Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

24.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 24

.

 



Advertisement

பழைய முகங்களோடு புது முகங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு கல்லூரி அந்தக் கல்வி ஆண்டிற்குள் அடி எடுத்து வைத்தது. ‘ஃபிலிம் ஆர்ட் அண்ட் ஃபில்ம் மேக்கிங்’ எனும் முதுநிலை பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டில் கௌதமன் கால் பதித்திருக்கிறான்.   

“அடுத்து என்ன செய்யறதா உத்தேசம் கௌதமா?” என்ற அப்பாவின் நச்சரிப்போ, இல்லை மகளுக்கு விபரம் தெரியும் முன் எதிலாவது கால் பதிக்க வேண்டும் என்பதாலோ… ஏதோ ஒன்று கௌதமனை உந்தி தள்ள, “உங்க கூட நம்ம பிசினஸ்ச பாக்கிறேன்” என்றான். வருமானம் ஈட்டித்தரும் கட்டிடங்கள் சில இருக்க, அதைத் திறமைசாலிகளைக் கொண்டு பார்த்தால் போதுமே. அதை, தான் பார்த்துக்கொள்ளும் போது மகன் எதற்கு இதில் என யோசித்தார் தகப்பன். அவனுக்கான பாதையை அவனே தேர்ந்தெடுக்கட்டும் என எண்ணினார்.

Advertisement

Advertisement

 மூன்றரை வருடங்கள் முன்பு வரை ‘பொறுப்பு’ என்ற வார்த்தை கௌதமனின் அகராதியில் இருந்ததில்லை. அதற்கான அவசியமும் இருந்ததில்லை என்பதால் வாழ்விற்கு அவசியமான எதையும் கற்றுக் கொள்ளவும் இல்லை. பல ‘இல்லை’களுக்கு இடையே மகன் படிக்கும் பொழுது படிப்பில் ஆர்வம் காட்டியதும் இல்லை.

“பிரொடியூசர் பையன் நான்… ஃபிலிம் மேக்கிங் பத்தி படிப்பேன்” எனக் கூறியவனை ‘பேசிலர் ஆஃப் ஃபிலிம் ஆர்ட்ஸ்’ (BFA) படிக்க சேர்த்துவிட்டார் வாசுதேவன். நானும் படிக்கிறேன் எனச் சுற்றித் திரிந்தான் கௌதமன். அதில் ஏதேனும் கற்றுக் கொண்டானா என அவனுக்கு மட்டும் தான் தெரியும். அரியர் என எதையும் வைக்கவில்லை என்பது மட்டுமே வைஷாலிக்கு போதுமானதாக இருந்தது அன்று.

Advertisement

இப்பொழுது மகன் பொறுப்பாக இருக்கிறான். தன் எதிர்காலத்தோடு மகளின் எதிர்காலம் பற்றியும் யோசிக்கிறான். அதனால் தொழிற்கல்வி ஏதேனும் படித்து தனக்கென ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொள்ளும் யுக்தியை கற்றுக் கொள்ளட்டும் என வாசுதேவன் யோசித்தார். “என்ன வேணும்ன்னு முடிவு பண்ணி, உனக்குன்னு ஒரு தொழில ஏற்படுத்திக்கோ. இப்போ அதுக்கு சம்பந்தமா படி…” என்றுவிட்டார் வாசுதேவன்.

என்ன யோசித்தும் கௌதமனுக்கு ஒன்றும் புலப்படவில்லை. அப்படி எல்லாம் கனவு என்று ஒன்றும் இல்லையே. வாழ வேண்டும்… ரசித்து வாழ்க்கையை வாழ வேண்டும். அவ்வளவே. அதற்கு, பணம் அவசியம். அதுதான் கணக்கில்லாமல் இருக்கிறதே. போதாத குறைக்குக் கட்டிடங்களிலிருந்து வருமானம் வருகிறது. அதை அப்பா கவனித்துக் கொள்கிறார். இதில் நான் என்ன செய்ய? என்ற எண்ணத்தோடு சுற்றித் திரிந்தவனிடம் திடீர் எனப் பொறுப்புகளைப் பற்றிப் பேசினால்… அவனும் என்ன செய்வான்?

படித்தது, கலைத்துறை படிப்பு. விரும்பி படித்தானோ இல்லையோ, அவனுக்கு அது எளிதில் வந்தது. ஏன் அதை மெருகேற்றக் கூடாது என நினைத்தவன், “ஃபைன் ஆட்ஸ்ல மாஸ்டர்ஸ் பண்றேன் பா” என்றான்.

 வைஷாலிக்கு மகன் திரைத்துறையில் நுழைவதில் விருப்பம் இல்லை. மது, மாது, புகழ்ச்சி என்னும் வஸ்துக்கள் ஒருவனை என்னவெல்லாம் செய்யும் என்பதைப் பார்த்தவர் ஆகிற்றே. அது மகனுக்கு வேண்டாம் என்றார். வாசுதேவன் அவனுக்கு எது விருப்பமோ அதைச் செய்யட்டும், நான் வழிகாட்டி மட்டுமே என ஒதுங்கி நின்றார். அவன் விருப்பத்திற்கு ஏற்ற படிப்புகளைக் கொண்ட நல்ல கல்லூரிகள் வடக்கில் இருக்க, மகளை பிரிவதில் கௌதமனுக்கு உடன்பாடில்லை.

“சவுத்த பொருத்த வர, ஃபிளிம் டெக்னாலிஜிக்கு களஞ்சியம் நல்லா இருக்கே கௌதமா… பாக்கலாமா?” என மகனுக்கு வழிகாட்டியாக நின்று கௌதமனை அதில் சேர்த்தும் விட்டார் வாசுதேவன். இதோ… முதல் வருடத்தை நல்ல விதமாகவே முடித்து அடுத்த வருடத்திற்குள் நுழைந்தும் விட்டான்.

ஒரு மாதமாகவே இவர்கள் கால்பந்து அணி கல்லூரிக்கு வந்து சென்று கொண்டிருந்தாலும், இன்று தான் விடுப்பு முடிந்து முதுநிலைக்குக் கல்லூரி திறக்கிறது.

விடுப்பில் இருந்த இந்த சில மாதங்களில், சென்ற வருடத்தில் ஏற்படாத மாற்றம் ஒன்றும் புதிதாக அந்தக் கல்லூரியில் ஏற்படவில்லை என்றாலும் இந்த புதிய வருடம் மாணவர்களுக்குப் பல மாற்றங்களைத் தாங்கி நின்றது. கௌதமனுக்கு மாற்றம் என்றால், இந்த வருடம் விக்ரம் அவனோடு இல்லை என்பதே. மாஸ்டர்ஸ் முடித்தவனை கையோடு தொழிலில் அமர்த்திக் கொண்டார் அவனின் அன்னை.

“டேய் மச்சான்” என்ற சத்தம் வந்த திசையைப் பார்க்க அவனோடு சென்ற வருடம் கால்பந்து அணியில் இருந்த மைக்கேல் கையசைத்தவாறு வந்து கொண்டிருந்தான். கோபக்காரன், முரடன் என்றாலும் அவனோடு விளையாடுவது சவாலான விஷயம் என்பதால் கல்லூரியில் பிரபலம் மைக்கேல்.

“என்ன டா யூரோப் டிரிப் எப்படி இருந்துது?”

“செம்மையா இருந்துது மச்சான். அத விடு… இந்த வருஷ டீம் செலக்ஷன் டேட் கொடுத்தாச்சா?”

மைக்கேலும் கௌதமனும் ஒன்றாய் நடந்து செல்வதைப் பார்த்த இளநிலை இரண்டாம் ஆண்டு, “சீனியர்… இந்தப் பக்கம் வாங்க” என ஆசையோடு கூப்பிட, அங்கு ஒரு ரசிகர் கூட்டமே கூடியது.

அதே கடிகார டவர், அதன் அடியில் அதே கூட்டம், கூட்டத்திடம் அதே கலகலப்பு என எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாது மூன்று நாட்கள் கடந்தன. எப்பொழுதும் போல் அங்கும் இங்குமாக வானரங்களாய் தொத்திக் கொண்டு இளநிலை இரண்டாம் ஆண்டு வாண்டுகளின் சேட்டைகளைக் கண்டும் காணாததுமாகக் கதையடித்துக் கொண்டிருந்தனர்.

“என்ன டா சுரேஷ்… முகமே சரி இல்ல?” எனக் கௌதமன் கேட்கவும், “அந்த, பாட்டனி தேர்டு இயர்… கோக்கி பொண்ணுக்கிட்ட நம்ம பையன் லவ் சொல்லி நல்லா வாங்கி கட்டிகிட்டான் டா” என இடைப் புகுந்தான் மற்றவன்.

“ச்சை தூ… அதுகிட்ட ஏன் டா? ஏன் டா உனக்கு எல்லாம் ஒரு தாராதரம் இல்ல? மூணு வருஷத்துல அவளுக்கு நாலு பிரேக் அப் ஆகி இருக்கு… நீ என்ன அஜ்சாவதா போக ஆசையா இருக்கா?” தோழன் தலையைத் தட்டிக்கொண்டே திரும்பியவன் பார்வையில் விழுந்தாள் அவனைப் பதம் பார்த்த பச்சை மிளகாய். சில தினங்கள் முன்பு அவளால் எரிந்த கன்னத்தை மெல்ல வருடியது இடக்கை.

“காதலுக்கு கண்ணு இல்ல டா மச்சான்” என்றான் தோழன்.

“நீ இப்படியே பல்ல காட்டிட்டு அவ பின்னாடி போ… பல்லும் இருக்காது” என்றவனின் கவனம் இடம் மாறி நிமிடம் கடந்திருந்தது. கவனத்தை ஈர்த்தவள் இவனைக் கவனிக்காது கைப்பேசியை நோண்டிக் கொண்டே இவனைக் கடந்து சென்று கொண்டிருந்தாள். இன்று தான் முதல் முறை பார்க்கிறான் அவளை இங்கு.

கௌதமன் பார்வையைத் தொடர்ந்த மைக்கேலும் யசோதாவைப் பார்த்தான். “நல்லா இருக்கா இல்ல?” எனக் கௌதமனை பார்த்து கண் சிமிட்ட, “ச்சை… வேலய பாருடா” எனத் தனக்கு அந்தப் பேச்சில் உடன்பாடில்லை எனக் காட்டினான் கௌதமன்.

“அவ யாரு டிப்பார்மென்ட் டா?” என்று கேட்ட மைக்கேலுக்கு, “தெரியல மச்சான். ஃபர்ஸ்ட் இயரா இருக்கும் போல… இன்னைக்குத் தான் கேம்பஸ்ல பாக்கிறேன்” என ஒருவன் ஆரம்பிக்க, “கூப்பிடுவோமா… நேரம் போகும்” என்றான் மைக்கேல்.

“டேய்… தேவ இல்லாத வேல இது” எனத் தன் எதிர்ப்பைக் காட்டினான் கௌதமன், அவளை இவர்கள் நிற்க வைத்து கேள்வி கேட்கப் போவதைப் பிடிக்காதவனாய்.

“ஸாரி எல்லாம் கட்டிட்டு வந்திருக்கா. முகமும் பயந்த சுபாவமா தெரியுது, ஏதாவது பட்டிக்காடா இருக்க போகுது. ரெண்டாவது கேள்விக்கே அழுதிடுவா… வேண்டாடா… பாவம்” என்றான் ஒருவன்.

“ஆமாமா அவ ரொம்ப பாவம் தான்… நீ பாத்த” எனக் கௌதமன் முடிக்கும் முன், மைக்கேல், “ஹலோ மிஸ் பட்டிக்காடு கம் ஹியர்,” என்றான் அவளைப் பார்த்து. ‘இது தேவையா?’ என நடப்பதைப் பார்த்த கௌதமன், தனக்கும் நடப்பதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் அமைதியாக அமர்ந்தான். ஏனோ அவளிடம் வழக்காட பிடிக்கவில்லை. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதைக் கடைப்பிடிக்க முடிவெடுத்தான். அங்கு இருக்கும் மரம், புல், கட்டிடம் போல் அவளும் அவன் கண்களுக்குத் தெரிந்தாள் போலும், அப்படித் தான் அவளைப் பார்த்து வைத்தான்.

சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவளின் பார்வையில் விழுந்தான் கௌதமன். அவனைப் பார்த்த கண்கள் வெறுப்பைக் கக்கினாலும் அது நொடி நேரமே.   ‘ஏறிடுச்சு லூசு வேதாளம் முருங்கை மரத்துல’ என நினைத்தவன், கையில் இருந்த கைப்பேசியை ஆராய ஆரம்பித்தான்.

கௌதமன் தன் வேலையைப் பார்க்க, யசோதரா விட்ட நடையைத் தொடர ஆரம்பித்தாள். அவள் நிற்காமல் நடக்கவும் ஈகோ எட்டிப் பார்த்தது மைக்கேலிடம். “ஓய் உன்ன தான். சூப்பர் சீனியர் கூப்பிட்டா வர மாட்டியா? இங்க வா” என்றவன் தங்களைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தவளின் பாதையை மறைத்து “அந்தப் பக்கம் போ” என அவர்கள் கூட்டம் இருந்த இடத்தைக் காட்டினான்.

அவன் காட்டிய இடம் நோக்கி வந்தவளின் நடையில் தயக்கமோ பயமோ இல்லை. கௌதமனின் பார்வை உயர்ந்தது. நிமிர்வோடு முன் வந்து காட்டிய இடத்தில் நின்றவள் ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்தி, கௌதமனிடம் நயன மொழி பேசினாள்.

அழைத்தது தான்… இவளோ தன்னை மதிக்காது கௌதமனிடம் சென்று நிற்கிறாள் என்ற எண்ணம் எழவும் மைக்கேலின் சீற்றத்தை அவளின் துணிவு கிளறிவிட்டது.

“திமிர பாரேன் இவளுக்கு. ஒரு சீனியர் பேசறேன் ‘என்ன’ன்னு தெனாவட்டா நிக்கிறா! டேய் இவ கைல வேப்பில கொடுங்கடா சரியா இருக்கும். ஆளும் அவ பார்வையும்!” என்ற மைக்கேலின் பார்வையில் நக்கல் வழிந்தோடியது.  

  மைக்கேலின் பேச்சு கௌதமனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவளையும் பிடிக்கவில்லையே. அதனால் என்னவோ செய் என ஒதுங்கியே அமர்ந்திருந்தான்.

சலிப்பைத் தத்தெடுத்த அவளின் முகம், ‘என்ன இப்போ’ என்றது கௌதமனுக்கு அப்பட்டமாக விளங்கியது. ‘தூங்கு பேபி’ என்றால், ‘நோ அப்பா’ என இவனிடம் மகளும் இப்படித் தானே சலிப்பாள். ‘ஆளும் அவளும்’ நினைத்தவனுக்குள் எழுந்த புன்னகை உள்ளுக்குள் புதைந்தே இருந்தது. ‘வேதாளத்த பார்க்காத’ என மனம் கூறியதை கடைப்பிடித்தவன் பார்வை மீண்டும் கைப்பேசியில் பதிந்தது.

“ஏய் உன்ன தான்” என்ற மைக்கேலை பார்த்தாள். ‘காலங்காத்தால இவன் வேற…’ பார்வையில் எரிச்சல் மண்டி கிடந்தது. ‘அங்க எல்லாம் நான் வரல’ என அவள் எவ்வளவு கூறியும் விசாகன் வம்படியாக வரவைத்திருக்கிறார் அவளை. ‘இதில் இவன் வேறு’ என்ற சலிப்பு அவளிடம்.

சீனியர்கள் மிரட்டுவதும், பின் அவர்களே தோழர்களாக மாறுவதும் இவள் பார்த்தது தானே. இதை எல்லாம் ரசித்த கல்லூரிக் காலங்கள் என ஒன்றிருந்தது. ஆனால் இப்பொழுது ரசனை என எதுவும் இல்லை. அப்பா, புல்லாங்குழல், ஆத்விக், அவன் குடும்பம், ஏழு ஸ்வரங்கள் அவ்வளவே அவள் வாழ்க்கை. விருப்பு வெறுப்பு என எதையும் நினைக்காதவளுக்குச் சில தினங்கள் முன்பு கோபமும் எட்டிப்பார்த்தது. இன்று புதிதாக எரிச்சலும் வெறுப்பும் கொசுறாய் ஒட்டிக் கொள்வதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

தன்னை பார்த்து பயமில்லையா இவளுக்கு?  நிற்பவளிடம் மைக்கேலுக்கு வீம்பு எழுந்தது. இரண்டாம் ஆண்டு கத்து குட்டிகள் மட்டுமே இப்படி ரேகிங் என்ற பெயரில் காமெடி செய்வார்கள். பீஜீ மாணவர்கள் மேல் மற்றவர்களுக்குத் தன்போல் ஒரு மரியாதை உண்டு. அதுவும் மைக்கேல், கௌதமன் எல்லாம்… இந்த வம்பை எல்லாம் விலகி நின்றே ரசிக்கும் கூட்டம். பெண்களை ரசிக்க மட்டுமே பிறவி எடுத்த மைக்கேல் இப்படிப் பெண் பிள்ளைகளை வம்பிழுத்ததே இல்லை. மைக்கேலை சுற்றி நின்ற நண்பர் கூட்டம் நடப்பதை ஆர்வமாகவும் அதிசயமாகவும் பார்த்து நின்றது.

 வாட்டம் சாட்டமான வாலிபனைச் சளைக்காமல் நேருக்கு நேர் பார்த்து நின்றவளைப் பார்த்து நின்ற அந்தக் கூட்டத்திற்கே அதிசயம் தான். கூடியிருந்த நண்பர்களில் பலரும் அவனோடு கூடைப்பந்து, வாலி பால், கால் பந்து எனக் கல்லூரி அணிக்காக விளையாடுபவர்கள். அனைவருமே நல்ல உயரம். ஒற்றை பெண்ணாய் பதினைந்து நெடுநெடுவென வளர்ந்த ஆண்களுக்கு நடுவே நிற்கும் வேளை சின்னதாகவேனும் உதறல் எடுக்க வேண்டாமா? ம்ஹூம்… அப்படி என்றால் என்னவென்று கேட்பாள் போலும். இது அவள் விசாகன் மாமாவின் கல்லூரி என இவர்களிடம் யார் கூறுவது?

மைக்கேலிடமிருந்த அவளின் பார்வை மெல்ல அவன் அருகில் யாருக்கு வந்த விருந்தோ என சிமென்ட் பென்ச்சில் அமர்ந்திருந்த கௌதமன் மீது படிந்து நின்றது. ‘இவன் சொல்லித் தானே கூப்பிட்டிருப்பானுங்க. இப்போ என்னவோ அமைதிக்கே பிறந்த நல்லவன் மாதிரி எதுக்கு இந்த சீனாம்?’ என எண்ணியவளின் பார்வை கௌதமனை அளவிட்டுக் கொண்டிருக்க, மைக்கேல் கடுப்போடு பேசிய எதுவும் அவள் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

 “என்ன டா மைக்கி உனக்கே டஃப் கொடுப்பா போல?” ஒருவன் சிரிக்க, மைக்கேலிற்கு சிரிப்பெல்லாம் வரவில்லை. எதிரில் எந்த உணர்வுமே இல்லாது, கௌதமனை மட்டுமே பார்த்து நிற்பவளைக் கையாள தெரியாது அவன் பங்கிற்கு முறைத்தான்.

“நம்ம கௌதமன் மட்டும் தான் பாக்கிற மாதிரி இருக்கான் போல. அவன விட்டுக் கண்ண எடுக்காம பப்ளிக்கா என்னமா சைட் அடிக்கிறா பாரேன்” என ஒருவன் சிரிக்க, அனைவரிடமும் நக்கல் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

“இதுவா டா உங்க ஊர்ல சைட் அடிக்கிறது? எனக்கு அவ முறைக்கிற மாதிரி இல்ல தோணுது”

 “எனக்கு என்னமோ இவங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே ஏதோ டீலிங் இருக்கும்ன்னு தோணுது. நீ என்ன டா சொல்ற மைக்கேலு?”

ஆளாளுக்கு வாய்க்கு வந்ததெல்லாம் பேச, அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை கௌதமனால். போட்டிருந்த கருப்பு கண்ணாடியைக் கழட்டிய கௌதமன், அமர்ந்த வாக்கில் அவள் கேட்ட அதே கேள்வியை அவள் பாணியில் ‘என்ன?’ என்றான். அந்தச் சாம்பல் நிற விழிகள் அவளை உற்றுப் பார்த்தன. இவள் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை.

சுற்றி இருந்தவர்களின் கேலிப் பேச்சும் சிரிப்பும் நிற்காது தொடர, எரிச்சல் எட்டிப்பார்த்தது கௌதமனுக்கு. இவன் அழைத்து அவள் வரவில்லை. இவன் அவளை மண்ணென்றும் மதிக்கவில்லை. ஆனால் ஏதோ தேசியக் குற்றம் புரிந்தவன் போல் அவனை அவள் பார்க்கும் பார்வையை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

எழுந்து பெண்ணின் அருகில் வந்தவன், “அன்னைக்கு நான் உன்ன இப்படி பார்த்ததுக்கு நீ கொடுத்தத, இப்போ நான் உனக்குத் திருப்பி தரட்டா? வட்டியும் முதலுமா?” என்றான் பற்றகள் நரநரக்க.

அன்றைய இரவை நினைத்த மாத்திரத்தில் அவள் முகத்தில் அத்தனை அருவருப்பு. பார்க்க மட்டுமா செய்தான்? பொறுக்கி… என அன்றுபோலவே மனம் ஆத்திரத்தில் அலறியது. அதை முகம் அப்பட்டமாகக் காட்டியது. இந்த முகம் பாவத்தை அவன் மட்டுமா பார்க்கிறான்? சுற்றி இருப்பவர்கள் இவனை என்ன நினைப்பார்கள்? அவள் ஏதேனும் கூறியிருந்தால் கூட இவ்வளவு அசிங்கமாக உணர்ந்திருக்க மாட்டான் கௌதமன். முன்பிருந்த கௌதமன் தட்டிவிட்டுச் சென்றிருப்பான். ஆனால், மாறிக் கொண்டிருக்கும் கௌதமனுக்கு மரியாதை முக்கியமான ஒன்று. ஒழுக்கம் கெட்டவனைப் பார்ப்பது போல் பார்க்கும் இந்தப் பார்வையை அவனால் சகிக்க முடியவில்லை.

‘கூல் டா கௌதமா’ எனத் தன்னை சமாதானம் செய்தவன், நக்கல் பார்வையோடு, “உன்ன பாத்து மயங்கி ஜொள்ளு விடுற ஆளு நானும் இல்ல… அந்த அளவுக்கு எல்லாம் நீ பேரழகியும் இல்ல. கண் இருக்குன்னு முறைச்சுட்டே அலையாத. கொழு கொழுன்னு உடம்பு பூரா கொலஸ்ட்ராலோட சுத்துற உன்ன பாக்கிற அளவுக்கு என் தகுதி இன்னும் குறையல போடி,” என்றான் அவளை மேல் இருந்து கீழ் பார்த்தவன்.

‘முழுங்கற மாதிரி பார்த்துட்டு… வாய் கூசாம பேசற மூஞ்சிய பாரு’ நினைத்ததைக் கண்களில் காட்டி, கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டி ‘பேசு டா’ என நின்று கொண்டவளின் கண்களில் அத்தனை கேலி.

‘உனக்கு நிஜமாவே கொழுப்பு தான் டி’ என்ற எண்ணம் வராமலில்லை அவனுக்கு. அவனைப் பார்வையாலேயே உசுப்பேற்றும் அவளைக் கண்டாலே எரிகிறது தான்…  அவளிடம் பேசப் பிடிக்கவில்லை தான்…  தள்ளிப் போகத்தான் நினைக்கிறான். ஆனாலும்… பார்த்திட வேண்டும், அன்று அவன் உணர்ந்த அவமானத்தை அவள் கண்களில் பார்த்திட வேண்டும், என்ற வேகம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

“ம்ம்ம்… ரேகிங்! என்னையே இவ்வளவு ஆசையா பாக்கிற உன்ன என்ன பண்ண சொல்றது?” எனத் தாடையை நீவி பார்த்தவனுக்கு அவளை எப்படியேனும் காயப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

“பாடச் சொல்லலாம்… இல்ல ஆடச் சொல்லலாம். ஆனா அந்த கன்றாவிய யார் பாக்கிறது? வேற என்ன செய்யலாம்? உன் வாழ்க்கையில என்னையும், இந்த நாளையும் மறக்கவே கூடாத மாதிரி செய்யணும்… என்ன செய்யலாம்?” எனத் தீவிரமாகப் பெண்ணை அளவெடுத்தவனின் காதில், “கௌதமா வேண்டாம் டா. போறா விடு, சின்ன பொண்ணு” என்ற நண்பனின் பேச்சு விழவில்லை.

முறைத்து நின்றவள் அவன் எரிச்சலைக் கூட்ட, “நீ என்ன பெரிய இவளா, வளந்து நிக்கிற ஆம்பிள மேல சட்டுன்னு கை நீட்டற? இந்த கை தானே…” என மார்பிற்குக் குறுக்காக இருந்த கையை பார்த்துக் கொண்டே, “அடிக்கிற கை அணைக்குமாமே… உண்மையாக்கிடுவோமா?” எனக் கேட்டுச் சிரித்தவன், “ஆனா பாரு, நீ என்னை தொட்டா, நான் என்னைக் கழுவக் கங்கையைத் தான் தேடி போகணும்” என்றான் கேலி கொப்பளிக்க.

இருவரையும் மாறி மாறி பார்த்த கூட்டத்திற்கு ஒன்றும் புரியவில்லை. “மேனேஜ்மென்ட்டுக்கு விஷயம் போச்சு… நம்ம கதை முடிஞ்சுது டா மைக்கி” என ஒருவன் மைக்கேலின் காதை கடித்தான். மைக்கேலிற்கு ஏன் இவளை அழைத்தோம் எனத் தோன்ற ஆரம்பித்து நிமிடங்கள் கடந்திருந்தது. பெண் இப்படிக் கூர்மையான பார்வையோடு பாய நிற்பாள் என அவன் எண்ணவில்லை. விளையாடிப் பார்க்க நினைத்தவனுக்கு வினையை வேட்டிக்குள் விட்ட உணர்வு. அவனுக்குத் தெரிந்த கௌதமனும் இப்படிப் பெண்களிடம் வம்பிற்குச் செல்ல மாட்டான். விழி பிதுங்கி நின்றான் மைக்கேல்.

பேச்சு வரம்பு மீறுவதை உணர்ந்தவளுக்கு அங்கிருந்து ஓடிவிட முடியாதா எனத் தோன்றிய போதும் அசையாது நின்றிருந்தாள். இப்படியான பார்வை, கேலிப் பேச்சு எல்லாம் முற்றிலும் புதிது அந்தக் கூண்டு பறவைக்கு. தைரியம் போல் காட்டினாலும் நிற்கத் திராணி இல்லை. அன்பான வட்டத்தின் நடுவில் வளர்ந்தவள். இன்றும் அவளைச் சுற்றி இருப்பவர்கள் அவளை அன்போடு நேசிப்பவர்கள். இல்லாமலா எந்தத் தகுதியுமே இல்லாத தன்னை “நீ காலேஜ் வா டாமா” என அன்போடு விசாகன் அழைத்திருப்பார்?

அவள் அமைதி காக்க, அது அவனை மேலும் மேலும் உசுப்பேற்றியது. “ஆமா… உன் பேரென்ன?” என்ற கௌதமன், யசோவை இன்னும் நெருங்கியிருந்தான்.

“உன்ன பாக்க பாக்க… என்னவோ பண்ணுது டி. உன் பார்வையும் நீயும்… ப்ச்… என்னை ஏதோ செய்யற உன்ன அப்பிடியே…” அவள் காதருகில் குனிந்தவன், கிசுகிசுப்பாக, “நீ தான் சொல்லேன். உன்ன என்ன பண்ணினா உன் கொழுப்பு குறையும்ன்னு. ஏன்னா… நானே யோசிச்சு உன்ன அடக்கினேன்னா அத நீ தாங்க மாட்ட…” என அவன் மிரட்டலாக வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, அவன் மிரட்டும் தோரணைக்கு அவளின் முகபாவனை மாறியது.

‘உன்ன மாதிரி ஒரு பொறுக்கியால வேற என்ன யோசிக்க முடியும்?’ என்ற பார்வையில், இளக்காரமும் பெண்ணவள் இதழரோரம் வந்து ஒட்டிக்கொண்ட கேலி புன்னகையும், அவனை டென்ஷன் செய்தது. எதற்குமே அசையாது நிற்பவளை என்னதான் செய்வது? கௌதமனுக்கு ஆத்திரம் அலை மோதியது. தான் என்ன செய்துவிட்டதால் இந்தப் பார்வை பார்க்கிறாள் இவள்? ஏதோ இருமுறை பார்த்தான்… அதற்காக, ஈனப் பிறவியை பார்ப்பது போல் பார்பாளாமா? போடி எனத் தள்ளி செல்ல நினைத்தாலும்… அவள் பார்வை அவனை நகரவிடவில்லை.

“ஏய்… என்ன தான் டி உன் பிரச்சன? என்னை பார்த்தா எப்பிடி இருக்கு உனக்கு?” என அவன் முடிக்கவும், அவள் பார்வையின் தீட்சணியம் அவனை இன்னும் அதிகமாகவே உசுப்பேற்றியது.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!