Skip to content
Post Views: 2,618
“சர்ப்ரைஸ்” சிரித்த தனாவின் பார்வை ஒரு முறை என்னை தொட்டு திரும்பியது. ஷ்யாம் என் பக்கம் திரும்பவேயில்லை. அவனுக்கு இனி எனது நினைவு என்பதே இருக்காது. என் உள்ளம் தளர்ந்தது.
“ஹாய் சாரு” ஷ்யாம் புன்னகைக்க அவளும் புன்னகையுடன் தலையசைத்தாள். அவள் பார்வையும் என்னை உரசித்திரும்ப தவறவில்லை. எனக்குள் ஏதோ ஒன்று சில்லு சில்லாக உடைந்து நொறுங்கிக்கொண்டிருந்தது.
“அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். நான் வேண்டாமென்று சொல்லவில்லை இறைவா. ஆனால் இந்த நான்கு நாட்கள் எனக்கு வேண்டும்”
மானசீகமாக கெஞ்சிக்கொண்டு பார்வையை திருப்பிக்கொண்டேன். எதையோ பெரிதாக இழந்த வெறுமை. கொஞ்சம் தலை சுற்றும் உணர்வு.
Advertisement
எனதருகில் நின்று கொண்டு ஷ்யாம் தனாவுடன் சிரித்து அளவளாவிக் கொண்டிருந்தான். எனது மனநிலை எல்லாம் இப்போது அவனுக்கு புரிய வாய்ப்பே இல்லை. உதட்டை மடித்து கடித்துக்கொண்டேன்.
“என்ன நடந்தாலும் டென்ஷன் மட்டும் ஆகாதே. புரியுதா?” இது சித்தாரா சொல்லியனுப்பிய அறிவுரை.
கைக்கு அருகில் நின்ற ட்ராலியை இறுக்கமாக பற்றிக்கொண்ட அந்த நேரத்தில், எத்தனை தடுத்துப் பார்த்தும் கேட்காமல் எனது கண்களில் நீர் சேர சரியாக அந்த நொடியில் யாருமறியாமல் என் கரத்தை பிடித்துக்கொண்டது ஷ்யாமின் கரம்.
Advertisement
பேச்சு சுவாரஸ்யத்தில் அவர்கள் இருவரும் இதை கவனிக்கவில்லை. இதமாக அழுத்திக்கொடுத்தான் எனது கரத்தை. என் தலை முதல் கால் வரை புது ரத்தம்.
Advertisement
“இவனுக்கா என்னுள்ளம் புரியாது என நினைத்தேன்?” எனக்குள்ளே அப்படி ஒரு பரவசம்.
“ஷ்யாம் ஒரு தடவை வாக்கு கொடுத்தா கொடுத்ததுதான். டோன்ட் வொர்ரி”
தனா கேட்ட ஏதோ ஒரு கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான் அவன். அதே நேரத்தில் இந்த நான்கு நாட்கள் எனக்குத்தான் என்ற உத்திரவாதமும் அதில் ஒளிந்திருந்ததை புரிந்துக்கொள்ள முடியாத அளவு நான் முட்டாளில்லைதான்.
Advertisement
சத்தியமாய் திக்கு முக்காடிப்போனேன். மனம் சட்டென சமநிலைக்கு வந்தது.
“இவ சந்தியா உனக்கு தெரியுமில்ல” ஷ்யாம் தனாவிடம் என்னை காட்டி சொல்ல அவன் என்னை பார்த்து புன்னகைக்க நான் சுதாரித்துக்கொண்டு பதிலுக்கு புன்னகைத்தேன்.
“அண்ட் திஸ் இஸ் சாரு” அவளை எனக்கு அறிமுகப்படுத்தினான் ஷ்யாம் “நீதான் போட்டோல பார்த்தியே” ஷ்யாம் என்னிடம் சொல்ல அவளும் என்னை பார்த்து புன்னகைத்தாள்.
வந்த நிமிடத்திலிருந்து இந்த நொடி வரை அவள் ஒற்றை வார்த்தை கூட பேசாதது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். ‘அவள் குரல் எப்படித்தான் இருக்கும்?’ அதை கேட்டு விடும் ஆர்வம் எனக்குள்ளே அதிகரித்துக்கொண்டிருந்தது
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த நொடியில் அந்த தேசத்தின் சாலைகளின் பிரம்மாண்டம் என்னை வியக்க வைத்தது.
“நீ எங்கேடா மெரினா பேவா?” தனா நாங்கள் தங்கப்போகும் ஹோடேலின் பெயரை சொல்லி கேட்க
“ஆமாம் நீ?” கேட்டான்
“நமக்கு அங்கேயெல்லாம் சரிப்பட்டு வராதுபா. அவன் சொத்தெழுதி கேட்பான்” என்றான் தனா.
“டேய்.. நான் பார்த்துக்கறேன் வாடா” ஷ்யாம் அழைக்க
“இல்லடா. இருக்கட்டும். உனக்கு ரிஹர்சல் எல்லாம் இருக்கும் சாரு உன்னை பார்க்கணும்ன்னு சொன்னா அதான் கூட்டிட்டு வந்தேன். ஈவினிங் டைம் இருந்தா சொல்லு வெளியே எங்கேயாவது போவோம்” சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொண்டான் தனா.
ஷ்யாம் டிரைவரின் அருகில் அமர்ந்துக்கொள்ள, நான் பின்னால் அமர்ந்துக்கொள்ள கிளம்பியது கார். கார் முன்னால் விரைய எல்லையற்று விரிந்த சாலைகளும், அழகு மரங்களும், விண்ணைத் தொடும் கட்டடங்களும் என் கண்களை தழுவித் தழுவி பின்புறமாக விரைந்துகொண்டிருந்தன.
அடுக்குமாடி குடியிருப்புகள், அதனருகிலேயே விளையாட்டு மைதானங்கள், எல்லா இடத்திலேயும் ஆங்கிலம் தமிழ் சீனம் மற்றும் மலாய் மொழிகளிலும் இருந்த அறிவிப்பு பலகைகளை என எல்லாம் பார்த்தபடியே இருந்தேன் நான்.
மெரினா பே சான்ட்ஸ் நாங்கள் தங்கவேண்டிய ஹோட்டல் வந்திருந்தது, மூன்று 55 மாடி கட்டிடங்கள் கொண்ட பிரம்மாண்ட ரிசார்ட் அது. மூன்று கட்டிடங்களும் கிட்டதட்ட ஒரு ஹெக்டேர் பரப்பளவில் கொண்ட மேற்கூரையின் மூலம் இணைக்கப் பட்டிருக்கும் பிரம்மாண்டம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எங்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். மின்தூக்கியில் துவங்கி ஒளிர்ந்த பிரம்மாண்டத்தில் அங்கே கொழித்துக்கிடந்த செல்வவளமும் புரிந்தது.
எங்கள் அறைகள் இருந்த தளத்தை நாங்கள் அடைய அங்கே மற்ற நண்பர்கள், சக பாடகர்கள் என ஒவ்வொருவராக மாற்றி மாற்றி எதிர்ப்பட நலம் விசாரிப்புகள் முடிந்து எல்லாரும் விலகியதும் என் பக்கம் திரும்பினான் ஷ்யாம்.
நான் மெலிதாக புன்னகைக்க, அவன் கண்களில் ஆதங்கமும், என் மீதிருக்கும் கொஞ்சமான பாசமும் போட்டிப் போட இதழோரம் தேங்கிய சின்ன ஆற்றாமை கலந்த புன்னகையுடன் என் முகம் பார்த்தான் அவன்
“ஒரு சில நேரம் உன்னை பார்த்தா கோவம் வருது. ஒரு சில நேரம் பாவமா இருக்கு. நான் அவங்ககூட பேசின அந்த அஞ்சு நிமிஷத்துக்குள்ளே உன் கண்ணுக்குள்ளே தண்ணி வந்திடுச்சு. இல்லையா? ஏன் பாப்பா இப்படி பைத்தியம் மாதிரி இருக்கே? நான் உனக்கு வேண்டாம் பாப்பா”
அத்தனை தவிப்பு அவன் குரலில். என் கண்ணீரை அவன் கவனித்திருக்கிறான் என்பதில் ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு.
“இல்ல அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. எனக்கு உங்க மேலே லவ் எல்லாம் இல்லை. இந்த நாலு நாள் நான் சந்தோஷமா இருக்கேன் அது போதும் எனக்கு” வழக்கம் போல் வெளிவந்தது என் படபட.
அவனிடம் ஒரு ஆழ் மூச்சு.
அதற்குள் அங்கே “ஹாய்” என வந்து நின்றாள் சங்கீதா. ஆம் சித்தாரா இவள் பெயரை சொல்லித்தான் என்னை வம்புக்கு இழுப்பது வழக்கம்.
“உனக்கும் எனக்கும் ஒரே ரூம்தான் வா” ஷ்யாமிடம் நலம் விசாரித்து விட்டு என்னிடம் சொன்னாள் அவள்.
“உனக்கு அரை மணி நேரம் டைம் சந்தியா. ரெடி ஆகிடணும்.” சட்டென சொல்லிவிட்டு சங்கீதாவிடம் விடைப்பெற்று அகன்றான் ஷ்யாம்.
என் வீட்டின் அளவுக்கு இருந்தது எங்கள் அறை. அங்கே பதிக்கப்பட்டிருந்த ஸீ த்ரூ கண்ணாடிகள் சிங்கப்பூரின் அழகை கண்களுக்கு விருந்தாக்கிக் கொண்டிருக்க இரண்டு படுக்கைகளும், சோபா செட்களும், குளிர்சாதன பெட்டியும் டிவியும் என எல்லாவற்றிலும் நேர்த்தியும், அழகும் போட்டிப் போட்டன.
மடமடவென குளித்து தயாரானேன். இளம் நீல நிற காட்டன் சேலையை தோளில் ஒற்றையாய் வழிய விட்டுக்கொண்டேன். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பல முறை கண்ணாடியில் சரி பார்த்துக்கொண்டேன். சங்கீதா கூட என்னை ஒரு மாதிரியாகத்தான் பார்த்தாள்.
‘என்ன செய்ய? என் கவலை அவளுக்கு எங்கே தெரியப்போகிறது?”
முக்கால் மணி நேரம் கடந்த நிலையில் அந்த மிகப்பெரிய உணவு விடுதியில் நானும் ஷ்யாமும் அருகருகே அமர்ந்திருந்தோம். அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல உணவுகளில் ஒன்றிரண்டு மட்டும் என் தட்டுக்கு இடம் மாறியிருக்க
“பார்த்து பார்த்து நடக்கறே. யோசிச்சு யோசிச்சு சாப்பிடறே. முன்னே இப்படியெல்லாம் இல்லையே நீ. என்னாச்சு உனக்கு?” என்றான் ஷ்யாம் என்னை யோசனையுடன் பார்த்துக்கொண்டே.
“உடம்பு சரியில்லைன்னு சொன்னேன்ல” முடித்துக்கொண்டேன் சட்டென.
பின்னர் சில நிமிடங்கள் ஏதோ யோசனையில் விழுந்தவன் மெல்ல நிமிர்ந்து என் முகம் பார்த்தான்
“காலையிலே ஃப்ளைட்லே வரும்போது எனக்கு ஒரு கனவு பாப்பா” என்றான் மெதுவாக.
அதனால்தான் திடுக்கிட்டு விழித்துக்கொண்டானா? இப்போது புரிந்தது எனக்கு.
“ரொம்ப அழகா ஒரு குழந்தை பாப்பா. உன் கையிலே இருந்தான் அவன். பார்க்க உன்னை மாதிரியே தான் இருந்தான். என்கிட்டே தாவி வந்தான். அப்போ நீ அவனை டக்குனு என்கிட்டேயிருந்து பிடுங்கிட்டு அப்படியே எங்கேயோ போயிட்டே. எனக்கு, என்னமோ அப்படியே பெருசா எதையோ இழந்துட்ட உணர்வு. டக்குனு விழிச்சுட்டேன். அதிலிருந்து மனசே சரியில்லை.”
அவன் சொல்லிக்கொண்டே போக எனது இதய துடிப்பின் வேகம் மணிக்கு முந்நூறு கிலோமீட்டர்.
“உனக்கு அப்படி யாரும் குழந்தை தெரியுமா பாப்பா?”
‘குழந்தையை தெரியுமாவா?’ என்ன கேள்வி இது? இதற்கு என்ன பதில் சொல்ல? அவனிடம் நான் என்ன பதில் சொல்ல?”
தொடரும்
error: Content is protected !!