Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

54 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 54

.

‘ட்விங்கிள் ட்விங்கள் லிட்டில் ஸ்டார்’ என பாடிக் கொண்டிருந்த காரின் ஸ்பீக்கர், பாடலை கிடப்பில் போட்டு, அதன் சத்தத்தை மாற்றவும், “அப்பா ஃபோன் வலுது. எலுத்து பேசுங்க அப்பா” என்றாள், காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த யாழினியாள்.

புன்னகை தவழ, “தேங்க்ஸ் பேபி” என்றவன் பார்வை காரின் ஸ்மார்ட் திரைக்கு தாவ, ‘டாக்டர் அருண்’ அழைப்பதாக கூறியது திரை.   



Advertisement

அறுவை சிகிச்சையிலிருந்து உடல் முற்றிலும் குணமாகிய பின் அருணிடமிருந்து அழைப்பு வருவதெல்லாம் அரிது என்பதால், கௌதமன் யோசனையோடு அழைப்பை ஏற்றான்.

“கௌதமா, இன்னும் சென்னைல தான் இருக்கியா?” என்றார் எடுத்த எடுப்பில். ‘ஏன் என்னவாம்?’ நினைத்த மாத்திரத்தில் சட்டென படபடப்பு ஆட்கொண்டது கௌதமனை.

“சென்னைல இருந்து கிளம்பி ஒரு மணி நேரம் ஆச்சு மாமா. என்ன விஷயம் மாமா?” எனக் கேட்டவன் தொனியில் பரபரப்பு அப்பிக் கிடந்தது.

Advertisement

“ஓஹ்” என்ற அருணின் குரலில் ஒட்டியிருந்த ஏமாற்றத்தை உடனே துடைக்கும் எண்ணத்தோடு, “ஒண்ணும் இல்ல கௌதமா. சும்மா தான்… இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகல, உன்ன பார்க்கலாம்ன்னு நினைச்சேன். நீ டென்ஷனாற அளவுக்கு ஒண்ணும் இல்ல. அடுத்த தரம் ஊருக்கு வரும் போது, வீட்டுக்கு வா கௌதமா. உன் ஆண்டிக்கு உன் பொண்ண பாக்கணும் போல இருக்காம். வரும் போது யாழியோட வா,” என்றவர் அவன் உடல் நிலைப் பற்றியும் வீட்டாட்கள் பற்றியும் மேலோட்டமாக இரண்டு நிமிடம் பேசி, கைப்பேசியை அமர்த்தி வைத்தார்.

Advertisement

மருத்துவருக்கு இருக்கும் வேலைகளுக்கு இடையே ‘சும்மா’ அழைப்பிற்கு நேரம் ஏது? அப்படியெல்லாம் அருண் மாமா சும்மா அழைப்பவர் இல்லையே. மகளைப் பெற்றவளைப் பற்றி இருக்குமோ?

“கவனமா போயிட்டு வா” என்றவர் கவனம் அன்றைய நாளிதழில் பதிந்தது. ஆனால் அதற்கு மேல் கௌதமனால் சாலையில் கவனம் செலுத்த முடியவில்லை. விளைவு?

அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவர் அருணின் வீட்டில் இருந்தான் கௌதமன். வீட்டின் வாசல் வரை வந்துவிட்டவனுக்கு காரை விட்டு இறங்கும் தைரியம் இல்லை.

Advertisement

“அப்பா திலுச்சி வந்திச்சா? அம்மாவ பாக்க போலோமா அப்பா?” எனக் குதூகலித்த மகளைப் பார்த்தவன் நீண்ட பெருமூச்சோடு காரை விட்டு மகளோடு இறங்கினான். அம்மாவிற்காக ஏங்கும் குழந்தையை அவள் தாயிடமிருந்து பிரித்து வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? மனம் குடைந்தது. ஆனால்… அவன் யாழி பேபி இல்லாத வாழ்வு அவனுக்கு நரகம் அல்லவா? சரிக்கும் தவறுக்கும் இடையே மாட்டிக் கொண்ட கௌதமனின் மனம் கனத்து வலித்தது.

“போலாம் பேபி. அதுக்கு முன்ன டாக்டர் தாத்தாவ பார்த்துட்டு போவோம் சரியா?” என மகளோடு பேசிக் கொண்டே அருணின் வீட்டினுள் நுழைந்தான் கௌதமன்.

“என்ன டா… திருச்சிக்குப் போகல?” எனக் கேட்டவருக்கு உண்மையிலுமே ஆச்சரியம் தான். மகள் என்று வந்துவிட்டால், கௌதமன் காட்டும் முகமே வேறு என்பதைப் பார்த்தவர்தான் என்றாலும், அவரால் வியக்காதிருக்க முடியவில்லை. இப்படி மகளுக்காகப் பார்த்துப் பார்த்துத் தானே தன் காதலையும், திருமண வாழ்வையும் இழந்து நிற்கிறான். அருணின் நினைவலைகளில் ஏதேதோ வந்து போனது.

“போகணும் மாமா. நீங்க சொல்லுங்க மாமா… என்ன விஷயம்?” என்றவனின் இதயத் துடிப்பு அவன் காது வரை கேட்டது.

“யாழி பாப்பா… பாட்டிட்ட வாங்க. கோகனட் ஜூஸ் குடிக்கலாமா?” என அருணின் மனைவி குழந்தையைத் தூக்கி சென்றுவிட, “எதுனாலும் சட்டுன்னு போட்டு உடைச்சிடுங்க மாமா. எனக்கு சஸ்பென்ஸ் தாங்கல” என அவர் அருகில் அமர்ந்தான் கௌதமன்.

“அந்த பொண்ணு… யசோதரா பத்தி ஆள் வச்சு விசாரிச்சேன் கௌதமா” என ஆரம்பித்தவர் என்ன குண்டைப் போட போகிறாரோ எனத் தடதடக்கும் இதயத்தோடு பார்த்து அமர்ந்திருந்தான் கௌதமன்.

“ரெக்கார்ட் படி, குழந்தை பிறந்த போது யசோதராவோட வயசு 21. புத்தி சுவாதீனம் இல்லாத சின்ன பொண்ணு. புருஷன் இல்ல… விடோ. விசாரிச்சதுல, அவன் இறந்தத தாங்க முடியாம தான் அந்த யசோதராவுக்கு மனநில பிழறிட்டதா அவளுக்கு டிரீட்மென்ட் பார்த்த டாக்டர் சரிதா சொன்னாங்க.

அவங்க ஹாஸ்பிட்டல்ல கொடுத்திருந்த சென்னை அட்ரஸ்ல இப்போ யாரும் இல்ல. அந்த பொண்ணும், வயசான அவ அப்பாவும் மட்டும் தான் கொஞ்ச காலம் அந்த வீட்டுல வாடகைக்கு இருந்திருக்காங்க. பிரசவத்துக்கு போன பொண்ணு அந்த வீட்டுக்கு திரும்பி வரவே இல்லன்னு ஹௌஸ் ஓனர் சொல்லியிருக்காங்க.

அந்த பெரியவர் மட்டும் வந்து காலி பண்ணினாராம். அம்மா, குழந்தைய பத்தி விசாரிச்ச ஹௌஸ் ஓனர்கிட்ட, பெண் குழந்தை இறந்து பிறந்ததா சொல்லியிருக்கார். யசோதரா அத எப்படி தாங்கினான்னு கேட்டதுக்கு, குழந்த பிறந்ததையோ இறந்ததையோ உணர்ற நிலையில மக இல்லன்னு சொன்னாராம். குழந்தை பிறந்த பிறகும் அவ மனநிலையில எந்த மாற்றமும் இல்ல.

அவர் சொந்தக்காரங்க வீட்டுப் பக்கமா குடி போறதா சொல்லிட்டு வீட்ட காலி பண்ணிட்டு போயிருக்கார். எங்க போனாங்கன்னு அவங்களுக்குத் தெரியல. அவங்க கொடுத்த ஃபோன் நம்பர் இப்போ உபயோகத்துல இல்ல.

இது எல்லாம் பழைய நியூஸ். புது அப்டேட் கேக்கறியா?”

‘இன்னும் என்ன?’ என்பது போல் பார்த்து அமர்ந்திருந்தவனின் இதயம் தொண்டை வரை வந்திருந்தது. “அப்பா…” எனக் கௌதமனிடம் ஓடி வந்தாள் யாழி.

கண் காணும் தூரம் வரை கொத்து கொத்தாக தொங்கும் மஞ்சள் சரக்கொன்றை மலர்களை ஏந்தியிருக்கும் மரங்களை கண்டால் எப்படி இருக்கும்? ஒவ்வொரு முறையும் கௌதமனின் மனம் தவிக்கும் போதும் பனிக்கூழாய் அவனுள் இறங்கி அவன் தவிப்பை அடக்க, அவன் மகளால் மட்டும் தானே முடிகிறது. தவிப்போடு அமர்ந்திருந்தவன் மனம் இளகியது.

“பாட்டி நெயில் பாலிஷ் போட்டு வித்தாலுங்க” எனக் காலை தூக்கி அப்பாவிற்கு காட்டினாள் குழந்தை.

குட்டி குட்டி கால் விரல் நகங்களில் மினுங்கும் சிகப்பு சாயம் மின்னியது. மகள் கேட்க விரும்பிய, “உங்க கால்ல போட்டதும் நெயில் பாலிஷ் சூப்பரா இருக்கே” என்ற பனிக்கட்டி வார்த்தைகளை மகள் தலை மீது சரித்தான். குழந்தை, வெட்க சிரிப்போடு, “டேங்ஷ் அப்பா” என நெளிந்தாள்.

“குட்டி அழகி… தாத்தாக்கு காட்டுங்க பாப்போம்” எனக் குழந்தையை மடியில் தூக்கி வைத்துக் கொண்டார் அருண்.

“டென் டோஸ்ல பாட்டி லெட் கலல் போட்டு வித்தாங்க தாத்தா” எனக் கால்களை ஆட்டி காட்டினாள் யாழி.

“இந்தா கௌதமா, இளநி குடி. யாழி குடிச்சுட்டா” எனக் கௌதமனிடம் இளநீரை நீட்டிய கீர்த்தனா, அவனோடு வீட்டு விஷயங்களைப் பேசி, அவன் நீட்டிய காலி கண்ணாடி குவளையோடு அடுக்களைக்குள் நகர்ந்தார்.

இரண்டு நிமிடம் மடியில் இருந்த குழந்தை துள்ளிக் கொண்டு “பாட்டி.. நானுக்கு கைக்கு வச்சு விலுங்க. சாப்பில மாட்டேன்… பீஷ்ஷ்ஷ் பாட்டி” என அடுக்களைக்குள் துள்ளிக் கொண்டே ஓடினாள்.

“இவ உன் கூட… உன் மகளா வளர்ந்துட்டு இருக்கனால தான் இவ்வளவு சந்தோஷமான, ஆரோக்கியமான குழந்தையா வளர்ந்துட்டு இருக்கா கௌதமா. நீயும் சிங்கிள் பேரண்ட் தான். ஆனாலும் உனக்காக, தன் பேத்தியா இவள பார்த்துக்க வைஷுவும் தேவாவும் இருக்காங்க. ஆரோக்கியமான நீ, ஆரோக்கியமான சூழல யாழிக்கு கொடுத்திட்டு இருக்க. என்னால நிச்சயமா சொல்ல முடியும், அந்த புத்தி சுவாதீனம் இல்லாத பொண்ணாலயும், அவ அப்பாவாலயும் உன்னளவுக்கு இந்தக் குழந்தையை வளர்த்திருக்க முடியாது.

உனக்காக… உன் நிம்மதிக்காக மட்டுமே இந்த ரிஸ்க்க எடுத்து விசாரிச்சு இருக்கேன் கௌதமா. இனி குழந்தையோட பிறப்பு, அவ அம்மா, அப்பான்னு கண்டதையும் நினைச்சு உன் நிம்மதிய கெடுத்துக்காத. புரியுதா?”

“ஏதோ அப்டேட்ன்னு சொன்னீங்க?”

“போன வாரம் ஏதேச்சையா அந்த பெரியவர பழைய ஹவுஸ் ஓனரம்மா மார்க்கெட்ல பார்த்திருக்காங்க. அவர் பொண்ணு குணமாகிட்டதாகவும், அவளுக்கு நாலு மாசத்துல கல்யாணம்னும் சொல்லி இருக்கார்.”

விசாரித்த அனைத்தையும் கூறியவர் கௌதமன் முகத்தைப் பார்க்க, என்னச் சொல்வதென்று கௌதமனுக்குத் தெரியவில்லை. அருண் முகத்தைப் பார்த்தான். மகளைக் கேட்டு ஒருவரும் வரமாட்டார்கள் என ஒரு பக்கம் அத்தனை நிம்மதியாக இருந்தாலும், ‘மகளுக்கு, அவளைப் பெற்றவளை தெரியாதே போய்விடுமே’ எனச் சின்னதாக ஒரு வருத்தம் ஏதோ ஒரு மூலையில் இருக்கத்தான் செய்தது.

“நேரமும் காலமும் யாருக்காகவும் காத்திருக்காது. மூவ் ஆன் கௌதமா. நீயும் காலா காலத்துல ஒரு கல்யாணம் பண்ணி, மனைவி பிள்ளைங்கன்னு குடும்பமா வாழு. நல்லத மட்டுமே நினைக்கிற உன் மனசு போல நல்ல வாழ்க்கை உனக்கு அமையும். இதுக்கு மேல இத பத்தி யோசிக்காத சரியா?” என்றவரிடம் என்ன கூறிவிட போகிறான்? “ரொம்ப தேங்க்ஸ் மாமா” என அவர் கரம் பற்றி நன்றி உரைத்தான்.

யாழியை நினைத்து ஒருவரும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கவில்லை என்ற தகவல் அவனுக்கு ஆறுதலே. அதற்கு மேல் வண்டி ஓட்டும் மனநிலையில் இல்லாதவன், செந்திலோடு திருச்சிக்குக் கிளம்பினான்.

இவன் அமைதியாக காரில் உறங்கிவிட, இவர்களின் வரவிற்காகக் காத்திருந்த ஒருத்தியால் ஓர் இடத்தில் அமர முடியவில்லை. பத்து நாள்கள்! மிக மிக நீளமான பத்து நாள்களை விரட்டியவளால் இந்த அரை நாளை நகர்த்த முடியவில்லை. பசை போட்டு ஒட்டியது போல் சூரியன் நடுவானை விட்டு இம்மியளவும் அசையாது யசோவைச் சோதித்துக் கொண்டிருந்தான்.  

வாசலுக்கு வருவதும் வெளியே எட்டிப் பார்ப்பதையுமே முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கும் யசோதராவிற்கு இருப்புக் கொள்ளவில்லை.

சமைத்து அடுக்கி வைத்திருந்த பதார்த்தங்களை மேசையில் அடுக்குவதும், தட்டு, டம்பளர் என எடுத்து வைப்பதும், எல்லாம் சரியாக இருக்கிறதா என மீண்டும் மீண்டும் பார்ப்பதுமாக நேரம் கடத்தினாள்.

துடைத்த அடுக்களை மேடையை மீண்டும் துடைத்துக் கொண்டிருந்தவள் காதுகளில் அழைப்பு மணியின் சத்தம் வந்தடையவும், வேகமாக அடித்துக் கொள்ளும் இதயத்தோடே ஓடிச் சென்று கதவைத் திறந்தவள் முகம் சட்டென வாடிப் போனது. ‘இவனோட…’ என சலிப்பு ஏற்பட்டாலும், அதை முகத்தில் காட்டவில்லை.

“ப்லீஸ் யசோதரா…” என்றான் ஆனந்தன், லவண்யாவின் கணவன். நான்கு நாள்களாக மழிக்கப்படாத தாடியும், படியாத கேசமுமாக வந்திருந்தவனைப் பார்க்கப் பாவமாகதான் இருந்தது யசோதராவிற்கு. ஆனால் லாவண்யாவை ஏறெடுத்துக்கூட பார்க்கப் பிடிக்கவில்லை எனக் கூறி அவளை காயப்படுத்தியவன் மீது எப்படி பாவம் பார்ப்பதாம்?

“தினமும் நீங்க என் வீட்டுக்கு வந்து போறதுல எந்த யூசும் இல்ல சார். அவ உங்கள பாக்க விரும்பலன்னு சொல்லிட்டா. என்கிட்டயும் அவ புது நம்பர் மட்டும்தான் இருக்கு. எங்க தங்கியிருக்கான்னு முழு விபரமும் தெரியாது சார். அவ இருக்க இடத்த பத்தி சொன்னாலோ, இல்ல அவ என்னைப் பார்க்க வந்தா உங்கள காண்டாக்ட் பண்றேன். இப்போ என்னால ஒண்ணும் பண்ண முடியாது சார்” என ஆனந்தனை கிளப்பும் முயற்சியில் இறங்கினாள் யசோ.

இந்த வாரத்தில் இது நான்காவது முறை இப்படி ஆனந்தன் அவர்கள் வீட்டின் வாசலில் வந்து நிற்பது. வேறு ஒருத்தியோடு தொடர்பில் இருந்ததை கூச்சமே இல்லாது “ஆமா… அவ கூட இருக்க எனக்கு பிடிச்சிருக்கு.” எனக் கட்டிய மனைவியிடம் உரைத்தவன், “போடி. நீ இல்லன்னா… என்னால வாழ முடியாதா என்ன?” எனக் கேட்டவன், இன்று மனைவியைத் தேடி நடையாய் நடந்து கொண்டிருக்கிறான்.

இவனிடம் நன்றாக இரண்டு கேள்விகளைக் கேட்க நா துடித்தாலும், அதை அடக்கியவள், ‘கிளம்பேன்’ எனப் பார்த்து நின்றிருந்தாள்.

“அம்மா இல்லாம குழந்தை ரொம்ப கஷ்டப்படுறான் மா” என்றவனை என்ன செய்தால் தகும் எனப் பார்த்தவள், “அப்போ அஷ்வினுக்காகத் தான் லாவண்ன தேடுறீங்களா?” எனக் கேட்டாள்.

“இல்ல… இல்ல மா. என் மகனுக்கு எவ்வளவு அவன் அம்மா முக்கியமோ, அது மாதிரி நான் வாழவும் எனக்கு என் லாவண்யா வேணும். வந்துடுவான்னு அசால்ட்டா இருந்துட்டேன். ஆனா என்னை மன்னிக்கவும், என் கிட்ட திரும்பி வர அளவுக்கு நான் அவளுக்கு இருக்கலன்னு புரிஞ்சுகிட்டேன். இதுக்கும் மேல அவளா திரும்பி வருவான்னு தோணல.

இந்த பிரிவுல, எனக்கு அவ இல்லாம வாழ்க்கையே இல்லன்னு புரிஞ்சுகிட்டேன். ஊர் பூரா தேடிட்டேன். இதோ… இந்த திருச்சியையும் சல்லடை போட்டுத் தேடிட்டேன். இங்கயும் அவ இல்ல. எங்க இருக்கான்னு உனக்குத் தெரியும்ன்னு அவ அம்மா சொல்றாங்க. ப்ளீஸ் சொல்லு மா. அட்லீஸ்ட் ஒரு தரம் என் கூட பேச சொல்லு… அப்பறம் அவ முடிவு தான்” எனக் கெஞ்கியவன் கண்களில் நீர் கோர்த்திருக்க, யசோவால் என்ன செய்திட முடியும்?

பிரிவும் அது கொடுக்கும் தனிமையையும் திகட்டத் திகட்ட பருகியிருக்கும் யசோவால் அவனுக்காக பரிதாபப்படுவதை விட வேறு என்ன செய்திட முடியும்?

‘எவளையோ வச்சிருக்கான். வாரத்துல பாதி நாள் அவளோட ஜோடியா சுத்தரான். அவ கூட படுத்துட்டு வீட்டுக்கு வரான். கேட்டா, நான் அப்படித்தான்னு சொல்றான் யசோ. அவனோட அட்ஜஸ்ட் பண்ணி வாழுன்னு என் அம்மா வாய் கூசாம சொல்றாங்க. நீ சொல்லு யசோ… ஏதோ ஒரு ஜென்மத்துல கூட படிச்ச பையன ஒரு நிமிஷம் கட்டி பிடிச்சது தெரிஞ்சதும், என்னை ஒதுக்கி வச்சவன் இப்படி ஒரு காரியம் செய்துட்டு வந்தா, நான் சகிச்சுட்டு அந்த வீட்டுல வேலைக்காரியா வலம் வரணுமா?’ என்ற லவண்யாவின் வார்த்தைகள் காதுகளுக்குள் ரீங்காரமிட யசோ எப்படி லாவண்யாவின் இருப்பிடம் பற்றி கூறுவாள்?

“உங்க ஃபோன் நம்பர் சொல்லுங்க… நான் லாவண் கிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் போடறேன்” என அவனுக்கு விடை கொடுக்கவும், மதில் சுவர் இரும்பு கேட் திறக்கப்படவும் சரியாக இருந்தது. பலரின் விரிந்த பார்வையையும், ஆடம்பரத்தையும் விழுங்கிய வெள்ளை நிற சொகுசு லெக்சஸ் வீட்டு வளாகத்தினுள் நுழைந்தது.

யசோவின் இதயம் தாறுமாறாகத் துடிக்க, கண்கள் ஆர்வப் பார்வையோடு காத்திருந்தன, அதிலிருந்து இறங்கப் போகும் இரு ஜீவன்களுக்காக.

வாகன ஓட்டுநர் கார் கதவைத் திறக்க இறங்கினான் கௌதமன். நகர மறந்தவளாக அப்பா மகளைப் பார்த்து நின்றிருந்தாள் யசோ. தூங்கியிருந்த மகளை தோளில் போட்டுக் கொண்டவன் பார்வை யசோவின் பக்கம் வந்தது. ஓட்டுநரிடம் எதையோ பேசியவன் மகளோடு யசோதராவை நோக்கி நடந்தான்.

யசோதராவின் கவனம் தன் பக்கம் இல்லை என்றதும் அமைதியாகக் கிளம்பினான் ஆனந்தன். வழியில் ஆண்கள் இருவரின் பார்வையும் சந்திக்க, முயன்று புன்னகைத்த ஆனந்தனைப் பார்த்துப் புன்னைகைத்த கௌதமனுக்கு ஆனந்தனின் ஓய்ந்த தோற்றம் உள்ளுக்குள் கேள்வியை கிளப்பினாலும், யசோவைப் பார்க்கும் ஆவலில் இருந்தவன் கவனத்தில் ஆனந்தன் பதியவில்லை.

அந்த சுட்டெரிக்கும் வெயிலுக்குப் பூஞ்சாலராய், இதமாக இருந்தது தவிப்பும் புன்னகையுமாக நின்றிருந்தவளின் பார்வை. ஆனந்தப் பூஞ்சாரலில் நினைந்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது இளையவனுக்கு.

மலர்ந்த முகத்தோடு அவனையே விழி அகற்றாது பார்த்து நின்றவளை நெருங்கியவன், மெல்ல அவள் நெற்றியில் ஊதினான்.

கனவு கலைந்தவளாய், “வாங்க… எப்படி இருக்கீங்க? யாழி தூங்கிட்டாளா?” என கேட்டுக் கொண்டே மகளை தன் தோளுக்கு மாற்றியவளை வாஞ்சையோடு பார்த்தான் கௌதமன்.

       தயக்கமே இல்லாது தன் தோளில் இருக்கும் குழந்தையை தன் தோளுக்கு மாற்றி, “ரொம்ப லேட் ஆகிடுச்சு. முகம் கழுவீட்டு வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என அவனோடு வீட்டினுள் நுழைந்தாள். மூவருமாக ஒன்றாக நுழைந்த அந்த வீடு, என்றுமில்லாது இன்று வசந்த கால காற்றை கௌதமனுள் வீசச் செய்தது. என்றோ… ஏதோ ஒரு ஜென்மத்தில் இவளோடு இதே வீட்டினுள் கைபிடித்து வலம் வந்தது போன்ற ஓர் உணர்வு. இவளோடு அப்படி என்ன பந்தம் தனக்கு?

தோளில் உறங்கும் குழந்தையோடு, “முகம் கழுவீட்டு வாங்க” என அவனுக்காக எடுத்து வைத்திருந்த பருத்தி துண்டை நீட்டியவளை பார்த்தவனுக்கு, வெளியே சென்று வீட்டுக்கு வந்த கணவனை உபசரிக்கும் மனைவியைப் பார்ப்பது போல் இருந்தது. மின்னல் கீற்றாய் உள்ளுக்குள் விழுந்த ஏகாந்தம், கிளைபரப்பி மனதோடு உடலையும் உல்லாச நிலைக்குத் தள்ளியது.

அவன் கிணற்றடிக்கு நகர, மகளைத் தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்தாள் யசோ.

மெத்தையில் கிடத்தப்பட்ட அடுத்த நொடி தன் கண்களைத் திறந்த குழந்தை, அன்னையைப் பார்த்ததும், “அம்மா” என எழுந்தமர்ந்தாள், தூக்கம் கலையாத விழிகளோடு. மகளை தன்னோடு அணைத்து, கண்கள் மூடி மகளை வாசம் பிடித்தாள் யசோ. மகளைக் காண… உணரக் காத்திருந்த ஒவ்வொரு அணுவையும் மகளின் வாசத்தால் நிறைத்தாள் யசோ.

அன்னையோடு மகள் ஒட்டிக் கொள்ள, “தூக்கம் வருதுன்னா படு யாழி. அம்மா உன் கூடவே இருப்பேன்” என மகளைப் படுக்க வைத்து தட்டிக் கொடுக்க, அடுத்த நிமிடம் குழந்தை உறக்கத்தின் பிடியில் விழுந்தாள்.

 யசோவின் கழுத்தை இறுக்கியிருந்த குட்டி கைகள் இரண்டையும் மனமே இல்லாது பிரித்து விட்டவள், குழந்தையின் உச்சி முகர்ந்து எழுந்தாள்.

தன் தனிமையும், வாழ்வின் வெறுமையும் போக்கும் சக்தியை இந்த அப்பா-மகளுக்கு கொடுத்தது யார்? தானா? இவர்கள் இருவரையும் எப்படி தனக்குள் ஆழ இறக்கினேன்? எழுந்த சிந்தனைகளோடு மகளைப் பார்த்து நின்றிருந்தவளை, பின்னிருந்து வந்த “பேபி” உலுக்கியது.

படபடப்போடு சட்டென திரும்பியவள் தடுமாற, “சாரி… சாரி பயந்துட்டியா? நான் தான்… ஈஸி ஈஸி” என்றவன் யசோவின் தோளைப் பிடித்து நிறுத்தியிருந்தான்.

“பேபி எழுந்துக்கலியா?” என்றவன் பார்வை மகளை வருடி, தன் சுவாசக் காற்று மோதும் தூரத்தில் நின்றவள் மீது நிலைத்தது.

விழி உயர்த்தி கௌதமனைப் பார்த்தாள். இதே அறையில்… இதே இடத்தில் வயிற்றில் எழுந்த பட்டாம்பூச்சிகளும், சிலிர்ப்பும், ‘பேபி’ என்ற அழைப்பும் தொண்டைக்குழி வரை வந்து நின்றது. இவனிடம் அவளின் கடந்த காலத்தை எப்படி உரைப்பது? புரிந்து கொள்வானா? ரகு அவளின் கடந்த காலமா? மனம், எண்ண அலைகளில் உழல, கண்கள் கௌதமன் முகத்தைவிட்டு அகலவில்லை.

அவனும் அவளைத்தான் பார்த்து நின்றிருந்தான். இவளோடு தன் வாழ்வை பிணைக்கும் முன், தன் வாழ்வின் கடந்த பக்கங்களைத் திறக்க வேண்டும். அன்று, தாக்ஷாவிடம் கூறியபோது இருந்த தயக்கம் இல்லை. அவளிடம் கோடிட்டுக் காட்டியது போல் இல்லாது அனைத்தையும்… வரி விடாது ஒப்பிக்க மனம் விரும்பியது.

‘உங்கிட்ட அப்படி என்ன இருக்கு யசோ?’ மனம் கேட்டது. மனதின் கேள்விக்கு கண்கள் பதிலை தேடி, அவனைப் பார்த்து நின்றிருந்தவளை ஆராய்ந்தது. பின்னலுக்குள் அடங்க மறுத்து, காற்றுக்கு அசையும் கேசம், கண்களைப் பெரிதாக காட்டிய கலைந்த கண்மை, கண்களுக்கு பளிச்சேன்று தெரியும் வண்ணம் நெற்றியில் வீற்றிருந்த சிகப்பு பொட்டு என கௌதமனை தன் எளிய தோற்றத்தால் சுண்டி இழுத்திருந்தாள் யாழியின் அன்னை.

“யட்சி தெரியுமா? அதுவும் இப்படித்தான் பார்வையாலேயே மெஸ்மரிசம் பண்ணுமாம்” என்றான் மென் புன்னகையோடே.

யசோவின் விழிகள் பெரிதாக விரிய, “பசிக்குது. சாப்பிடுவோமா?” எனக் கேட்டு சாப்பாடு மேசைக்கு நடந்தவன் அகமும் முகமும் நிறைவைக் காட்டியது. இப்பொழுதே இந்த நிமிடமே தன் மனதையும் அதில் யசோதராவிற்கான காதலையும் திறந்து காட்டிட ஆசை. ஆனால்… அதற்கு முன், தன் வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் திறக்க வேண்டுமே.

“யசோ… எனக்கு உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

“எனக்கும்…” என்றவள், சாப்பிட்டு முடியுங்க. பேசுவோம்” என்றாள் எந்தத் தயக்கமும் இல்லாது.

வளையல்கள் கிலுங்கின. “கொஞ்சம் வச்சுக்கோங்க” கிங்கிணியாய் ஒலித்தது அவள் சத்தம். “போதும்” என்ற வார்த்தைகள் எடுபடவே இல்லை. வார்த்தைகள் கொட்டும் போது கைகள் இரண்டு உரசின. கையைத் தொடும் ஆசை எழுந்ததால் அவ்வப்போது சம்பிரதாய ‘போதும்’ங்கள் உணவு மேசை அருகில் கேட்டுக் கொண்டே இருந்தன. இனிப்போடு முடிந்த உணவு நேரம் இனிமையாகக் கடந்தது.

“யாழிக்கு பசிக்காதா? எழுப்பி சாப்பாடு கொடுக்கட்டா?”

நேரம் பார்த்தான். “மதியம் சாப்ட்டு தான் தூங்க ஆரம்பிச்சா. மிஞ்சிப் போனா இன்னும் அரை மணி நேரம் தூங்குவா… தூங்கட்டும்” என்றான்.

“யாழி இஸ் எ பிளெஸ்சட் சைல்ட். நீங்க அவளுக்கு அப்பாவா கிடைச்சது…” அவள் வாக்கியத்தை முடிக்கவில்லை. அவன் முடிக்கவிடவில்லை. யாழி ஆசீர்வதிக்கப்பட்டவளா? இல்லை தானா? பதில் அவனுக்கு தெரியும் என்பதால், அவளை முடிக்கவிடவில்லை.

“நான் முன்ன இந்த மாதிரி இல்ல தெரியுமா? காதல், குடும்பம், மனைவி, குழந்தை எல்லாம் என் அகராதியிலேயே இருந்ததில்ல. ஆனா இப்போ அது எல்லாம் எனக்கு மூச்சு காத்து மாதிரி. யாழி இல்லாத ஒரு வாழ்க்கை மூச்சு காத்து இல்லாத பூமி மாதிரி. அந்த உணர்வு உனக்கு சொன்னா புரியுமான்னு தெரியல.”

“புரியும்.” என்றாள், உணர்ந்தவளாய்.    

“சாவு விளிம்பு என்னை நிறைய மாத்திடுச்சுன்னு சொன்னா உனக்குப் புரியுமா யசோ?” எனக் கௌதமன் கேட்டான். இதோ… அவன் வாழ்வின் பக்கங்களை அவளிடம் திறந்து காட்ட போகிறான். அதை பார்க்க… படிக்க, சரியாக புரிந்துகொள்ள யசோவால் முடியுமா?

“மேரி ஷெல்லி எழுதின ஃபிராங்கென்ஸ்டைன்ஸ் மான்ஸ்டர் படிச்சிருக்கியா யசோ?”

“படிச்சது இல்ல… ஆனா கதை தெரியும். சிதைந்த மனுஷ பாகங்கள கொண்டு விக்டர் ஃபிராங்கென்ஸ்டைன்ங்கிற மனுஷனால உருவாக்கப்பட்ட ஒரு பாவபட்ட ஜீவன். அதிக பலம், அதிக அறிவு இருந்தாலும் பாக்க அந்த உருவம் விகாரமா… மான்ஸ்டர் மாதிரி பயங்கரமா இருக்கும். படம் கூட பாத்திருக்கேன். நல்லா இருக்கும்”

“என்னை மாதிரியே வெட்டி… ஒட்டி… ஒரு மனுஷ உருவம்.” என்றவன் சங்கடமாக சிரித்தான்.

“நானும் அப்படித்தான் யசோ… ஒரு ஜாண் கௌதமனும்…” கௌதமனுக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. கழுத்து மற்றும் பிடறியை இரு கரங்கள் கொண்டும் அழுந்தத் தேய்த்தான். கௌதமன் ஒரு ஜாண், வீர் ஏழு ஜாண் என்றால்… நான் யார்? வீரா? கௌதமனா? சிந்தனை மட்டுமே மனிதன் என்றால், நான் கௌதமன். ஆனால் நான் அது மட்டுமா? நான் கௌதமன் அல்ல… நான் வீர்! கௌதமனுக்கு மண்டை சூடு ஏறியது.

வியர்வை பூக்கும் நெற்றியும் அவன் அவஸ்தையும் யசோவை ஏதோ செய்தது.

அன்று தர்ஷனிடம், ஏதோ விபத்து ஏற்பட்டது… படுத்த படுக்கை…  அறுவைசிகிச்சை… மரணிக்க வேண்டியவன் பிழைத்தேன்… என ஏதேதோ கூறினான். அது புரிந்தது. ஆனால் இன்றைய பேச்சு? சத்தியமாகப் புரியவில்லை. வெட்டி ஒட்டி என்றால்? இவனை எதற்கு ஃபிராங்கென்ஸ்டைன்ஸ் மான்ஸ்டரோடு ஒப்பிட்டு பேசுகிறான்? அவள் பார்த்த ஆண்களிலேயே மிக மிக வசீகரமான ரகுவிற்குப் பிறகு ஒருவனை ரசிக்கிறாள் என்றால், அது இவன் தான். அப்படி இருக்க… ‘என்ன டா பேசற?’ யசோவின் மண்டையும் காய்ந்தது.

“நான்… எனக்கு… க்கும்… நாலரை வருஷம் முன்ன கடல் அலை இழுத்துட்டு போயி… எனக்கு ஸ்பைன் இன்ஜுரி ஆகிடுச்சு. கழுத்துக்கு கீழ என்னால செயல்பட முடியல” என ஒருவழியாக ஆரம்பித்தான் கௌதமன். அதற்கே மூச்சு முட்டியது கௌதமனுக்கு.

சரி… சரி அப்புறமா பொறுமையா சொல்லுவியாம் என்றது காலம். “அப்பா…” என்ற மகளின் வீறிடல் கௌதமனையும் யசோவையும் படுக்கை அறைக்கு இழுத்துச் சென்றது.

படுக்கையை ஈரம் செய்திருந்தாள் மகள். “யாழி” எனத் தூக்க சென்ற யசோவை மிரள மிரள பார்த்தாள் குழந்தை.

“பேபி” என்றான் தகப்பன். பயத்தில் எழுந்து அமர்ந்திருந்தவள் தகப்பனைப் பார்த்ததும், “அப்பா… பேபி.. பேபி உச்சா…” என அழுதுக் கொண்டே அப்பாவிடம் பாய்ந்தாள்.

“ஒண்ணும் இல்ல… ஒண்ணும் இல்ல. வர வழியிலெல்லாம் தண்ணிய குடிச்சிட்டு, பாத்ரூம் போகாம தூங்கிட்ட இல்ல… அதுதான். இதுல ஷேமா ஃபீல் பண்ண ஒண்ணும் இல்ல டா. இதுக்கெல்லாம் என் பேபி அழலாமா? வீட்டுக்கு போலாமா? குளிச்சுட்டு புது டிரெஸ் போடலாம்…” கூறிக்கொண்டே மகளை தன்னோடு அணைத்து பிடித்தவனை வாஞ்சையோடு பார்த்தாள் யசோ.

இவன் ஃபிராங்கென்ஸ்டைன்ஸ் மான்ஸ்டராகவே இருந்தால்தான் என்ன? தன்னை கடந்து சென்றவனை கைகட்டி பார்த்து நின்றாள் யசோ.

‘உன்னை எங்கு, யார், எப்படி வெட்டி… எப்படி ஒட்டினார்களோ தெரியாது. ஆனால் உன் மனதை எந்த சேதமும் இல்லாது சுத்த தங்கமாகவே பதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த யசோதராவின் கௌதமன் நீ தான்’ நினைத்த யசோதராவின் இதழ் மெல்ல விரிந்தது.

மகளோடு வீட்டை நோக்கி நடந்துக் கொண்டிருந்தவன் நினைவு வந்தவனாக திரும்பிப் பார்த்தான். கைகளை மார்புக்குக் குறுக்காக கட்டி, சுவரில் சாய்ந்து நின்றிருந்தவள் அவன் கண்களுக்கு பிழையில்லா உயிரோவியமாகத் தெரிந்தாள். அவளைப் பார்த்து கண்கள் சிமிட்டி, இதழ் விரிந்த புன்னகையோடே, “நாளைக்கு பேசுவோம்” என்றான். அவன் சிந்திய அந்த சிரிப்புக்கு கொரோனா தொற்றைவிட அதிக சக்தி இருந்தது.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!