25 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 25
.
Advertisement
“அப்பா எப்ப வல்ல?”
“அப்பாக்கு காலேஜ் இருக்கில்ல… அப்பாவால நடுவுல வர முடியாது. இன்னைக்கும் தாத்தா இல்ல சங்கீதா வந்து கூட்டிட்டு போவாங்க சரியா? ஈவ்னிங் வீட்டுல பாப்போம். இப்போ அப்பாக்கு டாடா சொல்லுங்க”
Advertisement
Advertisement
“அப்பா டாடா” என யாழி கௌதமன் கரத்தை விட்டு ஆசிரியரின் கரத்தை பிடித்துக் கொள்ள, கௌதமன் கல்லூரியை நோக்கி வண்டியைச் செலுத்தினான். மகளும் விளையாட்டு கூடம் செல்ல ஆரம்பித்து மாதங்கள் ஆகிவிடவே, இப்பொழுதெல்லாம் எந்தச் சுணக்கமும் இல்லாது ‘டாடா’ எனச் சிரித்த முகமாகவே மகளுக்கு விடை கொடுக்கிறான் யாழியின் செல்ல அப்பா.
அப்பா மகளின் நாள்கள் எப்பொழுதும் போல் நன்றாகவே நகர்ந்தன. அப்படியே கௌதமனின் கல்லூரிப் படிப்பும். கல்லூரி, குறும்படம் தயாரிப்பு, கால்பந்து எனக் கல்லூரி வாழ்க்கை எந்த இடரும் இன்றி நன்றாகவே செல்கிறது கௌதமனுக்கு.
Advertisement
ஈஸ்வரி இவனை எச்சரித்து அனுப்பிய அன்றைய தினத்திற்குப் பின் கௌதமன் எந்த வம்பிற்கும் செல்வதில்லை. முக்கியமாக, யசோதராவின் பக்கம் செல்வதில்லை. அதற்காக யசோவை பார்ப்பதில்லை என்றில்லை. நேரில் பார்க்க நேர்ந்தால் ஒதுங்கிப் போய்விடுவான். எதிரெதிரே முகம் பார்த்துக் கொள்வதில்லை. யசோவின் நாள்களும் கல்லூரி, புல்லாங்குழல், ரெக்காடிங், கச்சேரி என நன்றாகவே செல்கிறது.
கல்லூரி நாள்கள் எந்த வித ஏற்ற இறக்கங்களும் இல்லாது சென்றால், அது என்ன கல்லூரி வாழ்க்கை? கல்லூரியில், கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி முழுவீச்சில் ஆரம்பமாகியிருந்தது. அன்று மாலை பயிற்சிக்காகப் பெண்கள் கூடைப் பந்து அணியின் எதிர் அணியாக ஆண்கள் அணியைக் களம் இறக்கியிருந்தார் கோச். போட்டியின் முடிவில் பெண்கள் அணி தோல்வியைத் தழுவியது.
வீரர்களும் வீராங்கனைகளும் கலைந்து செல்ல, வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்த நண்பர்களிடம் “எப்படி அடித்துத் தூக்கினோம் பார்த்த இல்ல…” என சுரேஷ் மார்தட்டிக் கொண்டான்.
“அஞ்சு கத்து குட்டிய தோக்கடிச்சது ஒரு பெருமையாடா? என்ட்ட ஜெயிச்சுடு பார்ப்போம்” எனப் பந்தைத் தன் வசமாக்கினான் கௌதமன்.
“இது ஃபுட் பால் இல்ல ராசா… பேஸ்கெட் பால். ஒரு ஃபீல்ட் கோல் எடுத்திடு பார்ப்போம்” எனக் கௌதமனுக்கு கூடைப் பந்து விளையாடத் தெரியாது என்பதை நினைவு படுத்தினான் சுரேஷ்.
“காலால பாள்ல நெட்டுக்குள்ள போட முடியுற எனக்கு கையால போட முடியாதா? மூடிட்டு வாடா” என கௌதமன் பந்தில் வித்தையைக் காட்டிக் கொண்டே நடையைத் தொடர்ந்தான்.
“டேய்… இருட்டிட்டு வருது டா. மழை ஆரம்பிக்கிறதுக்குள்ள வீடு போய் சேரணும்” சுரேஷ் தயங்க, “அட வா டா… மழ காத்துன்னு கதை சொல்லிட்டு” என அவனை கோர்ட்டிற்கு இழுத்துச் சென்றான் கௌதமன்.
“நாங்களும் நாங்களும்” என கௌதமனோடு இருந்த மற்ற சில தோழர்களும் இவர்களோடு இணைந்து கொண்டான்.
அது திறந்த வெளி மைதானம் என்பதால் போட்டியின் போதே அங்கிருந்த படிகள் ஒன்றில் அமர்ந்து வேடிக்கை பார்த்திருந்தாள் யசோதரா. போட்டி முடியவும் கௌதமன் குழு பந்தோடு கோர்ட்டில் இறங்கவும் எழுந்து கொள்ளப் போனவளுக்குக் கைப்பேசியில் அழைப்பு வந்தது. பிரபு பேசினான். அடுத்த இசை நிகழ்ச்சியைப் பற்றிய விபரம் கூறியவன், “ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணு. காலேஜ் கிட்ட வந்ததும் காள் போடறேன், வெளியில வா. நேர்ல பேசணும்” என அழைப்பைத் துண்டித்தான்.
எழுந்தவள் அப்படியே அமர்ந்தாள். விளையாட்டை வேடிக்கை பார்த்தவளுக்கு அலுப்புத் தட்டியது. கௌதமனோடு விளையாடும் இருவரும் ‘கூடைப் பந்து’ என்றால் என்ன என்று கேட்பார்கள் போலும். சுரேஷும் மற்ற ஒருவனும் நன்றாகவே விளையாட மூவர் விளையாடும் விளையாட்டை கவனிக்க முயன்றாள்.
“எனக்குச் சொல்லி தா கௌதமா” என்ற கொஞ்சல் சத்தம் பெண்ணின் எரிச்சலைக் கிளப்பியது. ‘இவன திருத்தவே முடியாது போல… ச்ச’ என அந்தப் பெண்ணையும் கௌதமனையும் பார்த்தவள் அதற்கு மேல் முடியாது எனப் படிகளில் ஏற ஆரம்பித்தாள்.
“மொதல்ல பாள்ள ஒழுங்கா பிடிக்க கத்துக்கோ… அடுத்து டிரிப்ளிங் பண்ண கத்துக்கோ, அப்பறம் விளையாட வருவியாம். இப்போ மேல மேல விழாம வழி விடு” எனக் கண்டிப்புடன் பேசிய கௌதமனின் சத்தம் யசோவின் நடையை நொடி நேரம் தடைசெய்தது. ‘யோகியன் பேசறான்’ என மனம் நொடித்துக் கொண்டது.
“இப்படி இல்ல… இப்படி” என்ற சத்தம் முடியும் முன் யசோவின் இடுப்பைப் பதம் பார்த்தது பந்து. திரும்பிப் பார்த்தவளிடம், அங்கிருந்தே, “சாரி சாரி” என முந்திக் கொண்டான் சுரேஷ்.
இன்றும் அவள் பார்வை கௌதமனில் நிலைத்தது. அவள் காளி அவதாரம் எடுக்கும் முன், “விளையாடுற இடத்துல இருந்தா பாள் படத் தான் செய்யும். அதுக்கு கோபப்படுவீங்களா? யாரும் வேணும்ன்னு போடல. சத்தியமா நான் போடல” என இரு கைகளையும் அவன் உயர்த்தினான்.
“ஏன் மா எதுக்கு எடுத்தாலும் அவன முறைக்கிற? அன்னைக்கும் அவன் உன்ன கூப்பிட வேண்டாம்ன்னு சொல்ல சொல்ல கேட்காம நான் தான் கூப்பிட்டேன். ஆனா நீ அவன அந்த முறை முறைச்ச. இன்னைக்கும் இதோ… இந்த விஜி பொண்ணு தெரியாம போட்டுட்டா… அதுக்கும் அவன முறைக்கிற! அவன் பாக்க நல்லா தான் இருக்கான்… அதுக்காக இப்பிடி முறைக்கிற மாதிரி அவனையே பாக்காத. இப்போ நீ அந்தப் பந்த கொண்டு வந்து கொடுத்துட்டு, ஓரமா நின்னு முறை இல்லை சைட் அடி யாரு கேட்டா” என்றான் மைக்கேல் அடக்கப்பட்ட எரிச்சலோடே.
“டேய்.. போதும்” என்ற கௌதமன், “சாரி. நீங்க கிளம்பிங்க” என்றான் யசோவிடம்.
“அது ஹூப்ல போடும் போது அங்க வந்துடுச்சு. மின்னப் பின்ன விளையாடி இருந்தா தானக் குறி பார்த்து போடற கஷ்டம் தெரியும்” எனத் தன் தரப்பு நியாயத்தை உரைத்தாள் பந்தை எறிந்த விஜி.
சற்று தள்ளி கிடந்த பந்தை எடுத்த யசோ, நின்ற இடத்தில் இருந்தே பந்தைத் தூக்கிப் போட அது நேரே கூடைக்குள் விழுந்தது. ஒரு முறை விஜியை பார்த்தவள் விட்ட நடையை மீண்டும் ஆரம்பித்தாள்.
“ஒரு தரம் லக்குல விழுந்தா… அதுக்கு அந்தமா பாக்குற பார்வையை பாரேன். ஏம்மா பொண்ணே, உனக்கு அவ்வளவு விளையாட தெரியும்னா இந்தா இருக்கானே சுரேஷ் அவன தோக்கடி பாப்போம். காலேஜ் சேம்பியனாக்கும் அவன்” என மைக்கேல் கூற, யசோ நின்று திரும்பினாள்.
“லூசு… வேலியில போற ஓணானை பிடிச்சு கோவணத்துக்குள்ள விடுறதே இந்த பண்ணாடைக்கு வேலையா போச்சு” என விஜி முணுமுணுத்தது அனைவர் காதுகளிலும் துல்லியமாகக் கேட்க, கௌதமன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.
விஜி கூறியது போல் அதன் பின் யசோ கொடுத்த குடைச்சல் அதிகமாகவே இருந்தது. இவர்களோடு எதற்கு என முதலில் நினைத்தவளைப் பந்து வா என்றது. அரை மணி நேரத்தைக் கைப்பேசியில் கழிப்பதா என எண்ணியவள் களத்தில் இறங்கினாள்.
கௌதமனுக்கு இவளோடு விளையாட விருப்பம் இல்லை என்றாலும் அவன் ஆரம்பித்த விளையாட்டிலிருந்து அவனே எப்படி வெளியே செல்வான்? கௌதமன், சுரேஷ், விஜி ஓர் அணியாகவும், மற்ற மூவரும் எதிரணியாகவும் விளையாட ஆரம்பித்தனர்.
காற்றின் வேகம் அதிகரிக்க, மழைக்கான சாத்திய கூறு அதிகம் ஆக ஆரம்பித்தது. ஆனால் விளையாட்டு சூடு பிடிக்க ஆரம்பிக்கவும் ஒருவருக்கும் கிளம்பும் எண்ணமில்லை. கல்லூரி காலங்களுக்குப் பின் இன்று தான் பந்தைத் தொடும் யசோதரா தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
போட்டியாக ஆரம்பித்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகவே நகர்ந்தது. இடுப்பைப் பின்னுக்குத் தள்ளி, கைதேர்ந்தவளாக அவள் பந்தைத் தரையில் அடித்து எடுத்த விதவிதமான டிரில், அவள் கூடைப்பந்து விளையாட்டிற்குப் புதியவள் அல்ல எனக் காட்டிக் கொடுத்தது.
இடையில் சொருகியிருந்த கொசுவத்தைத் தாண்டி மாராப்பு பறக்காது இருக்க ஒரு கையை புடவையிலும் ஒரு கையால் பந்தைத் தட்டிக்கொண்டு ஓடும் யசோவை ரசனையாகவே பின் தொடர்ந்தான் கௌதமன்.
“செமயா ஆடுறீங்க. நல்ல வேள நீங்க என் டீம்” என மைக்கேல் பாராட்டவும் செய்தான். அங்குச் சூழல் மாற ஆரம்பித்தது. அங்கிருந்த அனைவரும் ஒரு பக்கம், இவள் மட்டும் ஒரு பக்கம் என இருந்த நிலை மாறி அனைவரும் பகைமை மறந்து போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தினர்.
அவளோடு விருப்பமே இல்லாது விளையாட ஆரம்பித்த கௌதமன் விரும்பி விளையாட ஆரம்பித்தான். அவனால் பந்தைக் குறி பார்த்துப் போட முடியும் அவ்வளவே. அவளோ கூடைப் பந்து வீராங்கனை போல் விளையாடிக் கொண்டிருந்தாள். பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் ஒரு விளையாட்டு. இருவரின் கவனமும் பந்தில் மட்டுமே. கௌதமன் பந்தைத் தூக்கிப் போட, யசோ எம்பிக் குதித்துத் தடுக்க.. அவளோடு சேர்த்து மைக்கேலும் தடுக்கவென குதிக்க, பெண் மீது மோதியிருந்தான்.
தன்னைவிட அதிக உயரமும் அதிக எடையும் கொண்டவன் இடித்தால் அவளும் எப்படித் தாக்குப்பிடிப்பாள்? தடுமாறியது பெண்ணிற்கு. பின்னோடு விழப்போனவளின் தலை கௌதமன் மார்பில் இடிக்கவும், “ஏய்… பாத்து மா” என்ற மைக்கேல் யசோவின் கரம் பற்றி நிறுத்தினான். வேகமாகத் தலை இடித்ததில் கௌதமனுக்கு வலித்திருக்க வேண்டும், மார்பை மெல்ல நீவிக் கொண்டான். ‘சாரி’ என்றது பெண்ணின் சுருங்கிய விழிகள். ‘நோ பிராப்லம்’ என்றது மூடி திறந்த இமைகளும், சுருக்கி நிமிர்ந்த புருவங்களும். விளையாட்டு தொடர்ந்தது.
கௌதமனின் பார்வையும் பழக்கமும் எந்த வித அசௌகரியத்தையும் கொடுக்கவில்லை யசோவிற்கு. பெண்கள் இருவரிடமும் இடைவெளி கடைப்படிதான். ‘இவனா அன்னைக்கு மிஸ்பிஹேவ் பண்ணினது?’ என்ற சந்தேகம் உள்ளுக்குள் எழுவதை யசோவால் தவிர்க முடியவில்லை.
கல்லூரி முடிந்ததும் தான் வரும் வரை காத்திருக்கக் கூறிய தாக்ஷாயினி, இவன் விளையாட்டு மைதானத்தில் இருக்கவும், பார்வையாளராக முன்பு யசோ அமர்ந்திருந்த படியில் அமர்ந்து கொண்டாள். தாக்ஷாவை பார்த்த விஜி, “ஏய்.. தாக்ஷா” எனக் கூவிக் கொண்டே அவளோடு அமர்ந்துகொண்டாள்.
மைக்கேலின் பேச்சில் ‘ஏம்மா பொண்ணே’, ‘நீங்க’ ஆகி இருந்தது. விளையாட்டின் ஆரம்பத்தில் இருந்த உணர்வுகள் மாறி இருந்தது பெண்ணிற்கு. கௌதமன் இன்று வேறாகத் தெரிந்தான். சீண்டல்கள் இல்லாத பேச்சு, விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கும் குணம், வேண்டுமென்றே மேலே உரசாது விளையாடும் தன்மை எனக் கௌதமன் வேறாகத் தெரிந்தான். போட்டி மனப்பான்மை மாறியிருக்க, அங்கிருந்தவர்களிடம் சிரிப்பு எட்டிப் பார்த்தது அவ்வப்போது.
சுரேஷிடம் இருந்து பந்து கைமாறியிருக்க, இம்முறையும் கோல் போட்டிருந்தாள் யசோ. கௌதமன், “தாட் வாஸ் எ குட் துரோ” எனப் பாராட்ட புன்னகையோடே பாராட்டை ஏற்றுக் கொண்டாள் பெண். மைக்கேல், யசோ கூட்டணி ஜெயித்திருந்தது.
“யூ ஆர் டூ குட். நீங்களே பேஸ்கெட் பாள் டீம கோச் பண்ணலாம்” எனக் கௌதமன் அவளைப் பாராட்டும் விதமாகவே பேச, அதற்கும் புன்னகையே பதிலாக வந்தது.
“செம்மையா விளையாடுறீங்க மேம்… நீங்க பிளேயரா?” என சுரேஷ் ஆர்வமாக விசாரிக்க, ஆம் என்பது போல் தலையசைத்தவள், பந்தை எப்படி நாசுக்காக எதிராளியிடம் இருந்து காப்பது எனப் பாடம் எடுத்தாள். கையசைவுகள், பந்தைப் பிடிக்கும் விதம், அதைத் தட்டும் விதம், பந்தைக் கூடைக்குள் எறியும் முறை என அனைத்தையும் பொறுமையாகச் செய்து காட்டினாள்.
ஆண்கள் நால்வரும் ஆடிமுடித்த ஆட்டத்தை பற்றி பேச பார்வையாளராக நின்றிருந்தாள் யசோதரா.
வேகமாக வீசும் காற்று. அதில் பறக்கும் முந்தானையும் கூந்தலும். மாராப்பு விலகாதிருக்க ஒரு கை அதையும் மற்றது பந்தையும் பிடித்திருக்க, அழகான ஓவியமாகத் தெரிந்தாள் யசோதரா. அனைத்தையும் அமைதியாகப் பார்த்து அமர்ந்திருந்தாள் தாக்ஷா.
தங்களைப் பார்த்து நின்றிருக்கும் யசோவை பார்த்த கௌதமன் அவளிடம் எதையோ கூற, யசோவின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.
‘இவ தான மூணு மாசம் முன்ன கௌதமோட சண்டை போட்டது? இப்போ என்ன ஃப்ரெண்ட்சா ரெண்டு பேரும்? அப்போ இவனோட அட்டென்ஷனுக்காக தான் சீன் போட்டாளா?’ தாக்ஷாவின் மனதில் மணி அடித்தது. அதையே விஜியிடமும் கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்.
“உன் ஆளு, தெரியாம அவன் மேல உரசினதுக்கு ஃப்ரெண்டுன்னு கூட பாக்காம அப்படி திட்றான் என்னை. ஆனா அந்த பொண்ணு அவன் மேல முழுசா விழுந்துது. திட்டுவான்னு பார்த்தா… தெரு நாய் பொறைய பாத்து இளிக்கிற மாதிரி இளிக்கிறான்” எனத் தன் கோபத்தைக் கொட்டினாள்.
நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த தாக்ஷாவிற்கு என்ன தோன்றியதோ, “கௌதம்… கிளம்பலாம். பாப்பா தேட ஆரம்பிச்சு இருப்பா. அப்பான்னு உன்ன கேட்டு அழ ஆரம்பிக்கறதுக்கு முன்ன வீட்டுக்கு போவோம்” எனக் கௌதமனை இருந்த இடத்தில் இருந்தே அழைத்தாள்.
தாக்ஷாவின் கூற்றைக் கேட்ட விஜியின் புருவங்களோடு யசோவின் புருவங்களும் உயர்ந்தன. அந்தக் குழப்பமான முகம் தாக்ஷாயினிக்கு மிகவும் பிடித்தது.
“கிளம்பறேன் டா கௌதமா” என்ற நண்பனுக்கு அவன் விடை கொடுக்க, கௌதமன் கூறிய வார்த்தையில் யசோ சிக்கி நின்றாள். ‘பேபி’ எனத் தனக்குள் கூறிக்கொண்டவள் கண்களை அழுந்த மூடி திறந்தாள். யசோவின் பார்வை சுரேஷோடு பேசிக் கொண்டிருந்த கௌதமன் மேல் விழுந்தது.
நண்பனுக்கு விடை கொடுத்தவன், யசோவின் பக்கம் திரும்ப, யசோதராவையே பார்த்து நின்றிருந்த தாக்ஷாயினிக்கு கௌதமனை கிளப்பினால் போதும் எனத் தோன்றவும், “வா கௌதம், மழை வரதுக்குள்ள கிளம்பலாம். பேபி தேடுவா” என அவசரப்படுத்தினாள்.
எதையோ கூற வாய் திறந்தவன், ‘பேபி’ என்றதும், “டைம் பாக்க தெரியாது… லேட் ஆனா அவளுக்கு தெரிஞ்சுடும். இன்னைக்கு ஒரு சண்டை இருக்கு பாரேன்” என முகம் மலர்ந்தான். புன்னகையோடே விடைபெற்று, பிடித்திருந்த தாக்ஷாவின் கையோடு கைகோர்த்துக் கிளம்பினான் கௌதமன். “எப்படி அதட்டுறா தெரியுமா? கீச் மூச்சுன்னு அவ பேசறது பாதியும் புரியாட்டாலும் என் பேபி அதட்டுற அழக நீ பாக்கணும் தாக்ஷா” என இவன் பேச்சு காதில் விழுவதை மூளை வரை ஏற்றிக் கொண்டாள் யசோ.
“சாரி யசோ லேட் ஆகிடுச்சு… நீ வா. வெளியில வெயிட் பண்றேன்” என பிரபும் அழைப்பு விட, கௌதமனை பார்ப்பதை விடுத்து, வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இன்றையக் கௌதமன் வேறாகத் தெரிந்தான். ஒரு குழந்தையின் தகப்பனா இவன்? அப்போ அந்த ‘பேபி’? தலையைச் சிலுப்பிக் கொண்டாள். ஒரு மணி நேரத்தில் ஒருவரை பற்று அறிந்துகொள்ள முடியாது என்றாலும், கண்டிப்பாக அன்றைய ‘ஹோட்டல்’ நிகழ்வின் வில்லன் இவன் இல்லை என்றது மனது.
பைக்கில் கௌதமன் பின்னால் அமர்ந்த தாக்ஷாயிக்கு மனம் பரபரத்தது. எதற்கு அவளை அப்படிப் பார்த்துவைத்தான் இவன்? இப்பொழுது கௌதமன் பொறுப்பான, ஒழுக்கமான ஒருவனாக மாறியிருந்தாலும், அவன் அந்தப் பெண்ணை பார்த்த பார்வை, கல்லூரிக் காலக் கௌதமனையே நினைவு படுத்தியது.
“என்ன யோசன?” என்றான் கண்ணாடியில் தாக்ஷாவின் முகம் பார்த்தவன்.
“காபி ஷாப் போலாமா? பசிக்குது” என்றாள்.
“பேபி வெயிட் பண்ணுவா, மழைக்கு முன்ன போகணும்ன்னு இழுத்துட்டு வந்தது இதுக்குத் தானா?” என்றவன் வேறு எதையும் கேட்காது நேரே உணவகம் ஒன்றின் முன் நிறுத்தினான்.
“அதுதான் மேகம் கலைஞ்சு போயிடுச்சே. இனி என்ன மழை?”
பூங்காவின் நடுவில் இருந்த மேசையினை நோக்கிச் சென்று கொண்டிருந்தவள் விரல்களோடு தனதை இணைத்துக் கொண்டவன் அதில் அழுத்தத்தைக் கொடுக்க, தன்னை கௌதமன் கண்டுகொண்டான் என உணர்ந்தாள் தாக்ஷாயினி.
“பசிக்குது கௌதம்” என்றவளை அவன் பார்த்த பார்வையில், “அவ யாரு கௌதம்?” என்ற கேள்வியைக் கேட்டேவிட்டாள் தாக்ஷா.
நீண்ட மூச்சை இழுத்து விட்டவன் அவளோடு இருக்கையில் அமர்ந்தான்.
“சொல்லு என்ன தெரியணும் உனக்கு?”
“அவ யாரு கௌதம்?”
“என் காலேஜ்ல வேல பாக்கிற ஸ்டாஃப்” என்றான்.
“உனக்கு கிளாஸ் எடுக்கிறாளா?”
“அவள பாத்தா உனக்கு லெக்ச்சரர் மாதிரியா தெரியுது? சின்ன பொண்ணா தெரியல? இப்போ தான் படிப்ப முடிச்சிருப்பா போல. நான்-டீச்சிங் ஸ்டாப்”
“உனக்கு?”
“ஸ்டேன்ஜர். எதுக்கு இவ்வளவு கேள்வி?”
“அப்பறம் எதுக்கு அவள விழுங்கற மாதிரி பாத்த?”
“விழுங்கற மாதிரியா? நானா? லூசா நீ?”
“நிஜமா அப்பிடி தான் இருந்துது. நான் பேசும் போது கூட என்னை நீ அப்படி பாத்தது இல்ல”
“ஓ… அதுவா? நீ பேசினா எனக்கு கேக்கும். சோ உன்ன பாக்க வேண்டாம். அந்த பொண்ணுக்கு பேச வராது. கைய… வாய… கண்ணன்னு பார்த்தா தானே புரியும்” என்றான்.
“ஊமையா?”
“அப்டி தான் போல”
“காதும் கேக்காதா? அதனால தான் அப்படி உன் வாயப் பார்த்தாளா?” என அவளே கேள்வியையும் பதிலையும் முணுமுணுத்துக் கொண்டாள்.
“கேக்காம தான் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொன்னாளா? ஆமா… அவள பத்தி பேசத் தான் இங்க இழுத்துட்டு வந்தியா?”
கௌதமனின் தொனி மாறவும், “ஏன் உன் கூட ஒரு பத்து நிமிஷம் ஸ்பென்ட் பண்ண எனக்கு ஆசை வராதா?” எனப் பேச்சின் திசையை மாற்றினாள் தாக்ஷா.
“உன்ன யார் தடுத்தா?”
“ம்ம்ம்… உன் பொண்ண வச்சுட்டு உன் பக்கம் யாராவது வர முடியுதா?” என இவள் அலுத்துக் கொள்ள, கௌதமன் முகம் மாறியது.
“சும்மா பழி சொல்லணும்ன்னு சொல்லாத.”
“என்ன பழி சொல்றேன்? அதுவரைக்கும் எங்க இருப்பாளோ தெரியாது… உன் பக்கம் வந்தாலே… நானுக்கு சூக்குன்னு வந்திடுறா” என்றவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என கௌதமனுக்கு உண்மையிலுமே புரியவில்லை.
“யாழி என் ரெண்டு வயசு குழந்த, தாக்ஷா. நீ புரிஞ்சு தான் பேசறியா? நான் தான் அவ எல்லாமே. என்னை பார்த்துட்டாலே அவளுக்கு நான் வேணும். அவளுக்குன்னு அம்மா அப்பாவா நான் மட்டும் தான்னு இருக்கும் போது அவ என்னைத் தானே எல்லாத்துக்கும் எதிர்பார்க்க முடியும்? அது குழந்தையோட இயல்பு. இந்த வயசுலயும் நீயும் நானும் நம்ம அம்மாவோட அட்டென்ஷன விரும்பறது இல்லையா? அதுக்காக நீ உன் அப்பாவை உன் அம்மாகிட்ட இருந்து பிரிக்கிறதாவா அர்த்தம்? என்னை உன்ட்ட இருந்து இழுத்துட்டா போறா என் பொண்ணு? இல்லையே, அவள தூக்கச் சொல்லி கேக்கறா. இதுல என் மகள குறைபட என்ன இருக்கு?”
“அதுதானே… நீ ஒத்துகிட்டா இந்நேரம் மழ தான் கொட்டித் தீத்திருக்குமே” என நொடித்துக் கொண்டாள் பெண்.
“என் பொண்ணு தேடுவா. சீக்கிரம் வேணுங்கிறத ஆடர் குடு” என துரிதப் படுத்தினான்.
அவள் முறைக்க, “என்ன?” என்றான் கேள்வியாக.
“தாலி கட்டும் போதாவது கிட்ட உக்காருவியா? இல்ல அப்பவும் நீ பெத்த சின்னது நடுவில இருப்பாளா?”
“கேள்விய பாரு” என அவன் சிரிக்க, “அப்போ அவ நடுவில இருப்பா” என அவளே வாக்கியத்தை முடித்தாள்.
“ஹனி மூனுக்கு என்ன பண்றதா ஐடியா?” என இவள் கேட்க, “புதுசா என்ன மூன் நமக்கு?” என அதையும் சிரித்துக் கொண்டே முடித்து விட்டான் கௌதமன்.
“வா போலாம்” என தாக்ஷாயினி எழுந்து கொள்ள,
“எவ்வளவு கோபம் உனக்கு? காபிய குடி” என்றவன், பெண்ணவளின் விரல் பிடித்தான்.
“என் பொண்ணு எனக்கு முக்கியம் தான். நான் இல்லன்னு சொல்லல. ஆனா நீ என் மனைவியான பின்னால, உனக்கான இடம் உனக்கு மட்டும் தான். உனக்கான நேரத்துல நீ மட்டும் தான் இருப்ப புரியுதா? தேவ இல்லாத விஷயங்கள நினைச்சு குழப்பிக்காத.
முதல்ல ‘உன் பொண்ணு’ன்னு சொல்றத விட்டுட்டு ‘நம்ம பொண்ணு’ன்னு நினைக்க ஆரம்பி, இந்த மாதிரி எல்லாம் தோணாது.
கல்யாணம், ஹனி மூன் எல்லாமே உன் விருப்பபடி தான். ஆனா உன்ன விரும்ப ஆரம்பிச்ச கௌதமன் தனி மனுஷன் இல்ல… என் பொண்ணு ஒன்னும் திடீர்ன்னு குதிக்கல. அவ என் வாழ்க்கையில இருக்கத பார்த்த பின்னாடி தான் உன் விருப்பமும் காதலா மாறிச்சு. எதையும் மறந்திடாத தாக்ஷா.
யாழி, நம்ம பொண்ணு தாக்ஷா. அவ நம்ம கூட தான் இருப்பா… புரியுதா? இதுல சந்தேகம் எதுவும் இல்லையே?”
இல்லை என்பது போல் தாக்ஷாயின் தலை தன் போல் அசைந்தது.
“குட். அவள பாத்துக்க நான் இருக்கேன். அவளுக்கு விபரம் புரியற வரைக்கும் எப்பவும் அவளுக்குன்னு ஒரு ஆள் இருப்பாங்க வீட்டுல. பாரமாவோ, நமக்கு இடையில வர மூணாவது ஜீவனாவோ என் குழந்தைய பாக்காத தாக்ஷா. அது என்னைக்கும் சரி வராது. என் குழந்தை என்கூடத் தான் இருப்பானாலும், எப்பவும் நம்ம கூடவே இருக்க மாட்டா… புரியுதா? என் மகளுக்கு நான் அப்பா, என்னை பெத்தவங்களுக்கு நாள் பிள்ளை இது ரெண்டும் எவ்வளவு உண்மையோ அது மாதிரி தான் உன்னோடான என் உறவும். சும்மா சும்மா இதயே சொல்ல வைக்காத.
எங்க ரெண்டு பேரோட உன்னை சேர்த்துக்க தான் நான் நினைக்கிறேன். புரியுதா உனக்கு? அப்பறம் இப்படி பாக்கிற பொம்பளைங்க கூட எல்லாம் என்னை சேத்து வச்சு மனசுல சந்தேகத்த வளத்துக்காத. நான் பார்த்து விரும்பின தாக்ஷாவா மட்டும் இரு! புதுசு புதுசா எதையாது யோசிச்சு உன்னையே மாத்திக்காத. கொடுமைக்கார சித்தியும், சந்தேகப் பொண்டாட்டியும் வாழ்க்கைக்கு ஆகாது தாக்ஷா”
நிதானமாக கூறினாலும் என்றுமில்லாது இன்று கோபம் எட்டிப் பார்த்தது கௌதமனின் சொற்களில். இப்படியே விட்டால், இந்தக் குணம் அவர்களை எங்குப் போய் நிறுத்தும் என இவனுக்குத் தெரியாத என்ன?
“நான் அப்படி எல்லாம் நினைக்கவே இல்ல கௌதம்” என்றவளுக்கு உள்ளுக்குள் இலேசாகா உதறியது.
“நல்லது. வந்த வேலை முடிஞ்சுதா? போலாமா?” என்றவனின் விரலை அவள் இறுகப் பற்றிக் கொண்டாலும் முதல் முறையாக தாக்ஷாவிற்குள் உதறல் எட்டிப் பார்த்தது.
வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தவனை வேகப் புயல் வந்து தாக்கியது. ஓடி வந்து குதித்த மகளை அப்படியே அள்ளி வாரித் தூக்கிப் போட்டு தகப்பன் பிடிக்க, சற்று நேரம் அப்பாவும் மகளும் அவர்கள் உலகில் கொஞ்சிக் கொண்டார்கள்.
அப்பாவின் சட்டை பொத்தானை உருட்டி விளையாடிய மகள், “அப்பா பூச்சு பூச்சு” என வாடிய மலர் இதழ்கள் எடுத்து நீட்டினாள்.
“பூச்சியா?” என மகளின் விரல்களில் நசுங்கியிருந்த வாடிய மலரின் இதழ்களை எடுத்தவன் மூளை, “இது எப்படி என் மேல?” என யோசனையில் மூழ்கியது.
அந்த பொண்ணோட தல இடிச்சுதே… அவட்ட இருந்து வந்திருக்கும் என நினைத்தவன் நாசியைப் பூவின் மணம் தீண்டியது. மகளின் விரல்களில் நசுக்கிய மலர்… அதன் வாசம்… பட்டென மூளை விழித்துக் கொள்ள, மலரின் சொந்தகாரியோடான முதல் சந்திப்பை நினைத்து மெல்லச் சிரித்தான் கௌதமன்.
…
