38.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,710
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 38.1
.
கைகள் இரண்டோடு கண்கள் இரண்டையும் பெரிதாக விரித்து, “அப்பா… பெல்ல்லிய மௌன்டன் மேல அவுஸ்” என்றாள் குட்டி யாழி பேருவகையோடு.
Advertisement
மகளின் விரிந்த கண்களும் அவள் துள்ளலும் கௌதமனை என்ன செய்யும்? உயிர்ப்போடு வைக்கும். மகளை அள்ளி வாரி கன்னத்தில் இதழ் புதைய முத்தமிட்டு இறக்கியவன், “ஆமா பேபி, பெரிய மௌன்டெயின். அந்த மௌன்டெயின் மேல இருக்கது ஹவுஸ் இல்ல, டெம்பிள்.” என மகளுக்கு திருச்சியின் மலைக் கோட்டையை விவரித்தான்.
Advertisement
“காட் டெம்பில்லா?” எனக் கன்னம் பற்றி அதிசயித்த மகள், “செயி… செயி தாஸ் மௌன்டன் மார்றீயா?” எனக் கேட்டு அப்பாவின் முகம் பார்த்தாள். தகப்பனுக்குப் புரிய நேரம் எடுத்தாலும் புரிந்து கொண்டான்.
Advertisement
“ஆமா என் அறிவு பேபி. செயின்ட் தாமஸ் மௌன்டெயின் மாதிரி இந்த மௌன்டெயின் மேலயும் டெம்பிள் இருக்கு” என மகளின் உச்சி முகர்ந்தான். என்றோ ஒரு நாள் அழைத்துச் சென்ற இடத்தை மகள் எப்படி நினைவில் வைத்திருக்கிறாள் என்ற பெருமை தகப்பன் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.
Advertisement
“அடு மாடியே பலி இலுக்கா?”
“ஆமா டா பேபி… அதுல இருக்க மாதிரியே இதுலயும் படி இருக்கு. அது வழியா மேல போயிட்டு வரலாம்”
“நானுக்கு மேல போயாம் பா” என மகள் துள்ளிக் கொண்டே கேட்க, அதற்கான நேரம் வரவில்லை போலும், “நிறையப் படி இருக்கு பேபி. அப்பாக்கு அதுக்கு தெம்பில்ல. அப்பறம் ஒரு நாள் போலாம்…” என மூச்சை இழுத்துவிட்டவன், “இப்போ அப்பா உனக்கு ரிவர் காட்டவா?” என மகளின் கவனத்தைத் திசை திருப்பினான்.
“ஓகே அப்பா” என்ற மகள், “அப்பா ஆலி பேபி காலு வலிது. சூக்குங்க” என இரு கரங்களையும் தந்தையை நோக்கித் தூக்க, மகளைத் தூக்கி தோளில் ஏற்றிக்கொள்ள, யாழியும் தந்தையின் தோளின் இருபுறமும் கால்கள் தொங்க, தலையைப் பிடித்து அமர்ந்து கொண்டாள்.
கடைத் தெருக்களை வலம் வந்த அப்பாவும் மகளும் கடைசியாகக் கல்லணையை நோக்கிப் பயணிக்க திட்டமிட்டனர். இது, தகப்பன் மகளின் இரண்டாம் நாள் திருச்சியில். வந்த இரண்டு நாள்களாக வீட்டில் என்ன செய்வது எனத் தெரியாது, ஊர் சுற்றுவதை மட்டுமே தொழிலாகப் பாவித்து தகப்பனும் மகளும் அதைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வருகின்றனர்.
திருச்சியில் வந்திறங்கிய நொடியில் இருந்தே கௌதமனுக்கு மூச்சு முட்டுகிறது. நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு ஒரு பாரம். ஆறு மாதங்கள் நரக வலியில் இருந்த வேளையில் கூட இவன் இவ்வளவு எல்லாம் உணர்ச்சி வசப்படவில்லை. ஆனால்… உயிர் பிழைத்தபின், உணர்வு போராட்டம் அவனை வந்து ஒட்டிக் கொண்டது. முன்போல் அவன் இல்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரிகிறது. அதிகம் சிந்திக்கிறான். பிடித்த பலதும் பிடிக்கவில்லை. பிடிக்காத பலதும் பிடிக்கிறது. இதில் இந்த இரண்டு நாள் தனிமை… ஏதோ ஆண்டாண்டு காலமாகத் தனிமையில் உழன்று அதை வெறுத்தவன் போல் இந்தத் தனிமை அவனை அதிகம் படுத்தி எடுக்கிறது. அன்பு, குடும்பம், காதல் என மனம் பலதையும் வாஞ்சிக்கிறது. இங்கு வந்திருக்கக் கூடாதோ என்ற எண்ணம் இரண்டே நாளில் வந்து ஒட்டிக் கொண்டது.
திருமண நிச்சயம், நிச்சய நிகழ்வின் போது தன் மகளின் ஆதரவற்ற நிலை, நிச்சம் அன்றே நடந்த திருமண முறிவு, காதல் தோல்வி, அம்மாவின் சுடு சொற்கள், அந்தச் சொற்களில் இருந்த உண்மை எனக் கௌதமனை கடந்த சென்ற நாள்கள் சற்று புரட்டிப் போட்டிருக்க, “ஐ நீட் அ பிரேக் பா” எனக் கூறி தந்தையின் முன் நின்றான்.
முன்பென்றால் வாசுதேவன் பொங்கி இருப்பார். ஆனால் காலம் மகனோடு அவரையும் மாற்றியிருக்க, “எத்தன நாளைக்குக் கௌதமா?” என்றே கேட்டார்.
“ஃபியூ மந்த்ஸ்? தெரியல பா.” என்றவனிடத்தில் பதில் இல்லை. ‘ஏன் இந்த வனவாசம்?’ என இன்று கேட்டால், அதற்கும் அவனிடம் பதில் இருக்கப்போவதில்லை. ஆனால் அன்றைய நிலையில், அவனும் அவன் மகளும் அதிகம் தாக்கப்பட்ட நிலையில், ‘வேண்டும்… தனிமை வேண்டும்’ என மனம் கூப்பாடு போட்டது.
பழைய கௌதமனாக இருந்தால், பெட்டியைத் தூக்கிக் கொண்டு உலகின் ஏதாவது ஒரு மூலைக்கு நண்பர்களோடு சென்றிருப்பான். ஒரு வாரம் நண்பர்களோடு மனம் போல் கொண்டாடித் தீர்த்திருப்பான். அலுப்புத் தட்டியதும் புத்துணர்வோடு வீடு திரும்பியிருப்பான். இப்பொழுது அது சாத்தியமா? அவன் மகளை யாரை நம்பி விடுவான்? அவனைப் பெற்ற அன்னையே மகளுக்கு மருந்து கொடுத்துத் தூங்க வைத்ததை அறிந்த பின் யாரை நம்பி தன் மகளை விடுவான்? கங்காருவாக மாறி இருக்கும் கௌதமனால் மகளை இனி பிரிய முடியுமா என்ன? அவன் என்றால் இனி அதில் அவன் மகளும் அடக்கம் என்பதால், மகளைத் தூக்கிக் கொண்டு திருச்சிக்குக் கிளம்பிவிட்டான்.
“நேத்து வந்த குழந்தைக்காக… எப்படி டா?” என அன்னை கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இருந்தாலும் அதை உரைக்கப் பிடிக்கவில்லை. அவன் உயிரணுவைக் கொண்டு மகள் ஜனிக்கவில்லை என்பதால் யாழி அவன் மகள் இல்லை என இவர்கள் எப்படிக் கூறலாம்? இவனோடு ஒட்டிப் பிறந்து, சில மணி நேரம் கூட மண்ணில் நிலைக்காத உயிரை அன்னையால் இன்றுமே மறக்க முடியவில்லை. இவன் பிறந்த நாள் என்ற ஒரே காரணத்திற்காக வருடா வருடம் இவனோடு உண்ணும் அன்னை மறு நாள் வாயில் நீரைக் கூட வைக்க மாட்டார். இவ்வளவு அன்பைச் சுமக்கும் அன்னையால் ஏன் தான் கொண்ட அன்பைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது கௌதமனுக்கு புரியவில்லை.
“ஏதோ கோபத்துல பேசினா, நீயும் கோவிச்சுட்டு கிளம்பிடுவியா?” என அன்னை கேட்டதற்கு, “கோபம் இருந்துது. இப்போ கூட இருக்கு. அதுக்காக எல்லாம் போக நினைக்கல. அப்படி நீங்க பேசினதுக்காக கிளம்ப நினைச்சிருந்தா, அன்னைக்கே… அங்கிருந்தே என் மகளோட கிளம்பி இருப்பேன். இது வேற மா… எனக்கான பாதைய நான் தேடணும்… என்னை நம்பி இருக்க என் குழந்தைக்கு ஒரு நல்ல எதிர்காலம் கொடுக்கணும்ன்னா, யார் தலையீடும் இல்லாம, நான் என் சொந்த கால்ல நிக்கணும். எல்லாத்துக்கும் முன்ன எனக்குள்ள ஏதேதோ குழப்பம்… அதுக்கு ஒரு முடிவு வேணும்“ என்றான் தெளிவாக.
“இங்க இருந்தே தேடேன்… ஒரு ஆதங்கத்துல கொட்டின வார்த்தைக்காக என்னை விட்டுப் போகாத கௌதமா. உனக்கு ஒரு நல்ல எதிர்காலம், அப்பா இழந்த தொழில் எல்லாம் திரும்ப கிடைக்குமேன்னு ஏதேதோ செய்துட்டேன். அது இப்படி முடியும்ன்னு சத்தியமா நான் எதிர்பாக்கல. பத்திரமா குழந்த தூங்குவான்னு நினைச்சேன்… இப்படிக் குழந்தைக்கு ஆகும்ன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கவே இல்ல கௌதமா. சொந்த பேத்தியா நினைக்க முடியலனாலும், எனக்கு யாழிய பிடிக்கும் கௌதமா. உனக்குக் கிடைக்க இருக்க நல்ல வாழ்க்கை அவளால கெட்டுட கூடாதுன்னு மட்டும் தான் யோசிச்சேன். நாலு தலமுறை அனுபவிக்கிற அளவுக்கு சொத்து இருக்கு… அது போதும்ன்னு நீயும் அப்பாவும் நினைக்கும் போது, எனக்கு மட்டும் என்ன?
இனி உன் பொண்ணு விஷயத்துக்கே நான் வரல… போதுமா? எப்பவும் போல அவள நானே பத்திரமா பாத்துக்கிறேன். நீ வீட்டோட இரு. உன்னையும் உன் பொண்ணையும் சேத்து விரும்பற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ… உனக்கு என்ன தொழில் சரிப்படும்ன்னு தோணுதோ அதையே செய்.
ஒத்துக்கிறேன் கௌதமா, அவ உன் மக தான். ஆனா நான் தான் அவள வளத்தேன். இப்படித் தூக்கிட்டு போரது சரியே இல்ல. சின்ன குழந்தையோட தனியா எல்லாம் உன்னால முடியாது. உன்னையும் படுத்தி, குழந்தையையும் படுத்தாத. சொன்னா கேளு.” என எப்படி எல்லாமோ வைஷாலி கேட்டுப் பார்த்தும் கௌதமன் மனம் மாறவில்லை.
ஒரு குழந்தையைத் தூக்கி வந்தாலும், அதை வளர்க்கும் பொறுப்பை அவனா செய்தான்? அன்னையும் தந்தையும் தானே பொறுப்பாகப் பார்த்துக் கொண்டனர். அம்மா வளர்க்கவில்லை என்றால் மகளிடம் இவ்வளவு செழிப்பைப் பார்க்க முடியுமா? இன்று வரை வைஷாலி யாழிக்கு எதையுமே மறுத்ததில்லை. இவ்வளவு நடந்தபின்னும் யாழியை அவர் ஒதுக்கி வைக்க மாட்டார் எனக் கௌதமனுக்கு தெரியும். இருந்தாலும்… அன்னை பேசிவிட்டார். இவன் மனம் காயப்பட்டுவிட்டது. உண்மை சுடுகிறது. ஆற மறுக்கும் காயத்தில் வலியை எப்படி போக்குவது?
அம்மாவின் மீது கோபப்பட்டோ, தன்னை அவரிடம் நிரூபிப்பதற்காகவோ வீட்டை விட்டு வெளிவர நினைக்கவில்லை. அந்தக் கட்டங்களை எல்லாம் அவன் தாண்டி இருந்தான். விபத்துக்குள்ளான அன்றிலிருந்து அவன் நடக்க எடுத்து வைத்த முதல் அடி வரையும், அவனோடு அவர்களும் அல்லவா செத்துப் பிழைத்தார்கள். அந்தக் காலகட்டத்தைக் கௌதமனால் மறக்க முடியுமா? இது வேறு…
உள்ளுக்குள் ஏதோ செய்கிறது. மனம் எதையோ தேடுகிறது. எதையோ இழந்து தவிக்கிறது. தொடர்ந்து வரும் சிந்தனைகள், மகளின் எதிர்காலம், மகளின் தாய்க்கான தேடல்… இவைகளெல்லாம் ஏற்படுத்தும் தாக்கம் எனக் கௌதமன் தன்னை தொலைக்க ஆரம்பித்தான். இதெல்லாம் இந்த ஒரு வாரமாகவா எனக் கேட்டால்… அதுவும் இல்லை. தாக்ஷா தன்னை விட்டுச் சென்றது தன்னை இவ்வளவு பாதிக்குமா என யோசித்தால், அதற்கும் பதில் இல்லை.
“என்ன டா சொல்ற? உங்களுக்குள்ள பிரேக்ப்பா?”, “என்ன… கல்யாணம் நின்னுடுச்சா?” எனப் பல கேள்விகள் பல இடங்களிலிருந்து வந்தவண்ணம் இருக்க, அது ஒருபக்கம் கௌதமனை வெறுப்பேற்றியது. நடந்து முடிந்த சம்பவங்கள் கௌதமனை வெகுவாகப் பாதித்திருக்க, தனக்குத் தெரிந்த ஒருவரும் இல்லாத இடத்திற்குச் சில காலம் செல்லவேண்டும் என்ற உத்வேகம் உள்ளுக்குள் எழுவதைக் கௌதமனால் அணைக்க முடியவில்லை. நாளுக்கு நாள் அந்த எண்ணம் வலுத்ததே ஒழிய, அன்னை கூறிய சமாதானம் எதுவும் மூளையை எட்டவில்லை.