மழை காலத்து விடியல் எப்போதுமே இதத்தை சற்று தாராளமாகவே கொண்டு வந்து நம் இடம் சேர்க்கும். போர்வைக்குள் சுருண்டு கிடந்தவனுக்கும் அப்படித்தான். இன்னும் சற்று தூங்கச் சொல்லும் ஓர் அழகான குளிர்காலத்து இளங்காலை.
Advertisement
ஆனாலும் கண்ணை உருட்டி அவனைப் பார்க்கும் மகிழனின் அந்த மழலை முகமும் இவன் முகத்தோடு முகம் வைக்கக் கன்னம் முட்டி, அவன் போடும் எச்சில் கோலங்களும் ஏனோ குமரனைக் கட்டிப் போட்டுவிடும்.
தினமும் இருமுறையாவது மகிழனைப் பார்க்கப் பழகிக் கொண்டான். முப்பதாம் நாள் காரியமெல்லாம் முடிந்திருந்தது. நேற்று எல்லா உறவினர்களும் வந்து செல்லவுமே இரவு சற்றே வாடி வதங்கி இருந்தான் சின்னவன்.
Advertisement
Advertisement
இந்த வாரத்தில் அவர்களை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்கள். அதற்குள் அவளிடம் மீண்டும் ஒருமுறை பேசிவிட வேண்டும்.
இதை நினைத்தபடியே படுக்கையில் கிடந்தவன் எட்டி சாளராத்தின் வழியே வெளியில் பார்த்தான். நிலவின் ஒளி மொத்தமும் இரவில் கரைந்து கலந்து மங்கி மறைந்திருந்தது.
Advertisement
இனி சற்றே கீழ்வானம் வெளுக்கத் தொடங்கும். எட்டி பூவினியின் அறையைப் பார்த்தான். எதிர்பார்த்தபடி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
‘மகிழன் இன்னைக்கி வெள்ளனவே முழிச்சுட்டான் போல. ஒரு அர மணி நேரத்துல அங்குட்டு போவோம்.’ நினைத்தவன் எழுந்து தன்னை சுத்தம் செய்து கொண்டு வெளியில் வந்தான்.
இன்று வார விடுமுறை. கல்லூரி செல்ல வேண்டியதில்லை. அவசரமில்லாமல் இந்த நாளைத் தொடங்கலாம் என அவன் நினைக்க அந்நேரமே அப்பத்தா எழுந்து சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.
“அப்பத்தோவ், என்ன நேரமே எழுந்து உருட்டுக்கிட்டு இருக்கிய? தூங்கலையா? தள்ளுங்க பால் வக்கிறேன். காப்பிய போடுவோம்.” என்றவன் எட்டி ஐயாவின் அறையைப் பார்த்து விட்டு, “ஒங்க மன்னவரு இன்னும் தூங்குறாரு போல.”
”இல்லாடா, பச்ச பிள்ளைக்கு என்னத்துக்கு இம்புட்டு காட்டமா மருந்து. இது அரவிந்தனும் அனுசாவுக்கும்தே. நேத்தே ரெண்டுக்கும் ஒரே சளி. மருந்து கொதிக்கவும் கொண்டுக்குட்டு போகலாம் இரு“ என்றவர் அவன் முகத்தை திரும்பி ஒருமுறை பார்த்துவிட்டு ”ஆமா, நீ என்னத்துக்கு இப்ப அங்குன போக துள்ளிக்கிட்டு நிக்கிற?”
”எய்யா, ஊரே கட்டி ஆளுற ராசாவுக்கு உசுரு மேல பயமாம். அந்தக் கணக்கா, அதென்ன காலேஜூல அம்புட்டு புள்ளயலுக்கு பாடமெடுக்குறவே, இங்குன எம்பேத்திகிட்ட பேச அஞ்சுற.“
”ஹுக்கும், சும்மா இரு அப்பத்தா. நீயா ஏதாவது சொல்லாம. மருந்து கொதிக்கவும் நானே அமத்துறேன். பேசாம வெளி நாக்காலில இருங்க செத்த. நா காப்பி வைக்கிறேன்.“ பேசியபடியே அப்பத்தாவை வெளி வாசலுக்கு அனுப்பியவன் பாலை அடுப்பில் ஏற்றினான்.
பாலின் வெப்பநிலை போலவே இவனின் நினைவுகளும் மேலேறி அன்று பூவினியின் அப்பா கதிரேசனை சந்தித்தது நினைவுக்கு வந்தது. அவரிடம் பேசச் செல்லும் முன் அவன் நினைத்ததெல்லாம் ஒன்றுதான்.
குறைந்தது திருமணத்தை சில மாதங்களாவது தள்ளி வைக்கச் சொல்ல வேண்டும் என்பது. இவர்கள் இருவருக்குமே இதை ஏற்க காலம் அவசியம் என எண்ணினான்.
அன்று அவரை பாக்கச் செல்லும் முன் பூவினியிடம் பேசி இருந்தான். அவளோ ‘என்னய என்னத்துக்கு கேக்குறீங்க?’ என்றிருக்க இவனுக்கும் கோவம் தான்.
பெரியப்பா தன்னை எதனால் இந்த சிக்கலில் இழுத்து விட்டார் என்பதை முழுமையும் அறிந்தவனாயிற்றே.
ஆனாலும் இந்தத் திருமணத்திற்கு இவனது ஐயா சம்மதம் சொல்லி இருக்க அதை மறுக்கும் எண்ணம் எல்லாம் இல்லை குமரனுக்கு.