Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பூவிடைப் பனித்துளிகள்

poovidai panithuligal 13 by Aruna Kathir

பூவிடைப் பனித்துளிகள்

அத்தியாயம் 13

“இன்னும் இல்லக்கா. பேசணும். கொஞ்சம் வேலைல டென்ஷன்கா?” என்று சமாளித்தாள் திவ்யா.



Advertisement

“ஓ. ஏன் என்னாச்சு? டி.எல் கூட ஏதோ பிரச்சனைன்னு சொல்லிட்டே இருப்ப? அதே குடைச்சலா?” என்று சற்றே சுரத்தில்லாமல் கேட்டாள் செளமி. எங்கே திரும்பத் திரும்ப அவள் பிரச்சனையைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தால், திவ்யா டென்ஷனாகி விடுவாளோ என்ற சுணக்கம் கேள்வியில் தொனித்தது.

“ஆமா, வேற ஒரு கம்பெனில இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணியிருக்கேன். கிடைச்சா மாறிடுவேன்” என்று தான் புது கம்பெனியில் சேர்ந்துவிட்டிருந்த செய்தியை மறைத்து, இனி தான் சேரவிருப்பது போலவே மொழிந்தாள் திவ்யா.

வீட்டில் தந்தை, தாயிடமும் இதே கதை தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் வீட்டினருக்கு, இரண்டு மாதங்களாக திவ்யா வேலைக்குச் செல்வதில்லை என்ற உண்மை நிலவரம் தெரியாது. சில தினங்கள் கழித்து, புது கம்பெனியில் சேர்ந்துவிட்டேன் என்று சொல்லிவிட வசதியாக இருக்கும்.

Advertisement

“ஓ. சரி, சரி. இண்டர்வியூ எப்படி பண்ணியிருக்க? செலக்ட் ஆகிடுவியா?” என மீண்டும் சம்பிரதாயமான விசாரிப்பு.

Advertisement

“ம்ம், பண்ணியிருக்கேன், பார்க்கலாம்.”

“சரிடீ. நீ டைம் கிடைக்கறப்போ, அப்பாகிட்ட அவர் மூட் பார்த்து பேசு. நானே கேட்ருவேன் தான், ஆனா, என்ன சொல்லுவாரோன்னு பயமா இருக்குடீ.”

“அக்கா, நான் சொல்லறேனேன்னு தப்பா நினைக்காத! அப்பாகிட்ட இப்போதைக்கு எந்த அமெளண்டும் கையில இருக்கற மாதிரி தெரியலை. இருந்தா நமக்கு செய்யாம யாருக்கு செய்ய போறாரு?”

Advertisement

“இல்லைன்னு உனக்கு எப்படிடீ தெரியும்? என் நிலைமைய நீ கூட புரிஞ்சுக்க மாட்டேங்கற பாரு திவி. நாங்க சென்னையில பார்த்திருக்கற வீட்டுக்கு அட்வான்ஸ் பே பண்ண என் மாமனார் பத்து லட்சம் குடுத்திருக்கார். அதே மாதிரி என் வீட்டில குடுத்தா தானே நமக்கு மரியாதையா இருக்கும்?” என்று செளமி பேசப் பேச, திவ்யாவிற்கு ஆத்திரமான ஆத்திரம்.

“அவங்க பையனுக்கு அவங்க குடுக்கறாங்கன்னு நாமளும் குடுக்கனும் என்ன இருக்குக்கா? அந்த அளவு அப்பாகிட்ட இருந்தா செய்யாம இருப்பாரா சொல்லு?”

“ஏ, திவி, உனக்கு இதெல்லாம் புரியாதுடீ. என் மாமியார் வார்த்தைக்கு வார்த்தை, நாங்க பத்து குடுத்தோம், குடுத்தோம்னு எல்லா சொந்தகாரங்க கிட்டயும் சொல்லிட்டு திரியறாங்க. இதுல என் சின்ன மாமியர், ‘உங்க அப்பா என்ன செய்யறாரு உன் புது வீட்டுக்குன்னு?’ நேராவே கேட்டுட்டாங்க. என்ன பதில் சொல்லறது நான்? கல்யாணம் பண்ணி குடுத்ததோட அவங்க கடமைய முடிச்சுகிட்டாங்க, திரும்ப காசு பணம்லாம் தரமாட்டாங்கன்னு சொல்லிடவா?”

“ஏ, ஏன்க்கா இப்படிலாம் பேசற?”

“பின்ன வேற எப்படி பேச சொல்லு? அவங்க முன்னாடி என் மான மரியாதை தானே போகுது.” என்று சொல்லும்போதே செளமி மூக்கு சிந்த துவங்கிவிட்டிருந்தாள்.

“அப்பா புதுவீட்டுக்கு லட்ச ரூபாய்க்கு சோஃபா வாங்கி குடுக்கற ஐடியால தான் இருக்காருக்கா.”

“அப்படின்னு உங்கப்பா சொன்னாரா? அப்போ நான் கேட்ட மாதிரி பத்து லட்ச ரூபா ரொக்கம் செய்ய மாட்டாரா உங்கப்பா?” என வார்த்தைக்கு வார்த்தை, ‘உங்கப்பா, உங்கப்பா’ என்று செளமி சொல்ல, ‘அவர் எனக்கு மட்டுமில்ல, உனக்கும் அப்பா தான் செளமிக்கா. ஏன் இப்படி யாரோ மாதிரி கேள்வி கேட்கற?’ என்று சொல்லத் தோன்றியது.

இவள் ஏதாவது சொல்லப் போக, செளமி முதலில் இருந்து புலம்பத் துவங்கிவிடுவாள் என்ற பயத்தினால் திவ்யா மெளனம் காத்தாள். செளமிக்கு எப்போதும், தன் தந்தை, திவ்யாவிற்கு செய்யும் அளவிற்குத் தனக்குச் செய்யவில்லை என்றும், திவ்யாவின் மீது தான் அவருக்கு அபரிமிதமான பாசம் என்றும் எண்ணம் உண்டு.

“உன்னை மட்டும் எஞ்சினியரிங் படிக்க வச்சாரு. என்னை வெறும் பி.எஸ்.ஸி தானே சேர்த்து விட்டாரு” என்று அங்கலாய்ப்பு அதிகம் இருக்கும் செளமியாவிற்கு.

“ஏ, நான் நல்லா படிச்சு மெரிட்ல சீட் வாங்கினேன்டீ. அதனால எஞ்சினியரிங் சேர்த்துவிட்டாரு. நீ வாங்கின 700 மார்க்குக்கு பிஎஸ்.ஸி சீட் கூட நீ கேட்ட காலேஜில கிடைக்கல. அப்பா ஐம்பதாயிரம் அதிகமா பணம் கட்டி தான் சீட் வாங்கினாரு.” என்று அப்பொழுது சண்டை போடுவாள்.

அன்றிலிருந்து இப்போது வரையிலும் செளமியின் எண்ணம் மாறவேயில்லை என்று திவ்யாவிற்குத் தெரியும். இத்தனைக்கும் செளமிக்கு செய்யப்பட்ட ஐ.வி.எஃப் சிகிச்சைக்காக மட்டும் வெளியில் பத்து லட்சம் கடன் பட்டிருக்கிறார். அதில்லாமல், “நான்கு வருடங்கள் கழித்து குழந்தை பிறப்பதால், கண்டிப்பா வளைகாப்பு போடணும். இன்னும் குழந்தையில்லையா, இல்லையா என்னைக் கேட்ட அத்தனை பேரையும் அழைச்சு, இந்தா பாருங்க, வளைகாப்புன்னு காட்டணும்” என்று செளமியின் மாமியார் திட்டமாக சொல்லிவிட்டார்.

வளைகாப்பை சிம்பிளாக வீட்டளவில் வைத்துக் கொள்ளவும் செளமி ஒப்புக் கொள்ளவில்லை. “என் மாமியார் 100 பேர்த்தை அழைச்சிருக்காங்க. அத்தனை பேர்த்துக்கு வீட்டில இடமிருக்காது. மண்டபமே பாருங்க” என்று பெரிய செலவாக இழுத்துவிட்டிருந்தாள்.

வளைகாப்புக்கு ஒரு லட்சம், சிசேரியன் செலவுக்கு ஒரு லட்சம், குழந்தையை ஒரு வாரம் வரையிலும் ஐசியூவில் வைத்து அதன் பின்பே கையில் கொடுத்தனர், மருத்துவமனை செலவு ஒரு லட்சம், குழந்தை பிறக்கவும், கழுத்து செயின், மோதிரம், தங்க அரைஞான், கொலுசு எனத் தனியாக இரண்டு லட்சம் என்று செலவானது. இத்தனையும் தந்தையால் செய்ய இயலாத நிலையில், திவ்யா தான், பர்சனல் லோன் போட்டு தந்தைக்கு பணம் எடுத்துக் கொடுத்திருக்கிறாள்.

‘வட்டி மட்டும் 16%. மாசமானா 25 ஆயிரத்துக்கும் மேல நான் இ.எம்.ஐ கட்டணும். இதில புது வீடு வாங்கறேன்னு அப்பாகிட்ட பத்து லட்சம் கேட்கறா. அவரு அங்க இங்க கேட்டு அசிங்கபடுவார். அதைப் பார்க்க பொறுக்காம அம்மா புலம்புவாங்க. எனக்கு மனசு கேட்காம திரும்ப லோன் எக்ஸ்டெண்ட் பண்ணுவேன்’ என்று மருகினாள் திவ்யா.

‘எப்படித்தான் கல்யாணம் ஆனா, இப்படி சுயநலமா மாறிடறாங்களோ தெரியலை. நீ பொறந்து வளர்ந்த வீடு தானே! உன் விட்டு நிலைமை என்னன்னு உனக்கு தெரியாது. உன் மாமியார் கேட்டா, நீ சொல்ல வேண்டியது தானே! ஐ.வி.எஃப்க்கு பத்து லட்சம் செலவாச்சு. அதை எங்கப்பா தானே செஞ்சாரு. அதுக்கும் இதுக்கும் சரியா போச்சுன்னு சொல்ல வேண்டியது தானே! வாய் என்ன சிமெண்ட் போட்டு அப்பி வச்சிருக்கா?’ என பொருமினாள் திவ்யா.

அதுவும் தினேஷிடமும், தன் பள்ளித் தோழியும் பக்கத்து வீட்டு உயிர் நண்பியான பரிமளாவிடமும் தான் இதையெல்லாம் கொட்ட முடிந்தது. தினேஷ் வழக்கம் போல, “திரும்ப லோன்லாம் எடுக்காத! எக்கசக்கமா சிபில் ஸ்கோர் லாக் ஆகும். உனக்குன்னு நாளைக்கு எதுக்காவது லோன் போடணும்னு நீ நினைச்சா கூட அது முடியாம போகும். உன் அப்பா குடுத்தார்னா உங்கக்கவை வாங்கிக்க சொல்லு. நீ நடுவுல போகாத திவி” என்று இவளைப் பாதுகாப்பது ஒன்றே குறி என்னும் தினுசில் பேசினான்.

அவன் அறிவுரைகளைக் கேட்டுவிட்டு அடுத்து பரிமளாவிடம் புலம்பினாள் திவ்யா. பரிமளா என்றுமே திவ்யாவின் கட்சி தான். “நீ நினைக்கறது புரியுதுடீ. உங்க அக்காவா தான் இதுக்கெல்லாம் ஃபுல் ஸ்டாப் வைக்க முடியும். அவளுக்கு, உன்னை மட்டும் நல்லா படிக்கவச்சதால நீ நல்ல வேலையில இருக்கன்னு எண்ணம். அவ படிக்கலை அதனால படிக்கவைக்கலைன்னு புரியலை. விடு.”

“சும்மா என்னையே போய் அப்பாகிட்ட பேச சொல்லறாடீ. இவங்க வீடு வாங்க அப்பா ஏன் பரி காசு குடுக்கணும்?”

“கரெக்ட் தான். அவங்க மாமியார் குடுக்கறாங்கன்னு ஜம்பத்துக்காக, உன் அப்பாவையும் குடுக்க சொல்லறா உன் அக்கா. உன் வீட்டு நிலைமை உன் அக்காவுக்கு தெரியணும்.”

“அவளுக்கு நான் என்னமோ கோடிக்கணக்கில சம்பளம் வாங்கறேன்னு நினைப்புடீ பரி. நான் வாங்கற 45 ஆயிரத்தில, பாதிக்கும் மேல லோன் கட்டறேன். அப்பறம் ஹாஸ்டல் பி.ஜி வாடகை, சாப்பாடு செலவு, ஊருக்கு வந்து போற செலவுன்னு என் கையில மாசக் கடைசில ரெண்டாயிரம் கூட தங்காது. இதான் நிஜம்” என்று புலம்பினாள் திவ்யா.

பரிக்கு அங்கே வீட்டின் நிலவரம் திவ்யா சொல்லித் தான் தெரியவேண்டும் என்றில்லை. திவி சொல்லாமலேயே பரி புரிந்து கொள்வாள்.

“சரி, விடு. உன் அக்கா நிலைமை அங்க என்னவோ? நிமிஷம் நிமிஷம் குத்தி காட்டிட்டே இருந்திருப்பாங்களா இருக்கும். செளமிக்கா மட்டும் என்ன செய்வா? வேற யார்கிட்ட கேட்க முடியும்? படிச்சு முடிக்கவும் கல்யாணம். அப்பறம், நாலு வருஷமா குழந்தை இல்ல இல்லன்னு அதுக்கு மாத்தரை மருந்து ஊசின்னு, செளமியும் பாவம் தான் திவி. நம்ம அப்பா, நம்ம தங்கச்சின்னு உரிமையில தானே கேட்கறா?” என்று திவ்யாவின் மனதை உணர்ந்து கொண்டு பேசுவது போன்ற வார்த்தைகளையே பேசினாள் பரிமளா.

பரிமளாவும் தன் பங்கிற்கு திவ்யாவிற்கு ஆறுதல் சொல்லியவள், “ஏ, அந்த ஆள்ட்ட இன்னைக்கு பேசினியா? புது கம்பெனில அவனை இண்டர்வியூ அன்னைக்கு பார்த்தேன்னு சொன்ன? இன்னைக்கும் கால் பேசினியா?” என்று திவ்யாவின் மனதை மாற்ற எண்ணி, அவள் மனதிற்கு நெருக்கமான மனிதனான பரணி பற்றி வினவினாள்.

தினேஷிடம் கூட சில விஷயங்களை சொல்லாமல் மறைத்து விடும் திவ்யா, பரிமளாவிடம் எல்லாமே பகிர்ந்து கொள்வாள். “அவன் எந்த டீம்னு தெரியலை பரி. இன்னைக்கு அவன் பேர் போட்டு சர்ச் பண்ணேன். ஆஃப்லைன்னு காட்டுச்சு.”

“எனக்கு புரியற மாதிரி சொல்லுடீ எரும!” என்று பரி கடிந்து கொள்ள, “ஆபீஸ்ல இருக்க எல்லார் பேரும் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்ல இருக்கும். வாட்ஸ்ஸப் மாதிரி தான். அவங்க ஆன்லைன்ல இருந்தா க்ரீன் காட்டும்.”

“ஓ, சரி, சரி. பரணி சாருக்கு க்ரீன் காட்டலையா?”

“இல்ல, யு.எஸ் டைம்ல வேலை பார்ப்பானா இருக்கும். இங்க பகல்னா அங்க ராத்திரில. அதனால க்ரீன் காட்டலை” என்று அசிரத்தையாக பதில் சொல்வது போலவே இலகுவாக பதில் சொன்னாள்.

“ஓ. இன்னைக்கு அவன் இல்லைங்கவும் தான் உன் வாய்ஸ் டல்லடிக்குதா?” என்று பரிமளா சீண்டவும், “சீ, அதெல்லாம் ஒண்ணுமில்ல, வீட்டை பத்தி நினைச்சேன்.” என்று சொல்லி, இன்னும் கொஞ்சம் அளவளாவி விட்டு கைப்பேசியை அணைத்தாள். ஆனால், அடுத்த தினமே பரியிடம் பரணி பற்றி கோபமாக திட்டும் வண்ணம் விஷயம் நடந்தேறின.

அடுத்த நாள், அலுவலகம் சென்றவளுக்கு கொஞ்சம் போல டிஃபெக்ட்ஸ் அலகேட் செய்திருந்தனர். முதலில் சற்றே சுலுவான இரு தவறுகளைக் கண்டறிந்து, அவற்றைக் களைந்து கோடிங் செய்து முடித்தாள் திவ்யா.

“சூப்பர் திவ்யபாரதி. சிம்பிள் டிஃபெக்ட் தான்னாலும், புது ப்ராஜெட்ல கோடிங் எங்க இருக்குனு தேடவே ஒரு நாள் ஆகும். நீங்க குடுத்த ஒரு மணி நேரத்தில டிஃபெக்டை சால்வ் பண்ணிட்டீங்களே” என்று பாராட்டிப் பேசிய குமரேசன், அடுத்து சற்றே சிக்கலான ஒரு குறையைக் களையும் பொறுப்பை கொடுத்தார்.

அன்றைய மதியம், சிவதானு, திவ்யாவை அவளுக்குத் தேவையான க்ரூப்களில் இணைத்து விட்டான். புது நபர் வந்திருப்பதை தெரியப்படுத்த, “வெல்கம் டு த டீம் மிஸ்.திவ்யபாரதி. அவர் நியூ சீனியர் டெவலபர் அனாலிஸ்ட்” என்று குழுவில் பொதுவாக செய்தி அனுப்பியிருந்தான்.

அந்த குழுவில் அவள் டீம் ஆட்கள் மட்டுமே இருக்க, அதில் பரணியின் பெயரும் இருந்தது கண்டு திவ்யாவிற்கு ஆச்சர்யம், அதிர்ச்சி என ஒருங்கே எழுந்தது. ‘பரணியோட டீம்லையா வேலை பார்க்கணும்? இது வேற என்ன சோதனை? என்னை நிம்மதியா வேலை செய்யவே விடமாட்டியா ஆண்டவா?’ என கடவுளை நொந்து கொண்டவள், அவளை வரவேற்று செய்தி அனுப்பிய நபர்களுக்கு, “நன்றி” என தட்டினாள்.

அந்த குழுவில், குமரேசனையும் சேர்த்து மொத்தமே எட்டு பேர் தான் இருந்தனர். அதில் ஆறு பேர் இங்கே பணிபுரிவதாகவும், இருவர், அதாவது பரணிதரன் மற்றும் வருண் என்பவரும் யு.எஸ் கிளையில் வேலையில் இருப்பதாகவும் கூறினர்.

மொத்தமாக இவளுக்கு மாலைக்குள் ஆறு நபர்களிடம் இருந்து வரவேற்பு செய்தி வந்திருந்தது. ‘பரணியும், வருண்ன்னு ஒரு ஆளும் மட்டும் தான் நமக்கு வெல்கம் அனுப்பலை’ என மனதில் குறிப்பெடுத்திருந்த திவ்யா, அன்றைய பணிகளை செய்தபடிக்கே இருந்த போதிலும், பரணியைப் பற்றிய குறுகுறுப்பு கொஞ்சமும் குறையவில்லை.

ஆன்லைன் வந்துவிட்டானா என அடிக்கடி கண்காணித்துக் கொண்டே இருந்தவளுக்கு, அவனது பெயரின் அருகே இருந்த பச்சை பட்டன் ஒளிரவும், தானும் உயிர்பெற்றாள்.

பரணி குழுவில் ஏதோ டைப் செய்வது போலக் காட்டவும், திவ்யாவிற்குள் உற்சாகம். ‘அன்னைக்கு இண்டர்வியூல கூட என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கலை. இன்னைக்கு எப்படி பேசுவானோ? ஃபார்மலா எல்லாரும், ‘வெல்கம்’ பண்ண மாதிரி கேஷுவலா தான் பேசுவான்னு நினைக்கறேன். நானும், அவனை மாதிரியே டீசண்டா, ‘தேங்க்யூ’ சொல்லிடணும்.’ என்றெல்லாம் கற்பனையை தட்டிக் கொண்டிருக்க,

அவனோ, பணி தொடர்பாக ஒரு கேள்வியை குழுவில் பதிவிட்டிருந்தான். இவளை வரவேற்று ஒரு செய்தி கூட மாலை வரையிலும் அனுப்பவில்லை. “ஒருவேளை மெசேஜ் பார்க்கலையோ? அதெப்படி இன்னைக்கு காலையில சேட்ல ஆறு பேர் வெல்கம், வெல்கம்னு சொல்லியிருக்காங்க. என்னடான்னு கூடவா ஒருத்தன் கவனிக்க மாட்டான்?’ என்று விசனப்பட்டுக் கொண்டே வேலை பார்த்தாள்.

அவன் மீண்டுமாய் ஏதோ டைப் செய்யத் துவங்க, ‘ஓ, சரி, இப்போ சொல்லறானா இருக்கும்’ என்று ஆர்வமாக கணினியையே வெறித்தவளுக்கு இம்முறையும் ஏமாற்றம் தான்.

அவன் குமரேசனிடம் ஏதோ கேள்வி கேட்டு, அதற்கான பதிலை பெற்றுக் கொண்டிருந்தான். ‘சரி, முக்கியமா ஏதோ இஷ்ஷு பத்தி பேசிக்கறாங்க. அதனால மேல இருந்த மெசேஜை பார்த்திருக்க மாட்டானா இருக்கும்.’ என்று துறுதுறுவென்று அலைபாய்ந்த மனதை அடக்கிக் கொண்டாள்.

மாலை ஐந்து மணி போல, அந்த வருண் என்பவனும், “வெல்கம் டு தெ டீம்” என்று வரவேற்றிருந்தான். அப்பொழுதும் பரணி ஆன்லைனில் இருக்க, குழுவில் புதிதாக இருந்த செய்தியை நிச்சயமாக அவனும் பார்த்திருக்கக் கூடும். ஆனால், அவன் வேண்டுமென்றே இவளுக்குச் செய்தி அனுப்பவில்லை என்று புரிந்தது. தன்னைத் தவிர்க்கிறான் என்பது புரிபட, திவ்யாவிற்கு சங்கடமாக இருந்தது.

‘ஒரு சாதாரண வெல்கம் மெசேஜ் தானே? அவன் அனுப்பலைன்னா என்ன இப்போ? மத்த எல்லாரும் அனுப்பியிருக்காங்க. அதை நினைச்சு சந்தோஷப்படாம, அனுப்பாத அவனை பத்தி ஏன் யோசிச்சு மனசை குழப்பிக்கற?’ என்று கேட்டு சமாதானமடைந்தாள்.

கொஞ்சம் சுதாரிப்பு ஏற்படவும், பரணியின் நினைவை ஒதுக்கிவிட்டு, அவளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பணியில் கவனம் செலுத்தினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!