Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

51 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 51.1

“இங்கயே இருந்தா எப்படி ஐயா?” முதலாவதாகத் தெளிந்த ரகு, தன் ஐயாவை திருச்சிக்குக் கிளப்ப முயன்றான்.

ஜீவன் வடிந்த முகத்தோடு அமர்ந்திருந்தவருக்கு அவன் பேச்சு அன்னிய மொழியாகத் தோன்ற அவனைப் பார்த்தே அமர்ந்திருந்தார். இவன் வாட… அவர் தாங்கி நிற்பார். அதுதானே இவர்களின் வழமை.



Advertisement

“சின்ன கட்டிக்கு இவ்வளவு கவல வேண்டா ஐயா” என இவன் அவரை தாங்க முயன்றான். தன் சொந்த மகனைப் போல் நேசிக்கும் ரகுவிற்கு ஒரு துன்பம் என்றால் அரவிந்தனால் எப்படி அதைத் தாங்க முடியும்? சின்ன கட்டியோ, பெரிய கட்டியோ… கட்டி வந்திருப்பது மூளையில். அவருக்கு, பயம் கொள்ளாது இருப்பது எப்படி என்று தெரியவில்லை.

‘உன் மார்பிலும் மடியிலும் போட்டு வளர்ந்த உன் குழந்தைக்கு மூளையில் கட்டி’ எனச் சந்திரிகாவிடம் எப்படிக் கூறுவார்? அந்த இரண்டு வயதானவர்களின் நிலை? நினைக்க நினைக்க மனம் பதறியது.

இரண்டு வயதில் இவன் கரத்தை பிடித்து நடக்க ஆரம்பித்து, அவனே தன் உலகம் என வாழும் தன் மகளின் நிலை? எல்லாவற்றிற்கும் மேலாகத் தன் வலியை முகத்தில் காட்டாது, அவர் எதிரில் புன்னகை முகமாக நிற்பவனால் இதை எப்படிக் கையாள முடிகிறது? இவனை என்ன சொல்லித் தேற்றுவது?  அரவிந்தன் ஓய்ந்து போனார்.

Advertisement

“ஐயா… நீங்க கிளம்புங்க. நீங்க இங்க இருக்க இருக்க, வீட்டுல இருக்க எல்லாருக்கும் என்ன ஏதோன்னு பயம் பிடிக்கும். சிகிச்சையே இல்லாத நோய் ஒண்ணும் வந்திடலியே. இது கேன்சர் இல்ல… டியூமர். அடுத்து என்னன்னு பார்ப்போம்.” எனத் தன் ஐயாவை இவன் தேற்ற, அவரும் ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

Advertisement

நகுலனும் அக்ஷராவும் அடித்துப் பிடித்து பெங்களூரு வந்து சேர்ந்த பின்னர் அரவிந்தன் திருச்சிக்குப் பயணமானார்.

முதலில் பயந்த ரகுவிற்கு அவன் ஐயாவின் தோள் தேவைப்பட்டது. ‘பார்த்துக்கலாம்… இப்போ என்ன?’ என்ற எண்ணம் வலுத்திருக்கும் ரகுவிற்கு, எப்பொழுதும் போல் பெற்றவரின் ஆறுதல் தேவை படவில்லை.

“ஒண்ணும் இல்ல பா… சின்னதா கட்டி அவ்வளவு தான். தேவையே இல்லாம ஐயா பயந்து, உங்களையும் பயமுறுத்திட்டார்” என நகுலனையும் தேற்றினான் ரகு.

Advertisement

இவ்வளவு நடந்த பின்னும் ரகு, தன் யசோ பேபியை அழைத்து பேசவே இல்லை. அனைவரிடமும் தைரியமாகக் காட்டிக் கொண்டவனுக்கு, அவளிடம் அவன் தைரியத்தைக் காட்ட முடியும் எனத் தோன்றவில்லை.

“இப்போதைக்கு வீட்டுல சொல்ல வேண்டாம். கட்டியோட கண்டிஷன பார்த்துட்டு, டிரீட்மென்ட் பிளான் எல்லாம் தெரிஞ்சுட்டு சொல்லுவோம்.” என்ற ரகுவின் கூற்றை அப்படியே அரவிந்தன் ஏற்றுக் கொண்டிருக்க, இந்த நிமிடம், ரகுவின் உடல் நிலை பற்றி இவர்கள் நால்வருக்கு மட்டுமே தெரியும்.

அக்ஷராவின் அண்ணனுக்குத் தெரிந்த மருத்துவர் மூலமாக டாக்டர். அருணை பற்றி அறிந்து கொண்டனர். நரம்பியல் நிபுணரான அருண் சென்னையில் பணிபுரிந்தாலும் அவ்வப்போது பெங்களூரில் இருக்கும் புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றிற்கு வந்து போவதாகத் தகவல் கிடைத்தது.

“டாக்டர் அருண், இங்க கன்சல்டேஷன் பண்றதில்ல. சர்ஜரிக்கு அவர கேட்டாங்கன்னா, வந்து செய்து கொடுத்துட்டு போயிடுவார். சென்னைல அவர் பார்க்கிறார்” என்று மருத்துவமனை கூறிவிட, சென்னைக்குப் போவதா இல்லை வேறு யாரையேனும் பார்ப்பதா என்ற சிந்தனையில் இருந்த அக்ஷராவிற்கு, அடுத்த வாரம் மருத்துவர் ஓர் அறுவை சிகிச்சைக்காக பெங்களூருக்கு வர இருப்பதாகத் தன் அண்ணன் மூலம் தகவல் கிடைத்தது.

“அவர் சர்ஜரி முடிஞ்சுட்டு சென்னைக்கு கிளம்பதுக்குள்ள பார்க்க சம்மதிச்சிருக்கார்” என்ற தகவலும் சேர்ந்தே வந்தது.

இவர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்த நேரத்திற்கு முன்னதாகவே ரகுவும், பெற்றவர்களும் மருத்துவரைக் காணச் சென்றனர். நேரம் கடந்து கொண்டு இருந்ததே தவிர மருத்துவர் அருணை காணவில்லை. இவர்கள் மட்டுமே அவர் அறையின் முன் இருந்த நாற்காலியில் காத்திருக்க, அவர் வருவாரா இல்லை கிளம்பிவிட்டாரா என்ற சந்தேகம் தோன்றியது.

“சர்ஜரி முடிஞ்சதும் டாக்டர் இங்க வந்துட்டு தான் போவார்.” என்ற பதில் அவர்களை அப்படியே அமர்த்தியிருந்தது. ஜெட் லேக் ஏற்படுத்திய தூக்கக் குறைபாடும், மகனின் உடல் நிலையால் ஏற்பட்ட நிம்மதியின்மையாலும் சோர்வு நகுலன் அக்ஷராவை சற்று அதிகமாகவே வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது.

நேரம் கடந்தது. அக்ஷரா மீண்டுமாக அருணின் உதவியாளருக்கு அழைத்துப் பேசினார்.

“க்ரிட்டிகல் சர்ஜரி… இன்னும் அரை மணி நேரமாவது ஆகும்ன்னு சொல்றாங்க. ஏழாவது மாடியில கேப்பிடேரியா இருக்கு. ஏதாவது சாப்பிட்டு, ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க, நேரம் இருக்கு” என உதவியாளன் கூற, இவர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் காத்திருந்தனர்.

ஆனால், வந்த மருத்துவர் காலில் சுடுநீரை ஊற்றியது போல் அவர் அறைக்குள் ஓடினார். அடுத்த சில நிமிடங்களில் மனிதன், அடித்து பிடித்து மீண்டும் ஓடத் தயாரானவர், இவர்களைப் பார்த்து நொடி நேரம் நின்றார்.

“நான் இங்க ரெகுலரா வரதில்ல. சென்னைல மட்டும் தான் கன்சல்டெஷன் பண்றேன். ரிப்போர்ட் பார்த்தேன், உங்களுக்கு வந்திருக்கது டியூமர். கண்டிப்பா டிரீட் பண்ணியே ஆகணும். இங்கயே டிரீட்மென்ட் பண்றதா இருந்தா, நான் வேற நல்ல டாக்டர ரெஃபர் பண்றேன். சென்னைல பார்க்கிறதா இருந்தா, அங்க எல்லா புதன் கிழமையும் ஓ.டி. பார்க்கிறேன். சாரி… இப்போ கொஞ்சம் அவசரம்.  என்னோட அசிஸ்டென்ட் கிட்ட பேசுங்க. ” என்ற மருத்துவர் ஓட்டமும் நடையுமாகக் கிளம்புவதை இயலாமையோடே பார்த்திருந்தனர் நகுலனும் அக்ஷராவும்.

அப்படி இவர் மட்டும் என்ன கூறிவிடப் போகிறார் என்ற நினைப்போடு காத்திருந்த ரகுவிற்கு சலிப்பு மட்டுமே மிஞ்சியது.

வீட்டிற்கு வந்தவர்கள் மூலைக்கு ஒருவராக அமர்ந்தனர். ‘அடுத்து என்ன?’ என்ற எண்ணமே மூவருக்கும். எந்த நம்பிக்கையில் தெரியாத மருத்துவரிடம் தலையைக் கொடுப்பது?

தங்களோடு அழைத்துச் சென்றுவிடலாம் என இருவரும் முயல, ரகுவிடம் எந்தப் பதிலும் இல்லை.

“அட்வான்ஸ்ட் டிரீட்மென்ட் அங்கக் கிடைக்கும். ரெக்கவரிக்கும் நானும் அப்பாவும் கூடவே இருப்போம்… பிளீஸ் கன்சிடர் பண்ணு வீர்” என மகனை எப்படியெல்லாமோ அழைத்துப் பார்த்தார் அக்ஷரா.

ரகு சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. இந்த விஷயம் கேள்விப்பட்டால், சந்திரிகா தன் வேலையையும் விட்டு ரகுவே கதி எனக் கிடப்பாரே. அவன் குடும்பத்தை விட்டு எப்படி இவர்களோடு செல்வான்? முடியாது என்றுவிட்டான்.

அக்ஷராவின் கைப்பேசி அமைதியைக் கிழித்துக் கொண்டு இசைத்தது. மருத்துவரின் பிஏ என்றதும் உடனே அழைப்பை ஏற்றார் அக்ஷரா.

“சாரோட அப்பாக்கு நைட் ஹார்ட் அட்டாக் வந்துது. ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு இங்க அவசரம்ன்னு கிளம்பி வரும் போது அவர் காலமாகிட்டார். போனவர காப்பாத்த முடியாட்டாலும், இவருக்காக காத்திருக்க உயிர காப்பத்தணும்ன்னு வந்த இடத்தில எதிர்பாராத விதமா லேட் ஆகிடுச்சு.

அவருக்கு ரெண்டு மணி நேரத்துல ஃபிளைட். சர்ஜரிய முடிச்சுட்டு… அப்போவே போனா கூட அதைப் பிடிக்கிறது கஷ்டம். அதுதான் நின்னு அவரால பேச முடியல. உங்கட்ட அவர் நிலமைய சொல்லி சாரி கேக்கச் சொன்னார்.

பெங்களூருல பார்க்கிறதா இருந்தா டாக்டர். விகாஷ் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி தரச் சொன்னார். இல்லை சென்னைல டிரீட்மென்ட் பண்றதா இருந்தா, உங்களுக்கு வசதியான டேட் சொல்லுங்க, அத ஒட்டி இருக்க அப்பாயின்மென்ட் வாங்கி தரேன்” என மருத்துவரின் பிஏ விடையத்தைக் கூறினார்.

“இங்கயே வேற டாக்டர பார்ப்போமா?” என நகுலன், மகனின் முகம் பார்க்க, அதுவரை சிரத்தை காட்டாது படுத்திருந்தவன், அந்த நிமிடம் டாக்டர். அருண் தான் தனக்கான சிகிச்சையைப் பார்க்க வேண்டும் எனத் தீர்மானித்தான்.

அருணை பற்றி இணையதளமும் நல்லவிதமாகவே கூற, காலம் தாழ்த்தாது, மருத்துவரைக் காண முன் அனுமதி வாங்கி மூவருமாக சென்னைக்குச் சென்றனர். அங்கும் சில பல சோதனைகள் பரிந்துரைக்கப் பட, மருத்துவர் கூறிய அனைத்துச் சோதனைகளையும் எடுத்து முடித்து மருத்துவரைக் காண வந்தனர்.

அன்று இரவு, “போதுமா… பயப்பட ஒண்ணும் இல்ல, ரெண்டு பேரும் கிளம்புங்க. நிவியும் வருணும் தனியா எவ்வளவு நாள் தாக்குபிடிப்பாங்க? அதுதான் இப்போதைக்கு ஆப்பரேஷன் இல்லியே.   கல்யாணத்துக்கு லீவு போடணும். சோ… இப்போ கிளம்புங்க” எனத் தீர்மானமாகக் கூறினான் ரகு.

பெற்றவருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. இப்போதைக்கு மருந்து மாத்திரையில் கட்டியைச் சுருங்கச் செய்ய முயற்சிகலாம் என்றுவிட்டிருக்க, ரகு அவன் தினசரி வேலையில் தன்னை பொருத்திக் கொண்டான்.

நகுலனும் அக்ஷராவும் பெங்களூரு வந்து வாரங்கள் ஓடிவிட்டன. தினமும் அழைத்துப் பேசும் பிள்ளைகள், “அம்மா எப்போ வர்றீங்க?” எனக் கேட்ட வண்ணம் இருந்தனர்.

அடுத்து என்ன என்று இவர்கள் யோசிக்க, “போன மாசம் தான் நிச்சயத்துக்கு வந்து போனீங்க. இப்போ மூணு வாரமா லீவ்ல இருக்கீங்க. அப்படி நீங்க என் கூடவே இருக்க அளவுக்கு ஒண்ணும் இல்ல. நான் ஆஃபீஸ் கிளம்பறேன். முடிக்க வேண்டிய வேலைய முடிச்சு கொடுக்கணும்.

மூணு மாசம் போகட்டும், சர்ஜரி தான் ஒரே வழின்னு சொன்னா… உங்களுக்கு சொல்றேன். உங்களுக்கு ஒரு மாசம் லீவ் கிடைக்கிற டைம்க்கா ஆப்பரேஷன் டேட் வாங்குவோம். இல்லியா… கல்யாண வேல இருக்கும், அதுக்கும் ஒரு மாசம் லீவ் வேணும் தான? இப்போ கிளம்புங்க. பயப்பட ஒண்ணும் இல்ல.

துணைக்குப் பாட்டியக் கூப்பிட்டு வச்சுக்கிறேன். ரொம்ப முடியலனா, திருச்சிக்கு கிளம்பிடுறேன். என்னை பார்த்துக்க ஐயா அம்மா, இருக்காங்க. அங்க பிள்ளைங்க தனியா இருக்காங்க.” என நகுலனையும் அக்ஷராவையும் கிளப்பினான்.

‘என்னவோ? ஏதோ?’ என்று எண்ணியிருந்த போது இருந்த பயம் இப்பொழுது ரகுவிடம் இல்லை என்பதால், நிதானத்தை அவன் கைவிடவில்லை. மனக்கணக்கு நிறையப் போட்டான். அதன்படி பொறுமையாக நாள்களைக் கடத்தினான். அவன் திடம் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் திடத்தைத் தந்திருக்க வேண்டும், ஒருவரும் அவன் முன் கண்ணீர் வடித்து நிற்கவில்லை.

நாள்கள், வாரங்களாக மாறி அதிவேகமாக ஓடிக் கொண்டிருந்தன. “கல்யாண நிச்சயத்துக்கும் இப்படித் தான் பண்ணின. இப்போ கல்யாண வேல அவ்வளவு இருக்க, இந்தப் பக்கமே வர மாட்டேன்னு இருந்தா எப்படி கண்ணு? பத்திரிக்கை அடிக்க வேண்டாமா? துணி மணி வாங்கணும். உன் ஐயாவும் தாத்தாவுமே எவ்வளவு தான் பார்ப்பாங்க? வீட்டுக்கு வா கண்ணு. அங்கயே உக்காந்திருந்தா ஆச்சா?

நிச்சயத்துக்கு அப்பறம், வேலை வேலைன்னு ஃபோனும் போடுறது இல்ல. தாரா கண்ணுட்டையும் பேசறது இல்லியாமே. என்ன நினைச்சுட்டு இருக்க? கல்யாணம் பண்ணனும்ன்னு நினைப்பு இருந்தா… வா வீட்டுக்கு” எனப் பாட்டி பாடித் தீர்த்தார்.

“சும்மா சும்மா லீவ் எடுக்க முடியாது பாட்டி. லீவ் கிடைக்கும் போது வரேன்” என்றான் ரகு.

மருத்துவர் கொடுத்த மருந்தைக் கர்மசிரத்தையாக எடுத்துக் கொண்டான் ரகு. அடுத்த மாதத்தில் அடுத்தகட்ட டிரீட்மென்ட் ஆரம்பிக்கலாம் என அருண் கூறியிருக்க, அவரை கண்டுவிட்டு அலுவலகத்தில் ஆறு மாதத்திற்கு மருத்துவ விடுப்பை விண்ணப்பிக்க முடிவெடுத்தான் ரகு.

இடையே ஒரு முறை அரவிந்தன் வந்தார். இரு தினங்கள் அவனோடு இருந்தார். அவர் பார்வைக்கு ரகு சற்று தேறியிருப்பதாகத் தோன்றியது. அவன் எடுத்துக் கொள்ளும் மருந்து கட்டியின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதாகத் தோன்றியது இருவருக்கும்.

இரவு படுக்கும் முன் அவன் விழுங்கும் மாத்திரையைப் பார்த்து அமர்ந்திருந்தவர், “அடுத்து எப்போ டாக்டர பாக்கணும்?” எனப் பேச்சை ஆரம்பித்தார்.

“ரெண்டு வாரத்துல.” என்றவனோடு சற்று நேரம் பேசினார். வீட்டில் இதைப் பற்றி எப்படி, எப்பொழுது பேசுவது என இருவருக்கும் தெரியவில்லை.

மாட்டிக் கொண்டிருக்கும் குகையில் வெளிச்சம் தென்பட்டால், “ஒண்ணும் இல்ல… சின்ன கட்டி, மருந்திலேயே கரையிது” என்றுவிடலாம். இல்லை இருட்டின் காலம் நீளும் என்றால், “பிரெயின் டியூமர். சர்ஜரி தான் ஒரே வழி” எனப் போட்டுடைக்கலாம். இப்பொழுது இரண்டும் கெட்டான் நிலையில் எப்படி… என்னவென்று கூறுவது? இருவரும் அதைப் பற்றின பேச்சைத் தவிர்த்தனர்.

அடுத்த பரிசோதனையின் நாள் நெருங்கவும், விடுப்பை எடுத்துக் கொண்டு திருச்சிக்குச் சென்றான் ரகு. இம்முறை தானே காரை ஓட்டி செல்லாது, ஓட்டுநர் ஒருவரை இருத்திக் கொண்டான். மதியத்திற்கு மேல் கிளம்பியதால் இரவு எட்டானது வீட்டை வந்தடைய.

“என்ன இந்நேரம்?” எனப் பார்த்தாலும், பேரன் வந்துவிட்டான் என்பதே அந்த வயதான பெண்மணிக்குப் போதுமானதாக இருந்தது. எப்பொழுதும் போல் பாட்டி, “வா கண்ணு. இளைச்சு போயிட்டியே…” என அவனை ஆசையோடு கன்னம் வழித்து, கை பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

ரகுவின் உடல் நிலையைப் பற்றி எதுவும் தெரியாத தாத்தாவும் பேரனோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். இருவரின் சிரித்த முகங்களைப் பார்த்த ரகுவிற்குள் அவ்வளவு நிம்மதி.

“சாப்பிடு வா” எனப் பாட்டி அழைக்க, “நீங்க சாப்டாச்சில்ல? நான் அங்க சாப்பிட்டுகிறேன்” என உண்ண மறுத்து, “ஐயாவ பார்த்துட்டு வரேன்” எனக் கிளம்பியவன் கால்கள் பின்னின. உண்மையை யசோதராவிடம் மறைக்கும் எண்ணமில்லை. ஆனால்… எப்படி உரைப்பான்? எப்படி அதை எடுத்துக் கொள்வாள்?

கிரில் கதவு பூட்டப்படாது இருக்க, அதைத் திறந்து கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

“ம்மா” என அவன் அழைத்து முடிக்கும் முன் அடுக்களையிலிருந்து சந்திரிகா எட்டிப் பார்த்தார்.

அவருக்கு விஷயம் தெரிந்திருக்க வேண்டும் என்றது அவர் பார்த்த பார்வை. ஆனால் தனக்கு விஷயம் தெரியாது எனக் காட்ட நினைத்தார் போலும், வரவழைத்த புன்னகையோடு மகன் அருகில் சென்றார்.

என்ன முயன்றும் அழுது… களைத்து, வதங்கிய அந்த முகம் அவரின் வலியை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது. சிரிக்க முயன்று தோன்ற உதடுகள் துடிக்க, கண்கள் மீண்டும் குளம் கட்ட ஆரம்பித்தன.

“ம்மா” என அவர் அருகே சென்றவன் கன்னம் வருடியவரின் கை ஏகத்திற்கும் நடுங்க, “ரகு” என்றவரின் உதடும் கன்னமும் நடுங்கித் துடித்தன.

“பெருசா ஒண்ணும் இல்ல மா.” என்றவனை அணைத்தவர் விம்மி வெடித்தார். “ஏன் டா… ஏன் டா உனக்கு?” என்றவரால் தாளவே முடியவில்லை. இரண்டு நாள்கள் முன்பு அரவிந்தன் கூறியிருக்க, அப்பொழுது ஆரம்பித்த கண்ணீர், வற்ற மறுத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது.

“மா… என்னது இது? முகம் வீங்கி போர அளவுக்கு இப்படி அழுவீங்களா? கிளி மூக்கு மாதிரி இருக்கு உங்க மூக்கு. இப்படி அழுது உடம்புக்கு ஏதாவது வந்து நீங்க படுத்துட்டீங்கன்னா, என்னை யார் பார்த்துப்பா? நீங்க தானே என்னோட பலம்? நீங்க அழலாமா? சின்ன கட்டி மா. பயப்பட ஒண்ணுமே இல்லன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. இப்போ எடுக்கிற மருந்தும் நல்லா கேக்குது மா.”

“சரி செய்திடலாம் தான? ஒழுங்கா மருந்து எடுத்துக்கிறியா?”

“ரொம்ப சின்ன சைஸ் டியூமர் மா. இயர்லி ஸ்டேஜ்ல இருக்காம். அது இருக்க இடம் தான் சரி இல்லியாம். சர்ஜரிக்கு பதில் ‘டார்கெட் தெரப்பி’ செய்யலாம்ன்னு சொன்னார். ஸ்டிராய்ட் மெடிக்கேஷன்… ரேடியேஷன் மூலமா கட்டியோட வளர்ச்சிய குறைச்சு, அத சுருங்க செஞ்சிட்டா ஆப்பரேஷன தவிர்க்கலாம்ன்னு சொன்னார்.”

“ஓ… ஆப்பரேஷன் இல்லாமலே சரி செஞ்சிடலாமா?” சந்திரிகாவிடம் நிம்மதியான மூச்சுக் காற்று வெளி வந்தது.

“ஒரு மாசம் பார்க்கலாம்ன்னு டாக்டர் சொல்லி இருக்கார். நூத்துல ஒரு பங்கா ‘டார்கெட்டட் தெரப்பி’ல குணமாகாட்டா, சின்ன சர்ஜரி… அடுத்த ரெண்டு மாசத்துல நார்மல் லைஃபுக்கு திரும்பிடலாம். கல்யாணம் முடிச்சு, ஒரு ஆறு மாசம் ரெஸ்ட். அப்பறம் தான் நாங்க பெங்களூருக்குப் போவோம்.” என மகன் பேசப் பேச, ‘எல்லாம் சரியாகிவிடும்’ எனச் சந்திரிகா நம்பினார். அவனும் அப்படித் தான் நினைத்தான்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!