Skip to content
Post Views: 2,832
பூவிடைப் பனித்துளிகள்
அத்தியாயம் 12
பெங்களூர் டிராஃபிக்கில் நீந்தி தத்தளித்து தினேஷ் சொன்ன பேருந்து நிறுத்தத்தில் இறங்க, திவ்யாவிற்கு ஒன்னரை மணி நேரம் ஆயிற்று. அப்போதும் கூட தினேஷ் வந்திருக்கவில்லை.
கோரமங்களாவில் இருந்து அவன் வந்து சேர இன்னும் கால தாமதம் ஆகும் என்று கருதிய திவ்யா, வழக்கமாக அவர்கள் உணவருந்தும் ஜானகி அம்மா டிஃபன் செண்டருக்குக் சென்று இடம் பிடித்து இருவருக்கும் மைசூர் மசால் தோசை ஆடர் செய்தாள்.
Advertisement
தோசை வந்து சேரும் முன்னர், நல்ல வேளையாக தினேஷ் வந்துவிட்டிருந்தான். அவன் வந்த உடனேயே காலையில் இருந்து நேர்காணலில் நடந்த விஷயங்களைச் சொல்லிக் கொண்டே வந்தவள், பரணி பற்றிய பேச்சு வரவும் கண்ணில் மின்னலுடன் சற்றே பரவசமாகப் பேசினாள்.
“எனக்கு அப்படியே நெஞ்சே அடைச்சு போச்சு தெரியுமா தினு. அவனை கொஞ்சம் கூட நான் அங்க எக்ஸ்பெக்ட் பண்ணலைடா. அவன் அந்த கம்பெனியிலையா வொர்க் பண்ணறான். வெரிஜோன்ல வேலை பார்க்கறதா எஃப்.பில இருக்கும்.
அப்படியே தான் இருக்கான்டா. அதே திமிர் பிடிச்ச பார்வை, அட்டகாசமான சிரிப்புன்னு. அவனுக்கு என்னை அடையாளம் தெரியலைன்னு நினைக்கறேன். அப்படியே நான்னு தெரிஞ்சிருந்தாலும் கொஞ்சம் கூட ஜெர்க் ஆகாம கேஷுவலா கண்டினியூ பண்ணி பேசிட்டான். நான் தான் அவனைப் பார்த்து டென்ஷன் ஆகி, இருமல் வந்துன்னு சொதப்பிட்டேன்” என்று ஆர்வத்துடன் பேசிய திவ்யாவை குறும்புடன் கவனித்த வண்ணமே இருந்தான் தினேஷ்.
Advertisement
அவள் இடையே நிறுத்தவும், “நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்” என்று வடிவேலு போல சொல்ல, திவ்யா அவனுடன் சேர்ந்து கலகலவென நகைத்தாள். மதியம் பரணியைப் பார்த்த குழப்பமெல்லாம், தினேஷுடன் இருக்கும் நாழிகையில் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. இயல்பாகச் சிரிக்க முடிந்தது அவளால்.
Advertisement
“ஏன் தினு? அவன் எஃப்.பி யூஸ் பண்ணறது இல்லையா? அதுல அவன் சென்னையில வெரிஜோன்ல வொர்க் பண்ணறான்னு இருக்கும்? இங்க எப்போ ஜாயின் பண்ணான்?”
“ஏன் அதையும் அவன் எஃப்.பிலயே பார்க்க வேண்டியது தானே? அவன் ப்ரோஃபைலை ஸ்டாக் பண்ணறியா நீ? சைக்கோ கொலைகாரி.”
“ஏ, சீ, வாயை மூடு. நான் ஒண்ணும் அவனை ஸ்டாக்லாம் பண்ணலை. இன்ஃபாக்ட் அவன் என் ஃப்ரெண்ட் லிஸ்டில கூட இல்லை தெரியுமா?”
Advertisement
“ம்க்கும், ஆனா ஆல் டீடெயில்ஸ் தெரியுது அவனைப் பத்தி.” என்றான் தினேஷ் சிரிப்புடன்.
“எப்பவாச்சும் பார்ப்பேன். பழைய இன்ஃபர்மேஷன் மட்டும் தான் இருக்கும்.” என்றாள் திவ்யா சீரியஸாக.
“ஒருவேளை எஃப்.பில ஃப்ரெண்டா இருந்திருந்தா நீ அவனை ப்ளாக் பண்ணி வச்சிருப்ப. அதானே பண்ணியிருப்ப.”
“அப்படியெல்லாம் பண்ணியிருக்க மாட்டேன். நான் ரொம்ப டீசண்ட் கேர்ள், தெரியுமா? அவன் என்னை மறந்து கூட போயிருப்பான். அவனைப் பத்தி நான் ஏன் இவ்வளோ யோசிக்கணும்” என்றாள் சற்றே கம்மிய குரலில். ஆனால், பரணிக்காகவெல்லாம் தன் தோழி வருத்தப்பட மாட்டாள் என்று தீவிரமாக நம்பினான் தினேஷ்.
“ஏ, மறந்திருக்கலாம் மாட்டான் திவி. உருகி உருகி லவ் பண்ண பொண்ணை யாராவது மறப்பாங்களா? எனக்குலாம் ஸ்கூல்ல ஒம்பதாங்கிளாஸ்ல நான் லேசா சைட் அடிச்ச அர்ச்சனா முகம் கூட ஞாபகம் இருக்கு. அதுவுமில்லாம…” என்று ஒரு மார்க்கமாக தினேஷ் நிறுத்த,
புருவத்தை நெரித்து அவனைப் பார்த்த திவ்யா, “அதுவுமில்லாம… சொல்லு, சொல்லி முடிச்சிடு ஏன் தயங்கற? நீ தான் தைரியமானவனாச்சே சொல்லு.” என்று கொஞ்சம் கோபத்தை குரலில் அப்பிக் கொண்டு வினவினாள்.
“அது வந்து, அதுவுமில்லாம, நீ வேற அவனைக் கண்டுக்காம சுத்தல்ல விட்டுருக்க. உன்னை எப்படி மறந்திருப்பான்?” என்று திவ்யாவின் முகபாவனையக் கவனித்துக் கொண்டே தயக்கத்துடன் கேட்டான்.
தினேஷின் பயந்த பாவனைக் கண்டு சிரித்தவள், “ஓ, நான் சுத்தல்ல விட்டேன்… இல்லையா?” என்று கை முஷ்டியை மடக்க,
“இல்ல இல்ல, அவன் தான் சுத்தி வந்தான். சரியா? ஹிஸ்டடி சரியா சொல்லிட்டேன். விட்ரு போதும்.” என்று பதிலளித்து முடித்தான். அத்தோடு, “ஒரு மசால் தோசைக்கு ஆசைப்பட்டு வந்து செம்மையா சிக்கிட்டனே இவகிட்ட. இதுக்கா இந்த டிராஃபிக்ல நீந்தி, ஆட்டோகாரன்கிட்ட கன்னடத்துல திட்டு வாங்கிட்டு வந்தேன்?” என்று திவ்யாவின் காதுகளில் விழும்படிக்கு தெளிவாக அவன் முணுமுணுக்க, திவ்யா சிரித்துக் கொண்டாள்.
அத்துடன் பரணியின் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, நேர்காணலில் நடந்த மற்ற நிகழ்வுகளை அவனுடன் பகிர்ந்து கொண்டாள்.
அவன் பைக்கில் தொற்றிக் கொண்டு பி.ஜி வந்து சேரும் வரையிலும் திவ்யா சலசலத்த வண்ணமே வந்தாள். அவள் மனதில் பரணி பற்றி பேச நிறைய ஆவல் இருந்தது. அதே நேரம், தயக்கமாகவும் இருந்தது. தன் உற்ற நண்பன் தினேஷிடம் தான் பகிர்ந்து கொள்கிறாள் என்னும் போதும், எல்லா விஷயத்தையும் எல்லாரிடமும் சொல்லிவிட இயலாது அல்லவா?
“இண்டர்வியூ எலா சேச்சாவே?” என்று விபரம் கேட்ட அறைத் தோழி மோனிகாவிடம் பட்டும் படாமல் பதில் சொல்லிவிட்டு, தன் கட்டிலில் படுத்து முதல் வேலையாக முகநூலில், பரணியைப் பற்றி ஆராயத் துவங்கினாள்.
‘பாரு, பல வருஷமா அதே டி.பி தான். மூணு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் தான் அப்டேட் இருக்கு. அதுக்கு மேல எந்த இன்ஃபோவும் இல்ல’ என்று எண்ணினாள்.
‘ஒரு வேளை இன்ஸ்டா, டிவிட்டர்னு மூவ் ஆகிட்டானோ? அதனால எஃப்.பி அப்டேட் அதுவுமே இல்லாம இருக்குதோ? ஏன் நாம கூட தான் இப்போலாம் பழைய மாதிரி எஃப்.பி யூஸ் பண்ணறதில்லை. அதைவிட, இன்ஸ்டா தான் அதிகமா யூஸ் பண்ணறோம்’ என்று எல்லா சோசியல் மீடியாவிலும் பரணியைப் பற்றி அலசிக் கொண்டிருந்துவிட்டு உறங்கினாள்.
அடுத்த தினமும், காலையிலேயே கிளம்பி, அந்த அலுவலகத்திற்கு குறித்த நேரத்தில் சென்றுவிட்டாள். ‘இன்னைக்கும் பரணி இண்டர்வியூ பண்ணுவானோ? பேனல்ல அவனும் இருப்பானோ?’ என்று நெஞ்செல்லாம் மெல்லிய பயக்கோலம் பூண்டது.
ஆனால், அவள் அஞ்சியது போல் நடக்கவில்லை. இண்டர்வியூ அறையில் முன்தினம் அவளிடம் பேசிய ஜெயராஜும் அவருடன் சேர்ந்து இன்னொரு நபரும் மட்டுமே இருந்தனர். ‘அப்பாடா!’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட திவ்யா தைரியமாக அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தாள்.
அன்றைய மாலையே அவளுக்கு வேலை கிடைத்துவிட்டது என்றும், இன்னும் இரு தினங்களில் பணியில் சேரும் படிக்கும் மெயில் வந்திருந்தது. முதலில் செய்த வேலையை விட இப்போது சேர்ந்திருக்கும் அலுவலகம் பெரியது. சம்பளமும் அதிகம். திவ்யாவிற்கு மனம் கொள்ளாத பூரிப்பு. ஆனாலும், பரணியைப் பற்றி எண்ணியபோது இந்த வேலையில் சேருவதா, வேண்டாமா எனக் குழப்பமே மிஞ்சியது.
தன் மனக்குமுறலை தினேஷிடம் பகிர்ந்து கொண்டாள். “நல்ல பேக்கேஜ்ன்னு சொல்லற! அப்பறம் என்ன லூசு தயக்கம் உனக்கு? எதுக்கு சிம்பிளான விஷயத்தை காம்பிளிகேட் பண்ணிக்கற?” என்று இவள் புலம்பத் துவங்கவுமே தினேஷ் கடிந்து கொண்டான்.
“இல்ல தினு, பரணியும் அதே ஆபீஸ்ல வேலை செய்யறானே! ஏதாவது பிராப்ளம் ஆகிட்டா?” என்றாள் தவிப்பாக.
“அவனுக்கும் உனக்கும் என்ன ஜென்ம பகையா? உன் விரோதியா அவன்? பார்த்தாலே அருவாளை எடுத்து, ‘வெட்டுடா அவளன்னு’ ஹை பிச்ல கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிடுவானா? அவன் யு.எஸ்ல இருக்கான்னு சொல்லற. நீ அவனை மீட் பண்ண போறது கூட கிடையாது. அப்பறம் என்ன தான் உன் பிரச்சனை?”
“பகையெல்லாம் இல்ல. ஆனாலும், ஒரு உறுத்தல். கொஞ்சம் குழப்பமாவும் இருக்கு” என்று சொன்னவளின் உண்மையான கவலை பற்றி தினேஷும் கூட அறிந்திருக்கவில்லை.
பரணியின் மீது அவளுக்குள்ளும் முன்னர் இருந்த சிறிய ஈர்ப்பையும், கொள்ளை கொள்ளும் அவன் கண்பார்வை வெட்டுக்களையும் மீண்டும் தன்னால் தாங்கிக் கொண்டு வேலை செய்ய முடியுமா என்பதே பிரதானமாக, அவனைப் பற்றி நினைக்கையிலேயே உடலின் எல்லா செல்களும் அப்பொழுது தான் நீண்ட உறக்கத்திற்குப் பின் சோம்பல் முறித்து உயிர்த்தெழுந்ததைப் போன்றும், உடலில் புதிதாக ரத்தம் பாய்வதைப் போன்றுமொரு குறுகுறுப்பு. இதையெப்படி தினேஷிடம் சொல்லவது என்று திணறல் வேறு.
திவ்யாவின் கள்ளத்தனம் பற்றி ஏதுமறியாத தினேஷ், அவளுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தான். “ஒரு மண்ணாங்கட்டி குழப்பமுமில்லை. மரியாதையா நாளைல இருந்து ஆஃபீஸ் போற வழியப் பாரு. சும்மா இண்டர்வியூ பேனல்ல இருந்தான்னு அவனோட டீம்லையே உன்னை போடுவாங்கன்னு என்ன இருக்கு? உன் பேனிக் பட்டனை கொஞ்சம் ஆஃப் பண்ணி வை. நல்லா இருப்ப.”
“அதில்ல தினு” என்று அவள் மீண்டும் முதல் கட்டத்தில் இருந்து புலம்பப் போகிறாள் என்ற ஆயத்தங்கள் தென்பட,
“அப்படியும் ரொம்ப குழப்பமா மனசு கஷ்டமா இருந்தா, உன் இ.எம்.ஐ. லோன் பத்திலாம் யோசி, மாசம் பொறந்தா சுளையா நாற்பதாயிரம் எடுத்து வைக்கணும்ல, அதை யோசி, குழப்பமா இருக்காது. ‘நான் உங்கள் அடிமை ஆலம்பனா’ன்னு இறங்கி வேலை பார்க்க ஆர்வம் வந்துடும். ஊர்ல முக்காவாசி பேர், இ.எம்.ஐ கவலையால தான் வேலைக்கே போறானுக.” என்று அவளைச் சிரிக்க வைத்து, பெருமளவு அவள் இதயத்தின் பாரத்தை குறைத்திருந்தான் தினேஷ்.
அடுத்த தினமே அலுவலகத்தில் சேர்ந்திருந்தாள். முதல் தினம் என்பதால் உடனே வேலை என்று எதுவும் கொடுக்கப்படவில்லை. அவளுக்கான இருக்கையும், கணினியும் கொடுத்து அமரவைத்துவிட, திவ்யா சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டே பொழுதைக் கழித்தாள்.
மதியம் ஒரு சிறிய மீட்டிங் ஹாலில் மொத்த டீமும் இருக்கையில், அவளை முறையாக அறிமுகப்படுத்தினார் டீம் லீடர் குமரேசன். “ஃப்ராஜெட் டாகுமெண்டேஷன் மெயில்ல வந்திருக்கும். அதை கோ த்ரூ பண்ணுங்க. வெப் சைட் அ அனாலைஸ் பண்ணுங்க. என்ன வொர்க் போயிட்டு இருக்கு, சிம்பிள் டிஃபெக்ட்ஸ் இதெல்லாம் பாருங்க. நாளைல இருந்து உங்க டாஸ்க் அசைன் பண்ணிக்கலாம்” என்று தன்மையாக பேசினார் குமரேசன்.
அத்தோடு, சீனியர் டெவலபர் சிவதானுவிடம், “தானு, திவ்யாவை மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்ல எந்த க்ரூப்லலாம் ஏட் பண்ணனுமே பண்ணிடுங்க.” என்க,
“ஸ்யூர் சார். நான் பார்த்துக்கறேன்” என்று திவ்யாவைப் பார்த்துச் நட்புடன் தலையசைத்தான் சிவதானு.
மீட்டிங் முடிந்து திரும்ப வந்ததும் சினேகமாக சிரித்தவன், “நீங்க சீனியர் அனாலிஸ்ட் போஸ்ட்ன்னு சொன்னாங்க திவ்யா. எப்படி? நான் கூட கொஞ்சம் ஏஜ்ட் பர்சனா இருப்பாங்கன்னு நினைச்சேன்” என்றவனுக்கு கிட்டதட்ட அவள் வயதுதானிருக்கும்.
அவனுடன் பேசிக் கொண்டே வந்த மற்றொரு பெண், சரினா, “ஆமாங்க, நானும் கூட கேட்கணும்னு நினைச்சேன். டைரெக்டா சீனியர் அனாலிஸ்ட் போஸ்ட்னா நீங்க இண்டர்வியூல ரொம்ப நல்லா பண்ணியிருக்கணும்.” என்று திவ்யாவிடம் கூற, இருவருக்கும் பதிலாக திவ்யா மையமாக புன்னகைத்தாள்.
‘அவள் மிக நன்றாக நேர்காணலில் பதில் சொன்னதால் தான் நேரடியாக சீனியர் அனாலிஸ்ட் பதிவுக்கு வந்திருக்கிறாள்’ என்று இவர்களிடம் தம்பட்டம் அடிக்க அவசியம் இருக்கவில்லை அவளுக்கு.
அவள் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட சிவதானு, கேண்டீன் எங்கே இருக்கிறது, வெளியே சூடான காபி, பஜ்ஜி எந்த கடையில் கிடைக்கும் என்பது வரை சொல்லியிருந்தான். சரீனாவும் திவ்யாவுடன் நட்பாக பழகினாள்.
திவ்யா இரண்டு மணி நேரத்தில் அந்த மொத்த டாகுமெண்டேஷனையும் ஒரு தடவை வாசித்திருந்தாள். ஓரளவிற்கு இந்த ப்ராஜெட்டில் என்ன வேலை நடக்கிறது என்பது புரிபட்டது. அவ்வப்போது சிவதானுவிடமும், சரீனாவிடமும் கேள்விகள் கேட்டு தன்னை தெளிவுபடுத்திக் கொண்டாள்.
அதுவும் போக மாலையில், ஒரு மணி நேரம் அவளுக்காக செலவிட்ட டீம் லீடர் குமரேசன், அவளுக்கு இந்த ப்ராஜெக்டை முழுவதுமாக விளக்கினார். இடையிடையில் அவளுக்குத் தோன்றிய ஐயங்களைப் பொறுமையாக களைந்தார். கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிய பாங்கும், டீமின் மற்றவர்கள் அவரிடம் சினேகமாக சிரித்துப் பேசுவது பார்க்கையில், திவ்யாவிற்கு திருப்தி உண்டாயிற்று.
‘குமரேசன் சார், ஒரு நல்ல டீம் லீடரா இருக்கார். எல்லார் கிட்டையும் பொலைட்டா பேசறார். அதே நேரம் தட்டிக்கொடுத்து வேலை வாங்கிடறார். ‘நான்’ங்கற அதிகார தொனி எங்கையுமே இல்ல. அதுவுமில்லாம, அவர் முகத்துக்கு முன்னாடி சிரிச்சு பேசின யாருமே அவர் போனதுக்கு அப்பறம் அவரை பத்தி குறையா பேசலை. ஏன் முகம் கூட சுளிக்கலை. சோ, ஹி மஸ்ட் பீ எ குட் பர்சன்.’ என குமரேசன் பற்றிய நல்ல அபிப்பிராயம் உண்டாயிற்று திவ்யாவிற்கு.
முதல் தினம் இனிமையாக கழிந்திருக்க, வேலை மும்மரத்தில் சில மணி நேரம் பரணியைப் பற்றி கூட மறந்துவிட்டிருந்தாள் திவ்யா. தினேஷிடம் இரவில் பேசிய போது தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாள்.
“முன்னாடி வேலை பார்த்த கம்பெனி டி.எல் சுந்தரேசன் பத்தி உங்கிட்ட நான் புலம்பாத நாள் இல்லை. சரியான ஜாதி வெறி புடிச்சவன், அவன் ஆளுங்கன்னா மட்டும் தலையில தூக்கி வச்சுகிட்டு ஆடறதும், மத்தங்கவளை செகண்ட் க்ரேட் சிட்டிசன்ஸ் மாதிரி நடத்தறதும்னு எல்லாரையும் டார்சர் பண்ணுவான். ஒருத்தன் கூட அந்தாளைப் பத்தி நல்லவிதமா ஒரு வார்த்தை சொன்னதில்ல தினு. இந்த புது டி.எல் ரொம்ப நல்ல டைப்பா தெரியறார்டா. கிண்டல் பண்ணி தட்டி குடுத்து வேலை வாங்கறார்.”
“நிறுத்து, நிறுத்து, கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ. விட்டா உன் புது கம்பெனி டீ.எல்க்கு கோவில் கட்டி, நீயே பூசாரியா உட்கார்ந்துக்குவ போல இருக்கு. அப்படி புகழற. அதும் முதல் நாளே!”
“ஒருத்தர் நல்லவரா இல்லையான்னு அவர் பேசி பழகற முறையில இருந்தே தெரியாதா? தன்மையா பேசறார். லீவ் போடறவங்க உண்மையான ஜெனியூன் ரீசன் சொல்லி லீவ் கேட்கறாங்க. ஆல்ரெடி செத்து போன பாட்டிய, 100வது முறையா சீரியஸாக்கி லீவ் கேட்கலை. இதெல்லாம் வச்சு தான் சொல்லறேன்” என்று படபடக்க,
“சரிடீ, சரிடீ. கம்பர்டபுளான சூழ்நிலை இருந்தாலே நீ சூப்பரா வேலை பார்ப்ப. சரி, பரணி அண்ணா பத்தி ஒரு நியூஸும் வாசிக்க காணோம். என்னாச்சு குமரேசன் மேல இருந்த க்ரஷ்ல பரணிய மறந்துட்டியா?”
“அடிங்க! எரும! குமரேசன் சாருக்கு கல்யாணம் ஆகிடுச்சுடா. ஒரு குட்டி பாப்பா இருக்கு!”
“போன ஒரே நாள்ல ஆல் டீடெயில்ஸ் கலெக்டடா? அப்போ குமரேசன் ஹல்க் கை தான் போல. இவ்வளோ ஆர்வமா பேக்கிரவுண்ட் ஃவெரிஃபிகேஷன்லாம் நடத்தியிருக்கியே!” என்று தினேஷ் கிண்டலடித்தான்.
“ஃபோன்ல கொலை பண்ண முடியாதுன்னு தைரியத்தில பேசறல எரும! வீக்கெண்ட் உன்னை பார்க்க வர்றப்போ இருக்கு உனக்கு. என் கூட அவர் பேசிட்டு இருந்தப்போ வீட்டில இருந்து கால் வந்துச்சு, ‘வந்துட்டேன்டா, அப்பா இதோ இப்ப கிளம்பிடுவேன்னு’ சொன்னாரு. அதை வச்சு சொன்னேன்.”
“சரி, நம்ம புது பேஷண்ட் குமரேசனை ஆபரேஷன் டேபிள்ல இருந்து இறக்கி வெளிய வீசிட்டு, பழைய பேஷண்ட் பரணிதரனை அட்மிட் பண்ணுவோம். சரி சொல்லு, பரணி அண்ணா பத்தி என்ன நியூஸ்?” என்றான் தினேஷ் தடியன் ஆர்வமாக.
“டே, நீ சொன்ன மாதிரி தான் நடந்துச்சு. அவன் எந்த டீம்னுலாம் தெரியலை. ஆபீஸ் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் க்ரூப்ல பார்த்தேன் ஆஃப்லைன் காட்டுச்சு. மே பீ, யூ.எஸ் டைம்கறதால நைட் தான் லாகின் பண்ணுவானா இருக்கும். சோ, பரணி பத்தி சொல்லிக்கற மாதிரி எந்த நியூஸும் இல்லடா” என்று கூறியவள், இன்னமும் சிறிது நேரம் பேசிவிட்டு கைப்பேசியை அணைத்தாள்.
தினேஷிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவள் அக்கா செளமியாவிடமிருந்து அழைப்பு வந்தது. “என்னடீ. ரொம்ப நேரமா செகண்ட் லைன் போயிட்டே இருக்கு? யார்கிட்ட மொக்க போட்டுட்டு இருந்த?” என்று எடுத்ததுமே கேள்வியாகத் தான் துவங்கினாள் செளமியா.
“தினேஷ்ட பேசிட்டு இருந்தேன்கா. நீ என்ன பண்ணற? நைட் டின்னர் ஆச்சா?”
“ம்ம். முடிஞ்சு. தம்பி தூங்கிட்டு இருக்கான். அத்தான் அவன் கூட இருக்கார். சரி, நான் சொன்ன விஷயம் பத்தி அப்பாகிட்ட பேசினியா? என்ன முடிவுலடீ இருக்காரு?” என்று செளமி அவள் காரியமே கண்ணாக வினவினாள்.
error: Content is protected !!