Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கன்னத்தில் முத்தத்தின் ஈரம்

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் 2 (1)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம்…!

ராதா ரமணா

அத்தியாயம் 02:-

“ரொம்ப நேரமா லேன்ட் லைன் ரிங் பண்ணுது, யாருன்னு பாரேன் ராதா” இரவுணவுக்கு அடுக்களையில் இருந்த அம்பிகா, இளைய மகளை ஏவ,



Advertisement

பெரிய‌ உறைபோட்ட தடினமான மேத்ஸ் புத்தகத்தோடு போராடிக் கொண்டிருந்த ராதா மூடி வைத்து எழுந்தவள் முழுதாக அடித்து ஓய்வதற்குள் எடுத்து காதில் வைக்க,

“ஹ…” ‘ஹலோ!’ என்பதற்குள் “யாரு டி அது இந்த நேரம்” என்றார் அம்பிகா.

“கேக்கலம்மா யாருன்னு பார்க்கிறேன்” என்க,

Advertisement

“இன்னும் கேக்கலையா, என்ன பிள்ளையோ போ. ஒன்னுத்துலையும் வேகம் இல்ல” என்றார் அதற்கும் பேச்சாக.

Advertisement

சலிப்பாக தலையசைத்துக் கொண்ட ராதா, மெல்லிய குரலில் “ஹலோ?” என்க,

“ராது, சுபி பேசேன்றடி” என்றது மறுபக்கம்.

“சுபி!” என்றாள் கேள்வியாக.

Advertisement

அதற்குள் மீண்டும் அம்பிகா “யாருன்னு கேட்டியாடி” என்று குரல் கொடுக்க, “சுபிம்மா” என்றாள்.

“சுபியா… என்னவாம், அவளோடதானே க்ளாஸ் போய் வந்த, அதுக்குள்ள என்னவாம்” என்றார் அடுக்கடுக்காக கேள்விகளாக.

மறுபக்கம் சுபஷ்வினியும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். ‘இதுக்கு நான் நாளைக்கு ஸ்கூல்ல வெச்சே பேசிருந்திருக்கலாம்’ என எண்ணாமல் இருக்க முடியவில்லை அவளால். ஆனால் எங்கே! ‘இப்போ, இப்போவே கேட்டு சொல்லுடி ப்ளீஸ்டா ப்ளீஸ்!’ என ஆயிரம் ‘ப்ளீஸ்’ போட்டு அவளைக் கரைத்திருந்தான் ரமணா.

‘சரி டா சரி, மூச்சு விடு நீ முதல” என்று அவனை அடக்கி விட்டுத்தான் இப்போது ராதாவுக்கு அழைத்திருந்தாள்.

“சொல்லுடி” என்ற ராதாவிடம் ‘இப்போதே சொல்லலாமா வேண்டாமா’ என்ற யோசனை ஒரு பக்கம் எழ, “அம்மா பக்கத்தில இருக்காங்களாடி” என்றாள் பதில் கேள்வியாக.

ஏதோ சொல்ல விளைகிறாள் என்பது மட்டும் புரிய, குரலை தழைத்து “கிட்சன் ல இருக்காங்க, என்ன, என்ன விஷயம், நாளைக்கு ஸ்கூல்ல வெச்சி சொல்ல முடியாத ஏதுமா” என கேட்டவளுக்கு என்ன சொல்வதென தெரியாமல் தடுமாறிய சுபஷ்வினி மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு,

“நான் சொல்லிருக்கேன்ல தேவாம்மா, எங்கம்மாவோட சித்தி முறையாகனும். அவங்க மூத்த பையன், அதான் என் மாமா, இன்னிக்கு நீ என் வீட்ட வரும்போது பார்த்திட்டு பிடிச்சிருக்குன்னு சொல்லி விடமாட்டேங்கறான் டி. நீ அவனை பார்த்தியா. எங்க வீட்டு கேட் முன்னாடி ப்ளூ கலர் ஷேர்ட்டில் இருந்தானே!” என கட கடவென ஒப்பித்தவள் இழுத்து பிடித்த மூச்சை வெளிவிட,

இங்கு பயத்திலும் பதற்றத்திலும் உடலில் உள்ள வேர்வை சுரப்பிகள் யாவும் உள்ளங்கையில் மையம் கொண்டதைப் போல ரிசீவரை பற்றி இருந்த கைகளில் இருந்து அதோ இதோவென வழுகி விழ தயாராக இருக்க, உச்சகட்ட அதிர்ச்சியில் எச்சிலை விழுங்கி கொண்டே, சுற்றிலும் யாரும் இருக்கிறார்களா என்பதைத் தான் ராதாவின் விழிகள் முதலில் நோட்டமிட்டது.

அவளது நீண்ட மௌனத்தில் “ராது, ஓய் ராதா” என சுபஷ்வினி இரு முறை அழைக்க,

“ஆஹ்!” கனவில் இருந்து விழித்தவள் போல் அவள், “எ…என்ன சொன்ன சுபி, யாரு டி அது, நான் பார்க்கலையே. எ..எனக்கு மயக்கமே வரும் போலருக்கு, நீ ஒன்னும் வெளாடலையே” என குரலை தழைத்து மெல்லிய குரலில் கிசு கிசுத்தாள் ராதா.

“ஹே, நிஜமாடி. இதில போய் விளையாடுவேனா, அவன்கிட்ட இதை சொன்னேன்னு வை, என்னை தூக்கிப்போட்டே மிதிப்பான். பையன் ரொம்ப சீரியஸா இருக்கான்டி” என்றாள்.

“நா..நான் என்ன பண்ண, என்ன பண்ணட்டும்” என அவளிடமே ஆலோசனை கேட்க,

அதற்குள் அடுக்களையில் இருந்து வெளியே வந்த அம்பிகா “இன்னும் பேசி முடிக்கலையா நீ, ஆமா ஏன்டி உன் மூஞ்சு பேயறைஞ்சா போல இருக்கு? என்ன சொன்னா உன் ஃப்ரெண்டு” என மகளை குறு குறுவென பார்க்க,

நொடியில் சுதாரித்த ராதா, “ஆ.. ஆ, நா…நாளைக்கு இங்க்லீஸ் டெஸ்ட் இருக்காம், படிச்சு முடிச்சியான்னு கேட்கிறா. அதான், எ…எனக்கு மறந்திடிச்சு நல்லவேளை நீ ஞாபகப்படுத்தினேனு சொல்லிட்டிருக்கேன்” எனவும்

‘உண்மை தானா?’ என்னும் விதமாக மகளை கூர்ந்து பார்த்த அம்பிகா, ராதா முகத்தில் தென்பட்ட கலக்கத்தில் “அதான் பேசிட்டீல்ல, போ போய் படிக்கிற வேலையை பாரு, நாளைக்கு ஸ்கூல்ல வெச்சு பேசிக்கலாம்” என்க,

அங்கு கேட்டுக் கொண்டிருந்த சுபஷ்வினி, ‘விஷயத்தை சொல்லியாகி விட்டது. அவள் யோசித்து முடிவெடுக்கட்டும்’ என்ற எண்ணத்தோடு, “சரி நான் வைக்கிறேன். நல்லா யோசிச்சு, நாளைக்கு நல்ல பதிலா சொல்லு. நாளைக்கு பார்க்கலாம்” என அழைப்பை துண்டித்தாள்.

பட படக்கும் மனதோடு ரிசீவரை அதன் தாங்கியில் பொருத்தியவள் நகர சிரமப்பட்ட கால்களை நகர்த்தி படிக்கும் மேஜையில் வந்தமர்ந்தாள். புத்தக தாள்களை விரல்கள் ஒவ்வொன்றாக புரட்டிக் கொண்டிருக்க, மனமோ மீண்டும் மீண்டும் சுபஷ்வினி சொன்னவைகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தது.

‘உன்னை பிடிச்சிருக்காம்!’

‘உ.ன்.னை.பி.டி.ச்.சி.ரு.க்.கா.ம்!’ என மனதுக்குள் அவள் குரல் இடைவிடாமல் ஒலிக்க, இதயம் பந்தயக்குதிரை வேகத்திற்கு அடித்துக் கொண்டது.

எத்தனை யோசித்தும் அவனை, சுபியின் மாமனை, ப்ளூ ஷேர்ட்டை பார்த்த ஞாபகம் வரவில்லை. எத்தனை யோசித்தாலும் ஞாபகத்திற்கு வந்திருக்க போவதில்லை. அவள் தான் யாரையும் தலை நிமிர்த்தி பார்ப்பதில்லையே. இயல்பிலே மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவளை அவள் குடும்பமும் அதன் கட்டுப்பாடுகளும் மற்றவர்களிடமிருந்து அவளை மேலும் ஒடுக்கியே வைத்திருந்தது. அதிர்ந்து பேசாத, சகஜமாக பழகாத, இரக்க குணமுள்ள மென்மையான பெண்ணவள்!

அதனாலே பலருக்கும் அவளை இயல்பாகவே பிடித்துப் போய்விடும். சுபஷ்வினியும் அப்படித்தான் அவளுடன் நட்பில் இணைந்தாள். ராதாவின் உலகமும் அவளை சுற்றியிருக்கும், அவளைப் புரிந்து கொண்ட நண்பர்கள் மட்டுமே!

அதிலும் சுபஷ்வினியுடன் நெருக்கம் மற்றவர்களை காட்டியும் அதிகம் என்பதால் தான் அவளாலும் ராதாவிடம் இதைப் பற்றி பேச முடிந்தது.

தலையை பிடித்து கொண்டாள் ராதா.

‘என்ன செய்வது, என்ன சொல்வது?’ என ஒன்றும் புரியாத நிலையில் அவள் குழம்பிக் கொண்டிருக்க, அம்பிகாவிடம் இருந்து பறந்த வந்த கரண்டி நச்சென்று அவள் கால் விரல்களை பதம் பார்த்ததில் காலை உதறிக்கொண்டு வலியில் கலங்கிய கண்களை சிமிட்டி நிமிர்ந்தவள் அங்கு முறைத்துக் கொண்டிருந்த அம்பிகாவை கேள்வியாக பார்க்க, “எத்தனை தடவை உன்னை கூப்பிடுறது, காதிலே வாங்காம அப்படி என்னத்தடி யோசிச்சு உக்காந்திருக்க? பரிமளம் பொண்ணோட நிலமை ஞாபகம் இருக்குல்ல…” என்க, கலங்கிய கண்களுடன் தலையாட்டி வைத்தாள்.

எதற்கெடுத்தாலும் அம்பிகாவின் வாயில் இருந்து வருவது ஒன்று தான். அது, ‘பரிமளம் பொண்ணோட…’ என்று ஆரம்பித்தால், காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கணவனால் கைவிடப்பட்டு இப்போது அரை உயிராக இருக்கும் மஞ்சுளாவை வைத்து பெரிய சொற்பொழிவே ஆற்றுவார்.

‘காதல்’ என்றாலே அவள் குடும்பத்திற்கு வேப்பங்காய் கசப்புத் தான். அதை நினைக்கும் போதே அவள் அடிவயிறு கலங்கியது.

பயத்தில் அவள் அலங்க மலங்க விழிக்க, “உன் பார்வையே சரியில்லையே” அம்பிகா மகளை பார்வையால் துளைக்க, முயன்று தன்னை மீட்டுக் கொண்ட ராதா “நாளைக்கு இங்க்லீஸ் டெஸ்ட் கொஞ்சம் கஷ்டமான பாடத்தில், அதான்… அ…அதைப் பற்றி யோசிச்சிட்டு இருந்தேன்” என்க,

“ம்ம்” என்னும் விதமாக அதட்டல் ஒன்றை போட்ட அம்பிகா, “முதல வந்து சாப்பிடு, மத்ததை அப்பறம் பார்த்துக்கலாம்” என்றழைக்க, அமைதியாக எழுந்து சென்றாள்.

அடுக்களையில் பாயை விரித்து அம்பிகாவும் அவளுமாக உணவை உள்ளே தள்ளினர். மற்றவற்றில் எப்படியோ உணவு விஷயத்தில் அம்பிகாவின் கைப்பக்குவமே தனி தான். அவளுக்கு மிகவும் பிடித்த உணவு‍, ஆனால் அவளால் அதன் சுவையறிந்து உண்ண முடியவில்லை. இனம்புரியாத கலக்கம் உள்ளத்தை கூறுபோட்டு கொண்டிருந்தது.

அந்தக் கலக்கம் மறுநாள் ஸ்கூலில் ஆவலும் கேள்வியுமாக சுபஷ்வினி அவளை பார்க்கும் வரை தொடர, “சொல்லு ராது, என்ன முடிவெடுத்திருக்க, நல்லா யோசிச்சியா” அடுக்கடுக்காக கேள்விகளாக அடுக்கினாள்.

மௌனமாக கைவிரல்களை ஆராய்ந்த ராதா, எச்சிலை விழுங்கி கொண்டே சுபஷ்வினியை ஏறிட, ஆவல் தாங்கிய அவள் முகமே அவளது ஆசையை வெளிப்படுத்தியது.

“எனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமாடி, உன்னை போல ஒருத்தி எங்க ஃபேமிலிகுள்ள வந்தா எப்படி இருக்கும் தெரியுமா… அப்பறம் நாம பிரியவே வேண்டியதில்லை. நீ சொல்லு என்ன முடிவெடுத்திருக்க?” என்றவளின் உற்சாக பட படப்பு அவளை குற்றவுணர்வுக்கு ஆளாக்கியது.

சுபஷ்வினியை அவளுக்கு எந்தளவுக்கு பிடிக்கும் என்று ராதாவுக்கு வார்த்தைகளால் வர்ணிக்க தெரியவில்லை. அந்தளவு அவளை நன்கு புரிந்து கொண்டவர்களில் அவளுக்கு தான் முதலிடம். உள்ளூர, சுபஷ்வினியின் பேச்சில் சிறு குறு குறுப்பு எட்டிப்பார்க்க, மறுபுறம் அம்பிகாவின் முகம் தோன்றி அச்சுறுத்தியது.

தோன்றிய மெல்லிய பட படப்பையும் அது துடைத்தெறிய, “ச…சரி வராது சுபி, எ…என் வீட்டை நினைச்சாலே கொல நடுங்குது. என்னை கண்டம்துண்டமா வெட்டிப்போட்டுட்டு தான் மறுவேலையே பார்ப்பாங்க. அநியாயமா என்னை விரும்புற பாவத்துக்காக உன் மாமாவை பழிகடா ஆக்கச்சொல்றியா… எ…என்னால சத்தியமா முடியாது. அவருக்கிட்ட வேண்டாம்னு சொல்லிடுடி, ப்ளீஸ்” என்றாள் நடுங்கும் இதழ்களை கடித்துக்கொண்டு.

ஒரு நொடி கசங்கிய சுபஷ்வினி முகம் அவளது குடும்பத்தை பற்றி நன்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு தெரியுமாதலால் அவளது நிலை உணர்ந்து மறுநொடி இயல்புக்கு திரும்ப, “சரி சரி, ஃப்ரீயா விடு. ஒன்னையும் யோசிக்க தேவலை. அவன்கிட்ட நான் பேசிக்கிறேன்!” என்று அவள்தான் ராதாவை ஆறுதல்படுத்த வேண்டியிருந்தது.

அன்றே சுபஷ்வினி ரமணாவிடமும் அதை பகிர்ந்து கொண்டாள். அவன் என்ன சொன்னானோ, மறுநாள் முழுக்க ராதா, பாடத்தை கவனித்தாளோ இல்லையோ சுபஷ்வினி முகத்தை அடிக்கடி பார்க்க, ஒரு கட்டத்தில் அவளே கேட்டுவிட்டாள், “என்னடி” என்று.

“ஆங்… அ…அது அது வந்து உனக்கு, என்மேல கோபம்லா…ம் ஒன்னுமில்லையே சுபி” ராதா தயக்கமாக கேட்க,

“ஏய் மண்டு! எதுக்குடி கோபப்பட, நீ என்ன தப்பு பண்ண சொல்லு? அவன் விருப்பத்தை அவன் சொன்னான், நீ உன்னோட பதிலை சொன்ன, அவ்வளவு தான், முடிஞ்சுது” என சிறு தோள் குலுக்கலில் பேச்சை முடித்துக் கொண்ட சுபஷ்வினி

தலையை திருப்பி நோட்டில் கவனம் செலுத்தியவள் அடிக்கண்ணால் ராதாவை நோட்டமிட,

அங்கு முகம் சுருங்கி, வெற்றுத் தாளில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தாள் ராதா. ‘அவ்வளவு தானா!’ என அவள் முகமே அவளது மனதின் சிறு ஏமாற்றத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

அவளையே குறு குறுவென பார்த்த சுபஷ்வினிக்கு ‘அப்போ, மேடம் மனசுக்குள்ள பட்டர்ஃப்ளை புகுந்தாச்சு. ஹூர்ரே! டேய் மாமா, உன் லவ் சக்ஸஸ் ஆகபோகுதுடோவ்’ நொடியில் மகிழ்ச்சி அலை மனதுக்குள் பரவ, எகிறி குதித்து கும்மாளமிட்டவளுக்கு சர்வ நிச்சயமாக புரிந்து போயிற்று! ராதா, அவள் இதை புரிந்து கொண்டாளா இல்லையா என்னும் கேள்வியில் ‘அடங்கு அடங்கு, நான் புரிஞ்சிக்கிறதா முக்கியம்? புரிய வேண்டியவளுக்கு இன்னும் பல்ப் எரியலயே!’ தலையில் தட்டி கொட்டி, மகிழ்ச்சியில் பொங்கும் மனதை அடக்குவதற்குள் பெரும்பாடாகியது.

நேற்று, சுரத்தேயில்லாமல் வெளியே உற்சாகமாக காட்டிக்கொண்டு நடந்து சென்ற ரமணாவின் உருவம் கண்களை விட்டு அகலாமல் குற்றவுணர்வுச்சியில் அவளை குறு குறுக்க செய்து கொண்டிருந்தது இப்போது வரை.

‘டேய் மாமா, உன் ராதா லவ்ல விழுந்திடிச்சுடா’ என அவன் முகம் பார்த்து சொல்ல வேண்டும் என்னும் இன்பப் பர பரப்பு சுபஷ்வினியை தொற்றிக் கொள்ள,

தன் மனதை, தானே உணராமல் தத்தளிக்கும் ராதாவை எண்ணி ‘நீ, நிஜமாலுமே மண்டு தான்டி ராது. எப்போ புரிஞ்சு, எப்ப லவ் பண்ண போறியோ… அதுவரை என் மாமா தாங்குவானா தெரியலையே’ நினைவே மலைப்பை தர, தலையை உலுக்கி பெருமூச்சை விசிறியவள் ராதாவை கண்டும் காணாமல் அமர்ந்திருக்க, அவளோ மீண்டும் சுபஷ்வினி புறம் பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்தாள்.

சிறு ஏமாற்றம், அது தந்த இன்னதென்று பிரித்தறிய தெரியாத கலவையான உணர்வு, அதில் உண்டான சுணக்கம் என ராதா, முற்றிலும் தன் வசமிழந்திருந்தாள்.

அதையும் கவனித்து ‘இவ மனசில என்ன இருக்குன்றத தெரிஞ்சிக்கவாச்சும் கொஞ்சம் அலைய விடலாம் தப்பில்ல’ என்றெண்ணிக் கொண்டாள் சுபஷ்வினி.

“என்னடி, சுபி மூஞ்சியை ஏதோ புதுசா பார்க்கிறாப்ள பார்த்திட்டிருக்க? ஏய் சுபி! என்னடி ஆச்சு, இந்த ராது உன்னையே பார்த்திட்டு இருக்காள்… சண்டையா உங்க ரெண்டு பேருக்குமிடையே” என அவர்கள் இருவரினதும் நெருங்கிய தோழிகள் சிலரும் ராதாவிடம் தொடங்கி சுபஷ்வினியிடம் பளிச்சென கேட்கும் அளவுக்கு ராதாவின் பார்வையிடல் தொடர, ‘அப்படியா என்ன?’ சுபஷ்வினி, ஒற்றை புருவம் உயர்த்தி ராதாவின் பக்கம் பார்க்க,

அதை எதிர்பார்க்காத ராதா, திடுக்கிட்டு என்ன சொல்ல என தெரியாமல் அலங்க மலங்க விழித்தவள் லேசாக சிரித்து சமாளித்து தலையை திருப்பிக் கொண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொள்ள, உடலோ ஒட்டு மொத்தமாக நடுங்கிக் கொண்டிருந்தது. பட படக்கும் இதயமும் அவள் கட்டுக்குள் அடங்க மறுத்தது.

தானுண்டு தன் வேலையுண்டு என்றே  நாட்களை கடத்தியவள். வீடு விட்டால் ஸ்கூல், ஸ்கூல் விட்டால் மாலைநேர வகுப்புகள் என குறுகிய வட்டம் ராதாவுடையது. உறவினர்கள் அவள் வீட்டுக்கு வருவதோ அம்பிகாவும் அவளும் வெளியே எங்கும் செல்வதோ அரிதிலும் மிக மிக அரிதே.

அப்படிப்பட்டவளிடம் சுபஷ்வினி சொன்ன ‘உன்னை பிடிச்சிருக்காம்!’ என்ற வரி, அவள் அறியாமலே அவளின் உலகத்தை புரட்டிப் போட்டிருந்தது.

அது தந்த ஏமாற்றம், முற்றும் முழுதாக மனம் மீள மறுக்க, அன்று மட்டுமல்ல அடுத்த வந்த இரண்டு நாட்களும் ராதா, சுபஷ்வினி முகத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!