Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை – 10

‘என் அப்பாவை எப்படி பேசலாம்’ என்ற ஆதங்கம் கோபம் அனைத்தும் ராக்காயி மேல், அதை அப்படியே அவள் முகம் பிரதிபலித்தது.

 

 



Advertisement

“என்னடி என்னமோ தெருவுல போரவகிட்ட பேசுற  மாதிரி மரியாதை இல்லாம பேசுற இப்படித்தான் வளத்தாங்களா உங்க வீட்டில” என்றார் அவர்.

 

Advertisement

 

Advertisement

அதில் இன்னும் சினம் வரப்பெற்றவள் “எங்க வீட்டில பெரியவங்கள எப்படி மதிக்கணும்னு கத்துக்குடுத்திருக்காங்க ஆனா நீங்கப் பெரியமனுஷங்க…”  என்று பேசப் போக “கனகாம்பரம்” என்றான் ராஜா அதட்டலாக.

 

Advertisement

 

அவள் அவனைத் திரும்பிப் பார்த்து முறைக்க “உள்ள போ” என்றான், அவள் அப்படியே  நிற்க “உள்ள போடி” என்றான் இப்பொழுது அழுத்தமாக, வேக நடையில் அறைக்குள் நுழைந்து தொப்பென்று கட்டிலில் அமர்ந்தாள்.

 

 

வெளியே  பேசிக்கொள்வது  அவளுக்குக் கேட்டது, என்ன பண்றா இவ என்று அதிர்ச்சியாகப் பார்த்து நின்றாள் செவ்வந்தி.

 

 

“என்னடா சொல்ல வந்தா அந்த ராங்கி என்னய என்னனு நினச்சா, ஏங்க அவ அப்பாவுக்குப் போனை போட்டு வரச்சொல்லுங்க” என்று அவர் ஆக்ரோஷமாகக் கத்த நொடியில் அந்தச் சூழலைக் கையில் எடுத்தான் ராஜகுமாரன்.

 

 

“என்னம்மா இதெல்லாம் ஏன் இப்படி பண்றீங்க, யாரை அவமானப்படுத்துறீங்க அன்னைக்கே சொன்னேன் எனக்குன்னு  இப்படி சீர் நகை எதுவும் வாங்காதீங்கன்னு அதையும் வாங்கிட்டு இப்படி செஞ்சா நல்லாவா இருக்கு” என்றான் தாயிடம்.

 

 

“வாடா இப்போதான் உன் பொண்டாட்டி கேள்விக்கேட்டுட்டு போனா அடுத்தது நீயா, அப்படி என்னடா செய்யக் கூடாததை செஞ்சிட்டேன் ஊருக்கே நகை கடன் குடுக்குறவ இந்த ராக்காயி என்வீட்டுக்கு வந்த நகை தங்கமா இல்லையான்னு நான் பாக்கக்கூடாதா” என்றார் அப்பொழுதும்.

 

 

இவ்வளவு கலவரத்திற்கு பிறகே அறைக்குள் இருந்து வெளியில் வந்தான் யோகன் “வாப்பா வா… அடுத்தது நீதான், அவங்க ரெண்டு பேரும் பேசிட்டாங்க நீ என்ன சொல்லப்போற உன் பொண்டாட்டி நகையையும் வாங்கி வெச்சிருக்கேனே” என்றார் அவனிடம்.

 

 

ஒருமுறை செவ்வந்தியை திரும்பிப் பார்த்தான் அழக் கூடாது என்று வைராக்கியத்தோடு நின்றிருந்தாள், எப்பொழுதுவேண்டுமானாலும் கண்ணீர் வழிந்துவிடும் என்று அவள் விழிகள் பறைசாற்றின.

 

 

தாயின் முன்  வைக்கப்பட்டிருந்த அவளின்  நகைகளையும் தாயையும் ஒருமுறை பார்த்தவன் “இதுல எதுவுமே போலியா இருக்காது, அவர் அப்படி பட்ட மனுஷன் இல்லனு தோணுது” என்றான்.

 

 

செவ்வந்தியின் இறுக்கம் தளர்ந்து அவளின் விழிகள் நிறைந்து வழிந்தது, மெலிதான புன்னகைகூட அவள் இதழில் இந்த வீட்டில் அவன் மனைவியாகக் கால் வைத்த நொடியிலிருந்து முதன் முதலாக அவள் முகத்தில் சந்தோசம் கூத்தாடியது.

 

 

ராஜகுமாரன் அண்ணனை ஆச்சர்யமாகப் பார்க்க ராக்காயும் கனகசபையும் மகனை அதிர்ச்சியாகப் பார்த்தனர், தங்கள் மகன்தானா!!  இன்றுவரை எந்த ஒரு விஷயத்தையும் நின்று கேட்டதுமில்லை எதற்கும் தன்னுடைய அபிப்ராயத்தை சொன்னதும் இல்லை, இன்று புதிதாகப் பேசுகிறான் அதுவும் மாமனாருக்காக.

 

 

ராக்காயின் விழிகள் மூத்த மருமகளை ஆராய்ச்சியாகப் பார்த்தது அவள் அமைதியாக நின்றிருந்தாள்,  என்ன நினைத்தாரோ நகைகளை அப்படியே வைத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார்,  முன் வாசலில் அமர்ந்திருந்த கணவனின் பின்னே தூணில் சாய்ந்து அமர்ந்துகொண்டார்.

 

 

“அண்ணி நகையெல்லாம் எடுத்துவெச்சுட்டு நீங்க வேலையைப் பாருங்க” என்றவன் குளிக்கச் சென்றான், அவன் குளித்து வருவதற்குள் கணவனுக்குத் தேநீர் கொடுத்துவிட்டு சுடசுட அடையை ஊற்றிக்கொண்டிருந்தாள் செவ்வந்தி.

 

 

குளித்துவிட்டு அடுப்படி வழியே உள்ளே நுழைந்தான் ராஜா “தம்பி” என்ற செவந்தியின் குரலில் நின்றவன் திரும்பிப் பார்க்க டீயை அவனுக்கு நீட்டியவள் “கொஞ்சம் துடுக்குத்தனமா பேசுவா நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதீங்க தம்பி,  சொன்னா புரிஞ்சிப்பா நான் பேசுறேன்” என்றாள்.

 

 

“அவ கோபம் நியாயம்தானே அண்ணி, ஆனா என்ன எங்க எப்படி பேசணும்னு  இன்னும் தெரியல, நல்லவேளை டீக்குடுத்தீங்க குடிச்சிட்டு  தெம்பா உள்ள போய் அவளை வேற சமாளிக்கணும்”  என்றான் பாவமாக.

 

 

செவந்த்தி சட்டென்று சிரித்துவிட “என் பொழப்பு இப்படி சிரிப்பா சிரிக்குது” என்று சொல்லிக்கொண்டே தங்கள் அறை நோக்கி நடந்தான், போகும்போது கவனித்தான், எப்பொழுதும் ஏனோ தானோவென்று உணவை விழுங்கிவிட்டு செல்லும் யோகன் ரசித்து ருசித்து அடையை  சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

 

 

“என்னடா ஆச்சு இவனுக்கு” என்று எண்ணிக்கொண்டவன் “அதுசரி ராக்காயி சமையல் விழுங்கிட்டு தானே போக முடியும்” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

 

 

யோகனிடம் பெரிதாக மாற்றம் ஒன்றும் இல்லை, இன்று அவன் பேசியதே உலக அதிசயம்தான் உணவுகூட அத்தனை ருசியாக இருக்க நான்கு அடைகளை சாப்பிட்டான் ஆனால்  ஒருவார்த்தை அதைப் பற்றி மனைவியிடம் பேசவில்லை மதிய உணவையும் அவள் கட்டிக்கொடுத்திருக்க அதை எடுத்துக்கொண்டவன் பெற்றோரைப் பார்த்துத் தலை அசைத்துச் சென்றுவிட்டான்.

 

 

உள்ளே நின்று எட்டிப்பார்த்த செவ்வந்திக்கு ஒரு தலையசைப்பு கூட இல்லை அவளும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, அவள் பெயரைக் கூட இன்றுவரை அழைக்கவில்லையே அவன்.

 

 

மெல்ல நடந்து மாமியார் மாமனார் அருகில் வந்தவள் “மாமா அத்த சாப்பிடலாம் வாங்க” என்றாள்.

 

 

“எங்களுக்கு இங்கயே குடுத்துடுமா” என்றார் கனகசபை.

 

 

“உன் தங்கச்சி உள்ள என்ன சடங்காயி உக்காந்திருக்காளா, வேலைக்கழுதையை பாக்காம இது என்ன? வாய் மட்டும் எட்டூருக்கு நீளுது, ஆனாலும் ஆத்தா பாத்தாலும் பாத்தேன் வந்த நாளாவது நாளே மாமியார்கிட்ட வந்துபாருன்னு நிக்குறவள இப்போதான் பாக்குறேன்” என்றார் ராக்காயி.

 

 

அறைக்குள் நுழைந்திருந்தவன் “கனகம் அம்மா உங்க நகையை எடுக்கல அண்ணிகிட்டாதான் இருக்கு வாங்கிக்கோ, அம்மாகிட்ட எதுக்கு அப்படி  நிக்குற பேசப் பேசப் பிரச்சனை தான் பெரிசாகும் கொஞ்சம் விட்டுக் குடுத்து போ” என்றவன் உடையை மாற்ற.

 

 

அவள் கவனம் இங்கில்லை ராக்காயின் பேச்சு காதில் விழ “இவங்க மொதல்ல பிள்ளையை ஒழுங்கா வளத்திருக்காங்களா ஒருத்தருக்கு யாரையுமே மதிக்கத் தெரியல, இன்னொரு புள்ள அம்மா கழுத்துல கிடந்த நகையையே அறுத்திட்டு போற களவாணி இவங்க எங்க வளர்ப்பை பேசுறாங்க” என்று அவள் பேசத்தொடங்கியதுமே அவன் முகம் கறுத்தது.

 

 

அவள் அவனைப் பார்க்கவும் இல்லை பேசுவதை  நிறுத்தவும் இல்லை “ஊர்ல எல்லாக்கிட்டயும் நகையை வாங்கிகிட்டு காசு குடுத்து ஏமாத்தி சம்பாதிக்குறாங்க உங்க அம்மா, ஆனா எங்க அப்பா நேர்மையா உழைச்சு சம்பாதிக்குறாரு அவரோட நேர்மையான உழைப்புல வாங்குன நகை அது அதைத் தொடக்கூட உங்க அம்மாக்கு தகுதி” என்றவள் சொல்லிக்கொண்டிருக்க.

 

 

“கனகம்” என்று கையை ஓங்கிவிட்டான் ராஜகுமாரன், அவள் உடல் விறைத்து எழுந்து நின்றவிட ஓங்கிய கையை அப்படியே சுவற்றில் அடித்துத் தன் கோபத்தை அதில் காட்டினான்.

 

 

“என்ன பேசிவிட்டாள்”

 

 

கனகத்திற்கு ஒருநொடி அனைத்தும் ஸ்தம்பித்தது, என்ன சொல்லிவிட்டேன் நான் அவனின் செய்கைக்குப் பின் ஏதேனும் காரணம் இருக்கும் என்று நம்பிய என்னிடமிருந்து இந்த வார்த்தைகள் எப்படி  வந்தது என்று கலக்கமாகக் கணவனைப் பார்த்தாள்.

 

 

“என்னங்க” என்றவளை பார்த்து வாயில் ஒற்றை விரல் வைத்துப் பேசாதே என்று சைகை செய்தான் சிவந்துவிட்ட விழிகளோடு, விழிகளை மூடித் தன்னை சமன் படுத்தினான்.

 

“உண்மைதான் உங்க அப்பா நேர்மையானவர், நேர்மையா உழைச்சு உங்களை வளர்த்தார் எங்க அப்பாவும் அப்படிதான் நினைச்சார் அப்படிதான் வாழ்ந்தார், என்னடி தெரியும் உனக்கு என் அம்மாவைப் பத்தி? அன்னைக்கு நான் என் அம்மாகிட்டயே நகை திருடினதுதானே உன்னை இப்படி கேவலமா என் அம்மாவைப் பேசவச்சது”.

 

 

“எங்க அப்பா லாரில அடிபட்டுப் படுக்கைல விழுந்தப்போ எங்க அம்மா வயித்துல எனக்கு ஏழு மாசம், அதுவரைக்கும் சமம்பாரிச்ச எல்லாம் அவரை வீட்டுக்குக் கொண்டுவரத்துக்கே கரைஞ்சு போய்டுச்சு, என்னையும் பெத்து கைல வெச்சுகிட்டு படுக்கைல கிடந்த என் அப்பா, பள்ளிக்கூடம்  போற ரெண்டு பிள்ளைங்கன்னு அவங்க எப்படி தவிச்சிருப்பாங்க”.

 

 

“அவங்ககிட்ட இருந்த நகைகள் சிலதை வித்து வட்டிக்கு விட ஆரம்பிச்சாங்க, நீ சொன்னியே நகை வாங்கிட்டு செய்றாங்கன்னு யார்கிட்டயும் எதையும் வாங்காமாதான் கடன் குடுத்திட்டு இருந்தாங்க, சொந்த பெரியம்மா மகன் மொத்த பணத்தையும் தூக்கிட்டு ஓடிட்டான் என்ன செய்ய யாரை கேக்க.

 

 

 

“எப்படியோ வாழ்திடலாம்னு நம்பிக்கையோட கொஞ்சமா எழுந்திருச்சு நின்னவங்களை அப்படியே சாச்சிட்டாங்க, இதுல யோகனை வேற எங்கயாவது கொண்டு போய் விட்டுடுன்னு சொல்லி எல்லாரும் ஒருபக்கம் அழுத்தம் குடுத்தாங்க, அவனுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகும்”.

 

 

“என் புள்ள என்ன கஷ்டமா இருந்தாலும் நானே பார்த்துக்குறேன்னு  சொல்லிட்டாங்க, காட்டு வேலை வீட்டுவேலைன்னு அவங்க பாக்காத வேலை இல்லை, இப்போதான் ஒரு பத்துவருஷமா நகையை வாங்கிகிட்டு கடன் கொடுக்குறாங்க, அவங்க பொருள் நம்மகிட்ட இருந்தாதான் நமக்கும் ஒரு தைரியம் அவங்களும் ஒழுங்கா காசைத் திருப்பித் தருவாங்க”.

 

 

“அவங்களோட கஷ்டம் ஏமாற்றம் எப்படியெல்லாமோ ஒத்த மனுஷியா போராடி எங்களை வளத்தாங்க, அதுல அவங்களுக்கு எங்களைச் சரியா கவனிக்க நேரம் கிடைக்கல ஏன் அண்ணன் மனசுல அந்த ஏக்கம் இருக்கு அவனை மத்த பசங்க கிண்டல் பண்ணும்போது அதை அம்மாகிட்ட வந்து சொல்லுவான் முன்னாடி, ஆனா அம்மா கேக்க போகமாட்டாங்க”.

 

 

“எல்லாரும் சொல்லியும் உன்னை விடாம என்கூடவே வெச்சுக்கிட்டேனே இதுக்குமேல நான் என்ன செய்யப் பொறுத்துப்போன்னு சொல்லிடுவாங்க, அந்தக் கோபம் இருக்கு அண்ணனுக்கு, அவன் பக்கமிருந்து அவன் சரி அவன் ஏக்கம் கோபம் எல்லாமே சரி இதுல யாரை குத்தம் சொல்லுவ”.

 

 

“பேசுறவங்க பேசிட்டு போய்டுவாங்க இப்படி செஞ்சிருக்கலாம் அப்படி  செஞ்சிருக்கலாம்ன்னு, ஒரு நாள் ராக்காயியாவோ யோககுமாரனாவோ வாழ்ந்து பார்த்தாதான் அந்தத் தனிப்பட்ட மனுஷங்களோட வலியும் வேதனையும் கண்ணீரும் புரியும்”.

 

 

“எங்க அப்பா எங்க அம்மாவை எதிர்த்து ஒரு வார்த்தை பேசமாட்டார் ஏன்னா அப்பாவுக்கு ஆஸிடெண்ட் நடந்து அவர் படுக்கைல விழுந்தபோது எங்க அம்மாக்கு வெறும்  இருபத்தாறு வயசு, அவங்க என்ன வாழ்ந்தாங்க, அப்படியும் விட்டுட்டு போகல எங்களை மாதிரியே அவரையும் அவங்கதான் பாத்துக்கிட்டாங்க”.

 

 

“எல்லா மனுஷங்ககிட்டயும் குறைகள் இருக்கு குறைகளே இல்லாத மனுஷன் யோகியாதான் இருப்பான், எங்க அம்மா சாதாரண மனுஷி… யோகன் பல கேலி கிண்டல் அவமானங்களைத் தாங்கி உள்ளுக்குள்ள நிறைய காயப்பட்டிருக்கான், அவங்க கிட்ட நிறைய குறைகள் இருக்கலாம் ஆனா ரெண்டு பேரும் நீ நினைக்கிற அளவுக்கு அரக்கர்கள் இல்ல”.

 

 

“என் உறவுகளை அவங்களோட குறைகளுக்காக விட்டுகுடுக்க முடியாது, நான் அனுசரிச்சு போய்டுவேன் என் மனைவியும் அப்படி புரிஞ்சிக்குற ஒருத்தியா இருக்கணும்னு நான் ஆசை பட்டேன், ஆனா அது என் தப்பு உனக்குன்னு தனிப்பட்ட நியாயங்கள் எதிர்பார்ப்புகள் இருக்கும் என்னுடையதை உன் மேல நான் திணிக்கக் கூடாது”.

 

 

“இன்னைக்கு எங்க அம்மா செஞ்சது தப்புதான் சரின்னு நானோ யோகனோ எங்கயும் சொல்லல, பேசவேண்டிய எடத்துல நானும் அவனும் பேசிட்டோம், அது புரிஞ்சதாலதான் உங்க நகையை எங்க அம்மா எடுக்கல அவங்க வயசுக்காவது மரியாதை குடுத்தியா”.

 

 

“வந்து நாலு நாள்தான் ஆகுது, என்னமோ வருஷக்கணக்கா இந்த வீட்டில வாழ்ந்து அடிபட்டு மிதிபட்டு எல்லாமே வெறுத்துப்போய் இனிமே என் கூட வாழ விருப்பமில்லாதவ மாதிரி அவங்ககிட்ட பேசுற, உன் புருஷனை பெத்தவங்கடி அவங்க அப்படி மொறச்சுக்கிட்டு நிக்குற வார்த்தைகளை விடுற, நான் இன்னும் உயிரோடதான இருக்கேன் உனக்காக எங்கேயுமே நான் நிக்கலயா இல்ல நிக்க மாட்டேன்னு நினைச்சியா என்மேல உனக்கு நம்பிக்கையே இல்லல”.

 

 

“இன்னைக்குவரைக்கும் நான் எத்தனையோ பேருக்கு உதவி செஞ்சிருக்கேன் என் அம்மாக்கு இதெல்லாம் தெரியாது நினைச்சியா, தெரியும் ஆனா இன்னைக்கு வரைக்கும் ஏன் குடுக்குறன்னு கேட்டதில்லை குடுக்கக்கூடாதுன்னும் சொன்னதில்லை”.

 

 

“அவங்க மேல ஆயிரம் குறை இருக்கட்டும் ஆனா அதை நீ சொல்லாத எத்தனை குறை இருந்தாலும் என்னைப் பெத்தவங்கடி உன் வாயால அவங்களை கேவலமா பேசாத வலிக்குது” என்றவன் குரல் இடறியது.

 

 

“நான்…” என்று அவள் அவன் அருகில் வர, பின்னில் தள்ளி நின்றான்.

 

 

“என்னைப் பத்தி நல்ல எண்ணம் உன் மனசுல இல்லாதப்போ நான் பக்கத்துல வந்ததும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசினியே  அப்படி செருப்பால அடிச்ச மாதிரி கேட்டிருக்கலாம்ல, என் செய்கைக்குக் காரணம் சொல்லியிருப்பேன்  இல்ல தள்ளிப் போயிருப்பேன், என் காதலையே அசிங்க படுத்திட்டியே” என்றவன் அதோடு வெளியேறிவிட.

 

 

உடல் எல்லாம் நடுங்க தட்டு தடுமாறி கட்டிலில் விழுந்தாள் கனகம் அன்னையின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் செவியில் ஒலித்தது “என் வாய் என் நாக்குன்னு அதைச் சுழட்டக் கூடாது வார்த்தையைக் கொட்டறதுக்கு முன்னாடி நாலு தரம் யோசிக்கணும் பேசிட்டு வருத்தப்பட்டா சொன்னா வார்த்தை இல்லைனு ஆயிடாது” என்பார்.

 

 

அழக்கூட தெம்பில்லை தந்தையின் மீது நம்பிக்கை இல்லாமல் பேசுகிறார்களே என்ற கோபம் ஏதேதோ பேசிவிட்டாள், வெளியில் “சாப்பிடுங்க தம்பி” என்ற செவ்வந்தியிடம் “நேரமாயிடுச்சு அண்ணி” என்று சொல்லிச்சென்ற கணவனின் குரல் கேட்டது.

 

 

“ஏன் உன் பொண்டாட்டி எடுத்துக் குடுக்க மாட்டாளா அப்படி என்னத்ததான் செய்றா உள்ள புருஷன் வேலைக்குப் போறான் அவனுக்குச் சாப்பாடு குடுப்போம்னு இருக்கா, அப்பாவுக்கு மட்டும் வரிஞ்சுக்கட்டிட்டு வந்தா” என்று சொல்லிக்கொண்டே எழுந்து வெளியில் சென்றார் ராக்காயி.

 

 

கனகசபையும் “சந்தைவரைக்கும் போயிட்டு வரேன்” என்று கிளம்பிவிட செவ்வந்தி மெல்ல எட்டி பார்த்தாள், ராஜா மதிய உணவைக் கூட எடுத்துசெல்லவில்லை வேகமாகத் தங்கையின் அறைக்குள் நுழைந்தாள் செவந்த்தி.

 

 

“என்ன ஆச்சு கனகம் உனக்கு” என்றாள் சற்று கோபமாக அழுதுகொண்டிருந்தவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

 

 

“தம்பி கூடச் சண்டையா புள்ள, ஏன் உனக்கு இப்படி கோபம் வருது அப்படி முறுக்கிக்கிட்டு நிக்குற அத்தைகிட்ட, அவங்கள எதிர்த்துப் பேசுற இதெல்லாம் நம்ம வீட்டுக்குத் தெரிஞ்சா சந்தோஷப்படுவாங்களா? அப்பாக்காகத்தான் நீ பேசுன ஆனா இது தெரிஞ்சா அப்பாவே வருத்தப்படுவாங்க கனகம்”.

 

 

“புகுந்த வீட்டுக்குப் போன நாளேநாள்ல இப்படி பிரச்சனைனா ஒடஞ்சு போய்டுவாங்க,  நம்ம பக்கம் நியாயமே இருந்தாலும் எல்லா இடத்திலேயும் நாம நினைக்குறத எல்லாம் பேசிடக் கூடாது புள்ள இந்த விஷயம் வெளில போன பழனிச்சாமி பொண்ணு மஞ்சள் கயித்துல ஈரம் காயும் முன்னே மாமியாரை மரியாதை இல்லாம பேசிட்டான்னு தான் பேசுவாங்க”.

 

 

“தம்பி வந்து அதட்டலனா நீ கண்டிப்பா யோசிக்காம பேசியிருப்ப, அது பெரிய பிரச்னையா போயிருக்கும், ஏன் இப்போவே பாத்தல்ல அப்பாவைக் கூப்பிட சொன்னதை,  உன் புருஷன் நடுவுல பேசி மாத்தி விட்டுட்டாரு இல்லனா யோசிச்சு பாரு அப்பாவும் அம்மாவும் வந்து இங்க நின்னிருக்கணும்”.

 

 

“அவங்க இவங்களை எதிர்த்துக் கேள்வி கேப்பாங்கன்னு நினைக்குறியா, ஒண்ணுக்கு ரெண்டு பேரைக் கட்டிக்குடுத்திருக்காங்க கைக்கட்டித்தான் நின்னுருப்பாங்க, நம்ம வாழ்க்கையை யோசிச்சு அவங்க தலை குனிஞ்சு நிப்பாங்க, அது வேண்டாம் புள்ள இந்த வீட்ல அவங்களுக்கு எப்போவும் மரியாதை இருக்கணும் கனகம்”.

 

 

“அதுக்காகக் கொஞ்சம் கஷ்டத்தையும் அவமானத்தையும் நான் பொறுத்துப்பேன் பாத்து நடந்துக்கோ கனகம்” என்க தன்னுடைய கோபத்தால் என்ன நடந்திருக்கும் என்பது இப்பொழுது விளங்கியது அவளுக்கு.

 

 

“சரி தம்பிகூட சண்டை போட்டியா… கிறுக்கா உனக்கு இப்படி அனுசரணையான புருஷன் கிடைச்சும் ஏன் இப்படி பண்ற, என்ன கோவமிருந்தாலும் வெளில போற புருஷனுக்கு ஒரு வாய் சாப்பிட குடுக்காம அனுப்பலாமா புள்ள, நான் கூப்பிட்டும் அவர் சாப்பிடல மதியத்துக்கும் எடுத்துக்கல” என்றாள் செவ்வந்தி.

 

 

கனகம் விழிகள் கண்ணீரை சுரந்துகொண்டே இருக்க “சரி விடு அவங்க சாயந்திரம் வந்ததும் கொஞ்சம் அனுசரிச்சு பேசு, இதுதான் நமக்கு வாழ்க்கை கனகம் அதை நல்லதா மாத்திக்க வேண்டியது நம்ம கைலதான் இருக்கு” என்றவள்.

 

 

கனகாமபரத்தின் முகம் தெளியாமல் இருப்பதைப் பார்த்து “என்னடி வேற ஏதாவது பிரச்சனையா ஏன் இப்படி இருக்குற” என்றாள் பதட்டத்துடன்.

 

 

“அக்கா… நான்… நான்… அவரை… அவர் நகை திருடினதை பெத்த அம்மாக்கிட்டயே நகையைத் திருடுற பிள்ளையை வெச்சுகிட்டு எங்களைப் பேசுறாங்க உங்க அம்மான்னு சொல்லிட்டேன்” என்று முகத்தை மூடிக்கொண்டு அழச் செவ்வந்தி நெஞ்சில் கை  வைத்தாள், சட்டென்று கதவு திறக்க உக்கிரமாக நின்றிருந்தார் ராக்காயி வாயிலில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!