Skip to content
Post Views: 2,994
பூவிடைப் பனித்துளிகள்
அத்தியாயம் 11
ஆம், அவளைப் பொறுத்தவரையில் காதல் உணர்வன்று, பொறுப்பு. அதிலும் நாள் தவறாமல் சிரத்தையாகக் கடைபிடிக்கப்பட வேண்டிய வேலை. அதுதான் தினமும் விடுதியில் அத்தனைப் பெண்களைப் பார்க்கிறாளே.
சரியான நேரம் கைப்பேசி அழைப்பு, காலை எழுந்தால் குட்மார்னிங், குட்நைட், சாப்பிட்டியா? என்ன பண்ணற? என்று நேரா நேரத்திற்கு விசாரிப்புகள் நிகழ்த்தப்பட வேண்டும்.
Advertisement
இரவு ஒன்பது மணிக்குத் துவங்கினால், நள்ளிரவு வரையிலும் பிடித்தம் உள்ளதோ இல்லையோ, அடுத்த தினம் முக்கியமான பரிட்சை இருந்தாலும் கூட, மணிக்கணக்கில் கைப்பேசியில் கதை பேச வேண்டும். பல வருடம் பழகிய பள்ளி நண்பனிடம் நிம்மதியாக, மகிழ்வுடன் சிரித்துப் பேசும் சுதந்திரம் களவாடப்படும். அதுவும் அன்பு, அக்கறை என்ற முகமூடியின் பெயரில் திருடு போகும்.
அதிலும் அந்த அன்பு பரிமாற்றங்களைக் கேட்க வேண்டுமே. அடடடடா! என்றிருக்கும் திவ்யாவிற்கு.
“அவன் கிட்ட என்ன அப்படி ஒரு சிரிப்பு?”
Advertisement
“ஏ ஜஸ்ட் ஃப்ரெண்ட் டா. அதுக்கு ஏன் புஜ்ஜி கோவிச்சுக்கற?”
Advertisement
“அப்படி தான் ஆரம்பிக்கும். பெஸ்ட் ஃப்ரெண்டு, பாய் பெஸ்டியா மாறி அப்படியே பாய் ஃப்ரெண்டா மாறிடும் குட்டிமா. உன்னை ஈஸியா ஏமாத்திடுவாங்க. உன் சேஃப்டிக்காக தானே நான் சொல்லறேன். அவன் கூட இனிமே பேசாத குட்டிமா. உனக்குத் தெரியாதுடீ. நீ ரொம்ப சாஃப்டான ஆளு. உன்னையெல்லாம் பேசியே ஏமாத்திடுவாங்க.”
“ஆமா புஜ்ஜி. நீ சொல்லறது சரியா தான் இருக்கும். நான் இனி அவன் கிட்ட பேசமாட்டேன். சரியா புஜ்ஜி” என்கின்ற ரீதியில் இருக்கும். இவனே அவளைப் பேசிப் பேசி ஏமாற்றி வைத்துள்ளான் என்பதே புரியாது.
திவ்யாவிற்கு இதையெல்லாம் பார்த்தாலோ, கேட்டாலோ, ‘உனக்குன்னு கொஞ்சம் கூட சொந்தமா அறிவு இல்லையாடீ? அவனைத் தவிர வேற உலகமோ, வாழ்க்கையோ இருக்கக் கூடாதுன்னு உன்னை சோஷியலா தனிமை படுத்தறான். அவன் மேல ரொம்ப டிபெண்டண்ட் ஆக வைக்கறான். அவனை விட்டா உனக்கு எதுவுமே இல்லைன்னு ஆக்கறான். யோசிங்களேன்டீ. ஏன் இப்படி காதல்ங்கற பேர்ல அறிவை அடகு வைக்கறீங்களோ தெரியலை.
Advertisement
இன்னைக்கு இதெல்லாம் செய்யறவன், நாளைக்கு உன் அப்பா அம்மாவை ஏமாத்திட்டு வா ஓடிப் போலாம்னு சொல்லுவான். இன்னும் கொஞ்சம் கெட்டவனா இருந்தா உன் ந்யூட் பிக் அனுப்பு, அப்போ தான் நீ என்னை உண்மையா லவ் பண்ணறன்னு அர்த்தம்னு உன்னை எமோஷனலா ப்ளாக்மெயில் பண்ணுவான். அப்பறம் அதைக் காட்டி மிரட்டியே தான் நினைக்கறதை சாதிச்சுக்குவான்.
பத்துல ஆறு பேர் இப்படித்தான் இருக்கறானுக. முன்னாடி இந்த அன்பான அக்கறைக்கு அடிமையாகி, அவன் சொல்லற பேச்செல்லாம் கேட்டு நடந்து, ப்ரெண்ட்ஸை இழந்து, அவன் மட்டுமே உலகம்னு மாறி, அப்பறமா அவன் பிஹேவியர்ஸ் மூச்சு முட்ட வைக்கறப்ப ப்ரேக்கப் பண்ணிடறீங்க. கொஞ்சம் உங்க சுயத்தை விட்டுக் குடுக்காம லவ் பண்ண கத்துக்கோங்க. முடியலையா லவ்வே பண்ணாதீங்க’ என்று சொல்லத் தோன்றும்.
ஆனால் யாருக்கும் இதுநாள் வரையிலும் எந்த அறிவுரையும் சொல்லமாட்டாள் திவ்யபாரதி. ஒரு முறை தன் உற்ற தோழி கீர்த்தனா, அவள் வகுப்பில் படிக்கும் கிருஷ்ணசாரதியைக் காதலிப்பதாக வந்து நின்றபோது, “கீர்த்தி, எனக்கு கிருஷ்ணா மேல அவ்வளோ நல்ல அபிப்பிராயமே இல்லைடீ. ரொம்ப எமோஷ்னல் டைப்பா தெரியறான். யோசிச்சுக்கோ” என்று உற்ற தோழியாயிற்றே என்று அறிவுரை வழங்கினாள். ஆனால் கீர்த்தி அதை கருத்தில் கொள்வது என்ன, காது கொடுத்துக் கேட்கும் மனநிலையில் கூட இல்லை.
“என் கிருஷ்ணா அப்படியெல்லாம் இல்லை திவி. ரொம்ப கேரிங். அவ்வளோ பாசம் என் மேல. எப்படி அன்பா அக்கறையா பார்த்துக்குவான் என்னை. எனக்கு என் அம்மா கூட இருக்கற மாதிரியே ஃபீல் ஆகுது அவன் கூட இருக்கறப்போ” என்று சிலாகித்தாள். அதற்கு மேல் பேசி புரியவைக்க எதுவும் இல்லை என்று உணர்ந்த திவ்யா, “ஓ, சரிடீ, ஆல் த பெஸ்ட்” என்று மட்டிலுமாக நிறுத்திக் கொண்டாள்.
இரண்டே மாதத்தில் அதே கீர்த்தனா கண்ணீரும் கதறலுமாக, “ரொம்ப டார்ச்சர் பண்ணறான்டீ. வீட்டில அப்பா அம்மாகிட்ட கால் பேசணும்னா கூட எவ்வளோ நேரம் பேசறேன்னு கேட்கறான். அப்பா கிட்ட தான் பேசினேன்னு டைமிங் எடுத்து ஸ்கீரின் ஷாட் அனுப்ப சொல்லறான். கசின் கல்யாணத்துக்கு போனப்போ, பக்கத்தில நின்ன அக்கா பையன் ஏன் அவ்வளோ க்ளோஸா உரசிகிட்டு நிக்கறான்னு சண்டை போடறான். அவன் என்னை விட சின்ன பையன்டீ. கொஞ்சம் ஹைட்டா இருப்பான். அதனால சந்தேகப்படறான். இதையெல்லாம் வச்சு நான் சண்டை போட்டு கோவமா பேசினா, நீ மாறிட்ட, முன்ன மாதிரி இல்லை. என்னை அவாய்ட் பண்ணற. நான் கையை அறுத்துக்குவேன்னு லூசுமாதிரி பேசறான்டீ. என்னால தாங்கவே முடியலைடீ இவன் டார்ச்சர. ஏன்டா லவ் பண்ணோமோன்னு இருக்கு” என்று புலம்பினாள்.
அப்பொழுதும் திவி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “சரி, விடு… கொஞ்ச நாள் போனா சரியாகிடும்” என்று தோழிக்குத் தேறுதல் வார்த்தை கூறினாள்.
இந்த சம்பவங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, திவ்யாவின் மனது தெளிவான முடிவுகளை எடுக்கப் பழகியிருந்தது. அதிலும், கண்மூடித்தனமாக பார்த்ததும் காதல், பேசியதும் அன்பு, கண்பார்வை சந்தித்தால் மின்னல்வெட்டு என்று அவள் வயதிற்கே ஏற்படும் குழப்பங்களையும், ரசாயன மாற்றம் என்ற புரிதலுடன் ஏற்றுக்கொள்ளப் பழகியிருந்தது.
அதனால் தான் பரணியைக் கடக்கும் போதும், அவனிடம் பேசும் சமயமும் மனதில் தோன்றிய படபடப்பை உணர்ந்து, முடிந்த வரையில் அவனைப் பார்ப்பதைத் தவிர்க்கப் பழக்கப்படுத்திக் கொண்டாள். அவன் விழிகளைச் சந்திக்கும் சமயம், உள்ளத்தில் எழும் உவகை அபரீதமாக இருக்கும் தான். இல்லை என்று மறுக்க முடியாது.
‘என்ன இப்படிப் பார்க்கறான்? அவன் கண்ணைப் பார்த்தாலே ஒரு மாதிரி தலை சுத்தி, வேற எந்த வித எண்ணங்களும் இல்லாம மைண்ட் ப்ளாங்கா ஆகிடுது. இன்னும் கொஞ்ச நேரம் பார்க்க மாட்டானான்னு ஏக்கமா தோணுது. படபடப்பை மறைக்க முடியாம திண்டாட வேண்டியிருக்கு.
அவனைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. அவன் கேரக்டர் என்ன? எப்படிப்பட்டவன்? ஒரு டீச்சரா இருந்துகிட்டு, தன் ஸ்டூடெண்டை சைட் அடிக்கறானே அப்போ அவன் எப்படி நல்லவனா இருக்க முடியும்? சும்மா வெறிக்க வெறிக்க பார்க்கறாங்கறதுக்காக, லவ் பண்ண முடியுமா? இல்ல, அப்படி பண்ணா அந்த லவ் தான் காலத்துக்கும் இருக்குமா?
இதெல்லாம் தான் காதலா? இல்லையே! காதல் என்றால் பரஸ்பரம் ஒரு புரிதல் வேண்டும் அல்லவா? என்னைப் பற்றி நல்லவை அல்லவை எல்லாம் தெரிந்தும் என் மீது அன்பு செலுத்த வேண்டும். அதற்கு அவன் என்னுடன் பழகினால் மட்டுமே, நான் எப்போது சிரிப்பேன், என்ன விஷயத்திற்கு கோபம் கொள்வேன். கோபப்படும் சமயம் எப்படி நடந்து கொள்வேன் என்று தெரியும்.
ஏனென்றால் மனிதர்கள் கோபத்துடன் இருக்கும் பொழுது தான் தங்களின் முழு சுபாவத்தை வெளிப்படுத்துகின்றனர் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. கோபத்தில் கத்தி, தன் ஆத்திரத்தை வெளியேற்றி விடுகின்றனர் பலர். அது நல்ல வழிமுறையும் கூட, என் கோபம் அமைதியாக இருப்பது. எதிராளி உடலளவில் அருகில் இருந்தாலும், உள்ளத்தால் பல மையில் தூரத்தில் இருப்பது போல பாவித்து ஒதுக்கித் தள்ளுவது. இதெல்லாம் புரிபடவேண்டும் அல்லவா?’ என்று தத்துவார்த்தமாக எடை போடுவாள்.
இதெல்லாம் இந்த இருபது வயதில் தோன்றும் கோளாறு என்று அதை ஒதுக்கிவைத்து, தெளிவாக தன் குடும்பம், படிப்பு, வேலை, முன்னேற்றம் என்று யோசிக்க முடிந்தது.
‘வேலைக்கு போகணும். செட்டில் ஆகணும், அக்கா ட்ரீட்மெண்ட் செலவு பத்து லட்சம் ஆகிடுச்சு. அதுக்காக அப்பா வெளி ஆட்கள் கிட்ட வாங்கியிருக்க கடன், அடகு வச்சிருக்க அம்மாவோட நகைகளை மீட்கணும். அப்பாவுக்கு உதவியா இருக்கணும்.’ என்று அறிவுடன் யோசித்தாள்.
அதனால் தானோ என்னவோ இப்போது, மங்கிய நீல நிற ஒளியில், சிறு குலுக்கலுடன் சென்று கொண்டிருக்கும் பேருந்தில், எதிரில் தன்முகத்தை சிரத்தையாக கவனித்தபடிக்கு அமர்ந்திருக்கும் பரணியின் எதிரில், மெல்லிய காதல் பாடல்கள் கசிந்துருகி வழிந்தோடிக் கொண்டிருக்கும் மதி மயக்கும் வேளையில் கூடத் தெளிவான சிந்தனையுடன் பேச முடிந்தது.
‘உன்னைக் காதலிக்கிறேன்’ என்று கூட பரணி தன் வாய் திறந்து கூறவில்லை இன்னமும். ‘உனக்கே நான் சொல்ல வர்றது புரியும்’ என்று தோதாக ஆரம்பித்த விதம் சத்தியமாக திவ்யாவை ஈர்க்கவில்லை. ‘ஒரு வேளை நான் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் பட்சத்தில் சுலபமாக தப்பித்துக் கொள்ள, வம்பில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க புது யுக்தியா?’ என்றே எண்ணம் ஏற்பட்டது.
அவன் பேசியதற்கு மறுமொழியாக, “என்ன புரியணும் சார்?” என்று விழிகளை சற்றும் தாழ்த்திக் கொள்ளாமல் அவள் வினவுவது கண்டு பரணி துணுக்குற்றான்.
“நான்… என்ன சொல்லறேன்னு புரியலையா?” என்று சற்றே பதட்டத்துடன் வினவலானான். பார்வைகள் கடத்தும் செய்திகள் இதயத்தினுள் துளைத்திருக்கும் என்று திட்டமாக நம்பியவனுக்கு அவள் வினா வியப்பூட்டியது. ‘என் விழியில் வழியும் காதல் இவள் நெஞ்சத்தின் கதவுகளை இந்நேரம் தட்டி உடைத்திருக்கும் என்றல்லவா நினைத்திருந்தேன். இவளானால், “என்ன புரியணும்” என்று கேள்வி கேட்கிறாளே!’
சரியாக அந்த நேரம் பார்த்து,
“பூமாலையே தோள் சேரவா… பூமாலையே
ஏங்கும் இரு தோள் சேரவா…
ஏங்கியது இளைய மனது
இளைய மனது இணையும் பொழுது” என்று இளையராஜா குரல் அந்த பேருந்தில் ஒளி வெள்ளத்துடன் போட்டி போட்டுக் கொண்டு ஒலியாக காதுகளில் ரீங்காரமிட,
“இந்த பாட்டு… இது புரியலையா?” என்று சட்டென இளையராஜாவின் இசையைத் தன் துணைவனாக்கிக் கொண்டு கொஞ்சம் ஏக்கத்துடன் திவ்யாவை ஏறிட்டான். பரிதவிப்பும் பதட்டமும் சூழ்ந்த அவன் முகத்தைக் காண திவ்யாவிற்கும் சஞ்சலம் தான். ஆனால் என்ன செய்ய? மனதில் நிழலாய் கடந்து, சில நிமிடம் மழை பொழிந்து நிலத்தைக் குளிர்விக்கும் மேகத்திற்கு ஆசைபட்டு, வருடம் முழுக்க தண்ணீர் கொடுத்து தாகம் தணிக்கும் கேணியை கைவிடலாகாதே!
இவன் பார்வை அவள் மனதிற்குள் மழைக்காற்றைக் கொணர்ந்தது என்னவோ நிஜம். அந்த சில்லிப்பை ஸ்பரிசித்து, ஆழப் பெருமூச்சு எடுத்து, மனதின் ரகசிய அறைகள் முழுவதையும் குளிர்வித்துக் கொண்டாள்.
‘போதும். இது போதும். இவனை இதற்கு மேல் பேச விடாதே திவி. ஆபத்தை விலை கொடுத்து வாங்காதே! தூரத்து மழை மேகமாய் அவன் கடந்து சென்றுவிடட்டுமே. அதனால் என்ன பாதகம் வந்துவிடப் போகிறது.’ என்று தாளமாட்டாமல் எச்சரித்தது அவள் உள்ளம்.
“தமிழ்ல தானே பாடுது, புரியாம எப்படிப் போகும்?” என்று அவனின் பொங்கி வந்த உவகையை, தன் வார்த்தைகளால் நொடியில் அணைபோட்டு விட்டாள்.
அவன் உள்ளத்தின் குமுறல்கள் அப்பட்டமாய் அவன் முகத்தில் நடனமாடின. பரிதவிப்புடன் அவளுக்குப் நிஜமாகவே புரிபடவில்லையோ என்று, “திவி, நான் சொல்ல வர்றது…” என்று உள்ளக் குமுறல்களை வார்த்தைகளாய்க் கோர்க்கத் துவங்கினான் பரணி.
முதல் தடவை அவன் வாயில் இருந்து வந்த, ‘திவி’ என்ற அழைப்பு அவளைத் திக்குமுக்காட வைத்தது. மனதில் இடி மின்னலுடன் பெருமழையே பெய்யத் துவங்கிவிட்டிருந்தது. கம்பளி கேட்கும் குளிர் கூட இல்லை. நெருப்பு கேட்கும் குளிரது.
அவன் கண்வீச்சும், சற்றே தாழ்ந்த குரலில், “திவி” என்ற அவன் அழைப்பும், அவளை புதைமணலாய் உள்ளிழுக்கத் துவங்க, திவ்யா சுதாரித்தாள்.
“சார் சார் ப்ளீஸ்… இதென்ன நீங்க எடுக்கற காலேஜ் சப்ஜெக்டா. யாருக்குமே புரியாம நீங்க கஷ்டப்பட்டு எக்ஸ்பிளைன் பண்ண?” என வலுவில் முகத்தில் வரவழைத்த புன்னகையுடன் அவனைச் சீண்டினாள்.
இந்த படபடப்பில் அவள் சிரிப்பும் இலகுவான பேச்சும், பரணிக்குத் தேவையான ஒன்று தான். அதே நேரம் திவ்யா மிகுந்த கவனத்துடன் பேசினாள். எங்கே தன் சிரிப்பை சம்மதம் என்று தப்பர்த்தம் கண்டுபிடித்து விடுவானோ என்ற அச்சம் மனதை வியாபிக்க, குரலில் கொஞ்சம் கடுமையைக் கூட்டிய திவ்யா,
“சார், எனக்கு நீங்க செல்ல வர்ற விஷயம் புரியாம இல்ல. பட், எனக்கு அந்த மாதிரி எந்த இண்டென்ஷனும் இல்ல.” என்று அவள் பேச ஆயத்தம் ஆகும் முன்னர், எதிரில் அமர்ந்திருந்த பரணி, தவிப்புடன் திவ்யாவின் கைகளைப் பற்றிக்கொள்ள, சில நொடிகள் அதிர்ந்து போனாள் திவ்யா.
அவன் கைகளில் இருந்து வலுவாக தன் விரல்களை உருவிக் கொண்டவள், “சார் ப்ளீஸ். பிஹேவ் யுவர்செல்ஃப். உங்க மேல இருக்கற மரியாதையை நீங்களே குறைச்சுக்காதீங்க.” என்று அவள் காட்டமாக கூறவும், தன் தவறை உணர்ந்து சற்றே வெட்கிக் கொண்ட பரணி,
“திவ்யா, என் மனசை எப்படி உனக்கு புரிய வைக்கன்னு தெரியலை. உள்ள ஒரே பரிதவிப்பா இருக்கு. ஜஸ்ட் ரெண்டு செகண்ட் நீ க்ராஸ் ஆகறப்போ, உன் கண்ணு கத்தி மாதிரி என் மனசை குத்தி கொலை பண்ணிட்டு போகுது. இதெல்லாம் உனக்கு கொஞ்சமும் ஃபீல் ஆகலைன்னு சொல்லி, உன்னை நீயே ஏமாத்திக்காத திவ்யா. நான், உன்னை நல்லா பார்த்துக்குவேன். நம்பு திவ்யா. இது சும்மா அவ பார்க்கறா, நானும் பார்க்கறேன்னு வர்ற டைம்பாஸ் காதலில்ல.” என்று சொல்லிவிடும் முன்னர், அவன் முகத்தில் அத்தனை பதட்டம்.
அதிலும், “காதல்” என்ற வார்த்தையை அவன் உதடுகள் உச்சரிக்கவும், வெடுக்கென தலையை நிமிர்த்தி திவ்யா அவனை ஏறிட, அவனோ சற்றே தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.
அவள் பரிதவிப்பு சில நொடி தான் நீண்டது. அன்னை, தந்தை, படிப்பு, வேலை என அனைத்து நினைவுகளையும் தன் குளிர்ந்து போயிருந்த மனதின் முன் கேடயமாக நிறுத்தி கொண்டவள், “சார், நீங்க சொன்ன எதையுமே நான் பொய்ன்னு சொல்ல மாட்டேன். பட், என்னால இப்போ ரிலேஷன்ஷிப்லலாம் இருக்க முடியாது. எனக்கு நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கு. அதையெல்லாம் அப்படியே தூக்கி போட்டுட முடியாது.”
“திவி, என்ன சொல்லற? என்னை பிடிக்கலையா?” என அடிபட்ட பார்வையுடன் அவன் துவங்கும் முன்னர்,
“சார் ப்ளீஸ். பிடிக்குதா பிடிக்கலையாங்கறது இங்க கேள்வியே இல்ல. பிடிச்சிருக்குன்னு சொன்னா மட்டும் என்ன பண்ண முடியும். எனக்கு இருபது வயசு தான். நீங்க என்னை விட ரெண்டு வருஷம் சீனியர். அவ்வளோ தானே! சிலர் கிட்ட இருக்க ஹேபிட்ஸ் நம்மளையும் அறியாம நம்மளை ஈர்க்கும். அது மாதிரி தான் உங்க கண்ணும்” என்று அவள் பேச, அவள் வார்த்தைகள் கொடுத்த வேதனையை மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டவனுக்கு, ‘ஐய்யோ! இவளுக்கு என் காதல் புரியவில்லையே’ என்ற அங்கலாய்ப்பு மேலோங்கியது.
“அப்படியில்ல திவ்யா. நமக்குள்ள இருக்க கெமிஸ்டரி, நீ என்னை க்ராஸ் பண்ணறப்போ சின்னதா, இடது உதட்டோரமா ஒரு சிரிப்பு சிரிப்பியே! யாருக்கும் புரியாம, என் கூட மட்டும், என் மனசுக்குள்ள மட்டும் உள்ளவந்து உன் சிரிப்பு செய்தி சொல்லிட்டுப் போகுமே, அதெல்லாம்…” என்று ஆற்றாமையின் விளிம்பில் நின்று அவன் தவிப்பாய் தவித்தான்.
“சார் சார் ப்ளீஸ்… நான் சொல்லறதை நீங்க தான் புரிஞ்சுக்கல. இதோ, என் க்ளாஸ்ல பிரபஞ்சன் நல்லா டான்ஸ் ஆடுவான். அவன் டான்ஸ்னாலே எல்லாருக்குமே ஒரு க்ரேஸ். எனக்கு அவன் ஸ்டைலா ஆடிட்டே சிரிக்கறதை பார்க்க அவ்வளோ பிடிக்கும். அதே மாதிரி பவித்ரன் குரல் அவ்வளோ இனிமையா இருக்கும். அவன் பாடினா, மெய்மறந்து நாளெல்லாம் கேட்டுட்டே இருக்கலாம். கண்ணை மூடி அவன் பாட்டைக் கேட்டா மனசு என்னமோ பண்ணும், அப்படிப்பட்ட வாய்ஸ் அவனது. நம்ம மனோஜ்க்கு நல்ல மேனேஜ்மெண்ட் ஸ்கில். தட்டி குடுத்து யாரை வேணா என்ன வேலை வேணா அவனால செய்ய வைக்க முடியும். அவனோட அந்த அப்ரோச் ரொம்ப ஸ்மூத்தா இருக்கும். எப்படிப்பட்ட நிலைமையையும் இவன் சமாளிக்கறானேன்னு தோணும்” என்று அவள் பேசப் பேச, பரணியின் முகம் சிறுத்துப் போயிற்று.
“அந்த மாதிரி தான் சார் உங்க கண்ணும். உங்களுக்கு ரொம்ப அழகான கண்கள் சார். க்ளாஸ்ல பொண்ணுக கூட சொல்லுவாங்க. சாரோட ஐ லாஷஸ் பாரு எவ்வளோ நீள நீளமா அழகா இருக்குன்னு.” என்று இதனால் தான் உன் கண்களை நான் பார்ப்பது. மற்றபடிக்கு உன் கண்களுடன் நான் உறவாடவில்லை. உன் விழி வீச்சின் தகிப்பை தாங்க இயலாமல் தலைகவிழ்ந்து கொள்ளவில்லை. என் சிரிப்பு உன் ஆழ்மனதிற்குள் வந்து பேசுவது போல நீ கற்பனை செய்து கொண்டிருக்கிறாய் என்பதாகப் பேசினாள் திவ்யபாரதி.
திவ்யாவின் சொற்கள் கேட்டு கொஞ்சம் நிலை தடுமாறிப் போன பரணி, தன் மனதின் வலியை மறைக்க ஜன்னல் பக்கமாக திரும்பி வெளிக்காற்றை சுவாசப்பையில் நிரப்பினான். எவ்வளவு ஆழ மூச்செடுத்தாலும், கடலின் ஆழத்தில் அமிழ்வது போன்றதொரு நிலைதான். கைகால்களை அசைக்க முடியாமல் போய், தலையையும் தண்ணீரில் மூழ்கடித்து, கழுத்தை நெரிப்பதைப் போன்ற மாயபிம்பம் தான் தோன்றிற்று.
‘சே, என்ன நான்? ஒரு பொண்ணு என் காதலை ஏத்துக்கலைன்னா இந்த அளவு வலிக்குமா? அதுலையும், என் மனசு முழுக்க நிரம்பி வழிஞ்ச ஒருத்தி, எல்லார் மாதிரி தான் நீயும். நீ எனக்கு ஸ்பெஷல்லாம் இல்லைன்னு சொன்னா உடனே நெருப்பில வேகற மாதிரி உடம்பெல்லாம் எரியுதே!’ என்று தலை சிலுப்பி மூச்செடுத்துக் கொண்டான்.
அதிலும், வகுப்பில் மற்றவர்களைப் போலத்தான் நீயும் எனக்கு. உன்னிடம் அபரீதமாக வேறு ஏதும் இல்லை என்னும் அர்த்தத்தில் அவள் பேசியது ரொம்பவே வலித்தது. ஒருவேளை அது தான் உண்மையோ, அவள் பார்வைக்கு நானாகத் தான் தப்பாக அர்த்தம் கற்பித்துக் கொண்டேனோ? அடிபட்டுப் போனான் பரணி. அவமானத்தில் கன்றிப் போன முகத்தை மறைக்கவும், சாதாரணமாகப் பேசவும் எள்ளளவும் இயலவில்லை. சமாளித்தான். முகத்தை காற்றில் கரையவிட முற்பட்டான். பின்னங்கழுத்து வேர்வையை துடைத்து மூச்சுவிட்டுக் கொண்டான்.
மனதின் ரணம் முகத்தில் பிரதிபலிக்காமல் இருக்க பாடுபடுவது திவ்யாவிற்குத் தெளிவாய் புரிந்தது. புரிந்து பயனென்ன? அவளுக்கு இப்போதைக்கு இந்த காதலில் சிக்குண்டு போக கொஞ்சமும் எண்ணமில்லை. காதல் எண்ணமும், அடுத்த படியாக திருமண வாழ்க்கை பற்றிய கனவுகளும் எங்கோ வெகுதூரத்தில் இருக்கிறது. இப்போதென்ன அவசரம்?
இதோ இன்று காதலை ஏற்றுக் கொள்கிறேன் என ஒரு பேச்சிற்கு வைத்துக் கொண்டால், அடுத்து என்னவாகும்? இன்னும் சில நாட்களில் அது வகுப்பு முழுமைக்கும் பரவிவிடும். அடுத்து கல்லூரி முழுக்க தெரியவரும். இவனுக்கு என்ன பாதகம்? அடுத்த மாதம் இங்கிருந்து கிளம்பி விடுவான். ஆனால், நான் பொல்லாத வாய்களுக்குத் தீனியாவேன். “ப்ரொஃபசரை லவ் பண்ணறாளாம்” என்று பேச்சுகள் காற்றில் கலந்து கல்லூரி சுவர்களில் மோதி, நாலா பக்கமிருந்து அவளைத் தாக்கும்.
அத்தோடு நிற்குமா? பேராசிரியர்களின் நன்மதிப்பு பறிபோகும். வேலை கிடைக்கும் வரையிலாவது அவர்களின் நன்மதிப்பு முக்கியமானது.
இவன் கல்லூரி விட்டு கிளம்பிய பின்னர், கைப்பேசியில் மற்றவர்களைப் போல காதல் வளர்க்க வேண்டும். குறுஞ்செய்தியில் உறவை புதுபித்துக்கொள்ள வேண்டும். வீண் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய சங்கடம் ஏற்படும். இத்தனைக்கும் நடுவில் எனக்கு வேலை கிடைக்க வேண்டும்.
இதெல்லம் எத்தனை நாட்களுக்கு? தனக்கு ஒரு வேலை கிடைத்து, அங்கே சென்ற பின்னர், வேலையில் கவனம் செலுத்துவதா அல்லது இவனிடமா? இதெல்லாம் யோசிக்கையிலேயே திவ்யாவிற்கு மூச்சு முட்டியது. தன்னால் இப்போது இந்த சுமையெல்லாம் சுமக்கலாகுமா என்ற பெரும் ஐயம் சூழ்ந்தது.
‘வேணாம் திவி. அவனோட கொஞ்ச நேர கஷ்டத்தைப் பார்த்து நீ மனசு மாறிடாத. அவன் கொஞ்ச நாள்ல சரியாகிடுவான். வேற ஊருக்கு போயிடுவான். புது இடம், மனிதர்கள்னு மனமாற்றம் சுலபமா ஆகிடும். உன் நிலைமை அப்படியில்ல. கமிட் ஆகிட்டன்னா, அந்த பேர் உங்கூடவே சுத்தி வரும். பேர் கெட்டுப் போயிடும்.’ என்று அவன் வலியைக் கண்டு மனதினுள் வருந்திய போதும், தெளிவாக தன்னிலையில் நின்று கொண்டாள் திவ்யா.
அவள் முகத்தை துளித் துளியாய் தன் மனதில் நிரப்பிக் கொண்ட பரணி, தன் மனதை ஒருமுகப்படுத்தினான். வேண்டாம் என்று சொல்லும் பெண்ணிடம் வற்புறுத்துகிறோமோ என்ற அச்சம் மனதை குத்தியது. அவனைக் கடக்கையில் அவள் கண்கள் பேசிய மொழிகளும், மெல்லமாய் அவள் இதழோரத்தில் நெளியும் அவள் புன்னகையும், இவன் ஊடுருவும் பார்வைகள் புரிந்து, நிலம் பார்க்கும் பன்னீர் மலர் போல தலையைத் தன்னிச்சையாக கவிழ்த்துக் கொள்ளும் பாங்கும் மனத்திரையில் நிழலாடின.
இந்த நினைவுகளின் சுகந்தத்தையும், அது பரப்பிய மகிழ்வையும் எண்ணி இனி மகிழ்ச்சியடைய முடியாதே என்ற வலி கண்களை லேசாக பனிக்கச் செய்தது. நினைவுகள் கொடுத்த வேதனையை பிரிதொரு நாள் அனுபவிக்க எண்ணி, அவற்றை வலுவில் இப்போதைக்கு ஒதுக்கினான். இன்றுடன் இந்த வலி மறைந்து போகாது என்று புரிந்தது.
இவளைப் போல் யாரைக் கடந்தாலும், இவள் சாயலில் எவளைப் பார்த்தாலும், இந்த வலி அப்பொழுதும் நெஞ்சைக் கிழிக்கும் என்று தெரிந்தது. ஒவ்வொரு முறை இவளையோ, இவள் சம்பந்தப்பட்ட பொருளையோ பார்த்தாலும் தன் மனதைக் கொய்யத்தான் போகிறது இந்த குறுங்கத்தி. இந்த ரணத்துடன் தான் மீதிப் பயணம் என்று புரிபட, தனக்குள் வெகுவாக அமிழ்ந்து போனான் பரணி.
“நீ என்ன சொல்ல வர்ற திவி?” என்று அவன் மறுமுறை கேட்டபோது, அவன் தன் சம்மதமின்மையை சரிவர எடுத்துக் கொள்ளாமல் தன் மீது கோபம் கொண்டுவிட்டான் என்ற மட்டில் உணர்ந்து கொண்டாள் திவ்யா.
“நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியுது. இப்போதைக்கு காதலோ, ஆசையோ, பாசமோ எதுவுமே என் மனசில இல்லை. அவ்வளோ தான். வேற எந்த எக்ஸ்பிளனேஷன் குடுக்கவும் நான் தயாரா இல்ல சார்” என்று சொன்னவள், அங்கிருந்து எழுந்து நின்றாள். அவள் முகத்தையே ஏக்கமாக பார்த்தவனின் கண்கள் அவள் மனதைச் சுட்டது.
எட்ட நின்று இதுவரையிலும் அவனை விழிகளால் கூறு போட்டவள், இனி காலத்திற்கும் அவன் மனதிற்குள் ஆறாத ரணமாய் மாறியது அந்த நொடி தான்.
என்ன நினைத்தாளோ, “ஐம் சாரி” என்று குரல் எழுப்பாமல், உதட்டசைவில் மட்டுமாய் கூறிவிட்டு, தன் இருக்கைக்குத் திரும்பியிருந்தாள்.
அவள் சென்று சில நொடிகள் தான் கடந்திருந்தன. ஆனால் பல யுகங்கள் ஆனது போன்ற ஒரு பிம்பம். அவள் பேசிச் சென்ற வார்த்தைகளை ஒவ்வொன்றாக மனது வாசிக்கத் துவங்க, ‘எல்லார் மாதிரி தானே நீங்களும் எனக்கு’ என்ற பொருள்படும் வண்ணம் அவள் வீசிச் சென்ற சொல் அம்புகள் பரணியின் தனிமையைத் தங்களது போர்களமாக்கிக் கொண்டன.
“அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மெளனம் பாதி, மோகம் பாதி
என்னைக் கொல்லும் எந்நாளும்” என்று யேசுதாஸ் உருகி உருகி பாடிக் கொண்டிருக்க, அந்த பாடல் வரிகளைக் கேட்டவனின் கண்கள் அவனையறியாமல் கசிந்தன. ஜன்னலைத் அகலத் திறந்து வெளியே இருளில் நிழலோவியங்களாய்த் தெரிந்த மரங்களை கண்களால் பருகிக் கொண்டே, தன் கண்ணீரை விழுங்கினான்.
“வினா தாள் போல் இங்கே கனா காணும் காலை
விடை போலே அங்கே நடை போடும் பாவை” என்ற வரிகளைக் கேட்கவும், அவன் மனதின் குமுறல் கேவலாகவே வெளிப்பட்டது. புண்பட்ட மனதை கட்டுப்படுத்தும் வழி தெரியவில்லை பரணிக்கு. அழுதுவிடு என்றது உள்ளம், அழுதால் பாரம் குறையும், மனதின் அழுத்தம் மட்டுப்படும். அழுதுவிடு என்று பலமாக உறுமியது.
கண்களின் ஓரத்தில் வடிந்த கண்ணீரைத் துடைக்கக்கூட விருப்பமில்லாமல் அமைதியாக தன்னுள் மன்றாடினான்.
அன்றிலிருந்து, எப்போதெல்லாம் அவன் தனிமையில் விடப்படுகிறானோ, அங்கெல்லாம் அவளின் பார்வையும் அவன் தவிப்பும், அவள் பேசிய வார்த்தைகளும் கூர்மையான ஊசிகளாய் மாறி, அவன் இதயத்தின் ஆழம் வரையிலும் குத்தி அவனை ரணப்படுத்த துணிந்தன.
error: Content is protected !!