Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை – 11

திருமணம் முடிந்து இன்றுதான் அலுவலகம் செல்கிறான் போகும்  வழியெல்லாம் மனைவியின் நினைவே, தந்தையின் மேல் உள்ள அன்பில் அப்படி நடந்துகொண்டாள் நன்றாகப் புரிகிறது என்றாலும் கொஞ்சம் பக்குவமாக நடந்திருக்கலாம் என்ற யோசனைதான்.

 

 



Advertisement

இரவின் இனிமையெல்லாம் காணாமல் போயிருக்க மனம் வலித்தது “மச் கொஞ்சம் பொறுமையா சொல்லியிருக்கலாம்” என்று யோசித்தவனுக்கு தாயிடம் நகையைத் தான் தான் எடுத்தோம் என்பதை கூறிவிட வேண்டும் என்று இந்த நொடி தோன்றியது, சொல்லிவிடலாம் இதுக்குமேலயும் மறைக்க வேண்டாம் என்ற முடிவோடு அலுவலகத்தை அடைந்தான்.

 

Advertisement

 

Advertisement

நண்பர்கள் அனைவரும் “எங்கடா ட்ரீட்” என்று நச்சரித்தனர் தன்னுடைய மனநிலையை அவர்களுக்குக் காட்டிக்கொள்ளாமல் மதியம் அனைவருக்கும் பிரியாணி ஆர்டர் செய்து கொடுத்திருந்தான்.

 

Advertisement

 

“ராஜகுமாரா காலைல வீர வசனம்லாம் பேசிட்டு வந்திருக்க, நீ கோவமா இருப்பேன்னு நெனச்சு கவலைப்படுவாளா… ச்ச ச்ச வாய்ப்பில்லை வீட்டுக்குவாடி உனக்கு இருக்குனு வெறகுகட்டையோட நிப்பாளா? இருக்கும்… கெத்த விடாம அப்படியே சாமாளிச்சிட்டு ரூம்க்கு போய்த் தாஜா பண்ணிக்கலாம்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன்.

 

 

“பூ அல்வா எதுவும் வாங்குவோமோ” என்று யோசனை செய்து அதை அப்படியே அழித்துவிட்டான் “வாங்கிட்டு போற பூவை உன் போட்டோவுக்கே மாலையா போட்ற போறா எதுக்கு வம்பு” என்று வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

 

 

ராக்காயியை பார்த்த செவ்வந்தியும் கனகமும் அதிர்ந்து எழுந்து நிற்க அவரின் விழிகள் கனகத்தை மட்டுமே பார்த்தது “அப்போ  உனக்குத் தெரியும்… அவன்னு தெரிஞ்சுதான் கட்டிக்கிட்ட அப்போ கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்குப் பழக்கம், அதுதான் அண்ணனுக்கு இந்தச் சம்மந்தம்தான் சரியா வரும்னு என்னை நொச்சு பண்ணிட்டே இருந்து காரியத்தைச் சாதிச்சுக்கிட்டானா”.

 

 

“என் புள்ளயே என்னைய இப்படி ஏமாத்துவான்னு தெரியாத கிறுக்கியா இருந்திருக்கேனே, அவன் குடுத்த தைரியந்தானா என்னையவே எதிர்த்துப் பேச வெச்சுது உன்னைய” என்றவர் அதன் பிறகு ஒருவார்த்தை பேசவில்லை மதிய உணவும் உண்ணவில்லை.

 

 

செவ்வந்தியும் கனகமும் காலையும் உண்ணவில்லை மதியமும் உண்ணவில்லை, கனகத்திற்கு நேற்று இரவு உறங்காததும் காலை முதல் அழுததும் கணவன் பேசியதும் இப்பொழுது மாமியார் பேசியது என்று கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது, குடலை பிரட்ட பின்கட்டிற்கு ஓடினாள் ஒன்றுமே சாப்பிடவில்லையே வயிற்றில் ஏதாவது இருந்தால் தானே.

 

 

செவ்வந்திதான் அதட்டி ஒரு டம்பளர் டீக்குடிக்க வைத்தாள், மதியம் வந்த கனகசபையும் மனைவியை நெருங்கி என்னாச்சு ஏன் இப்படி இருக்குற என்று கேட்க அதற்கும் பதிலில்லை,  மாலையும் வந்தது யோககுமாரன் வந்துவிட்டான்.

 

 

வீட்டின் சூழலைப் பார்த்துச் சந்தேகமாக மனைவியைப் பார்த்துக்கொண்டே  அறைக்குள் நுழைந்தான், அவனைப் பின்தொடர்ந்து உள்ளே நுழைந்தவள் அமைதியாக நிற்க “என்னாச்சு” என்றான்.

 

 

என்னவென்று சொல்லுவாள்,  இதை அவன் எப்படி எடுத்துக்கொள்வான் என்று வேறு பயமாக இருந்தது, அவள் பேசாமல் அமைதியாக இருக்க துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றுவிட்டான்.

 

 

“என்ன இவரு ஒன்னும் சொல்லாம போய்ட்டாரு, ஐயோ கோவமா போய்ட்டாரோ இப்போ நான் என்ன செய்யணும்” என்று யோசித்து நின்றவள் வேகமாகச் சென்று அனைவருக்கும் மாலை தேநீர் மட்டும் போட்டு  எடுத்துவந்தாள்.

 

 

அதையும் ராக்காயி தொடவில்லை தன்னுடைய டம்பளரை எடுத்துக்கொண்ட யோகன்  மீண்டும் அறைக்குள் நுழைந்துகொண்டான்.

 

 

“என்ன இவர் இப்படி பண்றாரு அவங்க அம்மாதானே என்னனு கேக்கலாம்ல” என்று சில நொடிகள் அங்கேயே தயங்கி நின்றவள் மீண்டும் அறைக்குள் நுழைந்தாள், அவன் அவளைக் கண்டுகொள்ளவேயில்லை அவளே தயங்கி தயங்கி பட்டும் படாமல் யாரையும் குற்றம் சொல்லாமல் ஒரு விதமாக விஷயத்தைக் கூறிமுடித்தாள் கேட்டுக்கொண்டவன் “ராஜா பாத்துப்பான்” என்றதோடு முடித்துக்கொண்டான்.

 

 

ஆறுமணிக்கு மேல் வந்து சேர்ந்தான் ராஜகுமாரன் வண்டியை நிறுத்தி உள் நுழைந்தவன் “என்னடா இது நம்ம வீடுதானா சீரியல் சத்தம் இல்லாம இவ்ளோ அமானுஷயமா இருக்கு” என்று எண்ணிக்கொண்டே உள்ளே நுழைந்தவன் விழிகள் முதலில் மனைவியில் படிந்தது, சுவற்றில் சாய்ந்து தளர்ந்து அமர்ந்திருந்தாள்.

 

 

“என்னாச்சு இவளுக்கு” என்று சிந்தித்தவன் தாயை அபோழுதுதான் கவனித்தான், அவன் வந்த நொடி முதல் அவனைத்தான் பார்த்தது ராக்காயின் விழிகள் “என்னம்மா” என்றான் தாயை பார்த்து.

 

 

“பெத்தவ கழுத்துல கிடந்ததை அருத்ததோட உன் சாகசம்  முடிஞ்சிடுச்சா இல்ல வேற எதுவும் இருக்கா” என்றவரை அமைதியாகப் பார்த்துநின்றான் ராஜகுமாரன்.

 

 

கணவன் வந்தது தெரிந்தும் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அமர்ந்திருந்த கனகம் மாமியாரின் வார்த்தைகளில் அவனைச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள், தன்னை சந்தேகப்படுவானோ தான் கூறிவிட்டதாக நினைப்பனோ என்ற எண்ணியபோதே மீண்டும் விழிகள் நிறைய தொடங்கியது.

 

 

“சொல்லுடா நான் தான் மோசமானவளாச்சே என்னால கஷ்டப்படுறவங்களுக்கு ராசாதிராசா அள்ளி அள்ளிக் கொடுப்பீங்களே அப்படியே குடுக்க வேண்டியதுதானே எதுக்கு இப்படி செஞ்ச, ஏன் கைல காசு இல்லையா” என்றார் நக்கலாக.

 

 

“உங்ககிட்ட இருந்தது அவங்க பரம்பரை நகை அதே மாதிரி  செய்யணும்னா கூடக் கொஞ்சம் நாள் ஆகும், அது கஷ்டமும் கூடப் புருஷன்   வீட்ல அந்தப் பொண்ணு எவ்ளோ நாள் பொய் சொல்ல முடியும் அம்மா வீட்டில இருக்குன்னு தம்பி படிப்புக்குக் குடுத்துச்சு திருப்பி எடுக்க முடியல”.

 

 

“ஒருவர்ஷம் முடிஞ்சும் மீட்க்கலன்னு நீங்க இனிமே நகையைக் குடுக்க மாட்டேன்னு சொல்லிடீங்க, என் கால்ல விழுந்துட்டான் அந்தப் பையன் அக்கா வாழ்க்கையை காப்பாத்துங்கன்னு நான் வேற என்ன செய்ய அதான்… ஆனா மூணு மாசம் கழிச்சு பணத்தை கொடுத்துட்டாங்க அந்தக் காசுலதான் உங்களுக்குத் தங்கத்துல ரெண்டு வளவி எடுத்துக் குடுத்தேன் உங்க பணத்தை அவங்க ஏமாத்தல அது உங்ககிட்டயேதான் இருக்கு” என்றான்.

 

 

“உன்னோட திருட்டுத்தனத்துக்கு உன் பொண்டாட்டியும் கூட்டுத்தானே என்னமா நடிச்சா உன்னைத் தெரியாத மாதிரியே” என்றதும் மனைவியைத் திரும்பிப் பார்த்தான் ராஜா, அவனையேதான் பார்த்திருந்தாள் விழிகள் தளும்பி நின்றது.

 

 

“அவளுக்குத் தெரியாதுமா அது நான்தான்னு இந்த நிமிஷம் வரைக்கும் அவளுக்கு அது நான்தானான்னு சந்தேகம் தானே தவிர அவளுக்குத் தெரியாது”.

 

 

“அப்படியே தெரிஞ்சாலும் எப்படிம்மா உன்கிட்ட சொல்லுவா பொண்ணு பாக்க வந்த மாப்பிளை திருடன், அவன் அம்மாகிட்டயே திருடினவன்னு அவ சொன்னா யாரவது நம்புவாங்களா மொதல்ல நீங்க நம்புவீங்களா அவளை உண்டு இல்லன்னு ஆகியிருக்க மாட்டீங்க உறுதியா தெரியாத ஒரு விஷயத்தை அவ எப்படி சொல்லுவா” என்றான் பேசி முடிக்கும்  வரைக்குமே விழிகள் மனைவியிடம் மட்டுமே கனகத்தின் அழுகை சத்தம் கூடியது இப்பொழுது.

 

 

“வெளில போ” என்றார் ராக்காயி மகனிடம் அவன் தாயை திரும்பிப் பார்த்தான்.

 

 

“ராக்காயி” என்று கனகசபை அதட்ட “அம்மா இப்போ என்ன அதான் அவன் சொல்லிட்டானே, செஞ்சது தப்புதான் அதுக்கு எதுக்கு இப்படி பேசுறீங்க” என்றான் யோகன்.

 

 

“ஒன்னு இந்த வீட்டில நீ இருக்கணும் இல்ல நான் இருக்கணும் முடிவு செய், இப்போ யாருக்காகவோ கழுத்துல கிடந்த சங்கிலியை அறுத்தவன் நாளைக்கு அவன் பொண்டாட்டிக்காக என் கழுத்தையே அறுக்கமாட்டான்னு என்ன நிச்சயம்” என்றார் தீர்மானமாக.

 

 

அவர் கோபத்தில் சொன்ன வார்த்தையாக இருந்தாலும் மனது காயப்பட்டது ராஜகுமாரனுக்கு.

 

 

“அத்த நான் காலைல அப்பாவைச் சந்தேக்கப்படுறீங்களேன்னு ஒரு ஆதங்கத்துல அப்படி நடந்துக்கிட்டேன், உங்க மேல மரியாதை இல்லாம இல்ல இனிமே இப்படி நடக்காது என் மேல இருக்குற கோவத்தை அவர் மேல காட்டாதீங்க அத்த” என்றவள் தட்டு தடுமாறி எழுந்து நின்று பேச.

 

 

கைநீட்டி அவளைத் தடுத்தவர் “உனக்கும் எனக்கும் பேச்சுவார்த்தை இல்லை மரியாதை தெரியாதவ கூட நான் பேசறதில்லை” என்றவர் மகனை அழுத்தமாகப் பார்க்க.

 

 

“கனகாம்பரம் நம்ம ரெண்டு பேரோட துணி மட்டும் எடுத்துவை வேற எதுவும் எடுக்காத” என்றவன் அலைபேசியோடு வெளியே சென்றான்.

 

 

“எந்தத் தப்பும் செய்யாம எதுக்கு இந்தத் தண்டனை, பாக்கறவங்க என்னைத்தானே தப்பா பேசுவாங்க வந்ததும் உங்க மகனைத் தனியா கூட்டிட்டு போய்ட்டேன்னு, என் அப்பாவை நம்பாம பேசுனீங்க அதைக் கேட்டேன் வேற என்ன தப்பு செஞ்சேன் நான்” என்றாள் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு.

 

 

“பேசுவடி பேசுவ ஏன் பேசமாட்ட எல்லாம் அவன் குடுக்குற இடம்தானே காலைல ஒருவார்த்தை  இப்படித்தான் வளத்தாங்களா உங்க வீட்டலன்னு கேட்டதுக்கு என்னய பெரியமனுஷியா நடந்துக்கலன்னு தானே சொல்ல வந்த, உன்னை இப்படியே விட்டா அப்புறம் எனக்கு என்னடி மரியாதை” என்றவர் இடுப்பில் சொருகியிருந்த அலைபேசியை எடுத்துப் பழனிசாமியை அழைத்தார்.

 

 

அவர் யாருக்கு அழைக்கிறார் என்று தெரியாமல் அனைவரும் அவரையே பார்க்க அந்தப் பக்கம் எடுத்தவர் “சொல்லுங்க சம்மந்தியம்மா” என்க.

 

 

“என்னத்த சொல்ல ஒரு அடங்காபிடாரிய என் மவன் தலைல கட்டி வெச்சுருக்கீங்களே அவளை வந்து கூட்டிட்டு போங்க” என்றவர் அழைப்பைத் துண்டித்துவிட, மனிதர் பதறிவிட்டார் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

 

“அம்மா… அம்மா…” என்று அழைத்தவர் மீண்டும் அழைக்க ராக்காயி எடுக்கவில்லை, மாப்பிளைக்கு அழைக்க வேண்டும் என்ற நினைப்பு கூட இல்லாமல் கடையைப் பையன்களிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு அவசரமாக வீட்டிற்கு வந்தவர்.

 

 

“அய்யா மகேசு வீட்டைப் பூட்டிகோ சாமி அம்மாவும் அப்பாவும் ஒரு வேலையா போறோம்” என்று “எங்கேங்க” என்று மனைவியை இழுத்துக்கொண்டு அரக்க பறக்க வந்து சேர்ந்தார் மகள்களின் புகுந்த வீட்டிற்கு.

 

 

“ஏண்டி” என்றாள் செவ்வந்தி தங்கையிடம்.

 

 

“அவரை எதுக்கு இப்போ கூப்பிட ராக்காயி” என்றார் கனகசபை.

 

 

வெளியே நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தான் ராஜா வீடு ஒன்று வேண்டும் என்று அபோழுது வந்து நின்ற மாமியார் மாமனாரை பார்த்தவன் அதிர்ந்து விட்டான்.

 

 

“மாப்ள சீக்கிரம் ரெடி பன்னு நான் கூப்பிடுறேன்” என்று வைத்தவன் “என்ன மாமா இந்த நேரம்” என்றான் அவரை நெருங்கி.

 

 

“சம்மந்தியம்மா போன் போட்டாங்க மாப்ள, என்னென்னமோ சொன்னாங்க” என்றார் படபடப்போடு.

 

 

“இவங்கள” என்று பல்லைக் கடித்தவன் “இங்க ஒரு பிரச்னையும் இல்ல எங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல எதுக்கு இப்போ இவ்ளோ அவசரமா வந்தீங்க” என்றவன் “வாங்க” என்று உள்ளே அழைத்துச்சென்றான்.

 

 

பதட்டத்தோடும் பயத்தோடும் வீட்டிற்குள் நுழைந்த பெற்றவர்களைப் பார்த்த செவ்வந்தி தங்கையை முறைத்தாள், மிகுந்த குற்றவுணர்வாகி போனது கனகத்திற்கு.

 

 

“என்னம்மா இதெல்லாம் எதுக்கு இப்போ அவங்களை வரச் சொன்னீங்க ஹார்ட் பேஷண்ட் மா அவரு, ஏதாவது ஆயிட்டா யார் பதில் சொல்றது என்கிட்டே பேசுங்க, அவ என் பொண்டாட்டி அவ மேல தப்பு, இல்ல உங்களுக்கு அவ கூடப் பிரச்சனை எதுனாலும் என்கிட்டே சொல்லுங்க”.

 

 

“என்னைய நம்பி அவங்க பொண்ணை கொடுத்துட்டாங்க இனிமே நாந்தான் பொறுப்பு” அவங்க இல்ல” என்றவன் விழிகள் மனைவியை அழுத்தமாகப் பார்த்தது, தாய் தந்தையை அப்படி பார்த்துவிட்டுக் கலங்கி நின்றவள் அவசரமாக அடுப்படி சென்று சொம்பில் தண்ணீர் கொண்டுவந்தாள்.

 

 

“குடிங்க மாமா” என்று அவரிடம் கொடுத்தவன் ஒரு சேரை எடுத்துப்போட்டு அவரை அமரவைத்தான் “நீங்களும் உக்காருங்க அத்த” என்க.

 

 

“அவர் பரவாயில்ல மாப்ள” என்று கணவனின் பின்னே நின்றார்

 

 

“உங்க பொண்ணு…” என்று ராக்காயி தொடங்க “மா” என்று அவரைப் பார்த்து முறைத்தவன்.

 

 

 

“இங்க பாருங்க மாமா பிரச்னைலாம் ஒண்ணுமில்ல எனக்கும் எங்க அம்மாவுக்கும் ஒரு சின்ன சண்டை, அதுல என்னை எங்க அம்மா திட்டிட்டாங்க,  என் புருஷனை ஏன் திட்டுனீங்கன்னு என் பொண்டாட்டி எனக்காக வந்தா அந்தக் கோபம்தான் வேற ஒண்ணுமில்ல” என்க.

 

 

“பெத்து வளத்தவங்களுக்கு இல்லாத உரிமையா இதுல அவ எதுக்கு பேசணும் மாப்ள தப்புதானே” என்ற செல்லியம்மாவின் விழிகள் சின்ன மகளை எரித்துவிடுவதை போலப் பார்த்தது, இதுக்கே இப்படின்னா விஷயம் தெரிஞ்சா என்றுதான் அவள் மனது பதறியது.

 

 

“மன்னிச்சிடுங்க சம்மந்தி கொஞ்சம் துடுக்குத்தனம், சின்னப் புள்ள இந்தத் தடவ மன்னிச்சு விட்டுடுங்க இனிமே இப்படி நடக்காது” என்று அவர் அத்தனை இறங்கி மகளின் வாழ்க்கைக்காகப் பேசக் கனகத்திற்கு மனமே ஆறவில்லை.

 

 

“அத்த அவ எனக்காகப் பேசினா, எனக்காக என் பொண்டாட்டி பேசாம வேற யார் பேசுவா” என்றவன் “கனகம் எடுத்துவெச்சியா” என்றான் அவளிடம் அவள் யாரையும் நிமிர்ந்துபார்க்காமல் அவர்களின் அறைக்குள் நுழைந்தாள்.

 

 

“எங்க அம்மா பேசினதுல எனக்கு ரோஷம் வந்திடுச்சு மாமா அதான் நான் என் பொண்டாட்டியோட தனியா போறேன்” என்றான்.

 

 

அவர் பதறி எழுந்துகொண்டார் “ஐயோ மாப்ள பெத்தவங்க வருத்தத்துல ரெண்டு வார்த்த பேசுறதுதான் அதுக்காக இப்படி வேண்டாமே, அவங்க மனசு சங்கடப்படாதா அதும் எங்க பொண்ணு வந்த நேரம் உங்களைக் குடும்பத்துல இருந்து பிரிச்சுட்டதா பேச்சு வருங்களே மாப்ள” என்றவர் மனைவியைப் பார்க்க.

 

 

“கனகம் வந்து மன்னிப்பு கேளு” என்றார் செல்லியம்மா,  அவள் வெளியில் வந்தாள்.

 

 

“உள்ள போய் எடுத்துவை” என்றவன் “இல்ல மாமா கொஞ்ச நாள் தனியா இருக்கோம் இது என் முடிவு” என்றான்.

 

 

கனகம் பைகளை எடுத்து வெளியில் வைத்தாள் அதை எடுத்துச் சென்று வெளியில் வைத்தவன் உள்ளே வந்து “கிளம்பிட்டான்னு யாரும் சந்தோஷப்பட வேண்டாம்,  மூத்தவனா ஒருத்தன் இருக்கியே ஒரு பொறுப்பிருக்கா உனக்குக் கல்யாணம் முடிஞ்சதும் பொண்டாட்டியை வெளில கூட்டிட்டு போவோம்னு, உன்னால என்னாலயும் என் பொண்டாட்டியை எங்கேயும் கூட்டிட்டு போக முடியல”.

 

 

“அதுதான் இல்லன்னா ஒரு ஹனிமூன் போனியா நீ, பெரியவன் போவாம நீ மட்டும் எப்படி போகலாம்னு உடனே வந்திடுவாங்க” என்றான் தாயை பார்த்துக்கொண்டே.

 

 

“இப்போதான் நிம்மதியா இருக்கு என் பொண்டாட்டிகூட தனிக்குடித்தனம் போறேன், சும்மா சும்மா வந்து யாரும் தொல்லை பண்ணாதீங்க” என்றவன் தாயை பார்த்து “உன் மூத்த பையனுக்குப் போட்டியா புள்ளய பெத்து உன் மடில ஒண்ணுக்கு அடிக்க வைக்கல… வெக்குறேன்” என்றவன் மாமனாரை பார்த்துக் கண்ணடித்தான்.

 

 

ஏனோ பிரச்சனையோடு சண்டையோடு முகத்தைத் திருப்பிப் போவதாகக் காட்ட தோன்றவில்லை,  மாமனாரும் மாமியாரும் பெரிதாகப் பிரச்சனை இல்லை என்று எண்ணிக்கொள்ளட்டும் என்று சாதாரணமாகப் பேசி நின்றான்.

 

 

இரண்டு பைகளை எடுத்துப் பைக்கின் முன்னில் வைத்தவன் அருகில் வந்து ஏதோ பேசிநின்றார் பழனிசாமி, அந்த இடைப்பட்ட நேரத்தில் மகளை நெருங்கினார் செல்லியம்மா.

 

 

“அகம் புடிச்ச கழுத எத்தனை தடவை சொல்லியிருக்கேன் பாத்து பேசணும்னு, அப்படி என்ன பொட்டப்பிள்ளைக்கு வாயி அம்மாவும் பிள்ளையும் ஆயிரம் பேசறாங்க உனக்கு என்னடி நடுவுல காரியம் வாய் கொழுப்பு  கூடி போய்டுச்சு”.

 

 

“எல்லாம் உன் அப்பாரு குடுத்த இடம் அதான் அந்த மனுஷனை இப்படி கொண்டு வந்து நிறுத்திட்ட, எப்படி பதறி அடிச்சு வந்தோம் தெரியுமா இனிமே இந்த மாதிரி ஏதாவது பேசினேன்னு தெரிஞ்சது கம்பியைப் பழுக்கக் காச்சி இழுத்துடுவேன், எப்படித்தான் பொழைக்க போறியோ எங்களுக்கு இப்போவே வயித்துல புளியை கரைக்குது” என்றார்.

 

 

கனகாம்பரம் மொத்தமாகச் சோர்ந்திருந்தாள் இன்று ஒரு நாளிலே எத்தனை எத்தனை… எங்காவது சுருண்டுகொள்ள தோன்றியது, தந்தை இன்னும் தன்னோடு பேசாதது வேறு மனதை வருத்தியது, மாப்பிள்ளையின் கையைப் பிடித்து அப்படியொரு வாடிய முகத்தோடு பேசிக்கொண்டிருந்தார் மனிதர்.

 

 

மகளை ஒரு பார்வை பார்த்தார் தந்தை ஒன்றும் பேசவில்லை, அவரைச் சமாதானம் செய்து மாமியாரையும் தேற்றி அவரோடு அனுப்பி வைத்தான், அதன் பிறகு அவளிடம் திரும்பி “அந்தப் பையை மடில வெச்சிக்கோ” என்றவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

 

 

“நான் என்ன சொல்ல அம்மாவும் புள்ளையும் பிடிவாதம்” என்றார் கனகசபை, யோகன் அனைவரும் செல்ல அறைக்குள் நுழைந்துகொண்டான்.

 

 

செவ்வந்தி வேகமாக வெளியில் ஓடி வந்தாள் “தம்பி” என்று அவள் தயங்கி நின்றவள் தங்கை கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டாள் “கவலைப்படாதீங்க அண்ணி சரியாயிடும், நாளைக்கு போன் போடுறேன் உங்க தங்கச்சியை பத்திரமா பாத்துப்பேன்” என்றான்.

 

 

தங்கையைப் பார்த்து நின்ற செவ்வந்திக்கு அழுகை முட்டியது “அவ காலைல இருந்து ஒன்னும் சாப்பிடல தம்பி நீங்களும் சாப்டீங்களா தெரில சாதம் இருக்கு கட்டி தரட்டுமா” என்ற அக்காவைக் கட்டிக்கொண்டாள் கனகம், இருவருக்கும் அழுகையே.

 

 

தொண்டையை செருமிக்கொண்டவன் “நான் வாங்கிக்குடுக்குறேன் அண்ணி நீங்களும் சாப்பிட்டு எல்லாரையும் சாப்பிட வைங்க நாங்க கிளம்புறோம்” என்றவன் மனைவியைப் பார்க்க “பத்திரமா இருக்கா” என்றவள் கணவனுடன் கிளம்பிச்சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!