Skip to content
Post Views: 2,536
நல்ல வேளையாக அவன் அந்தப்பக்கம் திரும்பவில்லை. என் உடலில் இருந்த நடுக்கத்தை உணர்ந்திருக்க வேண்டும் அவன்.
“என்னாச்சு பாப்பா?” அவன் கேட்க
“ஒண்ணுமில்லை ஷ்யாம். திடீர்னு ஏதோ குளிருற மாதிரி அதான் கையை பிடிச்சுக்கிட்டேன். ஒரு நிமிஷம் அப்படியே இருந்துக்கறேன் ஷ்யாம். எனக்கு உங்க மேலே லவ் எல்லாம் இல்லை ஷ்யாம். சும்மாதான் ஷ்யாம். ரெண்டு நிமிஷம் உங்க கை பிடிச்சுக்கறேன் ஷ்யாம்” படபடத்தேன் நான்.
இரண்டு நிமிடங்கள் கழித்து சுதாரித்து நான் நிமிர்ந்த போது அவன் கண்களில் நீர் சேர்ந்திருப்பதைப் போல் தோன்றியது என் பிரமையா என்று தெரியவில்லை.
Advertisement
அடுத்து சாப்பிட்டு முடித்துவிட்டு, கொஞ்ச தூரம் நடந்து கடலுக்கு நடுவே போடப்பட்டிருந்த பாதையை அடைந்தோம். எங்கிருந்தோ மெலிதாக தூர ஆரம்பித்தது மழை. இருவரும் அந்த பாலத்தில் நின்றோம். எங்களுக்கு கீழே நீலக்கடலும், மேலே கரு மேகங்கள் கூடிய வானமும் வியாபித்துக் கிடந்தன.
தூறல் சற்றே வேகமாக, பையினுள் இருந்த குடையை எடுத்து விரித்தான் ஷ்யாம். இருவரும் ஒரே குடைக்குள் நின்றிருந்தோம்.
“கொஞ்ச நேரம் நனையலாம் ஷ்யாம்”
Advertisement
“வேண்டாம் வேண்டாம். உனக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை” .
Advertisement
எங்கள் இருவரின் தோள்களும் ஒன்றோடு ஒன்று உரசி நின்றிருக்க தூறல் பெரிதாகி, சாரல் எங்கள் இருவரையும் உரசிக்கொண்டிருந்தது.
“ஷ்யாம். பாடுங்க ஷ்யாம்”
“சும்மா இரு. கொஞ்ச நேரம் இந்த இடத்தை ரசிக்கலாம் பாப்பா”
Advertisement
“ப்ளீஸ் ஷ்யாம் நாலு லைன் பாடுங்க. எனக்காக” கெஞ்சலும், கரைதலுமாய் என் குரல்.
“என்ன பாட்டுடா?”
‘மழைத்தேடி காத்திருந்தேன்”
“மழைத் தேடி காத்திருந்தேன்…… காத்திருந்தேன்……. மனம் தேடும் மழையானாய்…… மழையானாய்…..” அவன் குழைய நானும் இணைய சில நொடிகள் பாடிக் கொண்டேயிருந்தோம்.
மழை வலுத்திருந்தது. ஒரு கட்டத்தில் அவனுக்கு என்ன தோன்றியதோ குடையை என்னிடம் கொடுத்துவிட்டு சட்டென என்னை விட்டு விறுவிறுவென நகர்ந்து சென்று மழையில் நனைய ஆரம்பித்திருந்தான் அவன்.
நான் சுதாரித்து, சமாளித்துக்கொண்டு பாலத்தின் கைப்பிடி சுவற்றை பிடித்துக்கொண்டு மெதுவாக நடந்து அவனை அடைந்த போது மழையில் மொத்தமாக நனைந்திருந்தவன் கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டான்.
“என்னாச்சு ஷ்யாம்”
“ஒண்ணுமில்லை சும்மா மழையிலே நனையணும்ன்னு தோணிச்சு” என்றான் என்னை எங்கேயோ பார்த்துக்கொண்டு.
“சரி போதும் வாங்க” என நான் அவனுக்கும் சேர்த்து குடைப் பிடிக்க
“பாப்பா” என்றான் ஷ்யாம் “ஆறு மாசத்துக்கு முன்னாடி நான் இருந்த மனநிலைலே, உன் கூட இப்படியெல்லாம் வருவேன்னு நினைக்கலை பாப்பா. அப்போ நீ அழுவே வருத்தப்படுவேன்னு தெரிஞ்சே நான் சில வேலைகள் பண்ணேன். அப்போதான் நீ என்னை விட்டு விலகிப்போவேன்னு தோணிச்சு” அவன் சொல்ல நான் அவன் முகத்தையே பார்த்திருந்தேன்..
“ஆனா இப்போ நேத்து இந்த நாலு நாள் எனக்கு வேணும்னு நீ கேட்டப்போ, எனக்கு ஏனோ கோபம் வரலை பாப்பா. எனக்கும் ஏனோ பிடிச்சிருக்கு இது. இந்த நாலு நாள் நாம பழைய மாதிரி நல்ல ஃப்ரெண்ட்ஸா இருப்போம் பாப்பா. அப்போ இந்த சிங்கப்பூர் நாட்கள் நம்ம ரெண்டு பேர் மனசிலேயும் எப்போவும் இருக்கும்னு நினைக்கிறேன்.”
“கண்டிப்பா ஷ்யாம்” நான் சொல்ல
“அதுக்கு அப்புறம் எனக்கும் சாருக்கும் கல்யாணம் இருக்கும். நீயும் வேறே யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ பாப்பா” என்றான் அவன் அழுத்தம் திருத்தமாக.
கடல் நடுவே இருந்த அந்த மரப்பாலத்தில் நின்றுக்கொண்டு, ஒரு கையால் அவனுக்கும் குடை பிடித்தபடி, மறுகையை பக்கவாட்டு கம்பியில் ஊன்றிக்கொண்டு கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன் சில நொடிகள்.
இதையெல்லாம் நான் எதிர்ப்பார்க்காமல் இருந்திருந்தால்தான் எனக்கது பேரதிர்ச்சி. கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் சாரு விஷயத்தை என்னிடம் போட்டுடைப்பான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் இதழ்களில் புன்னகையை சூடிக்கொண்டு சொன்னேன் நான்
“சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கோங்க ஷ்யாம்ஸ். ஆல்வேஸ் பீ ஹாப்பி”
அந்தப் புன்னகை அவனை என்னவோ செய்திருக்க வேண்டுமென தோன்றியது. நான் அப்படி ஒரு வார்த்தையைச் சொல்வேன் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லையோ என்னவோ?
பதில் பேசாமல் என்னிடமிருந்து குடையை வாங்கிக்கொண்டு என் முகம் பார்த்து மெலிதாய் புன்னகைத்தான்.
‘”நீயும் கல்யாணம் பண்ணிக்கணும் பாப்பா” அவன் குரலில் அத்தனை அன்பு.
அவன் என் மீது வைத்திருக்கும் நிஜமான, ஆழமான பாசத்தை எப்போதும் நான் உணர்ந்தது உண்டு. அதை திருமணம் எனும் பந்தம் வரைக் கொண்டு செல்லத்தான் அவனால் இயலவில்லை, அவனது சூழ்நிலைகளும் அவனது மனசாட்சியும் அவனை அனுமதிக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
“கல்யாணம்தானே பண்ணிக்கிட்டா போச்சு. எத்தனை பண்ணிக்கட்டும் மூணு, நாலு பண்ணிக்கட்டுமா?” என்றேன் கண்சிமிட்டி.
“ம்? யாரு நீயா. நல்லா இருக்கு கேட்க” என்றான் சற்றே இளக்காரமாய்.
“நிஜமா ஷ்யாம். எனக்கு ஆள் பார்க்க ஸ்மார்டா இருக்கணும். நல்லா பாடணும். அட்லீஸ்ட் ஒரு மியூசிக் இன்ஸ்ட்ருமென்டாவது வாசிக்கணும். பியானோ வாசிச்சா நல்லது. அப்புறம் என்கிட்டே ரொம்ப அன்பா இருக்கணும். இது எல்லாம் ஒரே ஆள்கிட்டே இருக்கிறது ரொம்ப கஷ்டம். அதானலே நாலஞ்சு பண்ணிக்கலாம்னு…..”
“அது சரி” திரும்பிக்கொண்டான் அவன். இது அத்தனையும் அவனிடத்தில் இருக்கிறது என அவனுக்கு புரியாமலா இருக்கிறது.
சில நொடிகள் கழித்து, அவன் எனக்கும் சேர்த்து குடைப் பிடித்தபடியே, திரும்பி கம்பியில் முதுகை சாய்த்து நின்றுக்கொண்டு என் முகம் பார்த்தான்.
“உங்க அம்மாவும் இல்லை. உன்னை அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன் பாப்பா. நீ சரின்னு சொல்லு பாப்பா. நான் உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன்.” அவன் சொல்ல
ஒரு நொடி அவன் முகம் பார்த்துவிட்டு கடலின் மீது பார்வையை வைத்துக்கொண்டேன். சில நொடிகள் மௌனம் அங்கே. பின்னர்
“அப்படியே இந்த கடல்லே குதிச்சு…..” என்றவள் சற்றே இடைவெளிவிட்டு “ஒரு நீச்சல் அடிச்சிட்டு வரணும் போலிருக்கு” என்றேன் மெதுவாக.
அவன் முகத்தில் அப்படி ஒரு பகீர் மாற்றம். சில நொடிகள் எதிர்ப்பக்கம் தெரிந்த நீரோட்டத்தையே பார்த்துக்கொண்டு நின்றவன்
“உனக்கு கொழுப்பு ரொம்ப அதிகமாகிடுச்சு. உன்னை இந்த ட்ரிப்லே திட்டக்கூடாதுன்னு பார்க்கிறேன்” என்றான் இறுகிய குரலுடன்
“சரி போகலாமா?” என்றான் அடுத்த நொடி. அவனுக்கு உடனடியாக அந்த இடத்தை விட்டு அகன்று விடத் தோன்றியிருக்க வேண்டும்.
“ஒரு போட்டோ ஷ்யாம்ஸ் ப்ளீஸ்” நான் கெஞ்ச உதடுகளில் சிரமப்பட்டு ஏற்றிக்கொண்ட புன்னகையுடன் உடன் பட்டான் அவன். இரண்டு மூன்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டு
“ட்ரெஸ் முழுசா நனைஞ்சு போச்சு. இப்படியே வா போறது?” அவனைப்பார்த்து கேட்டேன் நான். .
“வேறே ட்ரெஸ் இருக்கு. எங்கேயாவது மாத்திக்கறேன் போலாம் வா” சொன்னான் அவன்.
எங்களைத் தாண்டி சற்றே தூரத்தில் இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டுக்கொண்டிருந்தனர் இரண்டு காதலர்கள். இருவரும் தலை குனிந்துக்கொண்டு நடந்தோம். மழை இன்னமும் வேகமெடுத்துக்கொண்டிருந்தது.
சற்று தூரம் நடந்த பிறகு ஒரு மறைவுக்கு பின்னால் சென்று வேறு உடை மாற்றிக்கொண்டு திரும்பினான் அவன். மழை இன்னமும் பொழிந்துக்கொண்டிருந்தது.
“ஏதாவது சாப்பிடறியா பாப்பா?” இப்போது அவன் மனம் சற்று நிதானத்துக்கு வந்திருக்க வேண்டும்.
“இப்போ எதுவும் வேண்டாம் ஷ்யாம்ஸ்”
“உனக்கு இந்த இடம் பிடிச்சதா பாப்பா?” என்றான் இதமாக.
“ரொம்ப..’ என்றேன் புன்னகையுடன்.
“நீ நடக்கறதை பார்த்தா எனக்கே ரொம்ப பயமா இருக்கு. எங்கேயாவது விழுந்திடப் போறே பார்த்துவா” என்றவனுக்கு என்ன தோன்றியதோ எனது தோள்களை சற்றே அணைத்துக்கொண்டு எனக்கு குடைப் பிடித்தபடி நடந்தான்.
அவனது உள்ளுணர்வு அவனுக்கு என்ன சொல்லியதோ “உனக்கு உடம்புக்கு என்ன பாப்பா?” என்றான் என் முகம் பார்த்து.
“பயப்படற அளவுக்கு ஒண்ணுமில்லை ஷ்யாம்ஸ்” என்றேன் நான். என்னுடைய ஷ்யாம்ஸ் இப்போது அவனை ஏனோ பாதிக்கவே இல்லை.
“இல்லம்மா. எனக்கே என்னமோ உன்னை நினைச்சா பக்பக்ன்னு இருக்கு, ஏன்னு சொல்லத் தெரியலை. எது எப்படின்னாலும் உன்னை பத்திரமா ஊருக்கு கூட்டிட்டு போயிடணும்” சொன்னவனை பார்த்து இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டேன்.
“எல்லாம் உன் மகன் மறைமுகமாக உன்னைப் படுத்தும் பாடு” சொல்லிக் கொள்ளவில்லை நான்.
இருவருக்குமிடையில் வார்த்தைகளில் சொல்லத் தெரியாத ஒரு சந்தோஷ பாவம் ஊஞ்சலாடிய நேரத்தில்
“ஹேய்.. ஷ்யாம் நீ எங்கேடா இங்கே?” கேட்டது தனாவின் குரல். நான் மொத்தமாக அதிர்ந்து நிமிர்ந்தேன்.
நான் சுதாரிக்கும் முன், கண் இமைக்கும் நொடியின் பாதி நேரத்தில் என்னை விட்டு விலகி நின்றிருந்தான் ஷ்யாம். என் தலைக்கு மேலே இருந்த குடை மட்டும் அப்படியே இருந்தது.
எங்கள் முன்னால் புன்னகையுடன் நின்றிருந்தனர் தனாவும், சாருவும். அவன் இரு சைக்கிள்களையும் பிடித்துக்கொண்டு நின்றிருக்க அவனுக்கு குடைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் சாரு.
“தெரிஞ்சிருந்தா ஒண்ணாவே வந்திருக்கலாமே?” கேட்டான் தனா.
ஒரு நொடி என்னைப் பார்த்துக்கொண்டவன் “இல்லடா இது திடீர் பிளான். ரிஹர்சல் ஈவினிங்ன்னு பிளான் பண்ணிட்டு எல்லாரும் க்ரூப் க்ரூப்பா வெளியிலே கிளம்பிட்டாங்க. நாங்க ரெண்டு பேரும் இப்படி கிளம்பி வந்தோம்” சொன்னான் ஷ்யாம்.
இத்தனை நேரம் கிடைத்த அவனது அருகாமை, நாங்கள் இருவரும் அந்தப் பாலத்தில் நின்று பாடிய பாட்டு, அவனது இந்த சில நிமிட தோள் அணைப்பு இதுவே எனக்கு சற்று நிறைவை கொடுத்திருக்க வேண்டுமோ என்னவோ? இப்போது அவர்கள் வந்து நின்றதில் எனக்கு அத்தனை வருத்தம் இல்லை என்றே தோன்றியது
எங்கள் இருவரையும் ஒரு வித ரசிப்பு பார்வை பார்த்தாள் சாரு. “நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா பாடுவீங்களா?” அவள் விரல்களும், விழிகளும் நர்த்தனமாட கேட்டாள் சாரு.
“கண்டிப்பா பாடுவோம் சாரு” என்றான் இவன் இதமான பாவத்துடன்.
ஒரு வித உறைந்து போன பார்வையுடன் அவளை அதிர்சியுடன் பார்த்திருந்தேன் நான். “அவளால் பேச முடியாதா? இந்த விஷயம் இதுநாள் வரையில் எனக்கு தெரியாதே?”
“உங்க ரெண்டு பேர் பாட்டு எனக்கு எப்பவும் பிடிக்கும் தெரியுமா?” சைகை மொழியில் அவள் சொல்ல அவளுக்கு புன்னகையுடன் பதில் சொல்லிக்கொண்டிருந்தான் ஷ்யாம். ஒரு குழந்தையின் குதூகலம் அவளிடத்தில்.
அவளை இந்த நிலையில் பார்த்ததும் எனக்குள் என்ன ஆனதோ நானே அறியாமல் ஷ்யாமை விட்டு இரண்டு அடிகள் தள்ளி நின்றேன்.
அவன் தனது நண்பனுக்கு கொடுத்த வாக்குக்கான காரணம் முழவதுமாக இப்போது புரிந்திருந்தது. அவன் மீதிருந்த மதிப்பு இன்னுமாக உயர்ந்திருந்தது.
சட்டென என் பக்கம் திரும்பியவள் என்னருகில் வந்து என் கன்னம் வருடி “உங்க பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும் என சைகையில் சொல்லி என் கைப்பிடித்துக்கொண்டு அதில் அழுந்த முத்தமிட்டாள்.
“ரொம்ப சந்தோஷம்” அவள் கன்னம் வருடி புன்னகைத்தேன் நான்.
அழகின் வடிவமாக இருந்தாள் அவள். காலையில் விமான நிலையத்தில் பார்த்ததை விட இப்போது முகம் இன்னமும் தெளிவாக இருந்ததைப்போல் இருந்தது.
“உங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரம் கல்யாணமாமே? பெஸ்ட் விஷஸ்” அவள் கரத்தை பிடித்துக்கொண்டு வாழ்த்தினேன் நான்.
சிறு துளி புன்னகையுடன் மெல்ல “நன்றி” என தலை அசைத்தாள் சாரு.
எனது செய்கையில் புருவங்கள் உயர என்னைப் பார்த்த ஷ்யாமின் முகத்தில் திருப்தியாய் ஒரு புன்னகை. நான் அவனை சரியாக புரிந்துக்கொண்டேன் என்பதை அவன் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும்.
தொடரும்
error: Content is protected !!