Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பூவிடைப் பனித்துளிகள்

poovidaipaniththuligal 3 By Aruna Kathir

அத்தியாயம் 3

எங்கே நிற்கிறோம் என்று சுற்றும் உணர்ந்து தலையைச் சிலுப்பிக் கொண்ட திவ்யா, தண்ணீர் பிடித்து முடித்தில் அடித்துக் கழுவி, அழுகையை கட்டுப்படுத்தினாள்.

“லைஃப் இஸ் நாட் ஆல்வேஸ் ஃபேர். இட்ஸ் ஓகே திவி. பார்த்துக்கலாம். சீர் அப் திவி.” என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு சற்றே தெளிவுடன் அவள் வாஷ்ரூமை விட்டு வெளியே வரவும், அவள் கைப்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது.



Advertisement

“ஹலோ” என்று கைப்பேசியை காதிற்குக் கொடுக்க, “மிஸ். திவ்யபாரதி மேம்?” என்றது மறுமுனை.

“எஸ். ஸ்பீக்கிங்.”

“மேம், வி ஆர் காலிங் ஃப்ரம் யுனைடட் எம்பிரைட். டெக்னிகல் ஹெச்.ஆர் உங்களை மீட் பண்ணனும்னு சொல்லறாங்க. ஹேவ் யு லெஃப்ட் மேம்?” என்று அந்த கம்பெனியின் ஹெச்.ஆரிடமிருந்து அழைப்பு வரவும், திவ்யாவிற்குமே ஆச்சர்யம் தான்.

Advertisement

‘ஏன் தன்னை நிராகரித்தனர் என்று காரணம் சொல்லப் போகின்றனரா? பொதுவாக கம்பெனிகளில் இது போல் எல்லாம் காரண காரியம் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்களே!’ என்று அறிவு போட்டி போட்டுக் கொண்டு கேள்வியாய் தொடுக்க, திவ்யாவின் பாழும் மனமோ தவறாமல் பரணியிடம் போய் மண்டியிட்டது.

Advertisement

‘இத்தனை வருடங்கள் கழித்து தன்னைச் சந்தித்த காரணத்தினால், அவன் தன்னிடம் தொடர்புகொள்ள நினைக்கிறானோ? மீண்டும் தன்னிடம் பேச விழைகிறானோ? டெக்னிகல் ஹெச்.ஆர் என்றால் அவனா? ஆனால் நேர்காணல் குழுவில் அவனுமல்லவா இருந்தான். அப்படியென்றால் பரணி தான் அழைக்கிறானா?’ என்றெல்லாம் எண்ணி பரிதவித்துப் போனது.

கைப்பேசியில், “ஹலோ, மேம்… ஆர் யூ தேர்?” என்று மீண்டும் மீண்டுமாய் ஒலி எழுப்ப, சுய உணர்வு பெற்ற திவ்யா, “யெஸ் மேம். ஐம் இன் த ரெஸ்ட் ரூம். ஐ வில் ஜாயின் யூ நவ்.”

“ஓகே மேம். ப்ளீஸ் கம் டு த கான்ஃபரன்ஸ் ஹால் இன் செகண்ட் ஃப்ளோர்” என்று சொல்லிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது. திவ்யா, யோசனையுடன் திரும்ப நேர்காணல் நடைபெற்ற இடத்திற்கு வந்து சேர, இவளுக்காக, லிப்ஸ்டிக் பெண் காத்துக் கொண்டிருந்தாள்.

Advertisement

இவளைக் கண்டதும் சினேகமாகப் புன்னகைத்தவள், “கம் திஸ் வே மேம்” என்று கன்ஃபரன்ஸ் ஹாலை ஒட்டியிருந்த மற்றொரு அறைக்கு அழைத்துச் செல்ல, அங்கே மத்திம வயது நபர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருடன் காலையில் இவளுக்கு நேர்காணல் செய்த நபரும் இருக்க, சின்ன தலையசைப்புடன் உள்ளே சென்றாள் திவ்யா.

அவள் எதிர்பார்த்து வந்தது போல, மீண்டும் காணொளி மூலம் பரணியிடம் பேச வேண்டியிருக்காது என்ற எண்ணமே நிம்மதியாகவும், அதே நேரம் ஏமாற்றமாகவும் இருந்தது. நிம்மதி கொடுக்கிறதென்றால் அது மகிழ்ச்சியைத் தானே கொடுக்க வேண்டும்? ஆனால், அவன் பேசவில்லை என்ற விஷயம் ஏன் ஏமாற்றத்தை அளிக்கிறது?

இந்த ஆராய்ச்சியில் தன்னைத் தொலைக்க அப்போது திவ்யாவிற்கு அவகாசம் இருக்கவில்லை. அவள் எதிரே அமர்ந்திருந்த இருவரும் அவளுடன் பேசத் துவங்கியிருக்க, திவ்யா அதில் கவனம் செலுத்தினாள்.

“ஹாய் திவ்யபாரதி. ப்ளீஸ் டேக் யுவர் சீட். ஐம் ஜெபராஜ். திஸ் இஸ் மிஸ்டர். சிவபிரகாஷ். ப்ராஜெக்ட் மேனேஜர்.” என்று பொதுவாக அறிமுகப்படுத்திக் கொண்ட ஜெபராஜ் என்பவர், மேலே தொடர்ந்தார்.

“லெட் மீ கம் டு த பாயிண்ட். மத்த ரெண்டு பேர்த்தையும் செலக்ட் பண்ணியிருகோம், ஆஃபர் லெட்டர் குடுத்திருக்கோம், உங்களை செலக்ட் பண்ணலைன்னு நீங்க நினைக்கறீங்க இல்லையா?” என்று கேட்டு நிறுத்த, திவ்யா பொய் சொல்லாமல், ‘ஆமாம்’ என்று தீர்க்கமாக தலையசைத்தாள். ‘இல்லை, அப்படியெல்லாம் இல்லை’ என்று சமாளிக்கத் தோன்றவில்லை.

அவள் தலையசைப்பைக் கண்டு சிரித்த இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, மீண்டும் ஜெபராஜ் பேசினார். “சீ மிஸ். திவ்யா. உண்மைய சொல்லணும்னா மத்த ரெண்டு பேர்த்தை விடவும் உங்க ஆன்சர்ஸ் தான் டு த பாயிண்ட் க்ளியரா இருந்துச்சு. பட், இந்த பொசிஷனுக்கு இவ்வளோ நாலேட்ஜ் தேவைப்படாது. அதான் உங்களுக்கு அனாலிஸ்ட் பொசிஷன் ஆஃபர் பண்ணலை.” என்று நிறுத்தியவர் திவ்யாவின் முகம் குழப்பமாக மாறுவதை உணர்ந்து,

“பட், எங்க கம்பெனியில சீனியர் அனாலிஸ்ட் போஸ்ட் வேகன்சி இருக்கு. இஃப் யூ ஆர் இண்டிரெஸ்டட் வி கேன் கன்சிடர் யூ. உங்களுக்கு மூணு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. நல்ல கிரேட்ஸ் இருக்கு.” என்று சிரிப்புடன் கூறி அவளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர்.

திவ்யாவிற்கு சில நொடி பேச்சே வரவில்லை. அவர்கள் சொல்லும் விஷயத்தை முழுவதுமாக உள்வாங்கி, அது புரிந்து அவள் முகம் புன்னகைக்க சில நிமிடங்கள் ஆனது. எதிர்பாராத இந்த கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் திணறினாள்.

“பயந்துட்டாங்க ஜெபா. டோண்ட் ப்ளே யுவர் கேம்ஸ் ஆன் ஹர். பாவம்பா” என்று சிரிப்புடன் பேசிய சிவபிரகாஷ், மேலே தொடர்ந்தார்.

“யுவர் ஆன்சர்ஸ் இம்பிரஸ்ட் அஸ். சீனியர் அனாலிஸ்ட் போஸ்ட் வேகன்சிக்கு இன்னும் ஒரே ஒரு டெக்னிகல் ரவுண்ட் மட்டும் நீங்க அட்டெண்ட் பண்ண வேண்டியிருக்கும். ஐம் ஸ்யூர் யு கேன் க்ளியர் இட். ஆர் யூ வில்லிங் டு டேக் அப் த டெஸ்ட்?” என்று வினவ,

“எஸ் சார். ஐம் வில்லிங் டு டேக் த டெஸ்ட்.” என்று தயங்காமல் பதிலளித்தாள் திவ்யா. மனதில் பொங்கி வழிந்த சந்தோஷ ஊற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க பாடுபடத்தான் வேண்டியிருந்தது. ‘சே, துக்கமென்றாலும் மறைக்க வேண்டும், சந்தோஷமென்றாலும் மறைக்க வேண்டும்? என்ன பிறவிகளோ!’ என்று நொந்து கொள்ளவெல்லாம் திவ்யாவிற்கு நேரம் இருக்கவில்லை.

“ஓகே தென். நாளைக்கு காலையில ஷார்ப் டென்க்கு ஆபீஸ் வந்துடுங்க. நான் ஹெச்.ஆர்கிட்ட சொல்லிடறேன். ஜஸ்ட் ஒரு ஃபார்மல் ரவுண்ட் தான்.சோ, நத்திங் டு வர்ரி.” என்று சொல்லியவர், “உங்களுக்கு ஏதாவது எங்ககிட்ட கேட்க கேள்விகள் இருக்கா?” என்று சம்பிரதாயமாக வினவினார்.

சாதாரணமாக இது போன்ற கேள்விகளுக்கு, அவர்களுது கம்பெனி பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்பது நேர்காணல் நியதி. அது திவ்யாவிற்கும் தெரியும். ஆனாலும், வெகுவாகக் குழம்பிப் போயிருந்த அவள் மனமோ, ‘பரணி பரணி’ என்று மந்திரம் போல அவனைப் பற்றியே சிந்திக்க, அதுவே கேள்வியாகவும் அவள் வாய்மொழியாக வெளிவந்திருந்தது.

“உங்க ஆன் சைட் டீம் கேள்விகள் கேட்பாங்களா சார்?” என்று சற்றும் சம்பந்தமில்லாமல் திவ்யா கேட்க, அவள் எதற்காகக் கேட்கிறாள் என்று புரிந்திராத ஜெபராஜ், “மேபீ, அது நாளைக்கு யார் அவைலபீள்னு பார்த்துட்டு டிசைட் பண்ணுவாங்க. இட் இஸ் எ ஃபார்மல் ப்ராசஸ். சோ, நோ வரிஸ்” என்று கூறிய ஜெபராஜ், “ஆல் த பெஸ்ட் மிஸ். திவ்யபாரதி. சீ யூ சூன்” என்று விடை கொடுத்தார்.

“தேங்க்யூ சார்” என்று முகமன் கூறிவிட்டு விடைபெற்ற திவ்யா, கால்களில் ஒரு துள்ளல் நடையுடன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள். மாலை ஆறு மணி ஆகிவிட்டிருக்க, அலுவலகத்தை விட்டு வெளியே வரவுமே முதல் வேலையாக தினேஷை அழைத்தாள்.

முதல் அழைப்பிலேயே கைப்பேசியை எடுத்தவன், “ஏ, எரும! எங்கிருக்க? என்னாச்சு இண்டர்வியூ?” என்று ஆர்வமாக வினவினான்.

“ம்ம் முடிஞ்சுதுடா. பிக் ஸ்டேரி. என்னாச்சுன்னு நேர்ல சொல்லறேன். நீ எங்க இருக்க? ஆபீஸ் முடிஞ்சதா?”

“ம்ம், கிளம்ப போறேன் திவி.”

“சரி சரி. நானும் இப்போ தான் இங்கிருந்து கிளம்பியிருக்கேன்.”

“சரிடீ. க்ருபானிதி காலேஜ் பஸ் ஸ்டாப்ல இறங்கி வெயிட் பண்ணு. நான் வந்துடறேன். சாப்பிட்டுட்டு பி.ஜில ட்ராப் பண்ணிடறேன்.” என்று கதை கேட்கும் ஆர்வத்தில் தினேஷ் கூறி கைப்பேசியை அணைத்தான்.

பேருந்தில் ஏறியதும், அதிர்ஷ்டம் போல அன்று கிடைத்த ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து வெளியே வேடிக்கைப் பார்க்கத் துவங்கினாள். சிக்னலில் கல்லூரிப் பேருந்து ஒன்று அருகே வந்து நிற்கவும், இந்த சமிக்கைக்காக காத்திருந்தது போல அவள் கல்லூரி நினைவுகள் மனதில் வலம் வரத் துவங்கின. அதனுடன் சேர்ந்து அவன் நினைவுகளும்.

***

நான்கு வருடங்களுக்கு முன்பு,

“வேல்முருகன் சார் இன்னைக்கு வந்திருக்காரா? லேப் அசிஸ்டெண்ட் வந்திருக்கா? வரலைன்னா எதுவும் பிரச்சனையில்ல. சார் மட்டும்னா ரொம்ப செக் பண்ண மாட்டாரு, சமாளிச்சிடலாம்.” என்று அந்த கணினி லேப்பின் கண்ணாடித் தடுப்புகள் வாயிலாக உள்ளே பார்வையிட்டுக் கொண்டே அருகிலிருந்த திவ்யாவிடம் வினவினான் தினேஷ்.

திவ்யாவும் ஒரு எதிர்பார்ப்புடன் தன் பங்கிற்கு கம்ப்யூட்டர் லேபினுள் எட்டிப் பார்த்து, அங்கே இருக்கையில் அமர்ந்திருந்த ஹெச்.ஓ.டி வேல்முருகனைக் கண்டு மனம் சோர்ந்து போனாள். அவள் கண்கள் சென்ற திசையை வெறித்த தினேஷ் வருத்தமாக திவ்யாவை ஏறிட்டான்.

“அப்சர்வேஷன் நோட் இல்லாம கண்டிப்பா லேப்புக்குள்ள அலவ் பண்ண மாட்டார், சாரி திவி.” என்று திவ்யாவிடம் மன்னிப்பு கோரினான் தினேஷ். தான் எழுதவென்று நேற்று அவள் அப்சர்வேஷனை பெற்றவன், இன்று அவள் நோட்டையும் சேர்த்து வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்திருந்தான்.

அவனை முறைத்தாலும், சோர்வுடன் நின்றிருந்த தினேஷின் முகம் கண்டு தன் கோபத்தை தன்னுடனேயே வைத்துக் கொண்டாள் திவ்யபாரதி. அவளுக்காவது பரவாயில்லை, ‘நல்லா படிக்கற பொண்ணு, க்ளாஸ் டாப்பர்.’ என்ற நற்பெயர்கள் அவளை பல இன்னல்களில் இருந்து காப்பாற்றும்.

இதோ இப்போதும் கூட ஹெச்.ஓ.டி வேல்முருகன் சாரிடம் சற்றே கம்மிய குரலில், ‘நேத்து தினேஷ்கிட்ட என் அப்சர்வேஷன் குடுத்தேன் சார். இன்னைக்கு என் நோட்டையும் சேர்த்து வீட்டுல மறந்து வச்சுட்டு வந்துட்டான் சார்.’ என்று கூறினால் அவளை லேபினுள் அனுமதித்துவிடுவார் தான். ஆனால் அதைச் செய்ய அவள் மனம் ஒப்பவில்லை.

தன் முந்தைய ரோல் நம்பர் நண்பனான தினேஷை மாட்டிவிட விருப்பமில்லாமல், அவனுடன் கணினி லேப்பின் வெளியே நின்றிருந்தாள். மதிய உணவு இடைவேளை முடிவு பெற்றதற்கான மணி அடிக்க, அவர்கள் வகுப்பு மாணவர்கள் கணினி லேப் நோக்கி உள்ளே வரத் துவங்கியிருந்தனர்.

மற்ற மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அவர்களது வகுப்புகளுக்குச் செல்லத் துவங்க, “ஒரு நிமிஷம் இரு, வந்திடுறேன்.” என்று அவசரமாக தினேஷிடம் மொழிந்துவிட்டு ஓடினாள் திவ்யா.

பத்து நிமிடம் கழித்து திரும்பிய அவள் கைகளில், அவர்களது அப்சர்வேஷன் போன்ற இரு வேறு நோட்டுகள் இருந்தன. கணினி அறையினுள் மற்ற மாணவர்கள் சென்று கொண்டிருக்க, வெளியே தினேஷ் யாருடனோ பேசிக் கொண்டு நின்றிருந்தான்.

அவனிடம் ஓடிச் சென்ற திவ்யா, “இந்தா, இந்த நோட்டை பிடி. இது என் ஹாஸ்டல் ஃப்ரெண்ட்ஸ் ஐ.டி ஸ்டூடெண்ட்ஸோட அப்சர்வேஷன். இதை காமிச்சு இன்னைக்கு அந்த சேர்பல்லிய சமாளிச்சிடலாம். அந்தாளு ஒரு மஞ்ச மாய்க்கான். எல்லார் நோட்டையும் செக் பண்ண நேரம் இருக்காது. அதான் லேப் அசிஸ்டெண்ட் மேம் வேற இல்லைன்னு சொன்னல. அந்தம்மா இருந்தா தான் செக் பண்ணும்.” என்று சுற்றம் பற்றி யோசிக்காமல் பேசினாள்.

“திவி…” என்று தினேஷ் ஏதோ சொல்லத் துவங்க, அதை கவனிக்காத திவ்யா,

“ஏ… அந்தம்மா இருந்தா தான் பிரச்சனை. இந்த சோத்துப்பானையும் சேர் விட்டு அசையாது. ஒரே வாரத்தில இந்த லேப்புக்கு வேற எந்த அரைவேக்காடு அசிஸ்டெண்ட் குரங்கனையும் அப்பாயிண்ட் பண்ணியிருக்க மாட்டாங்க. சோ ப்ராப்ளம் இல்ல. வா, வா… உள்ள போலாம். சேர் பல்லி ஒருவேளை கண்டுபிடிச்சுட்டா, பாவமா மூஞ்சி வச்சுக்கிட்டு, ‘சாரி சார்! காலையில அவசரத்தில மாத்தி எடுத்துட்டு வந்துட்டேன் சார். ஈவ்னிங் எழுதி, நாளைக்கு காலையில சைன் வாங்கிடுறேன்னு’ பேசி நான் சமாளிச்சுக்கிறேன்.”

“இல்ல திவி… வந்து…”

“டேய், உன் நோட்டையும் நான்தான் வாங்கிட்டு போனேன்னு சொல்லி சமாளிச்சுக்கிறேன்டா. சேர்பல்லி, அதோட சேரை விட்டு இன்ச் கூட நகராது. ப்ளீஸ் வா… டைம் ஆகுது, உள்ள போலாம்.” என்று அவன் கையில் நோட்டை திணித்தாள்.

தினேஷோ அவள் கொடுத்த நோட்டை வாங்காமல், அவன் அருகில் நின்றிருந்த அந்த இளைஞன் முகத்தை சற்றே தவிப்புடன் ஏறிட்டான்.

தினேஷின் குழப்பப் பார்வையைக் கண்ட திவ்யா, “டேய், மலைமாடு! ஏன்டா திருதிருன்னு அந்தண்ணாவையே பார்த்துட்டு இருக்க? டைமாச்சு… வா போலாம், பை ண்ணா…” என்று தினேஷை இழுத்துக் கொண்டு லேப்பினுள் சென்றிருந்தாள்.

அந்த இளைஞனைக் கடந்ததும், “அவர் யாருன்னு தெரியுமா?” என்று பூடகமாக வினவினான் தினேஷ்.

“ம்ம்… தெரியுமே! நம்ம சூப்பர் சீனியர் அண்ணா தானே? கேம்பஸ்ல பார்த்திருக்கேன், ஏன்டா?”

“நேத்து வரைக்கும் தான் அந்தண்ணா சூப்பர் சீனியர். இன்னைக்கு நம்ம லேப் டியூட்டர் அவர்தான்.” என்று தினேஷ் கூற, திவ்யாவிற்கு பயத்தில் அந்த ஏசி குளிர்ச்சியையும் மீறி வியர்த்தது.

“அவர் முன்னாடியே, ஹெச்.ஓ.டியை மஞ்சமாய்க்கான், சோத்துப்பானைன்னு…” என்று திவி திணற, அவர்கள் பின்னூடே லேப்பினுள் நுழைந்த அந்த இளைஞன் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஹெச்.ஓ.டியிடம் சென்றிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!