Skip to content
Post Views: 7,693
நிறம் பாராத காதல்
_________________________
அத்தியாயம்.. 2
ரணதீரன் கோவத்தில் தன் எதிரே இருந்த பெண்ணை அடித்த வேகத்தில் மயங்கி கீழே விழுந்த பெண்ணவளை பார்த்து மாயாவும் மாறனும் பீதி அடைந்தார்கள்.
“டேய் தம்பி என்ன காரியம் பண்ணிட்ட? மாமா.. இந்த பொண்ணை துரத்திகிட்டு வந்த ஆளுங்க வராங்க மாமா. இவளுக்கு ஒன்னு போய் ஒன்னு ஆனா நம்ப தான் பதில் சொல்லணும்.முதல்ல இந்த பொண்ண நம்ம காருக்குள்ள படுக்க வையுங்க. நம்ம ஹாஸ்பிடலுக்கு இவளை அழைச்சிட்டு போகலாம்.” என்று மாயா சொன்னதும், மாறன் சற்றும் தாமதிக்காமல் மயக்கத்தில் இருந்த பெண்ணை காரில் படுக்க வைத்தான்.
Advertisement
“அக்கா..என்ன பண்றீங்க?யாரோ ஒரு மாப்பிள்ளையை நட்டாத்துல விட்டுட்டு ஓடி வந்த இந்த பொண்ண நடுரோட்டிலேயே விட்டுட்டு வாங்க.” என்று ரணதீரன் கோபமாக சொன்னதும், ” வாயை மூடு.நீ போய் கார்ல உட்காரு.”என்று மாயா முதல் முறை ரணதீரனிடம் கோவமாக பேசியதும் மயங்கி இருந்த பெண்ணை முறைத்துக் கொண்டே அவனும் காரில் ஏறி அமர்ந்ததும், மாறனும் மயக்கத்தில் இருந்த பெண்ணை தன் காரில் ஏற்றிக் கொண்டு மாயாவையும் அழைத்துக் கொண்டு இவர்களின் மருத்துவமனையை நோக்கி காரை வேகமாக விரட்டினான்.
மயங்கிய பெண்ணை பின் இருக்கையில் தன் தோளில் படுக்க வைத்துக்கொண்ட மாயாவோ பயத்தில் அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளிக்க அவள் கண் இமைகள் கூட அசையாமல் போனதை பார்த்து,”மாமா..இந்த பொண்ணுக்கு பேச்சு மூச்சே இல்ல மாமா.”என்று பயத்துடன் சொல்ல.
முன் இருக்கையில் அமர்ந்து இருந்த ரணதீரனுக்கு கோவம் இன்னும் அடங்கிய பாடு இல்லை.
“மயக்கமா தான் மாயா இருக்கும். நீ வேற மனுஷனை பயம் காட்டாத.” என்ற மாறன் தன் அருகே அமர்ந்து இருந்த ரணதீரனை முறைக்க,”என்ன முறைப்பு காரை ரோட்டை போட்டு உருட்டுங்க.”என்ற ரணதீரனை பார்த்து மாறன் என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று நேரத்தில் நெல்சன் மருத்துவமனையில் சென்று காரை நிறுத்தினான்.
Advertisement
“மாயா.நீ உன் தம்பியை அழைச்சிட்டு போய் அத்தைக்கு எப்படி இருக்குன்னு பாரு. நான் இந்த பொண்ணை பார்த்துக்குறேன்.” என்ற மாறன் மயக்கத்தில் இருந்த பெண்ணை அவசர சிகிச்சை பிரிவுக்கு தூக்கி சென்றான்.
Advertisement
ரணதீரனும் மாயாவும் தங்கள் அன்னைக்கு என்ன ஆனது என்ற அச்சத்தில் வேதநாயகியை தேடி செல்ல.
“அம்மா..” என்று ஓடி வந்து ஏழு வயது பெண் குழந்தை மயிழினி மாயாவை கட்டிக்கொண்டு அழுதது.
“மாயா.. சம்மந்திக்கு திடிர்னு நெஞ்சு வலி வந்துடுது மா. நானும் வேலுவும் தான் ஹாஸ்பிடல்ல சேர்த்தோம்” என்று மாறனின் அம்மா கீதா சொன்னதும்.
“டாக்டர் என்ன சொன்னாரு?” என்று கேட்ட ரணதீரனை பார்த்து. “நீ.. நீங்க வந்ததும் உங்கள வந்து பார்க்க சொன்னாரு.” என்ற கீதாவுக்கும் ரணதீரனை பார்த்தால் உள்ளுக்குள்ள பயம் இருக்க தான் செய்தது.
அனைவரையும் தன் கோவத்தால் கடித்து துப்பும் ரணதீரன் அடங்கிப்போவது அவனின் அக்கா மகள் மயிழினியிடம் தான். “மாமா.. அம்மம்மாக்கு என்னாச்சு? ஏன் அவங்கள நான் போய் பார்க்கக்கூடாதுனு அப்பத்தா சொல்லுறாங்க, எனக்கு அவங்கள பார்க்கணும்.”என்று குழந்தை மயிழினி அழுததும் மாயாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.
Advertisement
“அம்மம்மாக்கு ஒன்னும் ஆகாது.நீ வா நம்ம போய் டாக்டர்கிட்ட பேசிட்டு வரலாம்” என்ற ரணதீரன் குழந்தை மயிழினியை தூக்கிக்கொண்டு மருத்துவரை பார்க்க மாயாவுடன் சென்று இருக்க, இதே சமயம் மாயனோ மயங்கி இருந்த பெண்ணை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தவன், “இந்த பொண்ணு யாரு என்னன்னு தெரியல.மயக்கம் தெளிஞ்சதும் எனக்கு தகவல் சொல்லுங்க.” என்றவன் தன் அத்தை வேதநாயகியை சேர்த்து இருக்கும் சிகிச்சை அறை இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான்.
தன் மகனை பார்த்த கீதா அவன் அருகே ஓடி வந்து.”என்னடா மாறா, கல்யாணம் நின்னு போச்சா? இந்த பொண்ணும் ஓடி போயிட்டாளா?” என்று ஆர்வமாக கேட்டதும் “அம்மா.. கத்தி பேசாத.ராணா காதுல விழுந்தா சங்கட பட போறான்.”என்ற மாறனோ எப்போதும் ரணதீரன் மீது மச்சான் என்ற உறவை தாண்டி அவனை தம்பியாக தான் நினைத்து இருந்தான்.
“டாக்டர்.. அம்மாவுக்கு என்னாச்சு?” என்று மாயா கலகத்துடன் கேக்க “செகண்ட் அட்டாக் மேடம். நாங்க டிரீட்மென்ட் கொடுத்து இருக்கோம். பிபியும் அதிகமா இருக்கு” என்று மருத்துவர் சொன்னதும் மாயா தலையில் இடி இறங்கியதை போல உணர்ந்தவள் அவள் அருகே அமர்ந்து இருந்த தன் தம்பியின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.
“அக்கா அழாதிங்க.
அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது.” என்ற ரணதீரனின் கண்களும்
கலங்கி தான் இருந்தது.
“மேடம்.. அவங்க எதிர்ல இப்படி அழாதீங்க. அவங்களுக்கு நீங்க தான் ஆறுதல் சொல்லணும்.கூடியவரை அவங்கள சந்தோசமா வச்சிக்கோங்க.மன அமைதி தான் அவங்களுக்கு சரியான மருந்து.மறுபடியும் இப்படி வலி வந்தா சாரி மேடம் அம்மாவை காப்பாத்துறது ரொம்ப கஷ்டமா போகிடும்.”என்று மருத்துவர் சொன்னதும் மாயா மேலும் கண்கள் கலங்க.
ரணதீரன் தன் அக்காவிற்க்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் தவித்து போனான்.
“மேடம்.. இப்போ நீங்க இப்போ போய் அம்மாவை பாருங்க. ஆனா அவங்க எதிர்ல இப்படி அழாதீங்க. அவங்க என்ன பேசினாலும் அவங்க மனசு சந்தோஷப்படுற மாதிரி ஆறுதலா பேசுங்க.” என்று மருத்துவர் சொன்னதை மாறனும் வாசலில் நின்றப்படி கேட்டுக் கொண்டு இருக்க, ரணதீரன் தன் அக்காவை அழைத்துக்கொண்டு வேதநாயகியை பார்க்க சிகிச்சை அறைக்குள் நுழைந்தான்.
இதே சமயம் “சார்.. நீங்க அழைச்சிட்டு வந்த பொண்ணு கண் விழிச்சிட்டாங்க. உங்கள பார்க்கணும்னு சொல்லுறாங்க.”
என்று செவிலியர் மாறனை அழைக்க.மாறனும் காரில் மோதி ரணதீரன் அடித்து மயக்கமடைந்த பெண்ணை பார்க்க சிகிச்சை அறைக்கு செல்ல,அங்கே தலையில் கட்டுடன் அமர்ந்து இருந்த பெண்ணின் முகத்தில் பயம் குடிக்கொண்டு இருந்தது.
“பாப்பா.. எங்களை மன்னிச்சிடு. என் மச்சான் யார் மேலேயோ இருந்த கோபத்தை உன்கிட்ட காட்டிட்டான். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். ஆமா நீ யாரு மா? உன் வீட்டுக்கு தகவல் சொல்லட்டுமா?இல்ல நானே அழைத்துக்கொண்டு போய் உன் வீட்ல விடட்டுமா? உன் முகவரி என்ன?” என்று மாறன் கேட்க,
“சார்..உங்களை கெஞ்சி கேட்கிறேன். என்னை இந்த நாட்டில் இருந்து எப்படியாவது கனடாவுக்கு அனுப்பி வச்சிடுங்க.உங்களுக்கு புண்ணியமா போகட்டும்.எனக்கு இந்த ஊர்ல யாரையும் தெரியாது. ப்ளீஸ் சார் என்ன இங்கிருந்து ஊருக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணுங்களேன். உங்கள கெஞ்சி கேட்கிறேன்.” என்று பயந்து நடுங்கிய நிலையில் அந்த பெண் மாறனிடம் உதவி கேட்காள்.
“என்னமா சொல்ற!?இந்த ஊர்ல உனக்கு யாரையும் தெரியாதா? அப்புறம் நீ எப்படி இந்த ஊருக்கு வந்த? ஆமா நான் உன்னை இங்க முன்ன பின்ன பார்த்ததே இல்லையே! உனக்கு என்னதான் பிரச்சனை? எதுவா இருந்தாலும் உன் கூட பொறந்த அண்ணனா நெனச்சு என்கிட்ட சொல்லு. என்னால முடிஞ்ச உதவியை நான் உனக்கு கண்டிப்பா செய்யறேன்.”என்று மாறன் அந்த பெண்ணுக்கு ஆறுதலாக பேசினான்.
“சார்..என் பெயர் வைதேகி.
நான் கனடாவில் தான் பிறந்து வளர்ந்தேன். நான் ஒரு டாக்டர்.”என்று வைதேகி சொன்னதும் மாறனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“என்னமா சொல்ற!?டாக்டர்க்கு படிச்ச பொண்ணு கல்யாணம் வேணாம்னு நாலு பேருக்கு பயந்து வீட்டை விட்டு ஓடி வந்தியா!? ஆச்சரியமா இருக்கே.” என்று மாறன் கேக்க,”சார்..என் கதையை முழுசா கேளுங்க.”என்று கிட்டத்தட்ட பத்து நிமிடம் வைதேகி தன் கதையை சொல்லி முடிக்க.
“ஓ…பக்கத்து ஊர் ரங்காராவ் குடும்பத்தை சேர்ந்த பொண்ணா நீ.. அவன் கொலைகார பாவியாச்சே.” என்ற மாறனுக்கு ஒரு அளவுக்கு வைதேகிக்கு இருக்கும் பிரச்சனை தெரிந்து தான் இருந்தது.
“சார்.. உங்கள தயவுசெய்து கேட்கிறேன். நீங்க சொன்ன மாதிரியே என்னை உங்க கூட பொறந்த தங்கச்சியா நினைச்சு எப்படியாவது என்னை கனடாவுக்கு அனுப்பி வச்சிடுங்க. காலத்துக்கும் உங்களுக்கு நான் நன்றியோடு இருப்பேன்.” என்று வைதேகி சூழ்நிலை கைதியாக யாரை நம்புவது என்று தெரியாமல் வேறு நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த பெண் அவளுக்கு கண்ணுக்குத் தெரிந்த ஒரே தெய்வமாக மாறன் மட்டுமே தெரிந்தான்.
“ம்…சரி சரி மா,இப்ப நீ என்ன கன்னடாக்கு போனும் அவ்வளவுதானே? நான் ஏற்பாடு பண்றேன். நீ கவலைப்படாத. என் மாமியாருக்கு உடம்பு சரியில்ல. பக்கத்து வார்டுல தான் அவங்க இருக்காங்க. நான் போய் அவங்கள என்ன ஏதுன்னு பாத்துட்டு வந்துடறேன். அப்புறமா நம்ப மீதி கதையை பேசிக்கலாம். நீ இங்கேயே இரு.” என்ற மாறனும் தன் அத்தை வேதநாயகியை பார்ப்பதற்காக அவரை அனுமதித்திருந்த சிகிச்சை அறைக்கு சென்றான்.
சிகிச்சை அறையில் இருந்த தன் அம்மாவை பார்க்க சென்ற ரணதீரனை பட்டு வேஷட்டி பட்டு சட்டையில் தன் கணவனின் சாயலில் எண்ணி பார்த்த வேதநாயகி இந்த முறையும் அவன் திருமணம் தடைப்பட்டத்தை எண்ணி வெம்பி அழ தொடங்கினார்.
“அம்மா.. இப்போ என்ன நடந்து போச்சுன்னு இப்படி அழறீங்க?” என்று கோவம் கொண்டவனாக ரணதீரன் தன் அன்னையின் அருகே சென்றவனை கட்டி அணைத்து சத்தம் போட்டு வேதநாயகி அழுததும், “அம்மா அழாதீங்க. டாக்டர் உங்கள சந்தோசமா வச்சிக்க சொல்லுறாரு. ஆனா நீங்க என்னடானா இப்படி அழறீங்க. தயவு செய்து அழாதீங்க.” என்று மாயா ஆறுதலாக தன் அம்மாவின் கரங்களை பற்றிக்கொண்டாள்.
“சந்தோஷமா!? இனி அது நான் சாகும் வரை எனக்கு கிடைக்காது. என் மகனுக்கு இந்த முறையாவது கல்யாணம் நடந்துடும்னு நான் ரொம்ப எதிர்பார்த்து ஆசையா இருந்தேன். ஆனா அந்த கடவுளுக்கு என் மேல கருணையே இல்ல. திருமண வயது அடைந்தும் என் மகனுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க முடியாத நிலையில் இருக்கிற நானெல்லாம் எதற்காக உயிரோடு இருக்கணும்.” என்று அதீத ஆதங்கத்தில் வேதநாயகி அழுது புலம்ப,
பொறுமையை இழந்த ரணதீரன், “போதும் நிறுத்துங்க, இனி என் கல்யாண பேச்சை பற்றி யாரும் பேசாதீங்க. எனக்கு கல்யாணமே வேண்டாம்.” என்று கத்தியதும், “என்ன கல்யாணம் வேண்டாமா?இங்க பாரு ராணா..நான் கண்ண மூடுறதுக்குள்ள உனக்கொரு கல்யாணத்தை பண்ணி வச்சு உன் குழந்தையை ஆசை தீர என் மடியில போட்டு கொஞ்சாம நான் செத்துப் போயிட்டா என் ஆத்மா கூட சாந்தி அடையாது.” என்று வேதநாயகி அழுது புலம்பினார்.
“அம்மா.. கண்டிப்பா தம்பிக்கு கல்யாணம் நடக்கும். நீங்க முதல்ல அமைதியா இருங்க. இப்படி அழுது புலம்புனா மறுபடியும் உங்களுக்கு நெஞ்சு வலி தான் வரும் ” என்று மாயா கவலையுடன் சொல்ல,
“இங்க பாரு ராணா..நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ,நீ மறுபடியும் பழைய மாதிரி கல்யாணம் காட்சி வேணான்னு சொன்னினா.நான் தண்ணி ஆகாரம் இல்லாமல் இதே ஹாஸ்பிடல்ல படுத்த படுக்கையா இருப்பேன். நம்ப எஸ்டேட்டுக்கு வரவே மாட்டேன்.ஆனா! உனக்கான பொண்ண நான் எங்கன்னு போய் தேடுவேன். நமக்கு பணம்,காசு,அந்தஸ்து எதுக்குமே குறை இல்லையே. யாருக்கும் நான் எந்த கெடுதலும் மனசார நினைச்சது கூட இல்லையே.எதுக்காக என் பையனுக்கு இப்படி ஒரு நிலைமை.”என்று மனம் நொந்து போன வேதநாயகியின் கை கால்கள் எல்லாம் நடுக்கம் எடுத்தது.
“ஐயோ அம்மா.. ஏன் இப்படி என் உசுரை வாங்குறிங்க. எப்போ பாரு என் கல்யாண பேச்சை பேசி பேசி நீங்க வருத்தப்படுறது மட்டும் இல்லாமல் ஏன் என் நிம்மதியையும் குழைக்கிறிங்க. இப்போ சொல்லுறேன் நல்லா கேட்டுக்கொங்க. இனி என் வாழ்க்கையில கல்யாணம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்ற ரணதீரன் அருகே இருந்த மேசையை தன் கரங்களால் வேகமாக குத்தியதும் வேதநாயகி மேலும் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.
“டேய் தம்பி..ஏன் டா இப்படியெல்லாம் பேசுற. கொஞ்சம் பொறுமையா இரு.” என்று மாயா தன் தம்பியை சமாதானம் செய்ய.
“யாரும் எதுவும் பேசாதீங்க. எனக்கு இனி கல்யாணம் வேண்டாம்?”என்று மீண்டும் ரணதீரன் அதே வார்த்தையை அழுத்தமாக சொன்னதும் வேதநாயகியின் ரத்த அளவு எக்குத்தப்பாக எகிறிய நிலையில்,”நீ கல்யாணம் பண்ணிக்கலைனா நான் இங்கேயே செத்து….”என்று வேதநாயகி அவர் வார்த்தையை முடிக்கும் காட்டிலும்.
“அத்த..என்ன நீங்க?இந்த பொண்ணு இல்லன்னா என்ன!?நம்ம மச்சானுக்கு என் சொந்தத்தில் நான் ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பேசி முடிக்கிறேன்.நீங்க கவலைப்படாதீங்க. அடுத்த முகூர்த்தத்திலேயே மச்சானுக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கும்.” என்று சூழ்நிலையை சரி செய்யும் விதமாக மாறன் சிரித்த முகத்துடன் சொல்ல,
“என்ன மாப்புள்ள சொல்லறீங்க? யாரு பொண்ணு?” என்று உள்ளம் மகிழ்ந்து வேதநாயகி கேட்க,மாறனின் வார்த்தையை கேட்டு மாயாவும் ரணதீரனும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க,
“மாறா..என்னப்பா சொல்ற? நம்ப சொந்தத்துல பொண்ணா!?” என்று மாறானின் அம்மா கீதா கேட்டதும். கண்களால் ஜாடை காட்டிய மாறன்,
“ஆமா அம்மா… சாந்தி சித்தியோட பொண்ண தான் என் மச்சானுக்கு கல்யாணம் பேசி முடிக்கலாம்னு அத்தை கிட்ட சம்மதம் கேட்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள அத்தைக்கு இந்த மாதிரி ஆகிடுச்சு.” என்று மாறன் சொன்னதும்.
“ஆனா சாந்திக்கு பொண்ணு இல்லையே! ஒரு பையன் தானே!”என்று கீதா மனதிற்குள் நினைத்திருக்க,
“என்ன மாமா சொல்றீங்க?உங்க பக்கத்துல இருந்து பொண்ணா!?ஆனா என்கிட்ட நீங்க இதப்பத்தி எதையும் சொல்லவே இல்லையே.” என்று மாயா புரியாமல் கேட்டாள்.
“நான் முதல்ல அத்தை கிட்ட விவரத்தை சொல்லலாம்னு நினைக்கிறதுக்குள்ள அத்தை சென்னையில அவங்க பார்ட்னர் உடைய பொண்ண சம்மந்தம் பேசிட்டாங்க மாயா. அதனால தான் நான் இந்த சம்மந்தத்தை பற்றி அத்த கிட்ட பேசல.ஆனா இன்னைக்கு காலையில மச்சான் கல்யாணம் நின்னதுமே,என் சித்தி பொண்ண பத்தி அத்தை கிட்ட பேசி சம்மதம் வாங்கலாம்னு நெனச்சேன்.
ஆனா அதுக்குள்ள அத்தைக்கு இப்படி ஆகிடுது. அத்த நீங்க ஆரோக்கியத்தோட வீடு திரும்பியதும். நானே உங்க எதிர்ல என் மச்சானை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண அழைச்சிட்டு வந்து நிறுத்துறேன்.” என்று மாறன் நம்பிக்கையுடன் சொன்னதும், வேதநாயகி முகம் மலர்ந்து, நெஞ்சம் மகிழ்ந்து தன் மகனை சந்தோஷத்துடன் கட்டி அணைத்துக் கொண்டார்.
மாறன் சொன்னது பொய் என்று அவன் அன்னை கீதா மட்டுமே அறிந்து இருக்க. ரணதீரனும் மாயாவும் தன் அம்மா இந்த நொடி மகிழ்ச்சி அடைந்ததில் எதைபற்றியும் ஆராயாமல் வேதநாயகிக்கு ஆறுதலாக அவர்கள் அருகிலேயே இருந்து கண்ணும் கருத்துமாக கவனத்துக் கொண்டார்கள்.
“மாப்புள்ள… நாளைக்கே நம்ம பொண்ணு வீட்டுக்கு போகலாமா?” என்று வேதநாயகி கேட்டதும். “இல்ல அத்த… நாளைக்கு நானே பொண்ணை நம்ம எஸ்டேட்க்கு அழைச்சிட்டு வரேன்.” என்ற மாறனை கேள்வியாக பார்த்த மாயாவுக்கும் புரியவில்லை தன் கணவன் என்ன செய்ய போகிறான் என்று.
“யார் என்ன சொன்னால் எனக்கு என்ன. இனி என் வாழ்வில் கல்யாணமே இல்லை.”என்று எண்ணிய ரணதீரனோ குழந்தை மயிழினியை மடியில் ஏந்திக்கொண்டு அவளுடன் நிம்மதியாக இருக்கையில் சாய்ந்து உறங்கிக்கொண்டு இருந்தான்.
மறுநாள் காலை பொழுது அழகாக விடிந்தது. மருத்துவரின் அறிவுரைப்படி மாயாவும் ரணதீரனும் வேதநாயகியை அவர்கள் எஸ்டேட்டுக்கு அழைத்து சென்றார்கள்.
காலை பத்து மணியை கடந்தும் வேதநாயகி காலை உணவை சாப்பிடாமல் மருந்தை உட்கொள்ளமால் தன் வீட்டு மருமகள் வரப்போகும் தருணத்தை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்து இருந்தார்.
“அம்மா.. நான் கம்பெனிக்கு கிளம்புறேன். நீங்க சாப்பிட்டு மாத்திரை போடுங்க.” என்ற ரணதீரன் அவனுக்கு பிடித்த கருப்பு சட்டை கருப்பு பேண்ட்டை அணிந்துக் கொண்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான்.
“என்ன ராணா நீ. உன் மாமா நம்ம வீட்டுக்கு உன்னை கட்டிக்க போற பொண்ணை அழைச்சிட்டு வர நேரத்துல நீ வீட்டுல இல்லைனா நல்லவா இருக்கும்.” என்ற வேதநாயகியை பார்த்து ரணதீரன் முறைக்க. “ஆமா டா தம்பி.மாமா அவரோட சொந்தகார பொண்ணை அழைச்சிட்டு வர தான் காலையிலேயே கிளம்பி வெளிய போய் இருக்காரு.” என்று மாயா சொல்ல, ரணதீரன் அவளையும் முறைத்து பார்த்தான்.
நொடிகள் நிமிடங்களாக சுழண்றது.
“என்னாச்சு? அந்த பொண்ணுக்கும் என் மகனை பிடிக்கலையா? ” என்ற கேள்வி வேதநாயகியின் நிம்மதியை குழைக்க செய்த நிலையில், “அம்மம்மா அம்மம்மா.. அப்பா கார் வருது. அத்த வராங்க அத்த வராங்க..”என்று சிறுமி மயிழினி மழலை குரலில் கத்திக்கொண்டே வாசலுக்கு ஓட.
மஞ்சள் நிற சேலையில். பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையை போல இவர்கள் முன் தோன்றிய பெண்ணவள், அஞ்சனம் பூசிய விழிகள் இரவின் அடர்ந்த இருளில் மின்னும் நட்சத்திரங்களைப் போல் பிரகாசித்தாள்.
சிறு ஒப்பனை கூட இல்லாமல் ஒப்பிட முடியாத அழகுடன் அவள் நிற்க, கார்மேகக் கூந்தல் நீர்சாரல் போல உருண்டோடி அவளது தோள்களில் பரவியிருக்க,
“இவளா!?” என்று அந்த பெண்ணை பார்த்த ரணதீரனின் கேள்விக்கு
பதில் என்னவோ!?
மீண்டும் சந்திப்போம் 
error: Content is protected !!