Skip to content
Post Views: 993
உன்னாலே உனதாகிறேன்! 6
“தனியாக இருப்பதில் எனக்கொன்றும் பெரிய சங்கடங்கள் இல்லை. தாள முடியாதிருக்கிறது யாருடனாவது இருக்கும்போது உணர்ந்துகொள்ளும் தனிமை” தனக்காகவே எழுதியது போல அந்த வரிகளை பலமுறை அசை போட்டுவிட்டாள் பூவினி.
அம்மாவின் வீடு வந்து சேர்ந்து இந்த ஒரு மாதத்தில் அவள் வீடே அவளுக்கு வெறுத்துவிட்டது.
Advertisement
அம்மா அப்பா தம்பி அனைவரும் இருக்கும் அவள் வீடு இது. ஆனாலும் தனிமை உணர்வு பூவினியை வதைத்தது. இந்த இரவும் அதே உணர்வோடுதான் போராடிக் கொண்டிருந்தாள் பூம்பாவை.
இரவுக்கு எப்போதும் ஒரு குணம் உண்டு. அது எப்போதும் தன்னோடு தனிமையையும், துயரையும், அதன் கூடவே மன ஆழத்தில் இருக்கும் சில நினைவுகளையும் அழைத்தே வருகிறது. அப்படியான ஒரு நினைவுச் சூழலில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தாள்.
இரவின் இருளில் நின்றவளுக்கு தனிமையை விட கொடுமையாய் தெரிந்தது அவள் கழுத்தை நிறைத்திருக்கும் அவன் அணிவித்த தங்க சங்கிலி. அதுவும் அவன் அம்மாவின் தாலிக் கொடி.
Advertisement
அன்று மருமகளாக கர்ணாவின் வீட்டில் அவளுக்கு கடைசி நாள். முதல் போல முடிவு என்றும் இருப்பதில்லை.
Advertisement
மருமகளாக ஒரு வீட்டில் முதல்நாள் கனவுகளோடு காலடி எடுத்து வைத்ததற்கும் இன்று எல்லாம் கலைந்து களைத்து தான் வந்த இடத்திற்கே திரும்புவதற்கும் உள்ள வேறுபாடு அப்பட்டமாக அவளுக்குத் தெரிந்தது.
மற்றவர்கள் மனநிலை எப்படியோ ஆனால் பூவினி. இதயம் அடைத்து நின்றுவிடும் போல இருக்க மனம் ஒரு நிலையில் இல்லை.
Advertisement
எதுவுமே வேணாம் என்பதும் எல்லாமே வேணும் என்பதும் ஒரே தீவிரவாத சிந்தனையின் இரு பக்கங்கள் தானே!
இன்று உறவினர் பலரும் வந்திருந்தனர். இவளின் அம்மா தம்பியை பார்த்துக் கொள்ள வேண்டும் என வராமல் இருக்க விசாலாட்சி வந்திருந்தவர் இவளுக்கு உதவிக்கு கொண்டிருந்தார்.
தூங்கி வழிந்து கொண்டிருந்த மகிழனின் தொட்டியை ஆட்டிவிட்டபடியே அவர் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் மட்டும் கொஞ்சம் இவளுக்கு இதம் தந்தது.
அப்படி ஒரு தீவிரமான தீவிரவாத சிந்தனையில் அவளிருக்க சுதா உள்ளே வந்தாள்.
“எத்தா பூவினி, உன் நகையெல்லாம் உங்க அப்பாகிட்ட பத்தரமா குடுத்தாச்சு. நீயும் ஒருக்கா சரியா இருக்கான்னு பாத்துக்க. அப்புறம் தாலி சங்கிலி இன்னும் உன்கிட்ட இருக்காமே அத கேட்டாக.” சொன்னவள் கண்களில் அந்த தங்கத்தின் மேலான மதிப்பைத்தாண்டி வேறெதுவும் காண முடியவில்லை பூவினியால்.
“ஏத்தா, இன்னைக்கே அதெல்லாம் பைசல் பண்ணனுமா? அத்தாச்சிக்குத்தே கொஞ்சமும் யோசனையில்லன்னா நீயும் வந்து கேக்குற?” சற்றே காட்டமாக கேட்டார் அறையில் நின்ற விசாலாட்சி.
ஊரே கூடி கொண்டாடி கலகலத்த கல்யாணம்தான். கணவன் இறந்ததும் இன்று எல்லாமே கொடுக்கல் வாங்கல் கணக்காகிப் போனது.
எதுவும் பேசவில்லை பூவினி, ‘சரிக்கா’ என்றதைத் தவிர.
எல்லாம் முடிந்து அவளை அழைத்துச் செல்லும் நேரம் வந்தேவிட்டது.
“ஹையோ” என்று மனம் என்ன கூக்குரலிட்டாலும் கிளம்பித்தானே ஆகவேண்டும். இந்த வீட்டில் முதல் நாளை எல்லாம் நினைத்துப் பார்த்து ஏங்கி நிற்க நேரம் கூட இல்லை. மகனைக் கையில் ஏந்திக் கொண்டு வந்தவள் கூடத்தில் வந்து நிற்க
“ஐயா, ஆயாகிட்ட சொல்லிக்கிட்டு விவுதிய பூசிக்கிட்டு வாத்தா.” கூட்டத்தில் யாரோ சொல்ல மகனுடன் பழைய வீட்டை நோக்கி நடந்தாள்.
கண்ணில் நீரோடு கலங்கி வந்து நின்றவளை பார்க்க குமரனுக்கு மனமெல்லாம் கனத்துப் போனது.
உள்ளே வந்தவளைப் பார்த்து முருகய்யா கைகளை நீட்ட மகிழனை அவரிடம் கொடுத்தாள். வள்ளியம்மாள் உள்ளே சாமியறைக்கு அழைத்துச் செல்லவுமே குமரன் பின்னாலே வந்தவன்,
“அப்பத்தா, பூவினிய வெளக்கேத்த சொல்லுங்க.” என்றான். அன்றைக்கு அவள் நடத்தப்பட்டது போல இனி என்றும் நடந்துவிடக்கூடாது என்பதில் அவனுக்கு தீவிரம் வந்திருந்தது.
“எத்தா, உன் மாமியா எண்ணமும் சொல்லட்டும். நீ மவராசி இந்த வீடு வாசல் வம்சத்த தழக்க வைக்க வந்தவ நீதே. மனசுல நல்லா நெனச்சுக்கிட்டு இந்த வெளக்க ஏத்துத்தா.” சொன்னவர் கண்களைக் காட்ட முருகய்யா கொள்ளுப் பேரனுடன் உள்ளே வந்தார்.
“குமரா, இங்க வாய்யா.” பேரனை அழைத்து அவன் கையில் ஒரு சங்கிலியைத் திணித்தார்.
அவன் என்ன என்று அவரைக் கேள்வியாய்ப் பார்க்க, “உங்க அம்மா சங்கிலிய எடுத்துக்கிட்டு வந்தே. எம் பேத்தி வெறுங்கழுத்தா இங்கருந்து போக வேண்டா. எம் மவே சொன்னாப்புள்ள இந்தக் கல்யாணம் நல்லா நடக்கும். அதேன் இந்த சங்கிலிய பேத்திக்கு போட்டு அனுப்பு ய்யா.” என பெரியவர் பேசி முடித்தார்.
அடுத்த சில நிமிடங்களில் குமரனின் அம்மா அஸ்வதியின் சங்கிலியுடன் வந்த மருமகளை குரோதமாக பார்த்தாலும் அவரும் சுதாவும் எதுவும் பேசவில்லை.
அன்றைய நிகழ்வின் நினைவுகள் படம்போல மனத்திரையில் ஓட இருளை வெறித்து நின்றாள் பூவினி.
ஆழ் கடலின் ஆழம் போல ஆர்ப்பரிப்பில்லா அவளின் மௌனம் அங்கே அலை அலையாய் சத்தமெழுப்பியது.
மொட்டை மாடியில் தனியே நடந்து கொண்டிருந்தவளுக்கு அந்த இரவும் இருளும் அவளின் வாழ்க்கை போலவே சூனியமாகத் தெரிந்தது. அழகாபுரியில் இதே வீட்டில்தான் பூவினி பிறந்து வளர்ந்தது எல்லாம். சிறு வயதில் இங்கு நின்று பார்க்கும் போதெல்லாம் இந்த வானம் நட்சத்திரங்களால் நிறைந்து புன்னகைத்துக் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் அவைகள் எங்கு தொலைந்ததோ?
நட்சத்திரங்கள் எல்லாம்தான் காணாமல் போனது என்றால், பக்கத்துத் தோட்டத்தில் கூட்டமாய் நின்றிருந்த நெட்டுலிங்க மரங்களும் எண்ணிக்கையில் வெகுவாய்க் குறைந்து ஒன்றே ஒன்று மட்டும் தனியே இலைகள் எல்லாம் உதிர்ந்து, பார்க்கவே பரிதாபமாய் நின்றது. ‘அந்த பட்டுப்போன பரிதாபமான நெட்டுலிங்க மரம் போலவே நானும் தனியே நிற்கிறேன்’ என நினைத்தவள் கவனம் சில கணத்தில் மெல்ல சிதறியது.
error: Content is protected !!