Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 10 ( PART 02 )

 

என்ன நினைத்தானோ, “மாஹி…” என்றழைத்தான். அவளது குரலில் தன்மை அவனை அசைத்திருக்கலாம். அவன் அழைப்புக்கு, அவளுக்குத் திரும்பத் தோன்றவில்லை. மீண்டுமொரு முறை அதே அழைப்பு, இம்முறையும் அவளுக்குத் திரும்பத் தோன்றவில்லை.

 



Advertisement

அடுத்த அழைப்பு அவளது முன் நின்று முகத்தை கைகளில் தாங்கியபடி வந்திருந்தது. கண்ணீரை கண்ணுக்குள் சிறை வைக்க முடியாமல் தோற்றவளின் விழிகளிலிருந்து சில சொட்டுக்கள் கன்னத்தில் வழிந்தோடியது.

 

தன் பெரு விரலால் கண்ணீரைத் துடைத்தவன், அவளை அணைத்து ஆறுதல் சொல்லப்போக, ‘வேண்டாம்’ என்று மறுப்பாகத் தலையசைத்தாள்.

Advertisement

 

Advertisement

‘ஏன்?’ என்பதாக அவன் பார்க்க, “இதுக்கு தான் கோபம் வருது” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.

 

“எதுக்கு?” என்றான் புரியாமல்.

Advertisement

 

கன்னத்தை வருடியவள், கண்டனத்துடன் அவனைப் பார்க்க,

 

“மாஹி, நான் எப்போ உன்னை அடிச்சேன்?” என்றான் அதிர்ச்சியாக.

 

‘அச்சோ!’ எனத் தலையில் கை வைத்தவள், “சும்மா சும்மா… அது… இப்படி” என அவர்கள் இருவருக்குமிடையே விரலால் கோலம் போட்டவள், “அது… நீங்க… கிட்ட… அது என்னன்னா பக்கத்துல…” எனக் கோர்வையாகக் கூற முடியாமல் திண்டாடியவள், அவனை ‘புரிந்து கொள்ளேன்’ என்பது போலப் பரிதாபமாகப் பார்த்தாள்.

 

 

[the_ad id=”6605″]

 

அவனுக்கு புரிந்துவிட, “ஓ சரி…” என்று சற்று இடைவெளி விட்டு நின்றவன், அவளது காதோரம் குனிந்து, “கல்யாணத்துக்கு அப்பறம்?” என ரகசியம் பேசினான்.

 

இவள் முறைக்க, ‘பதில் சொல்லேன்’ என்பது போல இப்பொழுது அவன் பார்க்க, கவிதை பேசிக்கொண்டது விழிகள் இரண்டும்.

 

“நம்ம வீட்டு பெரியவங்க சம்மதத்தோடும், ஆசீர்வாதத்தோடும் முதல்ல கல்யாணம் நல்லபடி முடியட்டும்” என்று பேச்சுவாக்கில் அவளது ஆழ்மனது ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தாள். பெரியவர்கள் என்றால், அவன் வீட்டில் மட்டுமில்லையே! அவள் வீட்டிலும் சேர்த்துத் தானே!

 

அவளது வார்த்தை ஜாலத்தைச் சரியாகப் புரிந்து கொண்டான். ஆனால், அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை. “சரி நேரம் ஆயிடுச்சு. கிளம்பு. வீராவை வீட்டுல கொண்டு வந்து விட சொல்லறேன்” என்று பொறுப்பாய் வழி அனுப்பி வைத்தான்.

 

அவன் குரலின் பாவம் கோபம் தொலைத்ததைப் பறைசாற்றியது. நிம்மதியுடன் அங்கிருந்து கிளம்பினாள்.

 

*** மதன் மருத்துவ அறையின் வாசத்திலிருந்து, அன்று மாலையே அவனுடைய நண்பர்களுடன் இணைந்திருந்தான்.

 

“என்ன மதன் இப்போ எப்படி இருக்கு?” கெளதம் அக்கறையோடு விசாரித்தான்.

 

“பரவாயில்லை கெளதம்”

 

“நல்லாதானே இருந்த, திடீர்ன்னு எப்படி அவ்வளவு காய்ச்சல்? நான் ரொம்ப பயந்துட்டேன் டா”

 

“விடு கெளதம், அதைப்பத்தி பேச வேண்டாம்” என்று அதுதொடர்பான பேச்சைத் தடை செய்தான்.

 

“சரிடா ஓய்வெடு…” என்று அவனைப் படுக்கையில் விட்டான்.

 

“ஏன் கெளதம், நீ எதுவும் தப்பு செஞ்சிருக்கியா?”

 

“நானா? நான் என்ன தப்பு செய்ய போறேன்? என்ன ஆச்சுடா? ஏன் திடீர்ன்னு இப்படி கேட்கிற?”

 

“இல்லை கெளதம், ஒரு விஷயமா தான் கேட்கிறேன். சொல்லேன். நல்லா யோசிச்சுப் பாரேன்”

 

“என்னடா ஆச்சு உனக்கு, அந்த மாதிரி எதுவும் இருந்தா தானே சொல்ல” என்றான் சலிப்புடன்.

 

மதனிற்கு இங்கு நடக்கும் விஷயங்களின் மூலம் புரிவதாக இருந்தது. ஆனால், அதை உறுதி செய்ய வேண்டுமே! அதற்காக கௌதமிடம் கேட்க, அவனுக்குப் பதில் சொல்ல தெரியவில்லை. இவன் அவசரம் அவனுக்கு இருக்காதில்லையா.

 

கௌதமிடம் வேறு மாதிரி தான் விஷயத்தை வாங்க வேண்டும் என்று புரிந்தது. சிறு யோசனையின் பின்பு, “மச்சான், யாரையும் காதலிச்சு இருக்கியா?” என்று கேட்க,

 

ஆர்ப்பாட்டமாகச் சிரித்தபடி, “அதெல்லாம் கண்ணா பின்னான்னு…” என்று கெளதம் கூறினான்.

 

‘சுத்தம்’ என மனதோடு அலுத்துக் கொண்டவனுக்கு, வேறு வழி இல்லாததால் அவனுடைய மொத்த காதல் லீலைகளையும் ஒவ்வொன்றாகக் கேட்டான். நெருடல் வரும் இடத்தில் இடைக்கேள்வி கேட்டுக்கொள்ளலாம் என்பது அவனது எண்ணம்.

 

மதனுக்கு சந்தேகம் வரும் கதைகளில் மட்டும் மீண்டும் மீண்டும் மறுகேள்வி கேட்டு கெளதமைப் படுத்தி எடுத்தான். கிட்டத்தட்ட ஒரு வாரம் இந்த கதைகள் தான் அவர்களுக்கிடையே ஓடியது.

 

[the_ad id=”6605″]

 

“இதெல்லாம் இப்போ எதுக்கு டா உனக்கு?” என கெளதம் சலித்துக் கொண்டே விவரங்களைக் கூறினான்.

 

“சரி அந்த பொண்ணு உனக்காக என்ன வேணா செய்யுமா?”

 

“ஆமா… எனக்கு பணத்தேவைன்னு தெரிஞ்சு வீட்டிலிருந்து நகை எல்லாம் கொண்டு வந்து கொடுக்கும்”

 

“ஓ…”

 

“என்னடா இழுக்கிற, நான் என்ன பொய்யா சொல்லுவேன். வீட்டுல மட்டுமில்லை எனக்காக அவ ஹாஸ்டல் ரூம் பொண்ணுங்க நகையைக் கூட கை வெச்சு மாட்டிட்டா” என்றான் பெருமையாக.

 

“என்னது திருடினாளா?” என்றான் அதிர்ச்சியாக.

 

“ஆமா ஆமா…”

 

“அவ ஏன் உனக்காக அவ்வளவு செய்யணும்”

 

“அதை நீ அவகிட்ட தான் கேட்கணும் டா” என்றான் கெளதம்.

 

“அவ மனசை மட்டுமில்லை, அவளையும் உன்கிட்ட இழந்திருப்பா… அதுனால உன்னை உதற முடியாம இவ்வளவும் செஞ்சிருக்கலாம்” என்றான் மதன்.

 

“இதென்னடா வம்பா இருக்கு. வெறும் மனசை மட்டும் வெச்சு நான் என்ன வறுத்தா திங்க முடியும்?”

 

“உன் தேவைக்காக அவளைத் திருடியா மாத்தி இருக்க, உனக்காக இவ்வளவு தூரம் துணிந்தவளைக் கழட்டி விடறது பாவமில்லையா?”

 

“நானா அவளைத் திருடச் சொன்னேன்” என்றான் கடுப்பாக.

 

“ஆனா, அவ திருடறேன்னு சொன்னப்ப மறுப்பு சொல்லியிருக்க மாட்டியே, திருடிக் கொண்டு வந்ததையும் மறுத்திருக்க மாட்டியே!”

 

“என்னடா ஆச்சு உனக்கு?” என்றான் கெளதம் மீண்டும் அலுப்பாக.

 

“கேட்டா பதில் சொல்லேன் டா” என்று எரிச்சலாகக் கூறிய மதனும், கேள்விகளை நிறுத்தவில்லை. “சரி அந்த பொண்ணு என்ன ஆனா?”

 

“யாருக்கு தெரியும்? ஒருமுறை ஹாஸ்டல் பிரண்டோட நகையை எடுக்கும்போது மாட்டிக்கிட்டா… அவ்வளவு தான் தெரியும். கொஞ்ச கொஞ்சமா கட் பண்ணிட்டேன்”

 

“ஒருவேளை அவ இறந்து போயிருந்தா?”

 

[the_ad id=”6605″]

 

“அவ செத்தா நமக்கென்ன டா?”

 

“டேய்… ஒருவேளை அவ உன்னால தற்கொலை செஞ்சிருந்தா?”

 

“கருமம் அந்த ச*** யனும் அப்படி சொல்லித்தான் டா டார்ச்சல் கொடுத்தா, அதான் கழட்டி விட்டேன். இம்சை” என்றான் முகத்தைச் சுளித்து.

 

மதனுக்கு புரிந்து விட்டது. இவனும் ஒரு பெண்ணை முயன்றவரைப் பயன்படுத்தி, அவளது வாழ்வையும், உயிரையும் அழித்திருக்கிறான். இவன் மட்டுமல்ல, இங்கிருக்கும் ஒவ்வொருவரும் நம்மைப் போலப் பாவிகளாகத்தான் இருப்பார்கள் என்று உணர்ந்து கொண்டான்.

 

ஆனால், மதனுக்குப் புரியாத விஷயம், அதற்கு எதற்கு இவர்கள் நமக்குத் தண்டனை தருகிறார்கள்? தண்டனை தரச் சட்டம் இல்லையா? இவர்களுக்கும், நமக்கும் என்ன சம்பந்தம்? நம்மைத் தண்டிப்பதால் மட்டும் இதுபோன்ற தவறுகள் வேறு எங்கும் நடந்து விடாதா? என்பது தான்.

 

ஒரு சமுதாயத்தையே சீர்குலைக்கிறோம் என்பதைப் பெண்களை வஞ்சிப்பவர்கள் புரிந்து கொள்வதில்லை.

 

ஏற்கனவே பெண்களின் விகிதம் மிகவும் குறைவு. இவர்களானால், மீதமிருக்கும் பெண்களையும் அழித்து வருகிறார்கள். இதன் பாதிப்புகள் புரிவதில்லை யாருக்கும். திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் காத்துக் கிடக்கும் முதிர் கண்ணன்’கள் பெருகி வருவது, வருங்காலத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துபவர்களும் யாருமில்லை.

 

ஆசையை அனைவராலும் அடக்கி விட முடியாதே! திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் (பெண்கள் இருந்தால் தானே கிடைப்பதற்கு), ஆசையைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் மேலும் மேலும் குற்றங்கள் தானே பெருகும். இந்த சுழற்சி முடியாதே!

 

பெண்களின் விகிதம் குறைந்ததால், இன்று சீனா சந்தித்து வரும் பிரச்சனைகளை நாளை நாமும் சந்திக்க நேரிடலாம்.

 

1979 ஆம் ஆண்டு, சீன அரசு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் ‘ஒரு குடும்பம், ஒரு குழந்தை’ திட்டத்தைக் கடுமையாகக் கொண்டு வந்தது. ஒரு குழந்தை மட்டுமே பெற வேண்டும் என்பதால், இந்தியர்களைப் போலவே ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தரும் சீன மக்களும், கருவில் இருக்கும் பெண் குழந்தைகள் அழித்து ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுத்து வந்தனர். அதன் விளைவால், தற்பொழுது ஆண்-பெண் பாலின விகிதாச்சாரத்தில் கடுமையான ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுவிட்டது.

 

இதனால் திருமணம் வயதிலிருக்கும் இளைஞர்களுக்கு மணப்பெண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதாவது என்ன தேடினாலும், நூறில் பத்து ஆண்களுக்குச் சீனாவில் மணப்பெண்களே இல்லை. அவர்கள் தங்கள் வாழ்நாளைத் திருமணமின்றி தான் கழித்தாக வேண்டும்.

 

இந்த நிலை நம் நாட்டிலும் தொடங்கி விட்டதை, நம் சுற்றத்தில் கண்கூடாக பார்க்கிறோம். இந்த நிலை தொடர்வதால்… ஒரு ஆண் தன் வாழ்நாள் முழுவதும் என்னென்ன சங்கடங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று விளக்கம் சொல்ல அவசியமில்லை.

 

யாரோ ஒருவரின் ஒரு நாள் பிழை, எங்கோ ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அழிக்கும் வல்லமை கொண்டது. இதை புரிந்து கொள்பவர்களும் இங்கு இல்லை. அதுசரி, ஒரு பெண் குழந்தை என்பது ஒட்டுமொத்த குடும்பத்தின் கனவு, அதையே எளிதாகச் சிதைத்து விடுபவர்கள், யாரோ ஒருவனின் பாதிப்பிற்கா கலங்கப் போகிறார்கள். அந்த யாரோ ஒருவர் வருங்காலத்தில் அந்த குற்றம் புரிபவனாகவோ, அவன் சந்ததியினராகவோ கூட இருக்கலாம் என்பதும் புரியப் போவதில்லை.

 

சமுதாயம் சீரடைய பெண் குழந்தைகள் அவசியம். அந்த பெண் குழந்தைகள் தங்களின் வாழ்வை தைரியத்துடன் எதிர்கொள்ளக் கல்வியும், தைரியமும் அவசியம். தன்னால் சுயமாக, யார் துணையுமின்றி நிற்க முடியும் என்னும் தன்னம்பிக்கை மிக மிக அவசியம்.

 

இதற்கு துணை நிற்க ஆண்கள் அவசியமில்லை. இன்னும் கூறப்போனால், செந்தாமரை கூறியது போல, “பெண்களுக்கு இன்னல் வராமல் இருக்க, பெண்கள் முன்னேற… ஆண்கள் எதுவும் செய்யாமல் ஒதுங்கி நின்றாலே போதும்”.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!