Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedஇதமாய் நான் வரவா

இதமாய் நான் வரவா – 1

இதம் – 1

நேற்றைய இரவு அடை மழை பொழிந்தது என்பதை கூறும் வகையில் குண்டும் குழியுமாய் இருந்த சாலையில் மழைநீர் தேங்கியிருந்தது.

சில்லென்ற காற்று முகத்தினில் மோத கூடத்தில் அமர்ந்தபடி காப்பியை ருசித்து குடித்துக் கொண்டு இருந்தாள் உமையாள். கலைந்த தலையும்… அணிந்திருந்த பழைய நைட்டியும் இன்னும் அவள் குளிக்கவில்லை என்பதை பறைசாற்றியது.



Advertisement

அந்த கூடத்தின் ஓரத்திலேயே புத்தகத்தை திறந்து வைத்தபடி கொட்டாவி விட்டுக் கொண்டு இருந்தாள் விசாலாட்சி.

“ஏய் விசா தூங்கி விழுகாம ஒழுங்க படி… கொஞ்ச நேரம் கழிச்சு என்ன படிச்சன்னு எங்கிட்ட ஒப்புக்கினும்” என்ற உமையாளை முறைத்தவள்…

“பள்ளிக் கூடத்துல தான் நீ டீச்சர்… இங்க நீ எனக்கு அக்கா மட்டும் தான்…” என்று சத்தமாக சொன்னவள்… ‘லீவு நாளுல கூட தூங்க விடாம உயிரை எடுக்குறா’ என்று வாயுக்குள்ளே முனகி கொண்டாள்.

Advertisement

தன் மூத்த மகள் உமையாளை பார்த்தபடியே வேலை செய்து கொண்டிருந்த அங்கையற்கரசியின் வாய் மட்டும் நில்லாது மகளை வசைப்பாடிக் கொண்டிருந்தது.

Advertisement

“இருக்கிறது ஒத்த தாய்மாமன்… அவன் வூட்டு விஷேசத்துக்கு வரதுக்கு கூட மூக்கால அழுதா நாளை பின்ன நம்ம வூட்டு விஷேசத்துக்கு எந்த மனுச மக்க வருவாங்க… கட்டுனது தான் சரியில்லன்னு பார்த்தா… நான் பெத்தது அதுக்கு மேல இல்ல இருக்கு…” என்றபடி சோற்றுக்கு உலை வைத்து கொண்டிருந்தவரை சிறிதும் அவள் கண்டு கொள்ளவில்லை.

“ஏய் இந்தாடி ஒருத்தி இங்க நாயா கத்திட்டு இருக்கேன்… காது கொடுத்து என்னன்னு கேட்டா தான் என்ன… கொஞ்சம் மாமன் வூட்டுக்கு வந்து தலையை மட்டும் காட்டிட்டு போ கண்ணு…” என்று கோபத்தில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தார்.

“இந்தாம்மா நீ எம்புட்டு கத்துனாலும் நான் அந்த வூட்டுக்கு வரப் போறதில்ல… பொறவு எதுக்கு நீ உன் தொண்டை தண்ணீ வத்த கத்திட்டு இருக்க…”

Advertisement

“பொட்டை புள்ளைக்கு இம்புட்டு திமிரு ஆகாதுடி உமையா…” என்றவரை நேராக நோக்கியவள்,

“நீ வேணா சூடு சொரனை இல்லாம உன் அண்ணன் வூட்டு விஷேசம்னு போ… நான் ஏன் வரனும்… வான்னு அழைக்காத வூட்டுக்கு நான் எதுக்கு வரனும்”

“ஏட்டி அது நம்ம வூடுடி… நம்ம வூட்டு விஷேசத்துக்கு முறையா கூப்பிடலனா  இப்போ என்ன குடியா முழுகிடப் போகுது”

“ஆமா குடிதான் முழுகுது… நீயி தான் அது நம்ம வூடுன்னு நினைக்குற… ஆனா அவங்க மனசுலயும் அதே நினைப்பு இருந்திருந்தா என்ன செஞ்சிருக்கனும்… நாளைக்கு பொண்ணுக்கு மாப்பிள்ளை வூடு பார்க்க வராங்க கொஞ்சம் ஒரெட்டு வந்துட்டு போ அங்கைன்னு சொல்லியிருந்தா… நீயென்ன சொல்றது மொத ஆளா அந்த வூட்டு வேலையை இழுத்து போட்டு செஞ்சிட்டு இருந்திருப்பேன் நான்… ஆனா அவுக என்ன பண்ணாக அந்த வூட்டுக்கு வேலைக்கு போற சுகந்தி அக்காக்கிட்ட சொல்லி அனுப்புறாக… நாளைக்கு உன்ன வரச்சொல்லி…”

“இதிலிருந்தே நீ கண்டுக்க வேணாம்..‌ உன்னைய வூட்டு வேலையை செய்ய தான் கூப்புடுறாங்கன்னு… உனக்கும் இது புரியும்… ஆனா புரியாத மாதிரியே நடிப்ப பாரு.‌‌.. அதுதான் எனக்கு வெறியை கிளப்புது” என்ற மகளின் வார்த்தை நூற்றுக்கு நூறு சரியென்றாலும் அதை ஒப்புக்கொள்ள தான் அங்கை விரும்பவில்லை.

“ஏதோவொரு நியபகத்துல கூப்பிட மறந்திருப்பாகடி… அதை போய் பெருசா பேசிட்டு இருக்க… என்ன இருந்தாலும் நமக்கு அவுகளை வுட்ட யாரு இருக்கா சொல்லு”

“நீ இப்படி பேசிட்டு இருக்கிறதனால தான் உன் அண்ணன்னே உன்னைய மதிக்கல..‌. வக்கத்த கழுதைக்கு நம்ம விட்டா எந்த நாதி இருக்கு… எட்டி உதைச்சாலும் இங்க தான் வருவான்னு தெரிஞ்சு தான் உன் அண்ணன்னே கூப்பிடல”

மகளின் வார்த்தை சுருக்கென்று தைய்த்தாலும் கூடப்பிறந்தவனை விட்டுக் கொடுக்க இயலாது…

“உன் மாமனுக்கு என்ன வேலையோ… யாரு கண்டா” என்ற அங்கையின் வார்த்தையில் அதுவரை இருந்த பொறுமை முற்றிலும் பறந்தது உமையாளுக்கு …

“ஆமா… ஆமா..‌ ரொம்ப வேலை… அதுதான் நாலு தெரு தள்ளி இருக்க தங்கச்சி வூட்டுக்கு சொல்ல நேரம் இல்ல… ஆனா பாரு நாலு மைல் தூரத்துல இருக்குற பொண்டாட்டி வூட்டு ஆளுங்களை போய் மொறையை அழைச்சிட்டு வந்திருக்காரு…”

“இதைப் போய் உனக்கிட்ட சொல்றேன் பாரு… எம்புட்டு சொன்னாலும் உன் மண்டையில ஏறாது… நான் போய் என் பொலப்பை பார்க்குறேன்” என்றபடி அறைக்குள் சென்று பேப்பர் கட்டுகளை எடுத்து வந்தவள் அதை திருத்துவதில் மும்முரமானாள்.

இவ்வளவு நேரம் தாயும் தமக்கையும் பேசுவதை சுவராசியமாக பார்த்துக் கொண்டு இருந்த விசாலாட்சியிடம் வந்தது நியாயம்…

“ஏன்டி விசா இம்புட்டு நடக்குது நீ பாட்டுக்கு தேமேன்னு உட்கார்ந்துட்டு இருக்க… கொஞ்சம் உன் அக்காக்கு எடுத்து சொல்லேன்டி” என்று சின்ன மகளை துணைக்கு அழைத்திட… அவளோ உமையாளுக்கு நான் தங்கை என்று நிருபித்தாள்.

“ஏம்மா ஒருமுறை அக்கா சொல்றதை தான் காதுக் கொடுத்து கேளேன்… இந்த முறை மாமன் வூட்டுக்கு போவாத… என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போமே”

“அடியாத்தே நீயென்ன உங்க அக்காவுக்கு மேல இருக்க… விட்டா என் பொறந்த வூட்டு பந்தத்தையே அறுத்து எறின்னு சொல்விங்க போல” என்று நெஞ்சில் கை வைத்து பதற…

‘இது தேறாத கேஸ்’ என்பதாக அக்கா… தங்கை… இருவரும் தங்கள் வேலையில் கவனமாக… அதன் பின் அவரின் வார்த்தைகளை செவிமடுக்க தான் ஆள் இல்லை.

பரபரவென்று சமையல் வேலையை முடித்தவர் வீட்டின் பின்பக்கம் குளிக்க செல்ல அங்கு அவருக்காக வெந்நீர் விளாவியிருந்தது.

‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’ என்று முனுமுனுத்தாலும் மகளின் செயல் மனதில் இதம் பரப்பியது உண்மையே!

காக்கா குளியல் போட்டு வந்தவர் அலமாரியை திறந்து மெரூன் நிற பட்டை உடுத்தியவர் லேசான அலங்காரத்துடன் வெளிவர மகள்களின் பார்வை இவர் மீதுதான்.

“அக்கா கிழக்குல உதிக்குற சூரியன் இன்னைக்கு மேற்குல உதிச்சுதா பாரு” என்ற விசாவுக்கு

“இல்ல விசா அது மேற்குல உதிச்சு இருக்காதுடி வடக்குல உதிச்சு இருக்கும்” என்றிட.

மகள்களின் கேலி புரியாதவரா அங்கை…

“அது வடக்கு இல்ல உமையா தெற்குல உதிச்சு இருக்கும் சரியா பாருடி” என்ற தாயை முறைத்து பார்த்தாள் உமையா.

“என்னம்மா பொறந்து வூட்டுக்கு போற மினுமினுப்பா… இருந்தாலும் இந்த பட்டு சேலை ஏதோ இடிக்குதே.‌‌.. என்ன சேதி” என்று கூர்ந்து பார்த்த பெரிய மகளை கண்டு மனம் பதறினாலும்…

“ஏன்டி பொண்ணுக்கு நான் அத்தைடி… நாலு பேரு முன்னாடி இப்படி மரியாதையா நின்னா தான என் அண்ணன்னுக்கு கௌரவமா இருக்கும்” என்றிட அப்போதும் உமையாளின் சந்தேகம் விலகுவதாய் இல்லை. எத்தனை பெரிய நிகழ்வு என்றாலுமே இப்படி பட்டெல்லாம் உடுத்தமாட்டார்… ஆனால் இன்று என்னவோ இடித்தது.

“ப்ச் அட விடுக்கா என்னைக்கோ ஒரு நாள் கட்டியிருக்காங்க அதுக்கு போய் இப்படி துருவி துருவி கேட்டுட்டு இருக்க” என்ற சின்ன மகளின் பேச்சில் நிம்மதி அடைந்தவர் அடுத்த அவள் பேசிய வார்த்தைகளில் நெஞ்சை பிடித்தார்…

“ஏய் விசா இப்போ கடைசியா என்னவோ சொன்னியே என்னடி சொன்ன” என்ற தாயை யோசனையாக பார்த்தவள்…

“ஏம்மா என்ன சொன்னேன்… ஹான்… பட்டெல்லாம் உடுத்தி அக்காவுக்கு மாப்பிள்ளை கேட்கவா போக போறன்னு சொன்னன்” என்றிட…

‘அடியாத்தே என்ன இந்த சின்ன குட்டி நம்ம மனசுல இருக்கிறதை அப்படியே புட்டு வைக்கது… இது சரிப்படாது… உமையா காதுக்கு விஷயம் வந்து சேரதுக்குள்ள அண்ணன் வூட்டுல பரிசம் போட்டுட வேண்டியது தான்’ என்று நினைத்தவராய் வேகமாய் அங்கிருந்து கிளம்ப முயல…

“அம்மா நில்லும்மா” என்ற உமையாளின் வார்த்தையில் அப்படியே அதிர்ந்து நின்றவரின் மனமெல்லாம் ‘அய்யோ கண்டுக்கிட்டாளோ’ என்று பதற அவரின் கழுத்தை வந்து நிறைத்தது ஒரு பவுன் டாலர் செயின்… உமையா தான் அதன் கொக்கியை அழுத்திக் கொண்டு இருந்தாள்.

மகளின் செயலில் படபடப்பானவர்… “ஏட்டி என்ன காரியம் செய்ற… வயசு பொண்ணு வெறுங் கழுத்தோட இருக்க இதை நான் போட்டு போகனுமோ… மொத இதை கழட்டுடி” என்றவரை அழுத்தமாக பார்த்தவள்…

“இங்காரும்மா வரவங்க எல்லாம் கழுத்தை நிறைச்சிட்டு வருவாங்க… இதுல நீ மட்டும் ஓத்த மஞ்ச கயித்தோட போனா நல்லாவா இருக்கும்… போட்டுட்டு போம்மா” என்றவளை கண்டு முனுக்கென்று கண்ணீர் எட்டி பார்த்திட… அதை மகள் காணும் முன்னே வேகமாக வெளியேறியவரின் நெஞ்சமெல்லாம் பாரம்…

இருபது பவுன் நகை போட்டு திருமணம் முடித்த வந்த தான் இன்று ஒரு பவுன் தங்கத்துக்கே வக்கத்து போய் இருப்பதை நினைத்து நெஞ்சம் கலங்கிட இதற்கெல்லாம் காரணமான கணவனை மனதிலே வறுத்து எடுத்தபடி தன் அண்ணன் வீட்டை நோக்கி நடை போட்டார் அங்கை. அங்கு காத்திருக்கும் அவமானம் அறியாது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!