Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பூவிடைப் பனித்துளிகள்

poovidai panithugal 9 by Aruna Kathir

பூவிடைப் பனித்துளிகள்

அத்தியாயம் 9

மணி ஆறு நாற்பத்து ஐந்து ஆகியிருந்தது. சரியாக இருட்டு கவிழும் சமயமாகத் தான் பார்த்து வந்திருந்தாள். ‘டேஸ்காலர் பிள்ளைக எதுவும் இப்போ இருக்காது. ஹாஸ்டல் ஸ்டூடெண்ட்ஸ் யாராவது பார்த்தா தான் எதாச்சும் நினைப்பாங்க. அதுலையும் நம்ம க்ளாஸ் மக்கள் கண்ணுல விழுகாம இருக்கணும்.’ என்றெல்லாம் எண்ணிக் கொண்டு, எதற்கும் இருக்கட்டும் என கையோடு ஒரு புத்தகத்தையும் எடுத்து வந்திருந்தாள்.

தூரத்தில் திவ்யா நடந்து வரும் பொழுதே பரணி அவளை கவனித்து, தான் அமர்ந்திருந்த திண்டில் இருந்து எழுந்து நின்று கொண்டான். அணிந்திருந்த ஓணம் புடவையில் இருந்து சுடிதாருக்கு மாறியிருந்தாள். தலையில் வைத்திருந்த மல்லிகைச் சரத்தைக் காணவில்லை. ஆனால் காதில் அந்த பெரிய முத்து ஜிமிக்கி அப்படியே இருந்தது.



Advertisement

‘டேய் டேய்… சாரி சொல்ல கூப்பிட்டிருக்க. உன் லவ்வை சொல்ல இல்ல. கொஞ்சம் டீசெண்டா பிஹேவ் பண்ணு.’ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன் அவள் அருகே வந்ததும், “ஹாய்!” என்று அவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டு கண்ணெடுக்காது புன்னகைத்தான்.

ஒருவரின் பார்வையிலேயே அவர்களது உள்ளத்து உணர்வுகளைக் கொட்ட முடியுமா? அல்லது அவன் பார்வையின் பொருள் திவ்யாவிற்கு அவ்வளவு தெளிவாக விளங்குவானேன்?

திவ்யாவிற்கு பரணியின் சிரிப்பு அப்படித்தான் இருந்தது. அவளைக் கண்டதில், அவன் அழைப்பை ஏற்று அவள் வந்ததில் அவனுக்கு மட்டற்ற பெருமகிழ்ச்சி என்று, அழகாய் பல்வரிசை பளிச்சிட விகசித்த அவன் முகம் அவளுக்குச் சொல்லியது.

Advertisement

திவ்யா சின்ன தலை அசைப்புடன் அவன் முகமனை ஏற்றுக் கொண்ட போதும், அவள் கண்கள் அருகில் சக்திவேல் இருக்கிறானோ என்று தயக்கமாக சுற்றும் முற்றும் சுழன்றன.

Advertisement

 அவள் பார்வை சுழற்சியைப் புரிந்து கொண்டவன், “சக்திவேல் கூட வரலை.” என்றவன், அவளாக எதுவும் சொல்லப் போவதில்லை என்று உணர்ந்து தானாக பேச்சைத் துவங்கினான். அவன் மனம் உற்சாகத்தில் தட்டாமாலை போல சுழன்றது. பின்னே, மதிய நேர நிகழ்வு எதுவுமே நடவாதது போல, மெல்லிய புன்னகையை உதட்டின் ஓரத்தில் நெளியவிட்டபடி அவன் முகம் பார்த்து, முக்கியமாக அவன் கண்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த திவ்யாவிடம், எங்கிருந்து பேச்சைத் துவங்குவது என்று பிடிபடாமல் திணறினான் பரணி.

அவன் கண்கள் அவளை அணு அணுவாக அளவெடுத்தாலும், உதடுகள் என்னவோ பேசத் துவங்கியிருந்தன. சில்லென்று மனதில் பரவிய உணர்வு அவன் மனதை குளிர்விக்க, லேசாக தலை சாய்த்து நின்றிருந்த திவ்யாவிடம் பேசலானான் பரணி.

“திவ்யா, உன்னை நேர்ல பார்த்து சாரி சொல்லணும்னு தோனுச்சு. மதியம் வேற ஏதோ டென்ஷன். அந்த கோபத்தை உன் மேல காட்டிட்டேன். ஐம் ரியலி சாரி! நீ வெளிய வேடிக்கை பார்த்துட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது. நான் நடத்துற டாப்பிக் இம்பார்டண்ட். அதான் பிரைட் ஸ்டூடெண்ட் நீயே கவனிக்காம இருக்கியேன்னு கோவத்தில கத்திட்டேன்மா. உன்னை வெளிய போக சொல்லியிருக்க கூடாது.” என்று திக்கித் திணறி, தன்னெதிரே இருந்தவளிடம் சுற்றம் மறந்து பிதற்றினான்.

Advertisement

திவ்யா பதில் சொல்லாவிடினும், அவள் முகத்தில் படர்ந்த வெட்கமும் அதன் பொருட்டு தலையை சன்னமாக குனிந்து கொண்ட பாங்கும், இதையெல்லாம் துளி மிச்சம் வைக்காமல் ஆழ்மனதில் கிரகித்துக் கொள்ளும் தன் ரசனையும் கண்டு, மீண்டும் வியர்த்துவிட்டது பரணிக்கு.

அவள் மறுமொழியாக சொல்ல விரும்பிய வார்த்தைகளை அவள் விழி மொழியாலேயே கடத்திவிட்டிருந்தாள். இருந்தாலும் அவள் வாய் மொழியாக வார்த்தைகள் கேட்க ஆவலாக தன்னைப் பார்த்த கண்களை இம்சிக்காது, “இட்ஸ் ஓகே சார். நான் அதை அப்போவே மறந்துட்டேன்.” என்று கூறினாள்.

அவள், ‘மறந்துட்டேன்’ என்று கூறியது கேட்கவும், சட்டென தலையைத் தூக்கி அவளை ஆழமாக பரணி பார்க்க, அவன் விழிகளோ, ‘மறந்துட்டியா? எதை? நான் பார்த்ததையா? இல்ல, பதிலுக்கு உன் உதடுகளோட சேர்த்து உன் கண்கள் சிரிச்சதையா? நான் சிரிச்சதை கவனிச்சு, நீ அழகா வெட்கப்பட்டு தலை குனிஞ்சதையா? எதை மறந்துட்ட திவி?’ என்று அவன் பித்துமனம் பிதற்றியதை வார்த்தைகளாக்காமல் கண்களால் வினாக்கள் தொடுத்திருந்தான்.

அவன் சட்டென நிமிர்ந்து பார்ப்பான் என்பது முன்னமே தெரிந்தது போல, பதட்டமும் பயமும் மனதில் எழுந்த பேரிரைச்சலும் என, கலவையான உணர்வுகள் காட்டாற்று வெள்ளமென அவள் உள்ளத்தை முட்டி மோதின. என்னதான், ‘திவி, என்ன பண்ற? அவன் பேசுறதுக்கு இடம் குடுத்துட்டு இருக்க? பை சொல்லிட்டு கிளம்பு.’ என்று அவள் அறிவு அரணமைத்திருந்தாலும், பொங்கி வந்த எண்ண அலைகள் அந்த அரணை நொடிப்பொழுதில் மூழ்கடித்திருந்தது.

அவன் பார்த்த மாத்திரத்தில் மனம் படபடக்க, கண் இமைகளை அழுந்த மூடி தன்னை கட்டுக்குள் கொண்டு வர எத்தனித்தாள். அவள் எடுக்கும் முயற்சிகள் கண்டவனின் நெஞ்சம் சற்றே கலங்கியது. அவன் மனதில் அந்த நொடி பொங்கி வழிந்த காதலை தன் மூச்சுடன் ஆழ்ந்து நெஞ்சுக்குள் இழுத்துச் சென்று தன் அடிமனதில் சேமித்தான். அவளது தயக்கத்தை அணுவணுவாய் தன் கண்களில் பருகிக் கொண்டவன், “திவ்யா!” என்று பட்டினும் மென்மையாக அவள் பெயர் சொல்ல, மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல அவள் மீண்டும் அவன் முகம் பார்த்தாள்.

“திவ்யா லேட்டாச்சு, நீ கிளம்பு.” என்று அழகாய் தலையசைத்து புருவமுயர்த்தி கூறினான். அவன் சொல் கேட்டு, தானும் கண்களை அகலமாக விரித்து தலையசைப்புடன் விடைபெற்றுக் கொண்ட திவ்யாவின் விழி ஆழத்தில் விழுந்து, மீண்டுமொரு முறை இனிதாய் தொலைந்து போனான் பரணி.

அவள் திரும்பிச் செல்ல எத்தனிக்க, “ஏ திவ்யா, ஒரு நிமிஷம்…” என்றவனின் அழைப்பில் தேங்கி நின்றாள். ஒப்பனைகள் இல்லாத முகத்தில், அந்திமாலை தென்றலுடன் சண்டையிட்டபடி அவள் நெற்றியில் தவழ்ந்த முடிக்கற்றைகளை ஒற்றை விரலால் எடுத்து காதுமடல் பின்னால் சொருக, காத்திருந்தது போல் அவள் முத்து ஜிமிக்கி அவள் கன்னத்துடன் உரசியது.

பரணி தான் சொல்ல வந்த விஷயம் மறந்துவிட்டவனாக, அவன் கவனம் சிதறிப்போயிருக்க, அவள் ஜிமிக்கி அசைவில் கண் பதித்து செயலிழந்து நின்றுவிட்டான். ‘என்ன இந்தப் பெண் தன்னை இப்படி அலைக்கழிக்கிறாள்?’ என்று அவன் மனது கேள்வி எழுப்பியது.

“சார்… ஹலோ சார்…” என்று திவ்யா ஒரு கையை அவன் முகம் முன்னே அசைத்து அழைத்தாள். அவன் பார்வையும் ரசிப்பும் புரிந்திருந்த போதும், திவ்யாவின் மனம் அவளை பலமாக எச்சரித்தது.

‘சார்’ என்ற அவளின் அழுத்தமான அழைப்பில் உயிர்பெற்றவன் ஒரு நொடி கண்களை மூடித் திறந்தான். ‘டேய், நீ அவளுக்கு லெக்சரர், மறந்திடாத.’ என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டான். முன்னர் அவன் கண்ணில் தென்பட்ட பொலிவு சற்றே மட்டுப்பட்டிருந்தது போலொரு மாயத் தோற்றம் உண்டாயிற்று.

“ஹான்… என்ன?” என்று உணர்வு பெற்றவனாய் அவளிடம் வினவ, “நீங்க தான் கூப்பிட்டீங்க.” என்று அவனுக்கு நினைவூட்டினாள்.

கனவிலிருந்து மீள்பவன் போல, “ஓ…” என்று திவ்யாவிடம் கண்சிமிட்டி முறுவலித்தவன், “மறந்துட்டேன், இந்தா.” என்று அவன் பாக்கெட்டில் இருந்து ஒரு பெரிய டெய்ரிமில்க் சில்க் மிட்டாயினை நீட்டினான். திவ்யா தயக்கத்துடன் மிட்டாயையும் அவன் முகத்தையும் மாறி மாறி நோட்டம் விட்டாள்.

பின்பு, “இல்லை சார், இட்ஸ் ஓகே…” என்று மறுத்துப் பேசத் துவங்கும் முன், “பரவாயில்ல, வாங்கிக்க.” என்று அவளிடம் மீண்டுமாய் நீட்டினான். இம்முறையும் வேண்டாம் என்று மறுப்பது அநாகரீகமாக இருக்கும் என்ற எண்ணத்தில், “தேங்க் யூ!” என்று அதிகம் சப்திக்காமல் அவன் கையிலிருந்து மிட்டாயினை பெற்றுக் கொண்டாள்.

வாங்காமல் அவள் சென்றிருக்கலாம் தான். பல இன்னல்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். கடைசியாக அங்கிருந்து கிளம்பும் நேரம் பரணியிடம் அந்த பார்வையை உதிர்க்காமலாவது போயிருக்கலாம்.

அவள் பார்வையும் தன்னை கீழ் கண்களால் அவள் அடிக்கடி நோட்டம் விட்ட விதமும், விடுதி நோக்கி நடந்த சமயம் சின்ன தலை அசைப்புடன் விழிகளாலேயே அவள் விடைகொடுத்த நொடிகளும், பரணியின் மனதை மயக்கி விட்டிருந்தன. அவளின் போதையூட்டும் பார்வையை மனதின் ரகசிய அறைகள் முழுக்க நிரப்பிக் கொண்டவன், திவ்யாவின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு தன் விடுதி நோக்கி சென்றான்.

‘ஏன் திவி இப்படி அவனைப் பார்க்கற? உன் வேலையை மட்டும் கவனி திவி. அவனை என்கரேஜ் பண்ற மாதிரி நடந்துக்காத. இதெல்லாம் பிராக்டிகலா நடக்க சாத்தியமே இல்லை. உன்னால அவனும் சேர்ந்து தான் காயப்படுவான். அவன் வேலை போகும். உன் பேர் கெட்டுப் போகும். இதெல்லாம் அவசியமில்ல திவி. கொஞ்சம் உன்னை கண்ட்ரோல் பண்ணிக்க.’ என்று அவள் மனமே அவளை திட்டிக்கொண்டு வர, திவ்யா இந்த எண்ணத்துடன் கையில் பிடித்திருந்த டெய்ரிமில்கை சுற்றிக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.

“கைல என்னடி சாக்லேட்? யார் குடுத்தா?” என்று வினவிய நர்மதாவிடம், நடந்த விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாமா என்று சில நிமிடம் யோசித்தாள் திவ்யா. ஆனால், பரணி அவளுக்கும் பேராசிரியர் ஆயிற்றே? அவனைப் பற்றி இதெல்லாம் சொல்லும்போது, நர்மதா எப்படி நடந்து கொள்வாளோ என்ற கவலை மேலோங்கியது.

“சாப்பிடணும் போல இருந்துச்சுன்னு வாங்கினேன் நர்மு.” என்று பதிலளித்த திவ்யா, தன் கப்போர்டை திறந்து சாக்லேட்டை பத்திரப்படுத்தினாள். அவளுக்கு இப்போது அந்த மிட்டாயை பிரிக்கவோ, உண்ணவோ மனம் வரவில்லை.

முக்கியமாக, நர்மதாவுடன் மிட்டாயை பகிர்ந்துண்ண விருப்பமிருக்கவில்லை. இன்றைய தேதியினை மிட்டாயின் கவரில் மார்கர் கொண்டு எழுதிய திவ்யா, “நான் துணி துவைக்க போறேன் நர்மு.” என்று நர்மதா அடுத்து கேள்விகள் கேட்டு குடையும் முன்னர், வேகமாக வெளியே சென்றுவிட்டாள்.

தன் விடுதி சென்ற பரணி தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொள்ள நினைக்க, அவனை எதிர்பார்த்து வராண்டாவிலேயே சக்தி காத்திருந்தான். அவனைக் கண்டதும் முதலில் பரணியின் மனதில் தோன்றிய எரிச்சலை, ‘சே! நமக்கு உதவி தானே பண்ணியிருக்கான்.’ என்று திசைதிருப்பிக் கொண்டான் பரணி.

மற்ற மாணவர்கள் அருகே இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்ட சக்தி, “ண்ணா, ஆல் ஓகேவா?” என்று மட்டுமே கேட்டான்.

“ம்ம், பேசினேன்டா. ஏதும் மனசில வச்சுக்கலை, மறந்துட்டேன்னு சொன்னா. இப்போ தான்டா மனசு நிம்மதியா இருக்கு.” என்று ஒரு பேச்சிற்கு ஆழ்ந்து பெருமூச்சுவிட்ட பரணி, சக்தியிடம் சொல்லிக் கொண்டு தன் அறைக்குள் சென்றுவிட்டான்.

அப்போதைக்கு, ‘மறந்துட்டேன்’ என்று திவ்யா சொன்ன விதத்தையும், அவளை ஒருமையில் அழைத்து பேசுகையில் அவள் வேறொருத்தி என்று தனக்குத் தோன்றாத இலகுத் தன்மையும், மனதை மயிலிறகால் சாமரம் வீசி குளிர்ச்சியூட்டின.

அவளுக்குத் தன்னைக் கொஞ்சமே கொஞ்சம் பிடித்திருக்கிறது என்பதில் ஒரு உவகை உண்டாயிற்று. இத்தனையையும் கடந்து, அவன் ஏற்றிருந்த பதவி அவனை மேலே அவளிடம் பேச முட்டுக்கட்டைப் போட்டிருந்தது.

“சரி நாம என்ன லெக்சுரராவே கண்ட்டினியூ பண்ணப் போறாமா? கால் லெட்டர் வர்ற வரைக்கும் தானே. கம்பெனியில ஜாயின் பண்ண போற சமயத்தில அவகிட்ட பேசலாம்” என்று முடிவெடுத்த பரணி, தக்க சமயம் வரும் வரையில் காத்திருப்பது உசிதம் என்றும், தூரத்தில் இருந்து மட்டுமாக இனி திவ்யாவை மனதளவில் ரசிப்பது போதுமானது என்றும் எண்ணம் கொண்டான்.

அடுத்து வந்த நாட்களில், வாழ்க்கை எண்ணெய் இட்ட சக்கரமாக சீராய் சுழன்றது. ஆறு மாதங்கள் சடுதியில் கடந்துவிட்டிருக்க, பரணி தான் முன்னரே முடிவெடுத்தது போலத் தன் தன்மை மாறாமல் நடந்து கொண்டான். திவ்யாவை தள்ளி வைத்து, தன் மனதளவில் மட்டுமாக நிலைநிறுத்திக் கொள்வான்.

திவ்யாவும் அவன் ஒதுக்கத்தை ஏற்றுக் கொண்டாற் போலத்தான் இருந்தது. எதார்த்தமாக வராண்டாவில் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்ளும் நேரங்களில் மட்டும் இதழுடன் சேர்த்து இருவரது கண்களும் புன்னகை பூக்கள் சிதறவிடும். அதுவும் அப்படிப்பட்ட நேரங்கள் வாய்ப்பது அரிதினும் அரிது.

அம்மணித்துளிகள் செய்யும் மாயத்தை, அவன் மனம் மகிழ்ந்து குளிர்ந்து போய்விடும் பொன்னான நேரத்தை நினைவறையில் பத்திரப்படுத்திக் கொள்வான். திவ்யாவின் மனதில் திட்டமாக என்ன இருக்கிறது என்று அவனால் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாவிடினும், அவ்வப்போது அவன் பக்கமாக நீளும் பார்வைகளே அப்போதைக்குப் போதுமானதாக மாறிபோனது.

காலம் இப்படியே வேகமாகச் சுழன்று ஒரு வருடத்தை விழுங்கிவிட்டிருந்தது. திவ்யா இப்போது நான்காம் ஆண்டின் ஏழாவது செமஸ்டரில் பயின்று கொண்டிருந்தாள்.

அந்த வருடத்திற்கான ஐ.வி என்றழைக்கப்படும் இண்டஸ்டிரியல் விசிட்டிற்காக, பெங்களூர் செல்ல ஏற்பாடானது. இவர்களுடன் துணையாக நான்கு ஆசிரியர்கள் செல்வதாய் ஏற்பாடு. பரணியும் பெங்களூர் அழைக்கப்பட்டான்.

“நானும் இந்த வருஷம் உங்க கூட ஐ.வி வரப்போறேன்” என்று பரணி தன் வகுப்பில் கூறவும், மாணவர்கள், “ஹே ஹே!” என ஆரவாரமாய் கைதட்டினர். அதிகம் கெடுபிடிகள் காட்டாத பேராசிரியர் என்ற வகையில் பரணி அவர்களுடன் வருவது மாணவர்களை உற்சாகப்படுத்தியது.

செய்தியை பரணி வகுப்பில் பகிர்ந்து கொள்ள, மற்ற பெண்களுடன் சேர்ந்து பொதுவாக சிரித்து வைத்தாள் திவ்யா. அவள் புன்னகை என்னவோ பரணியை பலமாகத் தாக்கியது.

ஏனென்றால், அந்த மாத இறுதியில் அவனுக்கு வேலை கொடுத்திருந்த நிறுவனத்திலிருந்து வேலைக்கு வந்து சேரும்படிக்கு ஆணை வந்துவிட்டிருந்தது. அந்த மெயில் வந்த மறுநிமிடத்தில் இருந்தே பரணி, திவ்யாவிடம் தன் மனதை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் தேடத் துவங்கியிருந்தான்.

“ஐ.விக்கு பெங்களூர் போறோம். ஃபைனல் இயர் ஸ்டூடெண்ட்ஸ் கூட நீங்களும் ஜாயின் பண்ணிக்கோங்க பரணி”என்று அவன் ஹெச்.ஓ.டி சொன்ன சேதி, என்னவோ அவர் வாய்மொழியாக, “ஐ.வி போறப்போ திவ்யாகிட்ட உன் காதலை சொல்லிடு பரணி. இந்த ஐ.வி போறதே நீ உன் மனச அவகிட்ட வெளிப்படுத்த தான்.” என்று சொன்னது போல பாவித்துக் கொண்டான்.

ஆனால், இதை எப்படி நிறைவேற்றுவது என்று தான் அவனுக்கு தயக்கம் ஏற்பட்டது. சற்றே ஆசுவாசமாகி கொஞ்சம் நிதானம் வந்ததும் சரியாக திட்டமிடலானான்.

தனக்கு வேலைக்கான உத்தரவு வந்துவிட்ட செய்தியை கல்லூரியில் சொல்லியவன், “ஐ.வி போயிட்டு வந்து இந்த மந்த் எண்ட் ரிலீவ் ஆகிக்கறேன் சார். ஐ.வி முடிஞ்சு ஒரு வாரத்தில ஸ்டடி ஹாலிடேஸ், அப்பறம் எக்ஸாம் தான். போர்ஷன்லாம் முடிச்சுட்டேன் சார்” என்று ஹெச்.ஓ.டியிடமும், கல்லூரி முதல்வரிடமும் தெரிவித்து அவர்களது வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டான்.

என்ன தான் திவ்யாவிடம் தன் மனதை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அமைந்துவிட்டதை எண்ணி மனம் குதூகலித்தாலும், இக்கல்லூரியில் இருந்து தான் ஒரு மாதத்தில் கிளம்ப வேண்டியிருக்கும் என்ற விஷயம் சற்றே நெருடல் தான்.

“டேய், இதுவும் பார்ட் ஆஃப் லைவ் டா. இங்கேயே தேங்கிப் போயிட முடியுமா? கிடைச்ச நல்ல வேலையை வேண்டாம்னு தான் சொல்லிட முடியுமா?” என்று சஞ்சலப்பட்ட மனதிற்கு தேறுதல் சொல்லிக் கொண்டான். தான் கல்லூரியில் இருந்து செல்லப் போகும் விஷயம் பற்றியும், திவ்யா பற்றியும் ஒரு சின்ன தயக்கத்துடன் சக்திவேலிடம் சொல்லியிருந்தான்.

“டேய், உன் ஹெல்ப் இல்லாம என்னால இதைப் பண்ண முடியாதுடா.” என்று உரிமையாக சக்தியிடம் உதவி கேட்டிருக்க, சக்தியும், “ண்ணா, உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன். நீங்க கவலைய விடுங்க” என்று தெம்பூட்டினான்.

“ண்ணா, என்னைக் கேட்டா, பெஸ்ட் பெங்களூர்ல அவுட்டிங் போறப்போ சொல்லறது. கபன் பார்க், ஃபொரம் ஷாப்பிங் மால்னு எங்கையாவது அவ தனியா இருக்கறப்போ பேசுங்க.”

“இல்லடா, அங்கெல்லாம் அவ ஃப்ரெண்ட்ஸ் கண்டிப்பா கூட இருப்பாங்க. அப்போ பேசறது அவளுக்கும் வம்பா போயிடும். நான் இந்த மாசத்தோட கிளம்பிடுவேன். ஆனா அவ இங்கேயே இருக்கணும், இன்னும் ஆறு மாசம் இருக்கணும். சோ, மத்தவங்க கண்ணுல படற மாதிரி வேண்டாம்” என்று அவளுக்காக மிகவும் யோசித்தான். தான் சென்ற பின்னர் அவள் இதன் பொருட்டு சங்கடத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டான்.

“அப்போ பஸ்ல சொல்லிடுங்க. எப்படியும் யாரும் அமைதியா ஒரே இடத்தில உட்கார்ந்திருக்க மாட்டாங்க. அங்க இங்கன்னு ஆடிட்டும் ஃபோட்டோ எடுத்துட்டும் இருப்பாங்க. இரைச்சலா இருக்கும். நீங்க பேசிக்கறதையும் யாரும் கண்டுக்க மாட்டாங்க. அதுலையும் ஐ.வி. போற டைமை விட, வர்றப்போ பஸ்ஸே ஆழ்ந்த தூக்கத்துக்கு போயிடும். அப்போ பேசறது இன்னமும் பெட்டர்.”

“அப்படியா சொல்லற? நீ சொல்லறதும் கரெக் டா. போறப்போ கூட ஆர்வத்துல நைட்டெல்லாம் ஆடிட்டே வருவாங்க. அதுவே ரிடர்ன் அப்போ ஏறி படுத்ததும் கண்ணைக் கட்டிகிட்டு தூக்கம் வந்துடும். அந்த டைம் தான் பெஸ்ட்” என்று முடிவெடுத்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!