Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

59 SK_UPEMM 59.1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 59.1

“தெனமும் சாயங்காலம் ஆனதும் மழை ஆரம்பிச்சுடுது. இருட்டிட்டு வரவும் எங்க இன்னைக்கும் மழை ஏதும் பெஞ்சு காரியத்த கெடுத்துடுமோன்னு பயந்துட்டே இருந்தோம். நல்ல வேள வந்த மேகம் கலைஞ்சிடுச்சு. உன் வாழ்க்கையோட வலி முடிஞ்சு, இதோட நீ பட்ட கஷ்டமெல்லாம் போயிடுச்சுன்னு தோணுது.

நல்ல குடும்பம், நல்ல பையன். பழசையே நினைச்சுட்டு இருக்காம, இந்த பையனோட சந்தோஷமா வாழணும் சரியா யசோமா? புருஷன் போனப்பறம் வேற கல்யாணம் பண்ணிக்கிறதில்லையா? ஏதோ கெட்ட நேரம்… உனக்கு நிச்சய்த்தோட முடிஞ்சிடுச்சு. போனத விடு. இனிமேல் நீ வாழ போற வாழ்க்கையில தான் உன் அப்பாவோட உயிர் இருக்குன்னு நினைவுல வச்சுகோ.” சந்திரிகாவின் ஆசை மகளுக்கு அவரின் ஆருயிர் தோழி சென்பா, அறிவுரையோடு தலையில் பூச்சூடிவிட்டார்.



Advertisement

முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது அமைதியாக அமர்ந்திருந்த யசோவின் உள்ளுக்குள் ஒரு பூகம்பமே வெடித்துக் கொண்டிருந்தது. ரகுவை தவற வேறு ஒருவனுக்கு தன் வாழ்வின் இடமே இல்லை என்றிருந்தவள் மனதில் மெல்லப் புகுந்த கௌதமன், இப்பொழுது கௌதமன் மட்டும் இல்லை. அவனைக் கௌதமனாக தன்னால் பார்க்க முடியுமா என்றும் தெரியவில்லை. அவனோடான வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்க, கேள்விக்கான விடை அவனாக இருக்க, அவனைத் தான் இருவாரங்களாக காணவில்லையே.

மகளிடமிருந்தும் எந்த சத்தமும் இல்லை. என்னவென நினைப்பது என யசோ ஒரு முடிவிற்கு வரும் முன்பே இதோ… அப்பா ராஜீவனை மாப்பிள்ளையாகக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வீட்டிற்கு வந்த அரவிந்தன், “நம்மள அந்த தெய்வம் கைவிடல மா” என ஆனந்த தாண்டவம் ஆடினார்.

“இல்லனா நம்ம மான்வியே உனக்கு அண்ணியா வருவாளா சொல்லு? உன்ன யாருன்னே தெரியாத போதே கூட பிறந்த பிறப்பு மாதிரி பார்த்துகிட்டா. நீ ரொம்ப கொடுத்து வச்சவமா. அந்த தம்பிக்கும் உன்ன ரொம்ப பிடிச்சிருக்காம்.” என அப்பா கூறியது யசோவிற்கு புரிந்தாலும் நம்பவே முடியவில்லை.

Advertisement

“ரா..ராஜீவனா?” என்றவளுக்கு அடிவயிறு வரை பிரட்டியது.

Advertisement

‘காலேஜ் படிக்கும் போது ஆரோகின்னு ஒருத்தி அவனையே சுத்தி சுத்தி வரதா சொன்னான். அப்பறம் அவள ஃப்ரெண்டுன்னு சொன்னான். அப்படியே அது காதலாகி அவ தான் தனக்கு எல்லாம்ன்னு சொன்னான். அவன் சேமிப்ப எல்லாம் அவளுக்குச் செலவு பண்ணினான். கேட்டதுக்கு அவ வசதியில்லாத குடும்பத்துல இருந்து வந்திருக்கனால அவ ஆசைகளும் தேவைகளும் அதிகம்… கண்டுகாதன்னு சொன்னான். கண்மூடித்தனமான காதல் அது. ரொம்ப ஹேப்பியா இருந்தான். எல்லாம் அவ வீட்டுல பார்த்த பிசினஸ்மேன கல்யாணம் பண்ணிக்கறதுக்காக இவன் மனச உடைக்கிற வரைக்கும் தான்.

அப்பறம் அவன் உடைஞ்சு சுக்கு நூறா போயிட்டான். இப்போ தான் பழச எல்லாம் தள்ளி வச்சுட்டு, கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்… ஆனா, இந்த ரசிகா இப்படி பண்ணி இருக்க வேண்டாம். என் தம்பி எப்படி இந்த அவமானத்தில இருந்தும் வேதனையில இருந்தும் மீண்டு வருவான்?’ என ஒருவரோடும் பேசப் பிடிக்காது எங்கோ சென்றுவிட்ட ராஜீவனை எண்ணி மான்வி அழுதது மீண்டும் காதுகளுக்குள் ரீங்காரமிட்டது. அவளும் பார்த்தாளே அந்த திருமண மண்டபத்தில் அவன் நிலையை. ராஜீவனுக்கு எப்படி தன்னை பிடித்தது என யசோவிற்கு புரியவே இல்லை. அவன் அவளை ஆசை பார்வை பார்த்ததாகவோ, அவளிடம் நின்று இரண்டு வார்த்தைகள் பேசியதாகக் கூட நினைவில்லை.

“மான்வி நமக்குச் செஞ்ச எதுக்கும் நம்மளால இந்த ஜென்மத்துல கைமாறு செய்யவே முடியாது. பட்ட நன்றிக்கடன் போதாதுன்னு இப்போ அவ தம்பிக்கு உன்ன கேக்கிற. வாங்குற இடத்துல இருந்தே செத்துடுவேன்னு நினைச்சேன். தங்கமான பிள்ள. கெட்ட பழக்கம் இல்ல. வாட்டம் சாட்டமா பாக்க நல்ல லட்சணம். சுயமா தொழில் செய்யறான். எல்லாத்துக்கும் மேல உன்ன பத்தி, நம்ம குடும்பத்துல நடந்தது பத்தி எல்லாமே அவனுக்கும் அவங்க குடும்பத்துக்கும் தெரியும். இவ்வளவு அருமையான பிள்ளைக்கு உன்ன கேட்டா… எப்படி வேண்டாம்ன்னு சொல்வேன்? சரின்னு சொல்லிட்டேன்.” என்றார் அரவிந்தன்.

Advertisement

“ஏன் பா என்னை கேக்காம சரின்னு சொன்னீங்க? ஏற்கனவே நொந்துபோன மனுஷன… ம்ப்ச்… போங்கப்பா” என்றவளுக்குச் சலிப்பும் வேதனையும் ஒன்று சேர வந்தது.

“உன்ன கேக்காம சரின்னு சொன்னேனா? கேட்டேனே. பொறுமையா நீ சரின்னு சொல்றவரை காத்திருந்து தானே வாக்கு கொடுத்தேன்? உயிரா இருந்த மனைவிய, ரகுவ, ஐயாவ, அம்மாவன்னு எல்லாரையும் இழந்து நின்ன போது உனக்கு எதுமே தெரியல. நீ நிம்மதியா வானத்த பாத்து உக்காந்திருந்த. விட்டு போனவங்கள நினைச்சு கண்ணீர் விட கூட எனக்கு நேரமில்ல. பித்துபிடிச்சமாதிரி உக்காந்திருக்க வயசு பொண்ண பாப்பேனா? இல்ல அவ வாங்கி வச்சிருந்த கருவ பாப்பேனா? ஊர் என்ன பேசும்? உன் வாழ்க்கை என்ன ஆகும்? நானும் இல்லாம போயிட்டா உன் நிலை என்ன ஆகும்ன்னு தினமும் தூக்கம் இல்லாம தவிச்ச தவிப்பு உனக்குத் தெரிய வாய்ப்பில்ல.

பெத்த குழந்தைய பறி கொடுத்தது கூட தெரியாம வானத்த பாத்து உக்காந்திருந்த உன்ன தன்னோட சொந்த குடும்பமா நினைச்சு அவ பெத்த குழந்தைய அப்படியே எடுத்து உன் கையில கொடுத்தா. அன்னைக்கு அவளோ… அந்த குடும்பமோ இல்லாட்டா நீ இன்னைக்கும் பித்து பிடிச்சு உக்காந்திருப்ப. நானும் உன்ன பார்த்து பார்த்து அழுது செத்துப் போயிருப்பேன். 

உன்ன பத்தி, உன் உடல் நில பத்தி, நீ இழந்த எல்லாத்த பத்தியும் தெரிஞ்சும் உன்ன அவ தம்பிக்கு கேட்டு நிக்கிறா. நீ, ‘என்னை கேக்காம ஏன் அவட்ட சரின்னு சொன்னீங்க’ன்னு கேக்கற.

வேணும் மா… வாழ்க்கையில் நன்றி உணர்ச்சின்னு ஒண்ணு வேணும். நீ கற்பமா நின்ன போது கூட நான் இவ்வளவு வேதன படலா. ஆனா… இன்னைக்கு உன்ன நினைச்சு ரொம்ப வேதனபடுறேன். இவ்வளவு செல்ஃபிஷா இருப்பன்னு நான் நினைச்சு கூட பாக்கல.”

“ப்பா… என்னால ராஜீவன, ரகு இடத்துல… ப்ச்… என்னால ராஜீவன கல்யாணம் பண்ண முடியாது ப்பா” என்ற மறுநிமிடம் அரவிந்தனின் இரத்த கொதிப்பு தாறுமாறாக ஏறி, அன்றைய இரவையும் அடுத்த பகலையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் கழித்தார். அதன்பின் யசோவிற்கு வாய் திறக்கும் தைரியம் எங்கிருந்து வரும்?

“எவ்வளவு சீக்கிரம் ஆப்பரேஷன பண்றீங்களோ… நல்லது. ஹார்ட் வீக்கா இருக்க ஒரு மனுஷனோட பிபிய இப்படி தான் ஏத்தி விடுவீங்களா?” என்ற மருத்துவரும் இவளைத் தான் முறைத்தார்.

கௌதமன் என்ன ஆனான்? தெரியவில்லை. அவனைப் பற்றி யோசிக்கவும் பயமாக இருக்கிறது. ரகுவை மட்டுமே நினைவூட்டும் கௌதமனோடு ஒரு எதிர்காலம் தனக்கில்லை எனும் போது அவனை நினைத்து என்ன செய்ய? யாழி? தன் வாழ்வில் வந்து சென்ற வசந்தங்களில் யாழியும் ஒன்று எனக் கடந்து செல்ல முடியுமா? முடிய வேண்டும். கௌதமன் இல்லாது யாழி இல்லை என்று யசோவிற்கு தெரியாதா என்ன?

அரவிந்தன் மருத்துவமனையிலிருந்து வந்து வாரம் ஒன்று கடந்தது. அப்பா மகள் இருவரும் முகம் பார்த்தாலும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. “சரி ப்பா… உங்க இஷ்டம்” என் மகள் கூறியபின்னும் அரவிந்தன் அப்படி ஒன்றும் மகிழ்ச்சியடையவில்லை. “இதுல உன் வாழ்க்கை மட்டும் இல்ல மா. அந்த பிள்ளையோட வாழ்க்கையும் அடங்கி இருக்கு. நீ மனசார இந்த கல்யாணத்துக்குச் சரி சொல்லாட்டா, ஆயிரம் கனவோட திருமண வாழ்க்கைக்குள்ள அடி எடுத்து வைக்கக் காத்திருக்க அந்த பையன் வாழ்க்கை நரகம் ஆகிடும். நல்லா யோசிச்சு சொல்லு.” என்றுவிட்டார்.

யசோவின் யோசனையின் பலனாக இதோ இன்று தலைக்குப் பூவோடு சேர்த்து அறிவுரையும் வாங்கிக் கொண்டிருக்கிறாள்.

“இன்னும் எவ்வளவு நேரம்?” என நரேன் கதவைத் தட்டினான்.

“அத்த மை பிரெண்ட் யாலி எப்போ வர்ருவா?”, யசோவை பார்த்ததும் வழமை மாறாது அதே கேள்வியைக் கேட்டு வைத்தான் சர்வேஷ்.

“எல்லாரும் காத்துட்டு இருக்காங்க… வருவீங்களாம்” என்ற நரேன், “அவ வருவா… நீ வா, ஆத்விக் கூட விளையாடு” என மகனைத் தூக்கிச் சென்றான்.

“அப்பா… ஆலி ஏன் விலையாட வர்றமாட்டேன்றா?” யசோவால் நினைக்க மட்டுமே முடிந்ததை சர்வேஷால் கேட்க முடிந்தது. ஆனால் இருவருக்கும் பதில் கூற ஆள் இல்லை.

நடுக்கூடத்தில் அனைவரும் அமர்ந்திருக்க, பொதுவாக வணக்கம் கூறி கதவோரம் சாய்ந்து நின்றாள் யசோ.

“அத்த மா” என ஓடி வந்த ஆத்விக் யசோ மீது தாவி ஏறினான்.

“போச்சு… இவ்வளவு நேரம் செலவு செய்து அழகா உடுத்திட்டு வந்த பொடவைய ஒரே செக்கெண்ட்ல கசக்கிட்டான்” என அலுத்துக் கொண்டாள் மான்வி.

‘அது என்ன யாலியின் அம்மா புதிதாக வந்த பையனைத் தூக்குவது? இதில் அவன் முத்தம் வேறு கொடுக்கிறான். இவரும் அவன் கன்னத்தில் முத்தமிடுகிறாரே.’ நடப்பதை எல்லாம் பார்த்திருந்த சர்வேஷிற்கு எதுவும் பிடிக்கவில்லை. “நான் சைக்கிள் ஓட்ட போர்றேன்” என ஓட்டம் பிடித்தான்.

“டேய் வீட்டுல யாரும் இல்ல” என்ற நரேனிடம், “நா யாலி சைக்கிள் ஓட்ட போர்றேன்” என்ற பதில் காற்றோடு கரைந்தது.

“யசோ என்ன நமக்கு புதுசா? பொடவ கசங்கினா என்ன… யசோ எப்பவும் போல பளிச்சுன்னு இருக்கா. அது போதாதா?”

“இவ்வளவு நேரம் ரெண்டு பேரும் பொறுமையா காத்திருந்ததே பெருசு” என்றான் ரித்விக் புன்னகைத்து.

ஆத்திவ் தாவிக் கொண்டு ஏறியதையும், முகம் மலர யசோ அவனை அணைத்து தூக்கியதையும், அனைவரையும் மறந்து இருவரும் கொஞ்சிக் கொள்வதையும் ராஜீவன் பார்த்து அமர்ந்திருந்தாலும் அவன் கவனம் அவ்வப்போது கைப்பேசியின் மீது சென்றது.

கடந்து சென்ற இருவாரங்களில் இரவு பகல் என நேரம் காலம் பாராது கடைசிக் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்தது. ஆனால் நிஹிராவை ராஜீவன் ஒருநாளும் அங்கு பார்க்கவில்லை. இதன் பின் அவளைப் பார்க்க முடியாது போகலாம். தாளமுடியாது டைரக்டரிடம் “உங்க பொண்ணு சினிமாட்டொகிராப்பி கத்துக்கணும்ன்னு சொன்னாங்க. ஆள காணம்” எனக் கேட்டும் விட்டான்.

“முகுந் ஊருக்கு போர வரைக்கும் அவளுக்கு யாரையும் கண்ணுல தெரியாது. அவன தெரியுமில்ல? இந்த படத்துக்கு அவனும் ஒரு ஃபைனான்ஷியர். என் கணக்கு சரியா இருந்தா, கூடிய சீக்கிரம் ஃபேமிலி ஃப்ரெண்ட் ஃபேமிலி ஆகிடுவான்” என்ற பதிலை அவர் சாதாரணமாக சொல்லி சென்றாலும் இவனுக்குத் தான் அது கடப்பாரையாகச் செவிப்பறையில் இறங்கியது. ஏனோ அன்று இறங்கிய கடப்பாரை இன்றுவரை கனக்கிறது.

“தாராட்ட பேசணுமா ராஜீவன்?” எனக் கேட்ட நரேனை அவன் கேள்வியாக பார்க்க, “யசோ.. யசோதராட்ட பேசணுமா?” என மாற்றினான்.

யசோவை இவன் பார்க்க, அவளும் இவனைத்தான் பார்த்து நின்றிருந்தாள். “ஆமா” என இவன் இருக்கையிலிருந்து எழுந்திரிக்கவும், “அம்மா” எனக் குட்டி புயல் ஒன்று ஓடி வந்தது.

கூட்டத்தைப் பார்த்த குழந்தை வந்த வேகத்தில் நின்றுவிட்டாள். அன்னையை பார்த்தாள். கண்கள் விரிந்தன. தான் இருக்க வேண்டிய அன்னையில் இடுப்பில் ஒய்யாரமாக வேறு ஒருத்தன் இருப்பதை பார்த்த குட்டி மகள் அன்னையையும், சிறுவனையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள்.

“யாழி” என்ற அன்னை ஓர் அடி முன் வர, குழந்தை ஓர் அடி பின் சென்றாள். இந்த சூழல் குழந்தைக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ‘நாளைக்கு அம்மாட்ட போயாம்’ என தினம் தினம் நாள்களைக் கடத்திய குழந்தை, அன்னையைக் காண ஓடி வந்தால்… அன்னை, தன் இடத்தை வேறு ஒருவனுக்கு கொடுத்திருக்கிறாள். குட்டி கைகள் இரண்டும் பின்னு சென்றன. கண்கள் குளம் கட்டின.

யசோவின் இதயம் அடித்துக் கொண்டது. மகள் இப்படித் தள்ளி நின்றதில்லை. “யாழிமா” பாவமாக மகளைப் பார்க்க, குழந்தை வந்த கண்ணீரைப் பிடிவாதமாக வெளியே விடாது அன்னையை பார்த்தாள்.

“வா” என யசோ கரத்தை நீட்ட, குழந்தையின் கண்கள் அன்னையையும் அவள் இடுப்பில் இருப்பவனையும் மாறி மாறி பார்த்தன. “நோ… அத்த ம்மா” என்றான் ஆத்விக், யசோவின் கரத்தை தன் பக்கம் இழுத்து. மழலை மாறா ‘அத்தம்மா’, யாழிக்கு, ‘அச்சோமா’வாக கேட்டது. அழுகை வந்தது குழந்தைக்கு. பிதுங்கத் துடித்த உதட்டைப் பிடிவாதமாக இழுத்துப் பிடித்தாள். ஏக்கம், தவிப்பு எனச் சொல்லத் தெரியா உணர்வுகள் குழந்தையை ஆக்கிரமிக்க, யாழி மெல்ல நகர்ந்து திறந்திருந்த கதவுக்குப் பின் ஒளிந்து கொண்டாள்.

நடப்பதைப் பார்த்திருந்த அரவிந்தனுக்குக் காலம் உருண்டு பின்னோக்கி சென்றது. அன்பிற்கான ஏக்கப் பார்வையும், அது தனக்குக் கிடைக்காதா என்ற தவிப்புமாக ஐந்து வயது ரகு ‘ஐயா’ என அவர் கரத்தினுள் அடங்கியது கண்முன் வர எழுந்தவர் கதவை நோக்கிச் சென்றார். சந்தியாவின் ஜாடையும், ரகுவின் பிடிவாதமுமாகத் தெரியும் யாழி என்றும் போல் இன்றும் பல கேள்விகளை அவருள் எழுப்பினாள்.

“ஓய்… யாழி பேபி” என்ற சத்தத்தோடு ஜீவனும் எழுந்து வர, இப்போழுது அனைவர் பார்வையும் ராஜீவன் பக்கம் சென்றது. “யாழினியாள். என் ஃப்ரெண்டு கௌதமன் பொண்ணு. குட்டி மேடம்க்கு சட்டுன்னு கோபம் வரும்” என்று பொதுவாகக் கூறியவன், “அவ எப்படி இங்க?” என அரவிந்தனைப் பார்த்தான்.

“அந்த வீட்டுல தான் இருக்காங்க” என்றார்.

“வாட்?” என்றவன் தொனியில் அப்பட்டமாக அதிர்ச்சி கலந்திருந்தது. ‘வாசுதேவனின் ஒற்றை வாரிசுக்கு, வீர் வீட்டில் என்ன வேலை?’ என இவன் பார்வை வெளியே செல்லவும் கௌதமன் வரவும் சரியாக இருந்தது.

ஏதோ சிந்தனையில் வந்தவன், மகளைப் போலவே வாசல் வரை வந்த பின்பே வாசலில் கிடந்த செருப்ப்ய்களையும் வீட்டினுள் இருந்த கூட்டத்தையும் கவனித்தான். கூட்டத்தைத் தவிர்த்தவன் பார்வை நொடி நேரம் யசோவின் மீது விழுந்து மீண்டது.

யசோவை பார்த்துக் கொண்டே, “பேபி?” என மகளை அழைத்தான்.

“கதவு பின்னாடி” என்றார் அரவிந்தன்.

அப்பாவின் சத்தம் கேட்டதும் கதவு ஆடியது.

கதவை மெல்லத் திறந்து மகளின் உயரத்திற்கு ஒற்றை முட்டியில் அமர்ந்தவன், “என்ன பேபி?” என்றது தான் தாமதம், குழந்தை கௌதமன் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டாள். மகளின் முதுகை வருடிவிடவும், “அம்மாக்கு பேபி நேணாம்” என விசும்ப ஆரம்பித்த குழந்தையிடம், “அம்மாக்கு பேபி தான் வேணுமாம். பேபி மட்டும் தான் வேணுமாம்” என்றான்.

பட்டென அப்பாவின் முகும் பார்த்த குழந்தை, “பாமிஷாவா?” எனக் கேட்டாள்.

“பிராமிசா… அம்மாக்கு யாழி பேபி தான் வேணும். அப்பா சர்வேஷ தூக்குவேன் இல்ல? அந்த மாதிரி தான் அம்மாவும் அந்த குட்டி பையன வச்சிருக்காங்க. அவன் கொஞ்ச நேரம் கழிச்சு, அவன் அம்மாகிட்ட போயிடுவான்”

“அச்சோ அம்மா சொன்னான்”

“உனக்கு மட்டும் தான் அவங்க அச்சோ அம்மா. ஓக்கேவா?”

“பாமிஷ்?”

“பிராமிஸ். என் பேபி இப்போ ஓக்கேவா? போலாமா?” என்றவன் மகளின் கண்ணீரை துடைத்தான்.

“போவாம்” என்ற குட்டி நண்டு பல்லைக் காட்டிக் கொண்டே வெளியே எட்டி பார்த்தாள்.

தான் அந்தரத்தில் தூக்கப்படவும், திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க, அவள் லீவன் மாமா, “ஹை பேபி” என்றான்.

“லீவன் மாமா” என குழந்தை ஆச்சரியத்தில் கத்த, “இப்போ தான் மாமா கண்ணுக்கு தெரிஞ்சேனா?” எனத் தூக்கிப் போட்டுப் பிடிக்க, குழந்தை கெக்கபிக்க என சிரித்தாள். சுருங்கிய நெற்றியோடு இவனையே கௌதமன் பார்க்க, “ஹாய் டா” என்றான்.

அவனைவரும் தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ராஜீவன், “என் ஃப்ரெண்ட் கௌதமன். இந்த குட்டி அழகியோட அப்பா” எனக் கௌதமனை அறிமுகபடித்தியவன், “என் ஃபேமிலி” என அமர்ந்திருந்தவர்கள் பக்கம் திரும்பினான்.

“வணக்கம்” என பொதுவாக வணக்கம் வைத்தவனுக்குத் தொண்டை குழி ஏறி இறங்கியது. பட்டாடை கூட்டம், வாயிலைத் தாண்டிய நெய் மணம், பட்டுப் புடவையில் யசோ, நாயகனாக ராஜீவன், அவன் குடும்பம்… கௌதமனுக்கு எல்லாம் புரிந்தது.

“கேரி ஆன்…” என்றவன் ராஜீவனிடம் கைக்குலுக்கி, பொதுவாக ஒரு புன்னகையை சிந்தியவன் பார்வை யசோ மீது படிந்து மீண்டது. இழுத்து வைத்து அவன் புன்னகைக்க முயல்வது தெரிந்தது யசோவிற்கு. மற்றவர்களுக்கு அவன் புன்னகை தெரிய, யசோவிற்கு அவன் பற்கள் அரைபடுவது நன்றாகவே தெரிந்தது.

“வரேன்” என வாசல் பக்கம் திரும்பியவன் வேக வேகமாக தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

கையில் இருந்த யாழியை இறக்காது, “மாமா கூட இருக்கியா?” எனக் கேட்டவனிடம், “ஓ எஷ் மாமா” என தன் குட்டி குடுமி ஆட பதிலுரைத்தாள் யாழினியாள்.

இவன் மடியில் யாழியை அமர்த்திக்கொண்டு அமர்ந்துவிட, மீண்டும் விட்ட இடத்திலிருந்து பேச்சு தொடர்ந்தது. இரண்டு நிமிடம் அமைதியாக இருக்க முடியாத யாழி, சற்று நேரத்திற்கெல்லாம் தூங்கி விழ ஆரம்பித்தாள். மகளையே பார்த்து நின்ற யசோவிற்கு, ‘என் பொண்ண எங்கிட்ட குடுங்க’ எனக் கேட்க வேண்டும் போல் பரபரத்தது.

ஆடிக் கொண்டிருந்த தலையை தன் மார்போடு சேர்த்தணைத்தவன் பார்வை மகளின் விரிந்திருந்த உள்ளங்கையில் விழுந்தது.

“குழந்த தூங்கறா. நான் கௌதமன பார்த்துட்டு, இவள அங்க விட்டுட்டு வரேன்” என எழுந்தான் ராஜீவன்.

“நீ விளையாடு” என ஆத்விக்கை இறக்கி விட்டவள், ஒருவரின் கவனத்தையும் கவராது வாசலுக்கு விரைந்தாள்.

“ராஜீவன்” யசோ அழைக்க, அவன் நின்று திரும்பினான்.

அவசர அவசரமாக அவனருகில் வந்தவள், “நான்… நான் பாத்துகிறேன். உள்ள படுக்க வைக்கலாமே” எனத் தன் திருவாய் மலர்ந்தாள்.

“இருக்கட்டும்… அவன் குழந்த அவன்ட்ட இருக்கது தான சரி?” என கேட்டவன், “ஆத்விக் ஒரு வருஷத்துல அவன் அம்மா கைக்கு போயிட்டான். யாழியும் அவளுக்குன்னு அம்மா வந்ததும் போயிடுவா யசோதரா” என்றான்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!