Skip to content
Post Views: 4,585
அத்தியாயம் 5
‘கணவன் மனைவி இருவரும் எந்த ஊருக்கு செல்லலாம்? அங்கே என்ன செய்யலாம்?’ என்று யோசிக்க தொடங்கினார்கள்.
Advertisement
கந்தகுருவிற்கு அவன் தாத்தா வாழ்ந்த ஊர் தான் நியாபகத்திற்கு வந்தது.
கண்முன்னே தோன்றியது மயிலாடுதுறை – பார்வதி தேவியார் மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி, சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிட பட்டுள்ளதால், இப்பகுதி மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. அவன் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஊர். ஆனால், அனைவரிடம் இருந்தும் தூரமாக செல்ல வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாது. வெளிநாடு வேண்டாம்ன்னு சொல்லிட்டா. வேறு எந்த ஊருக்கு போறது என்று குழம்பினான் குரு.
Advertisement
“நான் பேங்க் போயிட்டு, அப்படியே போய் காஸ் சிலிண்டர் திருப்பி கொடுக்க என்ன செய்யனும்னு கேட்டுட்டு வரேன் அருணா” என்று வெளியே கிளம்பினான்.
Advertisement
அவன் சென்ற சிறிது நேரத்தில், கம்லா பாட்டி அருணாவிற்கு வெந்தயக்கீரை ரொட்டி கொண்டு வந்தார். கம்லா பாட்டியின் மகளும் மருமகனும் இன்னும் ஒரு வாரத்தில் வருவதாக இருந்தது. பாட்டி அவரது ஊருக்கு எப்பொழுது செல்லலாம் என்று ஆவலாக காத்து கொண்டிருந்தார்.
Advertisement
“ஏன் பாட்டி? இங்கதான் உங்க பெண், மாப்பிள்ளை, பேத்தி, அப்புறம் சீக்கிரமா ஒரு குட்டி பாப்பா எல்லோரும் இருக்காங்க. எதுக்கு ஊருக்கு போகனும்னு ஆசைப்படறீங்க? அங்கே தனியா தானே இருக்கனும்?” என்றாள் அருணா.
“அது என் வீடு. என் ஊரு. தேவபூமின்னு சொல்லுவாங்க தெரியுமா எங்க உத்தரகண்ட் மாநிலத்தை.” சொல்லும்போதே அத்தனை கனிவு அவர் குரலில்.
“உங்களுக்கு உங்க குடும்பத்தை விட உங்க ஊர்தான் ரொம்ப பிடிக்குமா?”
“இதைவிட அது அப்படின்னு எப்படி சொல்ல முடியும். இரண்டும் வேறு வேறு அருணா, நான் வளர்ந்த ஊரு, என்னை வளர்த்த ஊரு, நான் வாழ்ந்த ஊரு என்னை வாழ வைத்த ஊரு. என் உணர்வோடு கலந்தது என் ஊரு. என் உயிரோடு கலந்தது என் குடும்பம். என் வேர் அங்கே தான். தேவைபடும்பொழுது இங்கே வருவேன், அவ்வளவுதான். நீ உன் உடம்பை கவனித்துக்கொள் அருணா. நீயும் என் பேத்தி மாதிரி தான். உனக்கு வேணும்னாலும் சொல்லு, நிச்சயம் உன்னை பார்க்கவும் இந்த பாட்டி வருவேன் ” என்றார்.
“ஆமா, உங்க ஊர் பெயர் என்ன? ஏன் பாட்டி, உங்க ஊருக்கு ஒருமுறை என்னை கூட்டிட்டு போறீங்களா?“
“எங்க ஊர் பெயர் ஹல்த்வானி. கண்டிப்பா வா அருணா. குருவும் நீயும் சேர்ந்து வாங்க. எங்க ஊர் உங்களுக்கு நல்ல மனமாற்றத்தை கொடுக்கும்.” என்றார் கம்லா பாட்டி உற்சாகமாக.
‘பாட்டியின் ஊருக்கு போனால் என்ன? இதையும் ஒருமுறை யோசிப்போம்’ என்ற எண்ணம் தோன்றியது அருணாவிற்கு.
“சரி பாட்டி, நான் குருவை கேட்டுட்டு சொல்றேன்” என்றாள்.
மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு சென்றார் பாட்டி.
பேங்க் வேலைகளை முடித்துவிட்டு கந்தகுரு வீடு திரும்பினான்.
“அருணா, எல்லா வேலையும் முடிச்சாச்சு. நாளைக்கு நாம ஊருக்கு போவோமா? தஞ்சாவூர் முதல்ல போவோமா? இல்ல கும்பகோணம் முதல்ல போவமா?”
“தனி தனியா இரண்டு தடவை சமாளிக்க முடியாது. எல்லாரையும் ஒரே இடத்துக்கு வர சொல்லுங்க. எங்க சொல்றங்களோ அங்கே போயிடுவோம்.”
“நீ அசால்ட்டா சொல்ற, எனக்கு பக்கு பக்குங்குது” என்று முனங்கிகொண்டே தன் தந்தையை அழைத்து பேசினான். அவர் அனைவரிடமும் பேசி கும்பகோணத்திற்கு தங்கள் வீட்டிற்கே வருமாறு கூறினார்.
“ஏன், தஞ்சாவூர் வந்து ஒரு எட்டு சொல்லிட்டு போக முடியாதா?” என்று மஞ்சுளா குறை பட்டு கொண்டார்.
“நீ வரலைனா வீட்ல இரு. நான் மட்டும் போயிட்டு வரேன்” என்று ஆனந்தன் கூறவும், அமைதியாக கிளம்பி வந்தார்.
பாரு பாட்டி, செந்தில் தாத்தா, அருணாவின் தங்கை ரித்விகா என்று அனைவரும் புறப்பட்டு கும்பகோணம் வந்தனர்.
இங்கே கந்தகுருவின் சகோதரர்கள் அபிநந்தனும் அபிநயாவும் வந்துவிட்டார்கள். அனைவரும் இவர்கள் வருகைக்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள். சொர்ணாம்பிகை பாட்டி வாசலில் இருந்த திண்ணையிலே அமர்ந்து கொண்டார்.
“ஏன் அஞ்சு, உன் மாமியார் வாசலிலே காவல் காக்கிறாங்க, நீயே எல்லா வேலையும் செய்யனுமா?” என்றார் பார்வதி.
“அவங்க எல்லா வேலையும் முடிச்சிட்டு தான் போயிருக்காங்க. சும்மா எங்க வீட்ல கலகம் பண்ணாதம்மா. நீ உன் மருமகளோட போய்டுவ. எங்க அத்தை தான் இங்க பார்க்கனும்” என்று அவர் வாயை அடைத்துவிட்டார்.
குருவும் அருணாவும் வந்து இறங்கினார்கள். பாட்டியை பார்த்ததும், குரு “ஆச்சி…” என்று ஓடி வந்து அவரை அணைத்துக்கொண்டான்.
உள்ளே சென்றதும் சிறு பிள்ளை போல பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதான். பாட்டியின் கண்களிலிருந்தும் கண்ணீர் கொட்டியது.
அருணாவை தேற்றத்தான் அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. அவன் உள்ளத்து காயம் பாட்டியை பார்க்கவும் வெளியேறியது.
“எதுக்கு இப்ப இந்த அழுகை. பிள்ளைகள் எல்லாம் மறந்துட்டு மீண்டு வந்துட்டாங்க. நீங்க அழுது அவங்களை கஷ்டப்படுத்தாதீங்க. வெளி நாட்டுக்கு போக சொல்லிட்டு போக வந்திருக்காங்க. சந்தோசமா அனுப்பி வைங்க“ என்றார் தன் கணீர் குரலில் பாரு பாட்டி.
“நாங்க மீண்டு வந்ததை நீங்க பார்த்தீங்களா?” என அருணா தீயாக முறைத்தாள், தன் பாட்டியை.
அதற்குள் பாட்டியும் பேரனும் அவர்களை கட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். அருணாவின் தலையை வாஞ்சையாக தடவி கொடுத்தார் பாட்டி.
ரித்விகா, “அக்கா” என்று தன் அக்காவை கட்டிபிடித்து கொண்டாள்.
“அக்கா, எப்படிக்கா இருக்க? நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றாள் தங்கை வாஞ்சையாக.
“அண்ணி உடம்பு பரவாயில்லையா?” என்று அருணாவிடம் கேட்டுக்கொண்டே அபிநந்தனும் அபிநயாவும் தங்கள் அண்ணன் பக்கத்தில் நின்றுகொண்டனர்,
அண்ணன் கைகளை ஆளுக்கொன்றாக பிடித்து கொண்டு.
“நீங்க இரண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க. சாப்பிடலாம்” என்றார் அஞ்சனா இவர்களிடம்.
“ஆமா, எல்லோரும் உங்களுக்காக தான் காத்துட்டு இருக்காங்க. சீக்கிரமா வாங்க” என்றார் மஞ்சுளாவும்.
‘வெளிநாட்டுக்கு போறோம்னு இந்த ராஜ வரவேற்பு, உண்மை தெரிஞ்சா என்ன ஆகுமோ?’ என்ற பீதியுடன் இருந்தான் கந்தகுரு.
பின் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டார்கள். அருணா சாப்பிடுகிறாளா, என்று தான் அஞ்சுவும் மஞ்சுவும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
சொர்ணம் பாட்டி தான் அருணாவிற்கும் கந்தகுருவிற்கும் பரிமாறினார். அதனால் பிரச்சனை ஏதுமின்றி உணவு வேலை முடிந்தது.
பின் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேச தொடங்கினார்கள். ரித்விகா, அபிநந்தன்,அபிநயா மூவரும் ஒருபுறம் நின்று வேடிக்கை பார்த்தனர்.
அருணா, பேங்க் டாக்குமெண்டுகள் எடுத்து இரண்டு அப்பாக்களிடமும் கொடுத்தாள் .
“என்ன அண்ணா இது? பெருசா எதோ நடக்கும் போல இருக்கே அண்ணா” என்றாள் ரித்விகா அபிநந்தனிடம்.
“எதுக்கு இத்தனை அண்ணா போடற நீ?”
“பின்ன, சொந்தம் விட்டு போயிட கூடாதுன்னு நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் பேசிட்டாங்கன்னா. இவங்க கிட்ட மாட்டி நம்ம சின்னாபின்னமாகாம இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை அண்ணா”
“அப்படியா தங்கச்சி, இனி எப்பவுமே அண்ணன்னே கூப்பிடும்மா. நீ சொல்ற மாதிரி தரமான சம்பவம் நடக்கும் போலதான் தெரியுது தங்கச்சி” என்றான் அபிநந்தன்.
“என்ன டாக்குமெண்ட்?“ என்று அம்மாக்கள் இருவரும் கேட்டனர்.
“எதுக்கு இவ்வளவு பெரிய அமௌன்ட் என் பேருக்கு?” என்றார் ஆனந்தன்.
“அதானே? எதுக்கு என் பெயருக்கும் இவ்வளவு பெரிய அமௌன்ட்?” என்றார் வடிவேலுவும்.
வேகமாக டாக்குமெண்டை அவரவர் கணவர்கள் கையில் இருந்து பிடிங்கி பார்த்தனர் அம்மாக்கள்.
“என்னடி இது? எதுக்கு இது எல்லாம்.” என்று அருணாவிடம் பாய்ந்தார் மஞ்சுளா.
“எங்களுக்காக நிறைய செலவு செஞ்சிருக்கிறதா சொன்னீங்க இல்ல. அதை திருப்பி கொடுக்கத் தான்.”
“என்ன பேச்சு குரு இது? என்ன பண்றீங்க இரண்டு பேரும்? எதுக்கு எல்லாம் கணக்கு பார்த்து இதை கொடுக்கிறீங்க? எல்லாத்துக்கும் கணக்கு பார்க்க முடியுமா உங்களால?” என்று நேரே மகனிடம் பாய்ந்தார் அஞ்சனா.
கந்தகுரு திரு திரு என முழித்தான்.
“டேய் நந்து, அண்ணா முழியே சரி இல்லையே?” என்றாள் அபிநயா அபிநந்தனிடம்.
“அதெல்லாம் கவலைப்படாத அபி, எங்க அக்காவை பார்த்தல்ல, புல் பார்ம்ல இருக்கா. அவ எல்லாரையும் சமாளிப்பா” என்றாள் ரித்விகா பெருமையாக.
ரித்விகா சொல்வதை இவர்கள் நம்பவில்லை. இவர்கள் பார்த்த அண்ணி, அமைதியானவள். அம்மாவும் அத்தையும் போடும் தாளத்திற்கு ஆடத் தெரியாமல் ஆடித் தடுமாறுபவள்.
“நீங்க என்னை நம்பலை போல. அது கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின், அப்படின்னு எங்க அக்கா இரண்டு வகை”
“கல்யாணத்துக்கு முன் கூட அண்ணியை நாங்க அமைதியா தானே பார்த்திருக்கோம்” என்றாள் அபிநயா.
“அது, எப்பயும் உங்க வீட்டுக்கு வரும்போது பாரு பாட்டி எங்களை அமைதியா இருக்கனும்னு மிரட்டி தான் அனுப்புவாங்க. நாங்களும் இருக்கிற மூனு நாலு நாள் அமைதியா இருந்துட்டு போயிடுவோம்”
இரண்டு அபியும் உண்மையா என்பது போல பார்த்தனர்.
“அத்தானை கல்யாணம் பண்ணி, நல்ல மருமகளா இருக்கணும்னு அட்ஜஸ்ட் பண்ணி அவ கஷ்டப்பட்டது எல்லாம் போதும். இனியாவது எங்க அக்கா பழைய மாதிரி தைரியமா பேசட்டும்” என்றாள் ரித்விகா. அவள் குரல் கரகரத்தது.
அக்காவின் வேதனையை எண்ணி அவள் மனம் அவ்வளவு வருந்தியது.
கந்தகுரு அமைதியாக இருக்கவும், “யோசிக்காம எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய கூடாது. காசு கொடுக்கிறாங்களாம் காசு” என்று நொடித்துக்கொண்டார் அஞ்சனா.
“என்ன அத்தை கேக்கறீங்க? நீங்க தானே சொன்னீங்க. ஆவெரேஜ் மார்க் வாங்கின நாங்க எதுக்கும் லாயக்கு இல்ல. நீங்க படிக்க வைக்கலைனா எங்களுக்கு வாழ்க்கையே இல்லன்னு.”
“மாமியார் கிட்ட பேசுறேன்னு நினைப்பு இருக்கா அருணா?” என்றார் பாரு பாட்டி.
“நான் எங்க அப்பாவோட தங்கை, என் அத்தை கிட்ட பேசுறேன் பாட்டி. நீ தானே சொன்னே அத்தை பையனை கல்யாணம் பண்ணிக்கோ, நாளைக்கு ஒரு பிரச்சணை வந்தா உரிமையா அத்தையை நிக்க வச்சு கேள்வி கேக்க முடியும்னு. அதனால எங்க அத்தைக்கும் எனக்கும் நடுவுல நீ வராத” என்றாள் பாரு பாட்டியிடம்.
“ஆ..” என்று பார்த்தனர் இரண்டு அபியும்.
“அருணா, அம்மாவும் அத்தையும் பேசுனத்துக்கு எங்களுக்கும் சேர்த்து தண்டனை கொடுக்கிறீங்களா?” என்றார் ஆனந்தன்.
“நிச்சயம் இல்ல அப்பா. பெத்த கடனை அடைக்க முடியாதுதான். ஆனா பட்ட கடனை அடைக்கலாமே. நாங்க யாரையும் குறை சொல்லலை. ஆனால் இன்னமும் அவங்க கட்டுப்பாட்டுல வைக்க நினைக்கிறாங்க அம்மாவும் அத்தையும். எங்க இழப்பை கூட எப்படி எடுத்துக்கனும்னு அவங்க சொல்றாங்க. பறவைகளை போல சிறகை விரித்து வானத்துல பறக்கனும்னு நாங்க நினைக்கிறோம். அவங்களும் எங்களை பறக்கவிட தான் நினைக்கிறாங்க. பறவைகளா இல்ல, அவங்க கைக்கு கட்டுப்பட்ட பட்டம் போல. பட்டத்தோட நூல் அறுந்து போச்சு. இனி அது உங்க இஷ்டத்துக்கு பறக்காது.”
“வெளிநாடு போய் சம்பாதிக்க போறோம்னு திமிர்ல ஆடாதீங்க.” என்றார் அஞ்சனா.
“நாங்க நல்ல காலேஜ்ல படிக்க வைக்கலைனா இந்த வாய்ப்பு எல்லாம் வந்திருக்குமா? அதானே நிஜம். அதை சொன்னா காசை எடுத்து கொடுப்பீங்களா?” என்று மூச்சு வாங்க கூறினார் மஞ்சுளா.
“இதை தான் சொல்றேன் அப்பா, இதை நீங்க எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி. எங்க படிப்புக்கு செலவு செய்ததைவிட அதிகமாவே திருப்பி கொடுத்திடறோம். நீங்க எங்க மேல வச்சிருக்க அன்பு உண்மையானதுன்னா, இதை ஏத்துக்கோங்க. எங்களுக்கு இந்த சூழலில் இருந்து விடுதலை கொடுங்கப்பா ப்ளீஸ்” என்று ஆனந்தனிடம் தொடங்கி, “ப்ளீஸ் மாமா” என்று வடிவேலுவிடம் முடித்தாள்.
அமைதியாக அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டனர் வடிவேலுவும் ஆனந்தனும்.
வேதனையுடன் அருணாவையும் கந்தகுருவையும் பார்த்துக்கொண்டிருந்தார் சொர்ணம் பாட்டி.
பிள்ளைகள் பக்கம் சத்தமில்லாமல் வந்து அமர்ந்துகொண்டார் செந்தில் தாத்தா.
“ஏண்டி.. எல்லா காசையும் கொடுத்திட்டு அங்க போய் ஆத்திரம் அவசரம்னா என்ன செய்வீங்க? அவனுக்கு மட்டும் தானே அங்கே வேலை இருக்கு. நீ சும்மா தானே இருப்ப. ஒருத்தர் சம்பளத்துல சமாளிக்கிறது கஷ்டம்ன்னு சொல்றாங்களே? தீடீர் செலவுக்கு என்ன செய்வீங்க?” என்றார் பாரு பாட்டி.
“எங்க குடும்பத்தை நாங்க இனி பார்த்துப்போம்”
“என்ன அருணா பேச்சு இது? பாட்டி சொல்றது நியாயமான விஷயம் தானே. எல்லாத்துக்கும் எடுத்தெறிஞ்சு பேசிட்டு இருக்க?” என்றார் மஞ்சுளா.
“குரு மட்டும் முதல்ல போனா , பின்னாடி நீயம் ஆன்சைட் ட்ரை பண்ணி போனா நல்லது. அதை நாங்க யோசிச்சோம், இருந்தாலும் பிள்ளையை பறிகொடுத்திட்டு இருக்க, தனியா உன் மனசு சங்கட படக்கூடாதுன்னு, நீயும் போகட்டும் நாங்க நினைச்சோம். இப்படி உன் நல்லதை பத்தி தான் நாங்க யோசிச்சோம். புரியாம என்னன்னமோ செய்றீங்க ?” என்றார் அஞ்சனா ஆதங்கமாக.
“நீங்க எதுக்கு யோசிக்கிறீங்க? நாங்க கேக்கவே இல்லையே? எனக்கு நிஜமா உங்களை எல்லாம் பார்க்கவே பிடிக்கலை. சொல்லாம போகக்கூடாதுன்னு தான் வந்தோம். தப்பு தான்” என்றாள் அருணா.
“சொந்தம் விட்டுப்போக கூடாதுன்னு அண்ணன் பொண்ணை எடுத்தேனே. நீ என்னடான்னா என் பிள்ளையை எங்க கிட்ட இருந்து பிரிச்சிடுவ போலயே” என்று கண்ணை கசக்கினார் அஞ்சனா.
“ஏன் தாத்தா, உங்க பாரு, உங்க பொண்ணு, உங்க மருமகள் மூணு பேரும் இப்படி ரவுண்ட் கட்டி பேசறாங்களே. இத்தனை வருஷம் எப்படி சமாளிச்சிட்டு வரீங்க” என்றான் அபிநந்தன் மெதுவாக செந்தில் தாத்தாவிடம்.
“உங்க அப்பாவையும் மாமாவையும் பாரு என்ன செய்றாங்கன்னு” என்றார்.
இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
“அவங்களுக்கு என்ன? யார் வீட்லயோ சண்டை மாதிரி வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க”
“அதை தான் நானும் இத்தனை வருசமா பண்ணிட்டு இருக்கேன்”
“அண்ணி பாவமில்லையா? எல்லோரும் வேடிக்கை பார்த்த என்ன பண்ணுவாங்க?”
“அருணா இவங்களை எல்லாம் அசால்ட்டா சமாளிப்பா. நீ வேடிக்கை பாரு அபி” என்றார்.
“என்ன குரு நீ பேசாம இருக்க? அப்பா அம்மா மனசு சங்கடப்படும்னு சொல்ல மாட்டியா உன் பொண்டாட்டிகிட்ட?” என்றார் அஞ்சனா மகனிடம்.
“எங்க மனசு சங்கடப்படும்னு, பேசும்போது ஒரு தடவை கூட நீங்க யோசிக்கவே இல்லையேம்மா” என்றான் குரு.
“ஒன்னும் தெரியாம இருந்த என் பேரனை, இப்படி மாத்தி வச்சிருக்கியே நீ?” என்று பாரு பாட்டி அருணாவிடம் பாய்ந்தார்.
“எதுக்கு எல்லாரையும் ஏத்தி விடற நீ” என்று அருணாவும் பாட்டியிடம் எகிறினாள்.
“டேய், இப்ப சொல்றேன், நீ அமெரிக்காவிற்கு இவளை கூட்டிட்டு போகக்கூடாது. அவளே வேலை கிடைச்சு வரட்டும். அப்ப தான் புத்தி வரும்” என்று குருவிடம் கூறினார் பாரு பாட்டி.
‘நான் எங்க போகப்போறேன்னே உங்க பேத்தி தான் சொல்லனும். நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு” என்று குரு மனதிற்குள் நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தான்.
“என்ன அத்தை பேசுறீங்க? என் பொண்ணு மட்டுமா முடிவு செஞ்சிருக்கா? இரண்டு பேரும் சேர்ந்து தானே எல்லாம் செய்றாங்க?” என்று மஞ்சுளா களத்தில் இறங்கினார்.
“எங்க பையன் இப்படி எல்லாம் யோசிக்கவே மாட்டான்” என்று நொடித்துக்கொண்டார் அஞ்சனா.
“என்ன குரு எல்லாத்துக்கும் பேசாம இருக்க? “ என்றார் மஞ்சுளா குருவிடம்.
“காசு எல்லாம் திருப்பி வாங்கு குரு. இது எல்லாம் சரி இல்லன்னு சொல்லு அருணாகிட்ட” என்றார் அஞ்சனா.
அருணா அசால்டாக நின்றுகொண்டிருந்தாள். குரு தான் பாவமாக முழித்துக் கொண்டு நின்றான்.
“எங்க அக்கா ஏதோ பெருசா பிளான் போட்டிருக்கா போல. இந்த அத்தான் திருட்டு முழி முழிச்சே மாட்டி விட்ருவாரு போலயே “ என்றாள் ரித்விகா அபிநயாவிடம்.
“என்ன முழிக்கிறீங்க, சொல்லுங்க” என்றாள் அருணா குருவிடம்.
“என்னத்த சொல்றது? யார் கிட்ட சொல்றது?” என்று பாவமாக மனைவியை பார்த்து முழித்தான் குரு.
அவனின் இந்த அப்பாவித்தனமான முழியை பார்த்து அருணாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.
“ஹா..ஹா..ஹா.” என்று வெடித்து சிரிக்க தொடங்கினாள்.
“என்னடி கெக்கெபிக்கேன்னு சிரிப்பு. பண்றது எல்லாம் பண்ணிட்டு என்ன சிரிப்பு?” என்றார் மஞ்சுளா.
“இங்க பாருங்க, திரும்ப திரும்ப என்னை டென்ஷன் பண்ணாதீங்க. கடைசியா ஒரு தடவை உங்களை எல்லாம் பார்த்துட்டு போலாம்னு தான் வந்தோம்” என்று பேசத்தொடங்கினாள் அருணா.
“அறிவுகெட்ட தனமா என்ன பேச்சு பேசுற, தூர தேசத்துக்கு போக போறீங்க. கடைசியான்னு இப்படி தான் அபஸ்வரமா பேசுறதா?” என்று வெகுண்டெழுந்தார் பாரு பாட்டி.
“நல்லா கேளுங்க அம்மா, வாரிக்கொடுத்தது பத்தலயா இவளுக்கு ?” என்றார் அஞ்சனா.
“அஞ்சு..” என்று சொர்ணம் பாட்டி எழுந்து நின்றுவிட்டார்.
ஒரே குரல் தான். சத்தம் அதிகம் எல்லாம் இல்லை. அஞ்சனாவிற்கு சப்தமும் நடுங்கியது.
“வேணும்னு சொல்லலை அத்தை “ என்று கலங்கிய குரலில் சொர்ணாம்பிகையிடம் கூறினார்.
பாட்டி முகத்தில் கோவம் இல்லை. இவர்களை போல ஆங்காரமோ ஆத்திரமோ இல்லை. “இது சரியா? இந்த வார்த்தை கூறலாமா?“ என்ற கேள்வி மட்டும் இருந்தது. அதையும் வாய் விட்டுகூட கேட்கவில்லை.
“அது அஞ்சு வேணும்னு சொல்லலை அண்ணி, அருணா அப்படி பேசவும் ஆத்தமாட்டாம சொல்லிட்டா“என்று அவராகவே விளக்கம் அளித்தார் பாரு பாட்டி.
அவருக்கும் ஒரு பார்வை தான் பதில். “உங்க வயசுக்கு உங்க பேச்சு சரியா?” என்பதை போல.
அனைவரும் அமைதியாகிவிட்டனர்.
அதுவரை சரிக்கு சரியாக பேசிக்கொண்டிருந்த அருணா அமைதியாக அமர்ந்துவிட்டாள்.
“பார்த்தியா தங்கச்சி, மெதுவா ஓரே வார்த்தைல அனைவரையும் ஆப் பண்ணிட்டாங்க எங்க பாட்டி” என்றான் அபி ரித்விகாவிடம்.
குருவிற்கு தங்கள் முடிவு சரியே என்று இப்பொழுது மீண்டும் தோன்றியது.
“என்னைக்கு கிளம்பனும் குரு?” என்றார் செந்தில் தாத்தா.
“அடுத்த வாரம் போகனும் தாத்தா”
“என்னிக்குன்னு சொல்லுங்க, நாங்க எல்லோரும் சென்ட் ஆப் பண்ண வரோம்” என்றார் மஞ்சுளா.
“நீங்க எல்லாம் எதுக்கு” என்றாள் அருணா.
“அவ்வளவு தூரம் போறீங்க, நாங்க வந்து வழி அனுப்பினா தானே நல்லா இருக்கும்?”
“எதுக்கு தேவை இல்லாம? நாங்க என்ன சின்ன பிள்ளைங்களா? நாங்களே போய்ப்போம்”
“சாரி ராஜாத்தி, அத்தை அப்படி பேசி இருக்க கூடாது. மனசுல வச்சிக்காத. நிறைய பிரச்சனை வந்துடுச்சு .நாங்க வந்து வழி அனுப்பினா எங்களுக்கும் ஒரு திருப்தி இருக்கம்டா. நாங்க வரோம்” என்றார் அஞ்சனா.
“உங்களுக்கு லீவ் வேஸ்ட் ஆயிடும் அத்தை, எதுக்கு கஷ்டப்பட்டுட்டு?”
“ஏன்டி, உங்களுக்காக ஒரு நாள் லீவ் போட மாட்டோமா?” என்றார் மஞ்சுளா.
“ஆன்லைன்ல வளைகாப்பு நடத்த முடியும்னா அதே மாதிரி ஆன்லைன்லயே சென்ட் ஆப் பண்ண முடியுமே?”
மீண்டும் அமைதி.
“சரி, போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, அப்புறமா பேசலாம்” என்றார் வடிவேலு.
சபை கலைந்தது.
error: Content is protected !!