் செய்யக்கூடாது என்பதை இருவரும் பார்வையாலேயே பகிர்ந்து கொண்டிருக்க இதற்க்கு மேலும் பொறுமை இல்லாமல் , “சித்து நம்ம கூட்டிட்டு வந்த ஐயாவை உள்ள கூட்டிட்டு வா…”
70 வயதை இன்னும் சில மாதங்களில் தொட இருக்கும் நிலையில் கொஞ்சமும் தளர்வு இல்லாத தேஜஸான முகத்துடன் வர்மக்கலை வைத்தியர் ஆனந்த ஜோதி மகேந்திரன் ஐயா உள்ளே வந்தார். வந்தவரை மரியாதைக்கு எழுந்து நின்று வரவேற்ற ஆரதி, “ஐயா நான் சொன்ன ஆள் இவன் தான். இவனுக்குத்தான் நான் சொன்ன மாதிரி நீங்க பண்ணனும்.”
Advertisement
வந்தவர் சந்திரனை எழுப்பி நிற்கவைத்து முழங்கையை முதுகோடு சேர்த்து திருப்பி குனிய வைத்து கார எலும்பின் ஐந்தாவது எலும்பில் பலம் கொண்டு தட்ட அடுத்த நொடியே சந்திரன் கீழே விழுந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தான். பார்த்துக்கொண்டிருந்த மைக்கேலுக்கு ஒன்றும் புரியாமல் கத்த ஆரம்பித்தார்.
“இங்க பாரு நான் சொல்றபடி கேட்டா உன் பையனோட உயிர காப்பாத்திடலாம். இல்லன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல நெஞ்சுவலி வந்து இறந்துடுவான். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ல கூட கண்டுபிடிக்க முடியாது. இத அப்படியே உனக்கும் பண்ண சொல்லிடுவேன்.”
ஆரதி சொன்னது போல் வாந்தி எடுத்தவன் மயக்கமடைந்து மிகவும் மோசமான நிலைக்கு போக ஆரம்பித்தான்.
Advertisement
“நீங்க சொல்ற எல்லாத்தையும் நான் கண்டிப்பா கேட்கிறேன். என் பையனை மட்டும் காப்பாத்துங்க.” என மைக்கேல் உறுதி கூற,
Advertisement
“பையன் மேல அந்த அளவுக்கு பாசம். இதே பாசம்தான் அனிதா அம்மா அப்பாவுக்கும் இருக்கும்.”
“தெரியாம தப்பு பண்ணிட்டோம். நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன். தயவு செஞ்சு என் பையனை மட்டும் காப்பாத்துங்க.”
ஆரதி தன் திட்டத்தை சொல்ல, “நீங்க சொன்ன மாதிரி அனிதாவை கொன்னது நான் தான்னு யாரு கேட்டாலும் சொல்றேன். ஆனா நீங்க என்னையும் என் பையனையும் உயிரோட விடனும்.”
Advertisement
“நாங்க சொல்றத செஞ்சிட்டா உயிரோட இருக்கலாம்.என்னால உன் உயிருக்கும் உன்னோட பையன் உயிருக்கும் எந்த ஆபத்தும் வராது இது சத்தியம்.” ஆரதியின் சத்தியத்தை நம்பி மைக்கேல் ஒப்புக் கொள்ள, வர்மக்கலை வைத்தியரால் சந்திரனுக்கு உடனடியாக மருத்துவம் பார்க்கப்பட்டது.
(வர்மக் கலையில் பல சூத்திரங்களும், ஆச்சரியங்களும், மர்மமும் ஏராளம். இன்றளவும் அறிவியலுக்கும் ஆங்கில மருத்துவத்திற்கும் பெரிய சவால் இந்த வர்ம கலை. இதில் நான்கு நிலை. தொடுவர்மம், தட்டுவர்மம், நோக்குவர்மம், படு வர்மம். வர்ம கலைகளில் உள்ள படிநிலை ஏராளமாக உள்ளதால் கதைக்காக எனக்கு தேவையானது போல் சிறு விஷயத்தை உபயோகிக்கிறேன். தட்டு வர்மம்: நெஞ்சு பக்கவாட்ட பகுதி கார எலும்பில் இருந்து 5-வது எலும்பு வரும் இடத்தில் ஒரு குழி இருக்கும். அதில் பார்த்து பலம் கொண்டு தட்டினால் உடனே மயக்கம் வாந்தி இன்னும் சில பிரச்சனைகள் ஏற்படும். வர்மக் கலையை முறையாகப் படித்தவர்கள் மட்டுமே இதற்கான தீர்வு உடனடியாக கொடுக்க முடியும்.)
ஆரதி வேலை விஷயமாக வர்மக்கலை மருத்துவரை சந்திக்க நேர்ந்தது. அன்றிலிருந்து மருத்துவரிடம் நல்ல பழக்கம். அனிதா சம்பந்தமான விஷயங்களை சொல்லியவள், “ஐயா இது உங்க இத்தனை வருஷ புனிதத்திற்கு எதிரானதுதான். ஆனா எனக்கு இப்போ நீங்க மட்டும் தான் உதவி செய்ய முடியும். சும்மா அவங்க ரெண்டு பேரும் பயப்படுற மாதிரி கொஞ்ச நிமிஷத்துக்கு ஏதாச்சும் பண்ணா போதும். இத வச்சியே என்னோட வேலையை முடிச்சிடுவேன். இறந்த அந்த பொண்ணுக்காக இந்த ஒரு உதவி மட்டும் செய்யுங்க ஐயா.”
ஆரதி மேல் கொண்ட நம்பிக்கையில்…சிறு வர்மக்கலையை சந்திரன் மீது நடத்தி இருக்க அவள் நினைத்தது போல் நடக்க ஆரம்பித்தது. வந்தவருக்கு நன்றி சொல்லி வழியனுப்பி வைத்தவள் அடுத்த திட்டத்தை தயார் படுத்த தொடங்கினாள்.
நாட்கள் வேகமாக ஓடி மைக்கேலை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் நாளில் வந்து நின்றது. காலையிலிருந்து எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் மைக்கேல். மைக்கேலின் அமைதி ஏன் என்ற காரணம் அங்கிருந்த அத்தனை பேருக்கும் தெரியும் என்பதால் மனதில் சிரித்துக்கொண்டே கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் வேலையில் இறங்கி இருந்தனர். அங்கு வந்த கண்ணன்,
“என்ன மைக்கேல்… ஒரு முடிவு எடுத்துட்டீங்க போல. கோர்ட்டுக்கு போயிட்டு எதையாச்சும் மாத்தி சொல்லலாம் ‘ னு நினைச்சிடாத. அப்புறம் நீ நினைச்சி பார்க்க முடியாத அளவுக்கு நடக்கும்.”
கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வர, மைக்கேலின் மனைவி இரு மகன்களோடு வந்திருந்தார். பேச சிறிது அனுமதி கேட்டு கணவனிடம் வந்தவர்,
“என்னங்க நான் எத்தனை தடவை சொன்ன இந்த மாதிரி சவகாசம் வெச்சுக்காதீங்கன்னு. இப்ப பாருங்க நானும் என் பிள்ளைகளும் இவ்ளோ கஷ்டப்படுறோம். இந்த பெரியவன் எங்க போனான்னே தெரியலை. உங்களுக்காக வக்கீலை ஏற்பாடு பண்ணறேன்னு சொல்லிட்டு போனா அதுக்கப்புறம் ஆளையே காணோம். நானே ஒரு வக்கீலை பார்த்து இருக்கேன். எப்படியாது உங்களை வெளியே எடுக்க பார்க்குறேன். ” மனைவியின் பேச்சிற்கு எதையும் கூற முடியாமல் அமைதியாக நின்று இருந்தார் மைக்கேல்.
கொடுக்கப்பட்ட நேரம் முடிவடைய நீதிபதி முன் நிறுத்தப்பட்டு விசாரணை துரிதமாக தொடங்கியது. அரசு தரப்பு வக்கீலாக சித்து ஆஜராகி மைக்கேல் கொலை செய்ததற்கான காரணமும் ஆதாரமும் சமர்ப்பிக்க, அதன் தொடர்பான வாதங்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருந்தது. சாட்சிக்கு மணிகண்டனும் அழைத்து வரப்பட்டு இருந்தார். இதில் மைக்கேல் ராபர்ட்டை கொலை செய்தது தான் தான் என்றும் அனிதா கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இருப்பதாக நீதிபதி முன் கூறவிட….அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, “ராபர்ட் இறந்ததால ஜட்ஜ் கொலை வழக்கில் இருந்து ராபர்ட்டை விலக்குவதாகவும், இரண்டாம் குற்றவாளியாக மைக்கேலை சேர்ப்பதாகவும் கூறினார். ஏற்கனவே மணிகண்டனுக்கு இதுதொடர்பான தண்டனை வழங்கப்பட்டதால் மைக்கேலை மட்டும் அந்தக் கொலையில் குற்றவாளியாக அறிவித்து, மேலும் அனிதா கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணைகள் தொடங்க வேண்டியதால் ஒரு மாத நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தங்களின் திட்டத்தில் முதல் படி நிறைவடைந்த வெற்றியோடு மைக்கேலை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தனர்.
அப்போதுதான் மைக்கேலின் மனைவிக்கு அனிதா சம்பந்தமான விஷயம் தெரியவர, தன் கணவரிடம் வந்தவர்..”எதுக்காக இந்த மாதிரி வேலை செஞ்சீங்க. ஒரு கொலைக்கு பிடிச்சிட்டு போயி இப்போ ரெண்டு. இது மட்டும்தானா இல்ல இன்னும் இருக்கா. எங்கிட்ட கூட இதுவரைக்கும் சொல்லலையே. சந்திரனுக்கு இது தெரியுமா ? அதனாலதான் உங்க கிட்ட கொஞ்ச நாள் பேசாம இருந்தானா? இப்போ என் மகனையும் பிடிச்சிட்டு போயிடுவாங்களா?”அடுத்தடுத்து கேள்வியை முன்வைக்க…
சித்து கண்ணன் இருவரும் மைக்கேல் சொல்லப்போகும் பதிலுக்காக பார்த்திருந்தனர்.
“இப்ப எதுக்குடி கத்துக்கிட்டு இருக்க. உன் மகனுக்கும் அந்தப் பொண்ண கொன்னதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொன்னான். அதும் அந்த பொண்ணு கர்ப்பமா வேற இருந்துச்சு. அவன நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு நெனச்சுட்டு இருந்தா ஒன்னும் இல்லாதவளை காதலிச்சது இல்லாம பிள்ளையோட வந்து நிற்கிறான். அந்த பொண்ணு கிட்ட சொல்லி.. சொல்லி பார்த்தேன் கேக்கல. எனக்கு வேற வழி தெரியல அதான் கொன்னுட்டேன். உன் பையனுக்கு இப்ப வரைக்கும் இந்த விஷயம் தெரியாது. உன்னோட மகன யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க போதுமா.”என சொல்லிக் கொடுத்ததை அழகாக ஒப்புவித்த மைக்கேல் காவலர்களுடன் நின்று கொண்டான்.
இந்த மனிதனுடன் இத்தனை வருடம் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி வருந்த மட்டுமே முடிந்தது மைக்கேலின் மனைவியாள்.
“பரவாயில்லையே ரொம்ப அழகா தத்ரூபமா சொல்லிட்ட. இதையே அடுத்த தடவ நீதிபதி முன்னாடி சொல்லிடு சரியா.” என்ற கண்ணனுக்கு, “அதுவரைக்கும் இவன் உயிரோட இருப்பானா ! “ரகசியமாக காதில் சித்து கேட்க,
“எல்லாம் ஆரதி செயல்” என்றான் சிரிப்புடன்.
இடைப்பட்ட இந்த நான்கு நாட்களில் கண்ணனின் வீடு முற்றிலும் மாறியிருந்தது. இதுவரை வீட்டில் இருந்தவர்களுக்கு அனிதாவிற்காக செய்த செயல் அத்தனையும் தெரியவர ஒரு பக்கம் பிள்ளைகளை நினைத்து பெருமையாக இருந்தாலும் மற்றொருபுறம் அனிதாவை நினைத்து கவலையாக இருந்தது. இந்த நான்கு நாட்களிலும் ராசாத்தியின் அழுகை முடிந்த பாடில்லை. சேகர் அமைதியாக அவ்வீட்டிலிருக்க, அதை கவனித்த நாராயணன் தன் மகனிடம் பேசி மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பாமல் இருந்தார். வானதியின் செயலில் எந்த முன்னேற்றமும் இல்லை. பிரம்மை பிடித்தவள் போல் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருக்க, ரதிதேவி தான் உடனிருந்து தேற்றிக் கொண்டு இருக்கிறாள்.
“என்ன ஆழி! கோர்ட்ல எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா.”
“ஹ்ம்ம் பர்ஃபெக்ட்.”
“சூப்பர்! அப்பனையும் மகனையும் ஒரே இடத்துல வையுங்க. இருக்கப் போறது கொஞ்ச நாள்தான் ஒன்னா இருந்துட்டு போட்டும். “
“இன்னைக்கு வேணாம் ரதி. நாளைக்கு கூட்டிட்டு வரேன்.”
பதிலுக்கு சரி என்பது போல் தலையை ஆட்டியவள் சந்திரனை பார்க்க அறைக்குள் செல்ல, அவனோ இந்த நான்கு நாட்களில் முழுவதும் அடையாளம் தெரியாமல் மாறி இருந்தான். உணவு வேண்டாம் என்றாலும் கட்டாயமாக கொடுக்கப்பட்டது. ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை காயம் பட்ட இடங்களில் மேலும் காயம் கொடுக்கப்பட்டது. அதற்கு தப்பித் தவறியும் சத்தமிட்டு விட்டால்…. காயத்திற்கு பதில் அடிகள் கொடுக்கப்பட்டது. முதல் நாள் புரியாமல் கத்த ஆரம்பித்த சந்திரன்… அடுத்தடுத்த நாள் எது நடந்தாலும் பொறுத்துக் கொண்டான். ஆடைகள் ஏதுமின்றி ஏசி அறையில் உடல் நடுங்க படுத்து இருந்தவனை கண்டவள், ” சந்திரன்… உன் அப்பாக்கு உன் மேல எவ்ளோ பாசம். நான் சொன்ன மாதிரி உன் அம்மா கிட்ட சொல்லிட்டான். அனிதாவை கொன்னது உனக்கு தெரியவே தெரியாது. பாவம் நீ… ஆமா எங்க போன உன்னை உன் அம்மா தேடிக்கிட்டு இருக்காங்க….”
“தப்பு பண்ணதுக்கு கோர்ட்ல தான் நிறுத்தணும். எதுக்காக என்னை இப்படி சித்திரவதை பண்றீங்க. இது தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா…?”
“தெரிஞ்சா தான…. அப்புறம் உன்ன நா இன்னும் ரெண்டு மூணு நாள்ல வெளியே விட்டுவேன்… சந்திரன். வேணும்னா நீயே கோர்ட்ல கூட இதுக்கு ஒரு கேஸ் போடு. நான் சித்துவ வச்சி டீல் பண்ணிக்கிறேன்.”
“அதான் என்னோட அப்பா நீங்க சொன்ன மாதிரி சொல்லிட்டாரே அப்புறம் என்ன..? என்னதான் பிளான் பண்ணி இருக்கீங்க. அதையாது சொல்லுங்க.”
“எதுக்கு இவ்வளவு அவசரம். பொறுயையா தெரிஞ்சிக்கலாம். இப்போ இந்த ஜூஸை குடி. வழக்கம்போல வேணாம்’னு சொல்லாத…… அப்புறம் தண்டனை பெருசா இருக்கும்.”
இத்தனை நாட்களில் அனுபவப்பட்ட சந்திரன் எதுவும் பேசாமல் வாங்கிக் கொடுக்க அடுத்த நொடி கீழே துப்பினான். “இதான் லாஸ்ட். இனி ஒரு சொட்டு சிந்துனாலும் அடுத்த வாய் சோறு சாப்பிட கை இருக்காது.”
அமைதியாக கையில் கொடுத்ததை குடித்து முடித்தவன், “என்ன இப்படி தினம் தினம் சித்ரவதை பண்றதுக்கு மொத்தமா கொன்னுடுங்க. மனசாட்சி இல்லாம இதை குடிக்க வச்சிட்டீங்களே.”
“இதுக்கே மனசாட்சியா!… அப்போ நீங்க பண்ண வேலைக்கு? ஜூஸ் தான கொடுத்த.. என்ன அதுல உப்பும் காரமும் கொஞ்சம் அதிகமாயிடுச்சு. எனக்கு இந்த மாதிரி பண்ண சில்லியா தான் இருக்கு. என்ன பண்ண… …அடிச்சா வலிக்கும். மருந்து போட்டு சரி பண்ணிடலாம். ஆனா ஒரு மனுஷனுக்கு அருவருப்பை கொடுத்தா அதை நினைச்சு நினைச்சு புழுவா துடிப்பான். அந்த மெத்தட் தான் இது. உன்னை இப்போ என்னால கொல்ல முடியும். வேற என்ன வேணாலும் பண்ண முடியும். உடனே பண்ணிட்டா உனக்கு எப்படி வலிக்கும். இது கேவலமாவே இருந்தாலும் நீ அனுபவிக்கலாம் தப்பில்லை. இன்னும் கொஞ்ச நாள் தான் அதுக்கு அப்புறம் சுதந்திரமா உன் இஷ்டம் போல வாழலாம்.”
கோர்ட்டில் இருந்து வந்த மைக்கேலை மறுநாள் சந்திரன் இருக்கும் இடத்தில் மாற்றிவிட்டனர். தினமும் தனிப்படை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டிருந்தனர் இருவரும். முன்பு இருந்த எந்த தொந்தரவும் இல்லாமல் தந்தை மகன் இருவரும் பல நாள் கழித்து நிம்மதியான உறக்கத்தில் இருந்தனர். இன்னும் சில தினங்களில் இருவரில் ஒருவர் உயிர் போகப் போகிறது என்பது தெரியாமல்.
**************************
“பாப்பா! நாங்க ஊருக்கு போறோம்.” இரண்டு வாரங்கள் கழித்து ராசாத்தியின் பேச்சு சத்தம் அவ்வீட்டில் கேட்க,
“எதுக்கு ம்மா அங்க போகணும்னு சொல்றீங்க.”
“நான் எதுக்காக இங்க வந்தனோ.. அதான் இப்போ மொத்தமா முடிஞ்சிருச்சே. இனி இங்க இருந்து என்ன பண்ண போறோம். இருக்க ஒரு பொண்ண நல்லபடியா பார்த்துக்கணும். இவளையும் வாரிக் கொடுக்க முடியாது என்னால. “
ராசாத்தியின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சரஸ்வதி, “அங்க போய் என்ன பண்ண போறீங்க. இங்க உங்களுக்கு துணையா இத்தனை பேர் இருக்கோம். அதுவுமில்லாம வானதிக்கு இங்க தான் காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கு. ஏற்கனவே திருநெல்வேலியில படிக்கும்போது பாதியிலேயே விட்டது. இப்போ திரும்பவும் அதே காலேஜிக்கு போனா சேர்க்க மாட்டாங்க. பிள்ளையோட படிப்பு கெட்டுப் போகும். அங்க போனாலும் ஒரு வேலை பார்த்துட்டு தான உங்க பொண்ண பார்க்க போறீங்க. அதை இங்க இருந்தே பண்ணுங்க.”
“இல்ல ஆண்ட்டி .. நாங்க ஊருக்கே போறோம். இங்க இருந்தா எல்லோருக்கும் சங்கடம். ஏற்கனவே எங்களால உங்களுக்கு நிறைய பிரச்சனை. யாருன்னே தெரியாத என் அம்மாக்கு நீங்க செஞ்ச உதவி ரொம்ப ரொம்ப பெருசு. உங்க இடத்துல வேற யார் இருந்திருந்தாலும் இது நடந்து இருக்காது. கடைசி வரைக்கும் என் அக்காவை தேடிக்கிட்டே வாழ்க்கை ஓடி இருக்கும். உங்க வீட்டுல ஒரு பொண்ணு காணாம போனா எப்படி தேடுவிங்களோ அப்படிதான் ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து பண்ணி இருக்கீங்க. நிச்சயதார்த்த வீடு எங்களால சாவு வீடா மாறிடுச்சு. என்ன இருந்தாலும் எங்களால உங்களுக்கு மறக்க முடியாத சங்கடம் உருவாகிடுச்சி. மூணு வாரத்துல கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிங்க. இப்போ எங்களால அதுவும் நின்னு போச்சு. இதுக்கு மேலயும் பாரமா இருக்க விருப்பமில்லை. என்ன நடக்கனுமோ அது நடக்கட்டும். அம்மாவ பார்த்துக்கனும் இப்போதைக்கு அதான் என்னோட முழு எண்ணம். அதனால்தான் சொல்றோம் நாங்க ஊருக்கே போறோம்’னு.”
“உங்க பொண்ணு கொலைக்கு காரணமானவன் இப்போ எங்க கிட்ட இருக்கான். அவனுக்கான தண்டனை… என்னன்னு கூட பார்க்க விருப்பம் இல்லையா?” ஆரதி.
“என்னோட பொண்ணே போயிட்டா இதுக்கு மேல யார் இருந்தா என்ன இல்லன்னா என்ன.”
“அப்படி எல்லாம் உங்கள விட முடியாது ஆண்ட்டி. வானதியை எங்க பொறுப்புல எடுத்து ரொம்ப நாளாச்சு. அனிதாவை என்னோட தங்கச்சி நினைச்சுதான் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறேன். இதைப்பற்றி வீட்ல இருக்க எல்லாருக்கும் தெரியும். அவங்களும் உங்கள வேற ஆளா பார்க்கல. இப்பதான் தெரியுது நீங்க எங்கள அப்படித்தான் பார்க்குறிங்கன்னு. “
ஆரதியின் வார்த்தையில் அதிர்ந்த வானதி, “இல்லக்கா நிச்சயமா இல்லை. உங்களுக்கு ரொம்ப கஷ்டம் தரோம்னு கவலையா இருக்கு. ஆண்ட்டிக்கு உங்க கல்யாணத்தை பார்க்கணும்’னு ரொம்ப ஆசை. ஏற்கனவே அதனால தான் அவங்களுக்கு உடம்பு முடியாம போச்சு. திரும்பவும் எங்களால தள்ளிப் போயிருச்சி… அதான் சங்கடமா இருக்கு.” என்க,
“எனக்கு வருத்தம் இருக்கிறது உண்மைதான். இல்லன்னு மறைக்க விரும்பல வானதி. அதுக்காக இந்த மாதிரி நிலைமையில உங்கள விடுற அளவுக்கு நான் அரக்கி இல்லை. நானும் அம்மா அப்பா இல்லாம பாட்டி தயவுல வளர்ந்த பொண்ணு. ஒரு கஷ்டத்துல தனியா நிற்கிற வலி என்னன்னு நல்லா தெரியும். அதும் அனிதாவோட மரணம் உண்மையாவே ஒரு தாயா மனச பதற வைச்சிடுச்சி. இன்னொரு நல்ல நாளாப் பார்த்து கல்யாணத்தை வச்சுக்கலாம். அதான் நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சே. “
“போதுமா வானதி. இங்கு யாரும் உங்கள சுமையா நினைக்கல. அனிதா பிரச்சனை முடிஞ்சதும் ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயமா நானும் கண்ணாவும் கல்யாணம் பண்ணிப்போம். என் கல்யாணம் நடக்கணும்’னா முதல்ல நீங்க சரியாகனும். ஒரு பொண்ணு இறந்து போய்ட்டா… இருக்க பொண்ணையாது காப்பாத்தணும்’னு நினைக்கிறீங்கள் ல அதே மாதிரி தான் உங்க இன்னொரு பொண்ணு கல்யாணத்தை சந்தோஷமா நடத்தணும்’னு நினைச்சுக்கோங்க. உங்க சந்தோஷத்துல தான் என்னோட கல்யாணம் இருக்கு.”
எத்தகைய அன்பு இது. கனவிலும் ராசாத்தி எதிர்பார்த்திருக்க மாட்டார். அனிதாவின் இழப்பு அவருக்கு ஈடு செய்ய முடியாத ஒன்னு எனில் இந்த அன்பும் ,அரவணைப்பும் அதை விட பெரிதாகப் பட்டது இருவருக்கும். அத்துடன் அந்தப் பேச்சுக்கள் முடிவடைய,
“ரதி! நம்ம வீட்ல இருந்தா நிச்சயமா இதையே நினைச்சி வருத்தப்படுவாங்க. வீட்டு பக்கத்திலேயே வேற வீடு பார்த்து குடி வைக்கலாம். கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைக்கு வந்துடுவாங்க.”
இதைப்பற்றி வானதிடம் பேச அவளும் தற்போது இருக்கும் மன நிலைக்கு முழு மனதுடன் சம்மதித்தாள். அடுத்த இரு தினங்களில் கண்ணன் வீட்டிற்கு அருகில் ஒரு படுக்கையறை கொண்ட சிறு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான அனைத்தையும் வீட்டில் நிரப்பினாள் ஆரதி . இளைய மகளுக்காக மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார் ராசாத்தி. இவை அனைத்தையும் மௌனமாகவே பார்த்துக்கொண்டிருந்த சேகர் இன்று காலை கண்ணன் வீட்டுக்கு வந்திருக்க…
அங்கு இருந்த நாராயணனின் காலில் விழுந்து, ” என்ன மன்னிச்சுடுங்க சார். நீங்க எப்படி. உங்க குடும்பம் எப்படி னு தெரியாம என்னென்னமோ பேசிட்டேன். எதையும் மனசுல வச்சுக்காம இன்னிக்கு என் குடும்பத்தையே தாங்கிட்டு இருக்கீங்க.”
“முதல்ல எழுந்திருங்க சேகர். இனிமேலாது நல்ல அப்பாவா இருங்க உங்க பொண்ணுக்கு . அதுவே எங்களுக்குப் போதும்.”
“கண்டிப்பா சரி இனிமே என் பொண்ணுக்கு நல்ல அப்பாவா இருப்பேன். எனக்கு ஒரு வேலை மட்டும் ரெடி பண்ணி குடுங்க சார். என் குடும்பத்தை இனிமே நானே பாத்துக்கிறேன்.”
இந்த மாற்றம் நாராயணனுக்கு பிடித்திருக்க உடனடியாக ஒரு வீட்டில் காவலாளி வேலைக்கு ஏற்பாடு செய்திருந்தார் சேகருக்கு.
அம்மு இளையாள்.
error: Content is protected !!