Skip to content
Post Views: 5,017
நான் தேடும் காதல் நீ…..2
அமரனிடம் பேசிவிட்டு தனது கடைக்கு வந்த தீர்த்தாவின் மனநிலை மிகவும் மோசமடைந்திருந்தது எங்கே அனைவரின் முன்னும் அழுதுவிடுவோம் என்று உணர்ந்தவள் வேகமாக வீட்டின் உள்ளே சென்று முகத்தை தண்ணீர் அடித்து கழுவி விட்டு வந்து தனது வேலைகளை தொடங்கிவிட்டாள்.அதன் பின் அவளின் வேலைகள் அவளை விழுங்கி கொண்டன.
இரவு தீர்த்தா தனது கடையை அடைக்கும் நேரம் அமரனும் தனது மண்டியை அடைத்துவிட்டு வெளியில் வர,எங்கே அவனை பார்த்ததும் பேசி விடுவோம் என்று வேகமாக தனது வீட்டின் உள்ளே ஓடிவிட்டாள்.அதனை கவனித்தும் கவனிக்காதது போல் தனது புல்லட்டை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான் அமரன்.
அவனை பொறுத்தவரை காதல் என்பது வேலை இல்லாதவர்கள் செய்வது.அதோடு தனக்கு இன்னார் என்று தனது வீட்டில் பேசி வைத்திருக்க அதன் பின் வேறு ஒருவளை பார்ப்பது கூட தவறு என்று சொல்லி வளர்க்கப்பட்டிருக்க அவனிற்கு தீர்த்தாவின் செயல்கள் யாவும் குழந்தை தனமாக இருந்தது.
Advertisement
அமரன் தனது வீட்டின் வாசலை அடையும் போதே வேகமாக ஓடிவந்து கதவை திறந்தார் அகிலா.
“ம்மா….எத்தனை தடவை சொல்லியிருக்கேன்….எனக்காக காத்துக்கிட்டு இருக்காம…சாப்பிட்டு தூங்குங்கனு….”என்று செல்லமாக அவரைக் கடிந்து கொண்டே வீட்டின் உள்ளே வர,
“அவ என்னைக்கு நம்ம சொல்லுறத கேட்டிருக்கா….”என்று இரவு உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்த அமரனின் அத்தை கற்பகம் அகிலாவை முறைக்க,
Advertisement
“அண்ணி….அது உங்களுக்கே தெரியும்ல அவன் இல்லாம நான் என்னைக்கு சாப்பிட்டிருக்கேன்….”என்ற அகிலா மகனிடம் திரும்பி,
Advertisement
“போப்பா….போய் முகத்தை கழுவிட்டு வா சாப்பிடலாம்…..”என்றுவிட்டு சாப்பாட்டு மேஜையின் நாற்காலியில் சோர்வாக அமர,
“இந்தா இதுக்கு தான் புள்ளை திட்டுது…..உனக்கு தான் ஆக மாட்டேங்குதுல அப்புறம் எதுக்கு இந்த வீம்பு….”என்று கற்பகம் அகிலாவிற்கான உணவை வைத்துக் கொண்டே திட்ட,
“ப்ச்….அண்ணி அவரு போனதுக்கு அப்புறம் எனக்கு எல்லாம் கண்ணா தான் அவன் இல்லாம நான் இல்லை….அதனால என்னோட சில விஷயங்களை என்னால மாத்திக்கவே முடியலை….அதோட இந்த பத்து நிமிஷம் அவனோட நான் பேசிட்டு இருப்பேன்ல்ல….”என்று சிறுபிள்ளை போல கூறுபவரிடம் மேலும் வாதம் புரிய மனம் வரவில்லை கற்பகத்திற்கு மாறாக தன் தம்பி பாண்டியன் கூறியது தான் நினைவில் வந்தது,
Advertisement
“க்கா….அகிலா பார்க்குறதுக்கு தான் தைரியமா இருப்பா ஆனா மனசு குழந்தை மாதிரி அவளுக்கு நானும் அமரனும் தான் உலகம்….எங்க இரண்டு பேருல யாருக்காவது ஒண்ணுனா உடைஞ்சி போயிடுவா….அவளை நீ தான் க்கா பார்த்துக்கனும்….”என்று கடைசி நொடியில் தன் கைகளை பற்றி கூறிய வார்த்தைகள் இன்றளவும் அவரால் மறக்க முடியுயாதவை ஆயிற்றே.
“அத்த என்ன கனவு கண்டுகிட்டு இருக்க…சாப்பிடு….”என்ற அமரனின் குரலில் சுயத்திற்கு வந்தவர்,
“ஆங்…சாப்பிடுறேன்பா….”என்றுவிட்டு உண்ண தொடங்க,அகிலாவிடம் அமரன் இன்றைய நாள் கணக்கு விபரங்களை கூறிக் கொண்டே சாப்பிட்டான்.அகிலாவும் அவன் கூறுவதை கேட்டுக் கொண்டே உண்டார்.
“அப்புறம் அம்மா சாமியப்பன் கணக்கை முடிக்க போறேன்….. நாளைக்கு அவரை வந்து கணக்கை முடிக்க சொல்லிட்டேன்மா….அவரு இருந்தவரைக்கும் ஒழுங்கா இருந்தது இப்ப அவரு பிள்ளைக எல்லாம் சரியில்லை அதனால முடிக்க சொல்லிட்டேன்…..”
“சரி கண்ணா நீ செஞ்சா சரியா தான் இருக்கும் இதெல்லாம் என்கிட்ட சொல்ல வேண்டாம்ப்பா….”
“அப்படி சொல்லாதிங்கமா நீங்க எப்போதும் போல இருங்க அது தான் எனக்கு வேணும்…..அப்பா இருந்தவரைக்கும் நீங்களும் அப்பாவும் தான எல்லாம் பார்த்துகிட்டது….அப்பா இறந்ததுக்கு அப்புறம் நீங்களும் நாச்சியப்பன் தாத்தாவும் என்கூட இல்லனா நான் இன்னைக்கு இந்தளவுக்கு வந்திருக்க முடியாது…..அதோட என்னைக்குமே நம்ம கடை கணக்கு நம்ம வீட்டுல உள்ளவங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கனும் அப்ப தான் எதாவது கஷ்டம் வந்தாலும் நம்மலால சமாளிக்க முடியும்….”
“சரிடா கண்ணா….நான் நோட்டுல குறிச்சி வச்சிடுறேன்….போதுமா….”
“ம்ம்….அத்த நீ என்ன அமைதியா இருக்க….”என்று கற்பகம் புறம் திரும்ப,
“எனக்கு என்னடா பேச இருக்கு….எதுவும் இல்லை….”
“அப்படியா….சரி தாமரை பேசினாளா….”என்று கேட்க,
“நீங்க எதை கேட்டா பேசுவீங்கனு கரெட்டா கேட்குறான் பாருங்க….”என்று அகிலா கூறி சிரிக்க,கற்பகமும் அவன் கேட்டதை ஆர்வத்துடன் கூற தொடங்கினார்.
“ம்ம் போட்டா கண்ணா…நல்லா இருக்காளாம்….சாப்பாடு தான் ஒத்துகலையாம்….”என்று தன் மகளை பற்றிய விபரங்களை கூற தொடங்கிவிட இது இப்போது முடியாது என்று தெரிந்த அகிலாவும் எழுந்து சென்றுவிட்டார்.
கற்பகத்திடம் சற்று நேரம் பேசியவன் பின் அவரை உறங்க அனுப்பிவிட்டு மேஜையில் இருந்தவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு தன் அறையில் படுக்கையில் விழுந்தான்.அவனின் எண்ணங்கள் யாவும் இன்று காலை தீர்த்தா கூறியதிலேயே நின்றது.
“இனி உன்னை பார்க்க மாட்டேன்….”என்று கூறிய தீர்த்தாவின் முகம் தான் வந்தது.
“இதையே நூறு தடவையாவது சொல்லியிருப்பா….இவளை என்ன செய்யறதுனு தான் தெரியலை….”என்று தனக்குள் கூறி கொண்டவனின் முகம் வெகுவாக கசங்கி இருந்தது.இது நடக்க போவது இல்லை என்று தெரிந்தும் ஏன் இவள் இப்படி இருக்கிறாள் என்று தான் அவனின் கவலை.தீர்த்தாவை பற்றி நினைக்கையில் அவளை முதன் முதலில் பார்த்த நிமிடங்கள் தான் மனகண் முன் வந்தன,
அன்று தான் அமரன் பள்ளிக்கு செல்லும் முதல் நாள் என்பதால் பாண்டியனும்,அகிலாண்டேஸ்வரியும் தான் அவனை பள்ளியில் விடுவதற்காக வந்திருந்தனர் அப்போது,
“தாத்தா அதோ பாரு பாண்டியன் மாமா….”என்ற குரலில் பள்ளி வளாகத்தின் உள் நுழைந்தவர்கள் மூவரும் திரும்ப,இரட்டை ஜடையில் குண்டு கன்னங்களுடன் ஓடிவந்தாள் சிவதீர்த்தா.
“அட நம்ம தீர்த்தா குட்டி….எப்படிடா இருக்க….”என்று பாண்டியன் அவளை தூக்கி கொள்ள,
“நான் நல்லாயிருக்கேன் மாமா….நீங்க நல்லாயிருக்கீங்களா…ஏன் இரண்டு நாளா கடைக்கு வரலை….நான் உங்களை தேடுனேன்…..”என்று தன் தந்தையிடம் உரிமையுடன் வளவளக்கும் சிறுமியைக் கண்டு சற்று பொறாமைக் கூட எழுந்தது அமரனிற்கு,
“ஏய் வாயாடி…..நீயும் இந்த ஸ்கூல்லையா சேர்ந்திருக்க….”என்று அகிலா கேட்க,அவரை முறைத்தவள்,
“நான் வாயாடி இல்லை….அப்புறம் மாமா இது தான் உங்க பையன் அமரனா….ஹாய் அமரா….”என்று வெகு இயல்பாக அவனின் முன் வந்து கரம் நீட்ட,
“என் பேரு அமரன் இல்லை அமரதேவன்….”என்று அழுத்தமாக பதிலளித்தான் குட்டி அமரன்,
“நீ எனக்கு எப்போதும் அமரன் தான்…..”என்று அவனை போலவே அழுத்தமாக தீர்த்தா கூற,
“கொழுப்பை பார்த்தீங்களா இவளுக்கு என் பிள்ளைக்கிட்ட மல்லுக்கு நிக்குறா…..”என்று அகிலா தீர்த்தாவின் கன்னத்தில் லேசாக இடிக்க,
“ஆ மாமா வலிக்குது…..”என்று தீர்த்தா அழுவது போல் பாசாங்கு செய்ய,
“என்ன அகிலா இது அவ குழந்தை அவகிட்ட போய்….அமரா இது தீர்த்தா நம்ம நாச்சியப்பன் இருக்காங்கல்ல அவரோட பேத்தி நீ பத்திரமா பார்த்தக்கனும் புரியுதா….”என்று பாண்டியன் தீர்த்தாவை முறைத்துக் கொண்டு இருக்கும் மகனிடம் கூற அந்த நேரம்,
“வா பாண்டியா….வாம்மா அகிலா….”என்றபடி வந்தார் நாச்சியப்பன்.
“என்ன நீயும் பிள்ளைய இங்க தான் சேர்த்திருக்கியா….நல்லாயிருக்கியாடா கண்ணா….”என்று அமரனை நாச்சியப்பன் தூக்க,அமரனுக்கு நாச்சியப்பனை நன்கு தெரியுமாதலால்,
“நல்ல இருக்கேன் தாத்தா….”என்றுவிட்டு தீர்த்தாவை மிதப்புடன் பார்க்க அவளோ அவனை எப்போதும் போல் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“தீர்த்தா குட்டி இது தான் அமரதேவன் உன் பாண்டியன் மாமா பையன்….நீ ஹாய் சொன்னியா….”என்று நாச்சியப்பன் தன் பேத்தியிடம் விசாரிக்க,
“ஓ…நான் எப்பவோ சொல்லிட்டேன் தாத்தா….அவன் தான் எனக்கு இன்னும் ஹாய் சொல்லலை….”என்று தீர்த்தா கூற,
“சரியான வாயாடி தான் நீ….வைதேகி பேசவே மாட்டா அவளுக்கு இப்படி ஒரு பொண்ணு….”என்று அகிலா நொடித்துக் கொண்டார்.அவருக்கு வாய்க்கு வாய் பேசும் தீர்த்தாவை சற்று பிடிக்கவில்லை அதோடு தன் மகனை உரிமையாக அழைக்கும் பாங்கும் பிடிக்கவில்லை.
“ஹா ஹா….இவ இப்படி தான்மா படபட பட்டாசு….”என்று கூறிவிட்டு அமரனை இறக்கிவிட்டு தீர்த்தாவின் கை பிடித்து,
“சரி பாண்டியா நான் இவளை கிளாஸ்ல விட்டுட்டு கிளம்புறேன்….வரேன்மா….”என்று நாச்சியப்பன் விடைபெற,
“தாத்தா இவன் இன்னும் எனக்கு ஹாய் சொல்லலை….”என்று தீர்த்தா அமரனின் முன் வந்து,
“நான் உனக்கு ஹாய் சொன்னேன் தான நீ எனக்கு சொல்லு….”என்று கூற,முடியாது என்று கூற வந்தவன் பாண்டியனை பார்த்துவிட்டு ஹாய் என்று கூற,
“ப்பா…என்ன மாமா இவன் பேசவே இப்படி யோசிக்கிறான்….இவனை எப்படி நான் பிரண்டா வச்சிக்கிறது….”என்று அதற்கும் தீர்த்தா நொடிக்க,அமரனிற்கு கோபமான கோபம் தீர்த்தாவின் மேல் ஆனால் காட்ட தான் முடியவில்லை.
“பேசுவான்டா…..இப்ப தான உன்னை முதல் முறை பார்த்திருக்கான்….பழக ஆரம்பிச்சதும் பேசுவான்…..நீ வா உன்னை கிளாஸ்ல விட்டுட்டு போறேன் உன் அம்மா வேற காத்திட்டு இருப்பா…..”என்று கூறிவிட்டு அவளை அழைத்து செல்ல,அவனையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு சென்ற தீர்த்தாவை பார்த்து கொன்னுடுவேன் என்று அமரன் கை காட்ட,அவளோ அவனை போடா என்றுவிட்டு சென்றுவிட்டாள்.
அப்படி தொடங்கியது தான் அமரன்,தீர்த்தாவின் நட்பு.அவர்களுடன் அதே பள்ளியில் படித்தவன் தான் கதிர்வேலன்.அவனிற்கு கால் சற்று குறைபாடு இருந்ததால் சற்று தாங்கி தாங்கி தான் நடப்பான்.அவனை அனைவரும் ஒதுக்க தீர்த்தா தான் முதலில் அவனிடம் நட்பு கரம் நீட்டியது அதன் பின் அமரன்.இந்த மூவரின் கூட்டணி இன்றளவும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.மூவருக்குள்ளும் சண்டைகள் வந்தாலும் மூவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததில்லை.இதில் எப்போது தீர்த்தாவின் நட்பு காதலாக மாறியது என்று தான் தெரியவில்லை.
அடுத்த நாள் காலையில் அமரன் தனது மண்டிக்கு கிளம்பி கொண்டிருந்த போது அவனை பார்ப்பதும் போவதுமாக இருந்த கற்பகத்தை கண்டவன்,
“அத்தை என்ன வேணும் என்கிட்ட கேட்க உனக்கு என்ன தயக்கம்….”என்று நேரிடையாக கேட்க,
“அச்சோ கண்ணா எனக்கு உன்கிட்ட என்ன தயக்கம்….அது இந்த வாரம் நாம தாமரை பார்க்க போகனும் சொல்லியிருந்தோம்ல….”
“ஆமா அத்தை நான் மறக்கலை….வண்டியெல்லாம் சொல்லி வச்சிட்டேன்…..”
“ம்ம்….அது அவளுக்கு சிலது வாங்கனும் அதான் உனக்கு எப்படி வசதிபடும்னு தான் கேட்கலாம்னு இருந்தேன்….”
“என்ன வாங்கனுமோ நீங்களும் அம்மாவும் போய் வாங்கிடுங்க அத்தை….எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு…..வர சனிகிழமை காலையில ஆறு மணிக்கு கார் வந்துடும்…..”என்றவன் அகிலாவிடம் கூறிவிட்டு கிளம்பிவிட,கற்பகத்திற்கு சற்று சுணக்கம் தன் மகளை தான் அமரனுக்கு திருமணம் செய்து வைப்பதாக சிறு வயதிலேயே பேசி வைத்தாயிற்று ஆனால் அமரன் இன்று வரை தாமரையை ஆசையாக பார்த்தது போல் இல்லை கேட்டால் படிக்கும் பெண்ணிடம் இது போல் பேச்சுக்கள் வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டான்.ஆனால் அவளிற்கு ஏதாவது வாங்குவதற்கு கூட வர மறுக்கிறானே என்று நினைத்து கொண்டிருக்க,
“என்ன அண்ணி….ஏதோ யோசனையில இருக்கீங்க….”என்று கேட்டவாரே அகிலா வர,
“ஒண்ணுமில்ல அகிலா….எல்லாம் நம்ம கண்ணாவையும்,தாமரையையும் பத்தி நான் நினைச்சிக்கிட்டு இருக்கேன்….”என்றவர் தன் மனதில் எழுந்த சந்தேகத்தை கேட்க,
“அண்ணி என்னதிது நீங்க என் பிள்ளை சந்தேகப்படுறீங்களா….”என்று அகிலா சற்று கோபமாகவே கேட்க,
“அப்படி இல்லை அகி…..நாம அவனை வற்புறுத்துறோமோனு எனக்குள்ள ஒரு எண்ணம் அதான் கேட்டேன்…..”என்ற கற்பகத்தின் கண்கள் கலங்கி இருந்தது.
“என்ன அண்ணி பேசுறீங்க நீங்க….நாம எங்க வற்புறுத்துறோம் அவனை….”
“இல்லையா பின்ன….என் புருஷன் சாவுக்கு உன் அப்பா தான் காரணம் அதனால நீ தாமரையை கல்யாணம் பண்ணிக்கனும் தான அவன்கிட்ட சொல்லி வச்சிருக்கீங்க….ஆனா அவனுக்கு என் பொண்ணை பிடிக்குமா….அது தான் மனசை அழுத்திக்கிட்டே இருக்கு….”என்று தாயாக கற்பகம் கவலைபட,
“பிடிக்காம தான் அவன் அவளுக்கு எல்லாம் செய்யுறானா….நீங்க உங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க அண்ணி….”
“பிடிச்சு செய்யறது போல இல்லையே…..இதோ இப்ப கூட அவளுக்குனு தான் கடைக்கு கூப்பிடுறேன்….நீங்க போய் வாங்கிங்கோங்க எனக்கு வேலையிருக்குனு சொல்லிட்டான்……”
“அப்படி அவன் சொன்னா கண்டிப்பா ஏதோ முக்கிய வேலை இருக்கும் அண்ணி…..ஏன் உங்க கண்ணாவை உங்களுக்கு தெரியாதா….நீங்க இப்பல்லாம் தேவையில்லாதது எல்லாம் அதிகம் யோசிக்கிறீங்க…நாம நம்ம பிள்ளைகளுக்கு நல்லது தான செய்யிறோம் அப்புறம் எதுக்கு இந்த பயம் எல்லாம்…..”என்ற அகிலா கற்பகத்தின் கண்ணீரை துடைத்துவிட,
“என்னவோ மனசுல தோணினதை கேட்டுட்டேன்…..நீ…”என்றவரை தடுத்த அகிலா,
“அண்ணி போதும் நீங்க கேட்டது தப்பில்லை….ஆனா இந்த பயமே தேவையில்லாதது தான் நான் சொல்லுறேன்….இப்பவாங்க நீங்க தாமரைக்கு என்னனென்ன வாங்கனும் அதை எல்லாம் லிஸ்ட் போடுங்க….”என்று கற்பகத்தை திசை திருப்பிய அகிலாவிற்கு அவரின் சிந்தனைகளை திசை திருப்ப முடியாமல் போனது. மனதில் தன் கணவரின் இறப்பு அதற்கு முன் நடந்தவைகள் என்று ஒன்றன் பின் ஒன்றாக நினைவடக்கில் வர துவங்கி மனதை இன்னும் ரணமாக்கியது.
error: Content is protected !!