Skip to content
Post Views: 4,549
மார்கழி – 4
“நேத்து மாதிரி என்னை தேடி வந்து அப்பாகிட்ட அவமானப்படாதீங்க அத்தான். எனக்கு கஷ்டமா இருக்கு.” காலையே உமா அவனுக்கு அழைத்துப் பேச, அறிவழகனுக்குள் மார்கழி பனிச்சாரல். முதல் நாள் அவள் அப்பா அவன் முகத்திற்கு நேரே கதவை சாற்றியது எல்லாம் நினைவடுக்கில் இருந்து அழிந்து போனது.
“உனக்காகத்தானே உமா.” உனக்காக இதைக்கூட பொறுத்துக்கொள்ள மாட்டேனா என்ற செய்தி அதன் பின் ஒளிந்திருக்க, விவரமான பெண் கண்டுகொண்டாள்.
“இனி எனக்காக வேண்டாம் அத்தான்.”
Advertisement
“என்ன வேண்டாம்?” அறிவழகனுள் சந்தேகம். அதை உறுதிப்படுத்துவது போல் மறுபுறம் அசாத்திய அமைதி.
“உமா?”
“பெரியவங்க சொல்றது கரெக்ட் அத்தான். இது சரி வராது.” சொல்லும் போதே குரல் கமறினாலும் வார்த்தைகளில் அழுத்தம் இருந்தது.
Advertisement
“என்ன சொல்ற உமா. தெளிவா சொல்லு.” இவனுள்ளும் எரிமலைகள் வெடித்தது.
Advertisement
“எதுவுமே தெளிவா இல்லாதப்போ நான் எதை தெளிவா சொல்றது அத்தான்?”
“உமா”
“இத்தனை நாள் சொல்லாம இருந்தது சொல்லாம இருந்ததாவே இருக்கட்டும். ஹாப்பி மாரிட் லைப்.” என்றிருந்தாள் உமா.
Advertisement
துக்கம் தொண்டை அடைக்க, நெஞ்சைப் பிடித்து யாரோ அழுத்துவது போல் இருந்தது அறிவழகனுக்கு. சொல்லப்படாத நேசம் என்றாலும் உணரப்பட்ட காதல் கரை எட்டாது என்ற உண்மை தன் வடுவை விட்டுச் சென்றது.
“இதுதான் உன் முடிவா?”
மெளனம் பெண்ணிடம்.
“ஏன்? என் மேல நம்பிக்கை இல்லையா?”
“என் மேல உங்களுக்குத் தான் நம்பிக்கை இல்லை அத்தான்.” பட்டென்று சொல்லிவிட்டாள் உமா. பதறிவிட்டான் அறிவழகன்.
“என்ன பேசுற நீ. உன்னை விட யாரை நான் நம்பப் போறேன்?”
“நம்பி இருந்தா அந்த பொண்ணை பத்தி முன்னாடியே சொல்லி இருப்பீங்க அத்தான்.” அவளுக்கும் குரல்வளை அடைபட, செருமி அதனை சரிசெய்துகொண்டு பேசினாள், “வீடு வரை கூட்டிட்டு வந்த உங்களுக்கு அவங்களை பத்தி சொல்லணும் ஒருதடவை கூட தோணலையா?”
“உமா…”
“ஏதோ ஒரு காரணத்துக்காக அவங்க பாதுகாப்புக்கு உங்க கூட ஒரே வீட்ல இருந்ததாவே இருக்கட்டும் அதெல்லாம் நான் விட்டுடுறேன். ஆனா அவங்களை ஊருக்கு கூட்டிட்டு வரணும்னு முடிவு பண்ணதுக்கு அப்புறமாவது நம்ம ஊருல ஒரு பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா எப்படி பாப்பாங்க என்னனு யோச்சிருக்கணும். இல்லையா என்கிட்ட சொல்லி இருக்கணும் அத்தான். சொல்லி இருந்தா அவங்களை என் பிரெண்ட்டுனு சொல்லி என் வீட்ல கூட தங்க வச்சிருப்பேன். இல்லையா எனக்கு பழக்கமான பொண்ணு, நாந்தான் அழைச்சிட்டு வர சொன்னேன்னு இப்படி வேற எதுவும் சொல்லி சமாளிச்சிருக்கலாம். யாருக்கும் இப்படியான சந்தேகம் எல்லாம் வந்திருக்கவே வந்திருக்காது. குறைந்தபட்சம் உங்க அம்மாகிட்ட சொல்லியிருந்தா கூட இது இப்படி ஆகியிருக்காது.”
“அந்த பொண்ணை கூட அழைச்சிட்டு வர யோசனை கடைசி வரைக்கும் வரல. கடைசியா தான் அவசரமா கிளப்பி கூட்டிட்டு வந்தேன். வந்ததும் பொறுமையா அவளை பத்தி சொல்லிக்கலாம்னு இருந்தேன். இப்படி நான் ஊர்லேந்து வரும்போதே உங்க வீட்லேந்து வந்திருப்பாங்கனு எதிர்பாக்கல உமா.” இயலாமையுடன் அறிவழகன் மொழிய, பெருமூச்சு உமாவிடம்.
“எல்லாம் கைமீறி போச்சு அத்தான். தவிர்த்திருக்க கூடிய விஷயத்தை மறைச்சதால இப்போ எவ்வளவு பெரிய சிக்கல் பாருங்க. உங்க பேரும் கெட்டுப்போச்சு.”
குற்றம் சுமற்றினாலும் சூழ்நிலையை ஆராய்ந்து நிதானமாக வார்த்தையாடுபவளிடம் தனக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகவே எண்ணினான் அறிவழகன்.
“தப்பு தான். உன்கிட்டயாவது முன்னாடியே சொல்லி இருக்கணும். போனது போகட்டும் எல்லாத்தையும் நான் சரி பண்றேன். நீ இப்படி எல்லாம் முடிஞ்ச மாதிரி பேசாத உமா.”
“இல்லை அத்தான். சரி வராது.” என்று தன் பிடியில் உறுதியாய் நின்றாள் உமா.
“உனக்கும் என்னை புரியலைல்ல?”
அவனின் கலங்கிய குரல் அவளை தாக்கியிருக்க வேண்டும், குரலை செருமிக்கொண்டாள், “உங்களுக்கு என்னை புரியுதான்னு தெரில அத்தான். இவ்வளவு பெரிய பிரச்சனை ஆனதோ அந்த பொண்ணுக்கு உங்க மேல கண்ணுனு சொன்னதோ எதுவும் என்னை பாதிக்கல. ஆனா அவங்களை பெரிய விஷயமா எடுக்கலைனு சொன்ன நீங்க அந்த சின்ன விஷயத்தை கூட என்கிட்ட பகிர்ந்துக்கல. அப்போ உங்களுக்கு நான் யாருங்குற கேள்விதான் என்னை குடைஞ்சிட்டே இருக்கு. என்கூட வாழ்நாள் முழுக்க இருக்கப்போறவர்கிட்ட சின்னதோ பெருசோ வாழ்க்கையில் நடக்குற எல்லாத்தையும் பகிர்ந்துக்கணும், இதுவரை பேசாதது எல்லாத்தையும் பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன். அதையே தான் உங்ககிட்டயும் எதிர்பார்த்தேன்.” என்று அவள் நிறுத்தியதிலேயே அவன் மீதிருக்கும் அதிருப்தி புரிந்துவிட, இதற்கு மேல அவள் மனம் மாறும் என்று தோன்றவில்லை அறிவழகனுக்கு.
“நான் சொல்லாததை சபைல அவங்க சொல்லியிருக்காங்க. பாத்துக்கோங்க.” என்றதுடன் அவள் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அவள் பேசிய வார்த்தைகளை கிரகித்துக் கொண்டிருந்த நேரம் இயலணி அவன் முன் வந்து நிற்க, சட்டென்று மூண்டுவிட்ட எரிச்சலிலும் எதிரில் இருப்பவளால் தானே அனைத்து குழப்பங்களும் என்ற ஆத்திரத்திலும் அவளை பழிவாங்க எண்ணி திருமணத்திற்கு தயாரென்றிருந்தான்.
இப்போது மணவறையில் அமர்ந்திருக்கும் நேரம் அவள் தன்னருகே வந்து அமர்வது தெரிந்து அனிச்சையாய் நகர, அவனை நிமிர்ந்து பார்த்திருந்தாள் இயலணி. கிஞ்சித்தும் இளக்கமின்றி நேராக பார்த்தபடி இறுகி போயிருந்தது அவன் முகம். சோர்ந்திருந்த மனம் அவன் இறுக்கத்தை கண்டு மேலும் சோர்ந்தது.
“நீ ஆசைப்பட்டது தான நடக்குது நல்லா சிரிக்கிறது?” அவள் புறம் திரும்பாமலேயே விழிகளை பக்கவாட்டில் செலுத்தி கேள்வி எழுப்பியிருந்தான் அறிவழகன்.
அவன் ஏளனம் எரிச்சல் கொடுக்க, “என்ன வார்த்தைக்கு வார்த்தை நான் ஆசைப்பட்டது ஆசைப்பட்டதுனு சொல்றீங்க? நானா வந்து உங்க கல்யாணத்தை நிறுத்தி வலுக்கட்டாயமா உங்க பக்கத்தில உக்காந்திருக்கேன்?” என்று நன்றாக திருப்பிக் கேட்டாள் இயலணி.
“ஆமா நீ வந்துதான் எல்லாம் நடக்குது. வலுக்கட்டாயமா தான் நீ என் வாழ்க்கையில நுழைஞ்சிருக்க.” என்று அவன் சிடுசிடுத்த பின் மெளனமாகிவிட்டாள் பெண். என்ன பேசினாலும் முட்டிக்கொள்கிறது. பேசாது இருந்தால் அவளுள் ஆர்ப்பரிக்கும் குற்றவுணர்வும் அவளை ஆட்டிப்படைக்கும் ஐயமும் அவளை மூழ்கடிக்கிறது. இந்த பிடித்தம் வந்திருக்கவே கூடாது என்ற எதிர்மறையான சிந்தனையோடு தான் அவன் கையால் தாலி வாங்கிக்கொண்டாள் இயலணி.
பின்னாளில் இந்த நாளை புரட்டிப்பார்த்தால் வெறுமையே மிஞ்சும் எனுமளவுக்கு இருவரின் நெஞ்சமும் இனிமையை விரட்டி முழுமையடையாது தவித்துக்கொண்டிருந்தது.
திருமாங்கல்யம் அவள் நெஞ்சைத் தொட அதில் குங்குமம் வைத்தவன் கையை உயர்த்தி அவள் தோள் சுற்றி நெற்றி வகுட்டிலும் வைத்துவிட, அவளையும் அறியாது விழிகளில் நீர் சுரந்தது. பிறர் அறியா வண்ணம் அதை துடித்துவிடலாம் என்று விரல் உயர்த்தி துடைக்கும் முன் அவன் விரல்கள் அதனை அப்புறப்படுத்தியிருந்தது.
“இதுக்கே அழுதா எப்படி? இனிமே தான இருக்கு.”
அவர்களின் முணுமுணுப்பு சுற்றத்தாரின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும், நின்றுக்கொண்டிருந்த தங்கை மாலை சரி செய்துவிடுவது போல் குனிந்தாள், “அண்ணா கொஞ்ச நேரம் அமைதியா தான் இரேன். நீ பேச பேச அப்பா முறைச்சிட்டே இருக்காரு.”
“கை, காலை கட்டி வைக்காத குறையா இந்த கல்யாணத்தை நடத்தி வச்சிட்டு நான் பேசக்கூட கூடாதா என் பொண்டாட்டிகிட்ட?” கடுப்பில் கொந்தளித்திருந்தான் அறிவழகன்.
‘இதே வாய் தான் ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் உமா உமானு பினாத்திக்கிட்டு இருந்துச்சு.’ என்ற முணுமுணுப்புடன் நிமிர்ந்து நின்றுகொண்டாள் தாமரை.
இருவரின் செவியையும் அந்த முணுமுணுப்பு எட்ட, இருவருக்குள்ளும் வேதனையின் சாயல். தன் மீது பிடித்தமில்லாத ஒருவனை கரம் பற்றி இருக்கிறோம் என்ற வேதனை அவளிடமென்றால் பிடித்தம் கொண்டவளை கரம் பிடிக்கமுடியவில்லை என்ற வேதனை ஆணவனுக்கு. இயந்திர கதியாய் அவள் கைப்பிடித்து மற்ற சம்பிரதாயங்களை முடித்து வீடு வந்தவர்களை சொந்தங்கள் தாங்கவும் இல்லை கீழிறக்கவும் இல்லை. ஒருவித இறுக்கத்துடன் அடுத்தடுத்த சடங்குகளுக்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.
அறிவழகன் அறைக்கு அடுத்தாற் போல் இருந்த அவனது பெற்றோர் அறையில் கழுத்தில் ஏறிய திருமாங்கல்யத்தையும் கால் விரலில் இடம்பிடித்திருக்கும் மெட்டியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள் இயலணி. தடிமனான பிள்ளையார் தாலி அமைதிக்கு பதில் பதற்றத்தை கொடுத்தது. அதனை அழுந்த பற்றிக்கொண்டவள் மெட்டி குடியேறியிருந்த விரலை மடித்துக்கொண்டாள்.
‘என்ன செஞ்சு வச்சிருக்க இயல்?’ எத்தனை முறை மனசாட்சி கேள்வி எழுப்பியும் நியாயமான காரணங்களை அடுக்கத் தவறியது அவள் மனம். நியாயமான காரணங்கள் இல்லையோ? செய்தது பிழைதானே. திருத்தி எழுத முடியாத பிழை. அவளுக்கு அவளே கேள்வியும் எழுப்பி பதிலும் தேடிக்கொண்டாள்.
மதிய உணவின் போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும் எவ்வித ஆர்ப்பாட்டமும் சலனமும் இல்லை. இலையில் இருந்ததை உண்டுவிட்டு ஆளுக்கு ஒரு பக்கமாய் சென்றுவிட்டனர். அவர்களை கவனித்து கேட்கவும் ஆளில்லை. மதிய உணவு முடிந்து கிளம்புகிறேன் என்ற உறவுகளை பெயருக்கு கூட இருக்கச் சொல்லவில்லை மேகலா. துணைக்கு இருப்பது போல் இருந்து காதுபடவே மகனை புரளி பேசுவதை ஏற்க முடியவில்லை அத்தாய்க்கு. அதனால் மகளையும் தங்கையையும் மட்டும் தன்னுடன் இருத்திக்கொண்டு மற்றவர்களை கிளப்பி இருந்தார்.
மெல்ல மெல்ல இருள் கவிழ இயலணியின் பதட்டம் அதிகமாகியது. வீட்டினர் முகம் கொடுத்து பேசினாலும் அதில் ஒட்டுதல் இல்லை. மாமனார் மட்டும் கொஞ்சம் பற்றுதலாக இரண்டொரு வார்த்தை பேசினார். அது பெண்ணுக்கு ஆறுதலாக இருந்தாலும் மகிழ்ச்சி கொடுக்கவில்லை மாறாக குற்றவுணர்வே எஞ்சியது.
“முகம் கழுவிட்டு வந்து விளக்கு ஏத்த சொன்னாங்க அம்மா.” அவளை அவளிடமிருந்தே காப்பது போல் தாமரை வந்து அழைக்கவும் பட்டென்று எழுந்துகொண்டாள் இயலணி.
சொல்லிவிட்டு என் வேலை முடிந்தது என்பது போல் அவள் சென்றுவிட, தன் பையிலிருந்து துண்டு எடுத்துக்கொண்டு கொல்லை நோக்கி நடந்தாள்.
“நேத்தி வரைக்கும் எப்படியோ இப்போ கல்யாணம் ஆகிடுச்சு. உனக்கு புடிச்சாலும் இல்லைனாலும் அந்த பொண்ணு தான் உனக்கு அண்ணி. முறை சொல்லி கூப்பிடு.” என்று மேகலா மகளை கண்டிப்பது செவி எட்டியது.
“ம்ச்… நீயே ஒதுங்கி தான இருக்க என்னை மட்டும் ஏன் சொல்ற?” எதிர்கேள்வி எழுப்பியிருந்தாள் தாமரை.
“என் பையன் ஆசைப்பட்டதுக்கு குறுக்கே அந்த பொண்ணு வந்துடுச்சேன்னு ஒரு அம்மாவா எனக்கு கோவமும் வருத்தமும் இருக்கு தாமரை. அதெல்லாம் ஒரே நாள்ல மறைஞ்சிடாது. அதுக்காக அவன் கட்டுன தாலி அவ கழுத்துல இருக்கும் போது அதுக்கான மரியாதையை கொடுத்துதான் ஆகணும். இல்லைனா கண்டவங்க எல்லாம் அவனை தான் கீழா பாப்பாங்க.” என்றதில் குறுகிப்போனவளாய் அங்கு நிற்க முடியாது வேகமாக வெளியேறினாள் இயலணி.
தன்னால் அறிவழகனுக்கு மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தில் தான் எத்தனை குழப்பம், இதில் தன்னைப் பற்றி தெரிய வந்தால் என்ன சொல்வார்களோ என்று கண்களை கட்டிக்கொண்டு வந்தது பெண்ணுக்கு. இத்தனை நேரம் தன்னை சார்ந்தவர்களுக்கு கொடுக்கப்போகும் ஏமாற்றத்தை மட்டும் யோசித்து மறுகியவள் முதல்முறையாய் அவன் குடும்பத்திற்கு இழைக்கும் அதர்மத்தை எண்ணி குன்றிப்போனாள். நெஞ்செல்லாம் எதுவோ அழுத்துவது போலிருக்க, நெஞ்சத்தை நீவிவிட்டுக் கொண்டவள் விரல்களில் தட்டுப்பட்டு அவள் நெஞ்சத்தை குத்தியது தாலி.
‘எந்த தைரியத்துலடி தாலி வாங்கிகிட்ட? உன் வாழ்க்கையே ஊசலாடிட்டு இருக்கு, இதுல அவரையும் இழுத்து அவர் குடும்பத்தையும் ஏமாத்திட்டு இருக்கியே…’ மீண்டும் ஒருகுரல் உள்ளிருந்து ஒலித்து அவள் தைரியத்தை அசைத்துப்பார்த்தது.
“இப்போவே நெஞ்சை புடிச்சிட்ட…” என்ற குரலில் திடுக்கிட்டு பார்க்க, எதிரே வந்து நின்றான் அறிவழகன்.
சோர்வாய் இயலணி வேறு புறம் முகத்தை திருப்பிக்கொள்ள, அவள் தாடையை விரல்கள் குவித்துப் பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன் பின் இடவலமாய் திருப்பி இப்படியும் அப்படியுமாய் பார்த்தான்.
“நான் எஃபோர்ட் போட்டு உன்னை தலைதெறிக்க ஓடவிடலாம்னு பார்த்தா நீயே ஓடிடுவ போலிருக்கே…” என்றதில் அவள் விழிகள் விரிந்து கொள்ள,
“என்ன கண்ணு விரியுது? ஏற்கனவே ஓடி வந்த மாதிரி இப்போ இங்கிருந்தும் ஓடிடலாம்னு பார்த்தியோ? ஓடுறது உனக்கொன்னும் புதுசு இல்லை தானே?” என்று கேட்டவனை திகைத்துப் பார்த்தாள் இயலணி.
“என்ன சரியா சொல்லிட்டேனா?” புருவம் உயர்த்தியவனை கலக்கத்துடன் பார்த்தவளுக்கு வியர்த்துவிடும் போலிருந்தது.
“அப்போவே வேந்தன் சொன்னான், வீட்லேந்து வந்துட்டானு. நாந்தான் பாவம்னு எதேதோ நினைச்சி உன் வண்டவாளத்தை கேட்காம விட்டுட்டேன். அதுக்கு நல்ல பரிசு கிடைச்சிடுச்சு.” என்ற போது அவனை யாரோ அழைப்பது போலிருக்க, இயலணியை விட்டுவிட்டு வீட்டினுள் சென்றான் அறிவழகன்.
அவன் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதினுள் ஒலிக்க, முகத்தை அழுந்தத் துடைத்தவள் பதட்டத்தை தணிக்கும் பொருட்டு தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவினாள். இருந்தும் கைகள் லேசாக நடுக்கம் கொண்டது. குற்றம் புரிந்தது போல் மனம் குறுகுறுத்தது. நெஞ்சம் வேகமாக அடித்துக்கொண்டது. நரம்புகளில் புது இரத்தம் பாய்வது போல் விறுவிறுவென்றது. இத்தனை நாள் இல்லாத தவிப்பு இன்று எதற்கு என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டவள் விடையும் கண்டுகொண்டாள்.
‘இது சரிவராதுடி இயலு… உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணக்கூடாது. இதுக்கு மேலையும் உன்னை பத்தி சொல்லாம இருக்கிறது தப்பு. சொல்லிடு. அவர் புரிஞ்சிப்பார்.’ என்று முடிவெடுத்த பின்தான் சுவாசப்பை இயல்பாக சுவாசம் கொண்டது. தைரியம் மீண்டெழுந்தது.
ஒப்பனையின்றி முகத்தை திருத்திக்கொண்டவள் பூஜையறை செல்ல, இவள் தலையைக் கண்டு தாமரையும் பின்னோடு வந்து உதவினாள்.
“புடவை மாத்தலையா… அண்ணி?” இன்னும் காலையில் கட்டிய முகூர்த்தப்புடவையில் அவள் இருப்பதை கண்டு கேள்வி கேட்டிருந்தாள் தாமரை.
“ஹான்… இல்லை… சுடிதார் தான் எடுத்துட்டு வந்தேன்.” என்றபின் தாமரை எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் இரவு உணவு முடிந்தபின் வேறொரு புடவையுடன் வந்தாள்.
“புதுசுதான், இப்போ போட்டிருக்குற பிளவுசுக்கு மேட்சா இருக்கும். மாத்திக்கோங்க.” என்று கொடுத்துவிட்டு சென்றதும் எதற்கு என்று புரிந்து போனது இயலணிக்கு.
மெலிதாக அதிகரித்த மூச்சுகளின் வேகத்தை கட்டுப்படுத்தியபடியே சேலை மாற்றிக்கொண்டவளை அழைத்துச் சென்று அறிவழகன் அறையில் விட்டாள் தாமரை. இவளுக்காகவே காத்திருந்தவன் போல் அழுத்தமாய் எழுந்து வந்தவன் அறைக்கதவை தாழிட்டு அவள் கையிலிருந்த பாலை வாங்கி ஒரே மடக்கில் குடித்திருந்தான்.
“ம்ம் குடிக்குற சூடுல தான் கொடுத்திருக்காங்க.” சொம்பை மேசையில் ஒரு ஓரமாய் வைத்துவிட்டு வந்தவன் உரிமையாய் அவள் சேலை முந்தானை பற்றி அதில் இதழ் துடைக்க, பயந்து பின்னகர்ந்தது பெண்.
அவளது விலகளில் விழி உயர்த்தியவன் சில அடிகள் முன்னே எடுத்து வைத்து அவளை நெருங்க, அவன் கையிலிருக்கும் அவள் முந்தானை அவனையும் அருகே இழுக்கும் என்ற யோசனையின்றி முடிந்த மட்டும் பின்னே சென்றாள் மனைவி. அவள் நகர்வில் இழுபட்டு அவனும் அவள் மேல் மோத, அனிச்சையாய் அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள், “நான் பேசணும்.” என்றிருந்தாள்.
“பேசுற நேரமா இது. நீ ஆசைப்பட்டு பார்த்த வாழ்க்கைமா… வாழ வேண்டாமா?” நக்கலாக கேட்டுக்கொண்டே அவளருகே முகத்தை கொண்டு போக, முகத்தை திருப்பிக்கொண்டாள் இயலணி. விடாது அவள் முகத்தைப் பற்றி திருப்பியவன் அழுத்தமாக அவளிதழில் இதழ் பதிக்க அதிர்ந்துவிட்டது பெண். கோவமாக இருப்பான், விலகி நிற்பான், தன் பக்கத்தை சொல்லிப் புரியவைத்து அனைத்தயும் சீர்செய்துவிட வேண்டும் என்று என்னென்னவோ நினைத்திருந்தவள் இதனை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. இணக்கமான அணைப்பு இல்லை எனினும் வன்மையும் இல்லாத ஒரு ஒற்றல்… சற்று அழுத்தமாய் அவள் உணரவென…
அதிர்ந்திருந்தவள் பின்னந்தலையில் கரம் நுழைத்து அழுத்தம் கொடுத்து தன்னோடு ஒன்றச் செய்தவன் அவள் நெகிழத் துவங்கும் வேளையில் விலகி, “என் அத்தை மகளுக்கு இப்படி தான் மொத கிஸ் கொடுக்கணும்னு கனவு கண்டிருந்தேன்.” என்று கண்சிமிட்ட, அதிர்ந்து அவனை பார்த்தாள் இயலணி.
கண்களில் வன்மம் நிறைய, இதழை புறங்கை கொண்டு துடைத்துக்கொண்டவன் சூழ்நிலையை கிரகித்து அவள் எதிர்வினை புரியும் முன் அவள் இடையில் கரம் கொண்டு வளைக்க, அவன் எண்ணம் புரிந்தது போல் பலம் கொண்டு அவனை தள்ளிவிட்டாள் இயலணி.
“உங்களை என்னவோன்னு நினைச்சேன்.” அவன் செயல்கள் கொடுத்த ஏமாற்றம் அவள் குரலில் அப்பட்டமாய் தெரிந்தது.
“என்ன நினைச்ச? அமைதியானவன் எதையும் தோண்டித் துருவாம, இருக்க இடம் கொடுத்த இளிச்சவாயன். நாம என்ன சொன்னாலும் அவன் குடும்பம் நம்மளை நம்பும், இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம்னா?” சீற்றம் கொண்டு சீறினான் கணவன்.
அவன் சீற்றத்துக்கு சற்றும் குறையாத முறைப்புடன் பார்த்தாள் இயலணி, “என் மேல இருக்குற கோவத்தை காட்டுறேன்னு சொன்னது இப்படித்தானா? கேவலம் என்னை மாதிரி பொண்ணுங்களை வீழ்த்த எங்க உடம்பை தவிர எதுவும் இல்லைல உங்ககிட்ட?”
அவள் முறைப்பு சீற்றமாய் மாற, ஆத்திரம் தலைக்கேறியவனாய் அவளை இழுத்துப் பிடித்தவன், “என்னடி குரல் உசத்துற? புடிச்சவன் கை வைக்குறதே உனக்கு பத்திக்குதுனா புடிக்காதவளை கட்டிக்கிட்டு குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயத்துல இருக்குற எனக்கு எவ்ளோ அருவருக்கும்.” முகத்தை சுழித்துக்கொண்டு அவன் சொல்லிய விதத்தில், தன் பெண்மையை இதற்கு மேல யாரும் களங்கப்படுத்த முடியாது என்றே தோன்றியது பெண்ணுக்கு. தோன்றிய நொடி தன் வீழ்ச்சியை ஏற்றுக்கொண்டவளாய் தளர்ந்து நிற்க, அவளை நெருங்கி அவள் கழுத்தில் முகம் புதைத்தான் அறிவழகன்.
error: Content is protected !!