Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

3 பேர் 2 காதல் 1 கனவு

3..2..1 Episode 10.மெரினா மணலும் மர்ம இரவும்!

கனவுகளையும், கண்ணீர்த்துளிகளையும், காதல்களையும், கதறல்களையும் காலம் காலமாக கேட்டபடி, கரை மணலில் கவிதைகளைப் புனைந்துகொண்டே, வன்மையோடும் மென்மையோடும் வருபவர்களை வியக்க வைத்துக்கொண்டே இருந்தது மெரினா கடற்கரை. அணைக்க வரும் அலைகளும், அவற்றின் கூச்சல்களும், மனதின் ஆழமான இரைச்சல்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தன. அந்த அலைகளைப் பார்த்துக்கொண்டே கார்த்தியும், சேதுவும், வசந்தியும் கனவுகளில் கரைந்துகொண்டிருந்தார்கள்.

நிலவிய அமைதியைக் கலைத்துப் பேசத் தொடங்கினாள் வசந்தி. “இன்னும் இரண்டு மாசம்தான்! ஒரு வருஷ ஓட்டத்துக்கான முடிவு தெரிஞ்சிடும். ஒருவேளை, தேர்வில தோல்வியடைஞ்சால் எனக்கும், கார்த்திக்கும் ஒரே கதிதான். வீட்ல சொல்ற பையனக் கட்டிகிட்டு யூ.பி.எஸ்.சி ஆட்டத்திலிருந்து விலகிடணும். ஆனால், உனக்கு அப்படி இல்லைதானே சேது.. இன்னும் அஞ்சு-ஆறு வருஷம்கூட நீ முயற்சிக்கலாம்.. உன்னை யாரும் கேட்க மாட்டாங்க! இதெல்லாம் பார்க்கும்போதுதான் ஏன்டா பொண்ணாப் பொறந்திருக்குறோம்னு தோணுது!”, வசந்தி வருத்தத்தோடு பேச, ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தான் சேது.

”நீ சொன்னது ரொம்ப சரி! நான் எத்தனை தடவை முயற்சித்தாலும் என்னை யாரும் கேட்க மாட்டாங்க. கேக்குறதுக்கு யார் இருக்காங்க?”, சேது பல வருடங்களாகப் பூட்டி வைத்திருந்த சோகம், புடைத்துக்கொண்டு வெளியே வர, ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தான். வசந்தியும், கார்த்தியும் வாயடைத்து நின்றார்கள்.

அழுது கொண்டே தொடர்ந்தான் சேது. ”உங்க அப்பாவையும், அம்மாவையும் பார்க்கும்போது எனக்கு எவ்வளவு ஏக்கமா இருக்கும் தெரியுமா? என்னோட அப்பா என் சின்ன வயசுலையே வேறு பொண்ணோட போயிட்டார். அவர் போன சில வருஷத்திலேயே அம்மா மேலே போய்ச் சேர்ந்துட்டாங்க. அதுக்கப்புறம், செலவுக்கு மட்டும் அப்பா காசு அனுப்புறார். நான் தேர்வில ஜெயிச்சாலும் கொண்டாட ஆளில்லை. தோற்றாலும் ஆறுதல் சொல்ல ஆளில்லை. ஒரு வாய் சாப்பிடியா, தூங்கினியான்னு கேட்கக்கூட நாதியில்லை”, மீண்டும் சேது அழத் தொடங்கினான்.



Advertisement

“உனக்கு நாங்க இருக்கிறோம் சேது. நீ ஜெயிச்சா நாங்க கொண்டாடுவோம். நீ தோத்தா உனக்கு ஆறுதல் சொல்ல நாங்க இருக்கோம்! நீ இப்படி அழாதடா… எங்களால உன்னை இப்படிப் பார்க்க முடியாது!”, கூறியபடி வசந்தியும் அழத்தொடங்க, கார்த்தியின் கண்களிலும் நீர் வழியத் தொடங்கியது.

நண்பர்களின் கண்ணீரானது மெரினா கடல்நீரின் உப்போடு போட்டி போட, அவர்களின் துயரங்களை உள்வாங்க ஆழ்கடலானது பேரலைகளை அனுப்பி வைத்துக்கொண்டிருந்தது. மூவரும் மௌனத்தில் மூழ்கியபடி மனதின் கலக்கத்துள் கரைந்தார்கள்.

வெளியே சொல்லி அழக்கூடிய சோகங்கள் அமைவதுகூட எவ்வளவு சுகமானது! தனது ஆழ்மனதில் தன்னை தினமும் இம்சிக்கும் ஆறாத ரணங்களைச் சொல்ல வார்த்தைகளுக்கு வலுவில்லையே! நினைக்க, நினைக்க கார்த்தியின் மனம் துன்பத்துள் உழன்றது. எந்த சிறு ஆனந்தத்தையும் அனுபவிக்க முடியாதபடி, தன்னை தினந்தினம் ஆட்டுவித்த பேரவஸ்தையிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்குமா என்ற கேள்வி, போட்டித்தேர்வின் கேள்விகளை விடக் கடினமாய் இருந்தது.

Advertisement

மணலின் மடியில் நிலவின் குளிரில் நண்பர்கள் நேரம் அறியாது வீற்றிருந்தார்கள். சட்டென நேரத்தைப் பார்த்த சேது, “மணி 11 ஆகுது! வாங்க உடனே கிளம்பலாம்!”, பதறியடித்தபடி கூற, நண்பர்கள் பதைபதைப்போடு சாலையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

Advertisement

நள்ளிரவில் நடுங்கிக்கொண்டே பாதி வழியைக் கடக்க, சற்றும் எதிர்பாராதவாறு நான்கு முரடர்கள் அவர்களைச் சுற்றி வளைத்தார்கள். ”இங்கே பாருடா… நமக்கெல்லாம் ஒரு பொண்ணு கிடைக்கிறதே கஷ்டமா இருக்குது! ஆனா சார் பாரு, ரெண்டு பொண்ணுங்கள உஷார் செஞ்சு, ஒரே நேரத்துல பீச்சுக்குக் கூட்டிட்டு வர்றார்னா, சார் எவ்ளோ பெரிய அப்பாடக்கரா இருப்பார்?”, முரடன் ஒருவன் சிரித்தபடியே கூற, “அடச்சீ, அசிங்கமாப் பேசாத!”, என்று வசந்தி கோபமாக கூறினாள்.

இன்னொரு முரடன் அவர்களைக் குறுக்கிட்டவாறு, “இங்க பாரும்மா… நீங்க என்ன வேணாலும் செஞ்சுக்கோங்க. கை, கால்ல இருக்கிற நகைகளையும், பணத்தையும் கொடுத்துட்டு, நீங்க பாட்டுக்குக் கிளம்பிப் போகலாம். நாங்க யாரும் எதுவும் செய்ய மாட்டோம்!”, அவன் கனிவாகக் கூற, பதறியபடி சேது ”ஓடுங்க! ஓடுங்க!”, என்று கத்திக் கூவினான். கத்திக்கொண்டிருந்த சேதுவை ஓங்கி ஒருவன் அறைய, மணலில் சரிந்தான் சேது.

வசந்தியும் கார்த்தியும், சேது கத்தியதைக் கேட்டு இரு வேறு திசைகளில் ஓடத்தொடங்கினார்கள். இருமுருடர்கள் அவர்களைத் துரத்திப் பிடிக்கச் சென்றார்கள்.

Advertisement

வசந்தியைப் பிடித்தபடி ஒருவன் இழுத்துக்கொண்டு வந்தான்.

கார்த்தி காரிருளில் உடல் நடுங்கியபடியே திக்குத்தெரியாமல் ஓட, வழியில் நின்ற ஒருவன்மீது எதிர்பாராமல் மோதினாள். அவள் கீழே விழாதவாறு அவன் தாங்கிப்பிடிக்க, திமிறிக்கொண்டு அவனிடமிருந்து விலகினாள்.

விலகியதும்தான் கவனித்தாள், அவள் மோதியது கதிரின் மேல் என்று! துரத்திக்கொண்டு வந்தவன் கதிரைக் கண்டதும் குழம்பி நிற்க, கதிர் முன்னே சென்று அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். அறை வாங்கியவன் கதிர் விட்ட அறையில் கதிகலங்கி கீழே விழ, உடனே எழுந்து ”போலீஸ்டா! ஓடுங்க…”, என்று கத்தியபடி ஓடினான். முரடர்கள் அனைவரும் நொடியில் ஓட்டமெடுத்தார்கள்.

வசந்தியும், சேதுவும் சரியான நேரத்தில் போலீசை அனுப்பிய கடவுளுக்குக் கோடி நன்றிகள் கூறியபடி, கார்த்தியை நோக்கி வர, அவளுடன் கோபக்கண்களோடு நின்றுகொண்டிருந்த கதிரைக் கண்டதும் பதறிப் போனார்கள்.

சாலைவரை கோபத்தை அடக்கிக்கொண்டு கதிர் நடக்க, அனைவரும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். சாலையை அடைந்ததும், கதிர் பேசத் தொடங்கினான்.

“என்ன நடக்குது இங்க?”, ஆத்திரத்தோடு கதிர் கேட்க, “சார்! இவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் தெரியாது. இது முழுக்க முழுக்க என்னோட பிளான். கார்த்தி இன்னைக்கு முதல் மார்க் வாங்கினதனால, அந்த வெற்றியைக் கொண்டாடலாமேன்னு…”, சேது தயங்கியபடியே கூற, “அவனுக்குத் தான் அறிவில்லை! உங்களோட மூளை எங்கே போச்சு?”, கார்த்தியையும், வசந்தியையும் முறைத்துக்கொண்டே கதிர் கேட்க, “சாரி சார்!”, என்று வருந்தினாள் வசந்தி.

கதிர் மேலும் தொடர்ந்தான். “இப்படிச் சின்னச்சின்ன வெற்றிகளைக் கொண்டாடுனீங்கன்னா, பெரிய பெரிய தோல்விகளை எப்படித் தாங்குவீங்க? தேர்வுக்கு இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்குது. வீணடிக்குறதுக்கு உங்கக்கிட்ட நேரம் நிறைய இருக்குதுன்னு நினைக்கிறீங்கல்ல, இதுதான் தோல்விக்கான முதல்படி! பத்து லட்சம் பேர் எழுதுற தேர்வுல ஜெயிக்கிற ஆயிரம் பேரப்பத்தி மட்டும்தான் நமக்குத் தெரியும்! தோத்தவங்க நிலைமை யாருக்கும் தெரியுறதில்லை! சரியாகப் போகிற வரைக்கும் எதுவும் தெரியாது. மூச்சு விடாம படிச்சும், முதல் தோல்வி வரும்போதுதான், எங்கே தவறு நடந்திருக்கும்னு நடந்த ஒவ்வொரு விஷயமும் மண்டைக்குள்ள திரும்பத் திரும்ப வரும்! அந்த குற்ற உணர்ச்சியில, நம்ம மனசாட்சியே நம்மளக் கொன்னுடும்! இப்படித் தொடர்ந்து ஆறு-எட்டு வருஷம் இந்த தேர்வுக்காக வேலைய, குடும்பத்த, சந்தோஷத்த, வாழ்க்கையன்னு, எல்லாத்தையும் ஓரம்தள்ளி வச்சிட்டு, வெறித்தனமாப் படிச்சிட்டு, கடைசியாக ஒரு தோல்வி வரும் பாருங்க.. அது மரணத்தை விடக்கொடூரமானது! இப்படி இந்த தேர்வுனால வாழ்க்கையத் தொலைச்சவங்க பல பேர்… அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியாமல்,  படிச்ச அண்ணாநகர் வீதிகளில பைத்தியம் மாதிரி திரிஞ்சுக்கிட்டுடிருக்காங்க!”, உணர்ச்சிவசப்பட்டு கதிர் பேசிக் கொண்டிருக்கும்போதே, யாரும் எதிர்பாராதவாறு ஒருவன் ஓடிவந்து கார்த்திகேயினியின் கன்னத்தில் அறைவதற்காக கையை ஓங்க, இமைக்கும் நொடியில் அவனைத் தடுத்தான் கதிர். அனைவரும் ஸ்தம்பித்து நின்றார்கள்.

ஆத்திரத்தோடு கத்த ஆரம்பித்தான் அறைய வந்த கார்த்தியின் அண்ணன் கபிலன்.

“உன்னை நம்பிப் பட்டணத்துக்குப் படிக்க அனுப்புனா, ஜோடிப் போட்டுகிட்டு, இங்க நீ ஊர் சுத்திகிட்டு இருக்க… அடச்சீ! வெட்கமா இல்ல?…”, கபிலன் ஆத்திரத்தின் உச்சத்தில் கத்த, அச்சத்தில் உறைந்து நின்றிருந்தாள் கார்த்தி.

ஆவேசத்துடன் தொடர்ந்தான் கபிலன். “நீ காலேஜ் சேர்ந்த முதல் வருஷம், ஏதோ ஒரு போட்டிக்காக சென்னைக்குப் போகணும்னு அழுது அடம்பிடிச்சுப் போன… போயிட்டு வந்ததும், அடுத்த ஆறு மாசம் மூஞ்சியத் தூக்கிவச்சிக்கிட்டு யார்கிட்டயும் பேசாம கிடந்த! அப்பவே உன்னைக் கல்யாணம் செஞ்சு அனுப்பச் சொல்லி அப்பாக்கிட்ட அடிச்சுக்கிட்டேன். அவர்தான்.. பொண்ணு கல்லூரிப் படிப்பை முடிக்கட்டும்னு உனக்கு செல்லம் கொடுத்தார்! காலேஜ் முடிஞ்சதும் கலெக்டருக்குப் படிக்கணும்னு வந்து மறுபடியும் நின்ன! அப்பவும் தலையில் அடிச்சுச் சொன்னேன்.. மாப்பிள்ளையப் பார்த்து உனக்கு கல்யாணம் செஞ்சுடலாம்னு! என் பேச்சை யாரு கேட்டாங்க? இப்போ பீச்ல, நட்டநடு ராத்திரியில, ரெண்டு ஆம்பளப் பசங்கக்கூட நிக்குற… இதுதான் நீ படிக்கிற லட்சணமா? நீ படிச்சுக் கிழிச்சது போதும்.. இப்பவே என் கூடக் கிளம்பு! ஊருக்குப் போகலாம். உன் லட்சணம் என்னன்னு அப்பாவுக்குத் தெரியட்டும்!”, கூறியபடியே கபிலன் கார்த்தியின் கைகளைப் பிடித்து இழுத்துச் செல்ல, “நில்லுங்க! யார் நீங்க?”, என்று கதிர் கடுமையோடு கேட்டான்.

கோபம் ஏறிய கபிலன் மேலும் ஆத்திரமடைந்து, “நான் இவளோட அண்ணன். நீ யாருடா? போய், உன் வேலையைப் பாரு!”, என்று கர்ஜித்தான்.

”அண்ணா! ப்ளீஸ்ணா! வீட்ல மட்டும் சொல்லிடாத! ரெண்டு மாசத்துல எக்ஸாம் வந்துடும்னா… ப்ளீஸ்!”, கெஞ்சியபடி கார்த்தி அழத் தொடங்கினாள்.

”கார்த்தி! நீ அழறத நிறுத்து! சார்.. நீங்க என்கூட ரெண்டு நிமிஷம் வாங்க. உங்கக்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்!”, கதிர் கூற, அனைவரும் குழம்பினார்கள்.

”உன்கூட தனியாப் பேச என்ன இருக்குது? அதெல்லாம் வர முடியாது, போடா!”, கபிலன் கோபத்தோடு மறுத்தான்.

”ரெண்டு நிமிஷம்தான் சார். அப்புறம் நானே உங்க ரெண்டு பேரையும் ஊருக்கு வண்டியில ஏத்தி விடுறேன். வாங்க!”, கூறிக்கொண்டே கதிர் கபிலனின் கரத்தை உடும்புப்பிடியாக பிடித்தபடி, சற்றுத் தள்ளி அழைத்துச் சென்றான்.

நடப்பவை எல்லாம் நினைத்து, கார்த்திக்குத் தலையே சுற்றியது. நாளை ஊருக்குச் சென்று, தன்மீது முழுநம்பிக்கை வைத்திருக்கும் தந்தையின் முகத்தைப் பார்க்க நினைக்கும் போதே, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கற்பனை செய்ய முடியாத குற்ற உணர்ச்சி ஒன்று, அவளைக் குத்திக் கீறியது. பந்தயத்தில் பங்கேற்காமலே தோற்றுப் போகிற உணர்வு, அவளைக் கலங்க வைத்தது.

கதிரும் கபிலனும் என்ன பேசுகிறார்கள் என்பது கேட்காத போதிலும், அவர்களை மற்ற மூவரும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

கதிர் பேச பேச, கபிலனது முகம் கலவரப்படுவதை மூவரும் குழப்பத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் கபிலனது முகம் முழுவதுமாக மாறியிருந்தது.

அந்த மெரினா மணலை அன்று மூடிய இரவானது மர்மம் நிறைந்ததாகவே இருந்தது!

அவர்கள் பேசிவிட்டுத் திரும்பி வர, கார்த்தியின் இதயத்துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது. யாருமே எதிர்பாராத விதமாக கபிலனது தொனி மாறியிருந்தது. ”வீட்டில எதுவும் சொல்லல. நீ கவலைப்படாம, ஒழுங்காக படி! நான் கிளம்புறேன்.”, வேக வேகமாகக் கூறிவிட்டு, கபிலன் விடைபெற்றுச் சென்றான்.

இவன் என்ன தந்திரக்காரனா, என மூவருமே கதிரைக் கண்டு வியந்தார்கள்.

”இன்னைக்கு நடந்தத இத்தோட மறந்திடுங்க! ஒழுங்காக படிக்கிறதுல மட்டும் கவனம் செலுத்துங்க. புரியுதா? சேது, நீ என் பைக்க எடுத்துட்டு ஹாஸ்டலுக்குப் போயிடு. நான் இவங்கள கார்ல கூட்டிட்டு வர்றேன்!”, கூறிக்கொண்டே தன் பைக் சாவியைச் சேதுவிடம் கொடுத்துவிட்டு, ஊபரில் கார் புக் செய்தான் கதிர்.

விடுதியை வந்தடைந்ததும் நன்றி கூறிவிட்டு வசந்தி விடைபெற, மௌனமாகவே அவளோடு நடந்தாள் கார்த்தி.

சற்றுதூரம் சென்றதும் கார்த்தி திரும்பிக் கதிரை நோக்கி வர, அவள் எதற்குத் திரும்பி வருகிறாள் எனக் கதிர் குழம்பினான். அருகில் வந்த அவள், ”தேங்க்யூ சார்!”, என்று கண் கலங்கியபடி கூறிவிட்டு விறுவிறுவென வசந்தியிடம் ஓடிச் சென்றாள்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!