3..2..1 Episode 4. பிரிவும் சந்திப்பும்
கண்கவரும் கண்ணாடி கதவுகள், பளிங்குத் தூண்கள். ஆடம்பர சோபாக்கள், அளவாய் வளர்ந்த அலங்காரச் செடிகள் என ஒரு பெரும் நட்சத்திர விடுதியைப் போல, டைரக்டர் சங்கர் படத்தின் பிரம்மாண்டங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது புவி ஐ.ஏ.எஸ். அகாடெமி.
கடந்த வருடமான 2024ல், புவி ஐ.ஏ.எஸ். அகாடெமியிலிருந்து வெற்றி பெற்ற 150 மாணவ மாணவியர்களின் புகைப்படங்களைக் கொண்ட பேனர்கள் ஆங்காங்கே பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.
இவற்றையெல்லாம் ஆச்சரியமாய்ப் பார்த்துக்கொண்டிருந்த கணேசன் காமாட்சி, கார்த்தியை, வரவேற்பறையில் வீற்றிருந்த பெண் ஆடிட்டோரியத்துக்குச் செல்லுமாறு வழிகாட்டினாள்.
அந்த பிரம்மாண்ட அரங்கின் உள்ளே, அலைகடல் போலத் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்த மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தார்கள். கடைசி வரிசையில் இரண்டு காலி இருக்கைகள் தென்பட, அவற்றை நோக்கி மூவரும் நடந்தார்கள்.
Advertisement
கார்த்தியையும், காமாட்சியையும் இருக்கைகளில் அமரச் சொல்லிவிட்டு அவர்களுக்கு முன், காலியாக இருந்த மற்றொரு இருக்கையில் கணேசன் அமரச்சென்ற போது, “ஐயா! கொஞ்சம் நில்லுங்க!”, என்று கடைசி வரிசையில் காமாட்சி அருகே வீற்றிருந்த ஒரு கிராமத்தான் குரல் அவரைத் தடுத்தது.
“தம்பி! தனியா தானே வந்திருக்க. முன்னாடி இருக்கிற இருக்கையில போய் உட்கார்ந்துக்கோ! ஐயா குடும்பமா, ஒன்னா உட்காருவாங்க!”, அந்த கிராமத்தான் அருகிலிருந்த இளைஞனிடம் கூற, அவனும் எழுந்து சென்று அவர்கள் வரிசைக்கு முன்னிருந்த இருக்கையை ஆக்கிரமித்தான்.
கணேசனும், மனைவி மகளும் ஒன்றாக கடைசியிருக்கைகளில் அமர்ந்தார்கள். அந்த கிராமத்தானுடன் அவனது மனைவியும் மகளும் வீற்றிருந்தார்கள்.
Advertisement
“ரொம்ப நன்றி. தம்பி உங்க பையன்னு நான் நினைச்சுட்டேன்.”, கணேசன் கூற, ”இல்லங்க ஐயா! அவன் என்னோட பையன் இல்ல. இதுதான் என்னோட பொண்ணு. ஊர்ல இவளோட தம்பியையும் தங்கையையும் ஆத்தாகிட்ட விட்டுட்டு இங்கே வந்திருக்கிறோம். வசந்தி, ஐயாவ கும்பிட்டுக்கோ!”, கிராமத்தான் கூற, அவர் மகளான வசந்தி, கணேசனுக்கு வணக்கம் தெரிவித்தாள்.
Advertisement
“அந்த பையன் இங்க உட்கார்ந்ததிலேருந்து விதண்டாவாதம் பேசிக்கிட்டிருந்தான். நல்ல வேளை நீங்க வந்தீங்க. வயசானவங்க, பொண்ணுங்க வந்தா எழுந்து இடம் கொடுக்கணும்னு கூட தெரியல. என்ன படிச்சி, கலெக்டராகி என்ன சாதிக்கப்போறாங்களோ இந்த காலத்துப் பயலுங்க..”, அந்த கிராமத்தான் கூறுவது காதில் விழுந்ததால் அவர்கள் முன் வீற்றிருந்த இளைஞன் அவர்களைப் பார்த்துத் திரும்பினான்.
“எக்ஸ்க்யூஸ் மீ ஓல்டுமென், இந்த காலத்து இளைஞர்களை ஒருநாள் திட்டலைன்னாக் கூட உங்களுக்குத் தூக்கம் வராதே! வீட்டுக்கு வெளியே, பெண்களைப் பார்த்தால் நாங்க எழுந்து இடம் கொடுக்கணும். வீட்டுக்கு உள்ளே ஆண்களைப் பார்த்தால் பெண்கள் எழுந்து நிக்கணும். ஏன் இவ்வளவு கன்ஃப்யூஷன். இங்கே எல்லாருமே சமம்தான். இது ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது!”, முறைத்துக் கொண்டு கூறிவிட்டு, அவர்கள் பதிலுக்காகக் காத்திராமல் எழுந்து சென்று முன்னால் வீற்றிருந்த இரண்டு மாணவிகளைக் கண்டு கையசைத்துவிட்டு, அவர்களோடு, பேசிவிட்டு மீண்டும் தனது இருக்கைக்கு வந்து அமர்ந்து கொண்டான்.
அவன் பேசியதைக் கவனித்துக்கொண்டிருந்த காமாட்சி, கார்த்தியின் காதில் குசுகுசுவெனக் கூறினாள். “கார்த்தி! அந்த பையனப் பார்த்தா, நம்ம ஆளுங்க மாதிரியும் தெரியல. சென்னை மாதிரியும் தெரியுது! அவன் கிட்ட நீ பேசிடவே பேசிடாத!”
Advertisement
“அம்மா! சும்மா தேவையில்லாம பேசாத, அவனுக்குக் கேட்டுடப் போகுது!”, கார்த்தி கூறியது அவன் காதில் விழ அவர்களை நோக்கித் திரும்பினான்.
“என்ன ஆண்ட்டி. என்னைப் பத்தி என்ன சொன்னீங்க?”, கோபமாய் அவன் கேட்க, “தம்பி, உன் ஊரு சென்னை தானே?” என்று வராத புன்னகையை வலுக்கட்டாயமாக வரவழைத்தபடியே கேட்டாள் காமாட்சி.
அவள் கேட்டதும் முகம் மலர்ந்தான் அந்த இளைஞன். “ஓ நைஸ் ஆண்ட்டி. நான் கூட நீங்க அங்கிள் மாதிரி குறை சொல்றீங்களோன்னு நினைச்சேன். ஊர் கும்பகோணம். ஆனால் நாலு வருஷமா சென்னையில தான் படிக்கிறேன்!,” அவன் கூறிமுடிப்பதற்குள் “தெரியும்”, என்று காமாட்சி நக்கலாகக் கார்த்தியிடம் கூற, அவளும் களுக்கென்று சிரித்தாள். இவர்கள் சிரிப்பது புரியாத இளைஞன், தானும் சிரித்தவாறே, “என் பெயர் சேது, மெக்கானிக்கல் இஞ்சினியர். போன மாசம்தான் எஞ்சினியரிங் எக்ஸாம் எழுதி முடிச்சேன். இப்போ இங்க யூ.பி.எஸ்.சி. எக்ஸாம்க்கு படிக்க வந்திருக்கேன். நீங்க?”, என்று கார்த்திகேயினியிடம் கேட்க, ”என் பெயர் கார்த்தி… கார்த்திகேயினி… பி.ஏ. ஹிஸ்ட்ரி. நானும் இந்த வருஷம் தான் கல்லூரி முடிச்சேன்”, கார்த்தி கூறிக்கொண்டிருக்கும்போதே அவள் காதில் காமாட்சி, “பேசாதன்னு சொன்னேன்ல!” என்று கூற, “என்ன ஆண்ட்டி? சத்தமாவே சொல்லுங்க எதுக்கு எப்பவும் கார்த்தி காதுக்குள்ளேயே போய் முணுமுணுக்குறீங்க!”, சேது சலிப்புடன் கூறினான்.
“ஒன்னுமில்ல தம்பி, இந்த அரங்கத்துல நிறைய பசங்க இருக்காங்க. ஆனால், தம்பி பொண்ணுங்கள மட்டும் தேடித்தேடிப் பேசுதே! அதுதான் சொன்னேன்”, காமாட்சி ஏளனமாய்க் கூற, சேதுவும் சிரித்தான்.
“ஸோ ஃபன்னி ஆண்ட்டி. நான் ஏற்கனவே சொன்னேனே. இங்க ஆண், பெண் எல்லாரும் சமம்தான். புவி ஐ.ஏ.எஸ். அகாடெமியும் ஆணோ, பெண்ணோ எந்த விஷயத்திலயும் பிரிச்சுப் பார்க்க மாட்டாங்க. ஹாஸ்டெல்ஸ் இரண்டு பேருக்கும், தனித்தனியா எதிரெதிரே இருந்தாலும், யாரு வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் யார் அறைக்கும் போகலாம். எந்தத் தடையும் இல்லை!”, சேது கூறத் தூக்கிவாறிப் போட்டது காமாட்சிக்கு.
”என்னடி கார்த்தி. இப்படி சொல்றான் இவன். பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரின்னு பொண்ணுங்க படிக்குற இடமாக ஒவ்வொரு இடத்திலயும் பார்த்துப் பார்த்து உன்னப் படிக்க வெச்சால், இங்க எல்லாரும் ஒன்னாத் தங்குவாங்களாமே.. இதென்ன கதையா இருக்குது? நாம உடனே ஊருக்குக் கிளம்பிடலாம்”, காமாட்சி அவசர அவசரமாக எழ முயல, அவளை அமரும்படி தடுத்தாள் கார்த்தி. “அம்மா ரெண்டு வருஷம் தான். நான்தான் அதுக்கப்பறம் நீங்க சொல்ற பையனைக் கட்டிக்கிறேன்னு சத்தியம் செஞ்சிருக்கேனே!”, கார்த்தி கூற, “உன் சத்தியத்தைக் கொண்டுபோய்க் குப்பையில போடு! பேர் கெட்டுப் போச்சுன்னா, மானம் போச்சுன்னா, உன் சத்தியத்தை வைச்சி சக்கரைப் பொங்கல்தான் சாப்பிடணும்”, ஆத்திரத்துடன் காமாட்சி கூற, குபீரென்று சிரித்துவிட்டான் சேது.
கார்த்தி, காமாட்சி இருவரும் அவனைக் கோபமாய் முறைக்க, சிரிப்பை அடக்கமுடியாமல் கட்டுப்படுத்திக் கொண்டே அவன் கூறினான். “ஸாரி. நீங்க சீரியஸா பேசுனத கிண்டல் செஞ்சுச் சிரிக்கலை. சத்தியம் சக்கரைப்பொங்கல்னு டைமிங் பேசுனீங்களா அதுதான் சிரிச்சுட்டேன். சரி அதைவிடுங்க உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்குறேன். உண்மையா பதில் சொல்லுங்க. உங்க பொண்ண நீங்க நம்புறீங்களா இல்லையா?” அவன் நிறுத்த, “நம்புறேன். ஆனால், இந்த சமூகத்தை நம்பல”, காமாட்சி வேகமாகக் கூறினாள்.
“பொய். உங்கப் பொண்ண நம்பாமல், சமூகத்து மேல பழிபோடப் பாக்குறீங்க. இங்க நாங்கதான் சமூகம். வீடு, வேலை, நட்புன்னு எல்லாரும் எல்லாத்தையும் விட்டுட்டு, பெரிய பெரிய கனவுகளுக்காகப் போராட வந்திருக்கோம். படிப்புத்தவிர இங்க யாரோட மனசிலேயும் எதுவும் ஓடாது. எவ்வளவு நேரம் கொடுத்தாலும், படிக்கிறதுக்கே இங்க நேரம் போதாது. அநாவசியமா யாரும் யார்கிட்டேயும் பேசமாட்டாங்க. போட்டியத் தாண்டி இங்க யாரும் எதுவும் யோசிக்க மாட்டாங்க. உங்கப் பொண்ணாகப் போய், இங்கப் படிக்கிற பையன்கிட்ட, எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, நாம கல்யாணம் செஞ்சுக்கலாமான்னு கேட்டாத்தான் உண்டு, அப்படி யார்கிட்டேயாவது உங்க பொண்ணு கேட்பாங்களா?”, சேது கூறி முடிப்பதற்குள், “சீ..சீ… கார்த்தி போய் அப்படில்லாம் யார்கிட்டேயும் பேச மாட்டா”, காமாட்சி மறுக்க, “அப்போ கவலைய விடுங்க, அவளைப் படிக்க விடுங்க. உங்க பொண்ணுமேல நம்பிக்கை இல்லைன்னா, இப்பவே கூட்டிட்டுப் போய்டுங்க!” சேது திடமாகக் கூற, செய்வதறியாமல் காமாட்சி குழம்பி அமர்ந்தாள்.
கார்த்தி சேதுவை நோக்கி, கண்களாலேயே நன்றி சொல்ல, அவனும் அதைச் சிரித்தபடியே கண்களால் வாங்கிக் கொண்டான்.
ஒருபுறம் இவர்கள் பேசிக்கொண்டிருக்க, மறுபுறம் கிராமத்தான் கணேசனிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“ஐயா, என் பேரு அங்கமுத்து. நாங்க அலங்காநல்லூர்க்காரங்க. என் பொண்ணு வசந்தி, நல்ல படிப்பாளி, பள்ளி, கல்லூரியில, அவ தான் முதல் மார்க் வாங்குவா. கல்லூரி முடிஞ்சதும், கலெக்டருக்குப் படிக்கணும்னு சொன்னா. ஊர்த் தலைவர்கிட்ட சொல்லி, பணம் கேட்கலாம்னு போனா, பொம்பளைப் பிள்ளைய கல்யாணம் செஞ்சுக் கொடுக்கிறத விட்டுட்டு பட்டணத்துக்குப் படிக்க அனுப்ப, உனக்குக் கிறுக்குப் புடிச்சிருக்கான்னு, பொசுக்குனு கேட்டுப்புட்டாரு. சரி, தலைவருக்குத் தான் புரியலை. ஊர்க்காரங்கக்கிட்ட கேட்டா, ஒரு பயலும் பணம் கொடுக்க வரலியே. எங்க ஆத்தா பேருல ஒரு குண்டுமணி இடம் இருந்துச்சு. இவ கல்யாணத்துக்குன்னு வச்சிருந்தேன். அதை வித்துட்டு, அந்த பணத்தைதான் இப்போ கட்டணமா கொடுக்கப்போறேன். பொண்ணு கலெக்டரானா நமக்குத் தான பெருமை? ஐயாவும் மதுரைமாதிரி தான் தெரியுறீங்க. நீங்களும் பொண்ண கலெக்டராக்கத் தானே இவ்வளவு தூரம் வந்துருக்கீங்க!”, அங்கமுத்து ஆவலாய்க் கேட்க சிரித்தபடியே மறுத்தார் கணேசன்.
“இல்லல்ல. நாங்க களக்காட்டுக்குப் பக்கத்து கிராமம். பொண்ணு படிப்ப முடிச்சதும் கல்யாணம்தான்னு முடிவு செஞ்சுருந்தேன். ஊர்ல பல பொண்ணுங்களுக்கு நாம தான் கல்யாணம் செஞ்சு வைச்சிருக்கோம். நம்ம பொண்ணு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடத்தணும்னு நினைச்சிட்டிருந்தப்போதான், பொசுக்குன்னு கலெக்டர்க்குப் படிக்கணும்னு சொன்னா. வீட்டுல யாருக்கும் விருப்பமில்லை. பட்டணத்துக்குப் படிக்க அனுப்புறேன்னு சொன்னதும் ஊர்ப்பயலுகளும் நம்மள, ஒருமாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நான்கூட கல்யாணம் செஞ்சு வைக்கணும்னுதான் தீர்மானமா இருந்தேன்! இவ கண்கலங்கி அழுததும் மனசு கேட்கல. சட்டுன்னு மாறிடுச்சு. அட என்னடா, ஊரு, பேரு, இன்னிக்கு வருவாங்க, நாளைக்கு போவாங்க. இவிங்களுக்காக இவளைக் கல்யாணம் செஞ்சுக்குடுத்தால், போற இடத்தில கண்ணைக்கசக்கிகிட்டு இருப்பா! பொண்ணு சந்தோஷத்தைவிட வேறெதுவும் முக்கியமில்லைன்னு தூக்கி எறிஞ்சிட்டேன். என் பொண்ணும், என்னைப் படிக்க விடுங்க. நீங்க சொல்ற பையனைக் கட்டிக்கிறேன்னு சத்தியம் செஞ்சுருக்கா! ரெண்டு வருஷம் இவ படிச்சு கலெக்டராகணும்னுலாம் எனக்கு ஆசையில்லை. முதல் தேர்வுல பெயிலாகி வந்துட்டான்னா, எல்லார் இஷ்டப்படியும் கல்யாணம் செஞ்சு வைச்சுடுவேன்!”, கணேசன் அங்கலாய்ப்போடு கூறி முடித்தார்.
“எல்லோரும் பீஸ் கட்டி ரசீது வாங்கிக்கோங்க,” மேடையில் ஒரு பெண்மணி கூற, அனைவரும் ஆங்காங்கே வீற்றிருந்த பில் கவுன்டர்கள் முன் வரிசையேற்படுத்தத் தொடங்கினார்கள்.
கையில் வைத்திருந்த பணப்பையுடன் அங்கமுத்துவும், தன் மகன் கபிலன் கற்றுத்தந்த டெபிட் கார்டுடன் கணேசனும், தன் மொபைல் போனுடன் சேதுவும் வெவ்வேறு வரிசைகளில் நின்றிருந்தார்கள். கணேசன் பணம்கட்டி ரசீது வாங்கி நிற்க, அங்குமுத்துவிடம் பில் கவுன்டர் இளைஞன் ஏதோ வாக்குவாதம் செய்ததால், கணேசன் விசாரிக்கச் சென்றார்.
“ஐயா புரியும்படி சொல்றேன். கட்டணம் ஒரு லட்சம்தான். ஆனால் இருபதாயிரத்த செக்யூரிட்டி டெபாசிட்டாகக் கட்டணும். எல்லாருமே இதைக் கட்டித்தான் ரசீது வாங்குறாங்க. பணம் இருந்தால் கொடுங்க. ரசீது தர்றேன். இல்லைன்னா ஊருக்குக் கிளம்புங்க. தேவையில்லாம என்கிட்ட பிரச்சனை பண்ணாதீங்க!”, கௌன்டர் இளைஞன் கறாராகக் கூற, கண் கலங்கி நின்றார் அங்கமுத்து.
“தம்பி! அதிகமாப் பேசாத. அவர்கிட்ட எவ்வளவு பணம் இருக்குதோ அதை வாங்கிக்கோ! மீதிய இந்த கார்டுலயிருந்து எடுத்துக்கோ!” கணேசன் வலுவாகக் கூறி டெபிட் கார்டை நீட்ட, அந்த இளைஞன் அதைப் பெற்றுக்கொண்டு ரசீதைத் தந்தான்.
அங்கமுத்து நெகிழ்ந்தபடி கண்ணீர்முட்ட, வார்த்தை வராது, கணேசனிடம் கைக்கூப்பி நிற்க, கணேசன் அங்கமுத்துவின் கைகளை அமர்த்தியபடியே பேசத் தொடங்கினார்.
“ஊர்ல எல்லாப் பொண்ணுங்களும் என் பொண்ணு மாதிரிதான். ஊர்ப்பயகதான் என் பொண்ணை மட்டும் படிக்க அனுப்புறேன்னு அங்கலாய்க்குறாங்க. நீர் கவலைப்படாதீர். ஊர்ல உள்ள வேலைய மட்டும் பாரும். மாசா மாசம், என் பொண்ணுக்குக் காசு அனுப்பும்போது உங்க பொண்ணுக்கும் சேர்த்து அனுப்புறேன். இரண்டு பொண்ணுங்களும் ஒத்தாசையாயிருந்து ஒன்னா படிக்கட்டும்.”, கணேசன் கூற, “ஐயா! உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைய்யா! நான் எப்படி கைம்மாறு செய்வேன்!”, நா தழுதழுக்க அங்கமுத்து கூறிய அதே நொடி, புவி ஐ.ஏ.எஸ். அகாடெமியின் டைரக்டர் மேடைக்கு ஏறினார். அனைவரும் அவரவர் இடங்களுக்குச் சென்று அமர, அவரை வாழ்த்துரை வழங்க அழைத்தாள் மேடையில் தொகுத்து வழங்கிய பெண்மணி.
வசந்தி, கார்த்தி கடைசி வரிசையில் அருகருகே அமர, அவர்கள் முன் வீற்றிருந்தான் சேது.
டைரக்டர் மைக்கில் வாழ்த்துரை வழங்கத் தொடங்கினார். ”புவி ஐ.ஏ.எஸ். அகாடெமி, நடத்துன தேர்வுல வெற்றி பெற்று ஸ்காலர்ஷிப்போடு படிக்க வந்திருக்குற நாளைய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை அகாடெமி சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்!”, டைரக்டர் முழங்க, பெருத்த கரகோஷம் எழுந்தது.
அவர் மேலும் தொடர்ந்தார், “இங்கு வீற்றிருக்கிற இளைய தலைமுறைக்குச் சொல்றேன். உங்க பெத்தவங்க வேர்வையையும், ரத்தத்தையும் சிந்தி உழைச்ச காசுல உங்களைப் படிக்க வைக்கிறாங்க. அதை ஒவ்வொரு நிமிஷமும் நினைச்சு, நேரத்தை வீணாக்காம ஒழுங்காக படிங்க. மாநிலத்தின் சிறந்த ஆசிரியர்கள்தான் உங்களுக்குப் பாடமெடுப்பாங்க. எந்த சந்தேகத்தையும் அவங்ககிட்ட கேட்டுக்கலாம். எந்நேரமும் லைப்ரரி திறந்திருக்கும். சாப்பாடு வேணும்னா காசுக்கட்டி மெஸ்ல சாப்பிடலாம். இல்ல, பக்கத்துல பல கேண்டீன்கள் இருக்குது. உங்க வசதியப் பொறுத்து நீங்க முடிவு செஞ்சுக்குங்க. நீங்க ப்ரிலிம்ஸ் ரிசல்ட்ஸ் அதாவது முதல்கட்ட தேர்வு முடிவுகள் வர்ற வரைக்கும் அகாடெமி விடுதியில தங்கிக்கலாம். தேர்வுல வெற்றி பெற்றவங்க விடுதியில தங்கலாம். தோல்வியடைஞ்சிட்டால், விடுதியைக் காலி செஞ்சிடணும்”, டைரக்டர் கூற, அனைவரும் ஒருவரையொருவர் மிரட்சியோடு பார்த்துக் கொண்டார்கள்.
“தோல்வியடைஞ்சிட்டால் இந்த அகாடெமிக்குள்ள வரக்கூடாதுங்கிறதில்ல, இந்த வருஷம் தோல்வியடைஞ்சு, அடுத்த வருஷம் ப்ரிலிம்ஸ்ல வெற்றி பெற்றால், அடுத்த வருஷம் அடுத்தடுத்த தேர்வுகளுக்கு நீங்க இலவசமாகவே தங்கிக்கலாம்! நீங்க எல்லாருமே முதல் வருஷமே தேர்வாகணும்னு தான் என்னோட ஆசை. ஆனால், இந்த போட்டித்தேர்வை இந்தியா முழுவதும் பத்து இலட்சம் பேர் எழுதுறாங்க. அதுல இறுதியில தேர்வாகிறது ஆயிரம் பேர்தான். போன வருஷம் தேர்வான எட்டுநூறு பேர்ல, நூற்றியம்பது பேர் புவி ஐ.ஏ.எஸ். அகாடெமியில படிச்சவங்க. அவங்க பேனர்கள நீங்க சுத்தியும் பார்க்கலாம். நாளைக்கு உங்க புகைப்படமும் இங்கே பேனர்ல வரணும்!”, டைரக்டர் கரகோஷத்திற்காக ஆர்வமாக ஒருநொடி நிறுத்த, “வாய்க்கூசாம பொய் சொல்றீங்களே!” என்று ஒரு கணீர் குரல் கடைசி வரிசையிலிருந்து வர, அனைவரும் திகைப்போடு கடைசி வரிசையைப் பார்த்தனர்.
டைரக்டர் செய்வதறியாது ஸ்தம்பித்து நின்றார். கணேசன் கடைசி வரிசையிலிருந்து முன்வரிசைக்கு வந்தார்.
“இந்த பேனரை முழுசாப் பார்த்துட்டேன். பத்து தமிழ்பெயர்கள் தவிர மீதி எல்லாமே இந்திக்காரப் பெயர்களா இருக்குது. இந்த இந்திக்காரங்க அவங்க ஊரைவிட்டுட்டு இங்க வந்து படிச்சாங்களா? யார்கிட்ட கதை விடுறீங்க. இந்த கூட்டத்துல எத்தனை ஹிந்திகார பசங்க இருக்காங்க காட்டுங்க. எல்லாரும் நம்மூரு பயலுங்க. கிராமத்துலயிருந்து வந்தா, எப்படிவேணாலும் ஏமாத்துவீங்களா? உண்மையா, இந்த அகாடெமில படிச்சு வெற்றி பெற்றவங்க எவ்வளவு பேர், இப்பவே அதைச் சொல்லுங்க. நாங்க எல்லாரும் பணம் கட்டியிருக்கோம். எங்கேயும் ஓட மாட்டோம். அதனால நீங்க பொய் சொல்லாம, உண்மையச் சொல்லுங்க!”, கணேசன் கூற டைரக்டர் கடுங்கோபத்துடன். “செக்யூரிட்டி, ப்ளீஸ் டேக் ஹிம் அவே. வேற அகாடெமியிலயிருந்து பிரச்சனை பண்றதுக்காகவே இந்த மாதிரியான ஆட்களை அனுப்புறாங்க! நீங்க கவலைப்பட வேண்டாம்.!” டைரக்டர் மைக்கில் கூறிக்கொண்டிருந்த போதே, ஆஜானுபாகுவான தேகம் கொண்ட இரண்டு செக்யூரிட்டி ஆட்கள், கணேசனைத் தரதரவென அரங்கிற்கு வெளியே இழுத்துச் சென்றார்கள். காமாட்சி, கார்த்தி இருவரும் பதறிக்கொண்டு உடன் தொடர, அங்கமுத்துவும் அவனது குடும்பமும், உடன் வெளியே வந்தனர்.
“காசு போனால் போகுதுங்க. சுயமரியாதையில்லாத இடத்துல ஒரு நிமிஷம்கூட நாம நிக்கக்கூடாது. வாங்க எல்லாரும் ஊருக்குக் கிளம்பலாம்!”, காமாட்சி வெலவெலத்தபடி கூற, அதே நொடி சேது அரங்கிலிருந்து வெளியேறி, ஓடிவந்து கணேசனை இறுகக் கட்டிக்கொண்டான்.
“ஹீரோ சார் நீங்க. நீங்க பண்றதெல்லாம் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்குது. சடார்னு பணத்தை தர்மம் பண்றீங்க. படார்னு தைரியமாக் கேள்வி கேட்குறீங்க. டைரக்டர் உங்களைப் பார்த்து பயந்தே போயிட்டார் தெரியுமா? கார்த்தி கலெக்டரானதுக்கப்புறம் நீங்க டைரக்டரப் பார்க்கணும். அவர் கூனிக்குறுகி உங்ககிட்ட மன்னிப்பு கேட்பார்ல, அது ஸீனு. இதுக்காகவே நீ கலெக்டராகணும் கார்த்தி!”, சேது கூற காமாட்சியும், கணேசனும் குழம்பியவாறே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
மேலும் சேது தொடர்ந்தான், “உங்களுக்கு உண்மையை நான் சொல்றேன். இந்த நூற்றியம்பது பேர்ல, பத்து பேர்க்கூட இந்த அகாடெமில படிச்சிருக்க மாட்டாங்க. வழக்கமாக நேர்காணலுக்கு இங்க இலவசமாப் பயிற்சி நடத்துவாங்க. பலரும் அதில கலந்துக்குவாங்க. இந்த நேர்காணல் பயிற்சிக்கு ஒருநாள் வந்திருந்து அவங்க ஜெயிச்சிட்டாக்கூட, அவங்க தகவல்களை எடுத்துக்கிட்டு, இந்த அகாடெமில படிச்சது மாதிரி விளம்பரம் செஞ்சிடுவாங்க. இந்த கோச்சிங் சென்டர் மட்டுமில்ல, நாட்டுல இருக்குற முக்கால்வாசி கோச்சிங் சென்டர்ங்க இதைத்தான் செய்யுறாங்க. இதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க. நானும் வசந்தியும், கார்த்தி கூடவே இருப்போம். நீங்க கவலைப்படாம ஊருக்குக் கிளம்புங்க!”, சேது கூற, அவன் கூறியதை ஏற்றும், ஏற்காமலும் ஊருக்குத் திரும்பத் தயாரானார்கள்.
“நீ படிக்கணும்னா படிச்சுத் தொலை. ஆனால், இந்த பையன்கிட்ட மட்டும் சகவாசம் வச்சுக்காத”, காமாட்சி மீண்டும் கார்த்தியின் காதுகளில் கிசுகிசுக்க, கண்ணீர் மல்க புன்முறுவலோடு தந்தைக்கும் தாய்க்கும் பிரியா விடை அளித்தாள் கார்த்தி. அங்கமுத்துவும் அவன் மனைவியும் வசந்தியிடம் விடைபெற்று செல்லத் தொடங்கினார்கள்.
அவர்களுக்குக் கையசைத்தபடி கார்த்தி, வசந்தி, சேது மூவரும் அகாடெமி வாசலில் வெகுநேரம் நின்றிருந்தார்கள். புதியதொரு வாழ்க்கையை எதிர்கொள்ள மூவருமே ஆர்வமாய்த் தயாரானார்கள்.
பிடித்தவர்களைப் பிரிவதும், புதியவர்களைச் சந்திப்பதும் புவியின் நியதியல்லவா?
***
