அவசரமாக முடிவு செய்த திருமணம் என்றாலும் வாழை மரம், சீரியல் லைட்டுகள் என்று கலை பெற்றிருந்தது வீடு. நெருங்கிய சொந்தங்கள் வரும்போதே சலசலப்புடன் வந்தனர். மாறனின் தங்கை வீட்டிற்கு அழைப்பு சென்றிருந்தாலும் அங்கிருந்து யாரும் வரவில்லை.
ஊர்க் கோவிலில் வைத்து திருமணம், விருந்து வீட்டில் என்று முடிவாகி சமையல்காரர்கள் வரவழைக்கப்பட்டு பின்கட்டில் உணவு தயாராகிக்கொண்டிருந்தது. திடீர் திருமணத்தின் காரணம் என்னவோ என்று கட்டுக்கதைகள் பல உருவாக்கப்பட்டு இயலணியின் வயிற்றை சிலர் பார்வையால் அளவெடுக்கும் நிகழ்வெல்லாம் அவள் அறியாமலேயே நடந்துகொண்டிருந்தது. அவசரமாக பட்டெடுத்து பெரிதான வேலைப்பாடுகள் இன்றி எளிமையாக ரவிக்கை தைக்கப்பட்டு அவள் கைக்கு வரும் போது அவள் உடல் வெளிப்படையாக நடுங்கவே செய்தது. தவறிழைப்பதாய் மனம் எச்சரிக்கை செய்ய, அனைத்தும் கைமீறிவிட்ட உணர்வு. இனி தானே சென்று விருப்பமில்லை என்று கூறினால் கூட அறிவழகன் மாற்றி சொல்லி இந்த திருமணத்தை நடத்திக்கொள்வான் என்பது திண்ணம்.
ஆழ்மனதில் துளிர்விட்டிருந்த நேசமும் தன் நொடி நேர சலனமும் தேவையற்ற நேரத்தில் வெளிப்பட்டு எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்று ஆயிரமாவது முறையாய் நொந்துகொண்டாள் இயலணி. மணமகன் தன் மனதை அசைத்துப்பார்த்தவன் என்றாலும் மணப்பெண்ணிற்கே உரிய மகிழ்வோ, இனிய படபடப்போ, நாணமோ, எதிர்பார்ப்போ இன்றி ஒருவித ஐயத்துடனும் குற்றவுணர்ச்சியுடன் பட்டுப்புடவையைக் கட்டினாள். விரல்கள் அந்த பட்டை தடவிப்பார்க்க, விழிகள் கண்ணீர் சிந்தியது.
Advertisement
எத்தனை பெரிய தவறிழைக்கிறோம். மனதினில் பிடித்தம் என்ற ஒன்று உட்புகுந்த ஒரே காரணத்திற்காக தன்னை சார்ந்தவர்களுக்கு கூட தன் திருமணம் பற்றி தெரிவிக்கமுடியாத தன் நிலை எண்ணி கழிவிரக்கம் கொண்டது பெண். அவசரமாக இப்படி ஒரு திருமணம் அவசியமா? இதிலிருந்து என்ன கிடைக்கப்போகிறது? மனம் நிறைந்தவனின் மனம் அவளை வெறுக்கப்போகிறது. தன்னை சார்ந்தவர்களுக்கு தீராத வருத்தத்தை கொடுக்கப்போகிறது. ஒருபடி மேலே போய் அவர்கள் நொந்துபோவார்கள். இதுதான் தன்னை சார்ந்தவர்களுக்கு அவள் அளிக்கப்போகும் பரிசா? வேண்டாம்… இந்த திருமணம் வேண்டாம் என்று அனைவர் முன்னும் கூறிவிடலாம் என்ற எண்ணம் எழ, ஏற்கனவே அடைக்கலம் கொடுத்த அறிவழகனின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தது போதாதா இப்படி உறவினர்கள் கூடியிருக்கும் பொழுதினில் அவன் குடும்பத்தை சபை ஏற்றி மூக்கறுப்பது சரியா என்று ஒரு கூக்குரல் அவளை கட்டிப்போட்டது.
“என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க. உங்களை கோவிலுக்கு கிளம்ப சொன்னாங்க, ரொம்ப நேரமா கூப்பிடுறேன் அப்படியே நிக்குறீங்க.” தாமரை வந்து அவள் கை பிடித்து உலுக்கவும் நிகழ் உலகுக்கு வந்தவள் கலக்கமாய் பார்த்தாள்.
அவள் பார்வைக்கான அர்த்தம் தாமரைக்கு புரியவில்லை. அதனை கேட்டு தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. அவள் கைப்பிடித்து லேசாக வெளிப்புறம் இழுக்க, அவளது வெறுங்கையை பார்த்து முகம் சுருக்கினாள் தாமரை.
Advertisement
“வளையல் போடல. வெறுங்கையா இருக்கீங்க?”
Advertisement
“இல்லை, ரெண்டு க்ளாஸ் வளையல்தான் இருந்துச்சு. அதுவும் உடைஞ்சிருச்சு.” என்று இயலணி தயக்கமாய் சொல்ல,
‘அந்த பொண்ணு கையிலிருந்த வளையலே உடைஞ்சிடுச்சு. அப்படி இறுக்கமா புடிச்சிட்டு நிக்குறான்.’ என்று அன்னை சொன்னது நினைவு வர, பெருமூச்சுவிட்டவளாய் இயலணியிடன், “இங்கேயே இருங்க என் வளையல் ஏதாவது எடுத்துட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு அவள் கழுத்தை பார்த்தாள். மெல்லிய தங்கச்சங்கலி ஒன்று கழுத்தை சுற்றி இருந்தது. அதையும் குறித்துக்கொண்டு வேகமாக அன்னையை தேடிக்கொண்டு சென்றவள் விஷயத்தை கூற,
“யாருமில்லாத பொண்ணை புடிச்சா இப்படி நாமதான் எல்லாத்தையும் பாக்கணும்.” சலிப்பு இருந்ததோ மேகலாவிடம்.
Advertisement
“யாரும் இருந்திருந்தா அவங்க ஏன் மூணு மாசமா அண்ணன் கூட இருந்திருக்க போறாங்க?”
“அதுவும் சரிதான். இதுதான் நம்ம தலையெழுத்துனா என்ன பண்ண முடியும்… பீரோல என்னோட காசு மாலையும் வளையலும் இருக்கு. அதை கொடுத்து போட்டுக்க சொல்லு.” என்ற மேகலாவை ஆராய்ச்சியாய் பார்த்தாள் தாமரை.
“என்னடி?”
“ரெண்டையும் கொடுத்துட்டா நீ எதை போட்டுப்ப ம்மா?”
“ம்ச்… இப்போ நான் போடாம இருக்கிறதுதான் குறை பாரு. இங்கேயே மசமசன்னு நிக்காம சீக்கிரம் கிளப்பி கூட்டிட்டு போ. கார் ரெடியா நிக்குது. நீங்க கிளம்புன பின்னாடிதான் அறிவு கிளம்பனும்.” மேகலா மகளை விரட்ட, அன்னையின் தங்க நகையை எடுத்துச் சென்று இயலணியிடம் கொடுத்தாள்.
“தங்கம் மாதிரி இருக்கு. க்ளாஸ் வளையல் போதும். இதெல்லாம் வேண்டாம்.” உடனே மறுத்தது மணப்பெண்.
“இது அம்மாவோடது. அம்மாதான் உங்களை போட்டுக்க சொன்னாங்க.” என்றதும் தர்மசங்கடம் கொண்டது பெண்.
“சீக்கிரம் கிளம்பணும். போட்டுக்கோங்க.” என்று தாமரை அவசரப்படுத்த நடுங்கும் கரத்துடன் அந்த நகையை வாங்கிக்கொண்டது பெண். நினைவடுக்கில் ஏதேதோ நியாபகங்கள்.
‘பொண்ணுக்கு பவுனு வாங்கி சேர்த்து சீக்கிரம் கட்டிக்கொடுக்காம மேல படிக்க வைக்குறியே சேகரு.’ என்று அவள் மேற்படிப்புக்கு சேர்ந்ததும் அவள் அத்தை வந்து கேட்டதற்கு, ‘இயற்கையாவே அழகா இருக்குற என் பொண்ணுக்கு தனியா பவுனு எதுக்கு? படிப்பு தான் அவளுக்கு துணையா இருக்கும். அதுதான் அவசியம்.’ என்று பதில் கொடுத்திருந்தார் அவள் தந்தை. இன்று அவரில்லாத தன் திருமணத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதவளாய் அப்படியே தரையில் மடிந்து அமர்ந்தாள் இயலணி.
“என்னாச்சு?” என்று பார்த்த தாமரை தனக்கு பதில் கிடைக்காது, அவளோடு மல்லுக்கட்டவும் முடியாது என்பதை புரிந்துகொண்டு அண்ணனை அழைக்கச் சென்றுவிட்டாள்.
இரும்பு கூட ஒருகட்டத்தில் அதீத வெப்பத்தில் உருகிவிடும் ஆனால் நான் இளக மாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தயாராகி நின்றிருந்தான் அறிவழகன். முகத்தில் அத்தனை கடுமை, வெறுமை, ரெளத்திரம். அவனை நம்பாமல் இந்த திருமணம் ஏற்பாடு செய்ததால் வந்த கோபம் அது என்று குடும்பத்தினர் நினைத்துக்கொண்டனர். தாமரை வந்து விஷயம் சொல்லவும் பற்களை கடித்தவன், “அடுத்த டிராமாவா?” என்று முணுமுணுத்தபடியே அவளிருக்கும் அறைக்கு வேக நடையிட்டான்.
மின்னலென அவன் அந்த அறைக்குள் நுழையவும் பதறி எழுந்தாள் இயலணி. கைகளில் தாமரை கொடுத்துச் சென்ற நகை இருந்தது.
ஏளனமாய் சிரித்தவன் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க, அன்னிச்சையாய் அவள் பின் நகர்ந்தாள்.
“ஏன் வேண்டாம்? மூணு மாசமா நீதான் என்னை பாத்தியே… இனி வாழ்க்கை முழுசா பாத்துட்டே இருக்கலாம்.”
ரெளத்திரத்தில் கூரூரமாக தெரியும் அவன் முகம் கிலியூட்ட, இது பேசவேண்டிய நேரம் என்பதை உணர்ந்து தைரியத்தை திரட்டியவள், “நாந்தானே பார்த்தேன். நீங்க பாக்கலையே.”
“அதுல கவலை வேறையா உனக்கு… இனி நல்லா பாத்துடுறேன்.” என்று பற்களை கடித்துக்கொண்டு அவன் சொன்ன விதமே அவளுக்கு பிடிக்கவில்லை.
“இது நீங்க இல்லை. ப்ளீஸ் இப்படி இருக்காதீங்க.”
“என்னை இப்படி மாத்துனதே நீதான்.”
“உங்க மேலையும் தப்பு இருக்கு. உங்க வீட்ல என்னை எப்படி பார்ப்பாங்கனு இங்க கூட்டிட்டு வர்றதுக்கு முன்னாடி நீங்கதான் யோசிச்சிருக்கணும்.” என்றுவிட, கப்சிப் அறிவழகன். இதைத்தான் உமாவும் சொல்லியிருந்தாள். தலையை உலுக்கி அவள் நினைவுகளை விரட்டியவன், இயலணி கையிலிருந்த வளையலை பிடுங்கி அவனே அவள் கரத்தினில் சேர்ப்பிக்க, கரத்தை உருவிக்கொண்டவள், “நானே வரேன். போங்க.” நிலத்தில் விழி பதித்து சொல்ல, வந்து வழியே திரும்பிவிட்டான் அறிவழகன்.
அவன் வெளியேறவும் உள்ளே நுழைந்த தாமரை அவளை அவசரப்படுத்தி கிளப்பி கூட்டிச் சென்றாள். செல்லும் அவளையே பார்த்திருந்த அறிவழகனின் நினைவுகள் சற்று தினங்கள் பின்னோக்கி சென்றது.