Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிறம் பாராத காதல்.

நிறம் பாராத காதல் 11

✨

நிறம் பாராத காதல்✨

✨அத்தியாயம்.11

“வைதேகி இந்த ஓவியத்தை வரைந்த ஓவியர் வேற யாரும் இல்ல, அவரு” என்று மாயா சொல்லும் முன்னே இவர்கள் இருக்கும் அறையின் கதவைக் கீதா வேகமாகத் தட்டினார்.



Advertisement

“அத்தை தான் கூப்பிடுறாங்க” என்ற மாயா கதவைத் திறந்ததும்,”எவ்ளோ நேரமா கீழ இருந்து கத்திகிட்டு இருக்கேன், டேய் மாறா… வைதேகியை உன் மாமியார் கீழ அழைச்சிட்டு வரச் சொல்லுறாங்க” என்ற கீதா மூச்சி வாங்கிய நிலையில் மீண்டும் கீழே இறங்கி சென்றார்.

“அத்தை தூங்க தானே போனாங்க, ஏன் இப்போ நம்மள கூப்பிடுறாங்க, சரி வாங்க என்னனு போய்ப் பார்க்கலாம்” என்ற மாறனை தொடர்ந்து மாயா மற்றும் வைதேகி என்று இருவரும் கீழே இறங்கி செல்ல, அங்கே கையில் ரணதீரனின் ஜாதகத்தை வைத்துக்கொண்டு வேதநாயகி அமர்ந்து இருந்தார்.

“என்ன அத்த நீங்கப் போய் ஓய்வு எடுக்கலையா?” என்ற மாறன் வேதநாயகியின் எதிரே அமர்ந்ததும்,
“வைதேகி இங்க வந்து உக்காரு” என்று தன் வருங்கால மருமகளாகப் பாவித்து வைதேகியை தன் அருகே அமர்த்திகொண்ட வேதநாயகியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

Advertisement

“அம்மா என்னாச்சு? ஏன் அழறீங்க?” என்று மாயா புரியாமல் கேக்க,
“இன்னும் ஒரு வாரத்துல ரணதீரனுக்கு பிறந்தநாள் வருது. இந்த வருடம் போனால் இனி அவனுக்குக் கல்யாண யோகமே இல்லை” என்ற வேதநாயகி மேலும் கண்கள் கலங்கினார்.

Advertisement

“சம்மந்தி அம்மா… அதான் ராணா மாப்புளளைக்கு சீக்கிரமா வைதேகியை கல்யாணம் பண்ணி வைக்கப் போறோமே இன்னும் ஏன் கவலையா இருக்கீங்க” என்று கீதா அவர் சம்மந்திக்கு ஆறுதல் சொல்ல, மாறன் தன் அம்மாவை முறைத்து பார்த்தான்.

“வைதேகி இந்த வீட்டுக்கு மருமகளா வரப் போறதை நினைச்சு எனக்கும் சந்தோசம் தான் சம்மந்தி, ஆனா இதுவரை எத்தனையோ முறை ரணதீரனுக்கு மனமேடை வரை சென்றும் திருமணம் தடைப்பட்டு போனதை நினைச்சா தான் இந்த முறையும் அப்படி எதாவது அசம்பாவிதம் நடக்குமான்னு பயமா இருக்கு” என்ற வேதநாயகிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் வைதேகியும் தவித்துப் போனாள்.

“அத்தை… என்ன நீங்க, நான் தான் நேத்து அவ்வளவு சொன்னேனே, இந்த முறை கண்டிப்பா ராணாவுக்கு கல்யாணம் நடந்தே தீரும், வைதேகி இல்லைனா என்ன! நான் என் மச்சானுக்கு வேற பொண்ணை கூடப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைப்பேன்” என்ற மாறனின் வார்த்தையில் வேதநாயகி முகம் மாறினார்.

Advertisement

“என்ன மாப்புள்ள நீங்க!? ஏன் இப்படி பேசுறீங்க, நேத்து நான் வைதேகியை பார்த்த கணமே இந்த வீட்டுக்கு இவள் தான் மருமகளாக வர வேண்டும்னு முடிவு பண்ணிட்டேன். நீங்க ஏன் திடிர்னு அபசகுனமா பேசுறீங்க?” என்ற வேதநாயகியின் குரல் மொத்தமாக உடைந்து போனது.

“ஏன் வைதேகி, உனக்கு என் மகனைப் பிடிக்கலையா? நீ உன் அண்ணன்கிட்ட எதாவது சொன்னியா?அதான் மாறன் மாப்புள்ள இப்படி பேசுறாரா?” என்று வேதநாயகி வைதேகி கையைப் பிடித்துக்கொண்டு பாவமாகக் கேட்க, அவளுக்கோ அங்கே என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்துப் போனாள்.

“அத்த… நான் ஒரு பேச்சுக்குத் தான் சொன்னேன். வேணும்னா சீக்கிரமாவே ரணதீரனுக்கு நிச்சயம் பண்ண ஏற்பாடு பண்ணிடலாம்” என்று மாறன் அப்போதைக்கு சூழ்நிலையைச் சமாளிக்கும் விதமாகப் பேசினான்.

“அதான் மாப்புள்ள நானும் சொல்ல நினைத்தேன், நம்ம குடும்ப ஜோசியர் வரும்போது வரட்டும், பக்கத்து ஊருல பெரிய ஜோசியர் ஒருவர் இருக்காருன்னு என் சித்தி பொண்ணு ஜெயந்தி ஒரு முறை சொன்ன நியாபகம், அதனால நான் வைதேகியையும் சம்மந்தியையும் அழைச்சிட்டு போய், ரணதீரனுக்கும் வைதேகிக்கும் ஜாதக பொருத்தம் எப்படி இருக்கு, எப்போ நிச்சியம் வச்சிக்கலாம் என்ற விவரம் எல்லாம் கேட்டுட்டு வரலாம்ன்னு இருக்கேன்” என்று வேதநாயகி சொன்னதும் வைதேகியின் முகம் பயத்தில் இருள் சூழ்ந்து போனது.

பக்கத்து ஊரில் தான் வைதேகியின் குடும்பம் இருக்கும் பட்சத்தில் இவர்களுடன் அவள் சென்றால் அங்கே வைதேகியை எவரேனும் அடையாளம் கண்டுகொள்ள நேரிடும் என்று எண்ணிய வைதேகி பயத்துடன் மாறனை பார்த்தாள்.

“அத்த…வைதேகியோட ஜாதகம் எங்க சித்தி இறந்த வீட்டோட போயிடுது, அதனால நீங்கப் பெயர் பொருத்தம் வேணும்னா பார்த்துட்டு வாங்க, வைதேகி…உன் பிறந்த தேதி உன் முழு பெயர் விவரத்தை அத்தைகிட்ட எழுதிக்கொடு” என்று மாறன் சொன்னதும் வைதேகி அவனை கேள்வியாகப் பார்த்தாள்.

“அத்த.. நல்ல விஷயத்துக்குப் போறீங்க, மூணு பேராகப் போக வேணா, வைதேகி இங்க மாயாகூட இருக்கட்டும், நீங்க அம்மாவை அழைச்சிட்டு நம்ம கோவிந்தன் கூடப் போயிட்டு வாங்க, இப்போதைக்கு வைதேகியை எங்கேயும் நீங்க அழைச்சிட்டு போக வேண்டாம்” என்று மாறன் சொன்னதும், “சரி மாப்புள்ள, நீங்கச் சொன்னால் சரியா தான் இருக்கும். அம்மாடி நீ உன் பெயர் பிறந்த தேதின்னு உன் விவரத்தை எழுதிக்கொடு” என்று சொன்னார் வேதநாயகி.

வைதேகியும் ஏதோ நினைவில் தன் முழு பெயரான சித்ரவைதேகி என்ற பெயரை எழுதியவள்,மே இரண்டாம் தேதி என்று தன் பிறந்தநாளையும் ஒரு தாளில் எழுதிக் கொடுக்க, கீதாவும் வேதநாயகியும் ரணதீரன் வைதேகியின் பெயர் பொருத்தத்தை பார்த்து நிச்சியதுக்கு நாள் குறிக்க பக்கத்து ஊருக்கு டிரைவருடன் சென்று இருந்தார்கள்.

அவர்கள் சென்றதுமே வைதேகி தன் அறைக்குள் சென்றவள் மாறன் அவளுக்காக வாங்கி கொடுத்த கைபேசியில் அவளின் விவரங்களை எல்லாம் பதிவு செய்து, வைதேகியின் உயிர் தோழி கண்மணியை அழைத்துப் பார்க்க, அவளோ அழைப்பை ஏற்காமல் போனதும் வைதேகி கவலையுடன் சிறுமி மயிழினியுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள்.

“மாமா…அம்மா வைதேகி தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரப் போறதா நினைத்து ரொம்ப ஆசையா இருக்காங்களே, திடிர்னு வைதேகியை பற்றிய உண்மை அம்மாவுக்குத் தெரிய வந்தால் அம்மா எப்படி மாமா அந்த அதிர்ச்சியை தாங்கிப்பாங்க”என்ற மாயாவின் மனதில் எழுந்த அதே சந்தேகம் தான் மாறன் மனதையும் ஆட்கொண்டு இருந்தது.

“ஆனா மாயா…நீ உண்மையைச் சொல்லு, நம்ம ரானாவுக்கும் வைதேகிக்கும் கல்யாணம் நடந்தா எப்படி இருக்கும்?” என்று மாறன் தன் ஆசையை மாயாவிடம் கேள்வியாகக் கேக்க, “நல்லா தான் இருக்கும், ஆனா வைதேகி அழகுக்கும், படிப்புக்கும், அவ நிறதுக்கும் நம்ம ராணாவை எப்படி மாமா அவள் கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பாள்?” என்று கவலையாகக் கேட்டாள் மாயா.

“இன்னாருக்கு தான் இன்னாருன்னு விதி இருந்தால் கண்டிப்பா இந்த வீட்டுக்கு வைதேகி தான் மருமகளாக வரக்கூடும்” என்ற மாறனின் மனதில் வைதேகியை ரணதீரனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றி மறைந்து போனது.

அன்றைய தினம் மாலை நேரம் கணிப்போறி வாங்கும் வேலையாக ஜீப்பில் பக்கத்து ஊருக்கு வேலுவுடன் சென்ற ரணதீரன் தன் ஊர் திரும்பும் வரை வழியெல்லாம் வைதேகியை வசைப்பாடிக் கொண்டே வந்தான்.

“ஏன் ராணா உனக்கு அந்தப் பொண்ணு மேல இவ்ளோ கோவம்? அந்தப் பொண்ணு பார்க்க நல்ல பொண்ணு மாதிரி தான் இருக்காங்க, பேசாம நீ அவங்களை கல்யாணம் பண்ணிக்கோ” என்று டிரைவர் வேலு நட்பாகப் பேசுபவனை அதீத கோபத்துடன் முறைத்தான் ரணதீரன்.

“ஏன் முறைக்கிற!? உனக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கலையா?”என்று வேலு கேக்க,”டேய்… ரோட்டை பார்த்துக் காரை இயக்கு” என்று ரணதீரன் கோவமாகச் சொல்ல,”ராணா… அதோ அந்த ஆளு தான்” என்று வேலு ஒருவனை கைக்காட்ட, வேலு சுட்டிகாட்டிய ஆள் அடகுக்கடைக்கு வெளியே நின்று இருந்தான்.

“நல்லா தெரியுமா அவன் தானா? ” என்று ரணதீரன் கேக்க, “நல்லா தெரியும் அவனே தான்” என்று வேலு சொன்னதும், ரணதீரன் வேகமாக ஜீப்பிலிருந்து கீழே இறங்கி சென்றவன் வேலு கைக்காட்டிய ஆளைக் குண்டுகட்டாகத் தூக்கி அருகே இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவன், “இது என்னோட போன் நம்பர், எதாவது பிரச்சனை வந்தா எனக்கு நீங்கப் போன் பண்ணலாம்” என்ற ரணதீரன்,”வேலு வண்டியை எடு” என்றான்.

“இந்த இடத்துல இவனை நான் பார்ப்பேன்னு நினைத்தே பார்க்கல” என்று வேலு சொன்னதும்,
“இனி யாருக்கும் உதவி கூடப் பண்ணக் கூடாது போல” என்ற ரணதீரன் அந்த ஊரின் எல்லையில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் வேதநாயகியும் கீதாவும் நின்று இருப்பதை கண்டுகொண்டவன் “வேலு ஜீப்பை நிறுத்து” என்றான்.

“இவங்க ஏன் இங்க நிக்கிறாங்க?” என்று வேலுவை கேட்டப்படி ஜீப்பிலிருந்து இறங்கிய ரணதீரன் தன் அம்மாவை நோக்கி நடந்து சென்றவன், “அம்மா…
இங்க என்ன பண்றிங்க?”என்று கேட்டான்.

“ராணா… நீ இப்போதான் வீட்டுக்குப் போறியா?நல்லதா போச்சு, சம்மந்தி வாங்க நம்ம ராணாகூட வீட்டுக்குப் போகலாம், கோவிந்தா நீ காரைச் சரி செய்து வீட்டுக்கு எடுத்துட்டு வந்துரு” என்ற வேதநாயகியை ரணதீரன் கேள்வியாகப் பார்த்தான்.

“மாப்புள்ள… நாங்க உங்களுக்கும் வைதேகிக்கும் ஜாதகம் பார்க்க வந்தோம், வந்த இடத்துல கார் ரிப்பேர் ஆகிடுது” என்று கீதா சொல்ல, “என்ன ஜாதகமா!?” என்று கடுப்பாகக் கேட்டான் ரணதீரன்.

“ஆமா ராணா.. உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் அமோகமா இருக்குதாம், வைதேகி உனக்காகப் பிறந்த உன்னோட தேவதையாம்” என்று வேதநாயகி சொல்லும் போதே ரணதீரனின் முகம் இறுகியது.

“என்ன தடங்கல் வந்தாலும் வைதேகிக்கும் உனக்கும் கல்யாணம் நடந்தே தீரும்னு ஜோசியர் சொன்னாரு ராணா.”என்ற வேதநாயகியின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி குடிக்கொண்டு இருந்தது.

“சம்மந்தி… மற்ற விஷயமெல்லாம் வீட்டுக்கு
போய்ப் பேசிப்போம்” என்று கீதா சொல்ல, தன் அம்மாவையும் அத்தையையும் ரணதீரன் அவன் ஜீப்பில் வேலுவுடன் வீட்டுக்கு அழைத்து வந்தான்.

வழியெல்லாம் வேதநாயகி ஜோசியர் சொன்ன விடயங்களைச் சந்தோசமாகச் சொல்லிக்கொண்டே வர, ரணதீரனுக்கோ காதில் ரத்தம் வராத குறை தான்.

“என்ன சம்மந்தி நீங்க, விட்டா நாளைக்கே வைதேகி ரணதீரன் கல்யாணத்தை முடிச்சி வச்சிடுவிங்க போல”என்று கீதா கேட்டதும்,”அது என்ன நாளைக்கு!? இன்னைக்கே கூட இவங்க கல்யாணத்தை முடித்து வைக்க நான் தயாரா தான் இருக்கேன்” என்றார் வேதநாயகி.

சில நிமிடங்களில் இவர்கள் அனைவரும் தங்கள் பங்களாவிற்கு வந்து சேர்ந்ததும், “என்ன இது அம்மா எப்படி ராணா கூட வராங்க?” என்று தனக்குள் கேட்டுக்கொண்டே மாயா வாசலுக்குச் சென்றவளை வேதநாயகி சிரித்த முகத்துடன் அணுகியவர், ஜோசியர் சொன்ன நல்ல செய்தியைச் சொல்லி முடித்தார்.

“நல்லது அம்மா… எல்லாம் நல்ல படியா முடியும். நீங்கப் போய் ஓய்வெடுங்க” என்று மாயா சொன்னதும், “மாப்பிளையும் வைதேகியும் எங்க?” என்று வேதநாயகி கேட்டார்.

“உங்க மாப்புள்ள அவரோட கம்பெனிக்கு வைதேகியை அழைச்சிட்டு போய் இருக்காரு”என்று மாயா சொன்னதும்,”ஏன்? அவங்க புது தங்கச்சிக்கு அவரோட கம்பெனில வேலை போட்டுத் தரப் போறாரா?”என்று கிண்டலாகக் கேட்டான் ரணதீரன்.

“டேய்… ஏன்டா எப்போ பாரு எதாவது சொல்லிகிட்டே இருக்க, போப்போய் வேற வேலை இருந்தா பாரு”என்று மாயா தன் தம்பியைக் கடிந்துகொள்ள,
“ராணா… அடுத்த வாரம் உனக்கும் வைதேகிக்கும் நிச்சியதார்தம் வச்சிக்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன்” என்ற வேதநாயகி ரணதீரனின் பதிலை எதிர்பாராமல் அவர் அறைக்குச் சென்று இருந்தார்.

“அக்கா… உன் புருஷன் ஆரம்பிச்சி வச்ச ட்ராமா தானே இது, பார்த்தியா எங்க வந்து நிக்குதுன்னு” என்று ரணதீரன் மாயாவிடம் கோவமாகக் கேட்டதும், “ஏன் மாப்புள்ள.. உங்களுக்கு வைதேகியை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லையா?” என்று கீதா கேட்க, ரணதீரன் கொலை வெறியோடு அவர்களை முறைத்தான்.

“ஐயோ கீதா… சீப்பை எடுத்துச் சிறுத்தை முடியைச் சீவ பார்க்குறியே இதெல்லாம் உனக்குத் தேவையா” என்று சுதாரித்து கொண்ட கீதா விட்டா போதும் என்று அங்கிருந்து தன் அறையை நோக்கி ஓடினார்.

“அக்கா…உன் புருஷன் எங்கிருந்தோ அழைச்சிட்டு வந்த மகாராணியால இனி நம்ம அம்மாவுக்கு அதிகமா பிரச்சனை மட்டும் தான் வரப்போகுது பாரு”என்ற ரணதீரன் அங்கிருந்து வேகமாக எதிரே இருக்கும் தன் பங்களாவிற்கு சென்று கதவை அடித்துச் சாத்தியவனுக்கு பார்த்த கணத்தில் இருந்தே வைதேகியை பிடிக்காமல் போனது.

இதே தருணம் மாறனுடம் பல யோசனைகளைச் சுமந்தப்படி காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த வைதேகி மனதில் பல குழப்பங்கள் குடிக்கொண்டு இருப்பதை அவள் முகத்தை வைத்தே கண்டுக்கண்டான் மாறன்.

“வைதேகி… நீ எதுக்கும் கவலைபடாத, இன்னும் ரெண்டு வாரத்துல உனக்குப் பாஸ்போர்ட் ரெடி ஆகிடும், அப்புறம் நீ நினைத்தது போலவே கனடா கிளம்பிடலாம்” என்ற மாறன், தன் கம்பெனிக்குப் போவதாகப் பொய் உரைத்து வைதேகியை பாஸ்போர்ட் பதிவிறக்காகப் புகைப்படம் எடுக்க வெளியே அழைத்துச் சென்று இருந்தான்.

“உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்லுறதுனே தெரியல அண்ணா… ஒரு வேளை எனக்கு உடன் பிறந்த அண்ணன் இருந்திருந்தா கூட இந்த நிலைமையில எனக்கு உதவி பண்ணி இருப்பாங்களான்னு எனக்குத் தெரியல” என்று வைதேகி உள்ளுற மாறனை அண்ணனாகப் பாவித்துத் தன் எண்ணத்தை மாறனிடம் பரிமாறிகொண்டாள்.

“எனக்கும் உடன் பிறந்தவுங்க யாரும் இல்ல வைதேகி, எனக்கு ராணாவை ரொம்ப பிடிக்கும், அவனோட முரட்டு குணம் தான் இந்த ஊருல அவனைப் பற்றிப் பல பேருக்குத் தெரிந்த அடையாளம், ஆனா ராணா ரொம்ப நல்லவன், அவனை நான் எப்பவுமே என் தம்பியா தான் நினைப்பேன், இப்போ உன்னையும் நான் தங்கச்சியா தான் நினைக்கிறேன்”என்ற மாறன் ரணதீரன் பெயரைச் சொன்னதும் வைதேகியின் முகம் மாறியது.

“அண்ணா… நேத்து நைட் உங்க வீட்டுல ஒரு கருப்பு உருவத்தைப் பார்த்தேன், அப்புறம் உங்க டிரைவர் வேலு ஒரு பொண்ணை காருல தூக்கி வீசியதை பார்த்தேன், அதே மாதிரி இன்னைக்கு உங்க மச்சான் கம்பெனிக்கு நான் போனபோது, அங்க அப்புறப்படுத்த வேண்டிய பொம்மைகள் என்று எழுதி ஒரு அறைக்குள்ள ரெண்டு கருப்பு பொம்மை இருந்தது, அதுல ஒரு பொம்மை கண்ணுல கண்ணீர் வடிந்ததை நான் பார்த்தேன். அது எப்படி சாத்தியம்ன்னு நான் நினைக்கும் போதே ரம்யா என்ற பொண்ணை யாரோ கொலை பண்ணதா கேள்வி பட்டேன், அப்புறம் ஒரு கொலுசு” என்று வைதேகி அவள் மனதில் உள்ள குழப்பதை சொல்லி முடிக்கும் முன்னே மாறனின் கைபேசிக்கு இன்ஸ்பெக்டர் விக்ரமிடமிருந்து அழைப்பு வந்தது.

“விக்ரம் ஏன் இந்த நேரத்துல கூப்பிடுறான்” என்ற மாறன் வண்டியை ஓரம் கட்டியவன், “சொல்லு விக்ரம்” என்றான்.

எதிர்முனையிலிருந்து பேசிய விக்ரமின் வார்த்தையைகேட்டு மாறனின் முகம் மாறியது.

“சரி விக்ரம், நான் இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டுக்குப் போயிடுவேன், நீ நேரா ரணதீரன் பங்களாக்கு வந்துடு. நீ வரது அத்தைக்கு தெரிய வேண்டாம்.வேலு அங்க தான் இருப்பான்” என்ற மாறன் கைபேசி இணைப்பைத் துண்டித்து மீண்டும் காரைத் தன் பங்களாவை நோக்கி விரட்டினான்.

“என்ன அண்ணா எதாவது பிரச்சனையா?” என்று வைதேகி கேக்க, “ஆமா பிரச்சனை தான், ரம்யான்னு ஒரு பொண்ணு இறந்துட்டாங்களே அவங்கள கடைசியா இன்னைக்கு விடியல் காலையில வேலு தான் கருப்பு கார்ல நம்ம ஊர் எல்லையிலருந்து ஏத்திட்டு போனதா விக்ரம் சிசிடிவி மூலம் கண்டு பிடிச்சி இருக்கான்” என்ற மாறன் அடுத்த பத்தே நிமிடத்தில் தங்கள் பங்களாவை சென்றடைந்து இருந்தான்.

“அண்ணா… அப்போ ரம்யா கொலைக்கும் வேலுவுக்கும் சம்மந்தம் இருக்குமா?” என்று காரிலிருந்து இறங்கிய வைதேகி மாறனிடம் கேக்க, அவளின் இதழ் அசைவை ரணதீரன் அவன் பங்களாவின் அறையிலிருந்து தன் வீட்டு வாசலில் அவன் பொறுத்திருந்த சிசிடிவி வழியே பார்த்தவனின் இதழ்கள் நக்கலாகப் புன்னகை உதிர்த்து, “பெரிய சிஐடி சங்குந்தலா” என்று தன் அறையில் இருக்கும் ஓவியங்களுடன் வைதேகியை பற்றிப் பேசிக்கொண்டு இருந்தவனின் கைபேசிக்கு மாறனிடமிருந்து அழைப்பு வந்தது.

“இதோ அடுத்த இம்சை” என்று தன் எதிரே இருந்த ஒரு ஓவியத்தைப் பார்த்து மாறனை பற்றிச் சொன்ன ரணதீரன் தன் கைபேசி அழைப்புக்குப் பதில் தந்தவன், “என்ன விஷயம்?” என்று மாறனிடம் கேட்டான்.

“ரம்யா கொலை வழக்குல நம்ம டிரைவர் வேலு மேல சந்தேகம் இருப்பதாகவும், அவனை விக்ரம் விசாரிக்கப் போவதாகவும் எனக்கு விக்ரம் போன் பண்ணான்” என்று மாறன் சொல்ல, “அது பத்து நிமிடத்துக்கு முன்னதாக உங்களுக்குக் கிடைத்த தகவல், இப்போ நீங்க இன்ஸ்பெக்டர் விக்ரமுக்கு போன் பண்ணுங்க” என்ற ரணதீரன் கைபேசி இணைப்பைத் துண்டித்து, தன் பங்களாவிலிருந்து வெளியே வந்தவன் மாறன் அருகே நின்று இருந்த வைதேகியை முறைத்து பார்த்தான்.

“என்ன ராணா சொல்லுற!?, விக்ரம் என்னமோ ரம்யா கொலை வழக்குல வேலு மேல சந்தேகம் இருக்குற மாதிரி தானே சொன்னான்” என்று மாறன் புரியாமல் கேட்டதும் வைதேகி ரணதீரனை சந்தேகமாகப் பார்த்தாள்.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்ன்னு சொல்லுற மாதிரி உங்க போலீஸ் மச்சானுக்கு ஆரம்பத்துல இருந்தே என்னை எங்காவது கொத்து விட்டு வேடிக்கை பார்க்கத் தான் ஆசை” என்று அவனுக்கே உரிய கிண்டலான தோரணையில் ரணதீரன் பேசியதும்,
மாறன் சற்றும் தாமதிக்காமல் இன்ஸ்பெக்டர் விக்ரமுக்கு போன் செய்து பேசினான்.

கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் மாறனும் விக்ரமும் கைபேசியில் பேசிக்கொண்டு இருக்க, வைதேகியின் கண்கள் ரணதீரனின் பங்களாவை சந்தேகமாக நோட்டாமிட்டது.

“என்ன மேடம்? ஏன் என் பங்களாவை அப்படி பாக்குறீங்க?”என்று ரணதீரன் கேக்க,”ரம்யா கொலைக்கும் உங்களுக்கும் என்னமோ சம்மந்தம் இருக்குற மாதிரி எனக்குத் தோணுது” என்றாள் வைதேகி.

“பாருடா… அப்புறம் வேற என்னவெல்லாம் உங்களுக்கு என் மேல சந்தேகம் இருக்கு?” என்று ரணதீரன் கேக்க,

“நேத்து நைட் ஒரு பொண்ண இங்க இருந்து உங்க டிரைவர் வேலு காருல தூக்கி வீசினாரு, அது கண்டிப்பா ரம்யா தான், இன்னைக்கு காலையில நான் கருப்பு காருல கண்டெடுத்த கொலுசு கூட ரம்யாது தான், நீங்கத் தானே ரம்யாவை கொலை பண்ணீங்க, பாவம் ரம்யா, அவங்க வயத்து பிள்ளைக்காரி அவங்களை ஏன் கொலை பண்ணீங்க!?” என்று வைதேகி கோவமாகக் கண்கள் சிவக்க கேட்டாள்.

“ஆமா… நான் தான் கொலை பண்ணேன். இன்னைக்கு நைட் உன்னையும் கொலை பண்ண போறேன்” என்ற ரணதீரனின் பதிலில் வைதேகி பேய் அறைந்ததை போல நின்று இருந்தவள் காதருகில் சென்றவன்,

“ஒழுங்கா இந்த வீட்டுல இருந்து ஓடிப் போயிடு, இல்லைனா கண்டிப்பா இன்னைக்கு நைட் உன்னையும் நான் கொலை பண்ணிடுவேன்” என்று மிரட்டும் தோரணையில் ரணதீரன் வைதேகியை எச்சரித்தவனின் வார்த்தைகளைக் கேட்டு வைதேகியின் உடல் நடுங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!