Skip to content
Post Views: 5,250
காலையில் குளித்துவிட்டு கிச்சனுக்கு வந்த வெண்ணிலா கொஞ்சம் அதிர்ச்சியானாள்.
அங்கு அவள் கண்ட காட்சியினை உடனே அவள் கண்களால் நம்பவே முடியவில்லை!
அங்கு மயூவிடம் ஏதோ பேசிக் கொண்டே மிக்சியில் அரைத்துக் கொண்டிருந்த வளர்மதி, கீழே தரையில் உட்கார்ந்து கொண்டு வெங்காயம் உரித்துக் கொண்டிருந்த வசந்தா, ஹாலில் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் அருண்!
இத்தனை இணக்கமான சூழலில் தன் வீட்டார், இங்கு இருப்பர் என்று அவள் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை!
Advertisement
சந்தோசம்! சந்தோஷத்தில் கண்களே கலங்கி விட்டது நிலாவுக்கு!
நன்றியுடன் அவள் மயூவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பேசிக் கொண்டே திரும்பிய மயூ, இவளைப் பார்த்து விட்டு, “இதோ நிலா எந்திருச்சு வந்திட்டா, பாரு.. வளர், அவளுக்கு காபி கொடும்மா..” என்றவள், “மித்து எழுந்துட்டானா?” என்று கேட்க,
Advertisement
“ம்ம். குளிச்சுட்டு இருக்கார்” என்றாள் வெட்கத்துடன்.
Advertisement
அது எல்லா விசயத்தையும் அங்கிருந்த பெண்களுக்கு உணர்த்தி விட, அவர்களும் உள்ளுக்குள் சந்தோசப் பட்டார்கள்!
காலை உணவுக்குப் பின், எல்லோரிடமும் கலந்து பேசிவிட்டு, ஒரு ரிசப்சன் வைத்து விடலாம் முடிவெடுத்தார்கள்!
ரிசப்சன் என்று ஒன்று கட்டாயம் தேவை!
Advertisement
தொழில்முறை நண்பர்களுக்கு சொல்லியே ஆக வேண்டுமே!
வான்மதியால் இப்போது சென்னை வர முடியாது.
அவளுக்கு ஒன்பதாம் மாதம்தான் வளைகாப்பு செய்யவிருந்தார்கள், செல்வத்தின் வீட்டு சூழ்நிலைகளால்!
அதனால் மதியின் டெலிவரி தேதியை அனுசரித்து ஒரு நல்லநாளைக் குறித்தார்கள்.
மயூ லதாவுக்கு போன் செய்தாள்.
ஆரம்பத்தில் ரொம்ப பேசுவதில்லை என்றாலும், சமீபக் காலங்களில் அவள் லதாவோடு பேசத் தொடங்கியிருந்தாள்.
வயது கொடுத்த பக்குவம், “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!” என்று சொல்ல, அவள் இப்போது வாணியிடமும் வாகீசனுடமும் கூட பேசிக் கொண்டு தான் இருந்தாள்.
லதா போனை எடுத்தவுடன், “அம்மா உன் பேரனுக்கு ரிசப்சன் வச்சு இருக்கேன்! இன்னும் இருபது நாள் இருக்கு, நீ, அண்ணன் அண்ணி, வாணிக்கா அத்தான் பசங்க என்று எல்லோரும் குடும்பமா வந்திடனும் சரியா?” என்றாள் வித்யா சந்தோசமாக.
“ரொம்ப சந்தோஷம்டி மயூ! ஆனா என்ன நீ , கல்யாணத்திற்கு கூப்பிடாம, இப்படி ரிசப்சனுக்குக் கூப்பிடறே? என்னாச்சு?”
“உன் பேரன் என்னையவே கல்யாணத்துக்கு கூப்பிடல, அதுக்கென்ன பண்ண?”
“மயூ..” என்று சிணுங்கினான் ஜீவா, அவள் அருகில் உட்கார்ந்து கொண்டு!
“என்னடி சொல்ற?”
“ம்ம். உம்பேரன் லவ் மேரேஜ் பண்ணிகிட்டான், அது ஒரு பெரிய கதை நீ நேர்ல வா சொல்றேன்!”
“ஏண்டி, பொண்ணு எப்படி? நல்ல பொண்ணு தானா?”
“அதெல்லாம் ரொம்ப நல்லப் பொண்ணு, என் பையன் மனசுக்கு மட்டுமில்ல, எனக்கும் பிடிச்ச பொண்ணு தான்!” என்றாள் மயூ, கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த நிலாவை கண்ணால் அழைத்து அருகே அமர செய்து, அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்!
“மயூ..இது ரொம்ப அநியாயம், ஆன்னா ஊன்னா, உன் மருமகள மட்டும் ஹக் பண்ற, கிஸ் பண்ற, எனக்கு மட்டும் அறை கொடுக்கிற?”
“என் மாமியார், என்னைக் கட்டிப்பாங்க உங்களுக்கு ஏன் காதில் புகை? வேணுமின்னா உங்க மாமியாரைப் போய் நீங்க கட்டிக்கோங்க” என்றாள் நிலாவும் வம்பாக!
“நாங்களும் கட்டிப்போம், எங்களுக்கும் மாமியார் உண்டு” என்று சொல்லிய ஜீவா, அங்கு வந்த வசந்தாவைத் தோளோடு அணைத்துக் கொண்டான்!
வசந்தா கூச்சப்பட்டு நெளிய, “ஏன் அத்தை உங்களோட பையன் இப்படி ஹக் பண்ண மாட்டானா?” என்று கேட்டு அவரை சமாதானம் செய்தான்!
“அத்தை இது ஓர வஞ்சனை! உங்க கடைசி மருமகன் மட்டும் அப்படி என்ன உசத்தி, நாங்களும் வரோம்” என்று செல்வமும் நட்ராஜும் வசந்தா கிட்டே நெருங்க, அவர் பதறிப் போய், “அய்யோ!: என்று கூவியே விட்டார்!
டிவியில் பழைய அஜித் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்த அருண், இதையெல்லாம் பார்த்து விட்டு வாய் விட்டு சிரிக்கவே தொடங்கிவிட்டார்!
ஒரு வழியாக எல்லோரும் சிரித்து முடித்தப் பின்னும் வளரின் சிரிப்பு மட்டும் நிற்க வில்லை! அவள் டிவியில் இருந்த காமெடி சீனைப் பார்த்து தான் சிரித்தாள்!
“அக்கா, நீ என்னக்கா, இப்ப தான் இத முதமுதலா பார்க்கிற மாதிரி இப்படி சிரிக்கிற?”
“அதுவா.. நிஜத்திலும் இந்த சீன் மாதிரி ஒண்ணு நம்ம ஊரில நடந்துருக்கு அத நினைச்சுதான் சிரிச்சேன்” என்றாள் வளர்.
டிவியில் காமெடி ரவுடி கோஷ்டி வந்து வடிவேலை மிரட்டும் போதெல்லாம் காக்கா அவர்கள் தலையில் அசிங்கம் பண்ணி விடும் சீன் ஓடிக் கொண்டிருந்தது.
“இது மாதிரி தாண்டி அந்த விநாயகம் நிலைமையும் இப்ப!
நம்ம வீட்டுல வந்து பிரச்சினை பண்றதும் அப்புறம் அவனே அவமானப்படுறதுமே அவனுக்கு வேலையா போச்சு!
அன்னிக்கு நம்ம வீட்டுல பிரச்சினைப் பண்ணிட்டு இருந்தவன திடீர்னு காணோம்! நாம் அப்ப இருந்த நிலையில அத கவனிக்கல!
ஆனா அவன் அப்ப போலிஸ் ஸ்டேஷன்தான் போயிருந்தான்!
அவன், ஆள் என்ன எப்படின்னு தெரியாம வேற ஒரு பொண்ணுகிட்ட வாலாட்டியிருக்கான்!
கொண்டு போய் ஸ்டேசன்ல உக்கார வச்சு கட்டுடா தாலியன்னு கொடுத்து கல்யாணத்தைப் பண்ணி அனுப்பிட்டாங்க!
இது ஒண்ணும் விசேசம் இல்ல தான்! ஆனா அந்த பொண்ணு தான் விசேசம்! அவ அப்படியே மைனா படத்துல வரும் போலிஸ்காரர் பொண்டாட்டி மாதிரியாம்! விநாயகத்துக்கு ஆயுள் தண்டனை! ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!” சொல்லி சொல்லி சிரித்தாள் வளர்மதி!
————
“நிலா.. போதும், எத்தனை கோன் எடுத்துட்ட, இதோட!” பின்னால் திரும்பாமலே மயூ குரல் கொடுத்தாள், பிரிட்ஜிலிருந்து கோன் ஐஸ்க்ரீம் ஒன்றை எடுத்துக் கொண்டிருந்தவளிடம்!
“நீயே இப்படி பண்ணினா உன்னைப் பார்த்து வித்யுத் கத்துக்க மாட்டானா?”
என்ற மயூவின் குரலைக் கேட்க அங்கு நிலா இருந்தால் தானே!
“என்ன மயூ?” என்றவாறு கிச்சனுக்குள் வந்தான் ஜீவா, அவள் நறுக்கிக் கொண்டிருந்த கேரட்டை வாங்கி கடித்துக் கொண்டே!
“ம்ம். உம் பொண்டாட்டி ஐஸ்க்ரீம் ஐஸ்க்ரீமா விட்டு நகர்த்திட்டு இருக்கா, அதப் பார்த்து உன் பிள்ளையும் கேக்குறான்!” என்றாள் மயூ செல்ல கோபத்துடன்!
பிள்ளை?
ஆமாம்! ஜீவா தன் “கடுமையான உழைப்பால்”, அவர்களின் முதல் வெட்டிங்டே வருவதற்குள் மயூவை பாட்டியாக்கிவிட்டான்!
வித்யா-ராகவ் பேரை சேர்த்து வித்யுத் ராகவ் என்று பெயரிட்டார்கள்!
வித்யுத் ராகவிற்கு இப்போது மூன்று வயது ஆரம்பித்து விட்டது!
வித்யாவை அவனும் “மயூம்மா” என்றே அழைத்தான்!
சரியான சுட்டி! வாயாடி வேறு!
“அப்படியா செஞ்சா, இரு அவளை என்னனு பார்த்துட்டு வரேன்!” என்று அவர்கள் அறைக்குள் சென்றான் ஜீவா!
அங்கு ஐஸ்க்ரீம் கோனை மெய்மறந்து சுவைத்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா!
அவளருகே போனவன் டக்கென்று அவளின் முழங்கையைத் தட்டிவிட, இப்போது ஐஸ்க்ரீம் அவள் முகம் முழுவதும்!
“அய்யயோ வடை போச்சே!” என்பது போல சொன்னவன்,
“இரு வேஸ்ட்டாக்காம நானே சாப்பிடறேன்” என்று அவள் முகம் முழுவதும் தன் உதட்டால் சுத்தம் செய்தான்!
“டேய்.. புருஷ்.. என் ஐஸ்க்ரீமை பிடுங்கிட்ட இல்ல, முகம் கழுவிட்டு வந்து உன்னை என்னப் பண்றேன் பாரு!” என்றவாறு பாத்ரூம் நோக்கி சென்றாள் நிலா!
“போடி” என்றவாறு வெளியே சென்றவன், அங்கே ஹாலில் தரையில் அமர்ந்து வித்யுத் அடுக்கி வைத்திருந்த பில்டிங் செட்டை, விளையாட்டாக கலைத்து விட்டு ரூமிற்குள் சென்று விட்டான்!
“அப்பா” என்று முறைத்து எழுந்து வந்தான் குட்டிப் பையன்
“அம்மா, இங்க பாரு அப்பா நான் கஷ்டபட்டு செஞ்சு வச்சுருந்தத கலைச்சு விட்டுட்டாரு!” என்று கத்திக்கொண்டு அவனும் ரூமிற்குள் உள்ளே வந்தான்!
அங்கே டவலால் முகம் துடைத்துக் கொண்டிருந்த நிலாவின் பின்புறம் வேண்டுமென்றே லேசாக காலை உயர்த்தி எத்திவிட்டு அவளைத் தடுமாற செய்து விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்த ஜீவாவை நோக்கி,
“தாக்குங்கள்..” என்று போர் வீரன் மாதிரி கத்திக்கொண்டு அம்மாவும் பிள்ளையும் ஜீவாவின் மேல் பாய்ந்தார்கள்!
“டேய்.. டேய்… விடுங்கடா..” சிரித்துக் கொண்டே அவர்களை தடுத்தான் ஜீவா!
“நானும் பொறுமையா நல்ல பொண்டாட்டியா இருக்கலாம்னு பார்த்தா, உங்க அட்ராசிட்டிஸ் தாங்க முடியல!” நிலா சொல்ல,
“அம்மா பேசிட்டு இருக்காதேம்மா, நல்லா கடி அப்பாவை!” என்று வித்யுத் சொல்ல, ஆளுக்கொரு கன்னத்தில் கடித்தார்கள்!
ஜீவாவிற்கு கூசியது.
உள் நாக்கில் கூட ஒரு சந்தோஷமான கூச்சம்! வித்யுத் அவன் மொட்டைத்தலையை ஜீவாவின் முகத்தில் உரசும் போது!
“டேய்.. விடுடா கூசுதுடா.. விடுடா” என்று மகனிடம் சொல்லியவன், இந்த பக்கம் மனைவியின் இடையைக் கொத்தாகப் பிடித்துக் கொண்டு,
“நிலா வேண்டாம் உனக்கு என்னைப் பத்தி தெரியும், இப்ப நீ கடிக்கிற ஒவ்வொரு கடிக்கும் பதிலா உனக்கு நூறு கடி கிடைக்கும்!
பாஷா ஸ்டைல்ல சொல்லணும்னா நீ ஒரு கடி கடிச்சா நான் நூறு கடி கடிப்பேன்!” என்று மெல்ல அவள் காதில் சொன்னான்
“அய்யோ!” என்றவாறு அவனை விட்டாள் நிலா!
“அம்மா, என்னம்மா, நீ இப்படி பண்ணிட்ட!” மகன் சலித்துக் கொள்ள, “இல்லடா அப்பா என் காதுல சாரி சொன்னார், அதான் விட்டுட்டேன்!” என்றாள் நிலா.
“போம்மா.. நீ எப்பவும் இப்படி தான்!” சலித்துக் கொண்டு,
“இரு நான் மயூம்மாவிடம் சொல்றேன்!” என்று அங்கிருந்து ஓடி விட்டான்!
“என்ன பொண்டாட்டி மேடம், உங்க புருஷ் மேல ரொம்ப தான் பயம் போல!”
“இருக்காதா பின்னே, வாங்கியிருக்கும் விழுப்புண்கள் எத்தனை!” என்றாள் நிலா!
“எத்தனை, இன்னிக்கு நைட் கவுண்ட் பண்ணிடலாம்!” என்று சொல்லி கண்ணடித்தான் ஜீவா!
“சரி வந்ததும் வந்திட்ட, அப்படியே மாமாவை கொஞ்சம் கவனிச்சுட்டுப் போ!” அவளை நெருக்கினான்.
அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் நிலா!
“மனைவியாகப் பட்டவள், கணவனுக்கு கன்னத்தில் மட்டும் கிஸ் பண்ணினா கும்பி பாகம் தான் தண்டனை, தெரியுமா உனக்கு!
அதுல இருந்து என் பொண்டாட்டிய நான் தானே காப்பத்தணும்!” என்று சொல்லியபடி அவளின் இதழ்களைக் கவ்விக் கொண்டான் ஜீவா!
பேரனைத் தூக்கிக் கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைய எத்தனித்த மயூ கண்ணில் இது பட்டுவிட, நல்லவேளை குழந்தை பார்க்கவில்லை!
“இவன் வேற இப்படி மாட்னிஷோ நடத்திட்டு இருக்கான்!” என்று பொய்யாக சலித்தபடி, மெதுவாக கதவை சார்த்தி விட்டு சென்றாள் மயூ!
error: Content is protected !!