Skip to content
Post Views: 3,567
அத்தியாயம் 2
சாதாரண நாள் போலத் தான், அன்றைய வெள்ளியும் விடிந்தது. அந்த தினம் நேர்காணல் என்ற ஆர்வம் கலந்த பயத்திலேயே திவ்யபாரதி அதிகாலையே எழுந்து தயாராகியிருந்தாள்.
ராபின் ப்ளூ லெக்கின்ஸிற்கு, மெல்லிய வான் நீல டாப்ஸ் பாந்தமாக இருந்தது. தலை குளித்து, ட்ரையர் இட்டு, தோள் அளவு முடியை அழகாய் போனியினுள் அடக்கி கண்ணாடியில் இப்புறமும் அப்புறமும் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.
Advertisement
“நூவு ரோஜு அந்தங்கா உன்னாரு.” என்று அவள் கட்டிலில் இருந்து திவ்யாவின் அறைத்தோழி தெலுங்கில் மொழிய,
“நிஜங்கா?” என்று திரும்ப அவளிடமே வினவினாள்.
“சாலா நிஜங்கா. இண்டர்வியூ பாக செய் வே” என்று திவ்யாவின் அறைத் தோழி தெலுங்கில் வாழ்த்தி வழியனுப்ப, சிரிப்புடன் அவள் முகமனை ஏற்றுக் கொண்டு, தன் சான்றிதழ்கள், ரெசியூம் என தேவையானவற்றை எடுத்துக் கொண்டு எலக்ட்ரானிக் சிட்டி நோக்கி பயணமானாள் திவ்யா.
Advertisement
கூகுள் வாயிலாக அலுவலகத்தைக் கண்டுபிடித்து தன் இண்டர்வியூ கால் லெட்டரை ரிசேப்ஷனில் காட்டி, விசிட்டர் பாஸ் பெற்றுக்கொண்டு உள்ளே சென்று அமர்ந்த திவ்யா, அன்று நேர்காணலுக்கு வந்திருந்த மற்றவர்களை எடை போட்ட வண்ணம் அமர்ந்திருந்தாள்.
Advertisement
குறிப்பிட்டிருந்த நேரத்தில் முதல் கட்ட தேர்வுகள் முடிவு பெற்றுவிட, திவ்யா எதிர்பார்த்தது போல அதில் தேர்ந்திருந்தாள். இரண்டாம் கட்டத் தேர்விலும் வெற்றி பெற்றாள். தன் மகிழ்ச்சியை வழக்கம் போல தினேஷுக்கு அழைத்து பகிர்ந்து கொள்ளவும் செய்தாள்.
“டெக்னிகல் கம் ஹெச்.ஆர் ரவுண்ட் மட்டும் தான் பாக்கி தினு. ஆல்மோஸ்ட் செலக்ட் ஆன மாதிரி தான். என் கூட இன்னொரு பொண்ணும், ஒரு பையனும் செலக்ட் ஆகியிருக்காங்க. சோ, மூணு பேர்ல எவ்வளோ பேர் எடுக்கறாங்கன்னு தெரியலை.”
“ஏ, நல்ல விஷயம் திவி, நான் சொன்னேன்ல செலக்ட் ஆகிடுவன்னு.”
Advertisement
“ம்ம், பாக்கலாம் தினு. சரி, நான் முடிச்சுட்டு கால் பண்ணறேன், பை” என்று ஆர்வமாக கைப்பேசியை அணைத்த திவ்யா, அடுத்த சுற்றிற்காக காத்திருந்தாள்.
அந்த அறையில் அவளுடன் தேர்வாகியிருந்த கீது என்ற பெண்ணும், சைமன் என்ற ஆடவனும் அமர்ந்திருந்தனர். மூவரும் நாகரீகம் கருதி அவ்வப்போது சிரிப்பதும், பொதுவாக வினவிக் கொள்வதுமாக நேரம் கடத்தினர்.
கான்ஃபரன்ஸ் ஹாலினுள் வந்த ஹெச்.ஆர் குழு, மூவருக்கும் முகமன் தெரிவித்தது. அதில் பளீரென்று உதட்டுச்சாயம் போட்டிருந்த அந்த மைவிழிப் பெண், நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசலானாள்.
“வெல்கம் எவ்ரிவென். இந்த லாஸ்ட் ரவுண்ட்ல எங்க டெக்னிகல் டீம் உங்களை இண்டர்வியூ பண்ணுவாங்க. இட்ஸ் ஏ ஸ்கைப் இண்டர்வியூ. பேனல் மெம்பர்ஸ் சிலர் இப்போ ஆன்சைட்ல இருக்கறதால, அங்க இருந்து அவங்க கால் கனெக்ட் பண்ணுவாங்க. பீ ரெடி.” என்று மொழிந்து விட்டு, கணினித்திரையை முறைக்கத் துவங்கினாள்.
அவளைப் பின்தொடர்ந்து மூவரும் ப்ரொஜெக்டர் திரையை கண் கொட்டாமல் பார்க்க, அரை மணி நேரத்தில் நேர்காணல் குழு கனெக்ட் ஆகியிருந்தது. முதலில் ஒரு நபர் மட்டும் திரையில் தோன்றி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, கேள்விகள் கேட்கத் துவங்கினார்.
திவ்யா, தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சாதூர்யமாக பதிலளித்தாள். மற்ற இரு போட்டியாளர்களை விடவும் அவள் பதிலில் அவர் திருப்தியுற்றது போலவே தோன்றியது.
திவ்யாவிடம் அவர் ஏதோ கேட்க, திவ்யா கவனமாக பதில் சொல்லிய வண்ணம், கணினித் திரையை ஏறிட, அவள் சற்றும் எதிர்பாராத நபர் அதில் புதிதாக சேர்ந்திருந்தார்.
“ஹாய் கைஸ், சாரி, ஐம் லேட்.” என்று சொல்லிக் கொண்டே திரையின் எதிரே அமர்ந்தவனைக் கண்டு சில நொடி பேச்சே நின்று போனது திவ்யாவிற்கு.
‘இவனா? இவன் இந்த கம்பெனியிலையா வேலை செய்யறான்?’ என்று படபடத்த மனதை அடக்க வெகுவாக சிரமப்பட்டுப் போன திவ்யா, இருமல் வருவது போல தொண்டையைச் செருமிக் கொண்டு, “எக்ஸ்கியூஸ் மீ” என எதிரில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடமடவெனப் பருகினாள்.
அவள் திணறலில் அவளை அப்போது தான் முழுவதுமாக கவனித்த அவன் ஆச்சர்யமாக விழிகள் விரிய, திவ்யாவையே ஏறிட்டான்.
என்ன கேள்விக்கு என்ன பதில் சொல்லிக் கொண்டிருந்தோம் என்பதே திவ்யாவிற்கு மறந்திருக்க, பெரு மூச்சுகளாக எடுத்துத் தன்னை சமன் படுத்திக் கொண்டாள். இதற்குள் ஹெச்.ஆர் மற்ற நபர்களிடம் கேள்விகள் கேட்கத் துவங்க, அந்த வினாடி நேரத்தை தனதாக்கிக் கொண்டு, திரையில் தெரிந்த அவனை சின்ன தயக்கத்துடன் ஏறிட்டாள்.
வருடங்கள் பல சென்றிருந்தாலும், அவன் முகம் என்னவோ அப்படியே இருந்தது. கலைந்து போயிருந்த தலைமுடியும், மூன்று நாள் தாடியும், மடித்துவிடப்பட்ட முழுக்கை சட்டையும் என அவன் புறத்தோற்றத்தில் கண்கள் செலுத்தியவள், அவன் முகத்தை நோட்டம் விட்டாள்.
கல்லூரி காலத்தில், தன் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொண்டது அந்த முகமா? அவள் விழிகளை கொக்கியிட்டு மீன் பிடிப்பது போல் தன் வசப்படுத்தியது அந்த விழிகளா? உதட்டின் ஓரம் நெளியும் அவன் சின்ன புன்னகையைக் கண்டு எத்தனை நாட்கள் வெட்கத்தில் சிவந்து தலை கவிழ்த்திருப்பாள்? அந்த ஏக்கமும், அவன் சட்டை வாசமும், அவனைக் கடக்கையில் அட்டகாசமாக ஒலிக்கும் அவன் சிரிப்பும் என அணுவணுவாக தான் ரசித்த அந்த முகத்தை ஒரு நொடி பார்த்துவிட்டு, கண்களை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள் திவ்யா.
அத்தோடு சேர்ந்தாற் போல, ‘எனக்கு வேற எந்த எண்ணமும் இப்போதைக்கு இல்ல. ஐம் சாரி.’ என்று அவன் மனதில் குத்தீட்டியை பாய்ச்சிவிட்டு வந்தாளே!
அவன் அடிபட்ட பார்வையும், பரிதவிப்பும் நிறைய நாட்கள் அவளை உறங்கவிடாமல் இம்சித்தன தான். ஆனால், இப்போதைய ஏக்கமான பார்வை பரிமாற்றம் என்னவோ அவளுக்கு மட்டுமே உண்டாகியிருக்க வேண்டும். ஏனென்றால் மறுபக்கம் திரையில் தெரிந்த அந்த உருவம், திவ்யாவை அடையாளம் கண்டு கொண்டதைப் போல கிஞ்சித்தும் காட்டிக் கொள்ளவில்லை.
சிரிப்புடன் நேர்காணல் செய்து கொண்டிருந்த பரணி, தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை கூட திவ்யாவிடம் பேசவில்லை. அவன் செய்கை எதையோ மீண்டுமாய் திவ்யாவிற்கு உணர்த்த, ‘அவனே யாரோ மாதிரி பேசறப்போ, உனக்கு என்ன வந்துச்சு? சாதாரணமா இரு திவி. பீ கூல் திவி. இண்டர்வியூல இருக்க.’ என்று பலமுறை தன் மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.
அரை மணியில் நேர்காணல் முடிவு பெற்றுவிட, திரையில் தெரிந்த பரணி அழகாய் புன்னகைத்து, அனைவரிடமும் விடைபெற்றான். அதிலும் அவளுடன் அமர்ந்திருந்த கீது என்ற பெண்ணைப் பார்த்து சன்ன சிரிப்பைச் சிந்தி, “வீ வில் டிசைட் அண்ட் வில் கெட் பேக் டு யூ” என்று அழகாய் மொழிந்தான்.
தன் முத்துப் பற்கள் தெரிய சிரித்து அவனுக்கு விடை கொடுத்த ஹெச்.ஆர் பெண், “ஓகே கைஸ், வெளிய வெயிட் பண்ணுங்க. கொஞ்ச நேரத்தில் அப்டேட் பண்ணுவோம்” என்று மூவருக்கும் பொதுவாகக் கூறிவிட்டுச் சென்றாள்.
கணினித்திரை அணைக்கவும் தான் திவ்யாவிற்கு நிம்மதியே உண்டாயிற்று. வேக வேகமாகத் துடித்த அவள் இதயத்தை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, மடமடவென டாப்ஸ் நனைய மீண்டுமாய் தண்ணீர் பருகினாள். இதை கவனித்த அவளுடன் அமர்ந்திருந்த சைமன் என்பவன், “என்னங்க நல்லா ஆன்சர் பண்ணீட்டு இருந்தீங்க. டக்குன்னு டென்ஷன் ஆகிட்டீங்க” என்று கேட்டான்.
அவன் கேட்ட கேள்வி செவிகளில் விழுந்து திவ்யாவின் மூளையில் பதிந்து அவள் பதில் சொல்ல நீண்ட நேரம் ஆனது. ஏனென்றால், அவள் மூளை தன் செயல்பாட்டை நிறுத்திவிட்டு, இப்போது இதயத்துடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தது.
பதிலுக்காக தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சைமனிடம் சிரிப்பை உதிர்த்து, “கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்” என்று மழுப்பலாக ஏதோ உளறினாள். அவள் தடுமாறுவதைக் கண்ட கீது, திவ்யாவின் உதவிக்கு வந்தாள்.
“ஐயோ, எனக்குமே ரொம்ப டென்ஷன் தான். நல்ல கம்பெனி, நல்ல பேக்கேஜ், அதனால பயம் இருக்க தானே செய்யும்” என்று பதில் கூறிய கீதுவின் பேச்சில் நிறைய மலையாள வாடை வீசியது. அவள் கொஞ்சும் குரலில் அழகாய் திணறிக் கொண்டே தமிழ் பேசிய விதம் திவ்யாவை ஈர்த்தது எனலாம்.
திவ்யா அமைதியாக இதற்கும் சிரிக்க, சைமனிடம் திரும்பிய கீது, நேர்காணல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் துவங்கியிருந்தாள். சற்றே பதட்டம் குறைந்து போயிருக்க, புதிதாக அந்த இடத்தை பயம் ஆக்கிரமித்துக் கொண்டது. பயத்தை விடவும் குழப்பம் மேலோங்கியது அவள் மனதில்.
‘இங்க இந்த பரணி இருப்பான்னு கொஞ்சமும் நான் எதிர்பார்க்கலையே! பரணி தனக்கு வேலை கொடுக்காமல் இருந்திடுவானோ?’ என்ற ஐயம் சிறிதளவு ஏற்பட்டது.
இந்த வேலையை ஏற்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் திவ்யா ஆழ்ந்திருக்க, சிறிது நேரத்தில் அறையினுள் வெளிப்பட்ட லிப்ஸ்டிக் பெண் உள்ளே நுழைந்து இரண்டு கவர்களை திவ்யாவைத் தவிர்த்து மற்ற இருவரிடமும் சமர்ப்பித்தாள்.
“கங்கிராட்ஸ். வெல்கம் டு தெ டீம்” என்று இன்முகத்துடன் மற்ற இருவரிடமும் அந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆடர்களை நீட்டி கையெழுத்து வாங்க, திவ்யா ஸ்தம்பித்துப் போனாள்.
‘மத்த ரெண்டு பேரையும் விட, நான் நல்லா ஆன்சர் பண்ணினேன். அப்பறம் எப்படி என்னை எடுக்காம போவாங்க? பரணி ஒருவேளை இன்ஃப்லுயன்ஸ் பண்ணியிருப்பானோ? என்னை எடுக்க வேண்டாம்னு சொல்லியிருப்பானோ? அப்படியெல்லாம் செய்யக் கூடியவனா? அட்லீஸ்ட் தெரிஞ்ச பொண்ணுன்னு ஒரு கர்டஸி கூடவா இருக்காது? வேலை விஷயத்தில இப்படி பர்சனல் வெஞ்சன்ஸ் வச்சு பழி தீர்ப்பாங்களா?” என்று சில நொடிப் பொழுதில் பல காத தூரம் யோசனை சென்றிருந்தது.
திவ்யாவின் வருத்தமும், இயலாமையும் மற்ற இருவருக்கும் புரிந்திருக்க வேண்டும். சைமன், சற்றே தயக்கத்துடன் தான் கையெப்பம் இட்டான். அந்த மலையாளப் பெண் கீது கூட, கடைக்கண்ணால் திவ்யாவை பார்த்துக் கொண்டே தான் கையெப்பம் இட்டாள். அவர்களுக்குமே, ‘எங்களை விட, இந்த பொண்ணு தான் நல்லா ஆன்சர் பண்ணாங்க. அப்பறம் ஏன் இவங்களை செலக்ட் பண்ணலை?’ என்ற குழப்பம் இழையோடியது.
இருவரின் பரிதாபப் பார்வைகளைப் பொறுக்க முடியாத திவ்யா மையமாக புன்னகைத்து, “ஆல் த பெஸ்ட்” என்று உதிர்த்துவிட்டு அங்கிருந்து வெளியேற எத்தனித்தாள். அவளுக்கு இருந்த படபடப்பில் கை கால்களில் ஒருவித நடுக்கம் ஏற்பட்டிருந்தது. அந்த கம்பெனியின் வாஷ்ரூம் எங்கே என்று கேட்டு, உள்ளே நுழைந்து கொண்டாள்.
கைப்பையை திண்டில் வைத்துவிட்டு, குளிர்ந்த நீரை முகத்தில் சட் சட்டென அடித்து, ஒருவாறு சமாளித்தாள். இத்தனை வருடங்கள் கழித்து பரணியைப் பார்த்த அதிர்ச்சி ஒரு பக்கம் என்றால், நன்றாக பதிலளித்தும் நேர்காணலில் வெற்றி பெறவில்லையே என்ற ஏக்கம், ஆத்திரமாக உருமாறியிருந்தது.
‘எனக்கு மட்டும் ஏன் இப்படி ஏதாவது ஒண்ணு தப்பாவே நடக்குது. மத்தவங்களுக்கு ஈஸியா கிடைக்கற விஷயம் கூட எனக்கு குதிரைக் கொம்பா மாறிடுது. என்ன தான் என் ராசியோ? லக்ன்னு ஒன்னு எனக்கு எப்பவுமே இருந்ததில்லை. ஒரு விஷயம் வேணும்னா அதுக்காக கஷ்டப்பட்டா மட்டுமே தான் எனக்கு கிடைச்சிருக்கு. அப்படி என் ஹார்ட் வொர்க் போட்டும் அந்த விஷயம் கை நழுவிப் போறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்று மனதினுள் எண்ணும்போதே திவ்யாவின் கண்கள் பனிக்கத் துவங்கின.
error: Content is protected !!