Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் ரட்சகா

காதல் ரட்சகா 5

விக்னேஷ் எடுத்துக் கொள்ளும் உரிமை மாயாவுக்கு பிடிக்கவில்லை.

அவனை முறைத்துக்கொண்டே இருந்தாள்.



Advertisement

அவனே தன் அண்ணிக்கும் மாயாவுக்கும் உணவை பரிமாறிக் கொண்டு வந்து கொடுத்தான். ஆனால் அவர்கள் இருவரும் கூட சாப்பிடவில்லை.

மாயாவுக்கு தன் அக்காவின் மீது கொலை வெறி. அக்காவின் மாமியார் மீது அதைவிட பயங்கரமான வெறி.

Advertisement

Advertisement

ஆனால் தந்தை இல்லாமல் போய்விட்ட அடுத்த நாளே பிரச்சனையை வளர்த்து நம் குடும்பத்தின் நிம்மதியை நாமே குலைக்க கூடாது என்று தன் வாயை மூடிக்கொண்டு இருந்தாள் மாயா.

ரதிக்கு பயங்கர குற்ற உணர்வு. கணவனுக்காக உயிரையே விடுவதற்கு துணிந்தவள்.‌ ஆனால் இப்போது கல்யாணத்தின் மீதும் கசப்பு வந்துவிட்டது.‌

Advertisement

மகன்கள் இருவரும் வீட்டிற்கு வராததால் கனகவதிக்கு கோபம் வந்துவிட்டது.

சின்ன மகனுக்கு போன் செய்தாள்‌. அவன் அந்த போனை எடுக்கவே இல்லை. மூன்று முறை கூப்பிட்டு பார்த்துவிட்டு பெரிய மகனுக்கு போன் செய்தாள்.

அவன் போனை எடுத்து விட்டான். “ஹலோ.” என்றவனின் குரலில் எந்த உணர்வுகளும் இல்லை. அவனிடம் உயிரோட்டமே இல்லை.

“எங்கே இருக்க?” என்று கனகவதி கேட்க, “என் பாதர் இன் லா இறந்துட்டாரு..” என்றான்.

“அது எனக்கு தெரியும். நீ எதுக்கு அங்கே இருக்க? ப்யூனெரல் முடிஞ்சிருக்குமே. இன்னமும் உனக்கு அங்கே என்ன வேலை?” என்று கேட்டாள்.

“இறந்த பாடியை கொண்டு போய் எரிச்சிட்டா எல்லா வேலையும் முடிஞ்சிடுமா? ஏன்ம்மா மனுஷ தன்மையே இல்லாம இருக்கீங்க?” எனக் கேட்டான்.

அவளுக்கு உடனே கோபம் வந்துவிட்டது. “கிளையன்ஸ்கிட்ட நாலு வார்த்தை பேச தெரியாது. ஆனா என்கிட்ட மட்டும் வக்கனையா பேசுவியா? இந்த புது தைரியத்தை உனக்கு யார் கொடுத்தது? உன் மாமியாரா?” என்று கேட்டாள்.

அமலா சந்தேகித்தது போலவே இவள் தேவையற்ற வார்த்தைகளை விடுவதற்கு தயாராக இருந்தாள். அதனாலேயே தருண் மீதியை பேசாமல் போனை வைத்து விட்டான்.

மகன் பாதியிலேயே போனை வைத்தது இதுவே முதல்முறை. அம்மாவின் மீது இருந்த பாசம் போய்விட்டது என்று கனகவதிக்கு கோபம் உச்சத்திற்கு சென்றது.

அமர்ந்திருந்த சோபாவில் இருந்து எழுந்தாள். கையில் இருந்த செல்போனை தூக்கிப்போட்டு உடைத்தாள்.

“நான் கஷ்டப்பட்டு பையனை பெத்து எடுப்பேன். இன்னைக்கு வந்த எவளோ ஒருத்தி என் பையனை உரிமை கொண்டாடுவாளா? அதுவும் ஒரு பிச்சைக்கார கழுதை..” என்று திட்டினாள்.

வேலைக்காரர்கள் ஆளுக்கு ஒரு மூலையாக ஒதுங்கி நின்று இருந்தார்கள். சாதாரண நாட்களிலேயே கனகவதி வானுக்கும் பூமிக்கும்தான் குதிப்பாள்‌.

இன்று பையன் விட்டு போய்விட்டானே என்று வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்தாள். அவளைப் பார்க்கவே அங்கிருந்த அனைவருக்கும் பயமாக இருந்தது.

அவள் அந்த ஹாலில் இருந்த நிறைய பொருள்களை உடைத்து முடித்த நேரத்தில் வீட்டுக்குள் வந்தது ஒரு உருவம்.

அத்தனை பேரும் நிமிர்ந்து பார்த்தார்கள். தர்மேந்திரன் சிவந்த விழிகளோடு நின்று கொண்டிருந்தார்.

வேலைக்காரர்கள் அங்கிருக்க பயந்து தங்களுக்கான அறைக்குள் நுழைந்தார்கள்.

மனைவியை புருவம் சுருக்கி பார்த்த தர்மேந்திரன் ‌”என்ன பண்ணி வச்சிருக்க?” என்று கர்ஜனையாக கேட்டபடி உள்ளே வந்தார்.

“இந்த வீட்ல ஒரு பொருளை உடைக்க கூட எனக்கு உரிமை கிடையாதா?” என்று அவள் கோபத்தோடு கேட்டபடி சுவரில் இருந்த ஒரு புகைப்படத்தை கழட்டி அவரின் காலடியில் போட்டு உடைத்தாள்.

அது அவரின் தந்தையின் புகைப்படம். உடனே வந்ததே இவருக்கு கோபம். சப்பென்று அறைந்து விட்டார்.

ஐவிரல் தடம் பதிய, அறை விழுந்த இடம் அடிவானம் போல் சிவந்து போக, விழிகளில் தேங்கி விட்ட கண்ணீரோடு கணவனை பார்த்தாள் கனகவதி.

“உன்னால ஒரு மனுஷன் செத்துட்டாரு.. உனக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லையா?” என கேட்டார்.

“நான் அவன்கிட்ட கடனை திருப்பி கொடுக்க சொன்னேன். செத்துப் போக சொல்லல. அந்தக் கோழை நாய் செத்துப் போனா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்று கேட்டாள்.

அவள் சொன்னதில் முகம் சிவந்தவர் மறு கன்னத்திலும் ஒரு அடியை கொடுத்தார்.

“உன்னோட சுய ரூபமே இதுதானா? இத்தனை நாளும் உன்னை நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருந்தேனா? செத்துப் போயிட்ட மனுஷன் மேல கூட கொஞ்சம் கருணை காட்ட மாட்டேங்குற? ச்சீ..” என்றவர் தன் கையில் இருந்த பேக்கை சோபாவின் மீது தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து சென்றார்.

“இப்ப எங்க போறீங்க நீங்க?” என்று அவள் பின்னால் ஓடி வந்து கேட்க, திரும்பிப் பார்த்தவர் “உன் மூஞ்சில முழிச்சா சனியம் பிடிச்சுக்கும். அதனாலதான் துக்க வீட்டுக்கு போறேன்..” என்று சொல்லிவிட்டு வந்த காரிலேயே ஏறினார்.

“என் மூஞ்சில முழிச்சா சனியன் பிடிக்குமா? அந்த பிச்சைக்கார குடும்பத்துல போய் முழிங்க. அப்படியே லட்சுமி துணை வரும்..” என்று திட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

“வந்து இந்த ஹாலை சுத்தம் பண்ணுங்க..” என்று சொல்லிவிட்டு போனாள்.

தர்மேந்திரன் தன் சம்மந்தியின் வீட்டிற்கு வந்தபோது‌ அந்த வீடு அமைதியின் மறு உருவமாய் இருந்தது.

வாசலிலேயே ஷூவை கழட்டி விட்டு விட்டு திறந்திருந்த கதவின் வழியே நடந்தார்.

அந்த வீட்டில் இருந்த யாருமே தூங்கி இருக்கவில்லை. அப்பாவை கண்டதும் மகன்கள் இருவரும் எழுந்து நின்றார்கள்.

தர்மேந்திரன் நேராய் வந்தார். மாலை போட்ட புகைப்படத்தின் முன்னால் மண்டியிட்டு வணங்கினார்.

ரதியை பார்த்தார். எந்த விதத்தில் ஆறுதல் சொன்னாலும் அவளின் இழப்புக்கு அது ஈடாகாது.

கலங்கிய விழிகளோடு வந்து அமலாவின் முன்னால் அமர்ந்தார். அவளின் கால்களை பற்றினார். “எங்களை மன்னிச்சிடுங்க..” என்றார்.

அமலா முகத்தை திருப்பினாள். ஒருவர் வந்து காலில் விழுவதாலோ இல்லை மற்றொருவர் உயிரை கொடுப்பதாலோ கூட ஏற்கனவே சென்ற உயிர் திரும்பி வரப்போவதில்லை.

காயப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

“என் பொண்டாட்டி இப்படியெல்லாம் பேசி இருப்பான்னு எனக்கு தெரியாது..” என்றார்.

அமலா மருமகனையும் அவனின் தம்பியையும் பார்த்தாள். தந்தையின் சொல்லில் இரண்டு பேருமே உருகிப் போயிருந்தார்கள்.‌

இவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. வீட்டின் தலைவி வார கணக்கில் தன் மருமகளை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறாள். அனைவரின் முன்னாலும்தான் வார்த்தைகளை விட்டுக் கொண்டிருக்கிறாள்.‌ அப்போதெல்லாம் யாருக்கும் தெரியாது.

வலியும் வேதனையும் தாங்க முடியாமல் ஒருவன் வாழ்க்கையை வெறுத்து இறந்த பிறகு வந்து மன்னிப்பு கேட்பார்கள். தங்கள் மீது இருக்கும் தவறை யாரும் பெரிதுபடுத்தி விடக்கூடாது என்பதற்காக மற்றவர் மீது இருக்கும் தவறை மட்டும் முன்னிலைப்படுத்துவார்கள்.

எல்லோருமே அப்படித்தானோ என்று நினைத்த அமலா ‌”போதும் சார். போன உயிர் திரும்பி வராது. எங்களுக்கு துணையும் யாரும் கிடையாது. எங்கக்கிட்ட மன்னிப்பை வாங்கி அதனால உங்களுக்கு பிரயோஜனமும் கிடைக்கப்போவது இல்ல. போய் உங்க வேலையை பாருங்க. உங்க பசங்களையும் கூட்டிட்டு போய்டுங்க. சீக்கிரமே என் பொண்ணுக்கு விவாகரத்து கொடுத்துடுங்க..” என்று சொல்லி கையெடுத்து கும்பிட்டாள்.

அவள் சொன்னதில் தருண் அதிர்ந்து விட்டான். “ஏன் அத்தை..” என்று ஆரம்பித்தவனிடம் “என் அம்மா சொல்வது சரிதான். விவாகரத்து பண்ணிக்கலாம் தருண்..” என்றாள் ரதியும்.

மனைவியை அவன் அதிர்ச்சியோடு பார்க்க, “அவங்க துக்கத்துல இருக்காங்க. ரெண்டு நாள் போனா சரியா போயிடும். நீங்க வாங்க..” என்று சொல்லிவிட்டு தர்மேந்திரன் வாசலை நோக்கி நடந்தார்.

தருணும் விக்னேஷும் நின்றிருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

கதவை பிடித்தபடி திரும்பி பார்த்த தர்மேந்திரன் “நீங்க வரலையா?” என கேட்டார்.

“இதுவரைக்கும் உடைச்ச பர்னிச்சரே போதும். இனிமே இந்த வீட்டை விட்டு வர முடியாது. நீங்க போய் உங்க பொண்டாட்டிக்கு கால் பிடிச்சு விடுங்க..” என்றான் விக்னேஷ்.

கை விரல்களை இறுக்கியவர் “வாய் ரொம்ப நீளுது விக்னேஷ்..” என்றார்.

விக்னேஷ் துக்கமாக சிரித்தான். “நீங்க உங்க மனசுல நினைப்பதைதான் எங்க அம்மா வாயால பேசுவாங்க. நீங்க சொத்துக்காகதான் என் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க. இந்த வீட்டுல ரெண்டும் பொம்பள பிள்ளைங்க. பாதி சொத்து உங்க பையனுக்கு வந்துடும்ன்னு நம்புனீங்க. அது இப்ப இல்லாம போயிடுச்சுன்னு தெரிஞ்சதும் என் அண்ணியை மருமகளாக ஏத்துக்க உங்களுக்கு விருப்பமில்ல. அதுக்காகதான் உங்க மனைவி எல்லாத்தையும் பண்ணாங்க. ஆனா நாங்க உங்களை போல இல்லை..” என்றான்.

அவரின் முகம் மாறிவிட்டது.

தம்பி சொன்னதைக் கேட்ட பிறகுதான் தருணுக்கும் அந்த விஷயம் தெளிவாக புரிந்தது.

“பிச்சைக்கார குடும்பம்ன்னு சொல்லிதானே என் அண்ணியை ஒதுக்கி வைக்கிறீங்க? நான் இதே குடும்பத்திலிருந்து மாயாவை கல்யாணம் பண்ணிக்க போறேன். பணத்துக்கு ஆசைப்பட்டீங்க. அதனால நீங்க உங்க ரெண்டு பசங்களையும் இழந்துட்டீங்க. குட் பாய்..” என்றான்.

வெளுத்துப் போன முகத்தோடு பெரிய மகனை பார்த்தார் அவர். தம்பியின் பேச்சு சரிதான் என்பது போல் இருந்தான் அவன்.

சின்ன மகன் பேசியது என்னவோ உண்மைதான். ஆனால் அவசரப்பட்டு வாயை விட்டு மகன்களை இழக்கக் கூடாது என்பதால் “எல்லாத்தையும் தப்பா புரிஞ்சு வச்சிருக்கீங்க. சீக்கிரம் புத்தி தெளியும்..” என்று சொல்லிவிட்டு கிளம்பி போனார்.

கதவை தாழிட்டு விட்டு வந்தான் விக்னேஷ்.

மாயா அவனை சந்தேகப் பார்வை பார்த்தாள். அவளுக்கு இப்போதெல்லாம் யார் மீதுமே நம்பிக்கை இல்லை.

அண்ணனை நோக்கி நடந்து கொண்டிருந்தவன் மாயாவின் பார்வை தன்னிடம் இருப்பதை கண்டு அவளை திரும்பிப் பார்த்தான்.

“உன்னை கேட்காம பேசிட்டேன்னு உனக்கு கோபமா இருக்கலாம். ஆனா என்னால் செய்ய முடிஞ்ச பரிகாரம் இதுதான். உனக்கு நல்லா ஹஸ்பண்டா இருப்பேன். ஒன்னும் கட்டாயம் கிடையாது. யோசிச்சி பதில் சொல்லு..” என்று சொல்லிவிட்டு சென்று தனது அண்ணனின் அருகில் அமர்ந்தான்.

தம்பிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தருணுக்கு தெரியவில்லை.

மாமியார் விவாகரத்து செய்துவிட்டு செல்லுங்கள் என்று சொன்னதும் உள்ளுக்குள் செத்தே விட்டான். தம்பிதான் தக்க தருணத்தில் உதவி இருக்கிறான்.

விக்னேஷ் பேசியதில் அமலா கொஞ்சம் விழுந்து விட்டாள். ரோஷம் என்று பேசினாலும் கூட திடீரென்று ஆண் துணையை இழந்து விட்டு, இவ்வளவு பெரிதாக வளர்ந்த மகள்களோடு எப்படி வாழ்வது என்று அவளுக்கு பயமாகதான் இருந்தது.

அன்றைய இரவு நீளமாய் இருந்தது. விடியற்காலை நேரத்தில்தான் ரதியும் மாயாவும் கண்களை மூடி இருந்தார்கள்.

மகள்களை பார்க்கும்போது அமலாவுக்கு கண்ணீர் மட்டுமே பெருக்கெடுத்தது. எந்த இடத்திலும் தோற்காதவர் அவளின் கணவர். அவரையே விதி இந்த அளவுக்கு ஆட்டிப்படைத்து விட்டதே!

அவள் சத்தம் இல்லாமல் அழுத நேரத்தில் வெளியே கிளம்பினான் விக்னேஷ்.

திரும்பி வந்தபோது பிளாஸ்கில் தேனீரை வாங்கி வந்திருந்தான்.

கோப்பையில் தேநீரை நிரப்பி கொண்டு வந்து அமலாவிடம் நீட்டினான்.

வேண்டா வெறுப்பாக கோப்பையை வாங்கியவள் “நீங்க என்ன பண்ணாலும் நான் உங்க பேரன்ட்ஸை மன்னிக்க மாட்டேன்..” என்றாள்.

“நாங்களே அவங்களை மன்னிக்கப் போவதில்லை..” என்ற விக்னேஷ் காலை நேரம் உப்புமா செய்தான்.‌

அவனுக்கு தெரிந்த ஒரே சமையல் அதுதான்.‌ அதுவும் கல்லூரி படிக்கும்போது ஹாஸ்டல் நண்பர்களோடு சில நாட்கள் பழகிய காரணத்தால் கற்றுக் கொண்டது.

ஒன்பது மணி. ரதி வீங்கி சிவந்த கண்களோடு வீட்டின் வாசலுக்கு வந்தாள். அந்த நேரத்தில் வாசலில் கார் ஒன்று வந்து நின்றது.

மாமியார் வந்திருக்கிறாரோ என்று இவள் பயத்தோடு பார்க்க, காரில் இருந்து கைலாஷ் இறங்கினார்.

பூ பழம் தட்டை எடுத்துக்கொண்டு கைலாஷின் மனைவி அந்த பக்கத்தில் இருந்து இறங்கினாள். கைலாஷின் ஒரே மகன் சரவணன் சட்டை காலரை சரி செய்தபடி கும்மென்ற வாசனையோடு பெற்றோரை பின்தொடர்ந்து வெளியே வந்தான்.

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!